"இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு'
-என்பது வள்ளுவர் வாக்கு.
மயக்கம் தெளிந்து மாசற்ற உண்மையை உணர்ந்தால்தான் அறியாமை நீங்கி நலம் தோன்றும் என்பது இதன் பொருளாகும்.
உண்மையை அறிந்து தவறுகளை நீக்கும் அதிகாரம் கைக்கு வந்தும், ஒருவித மயக்கத் தில் மற்றவர்கள் மீது பழியைப் போடமுயலும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும், அங்குள்ள துணை முதல்வர் பவன் கல்யாணுக்கும் இந்தக் குறள் மிகப் பொருத்தமானதாகும்.
காரணம், இவர்களால் லட்டு விவகாரம், இப்போது திருப்பதி ஏழுமலையான் கோயில் நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையை அதல பாதாளத்தை நோக்கி உருட்டிவிட்டுக்கொண்டு இருக்கிறது.
ஆந்திரா, தமிழ்நாடு மட்டுமல்லாமல், இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் தொடங்கி, உலக நாடுகள் பலவற்றிலும் கூட ஏழுமலையானின் பக்தர்கள் இருக்கிறார்கள்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலை எந்த அளவுக்கு, பக்தர்கள் நம்புகிறார்களோ, அதே அளவுக்கு அந்தக் கோயிலில் விநியோகிக்கப்படும் பிரசாத லட்டையும் அவர்கள் புனிதமாகக் கருதுகிறார்கள்.
இப்போது அந்த திருப்பதி லட்டு தொடர்பாகக் கிளம்பியிருக்கும் வில்லங்க விவகாரம்தான் ஒட்டுமொத்த பக்தர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
திருப்பதி கோயிலில் விநியோகிக்கப்படும் லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தபட்டிருக்கிறது என்று அண்மையில் ஒரு அணுகுண்டை எடுத்து வீசி பேரதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. இந்த நிலையில் திருப்பதி லட்டில் 37 சதம் விலங்குக் கொழுப்பு சேர்க்கப்பட்டிருப்பதாக செய்திகள் உலவுகின்றன.
அதே சமயம், இந்த லட்டு விவகாரத்தில் தவறு செய்தவர்களைத் தண்டிப்போம் என்று அவர் கூறவில்லை.
கடந்தமுறை ஆந்திராவை ஆண்ட ஜெகன் மோகன் மீது அதிருப்தியை உருவாக்க சந்திரபாபு முயல்கிறார் என்று ஒரு தரப்பு கூறி வரும் நிலையில்,இந்தப் புகாரில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்று உரிய வகையில் விசாரணை நடத்தவேண்டியதே இப்போதைய தேவை. அப்படி குற்றம் நடந்திருந்தால் அதற்கு யார் காரணமானவர்கள் என்று கண்டறிந்து அவர்களுக்கு அதற்கான சட்டரீதியிலான தண்டனை வழங்கப்பட்டாக வேண்டும். இதைத் தான் ஒட்டுமொத்த நாடும் எதிர்பார்க்கிறது.
ஆனால்,பாவப்பட்ட லட்டுக்கு பரிகாரம் தேடுகிறேன் என்று களமிறங்கியிருக்கும் அம்மாநிலத்தின் துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண், "இந்த கலப்பட விவகாரத்திற்காக ஏழுமலையானிடம் மன்னிப்பு கேட்கப் போகிறேன்' என்று கூறிய படி, விஜயவாடாவில் உள்ள கனக துர்கா கோயிலில் 11 நாள் விரதத்தைத் தொடங்கி யிருக்கிறார்.
அதுமட்டுமல்லாது, இந்த சாக்கை வைத்துக்கொண்டு "சனாதன தர்மத்தை பாதுகாக்க தேசிய அளவில் வாரியம் அமைக்க வேண்டும்' என்று கோரிக்கைக் குரலை எழுப்பியிருப்பதோடு, சனாதனம் தர்மம் இழிவு செய்யப்படுவதைத் தடுக்க பக்தர்கள் அனைவரும் ஒன்றிணையவேண்டும் என்று, ஆன்மிக நம்பிக்கையாளர் களுக்கு கொம்புசீவி, பதட்டத்தை உண்டாக்கும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறார்.
ஆட்சி அதிகாரம் அவர்கள் கையில் இருக்கும்போது, அவர்களே விசாரணை உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதுதானே சரி. அதை விட்டுவிட்டு விரதம் என்றும் சனாதனத்தை காக்க ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் ஸ்டண்ட் அடிப்பதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்? அவரது இந்த அணுகுமுறையைப் பார்த்து ஏழுமலையான் பக்தர்கள் அனைவரும், அழுவதா சிரிப்பதா என்று தெரியாமல் திகைத்துப்போயிருக்கிறார்கள்.
பக்தர்களின் இந்த மனநிலையைப் பிரதிபலிக்கும் வகையில் கருத்து தெரிவித்த நடிகர் பிரகாஷ்ராஜ், பவனைப் பார்த்து "நீங்கள் துணை முதல்வராக இருக்கும் மாநிலத்தில்தானே இந்த சம்பவம் நடந்திருக்கிறது. குற்றம் புரிந்தவர்கள் யாரென கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுங்கள்.
