இரவில் முக்கால் பகுதியும் முடிவடையும் நிலையில், காலியாகக் கிடந்த அரங்கிற்குள் ஒரு இளைஞன் தயக்கத்துடன் நுழைந்து வந்தான்.
இடது பக்க ஓரத் திரைச்சீலைக்கு அருகில் "ஸ்விட்ச்' பாதிக்கப்பட்ட ஒரு பல்ப் மட்டும் மங்கலாக எரிந்துகொண்டிருந்தது. காலியாக இருந்த நாடக சாலையின் மூன்றாவது வரிசையில் ஒரு குடிகாரன் தன்னுடைய தலையை நெஞ்சில் சாய்த்து வைத்தவாறு உறங்கிக்கொண்டிருந்தான்.
எல்லா வார்த்தைகளும் உச்சரிக்கப்பட்டு முடிந்துவிட்டன.
எல்லா நடனங்களும் முடிந்துவிட்டன.
எல்லா பாடல்களும் நின்றுவிட்டன.
பார்வையாளர்களும் போய்விட்டார்கள்.
இந்த பொருத்தமற்ற நேரத்தில் நீ எதற்காக வந்தாய்?
மிகப்பெரிய வேடங்கள் குலுங்கிக் குலுங்கிச் சிரித்த, ஆரவாரித்த, கர்ஜித்த, சூறாவளியைப்போல ஆர்ப்பரித்த, சத்தங்கள் மயமாக இருந்த இந்த மேடையில் அமைதியான குணத்தைக் கொண்டவனும் இளைஞனுமான நீ எதற்காக வந்தாய்?
சுவரின்மீது துப்பிய கறைகள்... தரையில் சிகரெட் துண்டுகள்... ஒப்பனை அறையில் தேய்ந்துபோன தூரிகைகள்... நாடக சாலையில் குடிகாரனின் குறட்டைச் சத்தம்... காற்றில் பெயர்ந்து விழுவதற்குத் தயாராகிக்கொண்டிருக்கும் மேற்கூரையின் முனகல்கள்...
நீ இந்த அளவுக்கு ஏன் தாமதமாக வந்தாய்? எந்த வேடத்தில் நடிப்பதற்கு நீ நினைக்கிறாய்?
உன் கையில் ஆயுதங்கள் இல்லை.
உன் தலையில் கிரீடம் இல்லை.
உன் முகத்தில் சாயங்கள் இல்லை.
உன்னைப் பார்த்தால் ஒரு நடிகன் என்று யாரும் கூறமாட்டார்களே!
உன் பெயர் என்ன?
நான் கிருஷ்ணன்.
நான் நானாகவே நடிக்கிறேன். உன்னை எங்கோ முன்பொருமுறை பார்த்திருப்பதைப் போல எனக்குத் தோன்றுகிறது.
ஆனால், அது சாத்தியமல்ல. உனக்கு வயது குறைவு. இந்த முகத்தை நான் பார்த்திருக்கிறேனா? கஷ்டம்! எனக்கு ஞாபகம் வரவில்லையே?
ஆனால், ஒரு விஷயம் உண்மை... உன் பெயரை நான் முன்பு எங்கேயோ கேட்டிருக்கிறேன்.