உயிர்களின் நாகரிக வளர்ச்சியை மொழியின் பயன்பாட்டால் உணர்ந்து கொள்ளலாம். இதயத்தின் உணர்வுகளை, உடலின் தேவைகளை மற்றவர்களுக்குத் தெரிவிக்க மொழி முக்கியமானது. பறவைகள் கீச்சு ஒலியின் வழியாகக் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்கின்றன. விலங்குகள் பெருங்குரலெடுத்து முழங்கித் தன் தேவையை நிறைவேற்றிக் கொள்கின்றன. காகம் பேசுவதை ‘கரைதல்’ என்றும், மயில் மொழியை ‘ அகவுதல்’ என்றும், புலியின் ஓசையை ‘உறுமுதல்’ என்றும், யானையின் சத்தத்தை ‘பிளிறுதல்’ என்றும், நாய் கத்துவதை ‘குரைத்தல்’ என்று ஒவ்வொரு உயிரினத்தின் ஒலிகளை வகைப்படுத்தி வைத்திருக்கிறோம்.
சொல்லிக் கொடுத்துப் பழக்கினால் கிளிகளும் மனிதர்களைப் போலப் பேசுகின்றன. ஆனால் சுயசிந்தனைகளால் மனிதன் உரையாற்றும்போது எத்தனை நபர்கள் அந்தப் பேச்சில் தன்னைக் கரைத்துக்கொண்டு அவர்களைத் தலைவர்களாக ஏற்றுக்கொண்டிருக்கின்ற னர்! காதலியின் அன்பைப் பெற காதலனுக்குப் பேருதவி செய்வது அன்பு மொழிகள். ஒரு நாட்டின் ஆட்சியைப் பிடிக்க, தலைவர்களுக்குக் கைகொடுப்பது எழுச்சியுரை. கண்ணுக்குப் புலப்படாத கடவுளை மனக் கண்களில் கொண்டு வந்து நிறுத்துகின்றனர் சொற்பொழிவாளர்கள். இலக்கியத்தின் மீது அளவில்லா ஈடுபாடுகொள்ளச் செய்கிறது சிந்தனை அரங்கம். காயம்பட்ட மனத்திற்கு ஆறுதல் சொற்களை மருந் தாக்கித் தடவுகிறோம்.
இப்படி மனித குலத்தோடு ஒட்டி உறவாடும் பேச்சுக்கலையை எழுத்துக்கலையாக மாற்றும் அதிசயத்தை நிகழ்த்தியிருக்கிறது ‘ஔவை சொல் கேளீர்’ என்ற நூல். மொழி எழுத்து வடிவம் பெறும் சாதனை யைச் சாத்தியப்படுத்தி இருக்கிறது. தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர், பத்ம??ரீ விருதாளர், தமிழகத்தின் மேடைகளைத் தமிழ்ச் சொற்களால் அலங் கரித்தவர், தமிழிலக்கியத் துறைகளாயினும், ஆங்கில உரையாயினும் செம்மாந்த சீருரை நிகழ்த்தியவர், வாழ் நாளெல்லாம் தமிழாகவும், தமிழுக்காகவும் வாழ்ந்த பெருந்தகை முனைவர் ஔவை நடராசன். அவரின் தமிழ்ப் பொழிவுகள் நூலாக்கம் பெறவில்லையே என்ற தமிழ்ச் சமூகத்தின் ஏக்கத்தைப் போக்கியிருக்கிறார் அவரது மகன் ஔவை அருள். இயேசுபெருமான் சிலுவையில் அறையப்பட்ட மூன்றாவது நாளில் உயிர்த் தெழுந்ததுபோல, பெருமகனார் காற்றோடு கலந்து விட்ட நூறு நாள்களுக்குள் அந்தக் காற்றை நூலுக்குள் கொண்டுசேர்த்துள்ளார்.
