"எனது பெயர் தமிழ் இலக் கியத்தில் இடம்பெறவேண்டும் என்பதற்காக நான் எழுதுவ தில்லை. தமிழின் பெயர் உலக இலக்கியத்தில் இடம்பெற வேண்டும் என்பதற்காகத்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன்' என்று தன்னம்பிக்கை ததும்ப எழுதினார் அந்தக் கவிஞர். "மரபில் கால்பதித்துப் புதுக் கவிதையில் நடைபோட்டு “பகுத்தறிவு, சோசலிசம் என்கிற அடிப்படை இலட்சியங்கள் எனக்குண்டு. அவற்றைக் கலாபோதையோடு நான் பாடுவேன். ஆனால் அவற்றைப் பாடுகிறவன் மட்டும்தான் இலக்கியவாதி என்று வரட்டுக் கூச்சல் போடமாட்டேன். கவிதை என்பது நாடு, மொழி, இனம் முதலிய எல்லைகளுக்கு அப்பால், சிறகு விரிக்கிற உலகப் பறவை' என்று முரசறைந்தார். தன்னைப் பற்றிய பெருமிதத்தோடு, "நான் என்னுடைய பதினைந்தாவது வயதிலேயே எல்லா வகையான மரபுக் கவிதைகளையும் எழுதினேன். அந்த அடிப்படை பலத்தால் 22 வயதில் தொடங்கி 28 வயதில் புதுக்கவிதையில் முழுவெற்றி பெற்றேன்' என்றார்.
அவர்தான் புதுக்கவிதை உலகின் முடிசூடா மன்னராக விளங்கிய கறுப்பு மலர்கள் நா.காமராசன்.
தேனி மாவட்டம் போ. மீனாட்சிபுரத்தில் 1942-ல் நாச்சிமுத்து- இலட்சுமி அம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்த காமராசு, கவியுலகில் நா. காமராசனாக மாறிப் புதுக்கவிதையில் செய்த சாதனைகள் அரிதானவை. 24.5.2017அன்று தன் எழுபத்து நான்கு வயதில் கண்மூடிய கவிஞரின் வாழ்க்கைப் பயணம் "சூரியகாந்தி'யிலும் "கறுப்பு மலர்'களிலும் மணந்து கொண்டிருக்கிறது. பதினேழு நூல்கள் எழுதியதாகக் கணக்கைச் சொல்கிறது அவர் வரலாறு. ஆனால் ஆயிரமாயிரம் இளைஞர்களைப் புதுக்கவிதையின் பக்கம் இழுத்துவந்து எழுத வைத்தார் என்பதோடு, அவர் எழுத்தில் நடனமாடிய தேவ தேவீ என்கிற சொல்லாட்சி, அன்றைய காலகட்டத்தில் பல உள்ளங்களை அலைக்கழித்தது என்பதே உண்மை.
1964-ல் மதுரை தியாகராயர் கல்லூரி மாணவராக இருந்தபோது இந்தி எதிர்ப்புப் போராட்ட மறவராகப் பொங்கி எழுந்தபோதே, விலங்கு மாட்டிச் சிறையில் அடைக்கப்பட்டவர். அண்ணாவின் மேல் அளவற்ற ஈடுபாடு கொண்ட கவிஞர் தன்னுடைய கறுப்பு மலர்கள் நூலில், "எவன் எனது கவித்துவத்தின் ஊற்றுக் கண்களைத் திறந்துவிட்டவனோ… அவன் அந்த அண்ணா... இந்தக் கவிதைகளில் ஒரு வரியைக்கூடப் படிக்காமல் மடிந்து போய்விட்டான்' என்கிற உண்மையை என்னாலே ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை என்று நெஞ்சுருகிப் பதிவுசெய்தார்.
கழகங்களின் கைப்பிடித்து நடந்த கவிஞர், அறுபதுகளின் பிற்பகுதியில் எழுத ஆரம்பித்தார். உவமைக் கவிஞர் சுரதாவின் தாக்கம் சற்றே அதிகமாக அவருடைய மரபுக் கவிதையில் இருந்தது. புதிய சொற்சேர்க்கைகளையும், அழகான சந்தங்களையும், உருவகங்களையும், படிமங்களையும் கவிதைக்குள் கொண்டுவந்து கொட்டியதோடு கவியரசர் கண்ணதாசனின் உரைநடையைப் போல நடைச்சித்திரங்கள் என்று நளினம் காட்டினார். விளிம்புநிலை மனிதர்களின் வேதனைகளையும் விம்மல்களையும் சமுதாய நிலைமைகளையும் புதுக்கவிதையில் எழுதியபோது, நா.கா.வின் பெயர் தவிர்க்கமுடியாத பெயராக மாறிப்போனது.
