Advertisment

வாழ்வின் இதயத் துடிப்பாகும் இலக்கியங்கள்! -ஆரூர் தமிழ்நாடன்

/idhalgal/eniya-utayam/life-heart-life-arir-tamil-nadu

புலம்பெயர்ந்தோர் இலக்கியம் குறித்தும் அயலக இலக்கியம் குறித்தும் இங்கே அறிஞர் பெருமக்கள் வழங்கியிருக்கும் கட்டுரைகள், தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறந்த ஆவணமாகப் பதியும் என்று நம்புகிறேன். ஆய்வாளர்கள் இங்கே பெய்ய இருக்கும் இலக்கிய மழையில் நனைந்து குளிர்வதற்காக, காவிரிப் பாசன விவசாய நிலங்களைப்போல் நாம் காத்திருக்கிறோம்.

Advertisment

இங்கே புலம்பெயர்ப் படைப்புகள், அயலகப் படைப்புகள் என இருவித இலக்கியக் கூறுகளை இந்தக் கருத்தரங்கம் அலச இருக்கிறது.

அயலக இலக்கியங்கள் என்பவை... படைப்பாளர்கள் இருக்கும் நாட்டின் சூழலை, வாழ்வை, வசதியை, துயரைப் பிரதிபலிக்கக் கூடியதாக இருக்கும். எடுத்துக்காட்டாகச் சொல்வதானால், தான் வசிக்கும் சிங்கப்பூரைப் பார்த்து மகிழ்வில் துள்ளிக்குதிக்கிறார். ஒரு கவிஞர், ""சிங்கப்பூர் நாடு என்பது பூமியில் இருக்கும் சொர்க்கம். அதனால் சிங்கப்பூரில் வசிக்கும் அயலகக் கவிஞரான ஆண்டியப்பன்’எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு’ என்று பாடிய புரட்சிக் கவிஞரின் மனநிலையில் நின்றுகொண்டு...

’எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் என்றும் இந்தச் சிங்கப்பூர்...

உப்பு நீரின் நடுவில் மிதக்கும் உயர்தர வைரம் சிங்கப்பூர்...

செப்பிடு வித்தை செய்யாமலேயே.. சிறப்புடன் வாழும் சிங்கப்பூர்.’

என குதூகலிக்கிறார். ஆனால் புலம்பெயர் இலக்கியங்களில் இப்படிப்பட்ட குதூகலிப்பை, மகிழ்வை, உற்சாகத்தைப் பார்க்கமுடியாது. அயலக வாழ்க்கையில் பிரச்சினைகள் இருந்தாலும்கூட அந்த வாழ்க்கை, வெளிச்சத்தில் இருக்கிறது. ஆனால் புலம்பெயர் வாழ்க்கை என்பது... இருட்டில்... இருட்டோடு இருட்டாக... இனமறியா நிலையில் இரண்டறக் கலந்து கிடக்கிறது.

Advertisment

இரவு, பகல் என்பதைப்போல், உலகத்தின் தன்மை என்பது எல்லாவற்றிலும் இரண்டாகத்தான் இருக்கிறது. இது நல்லோர்க்கான உலகமாகவும் அல்லோர்க்கான உலகமாகவும் திகழ்கிறது. ஒருபுறம் மடமைகளுக்கான உலகமாகவும் இன்னொரு புறம் மறுமலர்ச்சிக்கான உலகமாகவும் இது சுழல்கிறது. இருளும் ஒளியும் போல இருவேறு தன்மைகளாலும் ஆன இந்த உலகத்தைப் போலவே, மனிதர்களின் உலகமும் அக உலகமாகவும் புற உலகமாகவும் இயங்குகிறது. அதையொட்டியே நம் தமிழிலக்கியம் அகத்தையும் புறத்தையும் தன் தலையில் ஏந்திக்கொண்டு ஐயாயிரம் ஆண்டு களுக்கும் மேலாகக், காலப் பெருவெளியில் அழுத்தமாய்க் கால்பதித்து அழகாய் நடந்துகொண்டி ருக்கிறது.

