சில அலட்சி யங்கள் நமக்கு பெரும் ஆபத்தைக் கொண்டு வந்து விடுகின்றன. என்ன நடந்துவிடப்போகிறது என்னை மீறி? பார்த்துக்கொள்ளலாம் பிரச்சனைகள் இப்போது உடனேவா வந்துவிடப்போகிறது, ஒரு திரைப்படமோ நாடகமோ முதல் எபிசோட்டில் சிரிக்கும் கதாநாயகனும், கதாநாயகியும் கடைசி கிளைமாக்ஸில்தான் சிரிப்பார்கள் இடைப்பட்ட படமும் எபிசோடும் வில்லனுக்குக்கு கொடுக்கப்பட்டு இருக்கும். அவன் கைதான் ஓங்கியிருக்கும். கடைசியில் படமோ நாடகமோ முடிவடைய 10 நிமிடங்களுக்கு முன்பு வில்லனின் முடிவு நெருங்கும். இப்படி நம்மைச் சுற்றியிருக்கும் அநேக அலட்சியங்கள்தான் நமக்கு வில்லன்.
சமீபத்தில் "ஐரா' படம் பார்தேன். இது அது குறித்த விமர்சனம் என்றில்லாமல், லிப்ட் நிறுத்தாமல் போனதற்கெல்லாமா கொலை செய்வார்கள் என்ற ஒரு கேள்வி முளைத்திருந்தது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் தெரியும் லிப்ட் நிறுத்தாமல் போனது கதாநாயகியின் அலட்சியம். நம்மைப் போல அவர் களுக்கும் ஏதாவது முக்கியமான விடயம் இருக்கும் என்பதை அறிந்துகொள்ளாத அலட்சியம், அந்த பெண்ணின் கனவுகளையும் ஆசைகளையும் கொன்று விடுகிறது. யாருடனோ சண்டை போட்டுக்கொண்டு வண்டியோட்டும்போது சரக்கு அடித்து விபத்துக் குள்ளாக்கிய டிரைவரின் அலட்சியம், சாலையில் வண்டியோட்டும்போது நிச்சயம் குடிக்கக்கூடாது என்ற விதிக்கு இருபதோ ஐம்பதோ வாங்கிக்கொண்டு வாகன ஓட்டிகளை நகர்த்தும் காவலரின் அலட்சியம், அந்த அறைக்கு வரும் பீர் பேக்டரி ஓனர் அவர் பெண் களிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சிக்கிறார் எனறு தெரிந்தும் பணத்திற்காக அவரை தங்க வைக்கும் ஹோட்டல் நிர்வாகத்தின் அலட்சியம் இந்த ஒட்டு மொத்த கோபம்தான் "ஐரா' என்பது என் கருத்து.
இன்னும் அநேக அலட்சியங்களை நாம் தினமும் கடந்துகொண்டுதானே இருக்கிறோம். முதல் நாள் விழாவில் மீந்து போயிருந்த உணவை காலையில் சூடு பண்ணிக் கொடுத்த அன்னையின் அலட்சியத்தால் ஐந்து வயது குழந்தையின் உயிரே போய்விட்டது. "என்னம்மா நீ எப்பப்பாரு வாயைத் தொறந்தாலே அட்வைஸ்தான் என்று புலம்பிய மகள் ஒருவர் திருமணத்திற்கு பின் போட்ட ஸ்டேட்டஸ் அம்மாவீட்டுலே போனாலே சோறு; மாமியார் வீட்டுலே அம்மா தாயே சோறு. இது சிரிப்பதற்காக இருந்தாலும் இதில் உள்ள அர்த்தத்தை யோசித்துப் பார்த்தால் இலகுவாக புரியும். தாய் தந்தையை மதிக்காமல் அவர்களின் அக்கறையைக் கேட்காமல் அலட்சியம் செய்ததன் விளைவுதான் பொள்ளாச்சியின் கொடூரம்.
நான்கு நாட்கள் ஊடகங்கள் வரிந்து கட்டிக்கொண்டு ஒளிபரப்பின. அதன்பின் எலக்ஷன் செய்திகளுக்கு வழிவிட்ட ஊடக அலட்சியம், அவனை அடிப்பதைப் போன்ற காவலரின் வீடியோ அதன் பின் அவன் என்ன ஆனான் ? உச்சுக்கொட்டிக்கொண்டு நகரும் நம்போன்ற மக்களின் அலட்சியம். தவறு செய்தால் தண்டனை கொடுக்க மனுநீதிசோழன் ஆக இல்லாவிட்டாலும் அவன் செய்த தவறுக்கு பாதிக்கப்பட்டவர்களைக் குறைகூறும் பெற்றோர்களின் அலட்சியம். "நெற்றிக்கண் திறப்பினும் குற்றமே' என்று குற்றம் முழங்கிய நக்கீரனை குற்றம் சுமத்தப் பார்க்கும் அரசியல்வாதியின் அலட்சியம்.