கலைஞர் இவரை இலக்கியத்திற்குள் இழுத்து வந்தவர் என்றால் மக்கள் திலகம் இவரை திரைப்பாடலுக்குள் இழுத்துக்கொண்டார் என்றுதான் சொல்லவேண்டும். சில காலம் உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியின் தமிழ்த்துறையில் பணியாற்றிப் பின் தமிழக அரசின் மொழிபெயர்ப்புத் துறையிலும் பணியாற்றினார். மக்கள் திலகத்தின் ஆட்சிக் காலத்தில் கதர் வாரியத் துறையின் துணைத் தலைவராக இருந்தார். அக்கட்சியின் பல பொறுப்பு களிலும் இருந்தார்.
ஜெயலலிதா அம்மையாரால் 1991-ல் இயல், இசை, நாடக மன்றத்தின் உறுப்பினராகவும் நியமிக்கப் பட்டார். இவர் படைப்புகள் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் பாட நூல்களாகப் படிக்கப்பட்டன. கவியரங்கக் கவிதைகளிலும் ஆரம்ப நாள்களில் ஒளிவீசினார். முதல் திரைப்பாடல், மக்கள் திலகத்தின் "இதயக்கனி' என்ற படத்தில் “தொட்ட இடமெல்லாம் தித்திப்பு இருக்கும்’’ என்று ஒலித்தது. திரையிசைப் பாடல்களிலும் இவர் குரல் தனித்து ஒலித்தது. "பஞ்சவர்ணம்' என்ற படத்துக்கு வசனமும் எழுதினார். சோதனை என்ற இலக்கிய இதழையும் வெளியிட்டார். ஆனால் தொடர்ந்து இதழியலில் அவரால் இயங்கமுடியவில்லை.
நா.கா.வுக்கு வடமொழிச் சொற்களின் மீது தீராத மயக்கம் இருந்தது. தேவவசந்தம், ரத்த புஷ்பங்கள், யௌவன மலர்கள், சொப்பனத்தின் வசந்தருது, ப்ரியமானவளே, பூர்ணிமையின் கள், வசந்த புத்ரிகள், வர்ணஜால தீபங்களே!, சூன்ய கானம் என்றெல்லாம் எழுதியபோது கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார். எனினும் தன் போக்கில் எழுதிக் கொண்டே இருந்தார். தான் யார், தன் வழி எது என்பதை
திராவிடத்துத் தமிழென்னும் புதையலின்மேல்
தீராத ஆசை வைத்தோன்
பராபரத்தைப் பாராத முகத்தை வாழ்த்தும்
பச்சைநாத்திகன் நான்.. தங்கக்
குரானைப்போல் விதவைமணம் வேண்டுமென்று
குரல்கொடுப்போன்.. மணல்வீடான
அரேபியாவின் திராட்சைகளை கவிதைகளாய்
அறிமுகம் செய்கின்றவன் நான்.
(சூரியகாந்தி. பக்7- இதயக்குரல்)
என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். மொழிப்போரின் மீது எழுந்த பெரும் மாணவர் படையின் தளபதிகளில் ஒருவராகத் தலை நிமிர்ந்து நின்ற நா.கா, இந்தி எதிர்ப்புப் போரில் தன் இன்னுயிர் நீத்த சின்னச் சாமியை எண்ணி எந்தையர் திணித்த போதும்
இந்தியை எதிர்ப்பேன் என்னும்
மந்திரம் சொன்ன வாயை
மண்டிய தழலுக் குள்ளே
தந்திடத் துணிந்தாய்..எங்கள்
தங்கமே! உன்னை மீண்டும்
தந்திட முடிந்தால் என்றன்
சரித்திரம் முடித்துக் கொள்வேன்.
