மிழ் யாப்பியல் ஆய்வில் தனக்கெனத் தனி இடம் உருவாக்கியவர். பாரதியார், பாரதிதாசன், பெரியார், பாவாணர் எனப் பன்முக ஆளுமைகளைத் தம் படைப்புகளின்வழித் தமிழ் உலகிற்கு முன்னிறுத்தியவர். தமிழ் ஆய்வுப் பரம்பரையை உருவாக்கிய வரிசையில் சமகாலத்தில் தனி அடையாளத்தோடு திகழ்பவர். பாரதிதாசன் அவர்களின் படைப்புகளைக் காலவரிசையிலும், வகைமை அடிப்படையிலும் ஆவணப்படுத்திச் செம்பதிப்புகளை உருவாக்கியவர். பாரதியியல் என்னும் தனித்துறையைத் தம் தேடலால் செழுமைப்படுத்தி வருபவர். பாரதியின் அறியப்படாத படைப்புகளைத் தேடித் தேடிக் கண்டடைந்து பாரதியின் அறியப்படாத பக்கங்களை அடையாளப் படுத்துவதோடு அவர் மீது தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுகளுக்குத் தகுந்த ஆதாரங்களோடு பதில் சொல்லி வருபவர். குடியரசுத் தலைவர் விருது உள்ளிட்ட தக்க பல விருதுகளைப் பெற்றவர். பேராசிரியர், பதிப்பாசிரியர், தொகுப்பாசிரியர், ஆய்வறிஞர் எனப் பன்முக அடையாளங்களின் வழித் தொடர்ந்து தமிழுக்கும் தமிழ்ச்சமூகத் திற்கும் தன்னையே அர்ப்பணித்து வருபவர். அவர் வேறுயாருமல்ல. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் ய. மணிகண்டன் அவர்கள். இனிய உதயம் இதழிற்காக அவருடன் ஒரு நேர்காணல்....

உங்கள் கல்லூரிக் காலத்திலேயே தமிழை நீங்கள் நேசிக்க மட்டுமல்ல, மூச்சாகவுமே கருதத் தொடங்கி விட்டீர்கள். அதற்குப் பின்புலமாக அமைந்த காரணங்கள் என்ன?

கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் ‘தென்மொழி’, ‘தமிழ்ச் சிட்டு’ இதழ்கள் எனக்கு அறிமுகமாகிவிட்டன. பெருஞ்சித்திரனாரின் இதழில் முதலில் எழுதத் தொடங்கினேன். என் தமிழ் வாழ்வு பெருஞ்சித்திர னாரிடமிருந்துதான் தொடங்குகின்றது. ‘தென்மொழி’ வழி மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் நூல்களுக்குள் வாழத் தொடங்கினேன். என்னை இயக்கிய முதன்மையான சக்தியாகப் பாவாணரே விளங்கினார். கல்லூரிக் காலங்களில் தனித்தமிழ் இயக்கத்தின் மற்றுமொரு முக்கியமான ஆளுமை யான இலக்கணப் புலவர் த. சரவணத் தமிழனாரோடு தொடர்பு ஏற்பட்டது. தமிழுலகம் நினைந்து நினைந்து போற்றவேண்டிய மாபெரும் ஆளுமை த. சரவணத் தமிழனார். தொல்காப்பியர், பவணந்தி என்ற மரபில் அவர் ஒரு தலைசிறந்த இலக்கண ஆசிரியர். தமிழ்ச் சொற்பொழிவுக்கலை வரலாற்றில் அண்ணா, ரா.பி.சேதுப்பிள்ளை என்கிற மரபில் மொழிநடையால் தனித்தன்மை கொண்ட குறிப்பிடத்தக்க ஆளுமை. இந்த நேரத்தில் இடைப்பிறவரலாக ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். அத்தகைய மாபெரும் ஆளுமையின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு அவருடைய மரபினர் உரிய உதவி களைப் பெறவேண்டும் என்பது என்னுடைய விருப்பமும் வேண்டுகோளும். அவர் எனக்கு நேரடி ஆசிரியர் இல்லையென்றாலும் அவரை ஓர் ஆசிரியர் நிலை யிலேயே கண்டேன்; கொண்டேன். தமிழிலக்கியப் பரப்பின் பல தளங்களையும் அவருடைய நூல்களால், அவரோடான சந்திப்பால், உரையாடல்களால் அறிந்துகொண்டேன். சரவணத் தமிழனாரின் தொடர்பு என்னை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றது. கல்லூரிப் படிப்பை முடித்த காலத்தில் முதுகலை சேர்வதற்கு முன்னதாகப் பாவாணரைக் குறித்த குறள் வெண்பா இலக்கியம் ஒன்றைப் படைத்தேன். ‘புலமை சுமந்த புயல்’ என்பதே அந்த நூல். பாவாணர் குறித்த முதல் படைப்பிலக்கிய நூல் அதுதான். அதன்பின்னரே பல நூல்களும் வெளிவந்தன. அந்த நூலை நான் படைத்த அதே காலத்தில் தந்தை பெரியாரைக் குறித்துக் கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் ‘ஈரோடு தந்த இடி’ என்னும் குறள் வெண்பா நூலைப் படைத்தார். அறிஞர் சரவணத் தமிழனார் என்னையும் தமிழ்நாடனையும் சம அளவு ஆற்றல் கொண்டவர்கள் எனப் போற்றுவார். திருக்குறளுக்குப்பின் குறள் வெண்பா யாப்பில் வெளிவந்த யாப்பழகும் இலக்கிய அழகும் மிக்க இரு நூல்களாக எங்கள் இருவரின் நூல்களையும் அவர் பாராட்டி எழுதியுமிருக்கின்றார்.

Advertisment

dd

என் கல்லூரிக் காலம் மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரியில் நிகழ்ந்தது. பக்தி இலக்கியத்தில் ஆழங்காற்பட்ட செஞ்சொற்கொண்டல் சொ. சிங்கார வேலனார் என்னும் அறிஞரும், மூதறிஞர் வ.சுப. மாணிக்கனாரின் மாணவரும் கைலாசபதியால் பாராட்டப்பட்டவருமான ‘பட்டுக்கோட்டையின் பாட்டுத்திறம்’ என்னும் அரிய ஆய்வு நூலைப் படைத்தவருமான பேராசிரியர் கி. செம்பியன் அவர்களும் எனக்கு ஆசிரியர்கள் அங்கே. அவர்கள் இருவரின் கண்பட்டு, கைபட்டு வளர்ந்தவன் நான். அவர்கள் இருவரின் அன்பும் தமிழும் என்னை வழிநடத்தின. அங்கே படிக்கும் காலத்தில் பாவாணர் குறித்த 60 பக்க ஆய்வுக் கட்டுரைப் போட்டி ஒன்றைத் திருநெல்வேலி தனித்தமிழ் இலக்கியக் கழகம் நடத்தியது.அதில் நான் முதற்பரிசாகத் தங்கப் பதக்கம் பெற்றேன். இந்தப் பின்புலத்திலிருந்துதான் என் தமிழ் வாழ்வின் அடித்தளம் உருவானது.