"அந்தமாமா என்னை இப்படி செய்தார்' என்ற பிஞ்சு மகளின் வார்த்தைக்கு ஏதோ சீரியலிலோ வெட்டிப்பேச்சுகளிலோ மூழ்கிவிட்டு அவர் அப்படி யெல்லாம் இல்லை, என்று மீண்டும் சாத்தானின் கைகளில் ஒப்படைக்கும் இல்லத்தரசிகளின் அலட்சியம். இல்லையென்றால் 17 சாத்தான்கள் சேர்ந்து 12வயது சிறுமியை ஏழெட்டு மாதங்கள் பாலியல் வன்முறை செய்திருக்குமா?இவையெல்லாம் மன்னிக்க முடியாத அலட்சியங்கள் அல்லவா.
தவறு சிறியதாக இருக்கும்போதே கண்டிக்காமல் அது வளர்ந்து புற்றாகிப் போன பிறகு கையைப் பிசைவதன் அலட்சியம்தான் நாம் சமூகத்தில் சந்திக்கும் பிரச்சனைகள் சந்துமுனையைக் கடக்கும்போது ஹாரன் அடிக்காமல் ஸ்டைலாக திரும்பும் இருசக்கர வாகனங்களின் அலட்சியம் விபத்தைச் சந்திக்கிறது. நம்மைப்போலவே யாரோ ஒரு மனைவியோ, மகளோ, குடும்பமோ அவனுக்காக காத்திருக்கும் என்ற உண்மையை உணராத அலட்சியம். ருசிக்காக கார்போஹைட்ரேட்டு களை உண்டு தன் உடலுக்கே நாம அளிக்கும் அலட்சியம். இதில் குடியும் சேரும்.
நம் மக்களின் நலன் நாடி மதுவிலக்கு அமல்படுத்தாத அரசாங்கத் தின் அலட்சியம். இன்னும் எத்தனையோ அலட்சியங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
நான் எதார்த்தத்தைச் சொல்கிறேன் என்று வரிந்து கட்டிக்கொண்டு திரைக்கு வரும் இயக்குநர்களின் அரைவேக்காட்டுத்தனமான படங்கள், அறைக்குள் நடக்கும் விடயத்தை அம்பலமாக்கும் படங்கள். திரையில் வயது வந்தவர்களுக்கு மட்டுமே என்று அறிக்கை இருக்கிறேதே என்ற தணிக்கை குழுவினரின் அலட்சியம். இன்று எத்தனையோ இணைய அரக்கர்கள் அம்மாதிரியான படங்களை பிள்ளைகளிடம் சேர்ப்பிக் கிறார்கள்.
தனிக்குடித்தனம் என்ற காலம் போய் தனிக்குடும்பம் என்றாகிப்போய்விட்டது. கூட்டுக்குடும்பத்தின் அக்கறையை அலட்சியம் செய்ததன் விளைவு இன்று அடிப்படை உறவைக்கூட அறிந்து கொள்ளாத இளம்தலைமுறை யினர். உணவு தயாராகி விட்டது என்று மொபைல் போனின் மெசேஜ் மூலம் பக்கத்து அறையில் இருக்கும் மகனை அழைக்கும் தாய். அரையிருட்டில் போர்வைக்குள் இருந்து வரும் வெளிச்சம் தன் பிள்ளை களின் வாழ்வையே இருட்டடிக்கப் போகிறது என்று உணராத பெற்றோர்களின் அலட்சியம். பெற்றுவிட்டார்கள் வளர்ந்துவிட்டோம்- இனி இவர்கள் தேவையில்லை என்று பிதற்றும் பிள்ளைகளின் அலட்சியம்.
பாதிக்கப்பட்டவரின் புகார்கள் கூட ஏதாவது வி.ஐ.பி.யின் சிபாரிசுக்காக காத்திருக்கும் அலட்சியம்.