-(சூரியகாந்தி .பக். 11 நெருப்பு மறவன்)
என்று எழுதிய வரிகளில் தன் உள்ளக் கிடக்கையை உரக்கச் சொன்னார். கொந்தளித்த இளைய உள்ளங் களின் குரலாக இவ்வரிகள் ஒலித்தன. பெருந்தலைவர் காமராசரையே கொளுத்திவிடக் கிளம்பிவந்த வெறியர் களைப் பற்றி நாடே அறியும். அப்படித்தான் அன்றைய காலகட்டத்தில் சிவசேனை என்கிற கும்பல் ஆடிய ஆட்டம் கொஞ்சநஞ்சமல்ல. தமிழர்களைக் கிள்ளுக் கீரையாக நினைத்து ஆடிக் கொண்டிருந்தார்கள். பதறித் துடித்தவர்கள் ஏராளமானவர்கள். நா.காவின் கவிதை மனம் குமுறியது.
“இந்தி“யரே எச்சரிக்கை! தெற்கு நாட்டார்
இதயத்தில் தீமூட்ட வேண்டாம்! பூவைப்
பந்தாடும் காற்றுப்போர் அன்றி நாட்டில்
பச்சைரத்தப் போரில்லை என்று சொன்ன
தந்தையர்கள் வழிவந்தோர் நாங்கள்.. பாட்டுச்
சந்தனத்தைச் சிந்தனையில் பூசிக் கொண்ட
இந்திரர்கள்..! எங்களினம் வெகுண்டெ ழுந்தால்
இமயத்தின் பனிப்போர்வை கந்த லாகும்..
“சிவசேனை“ ஆர்ப்பாட்டம் என்ன? அந்தச்
சிவனேவந் தெரித்தாலும் அச்ச மில்லை
(சூ.கா. பக் 42- சிவசேனை கவிதை)
என்று கவிதையில் அறைகூவல் விடுத்தார். ஆனால் பின்னாளில் கவிஞர் ஆர்.எஸ்.எஸ், இயக்கத்தோடு தொடர்புகொண்டதாகத் தெரிந்தது காலமுரணன்றி வேறென்ன?
சந்தச் சலங்கைகட்டிக் கவிஞர் ஆடிய ஆட்டமும் ரசிக்கக்கூடியதுதான். "தண்ணீர்ப்படை' என்ற கவிதையில்
காலைப் பொழுதில் வெய்யோன் வேலைப் பொழுதில்- குளிர்
காற்றுச் சதிரில் முகில் கண்டுண்டது-அது
கண்ணீர்ப் பிரசவம் கொண்டது-வெயில்
கீற்று வெடித்தநிலம் நீருண்டது-ஒரு
கிழக்கு விளக்கு துயில் கொண்டது.“
(சூ.கா. பக். 15- தண்ணீர்ப்படை)
என்று விளையாடினார். அழகியல் தூக்கலாக அமைந்த அவருடைய கவிதையின் தலைப்புகளே படிப்பவரை ஈர்க்கக்கூடியவையாக இருந்தன. பாடுபொருள்களும் வழக்கத்துக்கு மாறானவையாக இருந்தன. புதுமையாக இருந்தன. “அட.. எப்படி எழுதுகிறார் இந்தக் கவிஞர்’’ என்று பிறரை அவர்பக்கம் திரும்ப வைத்தன. மதுரைத் தெப்பக்குளத்தைப் பற்றி "உடல் மரணம்' என்ற கவிதையில்
தேன்நிலவு வந்து
மகமதியர் ஆட்சியினைப் பரவ வைத்த
மாமன்னன் அக்பரைப்போல் ஒளிவெள்ளத்தை
அகிலத்தில் பரவவைக்க வேண்டும்.. அந்த
அரவணைப்பில் நான்கொஞ்சம் மயங்க வேண்டும்
(சூ.கா.பக். 17)
என்று எழுதுகிற வரிகளில் அவரின் இதய ஏக்கம் எதிரொலிக்கிறது. முகவை மாவட்டத்தில் இதம்பாடல் என்றொரு ஊருண்டு. அதையே தலைப்பாக்கிக் காதல் கவிதையை எழுதினார்-
அடிவான விண்மீனே, அடிஎன் கண்ணே!
அடிக்கரும்பின் இனிப்பேஎன் முழுநினைப்பே
பிடிவாதப் போக்காலே வாழ்வில் என்கைப்
பிடித்த மானே! எனக்கு மிகப்பிடித்த மான
கொடியிடையை உடையவளே, கரிகாற் சோழன்
குடைநிழல்போல் குளிர்ந்திருக்கும் நிலாநேரத்தில்
குடிபோதை இதழ்க்கூட்டம் சந்தித்தால்தான்
குடிவளர்க்கும் பிள்ளைநிலாக் கொழுந்து தோன்றும்..
