கோவிலின் சமையல் கூடத்திற்குள்ளிருந்து வெளிவரும் அரிசி கழுவிய நீர் தேங்கிக்கிடக்கும் கால்வாய் முழுவதும் கொசுக்கள்... கால்வாயிலிருந்த அழுக்கு நீர் கிருஷ்ணன் ஆட்ட மண்டபத்தின் ஓரத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது.
சீவேலி எனும் தெய்வீக ஊர்வலத்தில் நடத்திக்கொண்டு செல்லப்படும் யானையின்மீது அமர்ந்து பகவான் இந்த அசுத்தத்தைக் காண்பார். கீழ்சாந்தி நம்பூதிரி மூக்கினை மூடிக்கொண்டு விக்கிரகத்தைப் பிடித்துக்கொண்டிருப்பார்.
பிரதட்சிணம் செல்லும் பாதையைச் சுற்றிலும் யானையின் சாணம் சிதறிக்கிடக்கிறது. யானை மூத்திரத்தின் வாசனையை எடுத்துக்கொண்டு வேகமாக வரும் மேற்குதிசைக் காற்று கோவிலின் பணியாட்களுக்கு தலைவலியை உண்டாக்காமல் இருப்பதே ஆச்சரியமான விஷயம்தான். சர்க்கரைப் பாயசத்திலிருக்கும் தேங்காய்த் துண்டுகளை வாய்க்குள் போட்டு மென்றுகொண்டி ருக்கும் கோவில் ஊழியர்கள், பக்தர்களுக்கு சீட்டுகளே இல்லாமல் பாயசம் விற்றுக்கொண்டிருப்பதைப் பார்க்கமுடிந்தது. அவர் சுவருக்குள் ஒருமுறை சுற்றிவந்தார்.
கூத்தம்பலம் என்றழைக்கப்படும் நிகழ்ச்சிகள் நடக்கும் கூடத்தில் அமர்ந்து யாரோ சுலோகங்களை வாசித்துக்கொண்டிருந்தார். "ஹரே நாராயணா! ஹரே முராரே..!'' கீர்த்தனை முழங்குவது வெளியே கேட்டது.
கூத்தம்பலத்தின் மர அழிகளின் வழியாக உள்ளே எட்டிப் பார்த்தார். ருக்மிணி சுயம்வரம் கதையை வர்ணித்துக் கூறிக்கொண்டிருந்தார். பார்வையாளர்களில் பெரும் பாலும் பெண்களே அதிகமாக இருந்தார்கள்.
பெண்களிலும் பெரும்பாலும் இளம் பெண்களே அதிகமாக இருந்தார்கள். அந்தத் திருமணக் கதையில் அவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் இருக்கிறார்கள் என்பதை அவர்களின் பிரகாசமான முகங்களிலிருந்து தெரிந்துகொள்ள முடிந்தது. அவர்களின் இருபக்கக் கன்னங்களும் அடிக்கடி சிவப்பதைப் போன்றும், கண்ணிமைகளில் ஈரம் அரும்புவதைப் போன்றும் தோன்றியது.
பாகவத சொற்பொழிவுக்கு எதிரே புல்லாங்குழலை ஊதிக்கொண்டிருக்கும் கிருஷ்ணனின் விக்கிரகம் இருக்கிறது. பீலித் திருமுடியுடனும், புல்லாங்குழலுடனும் நின்றுகொண்டிருக்கும் அந்த பளிங்கு உருவத்திற்கு கம்பீரத்தைவிட அழகு அதிகமாக இருப்பதைப்போல தோன்றியது. கிருஷ்ணனின் விக்கிரகத்திற்கு தெச்சி மாலை சாற்றப் பட்டிருந்தது.
சந்தனத் திரி, சாம்பிராணி ஆகியவை புகையும் வாசனை வெளியே நிற்பவர்கள் முகரக்கூடிய வகையில் காற்றில் கலந்திருந்தது. ருக்மிணி சுயம்வரத்தின் ஒவ்வொரு பகுதியையும் விளக்கி சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார் மிகுந்த ஈடுபாட்டுடன் உபந்யாசம் செய்யக் கூடிய சொற்பொழிவாளர். இடையே அவ்வப் போது அழகான பெண்களைப் பார்த்துக் கொண்டும், பார்வைகளை மாற்றிக் கொண்டும் உடல்மொழியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.
