மிழ் இலக்கிய வரலாற்றில் புதுச்சேரிக்கென்று தனி மதிப்பு இருக்கிறது. பாவேந்தர், வாணிதாசன், புதுவை சிவம், தமிழ் ஒளி என்கிற பாவலர்கள் சிறப்புப் பெற்றதுபோல சிறுகதை மற்றும் புதினங்களின் மூலம் தனக்கென ஒரு தனித்த இடத்தைப் பிடித்து காலச்சுவட்டில் தன் காலடியைப் பதித்தவர் மக்கள் எழுத்தாளர் பிரபஞ்சன்.

prapanchan

பிரபஞ்சன் எழுத்தாளர், பேச்சாளர், சிந்தனையாளர், வரலாற்றுவாணர், பாவலர், நாடக ஆசிரியர் இப்படி இலக்கியத்தின் எல்லா வடிவங்களிலும் தன் அறிவாற்றலைக் கொண்டு தடம்பதித்து, இடம்பிடித்தவர்.

அப்படிப்பட்ட புரட்சி எழுத்தாளருக்கு மதிப்பளிக்கும் வகையில் அவரது 57 ஆண்டுக்கால இலக்கியத் தொண்டைப் பாராட்டிப் புதுச்சேரி அரசே விழா எடுத்தது. புதுவை முதலமைச்சரே இல்லம் சென்று நேரிலே அழைப்பு கொடுத்து நிகழ்வில் பங்கேற்க அழைத்ததென்பது முன்னுதாரணமில்லாத மதிப்புமிக்க செயல்.

Advertisment

இந்நிகழ்வில் கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் சு.கணேசன், முதலமைச்சரின் பாராளுமன்றச் செயலர் க.இலட்சுமி நாராயணன், சட்டப்பேரவைத் துணைத் தலைவர் வெ.பொ.சிவக்கொழுந்து, தேசிய மீனவர் சம்மேளனத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மா.இளங்கோ, கலை இலக்கியப் பெருமன்றத் தலைவர் எல்லை சிவக்குமார், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத் தமிழ் மாநிலப் பொருளாளர் இராமச்சந்திரன், ஊடகவியலாளர் பி.என்.எஸ்.பாண்டியன், புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் வெ.முத்து, புதுவைத் தமிழ்ச் சங்கச் செயலர் மு.பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னதாக உரையாற்றினர். நோக்கவுரை ஆற்றிய பாண்டியன் எஸ்.இராமகிருஷ்ணன் மற்றும் வேடியப்பன் இருவரும் இவ்விழாவுக்கான தொடக்கப்புள்ளி என்றார்.

சிறப்புரையாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத் தலைவர் தமிழ்ச்செல்வன் பேசுகையில், ""தமிழ் நாட்டிலே இது கற்பனை செய்யமுடியாத நிகழ்ச்சி. நம் காலத்தின் மிகப்பெரிய படைப்பாளி பிரபஞ்சன். தமிழ் இலக்கியத்தில் தொ.மு.சி. இரகுநாதன், புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி ஆகியோர் சங்க இலக்கியத்தில் ஆழ்ந்து தோய்ந்தவர்கள்... இன்னொரு பிரிவினர் தஞ்சை, கும்பகோணம் பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஐரோப்பிய இலக்கியத்தில் புலமை கொண்டவர்கள். ஆனால், பிரபஞ்சன் முதல் பிரிவைச் சேர்ந்தவராயினும் அவர் இலக்கியத்தில் நவீன படைப்பையும் காணலாம்.

prapanchanவரலாற்று நாவல்களில் கத்திகள், நாவாய்கள் இருக்கும். ஆனால், பிரபஞ்சனின் படைப்புகளில் எப்போதும் அவர் உழைக்கின்ற மக்களின் குரலாகவே ஒலிக்கிறார். "மானுடம் வெல்லும்', "வானம் வசப்படும்' நாவல்களில் புதுச்சேரியின் பண்பாட்டைப் பற்றி அதிகம் பேசியிருக்கிறார். இன்றைய காலத்தின் பல கொடுமைகளுக்கு அன்றைக்கே விடையளித்துள்ளார்'' என அவருடைய படைப்புகளை விவரித்துப் பேசினார்.

Advertisment

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றப் பொதுச் செயலாளரும், தமிழ்ப்பல்கலைக் கழகப் பேராசிரியருமான இரா.காமராசு பேசும்போது, ""எழுத்தாளரை அரசே கொண்டாடுவது மாற்று அரசியல் மட்டுமல்ல மாற்றுக் கருத்தியலும்கூட. புதுச்சேரி மண்ணின் புகழ்மலர் என்றாலும், தமிழ் எழுத்தாளர் என்றா லும், உலக எழுத்தாளர் என்றாலும் அனைத்திற்கும் பிரபஞ்சன் பொருந்துவார்.

