ஒரு மொழியில் மாற்றம் ஏற்படுவது என்பது இயல்பானது. காலந்தோறும் அம்மாற்றம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. இஃது உலகமொழிகள் அனைத்திற்கும் பொதுவான ஒன்று. நாம் பிறரோடு கலந்து பேசுவதும், அவர்களின் மொழியை அறிந்துகொண்டு அதன் வழியே புதிய புதிய வரவுகளுக்கு இடம்கொடுப்பதும் கால மாற்றத்தால் ஏற்படக்கூடியதே.
இலக்கணிகள், மொழியில் கலப்பு உருவாகும் சூழ்நிலையை ஏற்றுள்ளனர். மொழி காலந்தோறும் புதியவனவற்றிற்கு இடம்தருவதால், ஒரு மொழிமாற்றம் காண்பதும், வளர்ச்சி அடைவதும் பழையனவற்றைக் கழித்துப் புதியனவற்றைப் பேணிக் கொள்வதுமான சூழலை எண்ணியே,
பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையினான
என்று நன்னூலில் பவணந்தியார் சுட்டிக்காட்டி யுள்ளார். புதியனவற்றைப் பேணிக் கொள்வது, இன்றைய கால கட்டத்தில், இன்றியமையாததாகவும் உள்ளது. "கால வகை' என்று நன்னூல் குறிப்பாகச் சுட்டியுள்ளமை இதனால்தான் போலும்!
தமிழ்மொழி பிறவற்றின் தாக்கத்தைப் பெற்றிருப் பதும், பிற மொழியின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி யிருப்பதும் கண்கூடு. பேச்சு, எழுத்துவழக்குகளில் கலப்பு என்பது, நாகரிகத்தையும், பண்பாட்டையும் ஒட்டி நிகழ்வதாகும்.
ஆங்கிலம், கருத்துப் பரவுதலுக்குக் காரணமாக இருந்து வருவதால், அது தமிழ் மொழியின் மீது சில பதிவுகளை உண்டாக்கியது. அந்நியமொழி யான ஆங்கிலத்தை நம் மொழியாகவே கொண்டு விட நேர்ந்திருப்பது ஓர் ஊழ்வினை என்றே சொல்லத் தோன்றும். செய்தி ஊடகம், காட்சி ஊடகம் ஆகியவற்றில் பரவலாகக் காணப்படுவதற்கு முன்பே, தமிழின் பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு ஆகியவற்றில் ஆங்கில இலக்கண மரபுகள் புகுந்துவிட்டன.
தமிழ் மக்களின் பேச்சிலும் எழுத்திலும் நடையிலும் ஆங்கிலம் தன் செல்வாக்கை நிலைநாட்ட முயன்றது. தமிழ்ச்சொற்றொடர் அமைப்புகள் பல மாற்றங் களைக் காணத் தொடங்கின. தமிழ் இலக்கண மரபும் மாற்றம் கண்டது. பழைய இலக்கண விதிகள் ஒருபுறம் இருப்பினும், புதிய புதிய தொடர் அமைப்பில் பேசுவதும் எழுதுவதும் பெருவழக்கினவாய் புகத் தொடங்கின. கால ஓட்டத்தில் அவை நிலைபெறுவனவாய் ஆயின. இன்றைய கால கட்டத்தில் ஆங்கிலம் தவிர்க்க இயலாததாகவே கருதப்படுகிறது. இன்று பட்டி தொட்டிகளில் இருக்கும் பள்ளிக்கூடங்களிலெல்லாம் ஆங்கிலம் கட்டாயம் கற்பிக்கப்படவேண்டும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது. அதில் முனைப்பும் காட்டிவருகிறது. தகவல் ஊடகங்களிலும், மக்களின் அன்றாடப் பேச்சுவழக்கிலும் தமிழ், ஆங்கிலவயமாகி வருவதனைக் காணலாம். கிராமத்தில் இருக்கும் பெற்றோர்கள்கூடத் தங்கள் பிள்ளைகள் ஆங்கிலத்தில் மம்மி, டாடி என்று அழைப்பதில்தான் பெருமைப்படுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் விளம்பர ஊடகங்களில்கூடக் கடையின் பெயரை "மம்மி டாடி' என்று பெயரிடப்படும் அளவுக்கு நம் மொழியின் நிலை இருக்கிறது.
