பானர்ஜி மரணத்தைத் தழுவி, இரண்டு வசந்த காலங்கள் கடந்து சென்று விட்டன. எனினும், என்னால் அந்தச் சம்பவத்தை மறக்க முடியவில்லை.
அப்படிக் கூறி விட்டால், போதுமா? அந்தச் சம்பவம் இப்போதும் என்னை நிலைகுலையச் செய்கிறது.
மலை ஏறும் செயலை வெற்றிகரமாக முடித்துவிட்டு, டான்ஸிங்கின் வழியாக காத்மாண்டுவிற்குத் திரும்பி வரும்போது, நான் அமைதியை இழந்திருந்தேன். என் இடது கால் குளிர்ந்து மரத்துப் போயிருந்ததாலோ, என்னைச் சுமந்திருந்த ஷெர்பாவிற்கு அருகில் வந்த டாக்டர் என் காலை அறுக்க வேண்டிய நிலை வரும் என்று பட்டேலிடம் கூறியதற்காகவோ நான் அமைதியை இழக்கவில்லை. என் கால் தப்பித்தது.
காத்மாண்டுவில் எடுத்த ஓய்வும், எனக்கு அங்கு கிடைத்த கவனிப்பும், "கங்கரீனி'லிருந்து என் இடது காலைக் காப்பாற்றின.
அதற்குப் பிறகும் நான் அமைதியற்றவனாக இருந்தேன். நேப்பாள் மன்னர் அளித்த அருமையான விருந்தில் கலந்துகொண்டபோதும், இந்திய தூதரகத்தின் வரவேற்பில் பங்கெடுத்தபோதும், திரைப்பட கேமராக்களுக்கு முன்னால் நின்றுகொண்டிருந்த நேரத்திலும், பத்திரிகை செய்தியாளர்களிடம் உரையாடும் வேளையிலும் நான் நிலைகுலைந்தே காணப்பட்டேன்.
இப்போதும் நான் அமைதியற்ற மனிதனாகவே இருக்கிறேன்.
இரண்டு வசந்த காலங்களுக்கு முன்னால் ஆரம்பித்த இந்த மன பிரச்சினை அன்றைய முதிர்ச்சி நிலையுடன் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
எனினும், இன்று வரை இதைப்பற்றி எழுதவேண்டும் என்றோ, கூறித் திரிய வேண்டும் என்றோ நான் நினைக்கவில்லை.
இப்போது நினைக்கிறேன்.
பானர்ஜி உயிருடன் இல்லையே! அதனால், எழுதலாம்.
ஒருவேளை...
பானர்ஜி உயிருடன் இருந்தால்கூட, நான் எழுதியிருப்பேன் அல்லவா?
இரண்டு வசந்த காலங்களுக்கு முன்னால்... நாங்கள் நேப்பாளை அடைந்தோம்.
நாங்கள்... எட்டு பேர்.
வடக்கு நேப்பாளின் அறியப்படாத பள்ளத் தாக்குகளின் வழியாக நாங்கள் நடந்தோம். மூன்று வார காலம்...
இமயமலையின் கணுக்காலின் வழியாக... நூற்று இருபது மைல்கள்.
பானர்ஜி, பட்டேல், சின்ஹா, ஜான்சன், கவுஸிக், வீரப்பா, ரஹ்மான்... பிறகு...
நான். பானர்ஜிதான் குழுவின் தலைவர். முப்பத்து இரண்டு வயதைக் கொண்ட ஆரோக்கியமான மனிதர்... இமயமலை பகுதியில் உள்ள இரண்டாம் நிலை மலைச் சிகரங்களிலும், மேற்கு திசை நாடுகளிலிருக்கும் பல மலைச் சிகரங்களிலும் ஏறியிருக்கும் பெருமையைக் கொண்டவர்...