தஞ்சாவூருக்கும், பிரபஞ்சனுக்கும் நிறைய தொடர்பு உண்டு. அவருக்கு தேநீர், இசை மற்றும் சங்க இலக்கியம் இவற்றின் மீதான பிடிப்பு இங்கிருந்துதான் வந்தது. அவருடைய கதைகளில் அழகியலும், கருத்தியலும் இணைந்தே இருக்கும். அதனால்தான், அவரைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். தமிழின் ஆகச்சிறந்த 100 சிறுகதைகள் என்று வரிசைப்படுத்தினால் அதில் பல சிறுகதைகள் இவருடையதாக இருக்கும். அதுபோலவே நாவல்களும்.

தமிழ்ச்சூழலில் பெண்ணியம், தலித்தியம் குறித்து கட்டுரைகளை ""நக்கீரன் இதழ் வாயிலாகக் கொண்டுசேர்த்தவர். பிரபஞ்சன் ஒரு பன்முக ஆளுமை மட்டுமல்ல அவர் தமிழ்ச் சமூகத்தின் முகவரி.

புதுச்சேரி அரசின் இந்த முன்னெடுப்பைத் தமிழ் எழுத்தாளர்கள் சார்பில் வரவேற்கிறோம்'' என்றார்.

எஸ்.இராமகிருஷ்ணன் பேசும்போது, ""சென்னையில் நாங்கள் நடத்திய நிகழ்வில் முதலமைச்சர் பங்கேற்று உங்களைவிட எங்கள் அரசு சிறப்பாக அவரைப் பெருமைப்படுத்தும் என்றார்.

பொதுவாக, அரசியல்வாதிகள் சொல்வதை எழுத்தாளர்கள் நம்புவதில்லை. ஐயா அவர்கள் நான் சொன்ன சொல்லைக் காப்பாற்றுவேன் என்றார். அப்படியே செய்துகாட்டி தமிழ் இலக்கியத்திற்கு பெரும்பேறு சேர்த்திருக்கிறார்'' என அவர் தெரிவித்தார்.

பிரபஞ்சன் அவர்களுக்கு ஞானபீட விருது அளிக்கவும், புதுச்சேரி தமிழ் வளர்ச்சித் துறையில் அவருக்கு பொறுப்பு வழங்கவும் கேட்டுக்கொண்டார்.

முதலமைச்சர் வே.நாராயணசாமி பிரபஞ்சனுக்கு பத்து இலட்சத்திற்கான பொற்கிழி வழங்கி உரையாற்றுகையில், ""பிரபஞ்சன் அவர்களுக்கு சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு என்னை அழைத்திருந்தார்கள். அங்கே தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர்களும் வந்திருந்தார்கள். எனக்கு அப்போது ஒரு நெருடல் ஏற்பட்டது. புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு சிறந்த எழுத்தாளரை சென்னையிலே பெருமைப்படுத்துகிறார்கள்.

நாம் அதைச் செய்யாமல் தவறிவிட்டோமோ என்று. எனவே நான் மேடையில் பேசும்போது சொன்னேன், புதுச்சேரியில் அவரைச் சிறப்பிக்க வேண்டியது நம் கடமை என்று.

பொதுவாகக் கவிஞர்களும், எழுத்தாளர்களும் ஒன்றுசேர மாட்டார்கள். அவர்களுக்குள் போட்டியும், பொறாமையும் இருக்கும்.

ஆனால், இன்று பிரபஞ்சன் அவர்களுக்காக எல்லோரும் ஒன்றுசேர்ந்திருப்பது மகிழ்ச்சி. அவருடன் பேசிக்கொண்டிருக்கை யில் ஒரு புதுமையான எண்ணத்தை என்னிடம் சொன்னார். அதாவது, கோவலனும், கண்ணகியும் பூம்புகாரில் இருந்து மதுரை செல்லும்போது எங்கெங்கே தங்கினார்களோ அந்த இடங்களுக்கு எல்லாம் இவரும் சென்று, அது குறித்துச் சேகரித்து இப்போது எழுதிக் கொண்டிருக்கிறார். எவ்வளவு பேருக்கு இந்த எண்ணம் வரும்?

ஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு தவிர புதுச்சேரி மாநிலத்தின் வரலாறு என எதுவும் கிடையாது. இளைய சமுதாயத்திற்கு நம் புதுச்சேரி மாநிலத்தின் வரலாறு மறந்துபோயிருக்கிறது; மறைந்து போயிருக்கிறது. அதை வெளிக்கொணர வேண்டு மென்றால் ஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பைப் படித்து புரிந்துகொள்வது சிரமம். இதை இனிய, எளிய தமிழில் படைப்பதற்கு எங்களுக்கு உதவிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டேன். அதனை ஏற்றுக்கொண்டதற்கு அவருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதுச்சேரியில் தமிழ் வளர்ச்சிக் குழு அமைத்து அதன் பொறுப்பை பிரபஞ்சன் அவர்களுக்குக் கொடுத்து புதுச்சேரி வரலாற்றை எழுதுவதில் அரசு துணைநிற்கும். இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருதுக்கு இவரைப் புதுச்சேரி அரசு சார்பில் பரிந்துரை செய்வோம்'' எனவும் தெரிவித்தார்.

நிறைவாக, பிரபஞ்சன் நெகிழ்ச்சியுடன் பேசத் தொடங்கினார்.

""என்னுடைய இந்த 73 ஆண்டுக்கால வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு சிறப்பும், பெருமையும் எனக்கு எப்போதும் ஏற்பட்டதில்லை. உலகத்தின் மிகப்பெரிய நாடுகளில் எனக்குப் பாராட்டுகள் நடந்திருக்கின்றன. ஆனால், நான் பிறந்த மண்ணிலிருந்து இப்படி ஒரு பாராட்டு. நான் யாருக்காக வாழ்ந்துகொண்டிருக்கிறேனோ அவர்களெல்லாம் சேர்ந்து என்னைப் பாராட்டுவதை என் வாழ்வின் மகத்தான பாராட்டாக நான் கருதுகிறேன். இந்தப் பாராட்டுக்கெல்லாம் தகுதியுடையவனாக ஏதேனும் கொஞ்சமாவது நான் இருந்திருக்கிறேன் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

எஸ்.இராமகிருஷ்ணனின் வருகை எல்லாம் சாதாரணமானது அல்ல. என்னுடைய சமகாலத்தின் மாபெரும் கலைஞன் அவர். எங்களுக்குள் போட்டி, பொறாமை வந்ததே இல்லை. ஏனெனில், என் நாற்காலியில் அவரும் உட்கார முடியாது. அவர் நாற்காலியில் நானும் உட்கார முடியாது.

ஒரே ஒரு சிறுகதைதான் உலகத்தின் அத்தனை கதைகளையும் மாற்றியமைத்தது. 200 ஆண்டுகளுக்கு முன் பிரெஞ்சுமொழியில் எழுதப்பட்ட சிறுகதை அது. அந்தக் கதையில் இருந்துதான் பிரெஞ்சு மேதைகளும், இரஷ்ய மேதைகளும் பிறந்தார்கள். நான்கூட அங்கிருந்துதான் பிறந்தேன்.

மனிதனை மனிதனுக்கு உணர்த்துவதைத் தவிர இலக்கியத்திற்கு ஒரு வேலையுமில்லை. ஏன் எழுத்தாளர்கள் பாராட்டப்படவேண்டுமெனில் அவர்கள் மற்றவர்களுக்காகச் சிந்திக்கிறார்கள். எங்களுக்காகச் சிந்திக்க நேரமில்லை அதுதான் காரணம். சமூக உயர்வுக்காகத் தன்னை ஒப்புக்கொடுப்பதாலேயே இந்தச் சமூகம் தங்களைக் கவனிக்கவேண்டும் என்று கூறுகிறார்கள்.

ஆனால், இன்று நடந்தது மிக மிக மேலானது. நான் இதை எதிர்பார்க்கவில்லை.

புதுச்சேரியைப் பற்றி நான் 10,000 பக்கங்கள் எழுதி இருக்கிறேன். சோழர் காலத்தில், பிரெஞ்சுக்காரர் காலத்தில், விடுதலை பெற்ற பின் புதுச்சேரி எப்படி இருந்தது என்ற மூன்று தலைப்புகளில் ஆய்வுசெய்ய உள்ளேன். இந்த ஆண்டிற்குள் முதல் தொகுதி வரும். இதை இரு வகையில் மாணவர்களுக்கு ஏற்றாற்போல் எளிமையாகவும், மற்றவர்கள் படிக்கும்படி அடர்த்தி கொண்டதாகவும் எழுதலாம் என நினைக்கிறேன். இது மட்டுமின்றி என் பெரும்பாலான வாழ்க்கையை இனி புதுச்சேரியிலேயே அமைத்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன்'' என்று தன்னுரையை முடித்தார்.

விழாவில் மகரந்தன், பி.என்.எஸ்.பாண்டியன் இருவரும் தொகுத்த "பிரபஞ்சன் ஓர் எழுத்துப் பயணம்' எனும் கையேடு வெளியிடப்பட்டது.