வெகுசன மக்களின் உரையாடலிலும், அவர்கள் படிக்கும் இதழ்களிலும், பார்க்கும் தொலைக்காட்சி நாடக உரையாடல்களிலும் ஆங்கிலவழியிலான நடை இயல்புகள் நடமாடுவதை நம்மால் உணரமுடிகிறது. தமிழன் தன் தாய்மொழியில் நான்கு சொற்களில் தன் கருத்தை வெளியிட்டால், அவற்றில் மூன்று சொற்களாவது ஆங்கிலக் கலப்பின்றி இரா. அவ்வாறு கலந்து பேசும் தமிழைத் தமிங்கிலம் என்றுகூடக் கிண்டலாகச்
ஒரு மொழியில் மாற்றம் ஏற்படுவது என்பது இயல்பானது. காலந்தோறும் அம்மாற்றம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. இஃது உலகமொழிகள் அனைத்திற்கும் பொதுவான ஒன்று. நாம் பிறரோடு கலந்து பேசுவதும், அவர்களின் மொழியை அறிந்துகொண்டு அதன் வழியே புதிய புதிய வரவுகளுக்கு இடம்கொடுப்பதும் கால மாற்றத்தால் ஏற்படக்கூடியதே.
இலக்கணிகள், மொழியில் கலப்பு உருவாகும் சூழ்நிலையை ஏற்றுள்ளனர். மொழி காலந்தோறும் புதியவனவற்றிற்கு இடம்தருவதால், ஒரு மொழிமாற்றம் காண்பதும், வளர்ச்சி அடைவதும் பழையனவற்றைக் கழித்துப் புதியனவற்றைப் பேணிக் கொள்வதுமான சூழலை எண்ணியே,
பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையினான
என்று நன்னூலில் பவணந்தியார் சுட்டிக்காட்டி யுள்ளார். புதியனவற்றைப் பேணிக் கொள்வது, இன்றைய கால கட்டத்தில், இன்றியமையாததாகவும் உள்ளது. "கால வகை' என்று நன்னூல் குறிப்பாகச் சுட்டியுள்ளமை இதனால்தான் போலும்!
தமிழ்மொழி பிறவற்றின் தாக்கத்தைப் பெற்றிருப் பதும், பிற மொழியின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி யிருப்பதும் கண்கூடு. பேச்சு, எழுத்துவழக்குகளில் கலப்பு என்பது, நாகரிகத்தையும், பண்பாட்டையும் ஒட்டி நிகழ்வதாகும்.
ஆங்கிலம், கருத்துப் பரவுதலுக்குக் காரணமாக இருந்து வருவதால், அது தமிழ் மொழியின் மீது சில பதிவுகளை உண்டாக்கியது. அந்நியமொழி யான ஆங்கிலத்தை நம் மொழியாகவே கொண்டு விட நேர்ந்திருப்பது ஓர் ஊழ்வினை என்றே சொல்லத் தோன்றும். செய்தி ஊடகம், காட்சி ஊடகம் ஆகியவற்றில் பரவலாகக் காணப்படுவதற்கு முன்பே, தமிழின் பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு ஆகியவற்றில் ஆங்கில இலக்கண மரபுகள் புகுந்துவிட்டன.
