அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு
-என்பார் வள்ளுவப் பேராசான்.
இதன் பொருள்... "உடலும் உயிரும் சேர்ந்திருப்பது போல், அன்பும் நம் செயலும் இணைந்திருக்க வேண்டும். அப்போதுதான் நாம் சிறந்த மனிதராகத் திகழ முடியும்' என்பதாகும்.
பேரன்பும் பெருந்தொண்டும் கலந்த கலவையாக கலைஞர் இருந்ததால்தான் அவரது படம், சட்டப்பேரவையில் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. அதிலும், தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழாவில், வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த சட்டப்பேரவையில், நீதிக் கட்சித் தலைவர் பனகல் அரசர், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா உள்ளிட்ட பெருந்தலைவர்கள் அமர்ந்தி ருந்த அந்தப் பெருமைக்குரிய பேரவையில், 5 முறை முதல்வ ராக வீற்றிருந்த முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவப் படம், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தால் திறந்து வைக்கப்பட்டி ருக்கிறது. இது ஒட்டுமொத்த உலகத் தமிழர்களையும் பெருமிதம் கொள்ளவைத்திருக்கிற கல்வெட்டு நிகழ்வாகும்.
"இது சட்டமன்ற நூற்றாண்டா?' என எதிரிக்கட்சியாக இருந்து கொண்டு, அ.தி.மு.க. தரப்பு குட்டையைக் குழப்பிப் பார்த்தது. இந்தியாவில், முதன்முதலாக 1920-ல்தான் முதல் தேர்தலே நடந்தது. அப்போது மதராஸ் மாகாணத்தில் நீதிக்கட்சி வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து 1921 ஜனவரி 12-ல், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களோடு சென்னை மாகாண சட்டமன்றம் தொடங் கியது. இதுதான் வரலாறு. எனவே இது சட்டமன்ற நூற்றாண்டு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இப்படிப்பட்ட இடையூறுகளையெல்லாம் ஓரம்கட்டிவிட்டு, தனது பெருமைக்குரிய தந்தைக்கு ஒரு அன்பான மகனாகவும், தமிழகத்தின் முதல்வராகவும் இருந்து மு.க.ஸ்டாலின் அவர்கள், கலைஞருக்குச் செய்திருக்கிற வரலாற்றுப் பூர்வமான மரியாதைதான் இந்தப் படத்திறப்பு.
கலைஞர், தமிழகத்தை ஐந்துமுறை ஆண்டிருக்கிறார். அதிலும், தந்தை பெரியாரின் கொள்கை வழியில், சமூகநீதிக் கோட்பாட்டுடன் ஆண்டிருக்கிறார். அவர் தேர்தல் களத்தில் இறங்கிய 13 முறையும், மக்களால் வாக்களிக்கப்பட்டு அமோகமாக வெற்றிபெற்றவர். இதற்கு முன் ஆண்ட முதல்வர்களில் ஜெயலலிதா வரை, பலரும் தேர்தலில் தோற்றிருக்கிறார்கள். ஆனால் தொடர் வெற்றியிலும் சாதனை படைத்த வெற்றித்திருமகன் அவர். தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு மேல் சட்டமன்ற உறுப்பினராகவே இருந்த பெருமையும் கலைஞருக்கே உண்டு. எப்போதோ திறந்திருக்க வேண்டிய கலைஞரின் படம், இப்போதாவது சட்டப்பேரவையில் திறக்கப்பட்டதே என்கிற நிம்மதி நமக்கு ஏற்பட்டிருக்கிறது.