வைணவ உலகில் நம்மாழ்வாரின் பாசுரங்களை உலகறியச் செய்யும் பணிகளில் தன்னை ஒப்புக்கொடுத்த வர் அவரின் சீடரான மதுரகவியாழ்வார். அவரைப் போல, தமிழறிஞர் ஔவை நடராசனின் மறைவுக்குப் பிறகு அவரின் செயலர் பொன்னேரி பிரதாப் இந்நூல் வெளிவர பெரும்பணி ஆற்றியுள்ளார். இந்த நூலைச் சிறந்த முறையில் வெளியிட்டுத் தமிழ்ச் சமூகத்திற் குத் தொண்டாற்றும் ??ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகத்தை எத்தனை பாராட்டினாலும் தகும். வேலூர் சந்திர சேகரின் தொகுப்புப் பணிக்குச் சற்றும் குறைவில்லாதது கலைமாமணி யோகாவின் ஒளிப்படங்கள்.
தொல்காப்பியம் தொட்டுத் தற்கால ஊடகம் வரை எல்லாப் பொருள் குறித்தும் உரைவீச்சு செலுத்திய வரின் மனசாட்சியாக விளங்குகிறது படைப்பு. சங்க இலக்கியத்திற்கான உரையையும், கவிச்சக்கரவர்த்தி கம்பனுக்கான விழாவும், தமிழறிஞர்கள் நூல் வெளியீடும், விருது வழங்குதலும், காலமாகிப் போனவர்களின் படத்திறப்பு நிகழ்வுகளும் ஒரே இடத்தில் பார்க்கவிரும்பும் எல்லோரும் இந்த நூலில் கரைந்துவிடுவர். ஒரு பல்கலைக்கழகம் உயிரோடு வந்து உரையாற்றியதைப்போல எத்தனை அரிய தகவல்கள்!
அணுவின் அளப்பரிய ஆற்றலைக் கண்டுபிடித்துச் சொன்ன அறிவியலாளர் ஐன்ஸ்டீனுக்கு புத்துணர்ச்சி யைக் கொடுத்தது வயலின் இசை. வயலினை இசைக்கக் கற்றுக்கொண்ட அவர் மனச்சோர்வு ஏற்படும்போது வயலின் வாசிக்கத் தொடங்கிவிடுவார் என்ற செய்தி கலையின் மகத்துவத்தை விவரிக்கிறது. அறிவியலுக்கும் கலைக்கும் தொடர்பு இல்லை என்று தவறாக நினைக் கும் மனிதர்களுக்கு இது ஒரு பாடம். வாழ்க்கையில் எவ்வளவு தூரம் சென்றிருந்தாலும் இளைப்பாறுதல் தரக்கூடிய தாய்மடி கலைகள் என்பதற்கு இதைவிட உதாரணம் சொல்லிவிட முடியாது.
தமிழகத்தில் கடந்த பத்தாண்டுகளில் ஏறத்தாழ இலட்சம் இளைஞர்களுக்குப் பாரதியார் பாடல் வரிகள் மனப்பாடமாகத் தெரிகிறது என்றால் அதற்குக் காரணம் ??ரீராம் நிறுவனம் நடத்தும் பாரதி விழா. இப்படி முக்கியமான தகவல்களைத் தருவதில் தேனீயைப் போலச் செயல்பட்டிருக்கிறார். ஒரு சொட்டுத் தேனை உருவாக்க எத்தனையோ மலர்களில் அமர்ந்துசெல்லும் தேனீயைப் போலத் தன் வாழ்வின் அனுபவங்களையும், வாசித்த நூல்களின் கருத்துக்களையும் பிழிந்து, தேன் துளியாகத் தந்துள்ளார் நடராசன். தமிழ்ப் பல்கலைக்கழகம் பாரதியார் பாடல்களின் பதிப்பை வெளியிட விரும்பியபோது, பெருமுயற்சி எடுத்துத் திருத்தமான பதிப்பாகக் கொண்டுவந்தவர் சீனி. விசுவநாதன். இவரை மகாகவி பாரதியாருடைய பெறாத மகனாக நூல் பேசும்போது தமிழர்களின் நன்றியுணர்ச்சியின் தொடர்ச்சியை உணரமுடிகிறது.
