கிழக்குப்பக்கம் திரும்பி, பேருந்தை எதிர்பார்த்து நின்றிருந்தேன். பின்னால்... பரந்துகிடக்கும் கடலின் ஒரு சிறிய இரைச்சல் சத்தம்... முன்னால் மருத்துவமனைக்குப் போய்க் கொண்டும் வந்துகொண்டும் இருக்கும் நோயாளிகளின் ஆரவாரம்... காற்றில் மருத்துவமனையின் சாக்கடையிலிருந்து புறப் பட்டு வரும் அடர்த்தியான நாற்றம்...
கடற்கரையில் நல்ல கூட்டம்.
காரணம்?
ஞாயிற்றுக்கிழமை அல்ல.
அந்த அளவுக்கு வெப்பம் நிறைந்த நாளு மல்ல. எனினும், இந்த கூட்டத்திற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. ஒளி மின்னிக் கொண்டிருந்த ஒரு ஸ்கூட்டருடனும், அதைவிட பிரகாசமான மீசையுடனும் நின்றுகொண்டி ருந்த இளைஞனிடம் கேட்டேன்.
""இன்னைக்கு இங்க என்ன விசேஷம்?''
""அரசியல் சொற்பொழிவோ... வேறு எதுவோ இருக்கு.'' நாகத்தின் படத்தினைப் போல நின்றுகொண்டிருந்த தலைமுடியைச் சற்று நீவிவிட்டவாறு அவன் அறிவித்தான். நல்ல தோற்றத்தைக் கொண்டவனாகவும், சந்தோஷம் உள்ளவனாகவும் மட்டும் அவன் இருக்கவில்லை- அழகாகப் பேசக்கூடியவனாக வும் அந்த இளைஞன் இருந்தான்.
வேறு ஊரிலிலிருந்து ஒரு தலைவர் வருகிறார்.
சரிதான்... எந்த சொற்பொழிவாளரும் சொந்த ஊரில் மதிக்கப்படுவதில்லையே!
இந்த ஊரின் தலைவர் முன்பு கூறிய விஷயங்களையெல்லாம் வேற்று மொழியில் பேசுகிறார். இந்த ஊரின் தலைவரே மொழி பெயர்ப்பதைக் கேட்பதற்காக ஆட்கள் உற்சாகத் துடன் கூடியிருக்கின்றனர்.
அது சரிதான்...
அரசியலிலைப் பற்றி நினைத்துப் பார்த்தேன். முன்னாலிருந்த மருத்துவமனையையும் அங்கிருக்கும் பலதரப்பட்ட நோயாளிகளைப் பற்றியும் நினைத்துப் பார்த்தேன். அவர் களுடைய குறைந்து... குறைந்து போகும் முனகல் களைப் பற்றி நினைத்துப் பார்த்தேன். வாழ்க்கை யின் ஒவ்வொரு நொடியையும், உயிரின் இறுதி யற்ற பயணத்தையும் பற்றி நினைத்துப் பார்த்தேன்.
பிறகு... நினைத்துப் பார்த்தது அண்ட வெளியின் கிரகங்களைப்பற்றி... பேருந்திற் காக எவ்வளவோ நேரமாக காத்து நின்று கொண்டிருக்கும் இதே நேரத்தில் மனிதன் ராக்கெட்டில் ஏறி நிலவை அடைகிறான். மனிதனின் உயரத்தைப் பற்றி ஆச்சரியம் உண்டா னது. அப்போதே வேறொன்றும் நினைவில் வந்தது. எத்தனை ஆயிரம் சந்திரன்கள்... மிகப் பெரிய கிரகங்கள்... எத்தனை எத்தனை சூரியனைச் சுற்றும் கிரக மண்டலங்கள்.
இவற்றையெல்லாம் மனிதன் ஏறிச்சென்று அடைவானா? ஏறிச்செல்பவன் தன்னுடன் அணுகுண்டையும் எடுத்துச் செல்வானோ?
அதைக் கேட்பதற்கு நான் யார்? என் ஊரில் அணுகுண்டு இல்லாததால் நான் கவலைப் படவில்லையா?
சாந்தி... சமாதானம்!
நாக்கு அல்ல... மனம் என்ன கூறுகிறது என்று கேட்கிறேன்! திடீரென்று அருகிலிருந்து அந்த பாடல் புறப்பட்டு வந்தது.