அனைத்துத் தரப்பு மக்களையும், அனைத்து சமூக மக்களையும் உரிய பங்களிப்போடு பராமரித்தவர் கலைஞர். இதன்மூலம் சமூகநீதிக் காவலராகத் திகழ்ந்த கலைஞர், ஊடகத்தினர் நலன் மீதும் அக்கறை கொண்டவர். ஊடக சுதந்திரம் தழைக்க வேண்டும் என்று, மிசா காலத்திலேயே களமிறங்கிப் போராடிய அவரொரு ஊடகப்போராளி. எனவேதான், ஒரு பத்திரிகையாளராகவும் -தனிப்பட்ட முறையிலும் கலைஞரின் படத்திறப்பை நாம் கைகூப்பி வரவேற்கிறோம். இந்த நேரத்தில் மகிழ்வோடும் நெகிழ்வோடும் ஒருசில சம்பவங்களைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய போது, அவரை மீட்க, இரு மாநில அரசுத் தூதுவராக என்னை நியமித்தனர். அந்த நிலையில் பெங்களூருக்கு என்னை அனுப்பி வைத்தார் கலைஞர். எனக்குத் துணையாக தமிழக சூப்பர் ஸ்டாரையும் சென்றுவர பணித்தார். முதல்நாள் நானும் சூப்பர் ஸ்டார் அண்ணன் ரஜினி அவர்களும் கர்நாடகாவிற்குச் சென்று, அன்றைய முதல்வர் கிருஷ்ணாவை சந்தித்தோம். மறுநாள் தமிழக முதல்வராக இருந்த கலைஞர் கர்நாடக முதல்வருடன் இது குறித்து விவாதிக்க பெங்களூரு பயணமானார்.
இதற்கிடையில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் வேணுகோபால் என்பவர், ஒரு பிரஸ் மீட்டைக் கூட்டி, "ராஜ்குமாரை மீட்க, வனத்திற்குள் நான் செல்கிறேன். எனக்கு நக்கீரன் கோபாலை நன்றாகத் தெரியும். தமிழக முதல்வர் கலைஞரையும் எனக்குத் தெரியும். அதனால், என்னால் ராஜ்குமாரை மீட்டுவர முடியும்'' என்று சொல்லி, அங்கே பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த லட்சணத்தில் முன்பு ஒருமுறை, அவர் ஆசைப்பட்டாரே என்று கலைஞரிடம் நான்தான் அவரை அழைத்துச் சென்று, அவரோடு புகைப்படமும் எடுக்கச் செய்திருந்தேன். காரணம், அவர் பெங்களூரில் நம் வழக்கு ஒன்றில் ஆஜராகியிருந்தார். இதை அவர் தன் பப்ளிசிட்டிக்குப் பயன்படுத்திக்கொள்ள முனைந்தார்.
இந்த நிலையில் கலைஞர் பெங்களூர் செல்ல சென்னை விமானநிலையம் சென்றதும் அவரிடம், "ராஜ்குமாரை மீட்க அட்வகேட் வேணுகோபால் காட்டுக்குச் செல்லப்போவதாகக் கூறுகிறாரே'' என்று கர்நாடகா நிருபர்கள் கேட்டனர். வேணுகோபால் ஸ்டண்ட் அடிக்கிறார் என்பதைப் புரிந்துகொண்ட கலைஞர், "பெருமாள் எல்லாம், பெத்த பெருமாள் ஆக முடியாது' என்று, ஒரே வார்த்தையில் அவரை நிராகரித்தார். இதன் மூலம் அவர்களிடம், வேணுகோபால், கோபால் ஆகமுடியாது என்று அங்கே உணர்த்தினார்.
இதைத் தற்பெருமைக்காகச் சொல்லவில்லை. அவர் எந்த அளவிற்கு என்மீது அன்பும் மரியாதையும் வைத்திருந்தார் என்பதற்காகத்தான் சொல்கிறேன். எந்த இடத்திலும் தமிழ்ப் பத்திரிகையாளன் நெருக்கடிக்கும் சங்கடத்துக்கும் ஆளாகிவிடக்கூடாது என்று நினைத்தவர் கலைஞர். அவரது பேருள்ளத்துக்கு ஈடாக இன்னொருவரைச் சொல்ல முடியாது.
