ஒரு பதிப்பாளர் உடல்நலக் குறைவால் காலமானார் என்று எளிதாக கடந்துபோக முடியவில்லை க்ரியா ராமகிருஷ்ணனின் மறைவை. 76 வயதைத் தொட்ட ராமகிருஷ்ணன் ’தற்கால தமிழ் அகராதி’-யின் செழுமைப்படுத்தப்பட்ட 3 ஆவது பதிப்பை வெளியிட்டுவிட்டு மறைந்திருக்கிறார்.
தமிழுக்கு அருங்கொடையாக இவர் தொகுத்த ‘தற்கால தமிழ் அகராதி’-யின் முதல் பதிப்பு 1992-லும் 2-வது பதிப்பு 2008-லும் வெளிவந்தது.
ஒரு அரசாங்கத்தின் மொழிசார் அமைப்புகளோ அல்லது அந்த மாநிலத்தின் பல்கலைக்கழகங் களோ,செய்யத் தவறிய ஒரு தமிழ்ப் பணியை ராம கிருஷ்ணன் செய்து முடித்திருக்கிறார். இந்த அகராதியை இந்த ஆண்டு இறுதிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என கடும் பணியாற்றி வந்தவரை ‘கரோனா’ தொற்றியது. சென்னை - ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார். கடும் மூச்சுத்திணறலுக்கு ஆளாகி செயற்கை சுவாசத்தின் உதவியோடு சுவாசிக்கும் நிலையிலும், தன்னுடைய பணிகளை மருத்துவமனை யில் இருந்தபடியே மேற்கொண்டு வந்தார் என்பதை நினைத்து நெகிழ்கிறது மனம். மருத்துவமனை கட்டிலில் படுத்திருக்கும் சூழலிலிலும், மூக்கில் உயிர்க்காற்று செலுத்தப்பட்ட நிலையில் மெதுவாக எழுந்து அமர்ந்து தன் கைப்பட கடந்த 13-ந் தேதி அன்று ‘ க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’யின் 3-வது பதிப்பை அவர் வெளியிட்டார். அவர் கண்களில் தான் நினைத்ததைச் சாதித்துவிட்டதன் உற்சாகம் சுடர்ந்தது. அப்போது கூட அவர் மீண்டு வந்துவிடுவார் என்றுதான் அவரது நண்பர்கள் நம்பினார்கள். ஆனால் அந்த வெளியீட்டையே தனது நிறைவு வெளியீடாக்கிக்கொண்டு அடுத்த மூன்றாம் நாள் அவர் மரணத்தைத் தழுவிவிட்டார். கொரோனா மரணம் என்பதால், அவருடைய உடலைக் கூட வீட்டிற்குக் கொண்டுசென்று அஞ்சலிசெலுத்த முடியவில்லை. அவரை நேசித்த எழுத்தாளர்களும் படைப்பாளர்களும் அவருக்கு அஞ்சலிலி செலுத்தத் தவித்த போதும், அவரது உடல் மருத்துவமனையில் இருந்து நேராக இடுகாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டு எரியூட்டப்பட்டுவிட்டது.
ராமகிருஷ்ணன் என்னும் அந்த சாதனை மனிதர், கணத்தில் ஒரு பிடி சாம்பலாகிவிட்டார். அவருக்குள் இருந்த அத்தனை கனவும் ஆர்வமும் காணாமல் போய்விட்டது. மருத்துவமனையில் இருந்த படியே அகராதியை வெளியிட்ட அவர், அதன் மகசூல் மகிழ்ச்சியைக் கூட அடைய முடியாதபடி ஆக்கிவிட்டது மரணம்.
*
30 ஆண்டுகளுக்கு முன்பாகத் தொடங்கிய அகராதிப் பணியைத் தன்னுடைய முதுமையிலும் வயதிலும் தளராது மேம்படுத்திக்கொண்டே வந்தார். தினமணியின் முன்னாள் ஆசிரியராக இருந்த ஐராவதம் மகாதேவன், தமிழ்த் தாத்தா உ.வே.சா பதிப்பித்த குறுந்தொகையை மீண்டும் உ.வே.சா. நூலகம் மூலம் வெளியிட விரும்பினார்.
அதற்குரிய செலவில் பெரும்பகுதியை அவரே ஏற்றும் கொண்டார். அத்தருணத்தில் அந்த நூலை வெளியிட க்ரியாவின் பதிப்பாற்றல் மேல் அவருக்கு இருந்த நம்பிக்கையால், ராமகிருஷ்ணணைத்தான் ஐராவதம் தேர்ந்தெடுத்தார் என்பது பதிப்பக உலகின் நேற்றைய வரலாறு.