சங்க கால அக இலக்கியத்திலே தலைவனும் தலைவியும் ’"யாயும் ஞாயும் யாரோ கியரோ எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்'’ என்று தங்கள் கைகளைப் பற்றிக்கொண்டு நிலவொளியில் நின்றபடி நெகிழ்ந்தார்கள். "இம்மை மாறி மறுமையாயினு

புலம்பெயர்ந்தோர் இலக்கியம் குறித்தும் அயலக இலக்கியம் குறித்தும் இங்கே அறிஞர் பெருமக்கள் வழங்கியிருக்கும் கட்டுரைகள், தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறந்த ஆவணமாகப் பதியும் என்று நம்புகிறேன். ஆய்வாளர்கள் இங்கே பெய்ய இருக்கும் இலக்கிய மழையில் நனைந்து குளிர்வதற்காக, காவிரிப் பாசன விவசாய நிலங்களைப்போல் நாம் காத்திருக்கிறோம்.

Advertisment

இங்கே புலம்பெயர்ப் படைப்புகள், அயலகப் படைப்புகள் என இருவித இலக்கியக் கூறுகளை இந்தக் கருத்தரங்கம் அலச இருக்கிறது.

அயலக இலக்கியங்கள் என்பவை... படைப்பாளர்கள் இருக்கும் நாட்டின் சூழலை, வாழ்வை, வசதியை, துயரைப் பிரதிபலிக்கக் கூடியதாக இருக்கும். எடுத்துக்காட்டாகச் சொல்வதானால், தான் வசிக்கும் சிங்கப்பூரைப் பார்த்து மகிழ்வில் துள்ளிக்குதிக்கிறார். ஒரு கவிஞர், ""சிங்கப்பூர் நாடு என்பது பூமியில் இருக்கும் சொர்க்கம். அதனால் சிங்கப்பூரில் வசிக்கும் அயலகக் கவிஞரான ஆண்டியப்பன்’எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு’ என்று பாடிய புரட்சிக் கவிஞரின் மனநிலையில் நின்றுகொண்டு...

’எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் என்றும் இந்தச் சிங்கப்பூர்...

உப்பு நீரின் நடுவில் மிதக்கும் உயர்தர வைரம் சிங்கப்பூர்...

செப்பிடு வித்தை செய்யாமலேயே.. சிறப்புடன் வாழும் சிங்கப்பூர்.’

என குதூகலிக்கிறார். ஆனால் புலம்பெயர் இலக்கியங்களில் இப்படிப்பட்ட குதூகலிப்பை, மகிழ்வை, உற்சாகத்தைப் பார்க்கமுடியாது. அயலக வாழ்க்கையில் பிரச்சினைகள் இருந்தாலும்கூட அந்த வாழ்க்கை, வெளிச்சத்தில் இருக்கிறது. ஆனால் புலம்பெயர் வாழ்க்கை என்பது... இருட்டில்... இருட்டோடு இருட்டாக... இனமறியா நிலையில் இரண்டறக் கலந்து கிடக்கிறது.

Advertisment

இரவு, பகல் என்பதைப்போல், உலகத்தின் தன்மை என்பது எல்லாவற்றிலும் இரண்டாகத்தான் இருக்கிறது. இது நல்லோர்க்கான உலகமாகவும் அல்லோர்க்கான உலகமாகவும் திகழ்கிறது. ஒருபுறம் மடமைகளுக்கான உலகமாகவும் இன்னொரு புறம் மறுமலர்ச்சிக்கான உலகமாகவும் இது சுழல்கிறது. இருளும் ஒளியும் போல இருவேறு தன்மைகளாலும் ஆன இந்த உலகத்தைப் போலவே, மனிதர்களின் உலகமும் அக உலகமாகவும் புற உலகமாகவும் இயங்குகிறது. அதையொட்டியே நம் தமிழிலக்கியம் அகத்தையும் புறத்தையும் தன் தலையில் ஏந்திக்கொண்டு ஐயாயிரம் ஆண்டு களுக்கும் மேலாகக், காலப் பெருவெளியில் அழுத்தமாய்க் கால்பதித்து அழகாய் நடந்துகொண்டி ருக்கிறது.