அதேபோல் 2012 ஜனவரி 7-ந் தேதி வெளியான நக்கீரன் இதழில், ஜெயலிலதாவின் உணவுப் பழக்கம் பற்றி "மாட்டுக்கறி மாமி'! என்கிற தலைப்பில் ஒரு கட்டுரை பிரசுரமானது. அதைப் பார்த்து கோபத்தின் உச்சிக்கே போய்விட்டார் ஜெயலலிதா. உடனே, அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கலைராஜன் மூலம் ஒரு சதித்திட்டம் தீட்டப் பட்டது. அண்மையில், அதுகுறித்து கலைராஜனின் உதவியாளர் ஒருவர், நம் நிருபரிடம் பேசிய ஆடியோ, அந்தத் திட்டத்தை உறுதிப்படுத்தியது.
அந்த ஆடியோவின்படி, கலைராஜனுக்கு கார்டனில் இருந்து அழைப்பு போக, அன்று காலை 9 மணிக்கு, அவர் தன் உதவியாளருடன் போயிருக்கிறார். அப்போது வெறிபிடித்த மாதிரி, கோபத்தில் இருந்தாராம் ஜெ. கலைராஜனிடம் அவர், "என்ன செய்வீங்களோ, ஏது செய்வீங்களோ எனக்குத் தெரியாது. நக்கீரன்கோபால் உயிரோடு இருக்கக்கூடாது. அதேபோல் நக்கீரன் அலுவலகத்தையும் தரைமட்டமாக்கிடணும். அதுக்கு யாரைக் கூப்பிடுவீங்களோ... எவரைக் கூப்பிட்டுக்குவீங்களோ தெரியாது... கோபால் இருக்கக்கூடாது'’என்று சொன்னாராம். இதற்காக சென்னையில் இருக்கிற காக்காத்தோப்பு பாலாஜி, ஜெர்மன் உள்ளிட்ட டேஞ்சரஸ் ஆட்களை ஏற்பாடு செய்தனராம்.
பாம் வீசி எல்லாவற்றையும் முடிக்கத் திட்டம் வகுக்கப்பட்டதாக, அந்த ஆடியோவில் சொல்லப்பட்டிருக்கிறது.
எனக்கு அப்போது இந்த சதியெல்லாம் தெரியாது. ஆனால், இது கலைஞர் காதுக்குப் போயிருக்கிறது. நக்கீரன் அலுவலகத்தின் மீது அ.தி.மு.க.வினர் அப்போது தொடர் தாக்குதலைக் கடுமையாக நடத்திக்கொண்டிருந்த நிலையில்... அன்று பகல் 12 மணிக்கு கனிமொழி லைனில் வந்து, "உங்ககிட்ட அப்பா பேசணுமாம்' என்றார். என்னிடம் பேசிய கலைஞர், "சரி சரி.. நீங்க அங்க இருக்கவேணாம். கிளம்புங்க' என்றார்.
நானோ, "தாக்குதல் கடுமையாக இருக்கும்போது எப்படி?...' என்றேன். கலைஞரோ விடாமல்...
"முதல்ல அங்க இருந்து கிளம்புங்க, அப்புறம் பேசுறேன்' என்று போனை வைத்துவிட்டார்.
அலுவலகத்தில் இருக்கும் அத்தனை பேரையும் விட்டுவிட்டு நாம் மட்டும் எப்படிப் போவது என்று, அங்கிருந்து நகராமல் இருந்தேன். மீண்டும் என்னை மாலை 6:20-க்கு தனது செயலாளர் சண்முகநாதன் மூலம் தொடர்புகொண்ட கலைஞர், "என்ன இன்னும் நீங்க கிளம்பலையா? ஒருமுறை சொன்னா உங்களுக்கு அறிவில்லையா? கிளம்புங்க' என்றார் கடுமையாக. அப்போதும் நான், "ஏதோ நடக்கப் போவுதுன்னு தெரியுது... பாம் போடப் போறதா தகவல் வருது. எப்படி நான் போறது?' என்றேன். உடனே கலைஞர், "அதையெல்லாம் பார்க்க, நீங்க உயிரோடு இருக்கணும்ல.
