கொங்கு நாட்டின் தெற்கு, கிழக்கு அண்டை நாட்டவர்களால் அடிக்கடி அரசியல்ரீதியாக மேலாதிக்கம் செலுத்தப் பட்டபோதும், புவியியல் வார்த்தைகளில் மற்ற நான்கு நாடுகளைவிடவும் கொங்கு நாடுதான் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. கொங்கு ஊரக மக்கள் தங்கள் புறச்சூழலின் குறிப்பிடத்தக்க தனித்தன்மைகளை நன்றாக அடையாளம் காண்பதுடன் அவற்றைத் தமது பாடல்களில் மீண்டும் மீண்டும் குறிப்பிடுகிறார்கள். இந்தப் பெருமித உணர்வைத் தங்கள் பாடல்களில் வர்ணித்துள்ள இந்தப் பகுதிப் பாணர்கள், நான்கு பக்கங்களும் கொங்கு நாடு மலைகளால் சூழ்ந்துள்ளதைக் குறிப்பிடுகிறார்கள்.
இந்த மரபின்படி வடக்கே தலைமலையும் பருகூர் மலையும் உள்ளது. தெற்கே ஆனைமலை முதல் வராக மலை வரை கொங்குத் தொடர்மலைகளால் பிரிக்கப்படுகிறது. மேற்கே வெள்ளி மலை முதல் நீலகிரி வரை மலைத்தொடர் வரிசையாக நீள்கிறது. இடையே பாலக்காட்டில் ஒரு கணவாய் உள்ளது. கிழக்கில் தொப்பூர்மலை, சேர்வராயன் மலை, கொல்லிமலை ஆகிய மலைகள் எல்லையாக அமைந்துள்ளன என்பர். தென்கிழக்கு மலை மட்டுமே உயரமான மலைகளால் காக்கப்படவில்லை. இதனால் கொங்குவின் ஆக்கிரமிப்பாளர்கள் பலர் இத்திசையில் இருந்து வந்ததில் வியப்பில்லை என்பர். இதன் எல்லை காவிரிக் கரையில் உள்ள மதுக்கரை, கரூரில் இருந்து 25 மைல் கிழக்கே உள்ளது. இங்குதான் சேர, சோழ, பாண்டியர் தங்கள் எல்லையை முடிவு செய்யப் போரிட்டதாகக் கொங்குப் பாணர்கள் பாடியுள்ளனர். 3 விநாயகர் சிலைகள் இங்குள்ளன என்பர். (கொங்குக் குடியானவர் சமூகம், ப.27)
பாரம்பரிய கொங்குப் பகுதி 7500 சதுர மைல் பரப்புள்ளது. தற்போது கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு
மாவட்டங்கள் அடங்கும். கரூர், பழனி, நாமக்கல், திருச்செங்கோடு, சங்ககிரி வட்டங்களும் அடங்கும். கொங்கு மண்டலம் 24 சிறிய நாடுகளாகப் பிரிக்கப் பட்டுள்ளது. வடகொங்கு தென்கொங்கு என்றும் பாரம்பரியமாகப் பிரிக்கப்பட்டிருந்தது.
கொங்கு வரலாறு
பத்தாம் நூற்றாண்டுவரை கொங்கு சிறிய பகுதியாக இருந்துள்ளது.