Advertisment

முதுகலை தொடங்கி முனைவர் பட்ட ஆய்வுவரை உங்களின் தமிழ்ப்பயணமும் உங்களுக்கு அமைந்த ஆசிரியப் பெருந்தகைகள் குறித்தும் சொல்லுங்கள்?

தமிழ் முதுகலையில் நான் சேர்வதற்கு முன்பே மாபெரும் தமிழாளுமையாகிய அறிஞர் பொற்கோ அவர்களின் தொடர்பு எனக்கு ஏற்பட்டுவிட்டது. என்னுடைய ‘புலமை சுமந்த புயல்’ நூலுக்குப் பொற்கோ அவர்கள் அணிந்துரை எழுதியிருந்தார்கள். அவர்தான் நான் சென்னையில் வந்து தமிழ் படிக்க வேண்டும் என என்னைத் தூண்டினார். சென்னைப் புதுக் கல்லூரியில் தமிழ் முதுகலை சேர்ந்தேன். நம் காலத்தில் மாபெரும் இரண்டு கவிதை ஆளுமைகளாகிய ஈரோடு தமிழன்பன், இன்குலாப் ஆகியோரிடம் மாணவனா கப் படிக்கும் பேறுபெற்றேன். இருவரோடும் மிக நெருக்கமாகப் பழகும் சூழலமைந்தது. என் ஆசிரியர் இன்குலாப் அவர்களின் மகன் என்னிடம்தான் மாணவ ஆய்வாளராக இருந்து முனைவர் பட்டம் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முதுகலை படிக்கும் காலத்தில் ஈழப் போராட்டம் உள்ளிட்ட பல தமிழுணர்வுச் செயல்பாடுகளில் நான் பங்கேற்றிருக்கின்றேன். அதன் காரணமாகப் பல நெருக்கடிகளையும் எதிர்கொண்டிருக்கிறேன். ஒருமுறை போராட்டக்களத்தில் இளமையின் துடிப்போடு நான் செயல்பட்ட காட்சியை என் ஆசிரியரும் கவிஞருமாகிய இன்குலாப் அவர்கள், “அன்று முழக்கம் எழுப்பிய குரல்களில் கவிஞர் மணிகண்டனின் குரல் இடையறாது ஒலித்தது. கொட்டும் மழையில் கையில் பிடித்திருந்த பதாகையின் மை கரைந்தோடியபடி இருந்தது. அவர் ஏதோ இளவேனிற் காலையில் சூரிய வெளிச்சத்தில் குளிப்பது போன்ற மனோநிலையில் நின்று முழங்கிக் கொண்டிருந்தார்” எனப் பின்னாள்களில் அவர் நினைவுகூர்ந்த குறிப்பு என் மாணவப் பருவத்தின் செயல்பாடுகளை ஞாபகப்படுத்துவதாக உள்ளது. இப்படி ஏராளமான செயல்பாடுகளும், பதிவுகளும் உள்ளன. அந்தக் காலத்தில் என்னோடு இணைந்து செயல்பட்ட இளவல்கள் கோ. சோமசுந்தரம், தஞ்சை இனியன் ஆகியோர் துணையோடு “பயன் பதிப்பகம்’ என்னும் ஒன்றை உருவாக்கினேன்.

கவிஞர் இன்குலாப்பின் 3 நூல்களை அந்தக் காலத்தில் அதன்வழியாக வெளியிட்டோம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சென்னை வந்து தமிழ் பயிலத் தூண்டிய பொற்கோ அவர்களுடைய ஆய்வு மாணவனாக இருந்து எம்.ஃபில்.ஆய்வைத் தமிழ் யாப்பிலக் கணத்தில் நிகழ்த்தினேன். சரசுவதி மகாலில் பணி புரியும் காலத்தில் சென்னை மாநிலக் கல்லூரியில் பகுதி நேரமாகப் பேராசிரியர் இரா. இளவரசு அவர்களிடம் முனைவர் பட்ட ஆய்வை நிகழ்த்தி னேன். பாரதிதாசன் குறித்த ஆராய்ச்சி அறிஞர்களில் தலைமையானவர் அவர். செம்மாந்த வீறுமிக்க போர்க்குணம் கொண்ட போராளி அவர். தமிழ் யாப்பிலக்கண வரலாற்றைக் குறித்த ஆய்வை நிகழ்த்தி முனைவர் பட்டம் பெற்றேன். என்னை மாணவனாக மட்டுமில்லாமல் மகனாகவும் கொண்டு அன்பு பாராட்டிய அரிய மனிதர் அவர்.

d

தஞ்சை மண் உங்களின் வாழ்வில் மறக்க முடியாத களம். தஞ்சை சரசுவதி மகால் பணி அனுபவங்கள் குறித்தும் அங்கே நீங்கள் செய்த பதிப்புப் பணி குறித்தும் கூறுங்கள்?

சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில். படிப்பு நிறைவடைந்த தருணத்தில் தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் தமிழ்ப் பண்டிதர் என்னும் பணியில் சேர்ந்தேன். ஓலைச்சுவடிகளோடு ஊடாடும் தமிழ் வாழ்க்கையாக அந்தக் கால வாழ்க்கை அமைந்தது. 10 ஆண்டுகளுக்குமேல் அங்கே பணிபுரிந்தேன். பல நூல்களை ஓலைச்சுவடியிலிருந்து பதிப்பித்து வெளியிட்டேன். இலக்கண நூல் பதிப்புகளோடு பிற்கால அம்மானை இலக்கியம் ஒன்றை நான் சிறப்பாகப் பதிப்பித்ததைக் குறிப்பிட வேண்டும். ஓர் அம்மானை இலக்கியத்தைப் பல ஓலைச்சுவடிகளை ஒப்பிட்டு முதன்முறையாக ஆராய்ச்சிப் பதிப்பாக்கினேன் என்றுகூட அதைச் சொல்லலாம். அந்த நூலின் பெயர் ‘அரிச்சந்திரன் அம்மானை’.

