செஞ்சியின் பெரும்புகழுக்குக் காரணமாக இருப்பவர் மாவீரர் ராஜா தேசிங்கு. இவரைப் பற்றி எண்ணற்ற நாட்டுப்புற பாடல்களும், கதைகளும் மக்கள் இலக்கியங்களாக மலர்ந்துள்ளன. தேசிங்கு, சொரூப்சிங் என்பவரின் திருப்புதல்வர். மராட்டிய மன்னர் சிவாஜியை வீழ்த்த, ஔரங்கசீப் அனுப்பிய முகமூத்கான் என்ற தளபதியின் தலைமையிலான படையில், குதிரைப் படைக்குத் தலைமை ஏற்றிருந்தவர்தான் இந்த சொரூப்சிங்.

போர்க்காலத்திற்கு இடையிலேயே சிவாஜி மரணமடைய, அவரது மகனான ராஜா ராம், தமிழகத்திற்குத் தப்பி வந்து செஞ்சி கோட்டையில்தான் பதுங்கினார். 11 மாதம் நடந்த போருக்குப் பின்னர், ஔரங்கசீப்பின் படைகள் செஞ்சிக் கோட்டையைக் கைப்பற்றியது. அந்தப் போரில் வீரதீரத்துடன் சொரூப்சிங் செயல்பட்டதால், செஞ்சிக்கோட்டையின் நிர்வாகத்தை சொரூப்பிடம் ஒப்படைத்தார் ஔரங்கசீப். இந்த சொரூப்சிங்கிற்கும் அவர் மனைவி ரமாபாய்க்கும் பிறந்த மாவீரன்தான் ராஜாதேசிங்கு.

வீரத்தோடு வளர்ந்த ராஜாதேசிங்கு தனது 18 ஆம் வயதில், டெல்லி பாதுஷா ஷா ஆலம் வைத்திருந்த, யாராலும் அடக்கமுடியாத பரிகாரி என்ற ஒரு முரட்டுக்குதிரையை அடக்கினார்.

Advertisment

barathidasan

அவரது திறமையைப் பாராட்டி ,அந்தக் குதிரையை பாதுஷா தேசிங்கு ராஜாவுக்கே பரிசாகக் கொடுத்தார். இன்னொரு ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த ஒரு தளபதி தனது மகளையும் அவருக்கு மணமுடித்து வைத்தார். தேசிங்கின் மனைவி பெயர் ராணிபாய். இந்த ராணிபாய் பெயரில்தான் இப்போது ராணிப்பேட்டை என்ற நகரம் திகழ்கிறது. சிறப்பு மிக்க செஞ்சிக்கோட்டையைக் கட்டியாண்டார் ராஜா தேசிங்கு. அவரது செஞ்சிக்கோட்டை இயற்கையோடு ஒன்றிய மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள் 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்கள் என்று பிரமாண்டமாகக் காட்சி தருகிறது. பல போர்களை சந்தித்த பிறகும், அது இன்றும் கம்பீரமாக காட்சி தருகிறது. சோழர் காலத்தில் செஞ்சிக்கு பெயர் சிங்கபுரி, சிங்கபுரி கோட்டம் எனப்பட்டது. அதுவே பின்னாளில் செஞ்சி ஆகிவிட்டது. ராஜா தேசிங்கின் வீரதீரப் பராக்கிரமங்கள் அனைவரையும் கவர்ந்ததால், மக்கள் தங்கள் இலக்கியங்களில் அவரை நாயகனாக வைத்துப் புகழ்ந்தார்கள். அது இன்றைய திரைப்படங்கள் வரை தொடர்கிறது.