ஒரு பொருளை ஆராயும் விஞ்ஞானியைப்போல ஒரு வார்த்தைக்குப் பல்வேறு கோணங்களில் நின்று பொருள் ஆராய்கிறது புத்தகம். உயர்வான பொருளைக் குறிப்பதற்கு ‘செம்மை’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். செம்மை என்பதற்கு உண்மை, வாய்மை, மெய்ம்மை ஆகியவற்றின் கலவை என்று பொருள். எனவே செம்மொழியான தமிழ்மொழி உண்மைக்கு உண்மையும், வாய்மைக்கு வாய்மையும், மெய்ம்மைக்கு மெய்ம்மையும் பொங்கித் ததும்பும் என்று அருமையாக விளக்கப்படுகிறது. அதேபோல், தமிழகத்திலுள்ள ஓர் ஊருக்கு ‘மாநாடு’ என்று பெயர் இருப்பதாகச் சொல்லி வாசகரை வியப்பில் ஆழ்த்துகிறது. பழந்தமிழில் ‘கூடல்’ என்று அழைக்கிறோம். கூடல் என்றால் புலவர்கள் கூடி மகிழ்வது, அவ்வாறு கூடும்போது கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வர் என்றும் அதற்குச் சான்றாகச் சொல்லப்படும் கலித்தொகைப் பாடலும் பேச்சாளரின் புலமையை விளக்குகிறது.
சங்க இலக்கியத்தில் வரும் அகப்பாடல்களில் பிரிவு பற்றிய பாடல்கள் இருக்கின்றன. பொருள் முதலிய காரணத்தால் பிரிந்து சென்ற தலைவன் ஒரு குறிப்பிட்ட காலத்தைச் சொல்லி, அந்த நேரத்தில் வீடு திரும்புவதாக வாக்களித்திருப்பான். அதை நம்பிக் காத்திருக்கிறாள் தலைவி. தன் மீது கொண்ட விருப்பத்தால், சொன்ன காலத்தில் சொன்னபடி தலைவன் வருகிறான் என்பதைக் காட்டிலும் தமிழ்மீது கொண்ட ஆர்வம் என்று பேசுகிறாள் தலைவி. தலைவன் திரும்பி வருவதாகச் சொன்ன காலம் புலவர்கள் ஒன்றுகூடி, சங்கத்திலே விழா நடத்தும் காலம். புலவர்தம் கருத்துக்களைக் கேட்டு மகிழ, தமிழை நினைத்தபடி அவன் திரும்பி வருவான் என்று உறுதியோடு இருக்கிறாள் என்று விவரிக்கிறது. இப்படியெல்லாம் வகுப்பு நடத்துவதற்கு மீண்டும் அவர் பிறந்து வரவேண்டும் என்பதால் அவரின் சொற்பொழிவுகளை ஆவணப்படுத்திய முப்படைத் தளபதிகளான ஔவை அருளுக்கும், வேலூர் சந்திரசேகருக்கும், பொன்னேரி பிரதாப்புக்கும் தமிழ்கூறு நல்லுலகம் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறது.
ஒவ்வொருவர் வாழ்விலும் திருமணம் என்ற நிகழ்வு முக்கிய இடம் பிடித்திருக்கிறது. சமயம் பார்த்து, சாதி பார்த்து, பொருளாதார தகுதி பார்த்து நிச்சயிக்கப்படும் திருமணத்தில் மனப் பொருத்தம் என்பது பல நேரங்களில் கேள்விக்குறியாகி விடுகிறது. இதனால் மண வாழ்க்கை கசந்து போக, மண முறிவில் முடிகிறது. ஆனால் எண்ணும் தோறும் இன்பம் தரக்கூடிய மண வாழ்க்கையை எப்படி அனுபவித்திருக் கிறார்கள் தமிழர்கள் என்று வாசிக்கும் போது தவறவிட்ட வாழ்க்கையை எண்ணி மனம் ஏங்குகிறது.
புதிதாக மணமுடித்த தலைவி மகிழ்ச்சியாக இல்லறம் நடத்துகிறாளா என்று தெரிந்துகொள்ள அவளைப் பார்க்கவருகிறாள் தோழி. அவளுக்குப் பதில் சொல்லும் தலைவி கல்யாண வாழ்க்கையின் இனிமையை உரைக்கிறாள்.