சங்க கால அக இலக்கியத்திலே தலைவனும் தலைவியும் ’"யாயும் ஞாயும் யாரோ கியரோ எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்'’ என்று தங்கள் கைகளைப் பற்றிக்கொண்டு நிலவொளியில் நின்றபடி நெகிழ்ந்தார்கள். "இம்மை மாறி மறுமையாயினும் நீயாகியர் என் கணவனை யானாகியர் நெஞ்சு நேர்பவளே'’ என்று அவர்கள் கண்கள் கசியக் காதலாய்ப் புலம்பினார்கள். "சாதல் அஞ்சேன்; அஞ்சுவன் சாவில் பிறப்புப் பிறிதாகுவது ஆயின் மறக்குவேன் கொள்என் காதலன்' எனவே’ என்று ஒருவர் மார்பிலே ஒருவர் சாய்ந்துகொண்டு காதல் பித்தத்தில் அழுது கரைந்தார்கள்.

புற இலக்கியத்தின் குரலோ வேறு. அரசுடைமைச் சமுதாயத்தில் வாழ்ந்த புலவர்கள், "யாதும் ஊரே! யாவரும் கேளிர்!' என்றபடி, இன்றைய ஓருலகக் கோட்பாட்டை அன்றே உயர்த்திப் பிடித்தார்கள். மன்னர்கள் தம்மைப் பாடிவந்த புலவர்களுக்கு யானைகளைப் பரிசளித்தனர். அத்தகைய மன்னர்கள் அரண்மனையில் இல்லாதபோதும் அவர்கள் இல்லத்துப் பெண்டிரே பொன்னணி புனைந்த யானைக்குட்டிகளைப் புலவர்களுக்குப் பரிசளித்தார்கள். இதைப் பார்த்து வியந்த புலவர்கள், "புன்தலை மடப்பிடி பரிசில் ஆகப் பெண்டிரும் தம்பதம் கொடுக்கும் வண்புகழ்'’ என்று அம் மன்னர்களின் கொடைத்திறனையும் மனம் குளிர்ந்து பாடினார்கள்.

’"என்னைச் சிறுவன் என்று எண்ணி, எள்ளி நகையாடும் பகை நாட்டு மன்னர்களை நான் போரில் தோற்கடித்து, அவர்களின் முரசத்தைக் கைப்பற்றா விட்டால், புலவர்களால் பாடப்படும் தகுதியை நான் இழக்கத் தயார். புலவர் பாடாது வரைக என் நிலவரை' என்று, பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்கள், அன்று போர்க்களத்தில் வரிந்து கட்டினார்கள்.

இரண்டு சோழ மன்னர்கள் தங்களுக்குள் போரிட்ட போது... எந்தப் போர்க்களமாக இருந்தாலும் போரிலே ஈடுபடும் இருவரும் வெற்றிபெறுவது இயற்கை இல்லையே. "இருவீர் வேறல் இயற்கையும் அன்றே. ஒருவீர் தோற்பினும், தோற்ப நும்குடியே'’ -என்று, சண்டையிட்ட மன்னர்களுக்கு நடுவில் நின்றுகொண்டு, புலவர்கள் வீரத்தோடு வெள்ளைக்கொடி பிடித்தார்கள்.

யானையைக் கொன்று மரணமடைந்த வீரர்களின் நடுகல்லை விடவும், பூசிக்கத் தக்க கடவுள் இங்கே இல்லை என்பதை, ’"ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்தெனக்/ கல்லே பரவின் அல்லது/நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே/' என்று வீரத்தை வணங்கிய மாங்குடி மருதனார்கள் அப்போது தமிழ்த் திமிர்கொண்டு திரிந்தார்கள்.’

மன்னர்களுக்கு அறிவுரை சொல்லும் வல்லமை பெற்றவர்களாக அன்றைய புலவர்கள் திகழ்ந்தார்கள். அன்றைய படைப்பாளர்கள் வறுமையிலே வாடினாலும் பசியிலே வதங்கினாலும் புலமைச் செருக்கோடு தலை நிமிர்ந்து நடந்தார்கள். தமிழரின் வீரத்தையும், ஈரத்தையும், கொடையையும், அறத் தையும், பண்பாட்டையும், விருந்தோம்பலையும், பிசிராந்தையார், மோசிகீரனார் போன்றோரின் நட்பின் சிறப்பையும், அவ்வையாரைப் போன்ற பெண்பாற் புலவர்களின் உயர்வையும், அவர்கள் பெற்றிருந்த கட்டற்ற சுதந்திரத்தையும் நெஞ்சுவிரிய எடுத்துச்சொல்லும் இனிய இலக்கியமாகப் புறநானூறு திகழ்ந்துகொண்டிருக்கிறது.

