விதை உலகில் தொடர்ந்து இயங்கி வருபவர் கவிஞர் தங்கம் மூர்த்தி. ஹைக்கூ, கவிதை, கட்டுரை என முத்திரை பதித்து வருபவர். கவிதைத் தொகுப்புகள் பல மறுபதிப்பு கண்டவை கவிஞர் தங்கம் மூர்த்தி உடையதாகத்தான் இருக்கும். கவியரங்கம் என்றால் கவிஞர் தங்கம் மூர்த்திக்கு மிகவும் பிடித்தமானது.

கவிஞர் தங்கம் மூர்த்தியின் கவியரங்கங்களும் மக்களுக்கு பிடித்தமானது. கவிதைத் துறையில் மட்டுமல்லாது கல்வித் துறையிலும் சுவடுபதித்து வருபவர். சக கவிஞர்களுடன் சினேகித்ததுடன் பழகும் பண்பு கொண்டவர். உரையாடல் மூலம் உள்ளம் கவர்ந்தவர். புத்தகக் கண்காட்சி, இலங்கைப் பயணம் மற்றும் பல நிகழ்வுகள் என பரபரப்புடன் இருப்பவரிடம் இனிய உதயம் இதழுக்காக ஒரு நேர்காணல்.

வணக்கம். உங்களிடம் கேட்கவேண்டிய முதல் கேள்வி. கல்வித் துறை, கவிதைத் துறை இரண்டிலும் எப்படி உங்களால் ஒரே நேரத்தில் இயங்க முடிகிறது?

கல்வித்துறை, கவிதைத்துறை இரண்டுமே நான் மிகவும் விரும்பி ஏற்ற துறைகள். கல்வி என்பது வெளியில் இருப்பதை உள்ளுக்குள் கொண்டுசெல்வது கவிதையென்பது உள்ளுக்குள்ளிருப்பதை வெளியே கொண்டுவருவது. இரண்டுமே புத்தகம், நோட்டு, பேனா இவைகளோடு சம்பந்தப்பட்டவை. ஒன்றில் அறிவை ஏற்றி வைக்கிறேன். ஒன்றில் அனுபவத்தை இறக்கிவைக்கிறேன்.

Advertisment

கவிதைக்கு என் கல்வி பெருமளவு பயன்பட்டதில்லை. ஆனால் கல்விக்கு என் கவிதை நிறைய பயன்படுகிறது. மனம் பண்படுகிறது. இரண்டிலும் காட்டும் சம அளவு நேசம் என் பயணத்தை எளிதாக்குகிறது.

மாணவர்களிடம் கவிதை குறித்து உரையாடுவதுண்டா?

என்ன இப்படி கேட்டுட்டீங்க..... என் உரையாடலே கவிதையாக இருக்கும். ஒவ்வொரு மாணவரும் என் குழந்தை. ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் ஒரு கவிதை இருக்கும். நான்கு பக்கமும் கவிதைகளால் சூழப்பட்டவர்கள் குழந்தைகள். அவர்களுக்கு நிறையக் கவிதைகளை அறிமுகப்படுத்துவேன்.

Advertisment

ஒரு கவிஞன் என்பவன் உருவாகிறானா? உருவாக்கப்படுகிறானா?

ஒரு குயவர் மண்ணைக் குழைத்து பானை செய்கிறபோது மண்ணை பானைக்குத் தகுந்தவாறு சேர்த்துக்கொண்டே இருப்பார். ஒரு சிற்பி சிலை வடிக்கிறபோது கல்லிலிருந்து தேவை யில்லாதவற்றை செதுக்கிக்கொண்டிருக்கும் போதே ஒதுக்கிக் கொண்டு வருவார். கவிதையும் அவ்வாறே சிலவற்றைச் சேர்ப்பதிலும், சிலவற்றைக் கழிப்பதிலும் உருவாகிற புது மொழி. கவிஞனை யாரும் உருவாக்கமுடியாது. அவனுக்குள்ளிலிருந்து இன்னொருவன் வெளிப்படவேண்டும். அவனது மொழிக்குள்ளிருந்து இன்னொரு மொழியைக் கண்டெடுக்க வேண்டும். மொழிக்குள் இன்னொரு மொழியைக் கண்டெடுப்பதே கவிதை.