இங்குள்ள மக்கள் உழவுத் தொழில் செய்யாமல் வேட்டையாடுதல், மேய்ச்சல் ஆகிய தொழில்கள் செய்தே வாழ்ந்துள்ளனர். எனினும் இன்றும்கூட முக்கிய வணிகப் பாதைகள் இவ்வழியாகச் செல்கின்றன. ஒரு பாதை மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடங்கி, கொங்குப் பகுதியில் நுழைந்து, பாலக்காடு கணவாய் வழியாகச் செல்கின்றது. அங்கிருந்து கிழக்காகத் திரும்பி (காங்கேயம் வழி) கரூர் சென்று காவிரிப் படுகை நோக்கி செல்கிறது. மிளகுப் பொருள்கள், துணி, கனிமங்கள், இரத்தினங்கள் ஆகியவற்றை வண்டிகளில் ஏற்றி இப்பாதையில் கொண்டு சென்ற வணிகர் தொலைவில் உள்ள ரோம், எகிப்து ஆகிய நாடுகளில் விற்பனை செய்தனர். காங்கேயம் வடக்கில் உள்ள படியூரில் முக்கியமான வெள்ளை மரகதக் கல்லும் பச்சை மரகதக்கல்லும் வெட்டி எடுக்கப்படுகின்றன. இந்த விலைமதிப்புள்ள இரத்தினங்கள் சோழ மண்டலப் படுகைப் பகுதியிலுள்ள மக்களால் பெரிதும் உயர்வாக மதிக்கப்படுகின்றன. பழனி வந்து செல்வதற்கான பாதை இருந்திருக்க வேண்டும். மூன்றாவது வணிகப்பாதை வடகொங்கு பகுதியிலிருந்து சத்தியமங்கலம் வழியாகச் சென்றிருக்கலாம். ஒவ்வொரு வணிகப்பாதை நெடுகிலும் முக்கிய வேளாண் ஊர்களில் வணிகர்கள் தங்குவதற்கான சாவடிகள் இருந்துள்ளன, என ஆரோக்கியசாமி நூலும், சென்னை மாட்ட கெசட்டியரும், சென்ஸர் ஆப் இன்டியாவும் குறிப்பிடுகின்றன.
வாய்மொழி வரலாறு
முன்னொரு காலத்தில் ஓர் அழகான சேர இளவரசன் சோழ இளவரசியைத் திருமணம் செய்துகொண்டான். ஆனால் அதற்காக சேர அரசனின் ஆட்களின் உதவியுடன் கொங்குப்பகுதியை ஒரு புதிய வேளாண் குடியிருப்பாக மாற்றிக் காட்டுவேன் என்று உறுதி அளித்திருந்தான். இதற்காகச் சோழ அரசன், சுமார் 8000 வேளாளர்கள் கொண்ட படையை இளவரசன், இளவரசி ஆகியோரைக் கொங்குப் பகுதி வேடர்களும் கொள்ளையர்களும் தாக்குவதிலிருந்து பாதுகாக்கவும் வேளாண்மை அமைதியாக நடைபெறவும் உதவினார்.
இவர்கள் உள்ளூர் மக்களோடு போரிட்டு வெளியேற்றினர்.
இதன் விளைவாக சில அருமையான நிலங்களை இலவசமாகச் சோழ அரசர் இவர்களுக்கு வழங்கினார். இந்தக் குலங்களே இன்றைய கொங்குப் பகுதியில் கவுண்டர்கள் என அழைக்கப்படுகின்றனர்.’’
இக்கதைமூலம் கொங்கு வரலாறு குறிக்கப்படுகிறது. பர்ட்டன் ஸ்டெயின் கூறுவது போன்று சோழர்களின் அதிகாரத்தை இந்தப் பகுதிகளுக்கும் மேட்டு நிலம் மற்றும் வன மக்களுக்கும் இடையே விரிவுபடுத்தி வந்தனர். இதன்மூலம் பிந்தையவர்கள் வனங் களில் இருந்து வெளியேற்றப்பட்டு அங்கு வேளாண் சமுதாயங்கள் குடியேற்றப்பட்டன. தொடர்ந்து பல அரசர்கள் அலையலையாக கொங்குப் பகுதிக்குள் ஊடுருவியதன் விளைவாகவும் புதிய குடியிருப் புகள் உருவாகி இருக்கலாம். கிழக்குக் கடல் பகுதியை ஒட்டிய வேளாண்குடிகள் தொடர்ந்து படிப்படியான குடியேற்றங்களை அமைத்தனர்.