அதனால்தான் ’புறநானூறுதான் தமிழில் இருக்கும் பேரிலக்கியம்’ என்று மதுரையைச் சேர்ந்த முதுபெரும் ஆய்வறிஞரும் முனைவருமான நா. நளினிதேவி, முரசடித்துக் கொண்டிருக்கிறார்.

அவ்வையார் காலத்தில் அவரைப்போல், செல்வாக்கு பெற்ற பெண்பாற் புலவர்கள் உலகில் எந்த நாட்டிலும் இருக்கவில்லை என்கிறார் முனைவர் நா. நளினிதேவி. மொத்தம் இருக்கும் 473 சங்கப்புலவர்களில் ஆதிமந்தியார், ஒக்கூர் மாசாத்தியார், ஔவையார், காக்கைப் பாடினியார், காமக்கண்ணியார், காவற்பெண்டு, நப்பசலையார், தாயங்கண்ணனார், நக்கன்னையார், நன்னாகையார் என்று 57 பெண்பாற்கவிஞர்கள், ஆண்களுக்குச் சமமாக 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, வானம்பாடிகளாய்ச் சிறகடித்திருக்கிறார்கள்.

போர்க்களத்தில் மார்பிலே வேல்பட்டு இறந்த மகனைப் பார்த்து வீறுகொண்டு சிலிர்த்த பெண்கள் அப்போது இருந்தார்கள். அவர்களின் வீரமரபுதான் ஈழப்போரிலும் தொடர்ந்தது என்று அந்த ஆய்வாளர் ஆச்சரியத்தோடு குறிப்பிடுகிறார்.

இப்படி அகம் புறம் என்று பெருமிதத்தோடு நடைபோட்ட நம் தமிழ் இலக்கியம், புலம்பெயர்ந்தோர் துயரத்தை பேசத் தொடங்கியபோது, சொல்லொணாத் துயரத்தைதைச் சொல்லி அழத்தொடங்கியது. சங்ககாலப் போர்க்களத்தில் ரத்தச்சேற்றிலும் பிணக்குவியலிலும் தள்ளாடாமல் நடந்த நம் தமிழ் அன்னை, புலம்பெயர்ந்த படைப்பாளிகளின் கண்ணீரில், உயிர்கரைந்து நிற்கிறாள்.

ilakiyam

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, முதன் முதலாகப் புலம்பெயர்ந்தவர் என்ற அடையாளத்தை பெற்றவர் ஈழ நாட்டிலிருந்து மதுரைக்குப் புலம்பெயர்ந்து வந்த ஈழத்துப் பூதந்தேவனார்தான் என்கிறது இலக்கிய ஆய்வு. இது குறித்த ஆய்வுகள் இன்னும் தொடர்கின்றன. கி.பி. 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவரே இந்த ஈழப்புலவர் என்று பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை அவர்கள் பல ஆவணச் சான்றுகளை முன்வைத்து நிறுவியிருக்கிறார். இது குறித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பேருரையும் தந்திருக்கிறார். இதேபோல் சங்கப் புலவரான முரஞ்சியூர் முடிநாகராயரும் ஈழ நாட்டைச் சேர்ந்தவர் எனவும், மன்னாரில் முசலி (முரஞ்சி) என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் இவர் எனவும் ‘ஈழ மண்டலப் புலவர் சரிதம்’ என்ற நூலில் ஆ.முத்துத்தம்பிப் பிள்ளை அவர்கள் குறிப்பிட்டிருப்பதாகக் குறிப்பொன்றில் படித்தேன்.

ஆக ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இலங்கை மண், நம் தமிழ்ப் புலவர்களை புலம்பெயர வைத்தது என்பதை இது உணர்த்துவதோடு, முள்ளிவாய்க்கால் துயரத்தின் வேர்... எவ்வளவு நீளமானது என்பதையும் நிரூபிப்பதாக இருக்கிறது.

