ரிசல்காட்டு நாயகர் ’கிரா.வின் மறைவு, இலக்கிய உலகை துயரத்தில் மூழ்கடித்திருக்கிறது. 98 வயதைக் கடந்து, தனது நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருந்த கி.ராஜநாராயணன் என்னும் கி.ரா, கடந்த 17லிந் தேதி இரவு, தான் வசித்து வந்த புதுவை லாஸ்பேட்டை இல்லத்தில் மரணத்தைத் தழுவினார்.

*

கி.ரா. இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பாக, கைப்பட ஒரு கடிதத்தை எழுதியிருக்கிறார். முற்றுபெறாத அந்தக் கடிதத்தில் தனக்கு ஏதோ நிகழப்போகிறது என்பதை உணர்த்தி இருக்கிறார் கி.ரா. அதில், தன் கைப்பட இப்படி எழுதியிருக்கிறார்....

“ராத்திரி இரண்டு மணி.

Advertisment

திடீரென்று முழிப்புத் தட்டியதும் வழக்கம் போல் கூப்பாடு போட்டு எழுப்புவேன் எல்லோரையும்.

kr

ஏதோ தப்புதான் நடந்து போயிருக்கு.

அனாதை ஆகிவிட்டேன் என்று தெரிஞ்து போச்சு...’

-தனது உலக பந்தமும் அறுபடப் போகிறது என்பதையும், தனி பயணமாகத் தான் செல்லப்போவதையும் உணர்ந்துதான் ’நான் அனாதை ஆகிவிட்டேன் என்று தெரிந்து போச்சு’ என்று எழுதியிருக்கிறார்.

இவரைப்போலவே கவிக்கோ

அப்துல்ரகுமானும், கவிஞர் நா.காமராசனும் கூட இறப்பதற்கு முன் தங்கள் மரணக்குறிப்புகளை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

கடந்த 30 ஆண்டுகளாக கி.ரா.வின் செல்லப் பிள்ளையாக இருந்த கவிஞர் புதுவை இளவேனிலோ, கி.ரா.வின் கடைசி நிமிடங்களை இப்படி விவரித்தார்.

”வழக்கம் போல் 17லிந் தேதி மாலை அவரைச் சந்திக்கப்போனேன்.

என்னைப் பார்த்து, நான் தூங்கியதும் நீ போ... என்றார். பிறகு பால் கேட்டார்.

ஆற்றிக் கொடுத்துவிட்டு, அவருக்கு வழக்கமான மருந்துகளையும் கொடுத் தேன். என்ன நினைத்தாரோ, திடீரென்று என் கையைப் பிடித்துக்கொண்டு.. நீ மனுஷன்யா... என்றார். அதுதான் அவர் பேசிய கடைசி வார்த்தை. அடுத்த கொஞ்ச நேரத்தில் அவருக்கு லேசாக மூச்சிரைத்தது. இரவு 11 மணியளவில் எங்கள் கண் எதிரிலேயே அவரது சுவாசம் மெதுவாக நின்றுவிட்டது. என்ன செய்வதென்றே தெரியாமல் சில நிமிடங்கள் ஸ்தம்பித்துப்போனோம்”

புதுவை அரசு, கி.ரா.வின் உடலை அரசு மரியாதையோடு 18லிந் தேதி மதியம், தமிழகத்துக்கு அனுப்பிவைக்க, இடைச்செவல் கிராமத்தில் 19லிந் தேதி பிற்பகல் தமிழக அரசின் மரியாதையோடு அவரது இறுதிச் சடங்கு நடந்தது.

இதுவரை இல்லாத வகையில் இரு மாநில அரசு மரியாதையைப் பெற்று, தனது மரணத்தையும் வரலாற்றுச் செய்தியாக்கி விட்டு விடைபெற்றிருக்கிறார் கி.ரா.

-ஆதன்