நான் அங்கே பணிபுரிந்த காலத்தில் 25 ஆண்டு களுக்குமுன் பதிப்பிக்கப்பட்ட சித்த மருத்துவ நூல் ஒன்று இரண்டாம் பதிப்பாக அச்சிடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. முதல்பதிப்பாக வந்த புத்தகத்தைப் பார்த்துத் திடுக்கிட்டேன். உதாரண மாகச் சொல்லவேண்டுமென்றால் 8 மூலிகைகளைப் பயன்படுத்தி ஒரு மருந்தைத் தயாரிக்க வேண்டிய இடத்தில் அச்சு நூலில் 5 மூலிகைகளின் பெயர் மட்டுமே இருந்தன. பதிப்பு அறிவாலும் யாப்பறிவாலும் அந்த விடுபாட்டைச் சரிசெய்ய மூல ஓலைச்சுவடிளை எடுத்துப் பரிசோதித்தேன். விடுபட்ட 3 மூலிகைகளின் பெயரைச் சேர்த்தேன். இப்படித்தான் இலக்கியங்கள் மட்டுமில்லை நம்முடைய சித்த மருத்துவச்சுவடிகள்கூட அரைகுறையாகப் பதிப்பிக்கப்பட்டு அரைகுறையாக மருந்து தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதையெல்லாம் அறியாமல் சித்த மருத்துவமே பலனளிக்கவில்லை எனக் குற்றம்சாட்டுவோரும் உண்டு. இலக்கிய நூல்கள் மட்டுமில்லை, மருத்துவ நூல்களும் மூல ஓலைச்சுவடிகளோடு ஒப்பிட்டுப் பொறுப்புணர்வோடு பதிப்பித்து வெளியிடப் படவேண்டியது மருத்துவத்துறையின் அடிப்படைத் தேவையாகும். அதை மருத்துவத்துறையினரும் உரிய அரசுத்துறையினரும் உணர வேண்டும்.

பல ஓலைச்சுவடிப் பயிலரங்குகளை ஒருங் கிணைத்து நடத்தினேன். குறிப்பிடத்தக்க தொல்லியல் அறிஞரான குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்களும் நானும் நாள்தோறும் தமிழாய்வுச் சிந்தனைகளைப் பகிர்ந்கொள்ளும் காலமாக அந்தக் காலங்கள் அமைந்தன. தஞ்சையிலே வாழ்ந்த சேக்கிழார் அடிப்பொடி தி.ந. இராமச்சந்திரன் என்னும் பேரறிஞரோடு பழகும் வாய்ப்பும் அப்போது ஏற்பட்டது. கவிஞர் திருலோக சீத்தாராமோடு நெருங்கிப் பழகியவர் அவர். பெரியபுராணத்தையும் பாரதி பாடல்களையும், பற்பல இலக்கியங்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த இருமொழி மேதை அவர். பகுத்தறிவு எண்ணத்தில் இன்றுவரை வாழ்ந்துவரும் நான், இலக்கியமாகப் பக்தி இலக்கியப் பரப்பின் செழுமையை, முழுமையை உணர அந்த அறிஞரின் தொடர்பு மிகப்பெரிய அளவிற்கு எனக்குப் பயன்பட்டது. நாமொரு கொள்கை நிலையினர் என்றாலும், நாம் தேர்ந்துகொண்ட துறையின் - தமிழின் ஆழ அகலங்களையெல்லாம் விருப்பு வெறுப்பில்லாமல், எதையும் ஒதுக்காமல் பார்க்கவேண்டும் - பயிலவேண்டும் என்னும் பக்குவம் அந்தக் காலத்தில் ஏற்பட்டது.

யாப்புக்கு அதிகாரி’ என்று கவிஞர் ஈரோடு தமிழன்பனால் போற்றப்பட்ட நீங்கள் தமிழ் யாப்பியலில் செய்த பங்களிப்புகள் யாவை? தமிழ்ச் சூழலில் தமிழ் யாப்பியல் குறித்த புரிதல் எவ்வாறிருக்கிறது?

தமிழ்நாட்டு உயர்கல்வி வரலாற்றில், தமிழியல் ஆய்வு வரலாற்றில் கடந்த இருபது ஆண்டுகளாகத் தமிழின் முக்கியமான இலக்கணத் துறையாகிய யாப்பிலக்கணத் துறையை முன்னெடுத்ததில் என்னுடைய பங்கு கணிசமானது. சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தராகத் திகழ்ந்த பேரறிஞர் பொற்கோ அவர்கள் இந்த நோக்கத்தையும் கருத்தில்கொண்டுதான் என்னைப் பணியமர்த்தினார். என் ஆசான் பொற்கோ அவர்கள் யாப்பியலிலும் தனித்தன்மையான ஓர் அறிஞர். எனக்குள் இருந்த யாப்பியல் புலமையை உணர்ந்து இந்தத் துறையில் நான் ஆய்வு நிகழ்த்த என்னை ஈடுபடுத்தியவர் பொற்கோ அவர்கள்தான். நான் இந்தத் துறையில் ஆய்வு நிகழ்த்திய காலத்தில் தமிழ்நாட்டின் மூத்த தமிழறிஞர் ஒருவர் “ஏனப்பா, யாப்பு என்னும் பாழடைந்த மாளிகைக்குள் நுழைந்திருக்கின்றாய்” என்று கேட்டார். யாப்பு என்னும் தமிழின் அடிப்படையான இலக்கணத் துறையைப் பற்றிய புரிதல் பலருக்கு இப்படித்தான் இருந்தது. கால்டுவெல்லுக்கு முன்பே திராவிடமொழிகள் பற்றிய கருத்தாக்கம் கொண்டிருந்த எல்லிஸ், அந்தக் காலத்திலேயே தமிழ் யாப்பின் முக்கியத்துவத்தைச் சிறப் பாக எடுத்துரைத்திருக்கின்றார்.தமிழ் யாப்பு என்பது கவிதை எழுதமட்டுமன்று; எழுதிய கவிதையைக் காப்பாற்றவும் பயன்படுவது என்று அவர் தான் முதன்முதலில் தமிழ் யாப்பின் உயர்வை எடுத்துச்சொன்னார்.

இன்று தமிழியல் ஆய்வுப்பரப்பில் யாப்பிய லின் இடம் நன்கு உணரப்பட்டிருக்கின்றது. அண்மையில் அறிவிக்கப்பட்ட கலைஞர் செம்மொழி விருதான பத்து இலட்சம் ரூபாய் பெறவுள்ள செருமானிய அறிஞர் உல்ரிக்கே நிக்கலஸ் யாப்பருங்கலக்காரிகையை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிற அளவிற்குத் தமிழ் யாப்பின் முக்கியத்துவம் உலகளாவிய நிலையில் உணரப்பட்டிருக்கிறது.

mmm

உங்கள் ஆய்வுப் பரம்பரையில் யாப்பி யல் குறித்த ஆய்வுகள் எந்தளவு முன்னெடுக்கப் பட்டுள்ளன?