இசைவாணர்கள் இசையில் புதிய புதிய நுட்பங்கள் கையாள்வதைப்போல, நாளுக்கு நாள் - வேளைக்கு வேளை -
பொழுதுக்குப் பொழுது இன்பம் பெருகி வாழ்கிறேன் என்கிறாள் தலைவி. வாழ்க்கை யின் இன்பத்தை - தேன் எனலாம், பால் எனலாம், தெவிட்டாத தீங்கனி எனலாம். ஆனால் இசையினுடைய நுணுக்கத்திற்கு இணையாகக் காதல் வாழ்வு இனிக்கிறது என்ற அகநானூற்றுப் பாடலை அறிஞர் பெருமகனார் விளக்கும் அழகே தனியழகு!
‘‘எண்ணு முறை நிறுத்த பண்ணினுள்ளும்
புதுவது புனைந்த திறத்தினும்
வதுவை நாளினும் இனியனால் எமக்கே”
என்ற இப்பாடல் கல்யாண நாளைக் காட்டிலும் தலைவன் இனியவனாக இருக்கிறான் என்று கூறி மகிழ்கிறது. இப்படி, கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைக் கக்கூடிய தமிழர் வாழ்வின் அகச்சான்று களாக இருக்கும் சங்கப் பனுவல்களை அடுத்த தலைமுறைக்குச் சரியான முறையில் விளக்குகிறது புத்தகம்.
புறநானூறு என்ற புறஇலக்கியத்தின் பெருமையை எண்ணும்போது, முத்தமிழறி ஞர் டாக்டர் கலைஞர் உரையின் சிறப்பை வாசித்து இன்புறலாம். போர்க்களத்தில் ஒரு சிறுவன் புறமுதுகில் புண்பட்டு இறந்திருக்கிறான் என்று கேள்விப்பட்டு, அவனைப் பெற்ற தாய் அழுத கண்ணீரோ டும், வாளோடும் போர்க்களத்திற்குச் செல்கிறாள். களத்தில் புறமுதுகு காட்டியிருந்தால், அந்தக் கோழைக்குப் பால் கொடுத்த மார்பகத்தை வெட்டிவிடும் வேகத்தில் தாய் வருவதாகப் பாடல் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் மகன் மார்பில் காயம் பட்டு வீரமரணத்தைத் தழுவி யிருப்பான்.
புறநானூற்றில் இல்லாத புதுமையாக முத்தமிழறிஞர் அவற்றை எப்படி மாற்றினார் என்பதே பெரும் புரட்சி! ‘‘வாள் இங்கே! என் மகன் புறமுதுகிட்டான் என்று கூறிய பொய்யன் நாவு எங்கே” என்று கேட்பார். இது புதுமையும்-
புரட்சியும் கலந்த தொடர்களாக இன்றும் நிலைத்து விட்டன. பழந்தமிழர் வீடுகளைப் பற்றிச் சொல்லும்போது ‘‘குடிசைதான் அங்கு வரிசையாய் வேல்கள் நின்றிருக்கும்” என்று கலைஞர் எழுதியிருப்பதையும் தவறாமல் எடுத்துக்காட்டுகிறது நூல்.
கலைஞரின் அன்பு மனத்திற்கு உதாரணம் தரும் செய்திகளும் இங்கு உண்டு. மக்கள் நலத்திட்டங்களைப் பற்றி மொழியப்படும்போது அதற்கு விதி இடம் தரவில்லை என்று சொன்னால், ‘‘விதியை மதியால் வெல்லத் தெரியாதா” என்று கேள்வி கேட்பாராம். மக்கள் நலத்திற்காக எதையும் எப்போதும் நிறைவேற்றுபவர் கலைஞர். திண்டுக்கல் அருகில் குஜிலிபாளையம் என்று ஒரு பகுதி இருக்கிறது. அதற்கான பொருள் தெரியாமல் இருக்கும் பட்சத்தில் அப்பெயரை மாற்றினால் நல்லது என்ற குறிப்போடு ஒரு கோப்பு அனுப்பிய கலைஞருக்கு, குஜிலி என்றால் குஜராத்திலிருந்து வந்து இங்கே குடியேறிக் கடைகள் வைத்திருக்கும் இடம் என்று பொருள், எனவே குறிஞ்சிப்பாளையம் என்று மாற்றினால் நலம் என்று ஔவை நடராசன் குறிப்பெழுதி அனுப்பியிருந்தார்.