சரி, நான் சொல்றேன்... கிளம்புங்க' என்றார். அவர் குரலில் இருந்த கடுமையையும் தீவிரத்தையும் பார்த்த நான், உடனடியாக அங்கிருந்து மாறுவேடத்தில் தப்பினேன்.
கலைஞர் என்னை எச்சரிக்கவில்லை என்றால், நினைத்துப் பார்க்க முடியாத கொடூரம் அன்று அரங்கேறியிருக்கும். இப்படி எனக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று, அவர் துடித்த துடிப்பு இப்போதும் நினைவை நெகிழவைக்கிறது.
என் மீது பேரன்பு வைத்தும், நக்கீரன் பணிகளைப் பாராட்டியும் 2009-ஆம் ஆண்டிற்கான -சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதை 2010-ல் கலைஞர் எனக்கு வழங்கினார். இந்த விழாவிற்காக, அரசு சார்பில் என்னை உயரதிகாரிகள் என் வீட்டிற்கு வந்தே அழைப்பார்கள் என்று சொல்லப்பட்டது. எனக்கு அப்போது ஒன்று தோன்றியது. என் தந்தையார் நெடுஞ்சாலைத் துறையில் கடைநிலை ஊழியராகப் பணியாற்றியவர். அதனால் அவர், தன் மேலதிகாரிகளுக்கு கார் கதவைத் திறக்கவேண்டிய நிலையும் அவருக்கு ஏற்பட்டது. இது என் மனதில் உறுத்த லாகவே இருக்க, இந்த விழா மூலம் என் தந்தையாருக்கு கௌரவத்தை ஏற்படுத்த விரும்பினேன். எனக்குப் பதிலாக என் தந்தையாரை விழாவுக்கு அதிகாரிகள் அழைக்கவேண்டும் என்று, என் ஆசையை முதல்வரான கலைஞரிடம் தெரிவித்தேன்.
என் உள்ளத்தை உணர்ந்த அவர், உடனே அதை ஏற்றுக் கொண்டார்.
அவர் உத்தரவுப்படி, எனக்கு பதில் என் தந்தையை அரசு மரியாதையோடு அழைக்க உயர் அதிகாரிகள் எங்கள் வீட்டுக்கு வந்தனர். என் தந்தையாரை, மிகுந்த மரியாதையோடு காரில் அழைத்துக்கொண்டு விழாவுக்கு வந்தனர். அங்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கார் கதவைத் திறந்து வரவேற்றனர். இது கற்பனையிலும் நடக்கக்கூடிய செயலா? இதையும் செய்துகாட்டினார் கலைஞர். என் தந்தைக்கு இதைவிட நான் என்ன செய்துவிட முடியும். இந்த அதிசயமெல்லாம் கலைஞரால்தான் நடந்தது.
இதேபோல் இந்தியாவுக்கே முன்னோடியாக கலைஞர் ஆணை பிறப்பித்த செய்தி ஒன்று. நமது நண்பரும் சித்த மருத்துவருமான தர்மலிங்கம் ஆயுர்வேத கல்லூரி நடத்த அனுமதி பெற்றிருந்தார். ஆயுர்வேத மருத்துவப் படிப்பு என்பது சமஸ்கிருதம் படித்த உயர் சாதியினர் மட்டுமே பயிலும் படிப்பாக இருந்தது. விண்ணப்பத்திலேயே சமஸ்கிருதம் தெரியும், தெரியாது என குறிப்பிடவேண்டும். சமஸ்கிருதம் தெரியாது என்றால் ஆயுர்வேதக் கல்லூரிக்குள் செல்லமுடியாத நிலை இருந்தது.