அதைவிட்டுவிட்டு, ஏன் இந்த விவகாரத்தை தேசிய பிரச்னையாக ஊதிப் பெரிதாக்குகிறீர்கள்?' என்று கேள்வி எழுப்பினார்.
அவர் எழுப்பிய கேள்வியில் என்ன தவறு இருக்கிறது?
ஆனால் பிரகாஷ் ராஜுக்கு பதிலடி கொடுக்க முனைந்த பவன் கல்யாண் "இந்துக்கள் தாக்கப்படும்போது அவர்களை அமைதியாக இருக்கச் சொல்வது பாரபட்சமானது. எனது வீடு தாக்கப்படும்போது, நான் பேசக்கூடாதா?' என வில்லங்கமாகக் கேட்டிருக்கிறார்.
இந்த லட்டு விவகாரத்தின் மூலம் இந்துக்கள்மீதும் இந்து மதத்தின் மீதும் மிகப்பெரிய தாக்குதல் நடந்திருக்கிறது என்று அவர் சித்தரிக்க முனைந்திருக்கிறார். இதிலேயே பவனின் டேஞ்சரஸ் நோக்கம் வெளிப்பட்டுவிடுகிறது.
அதிகாரத்தில் இருக்கும் நீங்கள் நடவடிக்கை எடுங்கள் என்று சொன்ன பிரகாஷ்ராஜின் கருத்தை பவன், இப்படி மோசமாகத் திசை திருப்பப் பார்க்கிறார்.
இருந்தும்கூட பிரகாஷ்ராஜ், கொஞ்சமும் உணர்ச்சிவசப்படாமல், "பவன் கல்யாண் அவர்களே... உங்கள் செய்தியாளர் சந்திப்பு காணொலியைப் பார்த்தேன். நான் வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருக்கிறேன். இங்கிருந்து நான் ஊர் திரும்பியதும் உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கிறேன். அதுவரை எனது பழைய பதிவை படித்துப் பார்த்து, அதில் கூறியதை புரிந்துகொள்ளுங்கள்' என்று தெரிவித்திருக்கிறார்.
பிரகாஷ் ராஜ் எந்த இடத்திலும் லட்டு விவகாரத்தில் நடந்ததை நியாயப்படுத்தவில்லை. குற்றவாளிகளுக்கு ஆதரவாகவும் குரல்கொடுக்கவில்லை.
நடந்த தவறை நடவடிக்கைகள் மூலம் திருத்துங்கள். வெறுமனே, விரதம், பரிகாரம் என்று நேரத்தை வீணடிக்காதீர்கள் என்றுதான் பிரகாஷ்ராஜ் சொன்னார்.
இதிலே என்ன தவறு?
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு லட்டுக் கலப்படம் பற்றி பெரும் அதிர்வை ஏற்படுத்தியதும், துணை முதல்வர் பவன் கல்யாண் இந்த விவகாரத்தை வைத்து பக்தர்களைத் தூண்ட முயல்வதும் எதனால்? இவை எல்லாம் உண்மையிலே லட்டில் நடக்கும் கலப்படத்தைக் குறிவைத்து மட்டும் தானா? இல்லை ஆந்திராவின் முதல்வராக இருக்கும் சந்திரபாபு நாயுடுவிடம் திருப்பதி நெய் கொள்முதல் உள்ளிட்ட லட்டு தயாரிப்பு தொடர்பான அதிகாரங்கள் கைமாறவேண்டும் என்பதற்கான ஆசையும் அதிகாரப் போட்டியும் இதன் பின்னணியில் இருக்கிறதா?
இதை நாம் கேட்கவில்லை. இது ஏழுமலையான் பக்தர்கள் அனைவரிடமும் தோன்றுகிற பவர்ஃபுல் கேள்வி இது! இந்த விவகாரம் தொடர்பாக சு.சாமி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பது தனி டிராக்!
ஆன்மிகமும் பக்தியும் அனைத்து மக்களையும் ஒன்றுபடுத்த வேண்டுமே தவிர, ஒருவரோடு ஒருவர் மோதும் ஆபத்தை உருவாக்கிவிடக்கூடாது. அதேபோல் ஆட்சி அதிகாரம் இருப்பது குற்றங்களைத் தடுப்பதற்குத் தானே தவிர, கோவில் கோவிலாய் பரிகாரம் பண்ணுவதற்கு அல்ல.
_______________
நடிகைகள் சந்திக்கும் துயரம்!