நல்ல விளக்கம். உங்கள் மாணவர்களில் எவராவது ஒருவர் கவிஞராக உருவாகியுள்ளரா? அல்லது உருவாக்கப்பட்டுள்ளாரா?

பலர் உருவாகியுள்ளனர். புகழின் உச்சிக்கு வரும் வேளையில் அவர்கள் என் பெயரை உச்சரிக்கக்கூடும். என் பள்ளி மாணவர்கள் போட்டிகளுக்குச் சென்றால் அதுவும் கவிதைப் போட்டி என்றால் இயல்பாகவே முதல் பரிசை வென்றுவருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மாணவர்கள் அவர்களாகவே ஆர்வமுடன் உருவாகி றார்கள். அதற்கான ஒரு சிற்றிதழ்கூட அவர்கள் நடத்துகிறார்கள். அதன் பெயர்‘வெற்றித்திசை. வாசிப்போர் மன்றம் என்ற மாணவர்கள் அமைப்பு மாதந்தோறும் கூட்டத்தை நடத்தி வருகிறது. தம்மின் தம் மக்கள் அறிவுடைமை என்பது தானே உண்மை.

சரிதான். புதுக்கோட்டை என்றால் நினைவிற்கு வருபவர் கவிஞர் பாலா. அவர் குறித்து?

இளங்கலை ஆங்கிலம் படிக்க புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் சேர்ந்தபோது அங்கே பணியாற்றிய பேராசிரியர் இரா.பாலச்சந்திரன் என்கிற பாலாதான் என் குருநாதர். இலக்கியத்துக்கு என்னை இழுத்துப்போய் எனக்கு நூல்கள் தந்து வாசிக்கச் சொல்லி ஊக்கப்படுத்துவார். உலக இலக்கியங்களை எனக்கு அறிமுகப்படுத்தினார்.

உவமைக் கவிஞர் சுரதா, கவிக்கோ அப்துல் ரகுமான், பத்மஸ்ரீ சிற்பி, மு.மேத்தா, கவிஞர் மீரா, சேலம் தமிழ்நாடன், திலகவதி, புவியரசு, ஜெயகாந்தன், பிருந்தாசாரதி, ரவி சுப்பிரமணியன் என இலக்கிய மேதைகள் பலரிடம் நான் நட்பு பாராட்ட அவரின் அறிமுகம் எனக்கு பெரும் காரணமாக இருந்தது.

பாலா இருமொழிப் புலமை மிக்கவர். வசீகரமான குரலும் எழுத்தும் அவருடையது. அவரது புதுக்கவிதை ஒரு புதுப்பார்வை நூலும் தாய் வார இதழில் அவர் எழுதி வந்த கவிதைப் பக்கமும் புதுக்கவிதை எழுத வந்தோர்க்கு மிகப் பயனுள்ள நூல்களாக அமைந்தன. தன் எழுத்தின் வழியே பல கவிஞர்களை புகழ் வெளிச்சத்திற்கு அழைத்து வந்தார். வானம் பாடி இயக்கத்தின் வலிமையான குரலாக ஒலித்தார். கவிக்கோ, மீரா, சிற்பியின் நூல்கள் பலவற்றை மொழிபெயர்த்துள்ளார். சாகித்ய அகாடெமியின் ஆலோசனைக் குழு தலைவராக பாலா நியமிக்கப்பட்டதற்குப் பிறகுதான் சாகித்ய அகாதமி சின்னச் சின்ன நகரங்களுக்கு இடம் பெயர்ந்து வந்தது. இன்றைக்குப் பலரும் சாகித்ய அகாதமி கூட்டங்களில் பங்கேற்கக் காரண மாயிருந்து சாகித்ய அகாதமியை பொதுவெளிக்கு அழைத்துவந்து அனைவரையும் கைகுலுக்க வைத்தார். பத்மஸ்ரீ சிற்பி அப்பணிகளை தொய்வில் லாமல் தொடர்ந்து வந்தார்.

tt

சாகித்ய அகாதமியில் உறுப்பினராக இருந்துள்ளீர். அந்த அனுபவம் பற்றி...?