எந்தவொரு மலை ஏறும் குழுக்களிலும் இருப்பதைப் போல, ஷெர்ப்பாக்களும் இருந்தார்கள். ஆறு டன்களுக்கும் மேலான எடையைக் கொண்ட பொருட்களையும் உணவுகளையும் சுமந்தவாறு, கால்கள் இடறக்கூடிய உயரங்களின் வழியாக, குடிகாரர்களைப்போல ஆடிக் கொண்டிருக்கும் மரப்பாலங்களின் வழியாக ஷெர்ப்பாக்கள் நடந்தார்கள்.
நாங்கள் டான்ஸிங்கை அடைந்தோம்.
நீண்ட காலமாக தேடிக் கொண்டிருந்த இலட்சியத்தைக் கண்டடைந்தோம்.
தவளகிரி...
வானத்தின் விளிம்பை முழுமையாக மறைக் கக்கூடிய பனிக்கட்டி மலை. 26,800 அடிகள் உயரத்திலிருக்கும் மிகவும் பிரம்மாண்டமான பனிக்கட்டி பிரமிட்...
நாங்கள் எதுவுமே பேசாமல் தவளகிரியைப் பார்த்தவாறு நின்று கொண்டிருந்தபோது, ஷெர்ப்பாக்கள் சிறிது நேர ஓய்விற்கு தயாராகிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவன் திபெத்திய குழலை ஊத ஆரம்பித்தான்.
நண்பர்கள் மெல்லிய குரலில் குழுவாக பாடினார் கள்.
பானர்ஜி எங்களைப் பார்த்தார். குழுவின் தலைவர் என்ற உற்சாகத்துடன் அவர் கூறினார்:
"அதோ... தவளகிரி.
இப்போது வரை யாருக்குமே அடிபணியாத இமாலய கன்னிப்பெண். நீங்களும் நானும் அவளை அடி பணிய வைக்கப் போகிறோம்.''
உணர்ச்சிமயமான ஒரு தருணம்.
நாங்கள்... பாரத நாட்டைச் சேர்ந்தவர்கள்...
அந்த மிக உயர்ந்த மலைச் சிகரத்தின் நெற்றியில் கால் வைப்போம்.
எப்படிப்பட்ட பெருமைக்குரிய ஒன்றாக இருக்கும். நாட்டிற்கு!
மே மாதம் பாதி முடிந்திருக்கிறது. சில வாரங்களில் பருவக்காற்று வீச ஆரம்பித்து விடும்.
இந்தியாவிலிருந்து வேகமாக வீசும் காற்று அந்த பனிச்சிகரங்களை ஆட்டிப் படைக்கும். மிகப் பெரிய பனிக்கட்டிகள் உருகும்.
பனிச்சரிவுகள்! அவை மிகவும் வேகமாக பள்ளத்தாக்குகளை நோக்கி கீழே இறங்கும். வழியில் இருப்பவை அனைத்தையும் அழித்து, நாசத்தின்மீது வெண்மையை விரிக்கும். நதிகள் பலி வாங்கும் மூர்த்திகளாக மாறும்.
இவையெல்லாம் நடப்பதற்கு முன்பு, அடிப்படை முகாம்களின் தொடர்ச்சியை உண்டாக்க வேண்டும்.
இமயமலை பகுதியில் மலைகளில் ஏறுவது என்பது ஒரு யுத்தத்திற்கு நிகரானது. குழுவில் இருப்பவர்கள் போர்க்களத்தில் உள்ள வீரர்களின் ஒழுங்குமுறையுடன் நடந்து கொள்ள வேண்டும். கூட்டுச் செயல்பாடு... இரும்பைப் போன்ற மன உறுதி... முழுமையான ஒத்துழைப்பு...
இவைதான் முக்கிய விஷயங்கள்.
குழுவில் இருப்பவர்களில் சிலர் மிகவும் உயரத்தில் ஒரு அடிப்படை முகாமை அமைக்கி றார்கள்.
முகாமிற்கு பொருட்களைச் சுமந்து கொண்டு செல்கின்றனர்.