என் அங்கங்கள் என்று திரைபோடாமல் ரசிகர்களுக் காக இன்னும் எவ்வளவும் காட்டுவேன், எனக்கு ஒன்றும் வயதாகிவிடவில்லை என்ற நடிகை களின் அலட்சியம். இவளைப்போலத்தானே இவளும் இருப்பாள் என்ற அப்பாவி பெண்ணிடம் வக்கிரப்பார்வை பார்பவனின் அலட்சியம்.
இரட்டை அர்த்த வசனங் களுடன் இதோ இதோ என்று பெண்ணின் சதையைப் பிரித்து மேயும் நடுப்பக்க புத்தகங்களின் வக்கிரம் தூண்டும் அலட்சியம் பாதுகாக்கப்பட வேண்டிய சுற்றுப்புறம் பற்றிய கவலையற்ற அரைமணிநேரம் நின்றா லும் ஐந்து டன் குப்பை போடும் மக்களின் அலட்சியம்.
காடுகளை அழித்துவிட்டு இப்போது எல்லாம் இடமும் குடியேறும் இடமாகிப்போனதால் நாடுகளுக்குள் மெல்லமெல்ல தன் இருப்பிடம் தேடி விலங்குகள் வருவதும், நீர் வற்றிப்போன ஆற்றில் பிளாட் போட்டு அடுக்குமாடி கட்டி என் இடம் என்று ஓடிவந்த வெள்ளத்தினால் வீடிழந்ததும், ஏரிகளை தூர் வாராத அரசாங்கத்தினால் அத்தனை வெள்ளம் வந்தும் தண்ணீருக்கு கியூவில் நிற்பது என அநேக அலட்சியங்கள்தான் இன்று நம் பெரும் இழப்பிற்குக் காரணம்.
ஓசோன் மண்டலம் சிதைந்து வருகிறது புகைகளால், பனிமலை உருகி வருகிறது வெப்பத்தால், நதியின் வளம் குறைய திருடும் மணல் கொள்ளையும், நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன் நீ அழுகிற மாதிரி அழு என்று தன் பினாமிகளுக்காக பேசும் அரசியல்வாதியும், அவர்களின் அலட்சியத்தின் பரிசு சுனாமி பிறந்த குழந்தையை எலி கடித்ததும் கர்ப்ப ஸ்திரிக்கு எயிட்ஸ் ரத்தம் ஏற்றியதும் ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாமல் குழந்தைகள் இறந்ததும், அரசு மருத்துவமனையின் அலட்சியம்.
கந்துவட்டிக்கு நான்கு உயிர்கள் பலியான பிறகுதான் கந்துவட்டி தவறென்று சட்டம், பச்சைக் குழந்தையின் சதை பலியான பின்தான் போக்சா சட்டம். ஓட்டையான அந்த சட்டத்தின் அலட்சியம் தான் இன்று பாலியல் தொல்லையில் பிள்ளைகளின் இழப்பு என்று தணியுமோ இந்த அலட்சிய மோகம்.
நான் இந்தக் கட்சியின் ஆதரவாளன் என்று தெருவுக்குத் தெரு அடுத்த கட்சியைப்பற்றி நாகரிகமில்லாமல் பேசுபவன் உன்னைக் காப்பாற்ற வரப்போவது இல்லை, ரூ.120 டிக்கெட்டுக்கு உன் முன்னால் ஆடிக்காட்டுபவன் உன்னைக் காப்பாற்ற வரப்போவதில்லை, அந்த பெண்ணின் உடையும், உடலும் என்னை காமக்கொடூரம் செய்ய வைத்தது என்று பெண்மீதே பழிபோடும் அரக்கன் உன்னைக் காப்பாற்றப்போவதில்லை. இலவச டிவியும், மிக்ஸியும் கணிப்பொறியும் உன்னைக் காப்பாற்றப் போவதில்லை எவன் நம்மை ஆண்டால் என்ன இன்றைய பிரச்சனைக்கு ஒரு இரண்டாயிரம் ரூபாய் போதும் என்ற அலட்சியத்தை விடு. அரசியல் தலைவர்கள் வருகிறார்கள் ஆரத்தி எடு காசுதருகிறேன் என்றவனின் தலையிலேயே போடு, இங்கு ஆரத்தி எடுக்க அவர்கள் என்ன உன் வீட்டிற்கு திருமணமாகியா வருகிறான். மக்களின் நலனையும் சுயமரியாதையும் காக்கும் அரசியல்வாதியைத் தேர்ந்தெடுங்கள்.
இன்று நாம் காட்டும் அலட்சியம் நாளை நம் வாழ்வையே சூறையாடிவிடும். விழித்துக் கொள்ளுங்கள்.