விரைவாகக் கட்டப்பட்ட கோயில்களில் பூசைகாரியங்களைக் கவனிப்பதற்காகப் பிராமணர்களும் கொண்டுவரப்பட்டனர்.
வணிகர்கள், நாவிதர், வண்ணார் போன்ற ஊழியப் பணியாளர் களும் குறிப்பிடப்படுகின்றனர். கங்கர் ஆட்சியின்போது கொண்டு வரப்பட்டனர். முதலியார்கள் கொங்குப் பகுதியில் தங்கி இவர்கள் நெசவு, வணிகம் ஆகிய தொழில்களில் ஈடுபட்டு வந்தன.
14, 15-ஆம் நூற்றாண்டளவில் கன்னட வணிகர்களும், விஜயநகரப் பேரரசு விரிவாக்கத்தில் தெலுங்குப் படை வீரர்களும் அதிகாரிகளும் வந்துள்ளனர். 17-ஆம் நூற்றாண்டு வாக்கில்தான் இடங்கை, வலங்கை பிரிவாக்கம் உருவாகத் தொடங்கியது.
கொங்கு நாட்டுத் தமிழ்
1991இல் டி.எம். காளியப்பாவின் கொங்குத்தமிழ், 2000இல் பெருமாள் முருகனின் கொங்கு வட்டாரச் சொல்லக ராதி, 2004இல் புலவர் மணியனின் கொங்கு நாட்டுத்தமிழ் ஆகியவை கொங்குத் தமிழை அறியச் செய்வன.
கொங்கு வட்டாரச் சொல் தொகுப்பு என்பது ஒரு மாபெரும் பணி, மொழி யியல் ஆய்வுக்குப் பெரும் பயன்தரும். உலக மொழிகள் பலவற்றுக்கும் தமிழே மூலமொழி; செம்மொழியாம் தமிழை அவற்றோடும் ஒப்பிட்டுப் பார்க்கவும், கால மாற்றத்துக்கு ஏற்ற புது இலக்கணம் காணவும் இத்தொகுப்பு பயன்தரும். இது சிறு முயற்சி. இன்னும் தொகுக்கப்பட வேண்டியவை உள்ளன. ஆர்வம் மிக்க இளைஞர்கள் முயலவேண்டும் என்கிறார் புலவர் மணியன்.
கொங்கு ஊர்ப்பெயர்கள்
சேலத்தான் சந்தையிலே பட்டுவந்து விக்குடதா என்று (த.நா.பா., ப.66) தாலாட்டில் சேலம் சந்தைப் பற்றிய குறிப்புண்டு.
ஆத்தூரு வண்டிகட்டி, அதமன்கோட்டை மாடு கட்டி சேலத்துச் சாட்டை தீட்டி, சேர்த்து ஓட்டினான் ரங்கசாமி (தி.பா., ப.69) பாடலில் ஆத்தூர் வண்டி, சேலத்து சாட்டைக் கம்பு, அதமன் கோட்டை போன்றவை குறிப்புண்டு.
சேலத்து வெல்லமோ (நா.பா., மெ.சு) ப.74)
சேலம் சக்கரை சித்தப்பா (நா.ப., 32)
குழந்தைப் பாடல்களின் வரிகள் சேலத்தின் கரும்பாலைகளில் தயாராகும் வெல்லம், சக்கரை ஆகியவற்றைப் பற்றி அறிந்துகொள்ளலாம்.
சேலத்து மாம்பழமாம் (நா.பா. (மெ.சு., ப.150) என்ற பாடல் சேலத்து மாம்பழம் பற்றி கூறும்.
சேலத்து மஞ்சளுக்குச் சீட்டெழுதி விட்டாக (கொ.நா.பா., ப.130)
சேலத்து நல்ல மஞ்சள் (த.நா.பா., ப.625) எனும் பாடல் வரிகள் சேலத்து மஞ்சளை சிறப்பிக்கும்.