பனியில் படிகளை வெட்டுகிறார்கள்.
பின்னால் வருபவர்களின் தேவைக்காக கனமான வடங்களைப் பிணைக்கிறார்கள்.
பிறகு அவர்கள் ஓய்வு எடுக்கும்போது, அதுவரை ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த மற்றவர் கள், இன்னொரு பேஸ் கேம்ப் என்று அழைக்கப்படும் அடிப்படை முகாமை உண்டாக்கும் பணியில் இறங்குகிறார்கள்.
கடுமையான உழைப்பிற்குப் பிறகு, மே 21-ஆம் தேதி 19,350 அடிகள் உயரத்தில் ஒரு முன்னால் செல்லும் குழுவினரின் முகாம் அமைக்கப்பட்டது.
பேஸ் கேம்ப் -2.
பானர்ஜியும் நானும் பட்டேலும் ஜான்சனும் பேஸ் கேம்ப்-2 ஐ அடைந்தோம்.
பனிச்சரிவுகள் ஆரம்பித்திருந்தன.
எல்லா இடங்களிலும் பனிக்கட்டிகள் மிகவும் வேகமாக கீழ்நோக்கி சரிந்து கொண்டிருந்தன.
சூறாவளியை வெல்லக்கூடிய வேகம் அவற்றிற்கு உண்டு. இந்த செயல்பாட்டின்போது வேகமாக வீசும் காற்றின் பேயோசையை ஒன்றுமில்லாமல் செய்யக்கூடிய அளவிற்கு பனிச்சரிவுகளின் சத்தம் இருக்கும்.
இப்படிப்பட்ட ஒரு பனிச்சரிவுதான் பானர்ஜி யைக் கொன்றது - திரும்பி வந்தபோது. ஓ... பானர்ஜி யின் மரணத்தைப் பற்றி நான் ஏன் இப்போதே கூறுகிறேன்?
எங்களுடைய மலை ஏறும் காரியத்தைப் பற்றியே கூறுகிறேன்.
கூற வேண்டுமா? எதற்கு விளக்கிக் கூற வேண்டும்? உங்களுக்கு சோர்வு உண்டாகலாம்.
ஒவ்வொரு கால் வைத்தலிலும் ஆபத்து மறைந்திருந்தது.
நெடுங்குத்தாக இருந்த பனிக்கட்டிகள்...
இப்படி கூறும்போது, உங்களால் அந்த காட்சி யைக் கற்பனை பண்ணி பார்க்க முடியுமா? சற்று வரைந்து பார்க்க முடியுமா? ஒரு மாபெரும் வெள்ளப்பெருக்கு திடீரென உறைந்து பனிக்கட்டி யாக மாறினால், எப்படி இருக்கும்? இப்படிப்பட்ட மதில்களில் கயிறைக் கட்டி ஏறும்போது, எதுதான் நடக்காமல் இருக்கும்? எனினும், நாங்கள் ஏறினோம்.
பனிக்கட்டியைக் கைக்கோடரியால் வெட்டிய வாறும், மிகப் பெரிய கொக்கிகளை பனிக்கட்டியில் அடித்து நுழைத்தவாறும், கொக்கிகள் உறுதியாக நிற்கவேண்டுமே என்று பிரார்த்தனை செய்தவாறும், அவற்றில் தொங்கிக் கொண்டிருக்கும் கயிற்றில் உயிரைத் தொங்கவிட்டவாறும் நாங்கள் ஏறினோம்.
21,000 அடிகள் உயரத்தில் கேம்ப் - 3 ஐ நாங்கள் உண்டாக்கினோம்.
நானும் பானர்ஜியும். பிறகு... அங்டாவா என்ற ஷெர்ப்பாவாவும்.
பிறகும் நாங்கள் ஏறினோம்.