என்னுடைய மேற்பார்வையில் 14 ஆய்வாளர்கள் தமிழ் யாப்பினைக் குறித்து ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றிருக்கின்றனர். ஏராளமான ஆய்வியல் நிறைஞர் பட்டங்களும் யாப்பியல் களத்தில் என் மேற்பார்வையில் நிகழ்த்தப்பட்டுள்ளன. இந்த ஆய்வாளர்கள் அனைவரும் தமிழ் யாப்பு என்னும் துறைக்கு முக்கியமான பங்களிப் பைச் செய்துள்ளனர். இவர்களில் சிலர் அவர் களின் ஆய்விற்காகக் குடியரசுத் தலைவர் விருது களையும் பெற்றுள்ளனர். என் ஆய்வு மாணவர் களில் முதன் முதலில் குடியரசுத் தலைவர் விருது பெற்றவர் முனைவர் பா. இளமாறன் (ஜெய்கணேஷ்)அவர்கள். அடுத்தடுத்து முறையே முனைவர் கண்ணியம் அ. சதீஷ், முனைவர் ப. திருஞானசம்பந்தம் ஆகியோர் குடியரசுத் தலைவர் விருதுகளைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. இவர்கள் தவிர முனைவர் அ. மோகனா தமிழ்ப்பேராயம் விருதினையும் பெற்றுள்ளார். தொடர்ந்து இந்தத் துறையிலேயே என் மாணவர் கள் இயங்கிவருவது எனக்குப் பெருமகிழ்ச்சி யளிக்கிறது.

யாப்பிலக்கணம் என்னும் துறையில் ஒரு பேராசிரியரின் மேற்பார்வையில் இத்தனை ஆய்வாளர்கள் ஆய்வு செய்திருப்பது இதற்கு முன் நிகழ்ந்ததாக வரலாறில்லை.

பாரதிதாசன் மீது உங்களுக்குப் பற்று ஏற்படக் காரணம் என்ன? பாரதிதாசன் படைப்பு களைச் செம்பதிப்புகளாக வெளியிட்டிருக் கிறீர்கள். முந்தைய காலப் பதிப்புகளிலிருந்து உங்கள் பதிப்புகள் எந்த நிலையில் வேறுபடு கின்றன? பாரதிதாசன் குறித்து நீங்கள் நிகழ்த்திய ஆய்வுகள் குறித்தும் சொல்லுங்கள்?

என்னுடைய இரண்டு ஆசிரியர் பெருமக்கள் பாரதிதாசனோடு ஒவ்வொரு வகையில் தொடர்புடையவர்கள். ஒருவர் ஈரோடு தமிழன்பன் அவர்கள். பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள் நெருக்கமாகப் பழகியவர். பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களில் உச்சம்தொட்ட ஒருபெருங் கவிஞர். இன்னொருவர் பாரதிதாசன் ஆராய்ச்சி உலகத்தின் தலைமகன் என்று போற்றத் தக்க அய்யா இரா. இளவரசு அவர்கள். இவ்விருவரும் ஏற்படுத்திய உணர்வுகளும் என்னைப் பாரதிதாசனில் ஆழ்ந்து திளைக்கச் செய்தன. தென்மொழியும் பெருஞ்சித்திரனாரும் பாவாணரும் எனக்குள் வித்திட்ட தமிழ், தமிழன் என்னும் உணர்வு பாரதிதாசனிடத்தில் என்னைக் கொண்டுவந்து சேர்த்தன.

பாரதிதாசன் படைப்புகளுக்கு முதன்முதலில் காலவரிசையில் ஆய்வுப் பதிப்பை உருவாக்கும் முயற்சியை நான் மேற்கொண்டேன். ‘பாரதிதாசன் கவிதை இலக்கியங்கள் - இறைமை - இந்திய விடுதலை இயக்கம்’, ‘பாரதிதாசன் கவிதை இலக்கியங்கள் - சுயமரியாதை, சமத்துவம்’, ‘பாரதிதாசன் அரிய படைப்புகள்’, ‘பாரதிதாசன் இலக்கியம் அறியப்படாத படைப்புகள்’ என்பனவெல்லாம் இந்த வகையில் முன்னோடியான நூல்கள். பாரதிதாசனின் வளர்ச்சி வரலாற்றை, படைப்பாளுமை வரலாற்றை உணர இவையெல்லாம் அடிப்படையான நூல்கள்.

இவை தவிரவும் பாரதிதாசன் குறித்துப் பல நூல்களை எழுதியுள்ளேன். ‘பாரதிதாசன் கவிதைகளில் பாரதியார்’, ‘பாரதிதாசனும் சக்தி இதழும்’, ‘பாரதிதாசன் யாப்பியல்’ முதலியனவெல்லாம் இந்த வகையில் வெளிவந்தவை. பாரதிதாசன் எழுதிய கதைகள், கவிதைகள், சொற்பொழிவுகள் முதலிய பலவற்றை முதன்முறையாகக் கண்டுபிடித்து வெளியிட்டிருக்கின்றேன். ‘மணிக்கொடி மரபும் பாரதிதாசனும்’ என்பது மிக மிக முக்கியமான ஆராய்ச்சி நூல். தமிழ் இலக்கிய உலகில் இரண்டு துருவங்களாகக் கருதப்படுகின்ற ந. பிச்சமூர்த்தி, கு.ப.ரா., சி.சு.செல்லப்பா, க.நா.சு. முதலியோருக்கும் பாரதிதாசனுக்குமிருந்த தொடர்புகளை உரிய ஆவணங்களோடு ஆராய்ந்து அந்த நூலில் எழுதியிருக்கின்றேன். நம் காலத்தின் மிக முக்கியமான ஆய்வறிஞரான ஆ.இரா. வேங்கடாசலபதி ஒரு முறை விகடன் தடம் பேட்டியில், “இவருடைய பாரதிதாசன் ஆய்வுகளும் முக்கியத்துவமுடையவை. ‘மணிக்கொடி மரபும் பாரதிதாசனும்’ பலரும் கவனிக்காமல் போய்விட்ட முக்கிய நூலாகும்” என இந்த நூலின் முக்கியத்துவத்தை அழுத்தமாகக் குறிப்பிட்டிருக்கிறார். நான் உருவாக்கிய பாரதிதாசன் குறித்த நூல்களையெல்லாம் தன் வாழ்நாளில் பாரதிதாசன் கண்டிருந்தால் எனக்கு அவரிடமிருந்து எதிர்பாராத முத்தங்கள் பரிசாகக் கிடைத்திருக்கும் என்று என்னுடைய ஆசிரியப்பெருந்தகை ஈரோடு தமிழன்பன் அவர்கள் பாராட்டியது என் பணிகளையெல்லாம் மீள்பார்வையில் எண்ணிப்பார்க்கும்போது இப்போது நினைவிற்கு வருகிறது.

dd

பாரதிதாசன் குறித்து நுட்பமான ஆய்வுகளை நான் நிகழ்த்தியிருப்பதாக என் ஆசிரியர் இரா.இளவரசு, அறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் உள்ளிட்டவர்கள் எல்லாம் என்னைக் கருதினர். ஒருமுறை ஆஸ்திரேலியத் தமிழ்ச் சங்கத்திலிருந்து தனக்கு வந்த அழைப்பை, எனக்குப் பதிலாகப் பேசும் அளவிற்குப் பாரதிதாசனில் ஆழங்காற்பட்டவர் என்று அவர்களுக்குத் தெரிவித்து என்னைப் பரிந்துரைத்தார் சிலம்பொலி சு. செல்லப்பனார். பாரதிதாசன் 125ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளுக்குச் சிறப்பு விருந்தினராகச் சிட்னி, மெல்பர்ன் சென்று ஏறத் தாழ 2 வாரம் தங்கியிருந்து பாரதிதாசன் குறித்துச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினேன்.

பாரதிதாசன் கவிதைகளுக்கு முழுமையாகச் சிறந்த ஆராய்ச்சிப் பதிப்பு ஒன்றை உருவாக்கி முடித்துள்ள நீங்கள் அந்தப் பதிப்பை முந்தைய பதிப்புகளில் இருந்து எவ்வாறு வேறுபடுத்து கிறீர்கள்?

பாரதிதாசனின் கவிதைகளுக்கு ஏறத்தாழ ஆயிரத்து ஐந்நூறு பக்க அளவில் கால வரிசையில் பாடபேத விளக்கங்களுடன் ஆராய்ச்சிப் பதிப்பு ஒன்றை உருவாக்கியிருக்கின்றேன். இது தொடர்பாக இரண்டு உதாரணங்களைச் சொல்கின்றேன். நமக்கெல்லாம் நன்கு தெரிந்த பாரதிதாசனின் பாடல்களுள் ஒன்று ‘

தமிழுக்கு அமுதென்று பேர்’ என்று தொடங்குவதாகும். இந்தப் பாடல் முதன்முதலில் மணிக்கொடி இதழில் 1933 இல் வெளிவந்த போது அதன் ஒரு பகுதி,

“ தமிழ் எங்கள் இளமைக்குப் பால், இன்பத்

தமிழ் தெய்வத் தமிழ் இங்குப் புலவர்க்கு வேல்…

என்றே வெளிவந்திருந்தது. பாரதிதாசனின் பிற்காலக் கருத்துநிலை மாற்றத்திற்கேற்ப இப்பாடல் பின்னர் தெய்வத்தமிழ் என்ற சொல் இல்லாமல்

“ தமிழ் எங்கள் இளமைக்குப் பால், இன்பத்

தமிழ்நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்…

எனப் பாரதிதாசனாலேயே மாற்றம் செய்யப்பட்டு வெளிவந்தது.

பாரதிதாசன் 1930 இல் எழுதிய 10 பாடல்களைக் கொண்ட படைப்பு சுயமரியாதைச் சுடர் என்பதாகும். அந்தப் பாடல்கள் அனைத்தும் பாரததேசமே என்று முடிந்திருந்தன. திராவிட நாடு, தமிழ்நாடு என்னும் கருத்தியல் மேலோங்கியதும் அந்தக் கடைசிப் பகுதிகளையெல்லாம் அன்னைநாடே, செந்தமிழ் வையமே என மாற்றிவிட்டார். இறைமை, இந்தியதேசியம் என்ற நிலைகளில் அவர் கொண்ட மாற்றங்களின் பிரதிபலிப்பாக இவை அவராலேயே மாற்றப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் அறியும்போது பாரதிதாசனின் வளர்ச்சியை நம்மால் புரிந்துகொள்ள, மதிப்பிட முடிகிறது.

இந்த ஆராய்ச்சிப்பதிப்பு வெளிவரும்போது மேல் நாடுகளில் படைப்பாளிகளுக்கு உருவாக்கப்பட்டதைப் போல அதிகாரப்பூர்வமான ஆராய்ச்சிப் பதிப்பாக அமையும்.

பாரதியாரை எந்தப் புள்ளியிலிருந்து நீங்கள் நேசிக்கத் துவங்கினீர்கள்? பாரதியிடம் நீங்கள் வந்துசேர உங்களுக்கு உந்துதலாக இருந்தவர் யார்?

சிறுவயதிலிருந்து பாரதி பெயரையும் பாரதி பாடல்களையும் கேட்டும் படித்தும் வளர்ந்துவந்த போதிலும் நான் பாரதி படைப்புகளுக்குள் மூழ்கித் திளைக்கக் காரணமானவர் பாரதிதாசன்தான். பாரதிதாசன் வாழ்க்கையிலும் படைப்பிலும் தீவிரமாக ஈடுபட்ட என்னை அவைதாம் பாரதியை நோக்கிக் கொண்டுவந்து சேர்த்தன. பெரியார் என்னும் மாபெரும் ஆளுமையின் செல்வாக்கிற்கு ஆட்பட்டு, திராவிட இயக்கத்தின் மாபெரும் கவிஞராக விளங்கிய போதிலும் மரணத்தருவாய் வரை தன்னைப் பாரதியின் தாசன் என்றே அழைத்துக்கொண்டவர் அவர். தன் கடைசி நாட்களில் அவர் எழுதி முடித்த படைப்பு தன் குருநாதராகிய பாரதியின் திரைப்படத்திற்கான கதை உரையாடலே ஆகும். அந்தப் படத்தை அவரே தயாரிக்கவும் இருந்தார். அவர் வாழ்நாளின் இலட்சியமாகவும் அதுதான் தொடர்ந்து இருந்து வந்தது. அப்படிப்பட்ட பாரதிதாசனின் வழியாகத்தான் நான் பாரதியிடத்தில் வந்து சேர்ந்தேன்.

பாரதியை ஆவணப்படுத்தலில் முன்னோடி பலர் இருந்துள்ளனர். அவர்களின் பணியையும் கடந்து பாரதியின் பல படைப்புகளைத் தொடர்ந்து ஆவணப்படுத்தி வருகிறீர்கள். இந்த ஆவணங்கள் பாரதியியலில் எவ்வகையான தாக்கத்தை உருவாக்கி வருகின்றன?

பாரதி பிறந்த நூற்றாண்டு தாண்டி நினைவு நூற்றாண் டும் வந்துவிட்டது. ஆனால் பாரதி இன்னமும் நமக்கு முழுதாகக் கிடைக்கவில்லை. அவர் வாழ்க்கை குறித்தும் பல உண்மைகள் இன்னமும் நமக்குக் கிடைக்கவேண்டி இருக்கின்றன. அவர் எழுதிய படைப்புகளும் அவர் நடத்திய பத்திரிகைகளும் முழுதாகக் கிடைத்துவிடவில்லை. ஆனால் தமிழ்ச்சமூகத்தில் ஓர் அவலமான சூழ்நிலை உள்ளது. அவர் எழுதியவை எல்லாம் கிடைத்துவிடவில்லை என்பதைக்கூடப் புரிந்துகொள்ளாமல் பாரதியார் ஆவுடையக்காளைப் பற்றி எழுதவில்லை, அயோத்திதாசரைப் பற்றி எழுதவில்லை, வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றி எழுதவில்லை, ஜாலியன் வாலாபாக் படுகொலையைப் பற்றி எழுதவில்லை, பாரதிக்குச் சங்க இலக்கியம் பற்றித் தெரியாது என்றெல்லாம் கொஞ்சமும் தயங்காமல் ஆய்வு பற்றிய புரிதலில்லாமல் நம்முடைய ஆராய்ச்சிப் புலிகள் என்று நினைத்துக்கொள்பவர்கள் உரக்கப் பேசுகின்றனர், எழுதுகின்றனர். இப்படிப்பட்ட பாரதி ஆராய்ச்சிச் சூழலில்தான் நான் பாரதி ஆய்வுகளுக்கு வந்தேன்.

பாரதியியல் என்னும் துறையில் மிகப்பெரிய முன்னோடிகள் எனக்குமுன் செயல்பட்டிருக்கிறார்கள். அர்ப்பணித்துக்கொண்டு செயல்களை ஆற்றியிருக் கின்றார்கள். பாரதியின் தம்பி சி. விசுவநாதையர், பெ. தூரன், ரா.அ. பத்மநாபன், பெ.சு. மணி, சீனி. விசுவநாதன், ஆ.இரா. வேங்கடாசலபதி ஆகிய பெருமக்கள் எனக்கு முன்னோடிகளாகப் பாரதியின் எழுத்துகளைக் கண்டுபிடிக்கிற அரிய பணிகளைப் புரிந்துள்ளனர். இவர்களில் இருவரைப் பற்றி நான் தனித்துக் குறிப்பிட விரும்புகிறேன். பெரியவர் சீனி. விசுவநாதன் காலவரிசையில் பாரதி படைப்புகளை 12 தொகுதிகளாக வெளியிட்டு இருக்கின்றார். ஏராளமான பாரதியின் படைப்புகளைப் புதிதாகக் கண்டெடுத்து வெளியிட்டிருக்கின்றார். பாரதிக்குப் பெரிதும் ஆதாரபூர்வமான வாழ்க்கை வரலாற்றை எழுதியிருக்கின் றார். பேராசிரியர் ஆ.இரா. வேங்கடா சலபதி முதன்முதலில் பாரதியின் கருத்துப்படங்களைத் தேடிக் கண்டு பிடித்து மேனாட்டுப் பதிப்புகளுக்கு ஈடாக வெளியிட்ட பெருமைக்குரியவர். விஜயா பத்திரிகையில் இடம்பெற்ற எழுத்துகளையும் ஆங்கில இந்து நாளிதழில் இடம்பெற்ற எழுத்துகளையும் கண்டுபிடித்து வெளியிட்டவர். இப்படிப்பட்ட முயற்சிகளுக்குப் பின்னர்தான் நான் பாரதியியலில் செயல்படத் தொடங்குகின்றேன்.

என்னுடைய கண்டுபிடிப்புகள் பாரதியியலில் பன்முக நிலைகளில் அமைகின்றன. பாரதி எழுதிய உரைநடைப் படைப்புகளான திமிழ், பீரங்கிச் சிப்பாய், புயற்காற்று, உல்லாசசபை (முதற்பகுதி), லோககுரு (முதற்பகுதி) முதலியவற்றைக் கண்டுபிடித்து வெளியிட்டது ஒரு நிலை. பாரதியார் ஆற்றிய சொற்பொழிவுகள் பலவற்றை முதன்முறையாகக் கண்டுபிடித்து வெளியிட்டது இன்னொரு நிலை. பாரதியின் பாடல் இல்லை எனச் சீனி. விசுவநாதன், கைலாசபதி முதலியோரால் ஐயம்கொள்ளப்பட்ட “தெய்வானுகூலம்” பாடல் பாரதி படைத்ததே என்பதையும், பாரதி பாடல் என ரா.அ. பத்மநாபனால் கொள்ளப்பட்ட “கேளடா மானிடவா” என்ற புகழ்பெற்ற குருவிப்பாட்டு பாரதியால் எழுதப்பட்டதன்று என்பதையும் உரிய ஆதாரங்களோடு தெளிவுபடுத்தியது இன்னொரு நிலை. பாரதி எழுதிய “கோவில் யானை” என்னும் நாடகம் கண்டுபிடிக்கப்பட்டது பாரதி வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வாகும்.

அம்பேத்கரால் பிற்காலத்தில் போற்றப்பட்ட சென்னையில் வாழ்ந்த பௌத்த அறிஞர் பேராசிரியர் இலட்சுமிநரசு தலைமையில் 1905ஆம் ஆண்டிலேயே பாரதியார் சொற்பொழிவு நிகழ்த்தினார் என்பது உள்ளிட்ட பல சொற்பொழிவு விவரங்கள் முதன்முறையாகக் கண்டறிந்து என்னால் வெளிப் படுத்தப்பட்டுள்ளன. பாரதியார் கைதுசெய்யப்பட்ட போது தமிழ்நாட்டில் எத்தகைய எதிரொலி இருந்தது என்பது முதல்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டது. பாரதி வாழ்ந்த காலத்திலேயே அயர்லாந்து அறிஞர் கசின்ஸ் என்பவர் பாரதியின் பாடல்களை மொழிபெயர்த்திருக்கின்றார். இதற்குமுன் ஒரு பாடல் மொழிபெயர்ப்பு மட்டுமே கிடைத் திருந்தது. இப்போது புதிதாக இன்னொரு மொழிபெயர்ப்பையும் கண்டறிந்து வெளியிட்டேன். பாரதியும் காந்தியும் சந்தித்துக்கொண்ட நாள் முதலிய அரிய பல உண்மைகள் முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளன. பாரதியின் புகைப்படங்கள் இதற்குமுன்பு 5 மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில் 6ஆவது படத்தை இனங்கண்டமை பாரதியியலில் முக்கியமான நிகழ்வாகும். பாரதி உயிருடன் இருந்தபோதே பாரதிதாசன் அவரைப் பற்றிச் ‘சுதேசமித்திர’னில் எழுதிய கட்டுரையும் என்னால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்படி ஏராளமாகக் கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளேன்; இன்னும் என்னால் கண்டுபிடிக்கப்பட்டவை விரைவில் வெளிவரவும் உள்ளன.