இதன் முதல் பதிப்பின் முன்னுரையில் இதற்கு முன் தன் படை வலியுடன் அண்டிய செஞ்சி அதிகாரியை எதிர்த்த ஒரு ‘தமிழச்சியின் கத்தி’ எழுதப்படடது. அது இன்னும் அச்சுக்கு வரவில்லை. அதை நோக்க இது தமிழச்சியின் கத்தி இரண்டாம் பிரிவு என்றே கூறவேண்டும் என்பார் பாரதிதாசன். (25-4-1949) திராவிட இயக்கக் கொள்கையான வடவர் எதிர்ப்பிற்கு ஏற்ற கதையாக தேசிங்கு கதை பாரதிதாசனுக்குக் கைகொடுத்தது. இதில் வடவரின் வஞ்சகமும் அதிகாரத் திமிரும் தமிழரின் கற்பும் வீரமும் வெளிப்படுகிறது.

டில்லியில் பாதுஷா செங்கோல் செலுத்துகி றாள், ஆர்க்காட்டுப் பகுதி அவன் ஆணைக்கு உட்பட்டிருந்தது. ஆர்க்காட்டின் அதிகாரி நவாப் ஆர்க்காடு 172 பாளையப்பட்டாகப் பிரிக்கப்பட்டிருந்தது. செஞ்சி பாளையப்பட்டு, தேசிங்கு வடக்கன், தமிழரை இகழ்பவன்.

சிப்பாய்களிலே சிலருக்கு ஒரு தலைவன் இருப்பான். அவன் சுபேதார், சுதரிசன் சிங்கு ஒரு சுபேதார், அவனும் அவன் தோழனான மற்றொரு சுபேதார் ரஞ்சித் சிங்கும் புதுச்சேரி சென்று, வளவனூர் வழியாக வருகையில் தென்னந்தோப்பு ஒன்றில் திம்மனைக் கண்டார்கள். இளநீர் வெட்டிக் கொடுத்த திம்மன், அதோடு நிற்காமல், அவர்களை வீட்டுக்கும் அழைத்துப் போய்ச் சாப்பாடும் போட்டான். சாப்பாடு போட்ட திம்மனுக்கு, அவர்கள் ஏதாவது போடவேண்டுமே. சுதரிசன் சிங்கு, திம்மன் மனைவி சுப்பம்மாவின் மேல் கண்ணைப் போட்டான்.

குதிரைகளைத் தோப்பில் கட்டிவந்தோம்.

அவைகளைப் போய்ப் பார்த்து வா என்கிறார் கள் வடக்கர். போகிறான் திம்மன். சுதரிசன் தன் உள்ளத்தைச் சுப்பம்மா விடம் அவிழ்க்கின்றான், செல்லவில்லை. அவளை அடைய வழிதேடினான்.

திம்மனிடம் தனியாக உன்னைச் செஞ்சிக் கோட்டையில் சிப்பாயாக்கி வைக்கிறேன் என்று ஆசை காட்டுகிறான். திம்மன் அந்த ஆசையில் வீழ்கிறான்.

திம்மனும் சுப்பம்மாவும் ஏறிய கட்டை வண்டி செஞ்சி நோக்கிச் செல்கிறது.

வழியில் சில தமிழர்கள் வழிமறித்து வடவர்களைப் பற்றி எச்சரிக்கின்றனர். சுப்பம்மா அவர்களிடம் இருந்து கத்தியைப் பெற்றுக் கொள்கிறான்.

Advertisment

dd

செஞ்சியில் ஒரு சேரியின் குடிசையில் சுப்பம்மாவைக் குப்பு, முருகி ஆகிய இரு தீய மாதர்களுடன் விட்டு திம்மனுக்குப் பொய்யுடை தந்து கோட்டையின் ஒரு மூலையில் அடைத்து வைத்தான். குடிசையில் சுப்பம்மாவிடம் தன் விருப்பத்தினைக் காட்டினான். அவள் ஒப்புக் கொள்ளாததால் அக்குடிசையைக் கொளுத்திவிட்டு, அவள் உள்ளே திண்டாடும்போது உருத்தெரியாமல் அவளைத் தொட, அவளது கத்தி தொட்ட கையை விலக்கி விடுகிறது.