ஆறு வண்டி நூறு சட்டம்
அம்பத்தெட்டு குத்துக்காலாம்
குத்துக்கால் பண்ணினவன்
கொல்லிமலைத் தட்டானாம்
(த.நா.பா., ப.128) என்ற பாடலில் கொல்லிமலை ஆசாரி வண்டி செய்வதின் வல்லமை வெளிப்படுகிறது.
நாட்டு வவுத்து வலி
நாமக்கல்லு பாக்குதமாம்’’
எனும் ஒப்பாரிப்பாடல் வரி நாமக்கல் மருத்துவச் சிறப்பை விளக்கும்.
பழக்கம் வழக்கம்
பழக்கம் என்ற தொழிற்பெயர் பழகுதல் என்ற வினையடியாக பிறந்தது. பழகுதல் என்றால் பிறர் எவரோ செய்துவரும் ஒரு செயலை நாம் எடுத்து கையாண்டு வந்து அதில் ஈடுபடுதல் ஆகும். வழங்குதல் என்னும் வழக்கமோ, நாமே பண்டை நாளில் இருந்து செய்து வந்த ஒரு செயலைச் செய்து அதில் ஈடுபடல் ஆகும். ஆகவே ஒன்று நாம் கடன் வாங்கிக்கொண்டது.
மற்றொன்று நம்முடைய பழைய உரிமையைக் கொண்டது.
வேனிற்கால விழாக்கள்
இளவேனிற் காலத்தில் குடியானவர்களுக்குப் புலங்களில் வேலை இல்லை. வீடுகளில் தானியம் நிறைந்திருக்கும். ஊர்கள் எங்கும் கொண்டாட்டம் தொடங்கும். ஒவ்வொரு நிறைமதியிலும் கோயில்களிலே திருவிழாத் தேரோட்டம் நடைபெறும். சில ஊர்களில் காமன் பண்டிகை நடத்துவார்கள். எரிந்த கட்சி எரியாத கட்சிப் பாட்டுப் போட்டி நடக்கும்.
வெயில் காலங்களில் திண்ணைகளிலே பாட்டுக்கதைகள் படிப்பார்கள். கோவலன் கதை, அண்ணன்மார் கதை படிப்பார்கள். தெரு எங்கும் ஆண் பெண் சகிதம் உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருப்பார்கள். தெருக்கூத்து, ஒயில்கும்மி முதலியன நடக்கும்.
மாரியம்மன் சாட்டு, அங்காளம்மன் விழா, மாகாளியம்மன் விழா, துரௌபதியம்மன் குண்டம், கூத்தாண்டை சாட்டு முதலியவை நடைபெறும்.
அப்போது ஊர்களில் வரிபோட்டு பணம் வசூலித்துத் திருவிழாக்களை நடத்துவார்கள். ஆட்டுப்பலி கொடுப்பதுண்டு. அப்போது இராட்டை, தெருக்கூத்து, பகல்வேஷம், கோலாட்டம், கும்மிகள் சிறப்பாக நடக்கும். பழனி, வெள்ளையங்கிரி கோவிலுக்குக் காவடி எடுப்பார்கள்.