ஒரு சொல்லைத் தமிழ்ச் சொல்லாக மாற்றும்போது வேறு பொருளைத் தரும் சொல்லாக மாற்றிவிடக்கூடாது. பங்கஜம் என்பதைப் பங்கயம் என்று மாற்றுவது போல, குஜிலி என்பதை குயிலம் அதாவது குயிலம்பாளையம் என்று மாற்றவேண்டும் என்று குறிப்பிட்ட மதிநுட்பத்தைச் சிலாகிக்கிறது.
உலகமே போற்றுகிற பேரறிஞர் அண்ணா வாயாற ‘அண்ணா’ என்று அழைக்கும் நபர் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் என்றும் புறநானூற்றின் எழுபத்தொரு பாடல்களை மொழிபெயர்த்து ஆண்டின் துவக்க நாளில் டாக்டர் ஜி.யு. போப், உ.வே.சா. வுக்கு அனுப்பி வைப்பார் என்றும் முக்கியமான தகவல் களைப் பகிர்ந்து கொள்கிறது. கடந்த 125 ஆண்டுகளில் புறநானூற்றுக்கு ஏறத்தாழ 30 பதிப்புகளைத் தமிழுலகம் கண்டுள்ளது. எனினும் சாலமன் பாப்பையா புறநானூற்றை ஏழு வகையாகப் பிரித்திருப்பதும், பாடல்களைச் சொற்பிரிப்போடும், வனப்புற எளிய விளக்கம் தந்திருப்பதும் கவனத்திற்குரியது!
இப்போது சாதிப் பெயர்களை ஐயர், முதலி, நைனார், நாயுடு, நாடார் என்று சொல்கிறோமே, இந்தப் பெயர் களுக்கெல்லாம் அந்தச் சாதி பெயர் இல்லை என்பதைக் காட்டுவதே சரவணப்பெருமாள் ஐயர் உரை. சரவணப் பெருமாள் ஐயர் வீர சைவ குலத்தில் பிறந்தவர். அந்த நாளில் ஆசிரியர் பெருமக்களை ஐயர் என்று அழைப்பார் கள். பழுத்த வைணவரான பெரியவாச்சான் பிள்ளை, பிள்ளை இல்லை. அறிஞர் உலகம் அனைவருக்கும் உகந்த பிள்ளை என்பதாலே ‘பெரியவாச்சான் பிள்ளை’ என்று அழைத்தனர். தேவாரம் அருளிய மூவரை, மூவர் முதலிகள் என்பார்கள், அவர்கள் முதலியார்கள் அல்லர்! திருவள்ளுவருக்கு திருவள்ளுவ நாயனார் என்று பெயர், ஆனால் அவர் நாயனார் அல்லர்! கம்ப நாடாரும் அப்படித்தான்! இப்படி எல்லாம் சாதியின் பெயர்கள் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு இல்லை என்பதுதான் சரவணப்பெருமாள் ஐயர் உரை.
உடலோடு மறைதல், சாகாக்கலை, வள்ளலார் மறைந்தது எப்படி என்ற மூன்று கருத்துக்களை உள்ளடக்கிய ஊரன் அடிகளார் நூலின் சாரத்தைச் சுவாரசியமாகத் தருகிறது நூல். இதிலே சொல்லப்பட்ட நுட்பங்களான சைவ நாயன்மார்கள் உடம்பை விடாது வாழ்ந்திருந்தார்கள் என்பதையும், ஆழ்வார்கள் பன்னிருவரும் இறவாத வாழ்வு பெற்றனர் என்பதையும் அடிகளார் எடுத்துக்காட்டிய பின்னரே உணரமுடிகிறது என்று விளக்குகிறது.
தமிழாற்றுப்படை என்ற நூலை மிகுந்த உற்சாகத் துடன் வரவேற்கும் ஔவை நடராசன், தனிப்பெரும் இலக்கணப் பெட்டகமாகத் திகழும் தொல்காப்பியத்தின் நுணுக்கத்தைக் காட்டுவதில் தொடங்கி தந்தை பெரியாரின் சிந்தனைச் செழுங்கதிரின் பெருமிதத்தைக் காட்டி முடிக்கும் இந்த நூலுக்குத் தமிழின வழிகாட்டி (தமிழாற்றுப்படை) என்பது பொருத்தமான பெயர் என்று மனதார பாராட்டுகிறார்.