பாறையைப் போல உறுதியாக இருந்த பனிக்கட்டியின்மீது பட்டுப் போல மினுமினுத்துக் கொண்டிருந்த மூடுபனி விழுந்து கிடந்தது. எங்கும் ஒருவகையான நீல நிறம்... அந்த நீல நிறத்தின் வழியாகப் பார்த்தபோது, அது பளிங்கில் உண்டாக்கப்பட்ட நிறத்தைப் போல இருந்தது.
ஆகாயத்தில் ஒரு மேகம் இல்லை.
24,600 அடிகள்..
கேம்ப்- 4.
25,200 அடிகள்...
கேம்ப்- 5.
பயம் நிறைந்த கனவுகளின் மையமாக இருந்தது கேம்ப்- 5. எத்தனை முறை நாங்கள் பின்னோக்கி திரும்பிச் சென்றிருக்கிறோம்! கேம்ப்- 4-க்கும், கேம்ப்-5 க்கும்.
ஆமாம்... இது ஒரு யுத்தம். பின்னோக்கிச் செல்கிறோம்....
பிறகும் வருகிறோம்.
கேம்ப் -5 ல்தான் "ஃப்ராஸ்ட் பைட்' என்பதைப் பற்றிய முதல் அனுபவம் கிடைத்தது. அங்டாவா என்ற ஷெர்ப்பாவின் கால் உறைந்துவிட்டது.
இனி?
அங்டாவா இல்லாமல் முன்னோக்கிச் செல்லலாம் என்று பானர்ஜி கூறினார். நானும் என் குழுவின் தலைவரும் முன்னோக்கி நடந்தோம்... தவறு...ஊர்ந்தோம்.
என்ன ஒரு தளர்ச்சி!
எனினும், என்ன ஒரு ஆவேசம்!
இன்னும் ஒரு ஆயிரம் அடிகள் ஏறினால்....!
அல்ட்டிமீட்டர் இப்போது 25,800-இல்.
நானும் பானர்ஜியும் ஒருவரையொருவர் பார்க்கவில்லை.
எதுவுமே பேசவில்லை. சிறிது கூட சக்தியை வீணாக்கக் கூடாது. அனைத்து நரம்புகளையும் அனைத்து சதைகளையும் இந்த ஆயிரம் அடிகளுக்காக ஒதுக்கி வைக்கவேண்டும்.
மூடுபனி விழுந்து கொண்டிருந்தது.
எனினும், பனி உறைந்த நிலையிலேயே கிடந்தது. ஓங்கி இறக்கப்பட்ட எங்களின் கோடரிகள், நங்கூரங்களாக மாறின. தலையை உயர்த்திப் பார்த்த போது, முன்னால் ஏதோ உயர்ந்து தெரிந்தது. ஒரு சிறிய வரிசை...
அதோ.... அது எது வேண்டுமானாலும், இருக்கட்டும். மலைச்சிகரத்தின் தலைப் பகுதி எங்கு இருக்கிறது? இடதுபக்கமாக திரும்பவேண்டுமா? இல்லாவிட்டால்...
வலதுபக்கமா? ஒவ்வொரு அடியை எடுத்து வைக்கும்போதும், நாங்கள் நின்றோம்.
இளைப்பாறினோம். இதயம் மிகவும் வேகமாக அடித்துக்கொண்டிருந்தது.
நாங்கள் வெற்றியை நெருங்கிவிட்டோம். இனி...
இனி எதனாலும் எங்களைத் தடுத்து நிறுத்த முடியாது. நாங்கள் சற்று இடதுபக்கமாக நடந்தோம்.
மேலும் சில அடிகளை எடுத்து வைத்தோம்.
அதோ... தவளகிரியின் நெற்றி! நாங்கள் அதன் மீது ஊர்ந்து ஏறினோம். தவளகிரி எங்களுக்கு அடி பணிந்திருக்கிறது.
களைப்பை மறந்தோம்.