சாகித்ய அகாதமி தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினராக 2008 முதல் 2012 வரை பணியாற்றினேன். கவிஞர் பத்மஸ்ரீ சிற்பி ஆலோசனைக் குழு தலைவராக இருந்தார். பேராசிரியர் இராம.குருநாதன் கவிஞர் இந்திரன், கவிஞர் இரா.மீனாட்சி, எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், பேராசிரியர் இரா.மோகன், கவிஞர் மகரந்தன் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தோம்.

இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் மறக்கப்பட்ட பலரை அதில் இணைந்து வெளிக்கொணரும் வாய்ப்பு கிடைத்தது. கவியரங்கம், கருத்தரங்கங்களை பள்ளி, கல்லூரிகள் உதவியோடு பல நகரங்களில் நடத்தினேன்.

இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் அகில இந்தியக் கவிஞர்கள் பங்கேற்கும் கவியரங்கில் கலந்துகொள்ளும் அனுபவம் மிக மிகப் புதியது. டெல்லி, பெங்களுரு, கல்கத்தா, ஹரித்துவார், எர்ணாகுளம், அஸ்ஸாம் போன்ற பல மாநிலிங் களுக்கும் சென்று இலக்கிய நிகழ்வுகளில் பங்கேற்கும்போது இந்தியாவின் பல மொழிக் கவிஞர்களின் நட்பு கிடைத்தது. இன்றளவும் இந்திக் கவிஞர் ரவிசங்கர், கன்னடக் கவிஞர் சித்தலிங்க பட்டன் ஷெட்டி, கன்னட மொழிபெயர்ப்பாளர் பேராசிரியர் மலர்விழி போன்ற பேராளர்களுடன் நட்பு தொடர்கிறது.

ஹைக்கூவிற்கு மக்களிடையே இன்றளவில் எப்படி வரவேற்பு உள்ளது?

இரண்டாவது ஹைக்கூ மாநாடு அந்தமானில் நடைபெற்றது. ஹைக்கூவுக்கு மாநாடு என்பதே அதன் உயரத்தை வெளிப்படுத்துகிறது. ஹைக்கூ ஒரு இயக்கமாகவே மாறியிருக்கிறது. மித்ரா, அமுதபாரதி, அறிவுமதி, மு.முருகேஷ் போன்றோர் ஹைக்கூவின் முன்னந்தி ஏர்களாக அவ்வியக்கத்தை இயக்கி வருகின்றனர். பிருந்தாசாரதி, வதிலை பிரபா இருவரின் ஹைக்கூ நூல்களும் பல விருதுகளைப் பெற்றுவருகின்றன. லிங்குசாமி ஹைக்கூ நூல் குறித்து ஜெயபாஸ்கரனும், பிருந்தாசாரதி ஹைக்கூ நூல் குறித்து கோ. லீலாவும் மிகநுட்பமாக ஆய்வு நூலை படைத்திருக்கிறார்கள். அந்த இரண்டு ஆய்வு நூல்களும் கவனிக்கத்தக்க நூல்கள் ஆகும். ஹைக்கூவிலும் சாதக, பாதகங்கள் உண்டு. பல விடுகதைகள் ஹைக்கூ என்ற பெயரைச் சூட்டிக்கொள்கின்றன. ஏராளம் வரட்டும். அதனாலென்ன.. காலம் ஒரு பெரிய சல்லடை வைத்திருக்கிறது. அது நல்லவற்றை நினைவில் வைத்துப் பாதுகாக்கும்.

கவிதை கற்பனை. ஹைக்கூ உண்மை. இது உண்மையா?

கற்பனையும் உண்மையும் கலந்திருப்பதே கவிதை. காதலில் மட்டும் பொய்களுக்கு அனுமதி உண்டு. ஹைக்கூ உண்மை என்று நீங்கள் குறிப்பிடு வது அதன் ஜப்பானிய நீட்சியாக இருக்கிறது. இன்றைய ஹைக்கூ உலகில் அதன் வடிவத்தை மட்டும் வைத்துக்கொண்டு சிந்தனைகள் பரவலாக்கப்பட்டு உலாவருகின்றன.

