"இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.'
என்பது ஐயன் திருவள்ளுவரின் அறவுரையாகும்.
இதன் பொருள், இனிய சொற்கள் இன்பத்தை வழங்கும் என்பதை உணர்ந்த நாம், எதற்காக அதற்கு மாறான சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதாகும்.
இந்த இலக்கணம் சற்றே மீறப் பட்டதால்தான், துக்ளக் விழாவில் தந்தை பெரியார் குறித்துப் பேசிய ரஜினியின் பேச்சு இன்று பெரும் சர்ச்சையாக்கப்பட்டு வருகிறது.
"1971-ல் சேலத்தில் நடந்த மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாட்டு ஊர்வலத் தில், உடையின்றி செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு, ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்ட ராமர் மற்றும் சீதா பிராட்டியின் உருவத்தை தந்தை பெரியார், செருப்பால் அடித்தார். அதனால் தி.மு.க.வுக்கு அது பெரும் பின்னடைவை அப்போது ஏற்படுத்தியது' என்று தன் உரையில் ரஜினி தெரிவித்தார்.
இதன்பின்னர் அப்போது சேலத்தில் என்ன நடந்தது? என்பது குறித்து சுப.வீ. போன்ற விவரமறிந்தவர்கள் விளக்கமாக எடுத்துச்சொன்ன பிறகா வது, தவறான கருத்துக்கு மறுப்பும் விளக்கமும் தெரிவிக்கப்பட்டுவிட்டது என்று அந்தப் பிரச்சினையை மற்றவர்கள் விட்டிருக்கலாம். அல்லது கருத்துக்கு எதிர்க்கருத்து என்ற வகையில் தங்கள் கருத்தைச் சொன்னதோடு நிறுத்திக்கொண்டிருக்கலாம். ஆனால் என்ன நடந்தது?
பெரியார் பற்றிப் பேசியவர் ரஜினி என்பதாலேயே அவரைச் சுற்றி வளைத்துத் தாக்கிக்கொண்டிருக்கிறார் கள். ஒருசில ஊடகத்தினரே, ரஜினியைத் தாக்கும்படியான பதிலை சிலரிடம் வாங்கி வெளியிட்டு, விவகாரத்தை ஊதிப் பெரிதாக்க ஆரம்பித்துவிட்டனர்.
இன்னும் சிலரோ, நடக்காத ஒன்றை ரஜினி வேண்டுமென்றே இட்டுக்கட்டிப் பேசிவிட்டார். தந்தை பெரியாரை அவர் இதன் மூலம் கொச்சைப்படுத்திவிட்டார். அதனால் அவர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றெல்லாம் கொடி பிடித்து வருகிறார்கள்.
ஆனால் அந்த சம்பவத்தின்போது உடனிருந்த நாவன்மை மிக்க பகுத்தறிவாளர் திருச்சி செல்வேந்திரன்... ""அந்த ஊர்வலத்தின்போது ராமன், சீதையின் பிளாஸ்டர் ஆப் பாரிசிலான உருவச் சிலைகள் டிரக்கில் கொண்டு செல்லப்பட்டது. தந்தை பெரியார், ஊர்வலத்தில் முதல் வாகனத்தில் இருந்தார். நான் ராமர், சீதை இருந்த வாகனத்தில் இருந்தேன். அப்போது பெரியாருக்குக் கருப்புக்கொடி காட்டத் திரண்டிருந்த ஜனசங்கத்தை சேர்ந்த இந்து அமைப்பினர், டிரக் மீது செருப்பை எடுத்து வீசினார் கள். அது அந்த சிலைகள் மீது பட்டு கீழே விழுந்தது. ஊர்வலத்தின் மீது செருப்பு வீசப்பட்டதால் கோபம் கொண்ட தொண்டர்கள், ராமர் சிலை மீது செருப்பை வீசினர். சிலர் வண்டிமீது ஏறி அடித்தார்கள். நான்தான் முதலில் அடித்தேன். இதுதான் நடந்தது. ராமர்- சீதை சிலைகள் முழு உடையோடுதான் கொண்டுவரப்பட்டன'' என்று அன்று நடந்ததை விவரித்துவிட்டு...
""இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றபோது, ஊர்வலத்தில் உயரமான வாகனத்தில் கொண்டுவரப்பட்ட ராமர், சீதை சிலைகளை, அந்த வாகனத்தின் மீது ஏறி பெரியார் அடித்திருக்க வாய்ப்பில்லை என்று சொல்லிலி, நீதிபதியே வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டார்'' என்றும் தெரிவித்திருக்கிறார்.
ராமர்- சீதை உருவச் சிலைகள், உடையில்லாமல் செருப்புமாலை அணிவிக்கப்பட்டு ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டது என்று ரஜினி ஏன் சொன்னார்? அவர் உள்நோக்கத்தோடு பெரியாரைக் கொச்சைப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் அப்படிச் சொன்னாரா? என்றால், அவர் இயல்பை அறிந்தவர்கள் அதை ஒப்புக்கொள்ளமாட்டார்கள். ஏனென்றால், பொதுவாகவே யாரையும் தானாக வம்புக்கு இழுக்கக்கூடியவர் அல்ல ரஜினி. அடுத்தவர் மனதைப் புண்படுத்தும்விதமாகப் பேசக் கூடியவரும் இல்லை. எந்த பிரச்சினையிலும் தான் சிக்கிவிடக்கூடாது என்று எல்லாவற்றிலும் கவனமாக இருப்பவர் அவர். துக்ளக் விழாவில் என்ன நடந்தது?
அந்த விழாவில் ரஜினிக்கு முன்னாலே பேசிய குருமூர்த்தி, ""எனக் குப் பின்னால் பேச இருக்கும் ரஜினி, அரசியல் பற்றிப் பேசுவார்'' என்று அறிவித்து, ரஜினிக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தினார். குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்ற அந்த விழா மேடையில், அரசியல் பேசுவது சரியல்ல என்று கவனமாகத் தவிர்க்க நினைத்த ரஜினி, அதைத் தன் பேச்சிலேயே குறிப்பிட்டார்.
குடியரசுத் துணைத் தலைவர் இருக்கும் மேடையில் எல்லாவற்றையும் நம்மால் பேசமுடியாது. அது முறையும் இல்லை’ என்று ரஜினி தன் பேச்சில் அரசியலைத் தவிர்த்தார்.
ஆனால், சோவைப் பாராட்டிப் பேசும்போது, அந்த சேலம் ஊர்வலம் குறித்தும் ராமர்- சீதை உருவங்கள் தாக்கப்பட்டது குறித்தும், யாரோ எழுதிக்கொடுத்த குறிப்பைச் சரியான தகவல் என்று நம்பியே அவ்வாறெல்லாம் பேசிவிட்டார். அது வெவ்வேறு விதத்தில் சர்ச்சையாக மாறிய நேரத்தில், அது வேண்டுமென்றே அரசியல் ஆக்கப்படுகிறது என்று நினைத்து, அதற்காக மன்னிப்புக் கேட்க மாட்டேன் என்றும் ரஜினி அறிவித்தார்.
1971 ஜனவரி 23, 24 தேதிகளில் சேலத்தில் நடத்தப்பட்ட மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாட்டின்போது... உண்மையில் என்னதான் நடந்தது என்பது குறித்து, தந்தை பெரியாரே, தனது வாக்குமூலம் போல் பேசியிருக்கிறார். இருதரப்பினரும் அதைப் புரிந்துகொள்ளவேண்டும். பெரியார் எதற்காகவும் பொய் சொல்கிறவர் இல்லை என்பதை எதிர்முகாம் தலைவர்களே அறிவார்கள்.
பெரியார், அந்த சேலம் சம்பவம் குறித்து என்ன சொல்கிறார் தெரியுமா?
""சேலத்துல மூட நம்பிக்கை மகாநாடு நடந்துச்சு. இதுக்கு முன்னேற்றக் கழகக்காரங்களை (தி.மு.க.வினர்) நான் கூப்பிடலை. நம்ம கூட சேர்ந்தா அவங்களுக்குப் பாதிப்பு வரும்ன்னுதான் கூப்புடலை. ஜனங்ககிட்ட நமக்கு ஆதரவு கிடைச்சிது. அவங்க ராவணன் படத்தைக் கொளுத்துன மாதிரி, நாம ராமன் படத்த கொளுத்துறதுன்னு முடிவாச்சு. ராமன் அந்த மாதிரி பண்ணினான்...