தமிழ் மக்களின் பேச்சிலும் எழுத்திலும் நடையிலும் ஆங்கிலம் தன் செல்வாக்கை நிலைநாட்ட முயன்றது. தமிழ்ச்சொற்றொடர் அமைப்புகள் பல மாற்றங் களைக் காணத் தொடங்கின. தமிழ் இலக்கண மரபும் மாற்றம் கண்டது. பழைய இலக்கண விதிகள் ஒருபுறம் இருப்பினும், புதிய புதிய தொடர் அமைப்பில் பேசுவதும் எழுதுவதும் பெருவழக்கினவாய் புகத் தொடங்கின. கால ஓட்டத்தில் அவை நிலைபெறுவனவாய் ஆயின. இன்றைய கால கட்டத்தில் ஆங்கிலம் தவிர்க்க இயலாததாகவே கருதப்படுகிறது. இன்று பட்டி தொட்டிகளில் இருக்கும் பள்ளிக்கூடங்களிலெல்லாம் ஆங்கிலம் கட்டாயம் கற்பிக்கப்படவேண்டும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது. அதில் முனைப்பும் காட்டிவருகிறது. தகவல் ஊடகங்களிலும், மக்களின் அன்றாடப் பேச்சுவழக்கிலும் தமிழ், ஆங்கிலவயமாகி வருவதனைக் காணலாம். கிராமத்தில் இருக்கும் பெற்றோர்கள்கூடத் தங்கள் பிள்ளைகள் ஆங்கிலத்தில் மம்மி, டாடி என்று அழைப்பதில்தான் பெருமைப்படுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் விளம்பர ஊடகங்களில்கூடக் கடையின் பெயரை "மம்மி டாடி' என்று பெயரிடப்படும் அளவுக்கு நம் மொழியின் நிலை இருக்கிறது.
வெகுசன மக்களின் உரையாடலிலும், அவர்கள் படிக்கும் இதழ்களிலும், பார்க்கும் தொலைக்காட்சி நாடக உரையாடல்களிலும் ஆங்கிலவழியிலான நடை இயல்புகள் நடமாடுவதை நம்மால் உணரமுடிகிறது. தமிழன் தன் தாய்மொழியில் நான்கு சொற்களில் தன் கருத்தை வெளியிட்டால், அவற்றில் மூன்று சொற்களாவது ஆங்கிலக் கலப்பின்றி இரா. அவ்வாறு கலந்து பேசும் தமிழைத் தமிங்கிலம் என்றுகூடக் கிண்டலாகச் சொல்வதுண்டு. சில காலங்களுக்கு முன்னர், இந்தி நாடகமான ஜூனூன் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுத் தொலைக்காட்சியில் தொடராக வந்தபோது, அதில் இடம்பெற்ற பாத்திரங்களின் பேச்சு வித்தியாசமாக இருக்கவே அன்றைய காலகட்ட சூழலில், "ஜூனூன் தமிழ்' என்றே அழைக்கப்பட்டு வந்தது நினைவு இருக்கலாம்.
அந்நாடகத்தில் பேசிய பேச்சு வேடிக்கையாகவும் இருந்தது. 'தமிழா! நீ பேசுவது தமிழா?'என்ற நிலைக்குத் தமிழ் தள்ளப்பட்டுவிட்டதோ என்று எண்ணும் அளவிற்குச் சின்னத்திரையின் மொழிநிலை உள்ளது. எழுத்தை உச்சரிப்பதிலும், பேசும் மொழியின் இயல்பினை எடுத்துச் சொல்வதிலும் மொழிக்கு அப்பாற்பட்டே உரையாடல்கள் அமைகின்றன. அண்மையில் புலம்பெயர்ந்த தமிழறிஞர் அ.முத்துலிங்கம் அளித்த பேட்டியில், அவர் தாம் சந்தித்த பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் தமிழன்பர் சங்கர் கிருஷ்ணன் என்பவர் கூறிய கூற்றைப் பதிவு செய்திருக்கிறார். "பிரெஞ்சுக்காரர்கள் பேசும்போது ஒரு சொல் ஆங்கிலம் கலப்பதில்லை. அரேபியர்கள் அரபுமொழியில் பேசும்போது ஒரு சொல் ஆங்கிலம் கலப்பது இல்லை; தமிழர்கள் மட்டும் ஏன் ஐம்பதுக்கு ஐம்பது சதவீதம் ஆங்கிலம் கலக்கிறார்கள்'' (தடம் - மே 2017) என்று சொல்லிய கருத்தினைச் சிந்தித்துப்பார்ப்பது நன்று.