(சூ.கா. பக் 20)
நான் இங்கே நீஅங்கே இடையில் சோக
நதிபவனி வருகிறது.. (சூ.கா பக் 21)
இப்படிக் காதல் உணர்வை கனிந்த மொழியில் பிழிந்துதருகிறார் கவிஞர். படிக்கிற உள்ளம் ஒரு நொடி, துடித்துப்போகிறது. சோக நதி பவனி
வருகிறது என்பதை நம்முன் காட்சியாகக் கொண்டு
வந்து காட்டுகிறார். காதலன் வந்து கொஞ்ச நேரம் கொஞ்சினால்தான் அவளுக்குத் தூக்கம் வருமாம். அதைச் சொல்லவருகிற கவிஞர், காதலனின் நிறத் தையும், அவளின் இளைத்துப்போன உருவத்தையும் வார்த்தைகளில் வரைந்து காட்டுகிறார்
அவரைப்பூப் போல்சிவந்த மேனி பெற்ற
அவரைப் பூவிழியாலே பார்த்தேன்.. ஏதோ
சிவனைப்போல் அவர்மாறி உடம்பில் என்னைச்
செம்பாதியாய் வைத்துக்கொண்டால் போதும்.
கவலையினால் ஆள்பாதி யாகி விட்டேன்.
கண்ணீரால் நாள்பாதி போக்கி விட்டேன்
குவளைப்பூக் கண்அந்த அத்தான் வந்து
கொஞ்சநேரம் கொஞ்சினால்தான் தூங்கும் போலும்“.
(சூ.கா. பக் 24)
எப்படிப்பட்ட ஏக்கம் அடடா.. இது இப்படி என்றால் தமக்கைக்கும் தம்பிக்குமான மன உணர்வை "கடிதம்' என்ற கவிதையில்
நொடிக்குநொடி என்னெஞ்சம் உன்னை எண்ணி
நொடிக்குநொடி துடிக்கிறது.. துன்பம் என்னை
அடிக்கடி வந்தணைக்கிறது.. பாசம் வாழ்வை
அழிக்கிறது..இப்படியே கால மெல்லாம்
துடிப்பதற்கோ எனக்கிங்கே ஆற்ற லில்லை
துவள்கின்றேன்.. என்கதையைச் சாவு வந்து
முடிப்பதற்கு முயல்கிறது.. அதற்குள் உன்றன்
முகமலரை ஒருமுறைநான் காண வேண்டும்..
( சூ.கா பக் 27-)
என்று பதிவுசெய்கிறார். தன் மகள் திருமணம் செய்துகொண்டு புகுந்த வீட்டுக்குச் சென்ற போது கவிஞர் எழுதிய திரைப்படப் பாடல்தான் "சிட்டுக்கு- சின்னச் சிட்டுக்குச் சிறகு முளைத்தது' என்ற பாடல். அதைப் போல் தமக்கைக்கும் தம்பிக்குமான மனஉணர்வை இக்கவிதை, கடிதம் வழியே பல ஆண்டுகளுக்கு முன்பே தெரிவிக்கிறது.
மரபுக் கவிதையிலும் உருவகத்தை உலாவரச் செய்தவர் கவிஞர். மயான பூமியைப் பற்றி
பூங்குழல் மாதர் பூவிழுந் தழுதால்
பூமுடிக் கின்ற பூமா தேவியே!
உடலில் எரியும் உயிர்விளக் கெரிந்தால்
சுடர்விளக் கேந்தும் சூனியக் காரியே!
தாய்ப்பால் எழுதிய சரித்திர ஏட்டில்
தீயிடும் இடமே! சாவுப் பள்ளமே!
என்று உருவகப்படுத்திக்கொண்டே போகிறார்.
ஒவ்வொரு வரியைப் படிக்கிறபோதும் நமக்குச் சுடுகாட்டின் தோற்றம் தெரிகிறது. மலையாளக் கவிஞர் சங்கர குரூப்பின் கவிதையை “சூரியகாந்தி’’ என்று மொழிபெயர்த்தார். அதில்
ஒளித் தெய்வத்தின் மீது
நான் காதல் கொண்டேன்.