பக்தியின் உன்னதத்திற்குள் இறங்கிச் செல்லக்கூடிய... கருங்கல்லில் தட்டி ஓசை உண்டாக்கக்கூடிய தகர வாளியைப் போன்ற அந்த சொற்பொழிவைக் கேட்டுத் திருமண மாகாத கன்னிப் பெண்கள் சந்தோஷத் தில் திளைத்துக்கொண்டிருப்பார்கள்.
ஒருநாள் தான் ஒரு புராண சொற்பொழிவை நடத்தினால் என்னவென்று அவர் நினைத்தார். அவருக்கு பூணூல் இல்லை. பிராமண குலத்தைச் சேர்ந்தவரல்ல. பள்ளிச்சான் நாயர். இந்த ஆலயத்தில் நாயர்கள் பாகவத சொற்பொழிவு நடத்தியதாக காதில் விழுந்ததில்லை.
இதுவரை சூத்திரர்களுக்கு அது எதுவும் விதிக்கப்படவில்லை. வேதத்தை உச்சரிக்கும் சூத்திரனின் வாயில் கொதிக்கும் நெய்யை ஊற்றவேண்டுமென கூறுபவர்கள்தான் இப்போதும் பெரும்பாலான மனிதர்கள். இந்தக் கோவிலில் அது தான் நடக்கும்.
சிறிது நேரம் சொற்பொழிவைக் கேட்டார். புள்ளிமான் ஓய்வெடுக்கும் நாழிகை மணியின் கீழே சென்றார். இந்த கிருஷ்ண விலங்குகளை பகவானின் ஆலயத்திற்கு யார் கொண்டுவந்தது? இந்த கிருஷ்ண விலங்குகளின் நீளமான விழிகளைப் பார்த்து, ஆலயத்திற்கு வழிபாடு செய்யவரும்லி கண்களில் மைதேய்த்த இளம்பெண்கள் பொறாமைப்படட்டும் என்று பகவானும் நினைத்திருப்பார்.
பல குறும்புத்தனங்களை மனதில் நினைக்கக் கூடியவர்தானே இந்த நீல வண்ணன்! மான்கள் இரண்டுமே பெண் மான்கள். இன்னொரு ஜோடியும் இருந்திருந்தால், மேலும் நன்றாக இருந்திருக்கும்.
கிருஷ்ண விலங்குக்கு நிவேதனமாக அளிக்கப்பட்ட வாழைப் பழங்களையும் பாயசத்தையும் தரும், வழக்கமான ஜனைகள் பாடி வழிபாடு செய்யக்கூடியவர்கள் யாரும் அங்கில்லை. செவியைக் கூர்மைப்படுத்திக் கொண்டு, கொடியில் மலரவிருக்கும் மொட்டைப்போன்ற வாலின் நுனியை ஆட்டியவாறு, பிரசாதத்திற்காக கழுத்தையும் வாயையும் நாக்கினையும் நீட்டியவாறு வந்துகொண்டிருக்கும் மான்களின் உடல் அழகையே நீண்டநேரம் பார்த்துக்கொண்டு நின்றிருந்தார். அந்தக் காட்சி நீண்டநேரம் கண்ணில் மைதீட்டும் சுகமான அனுபவத்தை உண்டாக்கியது.
நேற்று மென்ற அறுகம்புல்லின் இதழ்களும் வேரும், மான்கள் வெளியேற்றிய எச்சமும் மட்டுமே வெட்டவெளியில் கிடந்தன. மடியில் வாழையிலையில் சுற்றிவைத்திருந்த நைவேத்திய மலர்களை ஒரு பிடி அள்ளி, மான்களுக்கு நேராக அவர் நீட்டினார்.
மென்மையான தாளைப் போலிருந்த நாக்கின் ஈரம் விரல்களின் மேற்தோலில் பட்டதும், தன்னை அறியாமலே கையை பின்னோக்கி இழுத்துக் கொண்டார்.
