விக்கோ ஞானச்செல்வன் நாடறிந்த தமிழறிஞர். பல்வேறு விருதுகளையும் பட்டங்களையும் பெற்றவர். பிழையில்லாமல் தமிழில் பேசவும் எழுதவும் வழிகாட்டி வருகிறவர். அவரது இனிய மரபுக் கவிதை தொடர் இதோ...

ovaiyar

ஔவை யார்?

ஔவையார் யாரென்றே அறியத் தக்க

Advertisment

ஆதாரம் நமக்கேதும் கிடைத்த துண்டா?

ஔவையார் பெயர்க்கான கார ணத்தை

அறியுவணம் எவரேனும் உரைத்த துண்டா?

Advertisment

ஔவையார் ஆறேழு பேர்கள் என்பார்

அதற்கான சான்றுரைகள் தந்த துண்டா?

ஔவையார் யாரென்றே அறியக் காட்டும்

அத்தனையும் நாம்காண முயல்வோம் இங்கே!

ஔவையொரு தமிழ்ப்புலவர் பெண்பால் ஆவார்

அவர்வாழ்ந்த காலமது பல்வே றாகும்!

செவ்வைநெறி பலகாலும் பகர்ந்தார் மக்கள்

திருவுளத்தில் என்றென்றும் வாழு கின்றார்!

ஔவையெனில் தெய்வப்பெண் பொருள தாகும்

அத்துடனே தாய்,தமக்கை என்றும் ஆகும்

ஔவையென அழைத்திட்டர் மக்கள் தாமே!

அவரியற் பெயரெதுவும் அறியோம் நாமே!

ஐந்தாறு காலங்கள் பிரித்தல் வேண்டாம்

அமைவாக நான்கென்று வகுத்துக் கொள்வோம்

முந்தியதாம் சங்கத்துக் காலம் வாழ்ந்தார்

முதல்ஔவை ஈராயிரம் ஆண்டின் முன்னே!

ஐங்கரனைப் பாடியதோர் பக்திக் கால

ஔவையார் இரண்டாவ தாக வுள்ளார்!

முந்துஇளம் பிள்ளையர்க்கு நீதி நூல்கள்

மூன்றாவ(து) ஔவையாரே படைத்த ளித்தார்!

selvam

சிற்றிலக்(கி)ய காலமது மக்கள் யார்க்கும்

தெளிவான அறவுரைகள் வகுத்துச் சொன்னார்!

மற்றுமொரு ஔவைதனிப் பாட லாரே!

மாண்புநிறை கதைபலவும் அடக்கம் ஆங்கே!

கற்றவர்க்கும் மற்றவர்க்கும் இனிய சொல்லிக்

கடமையொடு வாழ்க்கைமுறை கற்றுத் தந்தார்

உற்றதொரு நான்காக வகுத்தோ மேனும்

உயரியநல் வாழ்வறமே அவற்றின் சாரம்!

ஔவையொரு பாட்டியென்றும் கிழவி யென்றும்

ஆருரைக்கும் தக்கவொரு சான்றுண் டாமோ?

ஔவையே திங்களுக்குள் முடங்கி நிற்கும்

அரியதொரு நிழலுருவம் என்பார் உள்ளார்!

ஔவையுரை ஆத்திசூடி அதியன் நட்பு

அதனோடு விநாயகர்க்(கு) அகவல் எல்லாம்

ஔவையார் ஒருவரேயாம் என்று காட்டி

அழகான கதைபடைத்தார் திரைப்ப டத்தார்!

ஒவ்வொரு சொல்லுமவர் திறத்தைக் காட்டும்

ஒவ்வொரு வரிக்குள்ளும் அழகு சொட்டும்!

ஒவ்வொரு பாட்டினிலும் தமிழே ஓங்கும்!

உயிராக மானுடத்தை உயர்த்தி நிற்கும்!

வெவ்வேறு காலத்து வாழ்ந்த போதும்

வேறுவேறாம் ஆகாத நெறிகள் ஒன்றே!

வெவ்வேறாம் ஔவையார் நால்வர் பற்றி

விரிவான விளக்கங்கள் இனிக்காண் போமே!

(வளரும்)