இந்தக் காதலுக்குப் பிறகு
என்மீது உலகம் வீசிய வசையே
எனது பெயராக உருவெடுத்தது போலும்
என்கிறார். பழைய தடத்திலேயே போகாமல் தன் கவிதையில் புதுமையைப் புகுத்தவேண்டும் என்பதற்காகச் சொற்களில் சில வித்தைகளைக் காட்டினார். "சொப்பனப்பூ விழியழகர்', "ஆசை ஆடு இதயத்தை மேய்கிறது' என்றும் "நிழலை “மண்ணை ஈரம்செய்யாத சேறே.' என்றும் "தோப்புத் தெய்வங்கள் படைக்கின்ற மண்சொர்க்கம்நீ.' என்றும் குறிப்பிட்டார்.
வஞ்சிக்கோமான் விழிகள் சந்திக் கின்ற
வஞ்சிக்கோ மான்விழிகள் (பக் 25 சேரன் காதலி)
என்று சொல்பிரித்து விளையாட்டுக் காட்டினார்.
கவிதைகளும் சில வசன கவிதைகளுமாக மணம்பரப்பும் "கறுப்பு மலர்கள்' நூல் கவிஞருக்குப் பெரும்புகழ் சேர்த்தது. புதுக்கவிதை உலகின் தவிர்க்கமுடியாத பெயராக நா.கா.வின் பெயர் நிலைபெற்றதற்கு இந்த நூலே காரணமானது. இந்த நேரத்தில் “தமிழ்ப் புதுக்கவிதை வரலாறு பற்றிய ஆய்வுக் கட்டுரையில் ந.பிச்சமூர்த்தி, கு.பா.ராஜகோபாலன், புதுமைப்பித்தன், க.நா.சுப்பிரமணியம் முதலியவர்கள், டி.எஸ்.எலியட், எஸ்ரா. பவுண்டு ஆகியோர்களை அறிந்துள்ளார்கள் என்றபோதிலும் அவர்களை ஆழமாகப் பயின்றவர்களாக இல்லை. அவ்வாறு பயின்று இருந்தால் இவர்களது புதுக் கவிதையின் தரம் மேம்பட்டிருக்கும் என்கிற பேராசிரியர் மருதநாயகத்தின் கருத்தை எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கிறது. (தமிழியல் ஆய்வுகள்- தமிழ்நேயத்தின் பார்வை பக் 228). ஏனெனில் இந்த நூலுக்கு ஒரு விமர்சனம் வழங்கிய கவியரசர் கண்ணதாசன், "உலகின் பிற பாகங்களிலிருந்து கலந்து விட்ட கவிதை நாகரிகத்தின் எதிரொலிகள் இந்த நூலெங்கும் பரவிக் கிடக்கின்றன' என்கிறார். சரியான மதிப்பீடாகவே தெரிகிறது. கலீல் ஜிப்ரானின் சொல் அலங்காரம் கவிஞரின் எழுத்துகளில் அழுத்தமாகவே பதிந்திருந்தது. "காகிதப்பூக்கள்' என்ற தலைப்பிட்டு திருநங்கையரைப் பற்றி எழுதினார்.
சந்திப் பிழைபோன்ற
சந்ததிப் பிழைகள் நாங்கள்
என்றும்
தாய்ப்பெண்ணோ முல்லைப்பூ
தனிமலடி தாழம்பூ
வாய்ப்பந்தல் போடுகின்ற நாங்கள்
காகிதப் பூக்கள்
என்று பதிவுசெய்தார். அமாவாசைக்கு முதல்நாள் இரவில் ஒரு பிச்சைக்காரனின் கண்ணீர் நினைவுகளாக
நிலாச்சோறு’’ என்ற கவிதையை எழுதினார்.
நாளைக்கோ அமாவாசை
நரைத்தநிலாக் கல்லறைநாள்
நரைத்தநிலாக் கல்லறைக்குள்
நான்தூங்க வருகின்றேன்..
துண்டுநிலா சோறாக
துளிவிண்மீன் கறியாக
கண்டுபசி நோய்கொண்டேன்
காலன்தேர் என்றுவரும்?
என்று துயரந்தோய்ந்த தேம்பலை வெளிப்படுத்தி னார். மலைவாழ் பளியர் குலத்தின் சோக வாழ்க்கைப் பாடலாக "நடைப்பிணங்கள்' என்ற தலைப்பில்
தொட்டிலிலே கிளிப்பிள்ளை
தோள்மீது மயில்மனைவி
தோளணைந்த மனைவிக்கோ
தொகைதொகையாய் நோய்நொடிகள்.
வானில் நிலவுண்டு
வயிற்றுக்குச் சோறுண்டா?
என்று கொதித்தார். நாட்டுப்புறப் பாடல் வடிவில் எளிய மனிதர்களின் மன ஓட்டங்களை சித்தரித்த கவிஞர், அவர்கள் நீதிமன்றத்தை விசாரணை செய்கிறார் கள் என்ற தலைப்பில் பிச்சைக்காரி, குடிகாரன் விசாரிப்பதாக எழுதியது பலரையும் அதிரவைத்தது.
இரவு கூட விடியலில் மன்னிக்கப்படுகிறது.
இன்றும் நாங்கள் மன்னிக்கப்பட வில்லை.
எமக்கு இந்த உலகில்
பெறுவதற்கு என்ன இருக்கிறது?
கைவிலங்குகளைத் தவிர?
என்று பிச்சைக்காரியும்
மதுவே ராஜ திரவமே!
மகாகவிகளின் தாய்ப்பாலே!
நீயொரு தேவதூதனின் பொன்சிறகென்றால்
இந்தக் கைவிலங்கு யாருடையது?
என்று குடிகாரனும் கேட்பது புதிய குரலாக எதிரொலித்தது. அதேபோல் “விலைமகளிர்’’ குறித்து எழுதிய கவிதை பல எதிர்வினைகளைக் கிளப்பியது.
நாங்கள் நிர்வாணத்தை விற்பனை செய்கிறோம்
ஆடை வாங்குவதற்காக
எங்களால்
படுக்கை தொட்டிலின் விசுவரூபமாகத் தெரிகிறது
என்றார். நீக்ரோக்களைப் பற்றிய உருவகக் கவிதைதான் "கறுப்பு மலர்கள்'. நடைபாதையை ஏழைகள் உறங்கிட இயற்கையால் ஏற்படுத்தப்பட்ட புழுதிக்கட்டில் என்றார். புல்லைக் கூட, "வால் முளைத்த மண்ணே! வசந்தத்தின் பச்சை முத்திரையே! உடல் மெலிந்த தாவரமே!' என்றெல் லாம் உருவகப்படுத்தினார். முரண்களால் அலங் கரிக்கப்பட்ட கவிதையாகக் கவிஞரின் கவிதைகள் விளங்கின. சோசலிச சமுதாயத்தைக் காண விழைந்த கவிஞர்
பொங்கலுக்குப் பொங்கல்
யாருக்கோ உழைத்தவர்க்கு
புதுப்பொங்கல் வரும்நாளே
பூமிக்குத் திருநாளாம் (காட்டுக்குறத்தி பக் 112)
என்றார். “காட்டுக்குறத்தி, “மலையும் ஜீவநதி களும், ஞானத்தேர், “ஆப்பிள் கனவு, அந்த வேப்பமரத்தடியில்’’ “சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள்’’ “தாஜ்மகாலும் ரொட்டித்துண்டும், பெரியார் காவியம், பொம்மைப்பாடகி’’ என்று பல படைப்புகளைத் தந்தார். “நடைச்சித்திரங்களும்’’ கலந்திருந்தன. ஆனால் பெரும்பாலான படைப்புகளில் ஒருவகையான தளர்ச்சியும், உரைநடைத் தன்மை கூடியும் இருப்பதைக் காணமுடிகிறது. என்றாலும் அவருடைய மொத்தப் படைப்புகளின் மூல விதைகளை சூரிய காந்தியும் “கறுப்பு மலர்களும்’’ சுமந்து நிற்பதைக் காணமுடிகிறது. இருந்தும்
இந்த
இசை மண்டபத்திற்கு-
நான் பாடல்களோடுதான் வந்தேன்.
ஆனால் இங்கே
செவிடர்கள் மட்டுமே இருந்தார்கள்
என்ற அவர் குரல் எங்கோ ஒலிப்பதைக் கேட்க முடிகிறது. அவருடைய படைப்புகள் ஒவ்வொன்றும் தனித்தனியே ஆய்வு செய்யப்படவேண்டும். புதுக் கவிதையின் வீரிய விளைச்சலுக்கு விதைபோட்டவர்களின் வரலாற்றில் “கறுப்புமலர்கள்’’ காமராசனின் வரலாற்றை எவரும் மறைத்துவிட முடியாது. ஒளிவீசி மணந்துகொண்டேயிருக்கும்.