இந்த மாதிரி பண்ணினான். அயோக்கியன்னு...
அட்டைல எழுதி ஊர்கோலத்துல உட்டோம். நாம ஒன்னும் கற்பனை பண்ணல. ராமன் கதைல என்னென்ன இருக்குதோ அதை வரைஞ்சி வச்சிருந்தோம். கதைல தப்பா இருந்ததால் அவங்களுக்கு அது அவமானமாத்தான் இருக்கும். ரெண்டு மூணு பர்லாங்குக்கு மேல ஊர்வலம் இருந்தது. நான் இங்க... முதல் வண்டில வர்றேன். பின்னால, மேளதாளம், அது இதுன்னு... அந்த ஊர்ல தேவாலய பாதுகாப்பு சங்கம்ன்னு வச்சிக்கிட்டு... நமக்குக் கருப்புக் கொடி காட்டறதுன்னு சிலர் வந்தாங்க. நம்மகிட்ட லட்சக்கணக்குல ஆளுங்க இருக்காங்க.
அவங்க பக்கம் நூத்துக்கணக்குலகூட இல்லை. அதனால ரகளையாப் போகுமேன்னு நம்மகிட்ட போலீஸ்காரன் வந்து, என்ன பண்றதுங்கன்னு கேட்டான்.
நான் வாக்கு குடுத்தேன். நாங்க ஒன்னும் பண்றதில்லை. அவங்களுக்குப் பாதுகாப்பு கொடுத்துக்கங்க... எங்க ஆளுங்களைக் கட்டாயப்படுத்தி கம்முன்னு இருக்கச் சொல்றேன்னு சொன்னேன். எங்களுக்குப் பின்னாடியே அவங்க கருப்புக்கொடி புடிச்சிக்கிட்டு வர்றாங்க.
போலீஸ்காரங்க முன்னூறு நானூறு பேர், எங்களுக்கும் அவங்களுக்கும் நடுவுல வர்றாங்க. வாய்ல கோஷம் போடுறப்ப அவங்க போக்கிரித்தனமா போட்டாங்க. நம்ம ஆளுங்க ராமன் ஒழிக... அவன் ஒழிக.. இவன் ஒழிகன்னு சொன்னாங்க. அவங்க ஆளுங்க நம்ம பேரைச் சொல்லிலி அவன்.. இவன்னு.. கண்டபடி பேச ஆரம்பிச்சிட்டாங்க. உடனே நம்ம ஆளுங்க அவங்க ஆளுங்களை பதிலுக்கு வைய ஆரம்பிச்சாங்க. அப்ப அந்தப் பக்கம் இருந்த ஒரு அயோக்கியப் பயல், தன் கால்ல இருந்த செருப்பக் கழட்டி கூட்டத்துல எறிய, அது நம்ம பக்கம் நம்ம மேல விழுந்துச்சு.
அதை எடுத்து ராமனை அடிச்சா என்னன்னு, அதையே செஞ்சாங்க. ஒருத்தன் அடிச்சான்... ரெண்டு பேர் அடிச்சான்... அப்புறம் ஆளாளுக்கு அந்த படத்த அடிக்க ஆரம்பிச்சான். கேள்வி இல்ல... கேப்பாரு இல்ல. யாரு கேக்கறது...? அப்படியே ஊர்வலமா போயி ராமனையும் கொளுத்தியாச்சு'' என்று அன்று நடந்த நிகழ்வை விளக்குகிறார் பெரியார்.
இதில் உருவங்கள் நிர்வாணப்படுத்தப்பட்ட தாகவோ, அவற்றிற்கு செருப்பு மாலை அணிவிக் கப்பட்டதாகவோ எங்கும் இல்லை.
*
அதன் பின்... "துக்ளக்' சோ விவகாரத்தையும் சொல்கிறார் அவர்...
""இந்தப் பிரச்சாரத்துக்காகவே ஒருத்தன் ஒரு பத்திரிகையை ஆரம்பிச்சான்... அவன் பேர் சோவோ என்னவோ... சோ அடிச்ச விளம்பரத்துல என் படம்... கைல செருப்பை வச்சிருக்காப்ல. எனக்கு எதுத்தாப்புல ராமன் படம். பக்கத்துல கருணாநிதி படம்... சபாஷ்ன்னு அவர் சொல்ற மாதிரி ஊர் முழுக்க ஒட்டுனாங்க. அதுலதான் ராமனை செருப்பால அடிச்சது பிரபல்யம் ஆச்சுது. கலைஞருக்கு (அது தேர்தல் நேரம். முதல்வர் பொறுப்பில் கலைஞர் இருந்தார்) பயமாப் போச்சு.