எங்கே கடித்துவிடப் போகிறதோ என்ற பயத்துடன் இரண்டு அடிகள் பின்னோக்கி வைக்க, மான்கள் யாருக்கும் பயப்படாமல் பக்தைகளான பெண்களைப்போல முன்னோக்கி வேகமாக வந்தன. "உங்களின் மடியிலிருக்கும் அனைத்தையும் நாங்கள் தட்டிப் பறித்துவிடுவோம்' என்ற அச்சுறுத்தல் அவற்றின் கண்களில் பதிந்திருப்பதைப்போல தோன்றியது.
பெண்மானுக்கு பயந்து ஓடிவிட்டாரென்று யாராவது கூறி கேலி செய்வதற்குமுன்பே அந்த இடத்திலிருந்து கிளம்பிவிட அவர் நினைத்தார்.
குறும்புத்தனமான குழந்தைகள் மதிலுக்குள் சிதறிப் போட்டிருக்கும் விதைகளையும் குன்றி மணிகளையும் மிதித்தவாறு பிரதட்சிணம் செய்யும் பாதையில் நடந்தார். மதிய பூஜைக்கு முன்பே வழிபட்டு விட்டு செல்லவேண்டும். பிறகு... இரவில் மீண்டும் வரவேண்டும். கிருஷ்ணன் ஆட்டம் என்ற நிகழ்ச்சி யைப் பார்க்கவேண்டும்.
தொடர்ந்து ஆட்டத்தில் ஈடுபடுவதால் முகப் பூச்சு, அரிசிமாவு ஆகியவை உண்டாக்கிய அடையாளங் கள்கொண்ட முகத்துடன் உள்ள நடிகர்களை மட்டுமே முன்பு பார்த்திருக்கிறார்.
கிருஷ்ணர் வேடமணியும் கோமனையும், யவனன் வேடம் கட்டும் அச்சு நாயரையும், பலபத்திரரின் வேடம்பூணும் கர்த்தாவையும், கம்ஸன் வேடமணியும் கோபாலன் நாயரையும் புதியேடத்து ஷாரொடி இளம்வயதில் சுட்டிக்காட்டிய ஞாபகம் மட்டுமே இப்போது மனதில் இருக்கிறது.
கிருஷ்ணன் வேடம் கட்டும் கோமனும், கம்ஸன் வேடத்தில் வரும் கோபாலன் நாயரும் உணவைத் தேடி அலைந்துதிரிகிறார்கள் என்ற உணர்வு தோன்றியபோது, நிகழ்ச்சியைப் பார்க்கவேண்டுமென்ற எண்ணம் கூட இல்லாமல் போனது.
அந்த வழிகள் முழுவதும் அடைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டுமென தோன்றியது. இரவில் பூஜை முடிந்ததும் நிகழ்ச்சிக்கு விளக்கேற்றுவார்கள். நிகழ்ச்சி நடக்கும் நாளன்று கிழக்கு திசை கோபுரத்திற்கு முன்னால் மேளசத்தம் எழும். மத்தளமும் ஜால்ராவும் செண்டையும் மணியும் இணைந்து உண்டாக்கும் ஓசைகளைக் கேட்டால், அன்று நிகழ்ச்சி இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.
மொத்தத்தில் ஒரு ஆரவாரம்... அபஸ்வரங்களின் தாளம், நாதம், லய அம்சங்கள்...
நிகழ்ச்சி நடைபெறும் அரங்கத்தின் காட்சிகளை மனதில் நினைத்தவாறு, மீண்டும் பிரதட்சிணப் பாதையைச் சுற்றிவந்தார். பிரதட்சிணப் பாதை முழுவதும் கருங்கல் செதுக்கல்கள் காணப்பட்டன. ஒவ்வொரு கல்லும் வழிபாட்டின் அடையாளம். கல்லை அன்பளிப்பாக அளித்தவர்களின் பெயர்களும் வருடமும் குறிக்கப்பட்டிருந்தன.