ஈழ்த்து பூதந்தேவனாரின் நீட்சியாக அங்கிருந்து தமிழர்கள், கடந்த 50 ஆண்டுகளாக அதிகமாய்ப் புலம்பெயர்ந்தபடியே இருக்கிறார்கள். இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிஸ், நார்வே, இத்தாலி, டென்மார்க், நெதர்லாந்து, கனடா என உலகமெங்கும் சென்று தங்கள் வியர்வைத் துளிகளையும் கண்ணிர்த் துளிகளையும் அவர்கள் விதைத்துக்கொண்டே இருக்கிறார்கள். ஏறத்தாழ 7 லட்சம் ஈழத் தமிழர்கள் புலம் பெயர்ந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் துயரக்குரலில் புலம்புகின்றன. இங்கே எப்போதாவது ஒரு தூத்துக்குடி. ஈழத்தில், நாள்தோறும் ஒரு தூத்துக்குடியைப் பார்த்து, துயருற்றுத் துடித்த இனம் தமிழினம். அந்தத் துயரம் தாய் நாட்டை விட்டும் தாய்பிள்ளை உறவுகளை விட்டும் அவர்களை இன்றும் துரத்தியடித்துக் கொண்டிருக்கிறது.

அதனல்தான், புலம்பெயர்ந்த இலக்கியங்கள் வலியின் குரலாக ஒலிக்கின்றன. அவை, கவிதைகளாக இருந்தாலும் கட்டுரைகளாக இருந்தாலும் சிறுகதைகளாக, நாடகங்களாக இருந்தாலும், அவை புலம்பெயர் இதயங்களின் துயரக்குரல்கள். மண்ணை இழந்தும் மனையை இழந்தும், ஊரை இழந்தும் உறவை இழந்தும், தோட்டம் செடிகொடி மலர்களை இழந்தும், நடைபிணமாய் ஆக்கப்பட்டோரின் கண்ணீரில் மலர்ந்த இலக்கியங்கள் அவை. காயங்களின் பெருமூச்சும் ஆதங்கமும் படைப்புகளாய் உருப்பெற்றவை. எனவே புலம்பெயர் இலக்கியங்கள், மானுடத்தின் மனித நேயத்தை வேண்டிநிற்கின்றன.

இங்கே 8 வழிச்சாலை மக்களை கதறவைக்கிறது என்றால், புலம்பெயர் படைப்பாளர்களை எட்டாயிரம் வழிச் சாலைகள், தனித்தனியே பிரித்து திசைகொருவராய்த் தூக்கி வீசுகின்றன.

நாராய் நாராய் செங்கால் நாராய்

பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன

பவளக் கூர்வார்ச் செங்கால் நாராய்’

என்கிற சங்க கால சத்திமுத்தப் புலவனைபோல், ஈழக்கவிஞர் சிவசேகரம், “அகதியின் வாழ்வின் இழிநிலை தாங்கி அன்னிய மண்ணில் அண்டிக் கிடந்து/

மிகநலி மாந்தர் தம்நகர் மீளும்/

வகையென ஒன்றை மொழிவையோ நாராய்’’’

என்று அகதியாய் வாழ்வதன் துயரத்தைப் பாடுகிறார். இந்தப் பாடலை, விண்ணில் பறக்கும் நாரை கேட்குமானால், அது கண்ணீருக்கு பதில் தன் சிறகையே உதிர்த்துவிடும்.

’எங்கள் குடும்பங்கள், காற்றில் விதிக் குரங்கு கிழித்தெறியும் பஞ்சுத் தலையணையா?

என்று துயரத்தோடு கேட்கும் ஈழக்கவிஞர் வ.ஐ.ஜெயபாலன்,... ..

யாழ்நகரில் என் பையன்/ கொழும்பில் என் பெண்டாட்டி/ வன்னியில் என் தந்தை/

தள்ளாத வயதினிலே தமிழ் நாட்டில் என் அம்மா/

சுற்றம் பிராங்போட்டில்/ ஒரு சகோதரியோ ப்ரான்ஸ் நாட்டில்/ நானோ/ வழிதவறி அலாஸ்கா/

வந்து விட்ட ஒட்டகம்போல்/ ஒஸ்லோவில்/

என்கிறார்.

ஈழத்திலிருந்து கனடாவுக்குப் புலம்பெயர்ந்து சென்ற கவிஞர் யாழ்மகள் மணிமேகலை கைலைவாசனை நீங்கள் அறிந்திருக்கக்கூடும். இவரது அப்பா கைலைவாசன், வீரகேசரி இதழில் புகைப்படக் கலைஞராக இருந்தவர். 25 ஆண்டுகளுக்கு முன் நடந்த கலவரம் அவரை அங்கே காணாமல் ஆக்கிவிட்டது. இதேபோல் அவரது உறவுகள் பலரையும் சிங்கள பூதங்கள் விழுங்கிவிட்டன.