சுப்பம்மா சேரியில் செங்கான் வீட்டில் அடைக்கலம் புகுகிறாள். சுதரிசன் எண்ணப்படி குப்பும் முருகியும் செங்கான் வழியாக நஞ்சிட்ட உணவை அனுப்புகிறார்கள். அறியாத செங்கான் தர சுப்பம்மா உண்டு மயங்கி வீழ அவளது கற்பைக் கெடுத்துவிடுகிறான். கண் விழித்த சுப்பம்மா கற்பிழந்ததை உணர்ந்து, சுதரிசனனைத் தேடி கத்தியுடன் ஓட சேரியும் அவளோடு ஓடுகிறது.

சுப்பம்மா சுதரிசனின் மார்பில் கத்தியைப் புதைக்கிறாள். சுதரிசனன் சாவில் புதைகிறான். குப்புவையும் முருகியையும் செங்கான் கொடுவாளால் கொல்லுகிறான். சுப்பம்மா திம்மனைத் தேடி அலைகிறாள். கொலைச் செய்தி பரவுகிறது. தேசிங்கு குதித்தோடி வந்து “யார் செய்தார்?” என்று உசாவுகிறான். ரஞ்சித்சிங் தெரிந்த வரைக்கும் சொல்லி முடிக்கிறான். “எங்கே அந்தத் திம்மன் பெண்டாட்டி?” என்று தேசிங்கு அதிருகிறான்.

திம்மனைக் கட்டி இழுத்துக்கொண்டே சென்று சுப்பம்மாவைத் தேடிச்செல்ல ஆணையிடு கின்றான். அவர்கள் தேடி அலையும்போது செங்கானும் சுப்பம்மாவும் சிப்பாய்களைக் கொன்று திம்மனை மீட்கின்றனர். அவளும் தனக்கு நடந்தவற்றைச் சொல்லி அவனை வீட்டுக் குத் திரும்ப வேண்ட அவனும் மறுத்துவிடுகிறான்.

அங்கு வந்த சிப்பாய்களோடு சண்டையிட்டுச் சாகிறான். சிப்பாய்கள் சுப்பம்மாவை இழுத்துச் செல்கின்றனர். தேசிங்கின் சபையில் நிறுத்தினர். விசாரணைக்குப் பிறகு அவளைத் தண்டிக்க தீர்ப்பு வழங்குகிறான் தேசிங்கு. “இவளை எல்லோரும் பார்க்க நிறுத்தி ஒரு கையை வெட்டி, மறுநாள் ஒரு மார்பை வெட்டி, அடுத்த நாள் முதுகு சதையைக் கிழிக்க வேண்டும். பின்னர் மூக்கு, காதுகளை அறுத்து கொதிக்கும் நீரை ஊற்றி குதிகாலைக் கொளுத்துங்கள் என்றான் அரசன்.

அவளோ மூச்சை அடக்கி இறந்துபோகிறாள்.

அதற்கு முன் தேசிங்கைச் சபிக்கின்றாள்.

“மூளுதடா என் நெஞ்சில் தீ! தீ! உந்தன்

முடி வேக மூளுதடா அக்கொடுந் தீ!

நீளுதடா என் நெஞ்சில் வாள்! வாள் உன்றன்

நெடுவாழ்வை வெட்டுதடா அந்தக் கூர்வாள்

நாளில் எனைப்பிரிக்குதடா சாவு! வந்து

நடுவிலுனைத் தின்னுமடா அந்தச் சாவே!

ஆளனிடம் பிரித்ததடா என்னை என்னை

அன்புமனையாள் பிரிவாள் உன்னை உன்னை!”

என்பதுதான் தமிழச்சியின் சாபம். அவ்வாறே தேசிங்கின் நாடு தீக்கிரையாகிறது. அவனும் தன் வாளால் மடிகிறான். அவனது மனைவியும் உடன்கட்டை ஏறுகிறாள்.