வானத்துச் சூரியனை சிறிது தூரம் சுமந்து செல்கிறாள் தயிர் விற்கும் பாட்டி’ சா.கா.பாரதிராஜாவின் இந்தக் கவிதை கவிக்கோ நினைவு கவிதைப் போட்டியில் ரூ.25,000 முதல் பரிசினைப் பெற்றது. இயக்குனர் லிங்குசாமி ஹைக்கூ கவிதைகளுக்கு ஆண்டு தோறும் ஒரு லட்சம் பரிசினை வழங்குகிறார். பாரதிராஜா வின் இந்தக் கவிதையில் தயிர் விற்கும் பாட்டி என்பது உண்மை. வானத்துச்சூரியனை தலையில் சுமப்பது கற்பனை. மிகப் பரவலான பாராட்டைப் பெற்ற ஹைக்கூ இது.

குறுக்கிடுவதற்கு மன்னிக்க வும். என் ஹைக்கூ ஒன்று உச்சி வெயில் இடுப்பில் சுமக்கிறாள் குடத்தில் சூரியன் 2004 இல் வந்தது.

கவிதை, ஹைக்கூ ஆகிய இரண்டில் தங்களுக்கு பிடித்தமானது எது?

இரண்டுமே கவிதைகள் தானே. இரண்டுமே பிடித்தமானதுதான். ஹைக்கூ என்பது ஓடை. நிமிடத்துக்கு நிமிடம் வேறு நீர் ஓடும். கவிதை என்பது ஏரி. உள்ளே இறங்கிப்போனால் தான் ஆழம் அறியலாம்.

கவிதை எழுதுவது ஒரு கலை. கவிதை எழுதி கவியரங்கில் வாசிப்பது ஒரு கலை. இரண்டுமே தங்களுக்கு கைவந்த கலையாக உள்ளதே எப்படி?

கைவந்த கலை என்ற தங்கள் பாராட்டுக்கு நன்றி. பொதுவாக கவிதைகளில் மேடைக்கவிதை, மேசைக் கவிதை என்ற இரண்டு வகை உண்டு என்பார் கவிஞர் பாலா. மேசைக்கவிதை என்றைக் கும் நிலைத்திருக்கும் கவனத்துடன் படைக்கப் படுவது. மேடைக் கவிதைகள் அந்த நேரத்து ஈர்ப்புக்காக எழுதப்படுவது. ஒவ்வொரு வரியும் கைத்தட்டல்களுக்காகக் காத்திருக்கும். ஆயினும் கவித்துவம் மட்டும்தான் கவனத்தைப் பெறும். மேடைகளைக் கையாள்வது அத்தனை எளிதல்ல. என் குரலும் என் அனுபவமும் என் கவித்துவமும் நான் மேடைகளை வென்றுவரக் காரணமாக இருக்கலாம்.

இனிமையான குரல் என எல்லோர்க்கும் தெரியுமே. இயல்பாக கவிதை எழுதும் கவிஞருக்கு கவியரங்கத் தலைப்பிற்கு ஏற்ப எழுதுவது சாத்தியமா?

தலைப்பிற்கு கவிதை எழுதுவதில் என்ன தவறு இருக்கிறது. தாராளமாக எழுதலாம். கூந்தல் குறித்த தலைப்பிற்கு எழுதப்பட்ட கவிதை தானே கொங்கு தேர் வாழ்க்கை. தலைப்பு தரப்படுகிற போது கவிஞர்களுக்குள் ஒளிந்து மறைந்துகிடக்கும் பல கவிதைகள் வெளியே வெளிச்சத்துக்கு வந்து அசத்தி விடும் வல்லமை கொண்டவை.

கக்கன் என்ற தலைப்பில் மிகச் சுருக்கமான கவிதை எழுதச் சொன்னேன் ஒரு கவியரங்கில்.

‘கரைவேட்டிக்கு மத்தியில் கறைபடியாதவர்’ என்றார் கவிஞர் கீதாஞ்சலி மஞ்சன்.

நீ கட்டிய வேட்டியோடு எழுந்து சென்றாய் காலம் உன்னை சலவை செய்து மடிப்புக் கலையாமல் வைத்திருக்கிறது என்றார் கவிஞர் நேசன் மஹதி.