அப்பா எங்கேனும் உயிரோடு இருக்கமாட்டாரா? நம் கண்களின் எப்படியாவது தென்படமாட்டாரா? என அடிக்கடி ஈழத்துக்கு வந்து அவரைத் தேடிவிட்டு வெறுங்கையோடு கனடா திரும்புகிறார் மணிமேகலை. கடந்த மாதம் அப்படி வந்தவர்...

தமிழகம் வந்தார். என்னிடம் தன் மூன்று நூல்களைக் கொடுத்தார். அதில், ஒரு கவிதையில்

அவர் யாழ் மண்ணோடு பேசுகிறார்...

’என்னைத் தாலாட்டும் என் தாய் மண்ணே/ உன்னைத் தாலாட்டவோ... வண்ணத் தமிழ்ச் சொல்லெடுத்து...

நீலக்கடல் அலையில் நீ கைவீசி நடக்கின்றாய். / சோலைக்குயில் போல்வந்து என் காதில் கானம் இசைக்கின்றாய்..

பச்சைப்புல் வெளியில் உன்பாசம் நான் கண்டேன்./ படர்கின்ற மல்லிகையில் தாய் நேசம் கண்டுகொண்டேன்/.

பாடிவரும் தென்றலும் நின்றுநின்று பார்க்குதென்னை/’

என்று ஈழமண்ணின் அழகை ஏக்கமாய்ப் பாடுகிறார்.

அடுத்து...

’ஊழிக் கூத்தின் ஆட்ட முடிவில்/ காணவில்லை பாதிபேரை./. அத்தை ஆசையாய் ஓடிவந்தாள் என்னைக் கண்டு... நான்கு ஜீவனை இழந்த கவலை மறந்து./

மீண்டும் மீண்டும் அழகு தந்த மண்ணே/ என் பொன்னே/ மாண்ட சொந்தங்களை / எங்கே தேடுவேன்?/

என்று கண்கலங்குகிறார்..

ஈழத்தை விட்டு வெறுங்கையோடு கனடா போனாலும் அவரால் நிம்மதியாய் இருக்கமுடியவில்லை. கனடாவில் வசதியாய் குளிர்பதன அறையில் இருந்தாலும் அவரது மனம் ஈழ வெய்யிலில் அலைந்து திரிகிறது. தூக்கம் என்பதே அவருக்கு மறந்துவிட்டது. அவர் தம் அம்மாவின் அருகிலே அமர்ந்துகொண்டு ஒரு கவிதையில் இப்படிப் பேசுகிறார்...

அம்மா ஒரு தாலாட்டுப் பாடு/ நான் தூங்கி வெகு நாளாச்சு/.

முதல் குரலெடுத்து நான் அழுதபோது/ நீ பாடிய தாலாட்டு என் நினைவில் இல்லை./

நான் தூங்கியும் இருக்கலாம்.

இப்போது பாடு/ நான் கொஞ்சம் இதமாய் இளைப்பாறவேண்டும்./

... அவர் மேலும் பேசுகிறார்...

அம்மா...

ஊர் சொல்லி பேர் சொல்லி/ உற்றசொந்தம் எல்லாம் சொல்லி/ நீ பாடிய தாலாட்டில்/ நான் நிம்மதியாய்த் தூங்கியதாய்ப் பாட்டி சொன்னாள்.

இப்போதும் ஊர் உண்டு/ உலகம் உண்டு. உற்றசொந்தம் வெறுத்த சொந்தம் பலவும் உண்டு/.

இவையொன்றும் இனிவேண்டாம்.

உள்ளத்தை நீ பாடு./ உன் அன்பைப் பாடு./

அதுபோது நான் உறங்க/ வயதுகளை வென்றெடுத்த குழந்தை நாமாவோம்.

இத்தகைய புலம்பெயர் படைப்புகள் தாங்கி நிற்கும் காயங்களுக்கு, காலம் மருந்து போடட்டும். ஈழத்தில் அதற்கு ஆறுதல் கிடைக்கட்டும். மறந்து விடாதீர்கள்.. காலத்தின் இதயத் துடிப்பாகவே புலம்பெயர் இலக்கியங்கள் திகழ்கின்றன. சற்றே உற்றுக்கேளுங்கள் அதன் வலியின் குரலை.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe