""முதலாளி இல்லியா?''
"இந்த பொழுது விடியிற நேரத்துல யாரு?'
கணக்குப்பிள்ளை சங்குண்ணி தலையை வெளியே நீட்டினார். அவருடைய முகம் நிறைய சோப்பு நுரைகள் இருந்தன.
""முதலாளியைக் கொஞ்சம் பார்க்கணும்
அவசரம்...''
முதலாளி பொழுது புலரும் வேளையில் எழக்கூடிய பழக்கத்தைக் கொண்டவர். கோழி கூவுவதற்கு முன்பே அவர் கண் விழித்துவிடுவார். அந்த விஷயம் தெரிந்ததால்தான் முதலில் இங்கு வந்தார். கட்டிலிலிருந்து எழுந்தவுடன் நேராக இங்கு கிளம்பினார். முகத்தைக் கழுவவோ ஒரு மடக்கு நீர் பருகவோ செய்யவில்லை. ஓரிரண்டு நாழிகைகள் நடந்தார். அதற்குப் பிறகும் பொழுது விடியவில்லை. சூரியனைக் காணவில்லை. வயலுக்கு மேலே வெளிறிய வெளிச்சம் பனியைப்போல படர்ந்து கிடந்தது.
வயல்களின் ஈரமான மெல்லிய காற்று வீசிக் கொண்டிருந்தது. கோழிகள் கண்களைத் திறந்து உரத்த குரலில் கூவ ஆரம்பித்தன. புலர்காலைப் பொழுதைப் பற்றியோ பனிப்படலத்தைப் பற்றியோ காற்றைப் பற்றியோ எதைப் பற்றியும் இப்போது நினைத்துப்பார்க்க முடியாது. பத்து முப்பத்தைந்து வருடங்களாக ஆயிற்றே இவற்றையெல்லாம் பார்க்க ஆரம்பித்து! முதலாளியை இப்போதே பார்க்கவேண்டும். இனி இங்கு வருவதற்கு முடியுமென்று கூறுவதற்கில்லை. அது மட்டுமே சிந்தனை...
ஒரு கண்ணாடியைக் கொண்டுவந்து சுவரிலிருந்த ஆணியில் தொங்கவிட்டு, சங்குண்ணி தாடியைச் சவரம் செய்ய ஆரம்பித்தார்.
சிங்கம், நரி ஆகிய உருவங்கள் செதுக்கப்பட்டிருந்த கனமான தூணின்மீது சாய்ந்து வாசலில் நின்று கொண்டிருந்தார். முதலாளி கண் விழிக்கவில்லையா? ஒருவேளை உணவு சாப்பிட்டுக் கொண்டிருப்பாரோ?
""முதலாளி என்ன செய்கிறார்? தயவு செய்து.''
""பணத்துக்குதானே? அப்படின்னா... இப்போ நீங்க போங்க. காலை ஏழரை மணிக்கு வந்து கேட்டா முதலாளி பணம் தரமாட்டார். இப்போ போய்ட்டு ஒரு பத்து மணி ஆகறப்ப மெதுவா இங்க வாங்க.''
""நான் நகரத்திலிருந்து வர்றேன்.''
""அப்படின்னா... நடந்து வரவேண்டாம். நகரப்பேருந்துல வாங்க.''
துருப்பிடித்த பிளேடு சொரசொரப்பான தாடியில் உரசும் சத்தம்...
""நீங்க காத்திருப்பதால பிரயோஜனமில்லை. நான் சொல்றேன்.''
பிறகும் காத்து நின்றிருந்தார். காரணம்- இனிமேலும் இங்கு வரமுடியாது. இது இறுதி வருகை... இனி எந்த சமயத்திலும் முதலாளியிடம் கடனாக பணம் வாங்கவேண்டிய சூழ்நிலை உண்டாகாதே! இப்போது புலர்காலைப் பொழுதல்ல. வானம் இளம்வெயிலில் குளித்து நின்றுகொண்டிருந்தது. நான்கு பக்கங்களிலுமிருந்தும் கோழிகள் கூவவும், காகங்கள் கரையவும் செய்தன. பறவைகள் கூட்டமாக வயல்களுக்கு மேலே நகரத்தை நோக்கிப் பறந்து கொண்டிருந்தன. நகரத்தில் தானியம் விற்பனை செய்யப்படும் கடைகளும் கடற்கரையும் இருக்கின்றன. கடற்கரையில் மீன்கள் இருக்கின்றன.
நின்று... நின்று கால் வலித்தது. சங்குண்ணி உட்காருமாறு கூறவில்லை. அவர் தாடியைச் சவரம் செய்துவிட்டு, குளித்து முடித்துவிட்டு வாசலுக்கு வந்து பத்திரிகையை வாசிக்க ஆரம்பித்தார். முதலாளியை எத்தனை மணிக்கு கொஞ்சம் பார்க்க முடிவுமென்று கேட்க ஆரம்பித்தார். அப்போது அவர் தோன்றினார். குளித்து முடித்து, இரட்டை மடிப்பு வேட்டி அணிந்து, உடல் முழுவதும் சந்தனத் தைப் பூசி நின்றுகொண்டிருந்தார்.
""முதலாளி...''
""யாரு அது?''
படிகளுக்கு மேலே நின்றவாறு முதலாளி கேட்டார்.
""நான்தான் முதலாளி... சதானந்தன் மாஸ்டர்.''
""என்னடா... இங்க வரக்கூடிய வழியை மறந் துட்டியா?''
முதலாளியின் முரட்டுத்தனமான சத்தம் படிகளுக்கு மேலே உருண்டு விழுந்தது.
""மறக்கல முதலாளி. கஷ்டத்தில் இருந்தேன்.
அம்மாவுக்கு உடம்பு சரியில்ல, மனைவிக்கோ...''
""கர்ப்பம்... இல்லியா?''
குளிக்கும்போது கழற்றி வைத்திருந்த எட்டு மோதிரங்களையும் எடுத்து ஒவ்வொன்றாக விரல்களில் அணிந்தவாறு முதலாளி படிகளில் இறங்கி வந்தார்.
""மத்தவங்களுக்கு கஷ்டங்கள் இல்ல... மனைவிகளுக்கும் கர்ப்பம் தரிக்கப்போறதில்ல...''
""தவறு என்னோடதுதான் முதலாளி, மன்னிக்கணும்.''
""மாஸ்டர்... மாசம் எத்தனைன்னு நினைக்கறே... ஒன்னோ ரெண்டோ இல்ல... ஏழு.''
""முதலாளி மன்னிக்கணும்.''
"மாதம் எத்தனை ஆனால் என்ன? வட்டி தருகிறேன் அல்லவா?' கேட்கவேண்டுமென்று தோன்றியது. அப்படியே இல்லையென்றாலும்... இனி எதற்குக் கேட்கப் போகிறார்? யாருக்காகக் கேட்கப் போகிறார்?
வேட்டியை முன்பக்கத்திலிருந்து விலக்கிவிட்டு, அரைக்கால் சட்டையின் பைக்குள்ளிலிருந்து காகிதப் பொட்டலத்தை எடுத்து முதலாளிக்கு நேராக நீட்டினார்.
""எண்ணிப் பாருங்க, முதலாளி.''
""எண்ணத் தேவையில்லை மாஸ்டர். எனக்கு நம்பிக்கை இருக்கு.''
""இருந்தாலும்...''
""இருநூறும் ஏழு மாசத்துக்கான வட்டியும் இருக்குதில்லியா?''
""இருக்கு முதலாளி.''
முதலாளி பணத்தை எண்ணிப்பார்க்கவில்லை.
அவருக்கு சதானந்தன் மாஸ்டரின்மீது நம்பிக்கை உண்டு. முதலாளிக்கு மட்டுமல்ல; பழகிய எல்லோருக்கும் அவரைத் தெரியும். இதுவரை ஏமாற்றியதில்லை. பக்குவமும் விவரமும் உள்ளவர்.
""நான் புறப்படட்டுமா?''
""என்ன இவ்வளவு அவரசம்? நாராயணீ...''
""எதுவும் வேணாம் முதலாளி...''
""ஒரு குவளை தேநீர் பருகுடா.''
""வேணாம்...''
விடைபெற்றுக்கொண்டு வெளியேறினார். வெயில் விழுந்து கொண்டிருந்த வயல்களின் வழியாக நடந்தார். ஒரு சுமையை இறக்கி வைத்துவிட்டார்.
அந்த அளவுக்கு மனநிம்மதி...
இனி பார்க்க வேண்டியது அப்துல்லா. ஏழாவது மைல் கல்வரை நடந்து, அங்கிருந்து பேருந்தில் செல்லலாம் என்று நினைத்திருந்தார். நடந்துகொண்டிருந்தபோது, பேருந்து விஷயத்தை மறந்துவிட்டார். அப்துல் லாவின் மாளிகைக்கு முன்னால்போய் நின்றபோதுதான் தெரிந்தது- ஓரிரண்டு நாழிகை தூரம் நடந்திருக்கிறோம் என்பதே.
பச்சை நிற சாயம் பூசப்பட்ட.. கோட்டையைப் போன்ற சுவர்களால் சூழப்பட்ட அப்துல்லாவின் மாளிகை வானத்திற்குக் கீழே பரந்து கிடந்தது. சூலங்கள் பதிக்கப்பட்டிருந்த, பூட்டப்பட்டிராத கேட்டைத் திறந்து நடந்தார்.
""இங்க யாரும் இல்லியா?''
உள்ளேயிருந்த திரைச்சீலையை விலக்கிவிட்டு, ரஷீத் வெளியே வந்தான்.
""வாப்பா இல்லியா மகனே?''
""போய்ட்டார் மாஸ்டர்.''
""எங்க போனான்?''
இவ்வளவு தூரம் நடந்து வந்தது வீணாகிவிட்டதோ? கடவுளே...
""அலுவலகத்துக்குப் போயிருக்கார் மாஸ்டர்...''
இனி சாயங்காலம்தான் அப்துல்லா திரும்பி வருவான். அதுவரை காத்திருக்கமுடியுமா? அதற்கான பொறுமை இருக்கிறதா? அலுவலகத்திற்குச் சென்று பார்ப்பதைத் தவிர, வேறு எந்தவழியும் தெரியவில்லை.
""மாஸ்டரா?''
தலையில் அணிந்திருந்த புடவையின் முந்தானைப் பகுதியை இழுத்தவாறு அப்துல்லாவின் மனைவி வெளியே வந்தாள். முகத்தில் ஆச்சரியம் நிழலாடியது. சமீபகாலமாக மாஸ்டர் ஏன் அங்கு வரவில்லையென்று அவள் கேட்கவில்லை. அப்துல்லாவுடன் கோபம் கொண்ட விஷயம் அவளுக்குத் தெரிந்திருக்கும். மூன்றோ நான்கோ நாட்கள் அல்லவே! இரண்டு மாதங்களாகி விட்டன.
""உட்காரலையா மாஸ்டர்?''
""நான் போகட்டுமா?''
""மனைவியும் குழந்தைகளும் நல்லா இருக்காங்களா?''
""ஆமாம்.''
""வந்தா சொல்றேன்... மாஸ்டர் வந்திருந்தார்னு.''
""நான் அலுவலகத்திற்குப் போய்பார்த்துக்கிறேன்.''
கேட்டை நோக்கி நடந்தார். நின்றால், அவள் இனிமேலும் எதையாவது கேட்டுக்கொண்டிருப்பாள். பேசிக்கொண்டு நிற்பதற்கேற்ற நேரமில்லையே! அப்துல்லாவை அலுவலகத்திற்குச் சென்று பார்ப்பதுதான் சரி. முதலில் அவனை வந்து பார்த்திருக்க வேண்டும். பிறகு முதலாளியைத் தேடிச் சென்றிருக்க வேண்டும். அப்துல்லா ஒன்பது மணிக்கு முன்னால் அலுவலகத்திற்குச் சென்று விடுவான் என்ற விஷயம் நன்கு தெரியுமே!
மர நிழலில் பேருந்து காத்து நின்றிருந்தது.
""பள்ளிக்கூடம் இல்லையா மாஸ்டர்?''
""போகல.''
""விடுமுறை எடுத்துக்கிட்டீங்களா?''
""எடுத்தேன்... கண்ணன் நாயர்... எடுத்தேன்.''
அதற்குப் பிறகு கண்ணன் நாயர் எதுவும் கேட்காமல் கடந்து சென்றார். வேட்டியின் நுனிப்பகுதியைக் கொண்டு கழுத்தின் பின்பகுதி வழியாக கீழ்நோக்கி வழிந்து கொண்டிருந்த வியர்வையைத் துடைத்தார். அதிர்ஷ்டம் என்றுதான் கூறவேண்டும்- பேருந்து உடனே புறப்பட்டது.
பியூனை உள்ளே அனுப்பி விவரத்தைக் கூறினார். பியூன் உடனே திரும்பி வந்தான்.
""இப்போ பார்க்க முடியாதுன்னு...''
""அவரசம்னு சொன்னேல்ல?''
""சொன்னேன்.''
""சதானந்தன் மாஸ்டர்னு சொன்னியா?''
""ம். எமன் வந்தாலும் இப்போ பார்க்கமுடியாதுன்னு சொன்னார்.''
அப்துல்லா இவ்வாறு கூறுவான் என்று நினைத் திருக்கவில்லை. எது எப்படியிருந்தாலும் பத்து... இருபது வருடத்தின் நட்புறவு இருக்கிறதே! அது இவ்வாறு முடிவுக்கு வரக்கூடியதா? அப்துல்லாவை இப்போதே பார்த்து பாதிக்கப்பட்ட உறவை சரிசெய்யவேண்டும். எது வந்தாலும் பரவாயில்லை.
சிறிதுநேரம் கடந்ததும் அப்துல்லா வெளியே வந்தான். பார்த்ததும் திகைத்து நின்றான். போயிருப்பார் என்று நினைத்திருப்பானோ?
""அப்து...''
எதுவும் பேசாமல் திரும்பி நடக்கப் பார்த்தான். பின்னால் சென்றார்.
""உங்கிட்ட நான் கொஞ்சம் பேசணும்...''
""யாரும் எங்கிட்ட இப்போ பேச வேணாம்.''
அப்துல்லா அறையில் மின்விசிறிக்குக் கீழே சென்று அமர்ந்தான்.
""அப்து... நீ என்னை மன்னிக்கணும்.''
""இதை சொல்றதுக்கா வந்தே?''
""ஆமா...''
அப்துல்லா முகத்தை உயர்த்தி மாஸ்டரின் கருத்து, தளர்ந்து போய்க் காணப்பட்ட முகத்தைப் பார்த்தான்.
என்னால் அப்படி மன்னிக்கமுடியாது. மனைவி யோடும் குழந்தைகளோடும் வாழ்ந்துகிட்டிருக்கிற நண்பர்களைப் பத்தி மோசமான வார்த்தைகளைச் சொல்றப்போ கவனமா இருக்கணும்.''
""நான் தெரிஞ்சே சொன்னேனா... தவறு செஞ்சிருந்தா மன்னிப்பு கேட்கிறேன்.''
""என் முகத்தில் கரியை அள்ளிப் பூசத்தானே நீ பார்த்தே?''
""மன்னிச்சிடு என் அப்து... நீ கொஞ்சம்...''
""வாயில நாக்கு இருக்குன்னு எதை வேணும்னாலும் பேசித் திரியலாம்னு நினைப்பு... அப்படித்தானே?''
அப்துல்லாவின் முகம் சிவந்தது. சிரிப்புகள் நடுங்க ஆரம்பித்தன.
""நான் உன் காலைப் பிடிக்கிறேன்.''
மாஸ்டர் திடீரென்று அப்துல்லாவுக்கு முன்னால் முழங்காலிட்டு அமர்ந்தார். அப்துல்லா பதைபதைத் துப் போய்விட்டான். மாஸ்டரின் குழி விழுந்த, ஈரமான கண்களைப் பார்த்தவாறு அவன் திகைத்து நின்றான்.
""என்ன முட்டாள்தனத்தை இங்க வெளிப்படுத்தற? யாராவது பார்த்தா...''
அப்துல்லா நாற்காலியிலிருந்து வேகமாக எழுந்து நான்கு பக்கங்களிலும் பார்த்தான்.
""என்னை மன்னிச்சிட்டதா சொல்லு...''
""எழுந்திரு... எழுந்திரு...''
அப்துல்லா மாஸ்டரின் தோளில் கையை வைத்தான்.
""நான் புறப்படுறேன். எனக்கு சந்தோஷம்...''
""தேநீர் பருகிட்டு...''
""வேணாம். எனக்கு திருப்தி அப்து. இனி நான் புறப் படட்டுமா.''
""சாயங்காலம் நான் அறைக்கு வர்றேன்.''
மாஸ்டர் தூரத்தில் எங்கோ கண்களைப் பதித்தவாறு நின்றிருந்தார். சட்டையின் ஓரப் பகுதியைக் கொண்டு முகத்தைத் துடைத்தவாறு தெருவில் இறங்கினார். பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தார். மணி பன்னிரண்டாகி விட்டது. உடனே பேருந்து கிடைத்துவிட்டால் இரண்டு மணிக்கு வீட்டை அடையலாம். ஒரு சுருட்டைப் பற்றவைத்து இழுத்தவாறு எதிர்பார்த்து நின்றிருந்தார்.
வீட்டிற்கு முன்னால் பேருந்தைவிட்டு இறங்கிய போது, பிள்ளைகள் பள்ளிக்கூடம் விட்டுபோய்க் கொண்டிருப்பதைப் பார்த்தார். சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்துவிட்டோமே! கடுமையான வெயிலில் நடந்து செல்லும் வாடித்தளர்ந்த இந்த பிள்ளைகளுக்கு மத்தியில் என் பிள்ளைகள் இருக்கிறார்களா? ஓடையில் கற்களை வீசி எறியும் பிள்ளைகளின் கூட்டத்தில் தினேஷன் இருக்கிறானா? நெஞ்சோடு புத்தகத்தைச் சேர்த்து வைத்தவாறு தலையை குனித்து நடந்து செல்லும் பாவாடை அணிந்த பெண்களில் என் ராதா இருக்கிறாளா?
படிகளில் ஏறி அவரைப் பந்தலின் நிழலின் வழியாக நடந்தபோது வாசலில் நின்றிருந்த அம்மா பார்த்தாள்.
""சதாவா?''
அம்மா ஆச்சரியப்பட்டாள். ஒன்றரை மாதத் திற்குப்பிறகு கடந்த சனிக்கிழமைதான் வந்திருந்தார். சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் தங்கிவிட்டு, நேற்றைக்கு முந்தைய நாள் திரும்பிச்சென்றபோது கூறினார்:
"இன்னும் மூன்று மாசத்துக்கு நான் இங்க வரமாட்டேன்'.