இந்தமாதிரி எல்லாம் ஆரம்பிச்சிட்டா னுங்க. ஜனங்களுக்கும் புத்தி மாறித்தான் இருக்கும். நமக்கும் ஆபத்து வரத்தான் போகுது. எலக்சன்ல கோளாறு வரும்ன்னு பயந்துட்டாரு. என்கிட்ட வருத்தப்பட்டு மட்டும் சொல்லிலி அனுப்பிச்சாரே ஒழிய, இப்புடி இப்புடி பண்ணுங்கன்னு சொல்லலை. நான் செருப்பால் அடிக்க லைன்னு சொல்லிலிட்டு வெளில வரமுடியுமா?
அடுத்து அது மாதிரியான காரியங்கள் இருக்குமே... கலைஞர் பயந்தாரோ என்னமோ தெரியலை. துணிஞ்சிட்டாரு. இன்னமே முன்னேற்றக் கழகம்னு வேணாம். திராவிடர்க் கழகம்ன்னே ஆயிடலாம்ன்னு அவரும் முடிவு பண்ணிட்டார். ஜனங்களும் இதனால முன்னேற்றக் கழகம் தோத்துடும்... தோத்துடும்ன்னு நினைச்சிக்கிட்டாங்க. காமராஜும் தான் வந்துட்டதாவே முடிவு பண்ணி, 23-ஆம் தேதிக்கு அப்புறம் எல்லாரும் என்னைக் கோட்டைல வந்து பாருங்கன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாரு. சென்னைக்கு சீஃப் செகரட்டரியா இருந்த ஆளும் ஃபைலை எல்லாம் தூக்கி காமராஜர்கிட்ட கொடுத்துட்டார். ஐ.ஜி, என்ன பண்ணாரு? அவர் வந்துடுவார்னு நினைச்சி நம்ம ஆளுங்க ரெண்டாயிரம் மூவாயிரம் பேரை அரஸ்ட் பண்ணிட்டாரு.
தேர்தல்ல ஓட்டு எண்ண ஆரம்பிச்சான். ஒன்னு தி.மு.க. அடுத்து ஒன்னு காங்கிரஸ், ஒன்னு தி.மு.க. அடுத்து ஒன்னு காங்கிரஸ்ன்னு முடிவுவர ஆரம்பிச்சிது. நான் இப்படித்தான் உட்கார்ந்திருந்தேன். அடுத்தாப்புல என்னவோ.. தி.மு.க, தி.மு.க.ன்னு... வர ஆரம்பிச்சிடுச்சு. அவங் களுக்கு வர்றது நின்னுபோச்சு. நான் அப்பா டான்னு எந்திரிச்சி உட்கார்ந்துட்டேன்... நான் பட்டணத்துக்குக் கிளம்பிப் போறதுக்குள்ளயே தி.மு.க. மெஜாரிட்டி ஆயிடுச்சி.''
என்று அந்த சேலம் மாநாட்டுக்குப் பின்னரும், ராமர் சிலை ஊர்வலத்தில் தாக்கப்பட்டதற்குப் பின்னரும்... அது குறித்து துக்ளக்கும் அன்றைய காங்கிரஸும் தீவிரப் பிரச்சாரம் பண்ணிய பிறகும்....ரஜினி குறிப்பிட்டது போல் தி.மு.க.வுக்குப் பின்னடைவு ஏற்படவே இல்லை. தி.மு.க. மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. ஆக முழுக்க முழுக்க ரஜினியிடம் தவறான குறிப்பே தரப்பட்டிருக்கிறது. ரஜினி அதை நம்பிப் பேசிவிட்டார். அவ்வளவுதான். அது மறக்கப்பட வேண்டிய நிகழ்ச்சி என்று ரஜினியே, தன் தவறை உணர்ந்து சொன்ன பிறகும்...
ரஜினி மன்னிப்புக் கேட்கவேண்டும்... ரஜினி மன்னிப்புக் கேட்டே ஆகவேண்டும் என்று சொல்வது பெருந்தன்மையாகாது.
