மிழக அரசின் கபிலர் விருது மரபுப் பாவலர் கருமலைத்தமிழாழன் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக் கிறது.

தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும், தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழறிஞர்களுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அந்த வகையில் கடந்த மார்ச் 21-ல் பெருமக்களுக்கு தமிழக அரசின் விருதுகள் வழங்கப்பட்டன. அதில் விடுபட்ட கபிலர் பெயரிலான விருது, இப்போது கருமலைத் தமிழாழனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

மரபுக் கவிஞரான கருமலைத் தமிழாழன், ஓசூரில் தமிழ் ஆசிரியராகவும், தலைமையாசிரியராகவும் பணியாற்றியவர். கவியரங்கம், பட்டிமன்றம் என்று ஏராள மான மேடைகளில் தமிழ் முழக்கம் செய்து வரும் இவர், ஏற்கனவே தமிழக அரசின் 'தமிழ்ச் செம்மல்' மற்றும் ’தூய தமிழ்ப்பற்றா ளர்’ விருதுகளைப் பெற்றவர்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் சிந்தனைச் சிகரம் விருது உட்பட, பல்வேறு அமைப்புகளால் பாவேந்தர், ஒட்டக்கூத்தர் ஆகியோர் பெயரிலான விருதுகளையும் , கவிதைச்செல்வர், தமிழ்மாமணி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட விருதுகளை இவர் பெற்றிருக்கிறார்.

Advertisment

ss

நெஞ்சின் நிழல்கள், காற்றை மணந்த கவிதைகள், நீர்க்கால்கள், வேரின் விழுதுகள் உள்ளிட்ட 24 கவிதை நூல்களையும், மலர்விழி எனும் காவியத்தையும், 2 கட்டுரை நூல்களையும் கருமலைத் தமிழாழன் படைத்திருக்கிறார். இவரது கவிதை நூல்களும் நிறைய பரிசுகளைக் குவித்துள்ளன. குறிப்பாக மலேசியாவின் ஈப்போ மாநில அரசும், ஈப்போ தமிழ்ச் சங்கமும் உலக அளவில் நடத்திய மரபுக் கவிதை நூல் போட்டியில், இவரின் ’செப்பேடு’ கவிதை நூல் முதல் பரிசு பெற்றது.

உலக அளவிலும், இந்திய அளவிலும், மாநில அளவிலும் நடத்தப்பட்ட பல கவிதைப் போட்டிகளில் முதல் பரிசு பெற்றவர் இவர். கம்போடியா அரசின் உயரிய விருதான ஏழாம் ஜெயவர்மன் விருதும் இவருக்கு வழங்கிச் சிறப் பிக்கப்பட்டிருக்கிறது.

கன்னடம், தெலுங்கு மொழி அதிகம் பேசப்படும் ஓசூரில் 1985-ஆம் ஆண்டு முதல், அங்குள்ள தமிழ் வளர்ச்சி மன்றத்துடன் இணைந்து, திருக்குறள் வகுப்புகள் நடத்தி மாணவர்களுக்குத் தமிழுணர்வை இவர் ஊட்டிவருகிறார். இவரது 50 ஆண்டு இலக்கிய பணியைப் பாராட்டும் வகையில், இந்திய அரசு சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பு செய்துள்ளது.

இவரது இலக்கியப் பணியின் வரலாற்றை அண்ணாமலைப் பல்கலைக்கழகமும், மலேசியா பல்கலைக்கழகமும் இணைந்து 150 பக்க நூலாக வெளியிட்டு சிறப்பு செய்துள்ளது.

பாவலர் கருமலைத் தமிழாழனின் தமிழ்ப் பணிகளைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு 2021-ஆம் ஆண்டிற்கான ‘கபிலர் விருதை' வழங்கியது. இவ்விருது 2 லட்சம் தொகையும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும், தகுதியுரையும் கொண்டதாகும். கடந்த 18-ஆம் தேதி, சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த தமிழ்நாடு நாள் விழாவில் தமிழ்நாடு அரசின் கபிலர் விருதினைப் பாவலர் கருமலைத் தமிழாழனுக்கு அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, சாமிநாதன் ஆகியோர் வழங்கிச் சிறப்பித்தனர்.

விருதுபெற்ற பாவலர் கருமலைத்தமிழாழன் சிறந்த திராவிட இயக்கப் படைப்பாளிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

-இலக்கியன்