ஆனால்... மூன்று நாட்கள் கடப்பதற்கு முன்பே...
""என்ன? என்ன ஆச்சு?''
சதி வேகமாக வாசலுக்கு வந்தாள். முகத்தில் சந்தோஷத்தைப் பார்க்கவில்லை. பதைபதைப்புதான்...
""நலம்தானே? வயித்துவலி பிறகு வந்துச்சா?''
எதுவும் கூறாமல் முன்னறைக்குள் நுழைந்தார்.
""நல்லா இல்லைன்னா இங்க வரக்கூடாதா?''
முகத்தில் சந்தோஷத்தை வரவழைப்பதற்கும் சிரிப்பதற்கும் முயற்சி செய்தாள். அதற்குப்பிறகும் சதியின் முகம் பிரகாசிக்கவில்லை. அவள் அவருடைய முகத்தைப் பார்ப்பதற்கு தைரியமில்லாமல் தூணின்மீது சாய்ந்தவாறு வெளியே கண்களைப் பதித்தவாறு நின்றிருந்தாள்.
""இப்போ ஏன் இங்கே வந்தீங்க? எங்கிட்ட உண்மையைச் சொல்லக் கூடாதா?''
அவள் அவருடைய வெயில்பட்டுக் காய்ந்துபோய்க் காணப்பட்ட சரீரத்தையும், தளர்ந்துபோன ஈரமான கண்களையும் பார்த்துக்கொண்டே கேட்டாள்.
""காரணமில்லாம இங்க வரக்கூடாதா? என் மனைவியையும் பிள்ளைகளையும் பார்க்கறதுக்கு எனக்கு காரணம் வேணுமா?''
அருகில் சென்று கறுத்த பிளாஸ்டிக் வளையல்கள் அணிந்த கையைப் பிடித்தார்.
""மகனே... உனக்கு பசிக்கலையா?''
""குழந்தைங்க வரட்டும்.''
""குழந்தைங்க வந்து சாப்பிடுவாங்க. நீ வந்து ஒரு பிடி சோறு சாப்பிடு. அதுக்குள்ள குழந்தைங்க வந்துடுவாங்க.''
சமையலறைக்குச் சென்று பலகையிட்டு அமர்ந்தார். அம்மா சோறு பரிமாறினாள். கிண்ணத்திலிருந்து சோற்றை அள்ளி சாப்பிடுவதை கதவின்மீது சாய்ந்து சதி பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.
""ஏன் எங்கிட்ட மறைச்சு வைக்கிறீங்க? எதுவா இருந்தாலும் கொஞ்சம் சொல்லக்கூடாதா?''
""நீ கொஞ்சம் பேசாம இரு சதீ... சாப்பிடக்கூட விடலைன்னா...''
அம்மா திட்டினாள். சாப்பிட்டுக் கொண்டி ருக்கும்போது குழந்தைகள் வந்தார்கள். தினேஷனும் ராதாவும் ஒன்றாகச் சேர்ந்து வந்தார்கள். தொடர்ந்து சாப்பிடுவதற்குத் தோன்றவில்லை. கிண்ணத்திற்கு முன்னாலிருந்து எழுந்து, கிணற்றின் கரைக்குச் சென்று முகத்தையும் கையையும் கழுவிவிட்டு திரும்பி வந்தார். நடந்து தளர்ந்த தினேஷனைத் தூக்கி மடியில் அமர வைத்தார். ராதாவை இறுக அணைத்துக்கொண்டார். வெயிலில் நடந்ததால் அவருடைய உடலில் இளம் வெப்பமிருந்தது. பையிலிருந்து சாக்கலேட் பொட்டலத்தை எடுத்து தினேஷனின் கையில் கொடுத்தார்.
""நல்லா படிக்கணும்.''
அவன் தலையை ஆட்டினான்.
""அம்மா சொன்னபடி நடக்கணும்.''
""ம்...''