பெரியார் கூட்டம் ராமரை செருப்பால் அடித்தது என்றால், அது ஒரு தனி மனிதரையோ கடவுளையோ அடித்தது என்று கருதத் தேவையில்லை. அறிவுக்குப் புறம்பான ஆபாச சித்தாந்தத்தை, பெண்ணியத்துக்கு எதிரான அபவாத சித்தாந்தத்தை, மூட நம்பிக்கையின் குறியீடுகளில் ஒன்றைத் தாக்குகிறது என்று பொருள். இது சுயசிந்தனையின், சுயமரியாதையின் வெளிப்பாடு.
சாதாரண ராமசாமி நாயக்கர் எப்படி தந்தை பெரியார் என்ற மாபெரும் தலைவரா னார் என்று அண்மையில் பட்டிய லிலிட்ட முதுபெரும் பொதுவுடைமைத் தலைவரான அய்யா நல்லகண்ணு...
காந்தியடிகள் அறிவித்த கள்ளுக்கெதி ரான போராட்டத்தின்போது தன் தோப்பில் இருந்த தென்னை மரங்களை எல்லாம் பெரியார் வெட்டி வீழ்த்தியதையும், கேரள மாநில வைக்கத்தில் தாழ்த்தப்பட்ட மக்களைக் கோயிலுக்குள் பிரவேசம் செய்யவைத்துப் போராடியதையும், சாதி ஒழிப்புக்காகக் கடைசிவரை போராடி, சமத்துவம் மலர அவர் உழைத்ததையும் விவரிக்கும் அவர், பெரியாரை விமர்சனம் செய்யும் தகுதி நமக்கெல்லாம் இல்லை என்று மிகப் பெருந்தன்மை யாகக் குறிப்பிடுகிறார்.
பெரியார் என்ற மாமனிதர் இல்லை என்றால்... ரஜினியே இல்லை என்பதை அவரே அறிவார். தமிழகத்தை மட்டுமல்ல. ரஜினி இன்று கோலோச்சும் திரைத்துறையையும் "அவாள்களே' தங்கள் கைப்பிடியில் வைத்திருந்தார்கள். பெரியாரியம் என்ற மாமருந்து வேலை செய்யும் முன், "அவாள்'களுக்கே அங்கே மகுடம் சூட்டப்பட்டது. மார்பின் குறுக்கே நூல் போட்டவர்களும் சிவப்பு நிறத்தினருக்கும் மட்டுமே அங்கே கதவுகள் திறந்தன. அதையும் மீறி எம்.கே.டி. பாகவதர், திரையுலகை வென்றார் என்றால் அதற்கு அவர் சாரீரம் மட்டுமல்ல; அவருடைய சிவப்பு நிற சரீரமும் அவருக்குத் தேவைப்பட்டது. ஏழிசை கானக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமி, "அவாள்கள்' சமூகத்தில் பிறக்காவிட்டாலும், "அவாள்கள்' குடும்பத்தில் வாக்கப்பட்டதால்தான் தன் இசையால் ஆட்சி செய்யமுடிந்தது. இன்று ரஜினி என்ற திராவிடர், திராவிடருக்கே உரிய நிறத்தோடு பிறந்த போதும் திரையுலகில் கொடிகட்டிப் பறக்கிறார் என்றால், அது தந்தை பெரியார் செய்த மாயம். அவர் அங்கே சிகரம் ஏறுவதற்கு பெரியார் செதுக்கி வைத்த பாதைதான் காரணம். அவரால்தான் சூத்திரர்களும் அதிகாரத்துக்கு வந்தார்கள். எனவே யாராக இருந்தாலும் பெரியாரை மறந்தால், அவர்களை வரலாறு மன்னிக்காது. அதனால்தான்,
"பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பைத் தரும்'
என்று வள்ளுவப் பேராசான் எச்சரிக்கிறார். இதற்குப் பொருள், பெரியோர்களை மதிக்காமல் நடந்து கொண்டால் நீங்காத சங்கடங்களைச் சந்திக்க நேரும் என்பதாகும். அவருக்கு எதிராகக் கடும் வார்த்தைகளை வாரி இறைப்பவர்களுக்கும் பொருந்தும்.
நட்புணர்வோடு
நக்கீரன்கோபால்