இப்படி தெறிப்புகள் வந்து விழக் கூடும் தலைப்புகள் தரப்பட்டால்.

கவிஞர்கள் ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொள்வதில்லை. இக்கூற்றை ஒப்புக் கொள் கிறீரா? இவ்விசயத்தில் தங்களுக்கு அனுபவம் உண்டா?

யார் தான் யாரைத்தான் ஏற்றுக்கொள்கிறார்கள் இங்கே. நான்கைந்து நபர்கள் வசிக்கும் வீட்டிலேயே அது சாத்தியமில்லாத போது சமூகத்தில் எப்படி சாத்தியமாகும்.

உங்கள் கூற்றை ஒப்புக்கொள்கிறேன். கவிஞர்கள் மத்தியில் மட்டுமல்ல சமூகத்திலும் அரசியலிலும் ஆன்மீகத்திலும் அறிவியலிலும் கலைகளிலும் ஏன் நம் வீட்டிலும்கூட யாரும் யாரையும் ஏற்றுக் கொள்வதில்லை. ஒவ்வொருவரும் தனித்து சிந்திக் கும் ஆற்றலை பெற்றிருக்கிறார்கள். அதனால் சிலரை சிலர் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். அது மட்டு மல்ல மேற்சொன்ன அனைத்திலும் ஒருவருக் கொருவர் இடையே உள்ள போட்டிகளும் பொறாமைகளும்கூட காரணம். ஆனாலும் இந்தப் பயணத்தில் தடைகளை கடந்து எல்லோரும் பயணிக்க வேண்டி இருக்கிறது. முரண்பாடுகளின் சமாதானம்தான் வாழ்க்கை. முரண்பாடு உள்ளவர் களோடும் கைலுக்கி கடந்து செல்ல வேண்டும். கவிஞர்களிடத்தில் பொதுவாகவே ஒரு குணம் உண்டு. பாரதியை ஒருசில இயக்கத்தினர் கண்டு கொள்வதே இல்லை. அதைப்போல் பாரதிதாசனையும் ஒருசில இயக்கத்தில் கண்டு கொள்வதில்லை. கண்ணதாசனின் கவிதை ஆற்றல் பேசப்படுகிறதே தவிர கொண்டாடப்படுவதில்லை. அவர்களுக்கே அந்தக் கதி என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம். கவிஞர்களிடத்தில் குழு மனப்பான்மை இருப்பதை நான் தொடக்கக் காலத்தில் இருந்தே கவனித்து வருகிறேன். குழுவாக இயங்கி வருபவர்களிடத்தில் ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு குறுநில மன்னர் இருக்கிறார்.

வானம்பாடிக் கவிஞர்களை விமர்சனம் செய்து அவர்கள் கவிஞர்களே இல்லை என்று சென்னையில் நடந்த ஒரு இலக்கிய கூட்டத்திலே பேசினார்கள். என் தலைமுறை கவிஞர்கள் வைரமுத்து, மேத்தா, சிற்பி, மீரா இவர்களைப் படித்துத்தான் எழுத வந்தோம். எழுத வந்து உயரத்திற்குப் போனதற்கு பிறகு மேத்தா என்பவர் யார் என்று கேட்கிற ஒரு போக்கு இப்போது நிலவுகிறது. அவர்களைப் போன்றவர்களைப் புறந் தள்ளிவிட்டு, தான் எழுதுவது மட்டும் தான் கவிதை என்கிற போக்கு பலரிடம் இருப்பதை காண்கிறேன்.

அப்பாவைப் பற்றி நான் எழுதிய கவிதை அப்பா பற்றி எழுதப்பட்ட முதல் கவிதை என சொல்லலாம். ஆனால் அதை யாரும் கண்டு கொள்வதில்லை. அதேபோல ஒரு மரண அறிவிப் பாளரைப் பற்றிய என் கவிதை மிகப் பிரபலமாக பிற மொழிகளில் விவாதிக்கப்படுகிறது. இந்த இரண்டு கவிதைகளும் பிற மாநில கவியரங்கங்களில் நான் பங்கேற்றபோது மிகச் சிறந்த வரவேற்பை பெறுகின்றன. பிற மொழி கவிஞர்கள் கவிதை களைப் பாராட்டி கொண்டாடுகிறார்கள். ஆனால் தமிழில் இது மிக மிக எளிமையாக இருக்கிறது என்று கண்டுகொள்ள மாட்டார்கள். காரணம் கவிதைகளை எளிமையாக எழுதிவிடக் கூடாது என்பதில் பலர் கறாராக இருக்கிறார்கள்.