""அக்காவோட சண்டை போடக்கூடாது.''
தூணில் சாய்ந்து நின்றுகொண்டிருந்த சதியின் முகம் தாளைப்போல வெளிறிக் கொண்டிருப்பதை அவர் பார்த்தார்.
தினேஷனின் முன்தலையிலும் ராதாவின் கண்மை படிந்த கன்னத்திலும் முத்தமிட்டார். தினேஷனை மடியிலிருந்து கீழே இறக்கிவிட்டு, சதியின் அருகில் சென்றார்.
""நான் கிளம்புறேன். ஃபாஸ்ட் பாஸஞ்சருக்குப் போகணும்.''
அவள் எதுவும் கூறாமல் தலையை குனிந்து கொண்டு நின்றிருந்தாள். முகம் மேலும் வெளிறிப்போய்க் காணப்பட்டது. அவர் சிரித்தும், தோளை வருடியும் அவளை சமாதானப்படுத்த முயன்றார்.
""சிவராத்திரிக்கு வரப் பார்க்கிறேன்.''
அவர் அவளுடைய முகத்தைப் பார்க்கவில்லை- அதைக் கூறும்போது.
அப்போதும் அவள் அவரையே கண்களை அகலத்திறந்து பார்த்துக்கொண்டிருந்தாள்.
""அம்மா... நான் புறப்படுறேன்.''
குழந்தைகளும் அம்மாவும்வரை உடன்படி வந்தார்கள். சதி நிறைந்த கண்களுடன் வாசலில் நின்று கொண்டிருந்தாள். தெருவில் கால் வைத்ததும் திரும்பிப் பார்த்தார். அதேபோல நின்றி ருந்தார்கள்.
நகரத்திற்குத் திரும்பவும் வந்தபோது சாயங்காலம் ஆகிவிட்டிருந்தது. வீடுகளின் வாசலில் அமர்ந்து குழந்தைகள் இறைநாமம் கூறிக்கொண்டிருந்தார்கள். ஒரு சுருட்டைப் பற்ற வைத்து, குனிந்த தலையுடன் தளர்ந்துபோன கால்களை முன்னோக்கி வைத்தார்.
அறையின் நடுவில் போடப்பட்டிருந்த பாயில் வெள்ளை நிற விரிப்பு விரிக்கப்பட்டிருந்தது. கேளு நாயர் குத்துவிளக்கில் எண்ணெய்யை ஊற்றினார். செருப்பைக் கழற்றி வைத்துவிட்டு, பாயில் கால்களை நீட்டிப் படுத்தார். கேளு நாயர் தலைப்பகுதியில் அமர்ந்தார். அவர் மெதுவாக ராமாயணம் வாசித்தார். நீண்டநேரம் ஒரு யாக மந்திரத்தைக் கூறுவதைப்போல வாசித்துக் கொண்டிருந்தார். நள்ளிரவு வேளை ஆனபோது வாசித்து... வாசித்து அவருடைய தொண்டை அடைத்தது. சதானந்தன் மாஸ்டரின் இதயத் துடிப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டிருந்தது. மாஸ்டரின் முகம் அந்த நிமிடத்தில் வெளிறிக் கொண்டிருந்தது. இறுதியில் கேளு நாயர் வாசிப்பதை நிறுத்திவிட்டு, ராமாயணத்தை மடக்கி வைத்தார். அவர் மாஸ்டரின் குளிர ஆரம்பித்திருந்த கைகளை எடுத்து நெஞ்சில் குறுக்குவாக்காக சேர்த்து வைத்தார். மூடியிருந்த துணியை மாஸ்டரின் முகத்தில் இழுத்துவிட்டார். நடுங்கிக் கொண்டிருந்த கைகளால் மாஸ்டரின் கால் பகுதியிலிருந்த குத்துவிளக்கின் திரிகளை ஒவ்வொன்றாக எரிய வைத்தார்.