சிற்பக் கலை பற்றிய நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும்போது, சிற்பக் கலையைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்றால் சித்திரக் கலை தெரிந்திருக்க வேண்டும், சித்திரக் கலைக்கு நடனக் கலை அவசியம், நடனக் கலையைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்றால் இசையில் பயிற்சி வேண்டும், கவிதை எழுதிப் பழகினால் இசைக் கலையை அறியலாம், கவிதைக் கலை கற்று வருவதல்ல என்று முடிக்கும் இடம் தனித்துவம் மிக்கது. இத்தகு சிறப்புவாய்ந்த சிற்பக் கலை குறித்த நூலை வை. கணபதி ஸ்தபதி எழுதியிருக்கிறார். ஆனால் பலரும் வடமொழிக் கலையாகவும், வடமொழி நூலி-ருந்து சிற்பக் கலையைக் கற்றதாகவும் பேசுவதை எண்ணி வருத்தப்படும் உரையாளர் எத்தனை கலைச் செல்வங் கள் வடமொழிக்கு ஏற்றுமதியாகி, அவர்களின் படைப்பாகப் பொய்யாகச் சித்தரிக்கப்பட்டுத் திரும்பி வருகிறது என்பதையும் வெறுப்புடன் பதிவு செய்துள்ளார்.
காதல் கோழையை வீரனாக்கிவிடும். முரடனை நெகிழ்ச்சி உடையவனாகவும், தன்னலம் கொண்டவனைப் பொதுநலவாதியாகவும் ஆக்கும். தேங்கிப்போன வேலைகளை வளர்ச்சியை நோக்கித் திருப்பும். அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கம் கொடுக்கும். சமூகத்தின் மீது அக்கறை கொள்ள வைக்கும். அது மட்டுமா! மொழியிலும் புலமை பெறவைக்கும். தமிழில் உரையாடத் தொடங்கினால், அதற்கான பதில் ஆங்கிலத் தில் அமைகிறது. மனத்திற்குப் பிடித்தவர் வேற்றுமொழி யில் உரையாடும்போது அந்த நபரைப் பிடித்திருப்பதால் அந்த நபர் பேசும் மொழியைக் கற்றுக்கொள்ள ஆர்வம் பிறக்கிறது. அப்படி ஆங்கிலப் புலமை பெற்ற ஒரு பெண், காதலியாகி, வாழ்க்கை இணையரானார், அதனால் ஆங்கிலப் புலமை ஏற்பட்டது என்ற தமிழ் அறிஞர் ஔவை நடராசனின் வாழ்க்கை அனுபவம் காதல் குறித்த புரிதலை ஏற்படுத்துகிறது.
வள்ளல்பெருமானைப் பற்றி அறிந்துகொள்ளும் வாய்ப்பு மகாத்மாவுக்குக் கிடைத்திருந்தால் தோரோ, டால்ஸ்டாய் என்பவர்களோடு சேர்த்து வள்ளலாரையும் தமது குரு என்று சொல்லியிருப்பார் அல்லது இவர் ஒருவரே எனது குரு என்று சொல்லியிருப்பார் என்றெல் லாம் வாசகனைப் பரவசப்பட வைக்கிறது படைப்பு. அங்கதன் என்றால் உடலைத் தருபவன் என்றும், மின்தூக்கியின் ஓரத்தில் ஒரு மாடத்தை அமைத்துப் புத்தகங்களைப் படிக்க வைக்கவேண்டும் என்று நேரு விரும்பினார் என்றும், செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தபோதும், தாயை இழந்து, விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் தந்தையும் சிறைச் சாலையில் இருக்க, பெற்றோர் இல்லாத பிள்ளையாகப் படித்து, பின்னர் நாட்டின் பிரதமரானார் இந்திராகாந்தி என்றும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். படத்திறப்பு விழாவில், இதுவரையில் கற்றுவந்த அரசியல் பாடத்தைத் திறக்கிறேன், வெறும் படத்தைத் திறக்கவில்லை என்றும் அரங்கேற்ற விழா உரைகள் என்றும் மொத்தத்தில் மின்னல் தெறிப்புகளாக விரிகிறது!