இவற்றில் தீண்டாத வகுப்பார்களும் கலந்து கொள்வார்கள். பறை அடித்தலும் பூக்கம்பம் சுற்றி குரவைக் கூத்து ஆடுதலும் உண்டு. இளவேனில் காலத்து சித்திரையில் வருடப்பிறப்பு ஏற்படும். காலையிலேயே எண்ணை தேய்த்துக் குளித்துப் புது ஆடை தரித்து வேப்பம் பூவால் பஞ்சாமிர்தம் செய்து இறைவனுக்குப் படைத்து உண்டு பண்டிகை நடத்துவார்கள். வேப்பம்பூவே இளவேனிலைக் குறிப்பதாகும் (எங்கள் நாட்டுப்புறம், ப. 202-3) என்பார் கோவைக்கிழார்
பண்டிகைகள்
கொண்டாட்டங்களில் சிறிது சமயச் சாற்றைப் பிழிந்து சேர்த்துவிட்டால் அவை பண்டிகைகள் ஆகிவிடுகின்றன. கொண்டாட்டம் ஒருவித மாறுதலை ஏற்படுத்தும், நாடோறும் செய்கிற வேலையிலே அவை ஒரு வேறுபாட்டை உண்டாக்குகின்றன. இந்த வேறுபாடு மனிதனுடைய இயற்கைக்கு இன்றியமையாதது. அதனால் மனதிற்கு ஊக்கமும் உடலுக்கு ஓய்வும் ஏற்பட்டு பின்னால் சுறுசுறுப்போடு செய்ய வாய்ப்பு ஏற்படுகின்றது. மக்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை கொடுத்துக்கொண்டே இருக்கமுடியாது. குறித்த கெடுவுக்கு ஒருமுறை அவனுக்கு உற்சாகம் தரக்கூடிய ஓய்வோ வேறு மாறுதல்களோ கொடுத்துவந்தால் நம் வாழ்க்கை சிறப்படையும். அவன் மனதிற்கு அப்படிப்பட்ட உற்சாகம் தரக்கூடியது கொண்டாட்டம் அல்லது பண்டிகையாகும். அதில் அவன் ஈடுபட்டால் அவன் எளிதில் முன்னேற முடியும். இதனைச் செயல்முறையில் ஈடுபட்டு அதன் பயன்களை அறிந்த நமது முன்னோர் பலவித கொண்டாட்டங்களைப் பலவிதமான கெடுகளுக்கு ஏற்றபடி அவ்வப்போது ஏற்படுத்தியுள்ளார்கள். (எ.நா.,ப.189)
பொங்கல், ஆடிப்பெருக்கம், ஆயுதபூஜை, தீபாவளி, கார்த்திகை தீபம் போன்றவை முக்கிய பண்டிகைகளாகும்.
கொங்குச் சீர்கள்
தாய் வீட்டுச்சீர், காதுகுத்துச்சீர், தெரட்டிச்சீர், திருமணத்தில் மாமன் சீர், பொங்கல்சீர், திருவாதிரைச்சீர், இணைச்சீர் போன்றவை முக்கியமானவை.
ஊர்த்தலைவர்கள்
ஊர்த்தலைவர் மணியக்காரர், மணியம் என்றால் ஊர்த்தலைமை, பரம்பரைத்தொழில். வரிவசூல் செய்து தாசில்தாரிடம் சேர்ப்பிப்பது சிறு குற்றங்களை விசாரிப்பது, பெரிய அதிகாரிகளை வரவேற்பது எனக் கௌரவ வேலைகள் நிலச்சொந்தக்காரராய் இருப்பார். பண்ணாடி பண்ணையார் என்றும் அழைக்கப்படுவர். கணக்கன்தான் இவருக்கு அமைச்சன். கணக்குக்குப் பொறுப்பாளி, சாகுவளிகளையும் குறித்து வைப்பான். கணக்குகளைச் சரிபார்த்து தாசில்தாரிடம் அனுப்புவான். நிலங்களின் எல்லைக் கல்லைச் சரிபார்ப்பான். கணக்கன் சொன்னதே தெய்வவாக்கு. பண்டிகை நாட்டில் இலவசம் பெறுவான். பண்ணாடிக் கும் மாமூல் வாங்கித் தருவான். கர்ணம் என்று அழைக்கப்படுவான்.
வாத்தியார் பெயர் போனவர். நெடுங்கணக்கு முதல் கம்பராமாயணம் வரை கற்றுத் தருவார். வீட்டுத் திண்ணைதான் பாடசாலை. தரையில் மணலைப் பரப்பி அதில்தான் எழுதுவார். ஏடுகள் வைத்திருப்பார். சோதிடர் இருப்பார்.