நாளும் நாம் பேசும் பேச்சுவழக்கில் ஆங்கிலம் கலக்காமல் இருப்பதில்லை. காலை எழுந்தவுடன் good morning என்று சொல்லிப் பழகிவிட்டோம்.தமிழர்க்குரிய பொங்கல் நாளைக்கூட happy Pongal என்று தானே சொல்கிறோம்.
குடும்பத் தலைவி ஒருத்தி தன் பேச்சில், ""மார்னிங் எழுந்ததும் கிச்சனுக்குப் போய் சமையல் பண்ணி, பசங்களுக்கு பிரஷ் பண்ணி, அதற்குப்பிறகு டிரெஸ் பண்ணி, ஸ்நாக்ஸை பண்ணி டிபன்பாக்ஸில் திணித்துவிட்டு ஸ்கூல் பஸ்ஸில் ஏற்றிவிடுவது வரை எல்லாம் பண்ணிவிட்ட பிறகு, ஹஸ்பெண்டை ஆபிஸுக்குப் போகப்பண்ணி விட்டு ரெஸ்ட் எடுக்க எங்கே டைம் கிடைக்கிறது'' என்று பேசுவது இயல்பாகப் போய்விட்டது. கன்னித் தமிழ் இப்படிப் "பண்ணித்'தமிழாக மாறிவிட்டது!
குடும்பத்தலைவி மட்டும் இல்லை. இவ்வாறு கலந்துபேசுவது இருவர் உரையாடல்களிலும் மிகுதியாக இடம்பெற்றுவிட்டது. அந்தக் காலகட்டத்தில் வடமொழியால் நம் மொழி நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து, இன்றைய காலகட்டத்தில் ஆங்கிலத்தால் பெற்றிருக்கும் மொழி நிலைப்பாதிப்பு, பேச்சு வழக்கிலும், எழுத்து வழக்கிலும் மிகுதியாக உள்ளது.
தற்போதைய அறிவியல் உலகில் ஆங்கிலத்தின் தாக்கம் உணரப்பட்டாலும், மொழி நிலையில் அது ஏற்படுத்தியிருக்கும் மாற்றத்தைக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
பன்னாட்டளவில் செல்வாக்கினைப் பெற்றிருக்கும் ஆங்கிலம், அந்தந்த மொழிகளில் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது உண்மை. மொழி நிலையில் இதனை இக்காலத்திய வளர்ச்சி என்று ஏற்பதா? அல்லது மொழிப் பாதுகாப்பினை மனத்துட் கொண்டு அதனைப் போற்றாமல் இருப்பதா என்று எண்ணத் தோன்றுகிறது. இக்கால கட்டத்தில் ஆங்கிலப் பயிற்சியை நோக்க, வளர்ந்து வரும் தலைமுறையினரிடையே தமிழின் நீர்மை எந்த அளவிற்குப் போற்றிப் பாதுக்கப்படும் என்று தெரியவில்லை. மக்களிடையே அதற்கான விழிப்புணர்ச்சியும் மழுங்கிவிட்டதாகவே ஐயப்படவைக்கிறது. இந்த நிலையில் நம் மொழியில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களைச் சில போக்குகளில் உணர்த்தவேண்டியிருக்கிறது.