""போனாôல் போகட்டும் போடா...''
நான்தான் பாடினேனா?
திரும்பிப் பார்த்தபோது, தன் வயிற்றில் தாளம் போட்டு பாடிக்கொண்டிருக்கும். சிறுவனைப் பார்த்தேன்.
தலையைச் சாய்த்து வைத்துக்கொண்டு, தலையின் முடிக் கட்டினை தாளத்திற்கேற்றாற்போல் சிலுப்பிக்கொண்டு அந்த பாடல் தொடர்ந்தது.
""போனால் போகட்டும் போடோ...!''
இரண்டடிகளுக்கும் மேலான உயரத்தைக் கொண்டி ருந்த அந்தச் சிறுவனுக்கு ஊரைப் பற்றியும் இங்குள்ள மனிதர்களைப் பற்றியும் மட்டுமல்ல- பூகோளத்தைப் பற்றியும் பிரபஞ்சத்தைப் பற்றியும்கூட கருத்து இது தான் என்று தோன்றியது.
பாடலை நிறுத்திவிட்டு, தலையைச் சாய்த்து வைத்தவாறு அவன் கையை நீட்டினான்.
""இனி அந்த காசை இங்க எடுத்துக்கட்டுமா பெரியவரே?''
அவனை நாள்கூலிக்கு பாடலுக்காக நிச்சயத்திருக்கி றார்கள் என்று தோன்றும்.
இரண்டாவது முறையாகவும் யாசித்தபோது அருகில் நின்றிருந்தவன் அவனைத் திட்டி அனுப்பிவிட்டு, தன்னைத் தானே நியாயப்படுத்திக்கொள்வதைப்போல கூறினான்.
""நாமதான் இவங்களையெல்லாம் பிச்சையெடுக்க வச்சு கெடுக்கறவங்க.''
இந்த "நாமில்' எவ்வளவு பேர் இருப்பார்கள் என்று கேட்கவில்லை. அப்போதும் சிறுவனின் சத்தம் தூரத் திலிருந்து கேட்டது.
""போனால் போகட்டும் போடோ...''
மருத்துவமனையின் வாசல் பகுதியிலிருந்து மர வியாபாரியான என் நண்பர் வருவதைப் பார்த்தேன். ""விசேஷம் ஏதாவது இருக்கா?''
""கொஞ்சம்.''
""அப்படியா?''
""மனைவி இறந்துட்டா...'' சிறிது நேரம் சிந்தித்து விட்டுத் தொடர்ந்தார்:
""அஞ்சாவது பிரசவம். குழந்தையும் தாயும் போயாச்சு.''
நான் அதிர்ச்சியடைந்துவிட்டேன். இறந்துவிட்ட அந்த மனைவியை எனக்குத் தெரியும். வறுத்த வாழைக் காய்த் துண்டுகளும் முட்டை அப்பமும் தேநீரும் வைக்கப் பட்டிருக்கும் தட்டினை விரிப்புக்கு மத்தியில் கொண்டு வரும் வளையல் அணிந்த வெளுத்து சிவந்த கைகள்...
அவை என்றென்றைக்குமாக சலமற்றவையாகி விட்டன.
மௌனமாக நண்பரின் முகத்தையே பார்த்தேன்.
நான்காவது கடந்தபிறகு கவலைப்படுவதில் பெரிய அர்த்தமில்லையே என்ற முக வெளிப்பாடு அவருக்கு இருந்தது.
வியாபாரத்தில் மூழ்கித் தெளிந்த அவருக்கு லாபம் எது- நஷ்டம் எது என்ற விஷயம் நன்றாகத் தெரியும்.
""போனால் போகட்டும் போடோ...!''
""மச்சான் கார் எடுத்துக்கிட்டுப் போயிருக்காகன். ஆளுங்களைக் கூட்டிக்கிட்டுத் திரும்பி வருவான். எதிர்பார்த்து நின்னுக்கிட்டிருக்கேன்.''
அவர் மனைவியைப் பற்றியோ மரணத்தைப் பற்றியோ பேசவில்லை. சிறிதுநேரம் சென்றதும், அன்றைய அரசியல் கூட்டத்தைப் பற்றி கேட்டார்.