தலையாரி மணியக்காரனுக்குச் சேவகன். கணக்கனுக்கும் மணியனுக்கும் வேவுக்காரன். தாழ்ந்த வகுப்பில் இருப்பவன். அனைத்து குடும்பத்தையும் அறிந்தவன். பித்தளை வளையம் போட்ட தடிக்கொம்பை வைத்திருப்பான் என்பார் கோவைக்கிழார். (எ.நா., ப.56)
கொங்கு உணவுகள்
காலை உணவில் பெரும்பாலும் இட்லி, இடியாப்பம் அல்லது உளுந்து, ராகி, கோதுமை, சோளம், தினை, சாமை, குதிரைவாலி போன்றவற்றால் சமைக்கப்படும் உணவை உண்பர். மதிய உணவில் சோறும் தயிரும் நெய்யும் மண்ணின் மணம் காட்டும் பருப்புச் சாறு, மிளகுச்சாறு, மிளகுக்குழம்பு, தழைரசம், கொள்ளுரசம், புளிக்குழம்பு, மோர்க்குழம்பு என இடம்பெறும். இரவில் இட்லி, இடியாப்பம் உண்டு.
விரத நாட்களில் சோறு, பருப்பு, குழம்பு, இனிப்புவகை, அவியல், கூட்டு, பொரியல், வடை, பாயாசம் ஆகிய வற்றைப் படையலிட்டு விரதம் இருந்து உண்பர். குலதெய்வ வழிபாட்டினைக் கருப்பசாமி, ராக்கியண்ண சாமிகளுக்குக் கடாவெட்டி ஆட்டுக்கறியுடன் கோழி முட்டையும் சமைத்து உண்ணப்படும்.
தேங்காய் ஒப்புட்டு, பருப்பு ஒப்புட்டு, கச்சாயம், சொய்யான், காரகச்சாயம், சந்தகையும், தேங்காய்ப் பாலும், புதுமணமக்களுக்கான உணவாகும். திருவாதிரை இனிப்புக்களி, பாவாழை போன்றவை இனிப்பு வகைகள். பெண் கருத்தரித்து ஏழாம் மாதம் பெற்றோர் ஏழு வகை சோறு, பலகாரங்களும் தயாரித்து தருவார் என்பார். ச. சந்திரகலா (கொ.வே.வ., ப.188)
மகப்பேறு காலத்தில் பச்சரிசி சாமை முறுக்கு செய்துதருவர். கடலைப் பருப்பு, ராகி, பாசிப்பருப்பு, தட்டைப் பருப்பு அடை செய்வர். முடக்கத்தான் தழையையும் சேர்த்துக் கொள்வர். சட்டினியாக பிரண்டை அல்லது கோவை இலையை அரைப்பர்.
ராகிப்பால் குடித்தால் தாய்க்குப் பால் சுரக்கும். வளைகாப்புக்குப் புளிசாதம், தயிர்சாதம், எலுமிச்சைசாதம், தேங்காய்சாதம், தக்காளிசாதம் அல்லது சாம்பார் சாதம் செய்வர்.
பூப்படைந்த பெண்களுக்கு முளைகட்டிய பயிர் களையும் கோழிமுட்டையுடன் விளக்கெண்ணெயும், ராகி, கேழ்வரகு புட்டு பச்சைக் காய்கறிகளையும் தருவர். மூத்தோர் வழிபாட்டிற்கு அகத்திக் கீரை, வடை, பாயாசம், அப்பளம் கூட்டுப் பொரியல் படைப்பர். காகம் உண்ட பிறகே உண்பர்.
பொங்கல் பண்டிகைக்கு முறுக்கு சுடுவர். போகிக்கு 16 வகையான காய்கறிகளுடன் அரிசி மாவும் கீரை வகைககளையும் சமைப்பர். மாட்டுப்பொங்கலுக்கு வெண்பொங்கலையும் சக்கரைப் பொங்கலையும் ஆக்கி தெய்வத்துக்கும் மாடுகளுக்கும் தருவர். காணும் பொங்கலுக்கு அசைவ உணவு செய்து உண்பர். விநாயகர் சதுர்த்திக்குச் சுண்டல், கொழுக்கட்டை; தைப்பூசத்துக்குப் பொங்கல், புளிசாதம், தயிர்சாதம், கூட்டுப்பொரியலுடன் மதிய உணவை அன்னதானமாக வழங்குவர்.