ஒரு கவிஞர் சமூகத்தில் அடையாளப்படுவதை பெருமையாக கருதுகிறீரா? கவிஞர்களை சமூகம் பெருமைப்படுத்துகிறதா?

அன்றும் இன்றும் ஒரு கவிஞனை சமூகம் கொண்டாடுவதில்லை. தொலைக்காட்சி தொடரில் நடக்கிற ஒரு நடிகைக்கு கிடைக்கிற ஒரு கௌரவம், நகைச்சுவை என்கிற பெயரில் கலாச்சார கேடுகளை விளைவிக்கிற தொலைக்காட்சி பிரபலங்களுக்கு கிடைக்கிற ஒரு கௌரவம் ஒரு கவிஞனுக்கு கிடைப்பதில்லை. உண்மையில் கவிஞர்களைக் கொண்டாடுகிற தேசம்தான் சிறந்த தேசம். மற்ற நாடுகளில் மறைந்த கவிஞர்களை, அவர்களது சுவடுகளை அவர்கள் பாதுகாத்து வைத்திருக்கிற போக்கு நம்மிடையே இல்லை.

ஹைக்கூ, கவிதை, கட்டுரை எழுதியுள்ள நீங்கள் சிறுகதை எதுவும் எழுதியுள்ளீரா? இல்லை யெனில் ஏன்? சிறுகதை வாசிப்பதுண்டா? தங்களுக்கு பிடித்த சிறுகதை எழுத்தாளர் யார்?

கவிதை என்கிற தளத்தை தாண்டி கட்டுரைகள் எழுதுகிறேனே தவிர சிறுகதை, நாவல் பக்கம் என் கவனம் சென்றதில்லை. சிறுகதைகள், நாவல் நிறைய வாசிப்பது உண்டு. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தொகுத்த 100 சிறந்த சிறுகதைகள் என்கிற தொகுப்பில் அத்தனையும் கதைகளையும் நான் வாசித்து விட்டேன். பிடித்த எழுத்தாளர் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், எஸ்.ராமகிருஷ்ணன், சா.தமிழ்ச்செல்வன், கந்தர்வன், அ.வெண்ணிலா மற்றும் எம் மண்ணின் எழுத்தாளர்கள் அண்டனூர் சுரா, சுரேஷ் மான்யா, புதுகை சஞ்சீவி போன்றவர்களின் சிறுகதைகளையும் விரும்பி வாசிக்கிறேன்.

இதுவரை எத்தனை விருதுகள் பெற்றுள்ளீர்? பெற்ற விருதுகளில் முக்கியமானதாக கருதுவது எது? விருதுகள் பெற்ற பின் விமர்சனம் வருவது வழக்கம். அப்படி ஏதும் தங்களுக்கு வந்ததா?

விருதுகளுக்கு பஞ்சமில்லை. விருதுகள் ஏராளம் தேடி வருகின்றன.

டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது, தேசிய நல்லாசிரியர் விருது, தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது, தமிழக அரசு வழங்கிய சிறந்த கவிதை நூலுக்கான விருது, கவிஞர் சிற்பி விருது போன்ற விருதுகளை நான் பெருமையாகக் கருதுகிறேன். ஆனாலும் வழங்கப்பட்ட விருதுகள் அனைத்தையும் நான் பெரிய அங்கீகாரமாகக் கருதுகிறேன். விருதுகள் பெற்ற பிறகு நான் விமர்ச னங்கள் எதையும் சந்தித்ததில்லை பாராட்டுக்களை தான் பெற்றிருக்கிறேன்.

கவிதையின் தற்போதைய போக்கு எப்படி உள்ளது? கவிதைக்கு என்று இலக்கணம் ஏது முள்ளதா குழுக்கள் பல இருப்பது கவிதைக்கு ஆரோக்கியமானதா?