சரியான பதில் கூறுவதற்குத் தெரியாதவனாக இருந்தேன்.
""அவங்க சொல்றாங்க...'' அவர் வெறுப்புடன் பேசவில்லை.
""ஆமாம்.''
""சொல்லட்டுமா?''
அப்போது அவருடைய தம்பி வந்தான்.
என்னவோ ரகசியமாகக் கூறினான். நண்பர் மருத்துவமனைக்குள் சென்றார்.
அந்த பிச்சைக்கார சிறுவனின் பாடலை மனதிற்குப் பிடிக்கவில்லையென்றாலும் முணுமுணுத்தேன்.
""போனால் போகட்டும் போடோ...!''
பேருந்து வருவதாகத் தெரியவில்லை.
நான் மாலை பத்திரிகையை விரித்துப் பார்த்தேன்.
முதல் செய்தி: "ஏழு காதலர்கள் சேர்ந்து அவளை காரில் அழைத்துச் சென்றார்கள். இறுதியில் பிணத்தை வெளியே கொண்டுவந்தார்கள். யாருடைய குற்றமும் அல்ல. அவள் நரம்பு நோயாளி என்ற சான்றிதழ் இருக்கிறது.'
திடீரென்று ஒரு ஆரவாரம் கேட்டது. தாளி−ருந்து முகத்தை உயர்த்திப் பார்த்தேன். மாணவர்கள்... அவர் களுக்கு என்ன வேண்டும்?
கல்விக் கட்டணத்தை ரத்துசெய்ய வேண்டும். அவர் களுக்கான கல்விக் கட்டணத்தை அவர்களா கொடுக்கிறார் கள்? யாராக இருந்தாலும், படிக்கவேண்டியவர்கள் அவர் கள்தானே? அப்படியென்றால்... அது அவர்களுடைய மரியாதையைத் தொடக்கூடிய பிரச்சினையாக மாறியிருக்கிறது. கல்விக் கட்டணத்தை நிறுத்தவேண்டும்; படிப்பு தொடரவேண்டும். இதுதான் கோஷம்!
பாவம்... அந்த மாணவர்கள் அனைவருக்கும் ஒரு வருடம் வீணாகிவிட்டால்...?
நான் இந்த விஷயத்தை அடுத்த பேருந்தை எதிர் பார்த்துக் காத்துநின்றிருந்த இளைஞனிடம் கூறினேன்.
அவன் ஒரு பணியில் இருப்பவன். போராடி வெற்றிபெற்ற ஒரு பணியில் இருப்பவன்... அவன் திரும்பி நின்று கூறினான்:
""நீதியைக் காப்பாற்ற யாருமே தயாரா இல்ல. எங்கும் சொந்த காரியம் மட்டும்... அப்படின்னா.. பிறகு...?''
""இருந்தாலும்...''
""என்ன?''
""நம்ம மாணவர்களுக்கு கொஞ்சம்கூட லட்சிய உணர்வு இல்லாம போனா நாளைய நிலை என்னவா இருக்கும்?''
பணியில் இருப்பவன் சிறிது சிரித்தான். தொடர்ந்து கவலையுடன் என்னிடம் கூறினான்:
""சில வருஷங்களுக்கு முன்னே சொல்லியிருக்க வேண்டிய வார்த்தைங்க.''
""லட்சிய உணர்வு எல்லா காலங்கள்லயும் தேவை யாச்சே! லட்சிய உணர்வுல மாறுதல் வரலாம்ங்கறதை நான் ஒத்துக்கிறேன். ஆனா ஏதாவது வகைப்பட்ட லட்சிய உணர்வு இல்லாம...''
""சமூக வாழ்க்கை நிலைநிற்குமான்னு பார்க்கிறீங் களா?'' பணியில் இருப்பவனே பதிலையும் கூறினான்.
""நிலைநிற்கும். லட்சிய உணர்வை நீக்கிட்டு, அந்த இடத்தில ஒரு இம்பாலா காரை நிறுத்த முடியுமாங்கறதைத்தான் ஆளுங்க பார்க்கிறாங்க.''
சிறிது நேரம் அந்த இளைஞனான பணியில் இருக்கும் மனிதனையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன். எதுவும் கேட்கவில்லை. பேச்சை அதிகரிக்கக்கூடாது என்று நினைத்தேன்.