இன்னொரு கவலைக்குரிய விவகாரம் குறித்தும் இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். சமூக ஊடகங்கள் எதைத் திறந் தாலும், அதில் ஆபாச விவகாரங்களே நிறைந்து கிடக்கின்றன. இளைய தலைமுறை இதையெல்லாம் தாண்டித்தான் தனக்கான நல்ல விஷயங்களை சமூக ஊடகங்களில் கண்டடைய முடியுமென்ற நிலை நிலவுகிறது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பரவலாக அதிகரித்து வரும் நிலையில், கேரளாவில் உள்ள திரையுலகப் பெண் நட்சத்திரங் களுக்கு அங்குள்ள சக நடிகர்களாலும் மற்றவர்களாலும் தொடர்ந்து தரப்பட்டு வந்த பாலியல் டார்ச்சர்கள், ஹேமா கமிட்டி அறிக்கை மூலம் வெளியாகி பலரையும் பெரிய அளவில் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
2017-ல் கேரள நடிகர்களால் நடிகை பாவனாவுக்கு நேர்ந்த மோசமான டார்ச்சர், அப்போதே ஊடகங்களில் பகிரங்கமானது.
இதைத் தொடர்ந்து, அப்போதே நீதிபதி ஹேமா தலைமையிலான கமிட்டியை கேரள அரசு அமைத் தது. இந்த கமிட்டியிடம் பாதிக்கப் பட்ட பெண் திரைக்கலைஞர்கள் பலரும் வாக்குமூலம் கொடுக்கத் தொடங்கினார்கள். இதன் அடிப் படையில் ஹேமா கமிட்டி தனது விசாரணை அறிக்கையை 2019-ல் கேரள அரசிடம் சமர்ப் பித்தது. இந்த அறிக்கை பற்றிய தகவல்கள் அண்மையில்தான் பொதுவெளிக்கு வந்திருக்கிறது.
திரைத்திறையில் உள்ள ஆண்கள் எந்த தயக்கமும் இன்றி பாலியல் உறவுக்கு அழைப்பதை யும், அதைத் தங்களின் பிறப்புரிமை போல் எண்ணிவந்ததையும், அந்த அறிக்கை அம்பலப்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் கேரள நடிகர்கள் பலரின் பெயரும் கசிந்த நிலையில், மலையாள நடிகர் சங்கத்தின் தலைவரான மோகன்லாலும் மற்றவர்களும் ராஜினாமா செய்திருக்கிறார்கள். நடிகர் சித்திக் நடவடிக்கைக்குப் பயந்து தலைமறைவாகியிருக்கிறார்.
இதேபோன்ற அதிர்ச்சி அனுபவங்கள் நம் கோடம்பாக்கத் திலும் இருப்பதாக இங்குள்ள நடிகைகளும் வாய்திறக்க ஆரம்பித் திருக்கிறார்கள்.
குறிப்பாக நடிகை ராதிகா, அந்த நாட்களிலேயே தங்கள் கேரவன் வாகனத்தில் கேமரா வைக்கப்பட்டிருந்ததாகச் சொல்லியிருக்கி றார். ஆனால் அவர் குறிப்பிடும் காலகட்டத்தில் கேரவனே அத்தனை பிரபலமில்லை என்கிறார்கள். அது மட்டுமல்லால் தன் கண்ணெதிரே ஒரு நடிகைக்கு ஒரு பெரிய நடிகர் டார்ச்சர் கொடுத்ததாகவும், அந்த நடிகர் அப்போது குடித்திருந்ததாகவும் சொல்லியிருக்கிறார்.
யாருக்கு பாலியல் கொடுமை நடந்தாலும் அதைக் கண்டிக்க வேண்டியது நம் அனைவரின் கடமை. ஆனாலும் சிலர் ஊடகப் பரபரப்புக்காக தாறுமாறாக எதையாவது சொல்வதை வாடிக்கை யாக வைத்திருக்கிறார்கள்.
எனவே இங்கும் இது குறித்த உண்மையான விசாரணையும் தவறு செய்தவர்கள்மீது கடும் நடவடிக்கையும் தேவை என்பதே நம் கருத்து.
அதேசமயம், ஊடகவாதிகள் சிலர் அடுத்தவர்கள் பற்றிய ஆபாச அவதூறு செய்திகளை இட்டுக்கட்டியும் புனைந்தும் வியாபாரம் செய்து கல்லா கட்டிவருகிறார்கள். குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், ஸ்டண்ட் நடிகர் பயில்வான் ரங்கநாதன் போன்றோர் பார்வையாளர்களின் சபலத்திற்குத் தீனி போடுவதற்கா கவே யூடியூப் நடத்தி வருகிறார்கள். நடிகைகள் குறித்து அவதூறாகப் பேசி பிரபலமடைந்துவந்த மருத்துவர் காந்தராஜ், விஷயம் சர்ச்சைக் குள்ளானதும் தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரியிருக்கிறார்.
இப்படிப்பட்டவர்களால் பெண்கள் சங்கடப்பட்டு வருவதோடு, தமிழ்ச் சமூகத்தின் மதிப்பும் கெட்டுவருகிறது.ஆபாச நோக்கம் கொண்ட யுடியூப்களுக்கு யார் கடிவாளம் போடுவது? சமூக வலைத் தளங்கள் ஆபாச விஷயங்களுக்கான களமாகாமல் யார் தடுப்பது?
கவலையோடு,
நக்கீரன்கோபால்