ஒரு மொழி இன்னொரு மொழியின் உறவினை ஏற்கும்போது பண்பாட்டளவிலும், மொழி நிலையிலும் மாற்றமோ தாக்கமோ பெறுவது ஏற்கக்கூடியதே என்று இன்றைய மொழியியலாளர் கூறியிருப்பினும், தனித்து நிற்க வல்ல தமிழ்மொழியில் ஏற்பட்டிருக்கும் மாற்றம், புதிய வரவாகவே உள்ளது. கடந்த நூற்றாண் டுக்கு முன் தொடங்கி இன்று வரையிலான ஆங்கில மோகம் தமிழ்மொழியின் சில இலக்கண நெறிகளைப் புறம்தள்ளியிருக்கிறது என்பதனை மறுத்தற்கில்லை.
பெயர், வினை, இடைச்சொல், எச்சங்கள் முதலியவற்றில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் ஊடகங்கள் வழியே புலப்படுகின்றன. இலக்கண மரபுகள் பேசப்பட்டுவந்தாலும் கூட, ஆங்கிலத் தாக்கத்தின் விளைவாகத் தமிழின் மொழி நிலை, புதிய புதிய இலக்கண நெறிகளுக்கு வழிவகுப்பதாய்த் தோற்றம் தருகிறது.
எழுவாய் பயனிலை
தமிழில் சொற்றொடர் அமைப்பு முறையானது;
இயல்பானது. இஃது இலக்கண மரபு. "அவன் ஒரு புத்தகம் வாங்கினான்' என்ற இந்த அமைப்பு, "வாங்கினான் அவன் ஒரு புத்தகம்' என்று எழுதுவதும் பேசுவதும் மொழிநிலையில் கண்ட மாற்றமாகும், இது ஒருவகையில் ஆங்கிலத்தின் வழிவந்த சொற் றொடர் அமைப்பினை அடியொற்றியது. "அவனை எனக்குத் தெரியும்' என்பது, "எனக்குத் தெரியும் அவனை' என்பது ஆங்கிலம்வழிவந்த சொற்றொடர் அமைப்பாகும்.
ஒரு தொடரின் இறுதியில் வினைச்சொல்லைப் பயன்படுத்தி எழுதும் போக்கு, தமிழ் இலக்கண மரபிற்கு இடம் தருவதெனினும், இன்றைய நடையில் குறிப்பாக எழுத்திலும், பேச்சிலும் பெருவரவாக உள்ளதைக் காணமுடிகிறது. "மோகன் ஒரு பரிசினை அவனுக்குத் தருவதாக வாக்களித்தான்', என்ற சொற்றொடரினை ஆங்கில மயமாக வழங்கும் சூழலில், "மோகன் வாக்களித்தான் அவனுக்கு ஒரு பரிசு தருவதாக' (Mohan promised him a present) என உரையாடலில், குறிப்பாகச் சின்னத்திரையில் இம்மொழி நடை பயன்படுத்துவதைக் காணலாம்.
வினைச்சொல்லும் பெயர்ச்சொல்லும்
வினைச்சொல் (பயனிலையாக) இறுதிக்கண் இடம்பெறச் செய்வதனை, இற்றை நாளில் பத்திரிகை, சின்னத்திரை, விளம்பரங்கள் முதலியவற்றிலிருந்து அறிந்துகொள்ளலாம். இதற்குக் காரணம் பேசுவது மாதிரி எழுதுவதுதான். இக்கால உரைநடையில் இப்போக்கு மிகுதியும் காணப்படுகிறது. இது, தமிழ் இலக்கண மரபிற்கு உட்பட்டதெனினும், ஆங்கிலத் தாக்கத்தால் பெருவரவிற்றாயிற்று. அண்ணா, கலைஞர் ஆகியோர் நடைகளில் இத்தகைய நடையியல்பினைக் காணலாம். "அவன் இறந்து கிடந்தான் ஈட்டிக்கு மார்பு காட்டி' (கலைஞர்) "தேடினேன் தேடினேன் காதல் தேவியை-கார்முகிலைக் கிழித்து வரும் தென்றலில், மலை உச்சியில், சிற்றூரில்' (அண்ணா) என வருவது காண்க.