அளவற்ற உற்சாகம் உண்டானது. இந்தச் சம்பவத்தை முழு உலகமும் அறியட்டும். இந்த காட்சியை... நானும் பானர்ஜியும் இங்கு நின்று கொண்டிருக்கும் காட்சியை என் நாட்டைச் சேர்ந்த அனைவரும் அறிய வேண்டும்.
என் முதுகில் தொங்கிக்கொண்டிருந்த கோணியில் நான் கையை நுழைத்தேன்.
கேமராவையும் தேசிய கொடியையும் வெளியே எடுத்தேன். இதை இங்கு ஊன்ற வேண்டும். இந்த மூவர்ண கொடிக்கு அருகில் நின்றுகொண்டு புகைப்படம் எடுக்க வேண்டும்.
அப்போது பானர்ஜி கூறினார் : "நில்லு...!''
என்னால் நம்ப முடியவில்லை. அவர் வேறொரு கொடியை எடுத்தார்.
சீனாவின் கொடி.
நான் மூவர்ணக் கொடியை ஊன்றியபோது, அவர் சீனாவின் கொடியை ஊன்றினார்.
நான் கேமராவை பயன்படுத்தவில்லை.
பாரதத்திற்கு மட்டுமே சொந்தமான இந்த நிமிடம் அலங்கோலத்திற்கு உள்ளாகியிருக்கிறது நான் நிலைகுலைந்து போய்விட்டேன்.
பானர்ஜி ஏன் இப்படிச் செய்தார்? இந்த குழுவில் சேர்ந்த பிறகுதான் அவரையே எனக்குத் தெரியும்.
அவருடைய அரசியல் நம்பிக்கையும் கொள்கைகளும் எதுவாக இருந்தாலும், இந்தியர்கள் மட்டுமே இருக்கக்கூடிய இந்த குழுவினரின் வெற்றியை இப்படிக் கொண்டாட அவர் ஏன் தீர்மானித்தார்?
பின்னர் ஒருநாள் கேட்போம் என்று நான் நினைத்தேன்.
நாங்கள் இறங்கினோம்.
அடிப்படை முகாம் ஒன்றின் அருகில் இருக்கும்போதுதான் சிறிதும் எதிர்பார்த்திராத பனிச்சரிவு எங்களைத் தாக்கியது.
ஏராளமான டன் எடை கொண்ட பனிக் கட்டிகளுக்கு அடியில் பானர்ஜி புதைந்து போய் விட்டார். நான் எப்படியோ தப்பித்துவிட்டேன். இடது கால் மட்டும் பாதிப்பிற்கு உள்ளானது.
ஃப்ராஸ்ட் பைட்...
காத்மாண்டுவில் இருந்தபோது, நான் யாரிடமும் அந்தச் சம்பவத்தைக் கூறவில்லை.
இந்தியாவிற்குத் திரும்பி வந்த பிறகும், பானர்ஜி நாட்டிய கொடியைப் பற்றி நான் கூறவில்லை.
இது ஏன்? இன்று வரை நான் யாரிடமும் அந்த விஷயத்தை அறிவித்ததே இல்லை.
தவளகிரியைப் பற்றி... எங்களின் மலை ஏற்றத் தைப் பற்றி இதுவரை மூன்று புத்தகங்கள் வெளியாகி விட்டன. அவற்றில் பானர்ஜி மூவர்ணக் கொடியை நாட்டியதைப் பற்றிய இரண்டு மூன்று பத்திகள் இருந்தன.
இன்று வரை பேசாதிருந்த நான் இப்போது எதற்கு இதையெல்லாம் கூறுகிறேன்? எழுதுகிறேன்?
நான் அமைதியற்ற நிலைக்கு ஆளானதே காரணம். என் நாட்டின் இளம் தலைமுறையினர் தங்களுடைய கொடிக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
நாம் இன்னொரு மகத்தான மலையேற்றத்தைச் செய்யப் போகிறோம் அல்லவா? நல்லவொரு எதிர் காலத்திற்காக?
அங்கு நாம் எந்தக் கொடியை உயர்த்த வேண்டும்?