"என்கிட்ட நீதி காட்டாம, நான் நீதி காட்டணும்னு சொல்றீங்களா?''
""இல்லை.. நான் கூறியது... மாணவர்களோட விஷயத்தைப்பத்தி...''
""அதையேதான் நானும் சொல்றேன்...''
பசைப் பாத்திரத்தில் கையை மூழ்கச் செய்ததுபோல ஆகிவிட்டது. துடைத்து அகற்ற முயற்சிக்கும் கையின் மீதும் பசை...
""விஷயம் புரியுதா...''
மடையனான நான் புரிந்துகொள்வதற்கு என்ன இருக்கிறது என்பதைப்போல அந்த இடத்தில் நின்று கொண்டிருந்தேன்.
""குழந்தைகளோட விஷயம்...'' பணியில் இருக்கும் மனிதன் தொடர்ந்துகொண்டிருந்தான்.
""அவங்க நம்மோட குழந்தைங்க.''
""இருக்கட்டும்...''
""நம்மகிட்ட இருக்கும் நல்ல விஷயங்களும் கெட்ட விஷயங்களும் அவங்ககிட்டயும் இருக்கும்.''
""ம்...''
""நீங்க லஞ்சம் வாங்குறீங்க...''
""நானா?''
""அப்படின்னா நாம.... சமுதாயம்.''
""சமுதாயம்...''
சமுதாயம் என்ற வார்த்தை இருப்பது எந்த அளவுக்கு நல்லதாகப் போய்விட்டது என்று நான் நிம்மதி அடைந்தேன்.
""நீங்கள் கருப்புச் சந்தை நடத்துறீங்க.''
""சமுதாயம்...''
""ஆமாம்.''
""கள்ளக் கடத்தல் செய்றீங்க...''
""சமுதாயம் அப்படி செய்யுது.''
""அதன்மூலம் கிடைக்கற பணத்தைக்கொண்டு மதிப்பெண்ணையும், வகுப்பையும், காரையும், டெர்லினையும் வாங்கி பிள்ளைகளுக்குக் கொடுக்குறீங்க.''
""சமுதாயம் அப்படிக் கொடுக்குது''
""பிறகு... தேர்ச்சியாகி வந்த அவங்களுக்காக பத்தாயிர மும் பதினைந்தாயிரமும் கொடுத்து, கடைசியில கல்லூரி ஆசிரியர் வேலையையாவது வாங்குறீங்க இல்லியா?''
""ஆமா... சமுதாயம் அப்படியெல்லாம் செய்யுது.''
""அந்த சமுதாயத்தோட பகுதிதான் இந்த இளைஞர்கள்... அவங்களுக்கு மட்டும் ஒரு லட்சிய உணர்வா?''
மேலும் கேட்கவில்லை. பசையில் மூழ்கவைத்த உள்ளங்கையில் காற்றில் பறக்கும் தூசிப் படலங்களெல்லாம் ஒட்டிக்கொள்ளும்.
பேருந்து வந்து சேர்ந்தால்...!
""வாங்கிய முதல் வகுப்பு... ஜாதியின் பேரால கிடைச்ச சலுகைங்க... இதோட ப்ரொஃபஷனல் கல்லூரியில நுழையறாங்க...''
""ஆமா... சமுதாயம் நுழையுது.''
""மாட்டு வண்டியைப்போல... அடித்துப் பதறி... பத்தோ பன்னிரண்டோ வருஷங்க கழிச்சு, வெளியே வர்றாங்க...''
அந்தச் சமுதாயத்தின் நிலைமை எப்படி இருக்கும்?
""அவரைப் பத்தித்தான் அந்த பழைய சுலோகம்.''
""எமன், உயிரை மட்டுமே எடுப்பான்.''
""இந்த சமுதாயம் பாலங்களையும், பொதுக்கட்டடங் களையும், சாலைகளையும்கூட விழுங்கிடுது. இல்−யா?''
பணியி−ருக்கும் நண்பன் சிரித்தான். அவனுக்குப் பிடித்திருக்கிறது என்று தோன்றுகிறது.
""இதுக்காக யாரையும் குற்றம் சொல்லக்கூடாது சார்.'' பணியிலிருக்கும் நண்பன் கூறினான்.
""ஆமா.'' அப்படி சம்மதிப்பதில் சிறிதும் வருத்தம் உண்டாகவில்லை.