கட்டளைத் தொடர்கள்
பெயர்ச் சொல்லைக் கட்டளைச் சொற்களில் தொடங்குவது தமிழ் மரபு. ஆங்கில மரபு வினைச் சொல்லை முதலாகக் கொண்டு பயின்று வரும்.
ஆங்கிலப் படியே வழங்கி வருவதனைத் தொலைக்காட்சியின் உரையாடல் நிகழ்ச்சிகளில் காணமுடிகிறது. go to school: put the book there: do what I say முதலானவை முறையே தமிழில் பள்ளிக்கூடம் போ, நூலை அங்கே வை, நான் சொன்னதைச் செய் என்று தமிழில் வழங்க வேண்டியதனை போ பள்ளிக்கூடம்; வை நூலினை அங்கே; செய் நான் சொன்னதை என்று பேசுவதும், எழுதுவதும் உரையாடலில் பயன்படுத்துவது இயல்பாகிவிட்டது.
செயப்படுபொருள்
எழுவாய்க்கும் செயப்படுபொருளுக்கும் பயனி லைக்கும் இடையில் வரும் பட்டு / பட்டது என வருவனவற்றைப் பயன்படுத்தித் தமிழில் சொற்றொடர் அமைப்பதும் கூட இற்றை நாளில் பெருவரவாக உள்ளது. கல்லூரி திறந்தது. என்பதனைக் கல்லூரி திறக்கப்பட்டது என்று எழுதுவது ஆங்கிலத்தாக்கம் காரணமாக வந்தது. ஆங்கிலத்தில் உள்ள செயப்பாட்டு வினையைத் தமிழில் எழுதும்போது, வினைச் சொல்லோடு படு/ உண் என்ற துணை வினை சேர்த்து எழுதுவர் அல்லது பேசுவர், சான்றாக, the problem was solved- "அந்தச் சிக்கல் தீர்க்கப்பட்டுவிட்டது'/ "தீர்க்கப்பட்டது', என்று எழுதுவது வழக்கிற்கு வந்துவிட்டது. இவ்வாறு எழுதுவது மிகுதியாயிற்று. "அந்தச் சிக்கல் தீர்ந்தது', என்று எழுதுவதே தமிழ் மரபு. "ஈழத்தமிழர்கள் கொலை செய்யப்பட்டனர்' என்று வருவதும் அவ்வாறே. ஈழத்தமிழர் கொலையுண்டனர் என்று எழுதுவது தமிழ் மரபு. அவள் என்னால் காதலிக்கப்பட்டாள் என வருவது ஆங்கில மரபு. அவளைக் காதலித்தேன் என வருதல் தமிழ் முறை. காதலித்தது நான்தான் என்று இன்று சின்னத் திரையில் இடம்பெறுகிறது, ஆங்கிலத்தின் வழி நீங்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறீர்கள் (your are requested) என்றே பலரும் எழுதுகிறார்கள்/ பேசுகிறார்கள். ஆங்கில வழி வந்த மரபு இது. உங்களைக் கேட்டுக் கொள்கிறோம் என்பது தமிழ் it is broken என்பதும் அவ்வாறே எழுதப்பட்டு வருகிறது. "கட்சி இரண்டாக உடைந்தது' என்றே ஊடகங்களில் இடம்பெறு வதைக் காணலாம். (கட்சி உடைய அது என்ன பானையா, சட்டியா?) ஆங்கில மொழிபெயர்ப்பால் வந்த விளைவு) தன்வினை, பிறவினை என்று தமிழில் இலக்கண மரபு உண்டெனினும், அது வேறுவிதமாக எழுதப்படுவதும்/பேசப்படுவதும் ஆங்கிலம் வழி வந்த மரபாயிற்று.