பொய்யினைச் சொல்வதில்லை - தமிழர்

பொய்த்தொழில் செய்வதில்லை

மெய்யினைப் பேசுதற்கும் - தமிழர்

மெய்ப்பதைத் திட்டதில்லை

கையினில் வாளாலே - உனது

காவல் தலைவன் தலை

கொய்தவன் யார்? எனிலோ - எனையே

கொண்டவர் என்றறிவாய்

dd

வீட்டில் என் சோற்றினிலே - மயக்கம்

மிஞ்சும் மருந்தை இட்டான்

ஆட்டம் கொடுத்ததுடல் - உணர்வும்

அற்ற நிலையினிலே

காட்டு மனிதன் அவன் - எனது

கற்பை அழித்தானே

கற்பை அழித்தானே - தன்னைத்தான்

காத்துக் கொள்ளும் திறமை

அற்பனுக்கில்லை அன்றோ? - திறமை

ஆருக்கு இருக்கவில்லை

வெற்பை இடித்து விடும் - உனது

வீரத்தையும் காணும்

நிற்க மனமிருந்தால் - நின்றுபார்

நெஞ்சை பிளக்கும் என்கை!

குற்றம் புரிந்தவர் யார்? - உனது

கோலை இகழ்ந்தவர் யார்?

கற்பை இகழ்ந்தவர் யார்? - உனது

கருத்தை மேற்கொண்டவன்!

சொற்கள் பிழை புரிந்தாய் - அடியே

என்றெனைச் சொல்லுகின்றாய்

நற்றதமிழ் நாட்டினரை - இகழ்தல்

நாவுக்குத் தீமை” என்றாள்

“சொன்ன உன் கற்பினுக்கே - எத்தனை

சிப்பாய்களை மடித்தாய்”

என்று வினவலுற்றான் தேசிங்கு. அதற்கு அவள்,

“என்னருங் கற்பினுக்கே - உன்னரும்

இன்னலின் ஆட்சியையும்

உன்னரும் ஆவியையும் - தரினும்

ஒப்பில்லை”

என்று உரைத்தாள்.

“இந்த வடக்கத்தியான் - செஞ்சியினை

ஆள்வதை ஏனிகழ்ந்தாய்?

இந்து மத்தவன் நான் - மதத்தின்

எதிரி நானனல்வே

சொந்த அறிவிழந்தாய் - பிறரின்

சூறையும் நீ அறியாய்

இந்தத் தமிழ்நாட்டில் - பிறரின்

இன்னல் தவிர்ப்பவன் நான்”

என்கிறான் மன்னன்

“தில்லிது ருக்கரையும் - மற்றுமொரு

திப்புவின் பேரினையும்

சொல்லி இத்தென்னாட்டைப் - பலப்பலத்

தொல்லையில் மாட்டிவிட்டார்

மெல்ல நுழைந்துவிட்டார் - தமிழரின்

மேன்மைதனை அழித்தார்.

அன்னவர் கூட்டத்திலே - உனைப்போல்

ஆரும் தமிழ் நாட்டில்

இன்றும் இருக்கவில்லை - பிறகும்

இருக்கப் போவதில்லை

அன்று தொடங்கி இந்தத் - தமிழர்

அன்புறுநாடு பெற்ற

இன்னலெல்லாம் வடக்கர் - இழைத்த

இன்னல்கள்”

என்று உரைத்தாள். அத்துடன்,

“ஆளும் நவாபினையோ - தமிழர்

ஆரும் புகழுகின்றார்.

தேளென அஞ்சுகின்றார் - செஞ்சியின்

தேசிங்கின் பேர் உரைத்தால்

நாளும் வரும், வடக்கர் - தொலையும்

நாளும் வரும், அதை எம்

கேளும் இளைஞர்களும் - விரைவில்

கிட்டிட வேண்டும்”

என்று கூறுகிறாள். இதற்கு தேசிங்கு,

“நாள் வரட்டும் போகட்டும் ஆனால் இந்த

நலமற்ற தமிழர் மட்டும் வாழமட்டும்

தோளுரமும் மறத்தனமும் அவர்கட்கு இல்லை

சொல்லேடி தமிழச்சி! இருந்தால் சொல்லு.”