கவிதையின் போக்கு சரியான திசை நோக்கிதான் செல்லுகிறது. கவிதைகளின் பல பரிமாணங்கள் வெளிப்படுகின்றன. எல்லோரையும் எளிதில் ஈர்த்துவிடுகிற வடிவம் என்பதால். தங்கள் மனக்குமுறல்களை, வலிகளை, ஆதங்கங்களை, ஏமாற்றங்களை, மகிழ்ச்சிகளை இறக்கிவைக்கிற ஒரு களமாக கவிதையை பலரும் கைக்கொண்டிருக்கிறார் கள். சமூக வலைத்தளங்கள் வருகைக்குப் பிறகு கவிஞர்களும் தங்கள் திசையின் வெளியை பெரிதாக்கிக் கொண்டார்கள். இணையம் வாயிலாக பல நாட்டுக் கவிஞர்கள் எளிதில் ஒன்றுகூடி கவியரங்கை நடத்திவிடுகிறார்கள்.

அண்மையில் புதுக்கோட்டை பக்கத்தில் ஒரு கிராமத்தில் வசிக்கும் நூறு சதம் மாற்றுத்திறனாளி, நிற்கமுடியாத, நடக்க முடியாத, படுக்கையிலேயே இருக்கும் சுகுணா பன்னீர்செல்வம் கவிதைகள் எழுதிக்கொண்டே இருக்கிறார். கவிதைகளில் பல விருதுகளையும் பெற்றிருக்கிறார் முகநூலில் அவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். எழுந்து நடக்கமுடியாத அவரை கவிதை எழ வைத்திருக்கிறது என்பதுதான் உண்மை. எனவே காலம் கவிதையை விட்டுவிடாது. காலத்தின் அழகை கவிதைதான் ஒரு கண்ணாடியை போல எடுத்துக்காட்டுகிறது. கவிதையில் குழுக்கள் இருப்பது நல்லதா என்று கேட்கிறீர்கள். எதில் தான் இல்லை. கவிதையில் இருந்தால் என்ன. காலம் செல்லச் செல்ல குழுக்களெல்லாம் கரைந்து போய் கவிதைகள் தான் நிலைத்திருக்கும்.

மொழிபெயர்ப்பில் தங்களுக்கு ஆர்வ முண்டா? மொழிபெயர்ப்பு கவிதைகளை வாசிப்பதுண்டா? தாங்கள் எழுதியவைகளில் தங்கள் பிடித்தமான கவிதை எது?

அடிப்படையில் நான் ஆங்கில இலக்கியம் படித்தவன் என்பதால் மொழிபெயர்ப்பில் எனக்கு ஆர்வம் உண்டு. பெரும்பாலும் என் கவிதைகளை நானே மொழிபெயர்த்துக் கொள்வதுண்டு. வேறு மாநிலங்களுக்கு கவியரங்கங்களுக்கு செல்லும்போது என் கவிதைகளை நான்தான் மொழிபெயர்க்கிறேன். நான் விரும்பி வாசிக்கும் பிற மொழி கவிதைகளை நானே மொழிபெயர்த்து கொடுத்திருக்கிறேன். மேலும் மொழிபெயர்ப்புக் கவிதைகளை ஏராளம் நான் வாசிப்பதுண்டு. சிங்கப்பூரில் கவிமாலை அமைப்பின் கவிஞர் இறைமதியழகன் தலைவராக இருந்தபோது மாணவர்கள் மத்தியில் கவிதைகள் வாசிக்கும் பழக்கத்தை கொண்டுவந்தார். கவிதைகளை ஒரு நூலாக வெளியிட்டு ஒவ்வொரு மாணவரும், ஒவ்வொரு கவிதையை சிங்கப்பூர் வானொலி யில் வாசிக்கச் செய்தார். அந்த நூலில் பிற மொழி கவிதைகளை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை நான் பெற்றேன். சிறிய நூல்தான் அது. ஆனால் உலகின் மிகச் சிறந்த கவிதைகளை கொண்டிருக்கும் நூல். இன்றும் அந்த கவி மாலை அமைப்பு கவிதைக்காக தொடர்ந்து இயங்கி வருகிறது. அதன் தலைவராக கவிஞர் இன்பா இருக்கிறார்.