தாய்ப்பாலுக்காக வாரத்திற்கு ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்து குளித்து விட்டு, சூடாகக் களியும் அதற்கு கொள்ளுப் பருப்பு, முருங்கைக்கீரைக் குழம்பு அல்லது காடைக்குழம்பு வைத்து உண்கின்றனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட குழந்தைகளுக்குச் சோளம், கேழ்வரகு, ராகி, பச்சைப் பயறு, தட்டைப்பயறு, கம்பு, தினை, சாமை, கொள்ளு, வேர்க்கடலை ஒன்றாகப் போட்டு மாவாக அரைத்து பால் அல்லது வெந்நீரில் கலந்து கொடுப்பர்.
ஏலூர் மக்கள் காடைக்குழம்பை விரும்பி ராகி கம்பு, கேழ்வரகு போன்ற களி வகைகளோடு சேர்ந்து உண்பர் என்பார் க.பழனிவேல் (கொ.வே.வ., ப.191)
சேலம் மக்களின் சில மரபுகள்
வேட்டியைச் செம்மண்ணில் தோய்த்தே ஆண்கள் அணிவர். அழுக்கு தெரியாமல் இருக்கவே இவ்வழக்கம்.
தெய்வத்திற்கு முப்பூசை என ஆடு, பன்றி, கோழியைப் பலியிடுவர். தெய்வத்துக்குரிய நாட்களில் (திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி) புலால் உண்ண மாட்டார்கள்.
திருமண விருந்தில் கத்திரிக்காயும் பெரும்பயறும் சேர்த்தே குழம்பு வைப்பர்.
கைம்பெண்கள் வெள்ளாடை அணிவது வெள்ளாளர், முதலி, ஆதித்திராவிடர் சாதிகளுள் உண்டு. மொய் பிடிப்பது சடங்கில் ஒரு கடாவெட்டிக் கறிசோறு விருந்து வழங்குவர். (சேலம் மாவட்டம்: சில குறிப்புகள், ப.93)
கோவைக் கிழாரின் எங்கள் நாட்டுப்புறம் (1951)
1. ஊர்க்கட்டு, 2. நிலக்கட்டு, 3. தலைவர்கள், 4. குடிகள், 5. குடும்பங்கள், 6. இளவல்கள், 7. பெரியவர்கள், 8. பண்டிகைகள், 9. பழக்கங்கள், 10. வழக்கங்கள், 11. மக்கள் வழக்கு, 12. சமயநிலை, 13. புதிர்களும் பழமொழிகளும் என நாட்டுப்புறத்துப் பல்செய்திகளை ஒரே இடத்தில ஒழுங்காகக் கூறும்போது அவைகளிலிருந்து நல்லதொரு பண்பாட்டை அறிய முடியும். அந்த வகையில் இந்த முயற்சி எடுத்தாளப்படுகிறது, என்பார் கோவைக்கிழார்.
பிரெண்டாபெக், கோவைக்கிழார், நரசிம்மலு நாயுடு, பெரியசாமி தூரன், கு.சின்னப்பபாரதி, சு.கிருஷ்ணசாமி, சக்திக் கனல், பெ.தூரன் ஆகியோர் கொங்கு நாட்டுப் புறவியலுக்குப் பணியாற்றியுள்ளனர். பேரா.சி.மா.ரவிச்சந்திரனின் கொங்கு நாட்டுப்புறவியல் இரு தொகுதிகள் (2008) கொங்கு நாட்டுப்புறப் பண்பாட்டை அறிய பெரிதும் உதவுவன.