பாரதி ஆய்வுலகில் அடிக்கடி எழுப்பப்படுகிற சில கேள்விகளுக்கு இப்போது நான் உரிய விடைகளை, ஆதாரங்களைக் கண்டுபிடித்துள்ளேன். அவை விரைவில் வெளிவரவுள்ளன. ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றிய பாரதியின் பதிவு, வீரபாண்டிய கட்டபொம்மன் தொடர்பான பாரதியின் பதிவு, “வந்தேமாதரம்” என்போம் பாடலின் பாரதி ஒடுக்கப்பட்ட மக்கள் தொடர்பாகப் பயன்படுத்திய ஆட்சி தொடர்பான வினாவுக்கான விடை முதலியனவெல்லாம் அவற்றுள் அடங்கும்.

பாரதி பற்றிய உங்கள் கண்டுபிடிப்புகளைப் பற்றிய அறிஞர்களின் மதிப்பீடு எப்படி உள்ளது?

பாரதி குறித்த என்னுடைய புதிய கண்டுபிடிப்பு வெளிவரும் ஒவ்வொரு முறையும் தமிழுலகம் மிகுந்த வரவேற்பை அளித்தே வந்திருக்கின்றது. குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் பொதுவுடமை இயக்கத் தலைவர் நல்லகண்ணு, கவிஞர் ஈரோடு தமிழன்பன், கவிஞர் சிற்பி, நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஆய்வறிஞர் ஆ.இரா. வேங்கடாசலபதி முதலிய பல தரப்பினரும் கண்டுபிடிப்புகள் வெளிப்படும்போதெல்லாம் அது குறித்துப் பாராட்டி வந்துள்ளனர். ‘தினமணி’ ஆசிரியர் கி. வைத்தியநாதன் அவர்களும், ‘தமிழ் இந்து’ நாளிதழின் சமஸ், ஆசைத்தம்பி முதலியோரும், காலச்சுவடு’ ஆசிரியர் கண்ணன் அவர்களும் என்னுடைய கண்டுபிடிப்புகள் பரவலாகச் சென்று சேர மிகுந்த ஈடுபாட்டோடு வழிவகுத்ததனர். இது தொடர்பாக என்னுடைய பாரதியியல் முன்னோடி கள் இருவரின் கருத்துகளை உரிய மதிப்பீடாகக் கொள்ளலாம் என்று நான் கருதுகின்றேன்.

இந்த ஆண்டு தமிழக அரசின் பாரதி விருதினைப் பெறவுள்ள சீனி விசுவநாதன் அவர்கள், “சலபதியும் மணிகண்டனும் பாரதி தமிழ் இலக்கிய இரட்டையர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர். பாரதி எழுதிய எழுத்துக்களைத் தேடித்தேடி நூலாக்கம் செய்த சிறப்புக்கும் உரியவர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

என் சமகால பாரதி ஆய்வறிஞர் ஆ.இரா.வேங்கடாசலபதி “கடந்த சில ஆண்டுகளில் பாரதி ஆய்வுகளில் முனைப்புடன் இருக்கிறார். தேங்கியுள்ள பாரதியியலில் மணிகண்டனின் முயற்சிகள் முக்கிய உடைவுகளை ஏற்படுத்தியுள்ளன” எனக் கூறியுள்ளார்.

பாரதியின் வாழ்க்கை குறித்தும் படைப்புகள் குறித்தும் பல புதிய செய்திகளைப் படைப்புகளை நான் கண்டெடுத்து வெளிப்படுத்தியுள்ளேன் என்பதை எந்தவிதமான போட்டி உணர்வோ, பொறாமை உணர்வோ இல்லாமல் என்னுடைய சமகால முன்னோடிகள் சீனி. விசுவநாதன், சலபதி இருவரும் பாராட்டியிருக்கின்றனர் என்பதே நான் பெற்ற பெரும்பேறு எனக் கருதுகின்றேன்.

உங்கள் கண்டுபிடிப்புகளுக்குப் பிறகு பாரதியின் வாழ்க்கை வரலாற்றை எழுதுவதில் உங்கள் ஆவணங்கள் எவ்வகையான மாற்றங்களை உருவாக்கும்? தமிழ்ச் சமூகத்தில் அந்த ஆவணங்கள் எவ்வகை யான விளைவுகளை உண்டுபண்ணும்? என்று கருதுகிறீர்கள்.

என்னுடைய பாரதி குறித்த புதிய கண்டு பிடிப்புகளால் பாரதியின் படைப்புலகம் விரிவு பெற்றிருக்கின்றது. புதிதாகப் பல படைப்புகள் கிடைத் துள்ளன. பாரதியின் வாழ்க்கை குறித்து இதுவரை கூறப்பட்டுவந்த பல செய்திகள் மாற்றம்பெறுகின்றன. உதாரணமாகப் பாரதி ஆற்றிய முதல் சொற்பொழிவு “கருணை” என்னும் தலைப்பில் சென்னை மாநிலக் கல்லூரியில் பேசியதே எனப் பெரியவர் சீனி. விசுவநாதன் உள்ளிட்டவர்கள் வாழ்க்கை வரலாற்றில் எழுதியுள்ளனர். அந்தச் சொற்பொழிவிற்கு முன்பே நிகழ்ந்த 3 சொற்பொழிவுகளை நான் கண்டுபிடித்துவிட்டேன். இன்னும் எத்தனை கிடைக்கப்போகிறதோ தெரியாது. பாரதி இறப் பதற்கு 3 மாதம்முன் யானை தாக்கிய சம்பவம் நடந்ததென வரலாற்றாசிரியர்கள் எழுதியுள்ளனர்.