பிரதி பெயர்ச்சொற்கள்
"எனது நூல்' எழுதுவது தமிழ் மரபு. ஆங்கிலத்தில் the book is mine என்பதனைக் கருத்திற்கொண்டு நூல் என்னுடையது என வருவது தமிழ்மரபெனினும், ஆங்கிலத் தாக்கத்தால் வழக்கில் பெருவரவானது. நானே விழுந்தேன்; நானாக விழுந்தேன் என வரும் சொற்றொடர்கள்கூட, நம் மொழி மரபெனினும், ஆங்கிலத்தில் I hurt myself என்ற சொற்றொடரின் தாக்கம் காரணமாக மொழிநடையில் இவ்வாறு வருவது இயல்பாயிற்று.
மொழி நிலையில் சில பண்பாட்டு மரபுகள் ஆங்கிலேயர்கள் வரவால் நம் பண்பாட்டு மரபுகள் மாறியமைந்துள்ளதைப் பலவாறு வகைகளில் விளக்கலாம். சான்றாக, சிகப்புக் கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது (he was given red carpet) என்ற வழக்கு ஆங்கில வழக்கை ஒட்டியது. (போர்த்தப் படவேண்டிய கம்பளம், கொடுக்கப்படுவதற்கா?) ஆங்கில நாட்டில் வெம்மை வரவேற்பு (warm welcome) தமிழிலும் அவ்வாறே வழங்கப்படுவது இயல்பாகிவிட்டது. மொழிபெயர்ப்பால் வந்த தாக்கம் இது. ஆங்கில நாட்டில் அவ்வாறு சொல்வது மரபு. வெப்பம் மிக்க நம் நாட்டில் அவ்வாறு வழங்குவது எப்படிப் பொருந்தும்? இவை போல்வனபல, ஆங்கில மொழியின் தாக்கத்திற்கு உட்பட்டு வழக்கில் புகுந்துள்ளன.
பெயரில் விடுபாடு
மாட்சிமைக்குரிய பெயர்களின் இறுதி எழுத்தினைச் சிதைத்து வழங்கும் வழக்கம்கூட ஆங்கிலத்தாக்கத்தால் வந்ததெனலாம். பச்சையப்பர் கல்லூரி, பச்சையப்பா ஆனதும், விவேகானந்தர் கல்லூரி, விவேகானந்தா கல்லூரி ஆனதும் அழகப்பர் கல்லூரி, அழகப்பா ஆனதும் ஆங்கிலத்தால் ஏற்பட்ட விளைவாகும்.
சில சொற்றொடர்கள் ஆங்கிலவயமாதல் ஆங்கிலச் சொல்லை அப்படியே தமிழ்ப்படுத்தி எழுதுவதும், பேசுவதும் இற்றைநாள் போக்கில் மிகுதியும் இடம்பெற்றுள்ளது. சுஜாதா படைப்புகளில் இப்படிப்பட்ட ஆங்கிலவயமான மொழி நடை மிகுதி. நவீன எழுத்தாளர் பலரும் இந்நடையைப் பின்பற்றிவருவதைக் காணமுடிகிறது.