""ரேஷன் காலத்தில கள்ளச்சந்தையில அரிசி வியாபாரம் செஞ்சு என்னோட ஒரு அண்ணன் பணம் சம்பாதிச்சார். நான் அவரை எதுக்கு குற்றம் சாட்டணும்?''
""குற்றம் சாட்டவேண்டியது எப்போதும் சமுதாயத்தை தான்.''
""ஆமா.'' பணியிலிருப்பவன் தொடர்ந்தான்:
""அவர் இல்லைன்னா வேறொருத்தன் அதைச் செய்வான். பணம் சம்பாதிச்சதாலதான் மகளை மரியாதையோட ஒருத்தனுடன் அனுப்பிவைக்க முடிஞ்சது. முகத்தில அழகையும் கழுத்தில நகைகளையும் கொண்டிருந்த மகளையும் இருபத்தைந்தாயிரம் ரூபாயையும் ஒரு புதிய அம்பாஸிடர் காரில் வச்சுக் கொடுத்தப்போ, ஒரு எம்.பி.பி.எஸ். காரன் மெதுவா அதை ஓட்டிக்கிட்டுப் போனான்.''
""எல் போர்ட் வச்ச காரைப்போல...''
""ஆமா.'' பணியிலிருக்கும் மனிதன் சிரித்தான்.
""அண்ணனுக்கு மேலும் மூன்று காருங்க வேணும்.''
மருத்துவமனையின் மேற்கு திசை வெளிவாசல் திறந்தது. பிணவண்டி வெளியே வருகிறது. என் நண்பரும் அவருடைய உறவினர்களும் பிணவண்டிக்கு அருகில் இருந்தார்கள். மந்திரங்களைத் தாழ்ந்த குர−ல் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.
அந்த வண்டிக்குள், வறுத்த வாழைக்காய்த் துண்டு களும், தேநீரும் வைக்கப்பட்டிருந்த தட்டினை எடுத்துக் கொண்டு வரும் வளையலணிந்த சிவந்த கைகள் சலனமே இல்லாமல் கிடக்கின்றன.
அந்த இறுதிப் பயணம் நகர்ந்து நகர்ந்து போய்க் கொண்டிருந்தது. பணியி−ருந்த மனிதன் கூறினான்:
""பேருந்தை எதிர்பார்த்து நின்னு பிரயோஜனமில்ல.
அவங்க "வேலை நிறுத்தம்' செய்ய ஆரம்பிச்சிட்டாங்கன்னு தோணுது. இன்றைய சமாதானப் பேச்சு பலன் தந்திருக்காது.''
அவன் பையைத் தூக்கிப் பிடித்தவாறு நடந்தான். நான் சிந்தித்தவாறு நின்றுகொண்டிருந்தேன். அப்போது பின்னாலிருந்து மைக்கின் வழியாக சத்தம் நகர்ந்து நகர்ந்து வந்தது. "இந்த மாநிலத்தின் பண்பாட்டிற்கும் மதிப்பிற்கும் உகந்த வகையில் இந்த மாநிலத்திலுள்ள மனிதர்கள் வாழ்வதற்கு...'
முழுவதையும் கேட்கவேண்டுமென்று தோன்ற வில்லை. பிரகாசித்துக் கொண்டிருக்கும் ஸ்கூட்டருட னும், ஒளி மின்னக்கூடிய மீசையுடனும் வரும் இளைஞனுக்கு வழிவிட்டுவிட்டு நான் நடந்தேன்.
பிரசவ வ−யும் பிறக்கும் குழந்தையின் அழுகைச் சத்தமும் மரண முனகலும் கலந்திருக்கும் மருத்துவமனை என்ற கொடூர உண்மையின் எல்லையின்வழியாக தலையை உயர்த்தியபடி நடந்துசெல்லும்போது, வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காமல் இருக்கமுடியவில்லை.
யார் யாரைக் குற்றம் கூறுவது?
ஒரு கவலை தரக்கூடிய வட்டத்தில் கிடந்து அல்லல் படும் மனித ஆன்மாக்கள்... அவர்களைக் காப்பாற்று வதற்கு யாராவது வருவார்களா?
வந்தால் என்ன? வராவிட்டால் என்ன?
""போனால் போகட்டும் போடா!''