இறப்பதற்கு 9 மாதம் முன்பே அந்தச் சம்பவம் நடந்து விட்டது என்பதையும் அதையொட்டி அவர் ஒரு நாடகம் எழுதினார் என்பதையும் நான் கண்டுபிடித் தேன். இப்படிப்பட்ட பல அரிய உண்மைகளின் அடிப்படையில் பாரதியின் வரலாறு கூடுதலான செய்திகளோடு இப்போது மாற்றி எழுதப்படவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இன்னும் கணிசமாகக் கண்டுபிடித்து வைத்துள் ளேன். பாரதி அயோத்திதாசர் தொடர்பாக, பாரதி பெரியார் தொடர்பாகவெல்லாம் புதிய உண்மைகள் வெளிவரவுள்ளன. பாரதியின் பல படைப்புகளும் இன்னும் வெளிவர இருக்கின்றன. இவையெல்லாம் வெளிவரும்பொழுது பாரதியை இன்னும் நாம் ஆழமாகப் புரிந்துகொள்ள முடியும். புரியாத்தனத் தோடும் அவசரத்தன்மையோடும் பாரதியைக் குறைகூறும் முயற்சிகளின் முனை மழுங்கும். தமிழின் நெடிய வரலாற்றில் வள்ளுவர், இளங்கோ, கம்பர் என்னும் வரிசையில் 20ஆம் நூற்றாண்டின் முதற்பெருங்கவிஞர், பாரதிதாசனுக்கும் முன்னோடி என்னும் பெருமைக்குரிய பாரதியின் வாழ்க்கை துல்லியம் பெறும்; பாரதியின் படைப்புலகம் விரிவுபெறும். ஆனால் முழுமைபெறும் என்று சொல்லமுடியாது. அதற்கு ஆயுள் முழுதும் அர்ப்பணிக்க வேண்டும்.

அப்போதும் முடியுமா என்பதைச் சொல்ல முடியாது. அந்த அளவிற்கு 39 ஆண்டுகளே வாழ்ந்த பாரதிப் பெரியோனின் விசுவரூபம் விரிந்து, படர்ந்து வீறுகொண்டு விளங்குகின்றது.

பல களங்களில் உங்கள் ஆய்வுகளை ஆழமாக முன்னெடுத்து இருக்கிறீர்கள். உங்கள் ஆய்விற் குரிய அங்கீகாரம் தமிழ்ச்சூழலில் உங்களுக்கு உரிய நிலையில் வழங்கப்பட்டிருக்கிறதா? உங்களை அலங் கரித்த விருதுகள் குறித்துச் சொல்லுங்கள்?

நான் என் தமிழ் வாழ்வில் ஆற்றிக் கொண்டிருக்கிற பணிகளுக்கு, இதுவரை ஆற்றியுள்ள பணிகளுக்கு நிறைவுகொள்வதைப் போலவே இந்தத் தமிழ்ச் சமூகம் எனக்கு அளித்துள்ள அங்கீ காரங்களுக்கும் நிறைவுகொள்கின்றேன். இந்தியாவின் உச்ச விருதாகிய குடியரசுத் தலைவர் விருதினை - இளம் அறிஞர் விருதினை - தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டதையடுத்து முதல் அணியினரில் ஒருவனாக நான் பெறுகிற பேறு பெற்றேன். அதை யொட்டிக் குறிப்பிடவேண்டிய முக்கியமான செய்தி ஒன்று உண்டு.

குடியரசுத் தலைவர் விருதுக்கான 1,00,000 ரூபாய் தொகையினைத் தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர் கலைஞர் அவர்களின் கைகளால் பெற்றேன்.

இப்போது பாரதி படைப்புகளைக் கண்டெடுத்ததற்காக வழங்கப்பட உள்ள விருதை நினைத்துப் பார்க்கிறேன். தமிழ்நாடு நெடிய ஒரு தேக்கத்திற்குப் பிறகு இப்போது நிமிர்ந்து நிற்கிறது. தமிழ்நாடு தமிழ் உணர்விலும் சமூகநீதித் தளத்திலும் தலைநிமிர்ந்து நிற்க காரண கர்த்தாவாக - இன்று நம்மிடையே வலம் வருகின்ற வரலாற்று நாயகராக, ஆற்றல்மிக்க தலைவராக விளங்குபவர் தமிழ்நாட்டின் முதல்வர் அவர்கள். வ.உ. சிதம்பரனார், பாரதியார், அயோத்திதாசர் முதலிய தமிழ்ச் சமூக ஆளுமைகளைக் கொண்டாடும் பல திட்டங்களைத் தீட்டியுள்ள அந்தப் பெருந்தகை பெரியவர் சீனி. விசுவநாதன் அவர்களுக்கும் எனக் கும் எங்களுக்கெல்லாம் முன்னோடியானவர்களின் குடும்பங்களுக்கும் பாரதி நினைவு நூற்றாண்டு விருதுகளை அறிவித்துள்ளார்.

தந்தை கைகளால் ஓரிலக்கம் விருது பெற்ற நான் அவர்தம் தவப்புதல்வர் தமிழ்நாட்டின் முதல்வர் அவர்களின் கைகளால் மும்மடங்காக மூன்று இலக்கங்கள் பெறவுள்ள பேறு எனக்கு மிகுந்த நிறைவையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.

தமிழக இலக்கிய அமைப்புகள் பலவற்றின் விருதுகளையும் ஏற்கெனவே நான் பெற்றிருக்கின்றேன். அறிஞர் வா.செ. குழந்தைசாமி அவர்களின் பெயரால் அமைந்த விருது ஒரு லட்சமும், கோவை பாரதி பாசறையின் விருது ஐம்பதாயிரம் ரூபாயும் எனப் பல விருதுகள் பாரதி கண்டுபிடிப்புகளுக்காக, பாரதிதாசன் குறித்த முன்னோடி ஆய்வுகளுக்காக, இலக்கணப் பங்களிப்புகளுக்காக இதற்கு முன்னும் வழங்கப்பட்டுள்ளன. எதிர்பார்ப்பில்லாமல் தமிழுக் காக, சமூகத்திற்காக வாழ்க்கையை அர்ப்பணிப்பவர் களின் எண்ணிக்கை பெருகவேண்டும். இன்று இல்லா விட்டால் நாளை என்று சமூகம் தக்கவர்களைக் கொண் டாடும் என்பது என் நம்பிக்கை. நானே அதற்கு ஒரு சாட்சியமாகவும் இருக்கின்றேன். சில அரிய பணிகளை ஆற்றியதற்காக விருது பெறவுள்ள நிலையில் நான் ஒன்றைத் தமிழ் நெஞ்சங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். என்னுடைய பங்களிப்பின் வெளிப்பாட்டுக்குப் பின்புலத்தில் என்னுடைய ஆசிரியர்கள் எனக்கு ஊட்டிய தமிழுணர்வும், தமிழ்ப் புலமையும். என்னுடைய மாணவர்கள் கொண்டிருக்கின்ற அன்புணர்வும் விளங்கிக்கொண்டிருக்கின்றன. அவர்களை இந்தத் தருணத்தில் நான் நினைந்து நினைந்து நெகிழ்கின்றேன். அல்லும் பகலும் அனவரதமும் என்னுள் இருந்து என்னை இயக்கும் தமிழினிய தெய்வதத்தின் தண்ணருளில் திளைக்கும் வாழ்க்கை எனக்கு வசப்பட்டதை எண்ணி எண்ணி நெஞ்சம் நிறைகின்றேன்.