நாள்வரட்டும் எந்நாள்? தமிழர் வெல்லு

நாள்தானோ! அந்தநாள் வருவதற்குள்

வாள்வீர வடநாட்டார் வளர்ச்சியின்றி

மலைக்குகையில் தூங்குவரோ ஏண்டி? என்றான்

“தமிழர் எல்லாம் வாழார்கள் நீதான் வாழ்வாய்

தமிழர்க்கு மறமில்லை நன்று சொன்னாய்

இமயமலைக் கல் சுமந்த வடநாட்டான் பால்

சேரனார் இயல்புதனைக் கேள்விப்பட்ட

உனது நாட்டான் இருந்தால் கேட்டுப் பார்ப்பாய்

உயிர்ப்பதைப் பார். தமிழ்மகனைக் கனவில் கண்ட

எமதருமை தமிழ்நாட்டின் எச்சில் உண்டாய்

எச்சலிட்ட கையை நீ இகழ்ச்சி செய்தாய்.

dd

யாமெல்லாம் சாகத்தான் வேண்டும் போலும்

இருந்தாலோ வடநாட்டார் வாழார்போலும்

நீ மற்றும்ஊர் நாட்டார் வளர்ச்சி எய்தி

நீளும் நிலையைத்தானே எதிர்பார்க்கின்றோம்

தூய்மையில்லை நீங்கள் எல்லாம் கலப்படங்கள்

துளிகூட ஒழுக்கமிலாப் பாண்டு மக்கள்

நாய்மனப்பான்மை உமக்கு! வளர்ச்சி பெற்றால்

நடு நிலைமை அறிவீர்கள், அடங்குவீர்கள்!

வஞ்சகத்தைத் தந்திரத்தை, மேற்கொள்ளாத

வாய்மையுறு தமிழ்நாட்டார் தோற்றார் அந்த

வஞ்சகத்தைத் தந்திரத்தை உயிராய்க் கொண்ட

வடநாட்டார் வென்றார்கள். இதன் பொருள்கேள்

நெஞ்சத்தால் தமிழ் நாட்டார் வென்றார். அந்த

நிலை கெட்டார் தோற்றார்கள் என்று ஊர்வாய்

காட்டிலொரு முயற்குட்டி துள்ளக்கூடும்

கருஞ்சிறுத்தை கண்விழித்தால் தெரியும் சேதி.

தோட்டத்துப் புடலங்காய் தமிழ்நாடு

தூங்கி விழித்தால் உடையோன் உரிப்பான்தோல்

அறம் எனுமோர் அடிப்படை கொண்டதுதான் வீரம்

அவ்வீரம் தமிழரிடம் அமைந்ததாகும்

பிறவழியால் வெற்றியொன்றே கருத்தாய்க் கொண்ட

பிழைபட்ட ஒழுக்கத்தைத் தமிழர் ஒப்பார்

ஒன்றுந் தெரியாத முட்டாளே திருந்தச் சொன்னேன்

முன்செய்த குற்றத்தை இனி செய்யாதே

சிறையோடா? கொலையோடா? எனக்குத் தண்டம்

செப்படா என்றுரைத்துத் தீப்போல் நின்றாள்.

(ப..556)

பகர்நற் செஞ்சிப் பாளையப் பட்டாய்த்

தேசிங்கு வடக்கிருந்து தென்னாடு போந்தவன்

தமிழரை இகழும் தன்மை வாய்ந்தவன்

தேசிங்கினையும் தென்னாடு வெறுத்தது.

(பாரதிதாசன் காப்பியங்கள், ப.475)

தேசிங்கின் வரி மறுப்புக்கும் ஆளும் உரிமைக்குமான போராட்டமே

இவனது கதை. இதனைச் சுதந்திரப்போர் என்று பாமர மக்கள் பரிதாபப்பட்டனர். எனவே, அவனை ஏற்றி போற்றிப் பாடி மகிழ்ந்தனர். எனினும் அவனது ஆட்சியில் தமிழ்ப் பெண்களின் மானமும் கற்பும் வடநாட்டு வீரர்களால் சூறையாடப்பட்ட நிகழ்ச்சிகள் பல நடந்திருக்க வேண்டும். அதில் ஒரு வாய்மொழிக் கதையே பாரதிதாசனுக்கு வீரக் காவியம் படைக்கத் தூண்டியிருக்கிறது.