சதுரமாகவும் பெரியதாகவும் இருந்த அந்த கருங்கற்கள் மனிதனின் பாதங்கள் பட்டு மினுமினுத்தன. சில பகுதிகள் கண்ணாடியைப்போல இருந்தன. வெயில் அதிகமாகும்போது, கருப்பும் வெளுப்பும் கலந்த முத்துகள் நொறுங்கியதைப்போன்ற ஒரு ஒளிரும் மின்னலை அந்த கற்கள் வெளிப்படுத்தின.
பிராமணர் சூரிய வழிபாடு செய்யும் கிருஷ்ணனின் சிலைகளுக்கு அப்பால், பனையோலையை மென்று தின்றுகொண்டிருக்கும் குட்டி யானை, வழியில் செல்பவர்களைப் பார்த்து தும்பிக்கையை உயர்த்தி மரியாதை செய்வது கண்களில் பட்டது. சற்று அருகில் போய் நின்றார். கூர்மையான பற்களும், சிவந்த நீர் வழிந்துகொண்டிருந்த பெரிய நாக்கும் பசியின் அறிகுறியை வெளிக்காட்டின.
யாராவதொரு ஆள் ஒரு பழத்தையோ, ஒரு அச்சு வெல்லத்தையோ, ஒரு கரும்புத் துண்டையோ வாயில் தந்திருப்பார்கள். அதன் வழக்கமான குணம்...
அப்போது வெளிக்காட்டும் நல்ல மனம் கொண்ட வர்களின்மீதுள்ள மரியாதை.
கோவிலுக்குள் நுழைந்தார். நடை திறப்பதற்கு நேரமாகும் என தோன்றியது. கோவிலுக்குள் இருந்த மண்டபத்திலும் படிகளிலும் ஆட்கள் நிறைந்திருந்தார் கள். புற்றீசல்களைப்போல மக்கள் நெருங்கி நின்றிருந்த னர்.
பலரும் கண்களை மூடிய நிலையில் நின்றிருந்தனர்.
சிலர் கண்களைத் திறந்துகொண்டு நின்றிருந்தனர்.
ஆச்சரியமும் ஆர்வமும்கொண்ட முகங்களை அதிகமாகப் பார்த்தார். எங்கிருந்து இந்த மக்கள் வந்து சேர்ந்திருக்கின்றனர் என்பதை நினைத்துப் பார்த்தார்.
இடுப்பில் கட்டியிருந்த அவருடைய ஈரமான வேட்டி உலர்ந்துவிட்டிருந்தது. இல்லாவிட்டால் பிரச்சினைதான்.
பிறந்த நாளிலிருந்து வயிற்றுவலி கொண்ட மனிதராக இருப்பதால், ஒவ்வொரு மாதமும் வழிபடுவதற்காக வருகிறார். காலையில் எதுவும் ஒழுங்காக சாப்பிடவில்லை. வெறும் காப்பியை மட்டும் பருகியிருந்தார். நேரம் அதிகமாகிவிட்டது.
அஷ்டபதியின் சுலோகங்கள் காதுகளில் வந்து விழுந்தன.
சிறிது நேரம் வயிற்றுவலி தெரியவில்லை. அனைத்து வேதனைகளும் முடிவுக்கு வந்து, மனம் மென்மை யாகி விட்டதைப்போல கண்களை மூடினார். அதிக நேரம் படிகளுக்கருகில் கண்களைமூடி நின்றுகொண்டி ருப்பதற்கு முடியவில்லை.
சமையல் கூடத்தில் சமைக்கவேண்டிய, பெரிய பாத்திரத்தில் கழுவியெடுத்த புழுங்கலரிசியைச் சுமந்து கொண்டிருக்கும் கீழ்சாந்தி நம்பூதிரிகளின் வியர்த்த சரீரங்கள்...
கூட்டத்தில் சிக்கி அசுத்தமாகிவிடக் கூடாதென் பதற்காக அவருக்கு வழியை உண்டாக்கிக்கொடுக்க வேண்டியிருந்தது. இடையே அவ்வப்போது கண்களைத் திறந்தபோது, பாட்டின் இசை மனதிலிருந்து விலகிச்சென்றது.