’’மேன்மேலும் சிரத்தையோடு பதிப்பகத் துறையில் நான் ஈடுபடுவதற்கு இன்னொரு காரணம்… தினந்தோறும் ஆங்கிலம் மற்றும் தமிழில் தொடர்ந்து பல துறை சார்ந்த புத்தகங்களை நான் வாசித்துக்கொண்டே இருப்பதுதான்’’- ஒரு நேர்காணலில் க்ரியா ராமகிருஷ்ணன் இப்படி சொல்லியிருந்ததைப் போல அவர் வாசிப்பாளராகவும் தன்னை நிலை நிறுத்தியிருந்ததும் ஒரு காரணம்.
அதுமட்டுமல்ல… ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியின் செழுமைப்படுத்தப்பட்ட 3-வது பதிப்பு… இந்திய மொழிகளில் ஓர் அகராதியின் 3 பதிப்புகளிலும் பங்களித்த ஒரே மனிதர் என்ற பெருமையையும் ராமகிருஷ்ணனுக்கு பெற்றுத் தந்துள்ளது. வையாபுரிப்பிள்ளையின் தலைமையின் அவரது குழுவினர் உருவாக்கிய தமிழ்ப் பேரகராதி பெரிதும் மதிக்கத் தகுந்த படைப்பாகும். அதைத் தொடர்ந்து அதிகம் பேசப்படுவது க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதிதான். ராமகிருஷ்ணனுக்கு மொழி சார்ந்து, இலக்கியம் சார்ந்து, இசை சார்ந்து, பிற கலைகள் சார்ந்து தெளிவான தீர்க்கமான ஒரு பார்வை இருந்ததால்தான் அவரது வெளியீடுகள் அனைத்தும் தரம் உயர்ந்தவையாகவும் செம்பதிப்பாகவும் மிளிர்ந்தன.
க்ரியா வெளியிட்டிருக்கிறது என்பதற்காகவே புத்தகம் வாங்குகிற பழக்கம் கொண்ட ஒரு வாசகர் கூட்டத்தை க்ரியா உருவாக்கியிருந்தது.
‘க்ரியா பதிப்பகம்’ மட்டும் என்றில்லை ‘கசடதபற’ இதழ், ‘மொழி அறக்கட்டளை’, ‘ரோஜா முத்தையா நூலகம்’ ‘கூத்துப்பட்டறை’ போன்ற தமிழின் பல்வேறு அமைப்புகளின் உருவாக்கத்திலும் மேம்பாட்டிலும் ராமகிருஷ்ணனின் பங்காற்றலும் நிரம்பியிருக்கின்றன.
‘’எழுத்தாளர்கள் தருவதை அப்படியே அச்சிடுவது பதிப்பகத்தின் பணி அல்ல. அச்சிடுவது என்பது பதிப்புத் துறையில் ஓர் அங்கம் மட்டுமே. இறுதி வடிவமாகப் புத்தகம் வெளிவருகிறது…
அவ்வளவுதான். ஆனால் வெளியாவதற்கு முன்னால் நடக்கும் பல விஷயங்கள் படிப்பவர்களுக்குத் தெரியாது. அவ்வளவு ஏன்? எழுதியவர்களுக்கே அவையெல்லாம் தெரியாது. சொல்லிலின் பொருள் மற்றும் அமைப்பு இரண்டையும் கவனித்தல் அவசியம்’’ என்று வேறொரு நேர்காணலில் ராமகிருஷ்ணன் சொல்லிலியிருப்பதுதான் அவரது பதிப்புகளின் வெற்றி ரகசியம் என்பது நமக்கு புலனாகிறது. மற்றவர்களின் வற்புறுத்தலுக்காக, அல்லது கட்டாயத்துக்காக புத்தகம் போடுவது என்பதை தனது அகராதியில் இருந்தே அப்புறப்படுத்தியவர் ராமகிருஷ்ணன்.