அவன் டெலிபோனித்தான் (He telephoned her )
அவன் ரஜினியின் விசிறி (He is Rajini's fan)
அவளைப் பார்த்துக் கண்ணடித்தான் (He eyed at her)
அவன் உணவு எடுத்துக்கொண்டான் (He took food )
சொற்கள் வழங்கும் முறை
எழுதும்போதும், பேசும்போதும் சில சொற்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. சான்றாக, முயற்சித்தான் (முயன்றான்) அருகாமை (அருகில்)போன்ற சொற்கள் இவ்வாறு வழக்கில் வருகின்றன. சொற்றொடர் அமைப்பிலும் ஊடகங்கள் பிழைபட எழுதவும், பேசவும் செய்கின்றன.செய்திகள் சொல்லப்படுவதிலும், தகவல்கள் காட்டப்படுவதிலும் பிழைகள் மலிந்துள்ளன. முதலமைச்சர் தன் கருத்தை வலியுறுத்தினார் (முதலமைச்சர் தம் கருத்தை) மாநில ஆளுநர் தன்னைச் சந்திக்குமாறு சொன்னார் (மாநில ஆளுநர் தம்மைச் சந்திக்குமாறு) நாடாளுமன்ற உறுப்பினர் தனது தொகுதிக்கான மேம்பாட்டுத் தொகையை அளிக்குமாறு கூறினார் (நாடாளுமன்ற உறுப்பினர் தமது தொகுதிக்கு) ஒவ்வொரு நகர்ப்புறங் களிலும் கழிப்பறைகள் கட்டப்படும் (ஒவ்வொரு நகர்ப்புறத்திலும்) கூட்டணியில் இடம்பெறு வதோ அல்லது இடம்பெறாமல் இருப்பதோ அக்கட்சிகளின் விருப்பம் (கூட்டணியில் இடம் பெறுவதோ இடம்பெறாமல் போவதோ) என எழுத்திலும், பேச்சிலும் இடம்பெறுவதைப் பார்க்கலாம்.
ஆங்கிலத்தில் ஹய்க் என்பதை மற்றும் என்று எழுதியும், பேசியும் வருகின்றனர். சான்றாக, அரசு ஊழியர்களுக்கும் மற்றும் ஓய்வுபெற்றவர் களுக்கும் அகவிலைப்படி உயர்கிறது (அரசு ஊழியர்களுக்கும் ஓய்வுபெற்றவர்களுக்கும்...) ய்ங்ஜ்ள் ழ்ங்ஹக் க்ஷஹ் என்பதனை செய்தி வாசிப்பது என்றே கூறுவதைக் காணலாம். செய்தி வாசிப்பவர் என்று வருவதை விரும்பாமல் அவர்களை அஃறிணை ஆக்கிவிடுதல் முறையாமோ? நாளை வேலைநிறுத்தம் காரணமாகப் பேருந்துகள் இயங்காது (பேருந்துகள் இயங்கா) என்பன இயல்பாகவே ஊடகங்களில் இடம்பெற்றுவிடுவதனை நாள்தோறும் செய்தி, காட்சி ஊடகங்களில் கண்டுவருகிறோம். மக்கள் தொலைக்காட்சி, தினமணி இதழ் ஆகியன தமிழை முறையாகத் தவறின்றிப் பயன்படுத்துவதை ஓரளவு மேற்கொண்டுள்ளன.
கணினிக்கான சொல்லாட்சிகள், தமிழில் அழகியதாய் வழங்கப்படுகின்றன. அவை மொழி நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பது வரவேற்புக்கு உரியனவாய் உள்ளன. சான்றாக, சுட்டி, செயலி, பொறுப்புத்துறப்பு முதலியவற்றைக் கூறலாம்.
இத்தகைய போக்குகள், பேச்சிலும் எழுத்திலும் புகுந்து புதிய சொல்லாக்கங்களை உருவாக்கி வழங்கப்படுவதைத் தகவல், காட்சி ஊடக உரையாடல் களிலிருந்தும், செய்தி ஊடகங்களிலிலிருந்தும் அறிந்துகொள்ளமுடிகிறது.
தமிழைப் பிழையின்றிப் பேசவும், எழுதவும் வேண்டும் என்று வற்புறுத்தினால் மட்டும் போதாது. கடமையுணர்ச்சியும், பொறுப்புணர்ச்சியும்கொண்டு செய்தி ஊடகங்களிலும், காட்சி ஊடகங்களிலும் தமிழின் நீர்மையைப் போற்றும்படி செய்யவேண்டும். தாய்மொழியைப் பாதுக்காக்கவேண்டும் என்பதனை உணரவும், உணர்த்தவும் செய்வோமாக!