ஒரு நிலையில் இல்லாமல்போன மனதில் சபல சிந்தனைகள் நுழைந்தன. குடும்ப வாழ்க்கையில் மூழ்கிய மனிதர் என்பதால், நெற்றியில் சந்தனக்குறி வைத்திருக்கும் அழகிய பெண்களின் புருவங்களில் தேய்க்கப்பட்ட மையையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்.
உயிர்ப்புடன் காணப்பட்ட... ஈர்க்கக்கூடிய விஷயங் களைச்சுற்றி மனம் அலைபாய்ந்தது. அழகிய சங்கிலிகள் அணிந்த அளவெடுத்த மார்பகங்களைப் பார்த்தார். உருட்டியெடுத்த வாசனை சந்தனத்தைக்கொண்டு மிகவும் அருமையாகப் படைக்கப்பட்ட சரீரத்தின் அழகு... எந்தெந்த உறுப்புகளுக்கு அதிகமான ஈர்ப்புசக்தி இருக்கிறதென்பதைக் கூறமுடியாது.
மகாராஜாவின் அரண்மனையைச் சேர்ந்த, எதிர் கால கணவனைத் தேடும் ராஜகுமாரிகள் வழிபடு வதற்காக வந்திருக்கிறார்கள். ரவிக்கையோ மார்புக் கச்சையோ இல்லை. மெல்லிய ஜாரிகையாலான துணி மட்டும் மார்புப் பகுதியில்... அதன்மீது ஒட்டியிருக்கும் நீலநிற பொட்டு... காலடிகள் தெரியவில்லை. மண்டபம் மறைத்திருக்கிறது.
பூஜை செய்வதற்காக வந்திருக்கிறார்கள்- பணிப் பெண்களுடன். நடை திறப்பதை எதிர்பார்த்து நின்றிருக்கிறார்கள். வழிபாடு செய்தபிறகே அந்த இடத்திலிருந்து கிளம்புவார்கள்.
"அரண்மனையைச் சேர்ந்தவர்களும், அரண் மனைக்கு வேண்டியவர்களும் மட்டுமே அருகில் நின்று தொழமுடியுமா?'' யாரோ ஒரு ஒழுக்கசீலர் அனைவரும் கேட்கத்தக்க வண்ணம்... யாரிடம் என்றில்லாமல் கூறினார். மஞ்சள்நிற ஆடை காவலாளி கழுத்தைப் பிடித்து கிழக்குதிசை வாயிலின் வழியாக கிழவரை வெளியே தள்ளிவிட்டான்.
"ஹரே நாராயணா... ஹரே நாராயணா... வைகுண்டவாசா... சரணாகத வத்சலனே'' தொண்டைக்குள்ளேயிருந்து பகவானின் நாமங்கள் உச்சத்தில் முழங்கின. நடை திறந்துவிட்டார்கள் என தோன்றியது. மணிகளின் சேர்ந்தோசை உரத்து ஒலித்தது. மண்டபம் தலைகளால் நிறைந்தது.
சந்நிதியின் நடையை மறைத்து நின்று கொண்டிருக்கும் மனிதர்களின் பின்பகுதிகளாலான மதில் காரணமாக பகவானின் பீலித்திருமுடியை அவரால் பார்க்கமுடியவில்லை. நெருக்கிக்கொண்டும் தள்ளிக்கொண்டும் இருந்தார்கள். கூட்டத்தில் சிக்கிய அவர் தடுமாறி விழுந்தார். அணிந்திருந்த வேட்டி அவிழ்ந்துவிட்டது. இடுப்புப் பகுதியில் செருகி வைத்திருந்த காசுப் பொட்டலம் தரையில் சிதறியது. தரையில் சிதறிய காசுகளைப் பொறுக்குவதற்காக குனிந்த அவரின் முதுகிலும் தலையிலும் பக்தர்களின் பாதங்கள் தொடர்ந்து பதிந்தன. அவர் உரத்த குரலில் பகவானை அழைத்து அழுதார்.
ஆரவாரத்திற்கு மத்தியில் அந்த சத்தத்தை யாரும் வெளியே கேட்டிருக்கமாட்டார்கள்