இதை கலைஞரின் கவனத்துக்கு மருத்துவர் தர்மலிங்கம் கொண்டுசெல்கிறார். உடனடியாக அன்றைய சுகாதார அமைச்சர் ஆற்காட்டார், சுகாதாரத்துறை செயலாளர், தமிழ்நாடு மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆகியோரை அழைத்து சந்திப்புக்கு ஏற்பாடு செய்கிறார். சந்திப்பின்போது, அவர்களிடம், "அதென்ன சமஸ்கிருதம் தெரிஞ்சவன் மட்டும்தான் ஆயுர்வேதம் படிக்கிறது. மத்தவன் படிக்கக்கூடாதா?' எனச் சொல்லியவர்,
"அந்தந்த மாநிலத்தோட உள்ளூர் மொழி, ப்ளஸ் ஆங்கிலம் தெரிஞ்சா போதும். உடனடி அட்மிஷன் போடச்சொல்லுங்க. சப்ஜெக்ட் டுக்கு தேவைப்படும்போது சமஸ்கிருதம் படிச்சுக்கலாம். சமஸ் கிருதத்தை அங்கேயே கத்துக் கொடுக்கச் சொல்லுங்க. ஒரு மொழி தெரியவில்லை என்பதற்காக ஒருவருக்கு படிப்பை கற்றுத் தராமல் நிராகரிக்கக்கூடாது' என்று ஜி.ஓ. போட்டு மாற்றத் தைத் தொடங்கி வைத்தார். அவரோட நடவடிக்கையைத் தொடர்ந்து அகில இந்திய அளவில் அந்த நடைமுறை மாற்றம் கொண்டுவரப்பட்டது. இன்றைக்கு சமஸ்கிருதம் தெரியாத வங்களும் ஆயுர்வேதம் படிக்கிறாங்கன்னா... அதற்குக் காரணம் கலைஞரோட முன்னோடி நடவடிக்கைதான்.
அண்மையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு தகவலைச் சொன்னார். ஜெயலலிதாவின் ஆட்சிக்காலமான 91-96களில் ரேஷன் கடைகளில் ஒருவர், அந்த மாதத்தில் குறிப்பிட்ட நாளில் மட்டும்தான் பொருட்கள் வாங்க முடியும். அந்த நாளில் ரேஷன் பொருட்களை வாங்கவில்லை என்றால் மக்களுக்கு அந்தப் பொருட்கள் கிடைக்காதாம். இதையறிந்த கலைஞர், மாதத்தின் எல்லா நாட்களிலும் ரேஷன் பொருட்களை மக்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, ஏழைபாளைகளின் நிம்மதிக்கும் வழி வகுத்தார் என்றார். கலைஞர் மக்களின் நாடித் துடிப்பை அறிந்தவர். அவர்களின் வலியையும் வேதனையையும் உணர்ந்தவர். அதனால்தான் அவரால் மக்களுக்கான ஆட்சியைத் தொடர்ந்து தரமுடிந்தது.
இன்று கலைஞரின் இன்னொரு வடிவமாகவே முதல்வர் ஸ்டாலின் தனது ஆட்சியைத் தொடங்கியிருக்கிறார். கலைஞர் பாணி யிலேயே, தங்கள் மீதான விமர்சனங்களையும், அரசியல் பகைகளை யும் மறந்துவிட்டு, அனைவரையும் அரவணைத்துச் செல்கிறார். அதற்குக் காரணம் கலைஞர் ஊட்டிய சமத்துவ உணர்வாகும்.
தமிழகத்தின் ஒவ்வொரு உயர்விலும் கலைஞரின் வியர்வையும் உழைப்பும் இருக்கிறது. அத்தகைய மாமனிதருக்கு சட்டசபையில் படம் திறக்கப்பட்டிருப்பது பெருமிதத்திற்குரியது மட்டுமல்ல; வாழ்த்துதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியதாகும்.
-மகிழ்வுடன்
நக்கீரன்கோபால்