காஃப்கா, காம்யு, தொடங்கி யானிஸ் வருஃபாகிஸ் வரை பொருளாதாரம் இலக்கியம், மருத்துவம், வேளாண்மை என பலவகை கருப்பொருட்களை கொண்ட அவர் வெளியிட்ட மொழிபெயர்ப்பு புத்தகங்கள் மற்றும் வெ. ஸ்ரீராம் மொழிபெயர்த்த ஆல்பர்ட் காம்யுவின் அன்னியன், தி, ஐராவதம் மகாதேவன் எழுதிய ‘Tamil Epigraphy’, சுந்தர ராமசாமியின் ‘ஜே.ஜே. சில குறிப்புகள்’, ‘நெல் சாகுபடி’, ‘கூலித்தமிழ்’, ‘அஞ்ஞாடி‘, ‘தாவோ தே ஜிங்’ இத்துடன் எழுத்தாளர் இமையத்தின் 6 நாவல்கள், 5 சிறுகதைத் தொகுப்புகள், ‘பெத்தவன்’ எனும் நெடுங்கதையையும் ‘க்ரியா’ வெளியிட்டு தமிழுக்கு பெருமை சேர்த்திருக்கிறது.
க்ரியா அகராதி, குட்டி இளவரசன் ஆகிய புத்தகங்கள் கண் மாற்றுத் திறனாளிகல் படிக்கக் கூடிய வகையில் ’பிரெய்ல்’ எழுத்து வடிவத்திலும் வந்திருப்பது க்ரியாவின் பெருமைகளுள் ஒன்று. கிரியா வெளியீடான தங்க.ஜெயராமன் எழுதிய ’காவிரிக்கரையில் அப்போது’ என்கிற நூலை படித்தால் பழைய தஞ்சாவூர் ஜில்லாவின் அனைத்து வாழ்வியல் கூறுகளும் திரட்டப்பட்டு வாசகனின் பசியாறலுக்கு பந்தி வைப்பதை உணரலாம். இதன் உள்ளடக்கத்தின் அருமைத் தெரிந்துதான் இப்புத்தகத்தை ராமகிருஷணன் வெளியிட்டுள்ளார் என்பதை நாம் அறியலாம்.
ப.ஜெகந்நாதனும் ஆர்.பானுமதியும் இணைந்து எழுதி ’க்ரியா’ வெளியிட்டுள்ள ‘தட்டான்களும் ஊசித்தட்டான்களும்’ என்கிற புத்தகம் இயற்கையின் ஒளிநெசவை நம் நெஞ்சுக்கு பக்கத்தில் கொண்டு வருபவை. இதே போல் ரே பிராட்பரியின் ‘பாரன்ஹீட் 451’ என்கிற மொழிபெயர்ப்பு புத்தகத்தை ’க்ரியா’ வெளியிட்டுள்ளது. எதிர்காலத்தில் நடப்பது மாதிரியான கதையம்சத்தைக் கொண்ட ஆங்கில விஞ்ஞான புனைகதையின் தமிழாக்கம் இது. ‘ஃபாரன்ஹீட் 451’ என்பது புத்தகங்கள் எரிவதற்கான உஷ்ண நிலையை குறிப்பதாகும். இந்த புனைகதையில் -எதிர்கால அமெரிக்காவில் புத்தகங்கள் வைத்திருப்பதும் படிப்பதும் தடைசெய்யப் பட்டுள்ளன. இச்சட்டத்தை மீறி யாராவது புத்தகம் வைத்திருந்தால் அவரைக் கண்டுபிடித்து உடனே மனநல மருத்துவமனைக்கு அனுப்பிவிடுவார்கள். அவர் வைத்திருந்த புத்தகங்கள் உடனடியாகத் தீ வைத்து எரிக்கப்படும். அப்படி தீ எரிப்பதற்கு என்று தனியே தீ எரிப்புத் துறை ஒன்று இருக்கும்…. இப்படியாக இந்த விஞ்ஞானக் கதை நீளும் பின்னர் இந்த நாவலையொட்டி பிரெஞ்சு இயக்குநர் பிரான்கோசிஸ் டிரவ்பட் என்பவர் இயக்கத்தில் ‘பாரன்ஹீட் 451’ என்ற ஆங்கிலப்படமும் வந்து புகழ்பெற்றது. இப்படி எங்கிருந்தோவெல்லாம் கலைச் செல்வங்களை தமிழ் வாசகனுக்கு கொண்டு வந்து சேர்த்தது க்ரியா.
தமிழ்ப் பதிப்புலகில் உள்ளடக்கத்திலும் வடிவமைப்பிலும் பிரதி மேம்படுத்தலிலும் பல முன்னோடி முயற்சிகளை மேற்கொண்ட ‘க்ரியா’ ராமகிருஷ்ணனின் மறைவு, தமிழ்ப் பதிப்புத்துறைக்கு இந்த ஆண்டு நேர்ந்திருக்கும் பேரிழப்புகளில் ஒன்றாகும்.