ரக்கம் இல்லாதோரே அரக்கர் என்று கூறுவர். கம்பர் தான் படைத்த இராம காதையில் அரக்கர் குல இராவணனை அவ்வாறு காட்டவில்லை- அவன் மனைவி மண்டோதரியையும் சீதையோ என்று ஐயப்படத்தக்க மாண்புயர் கற்பரசியாகக் காட்டுகிறார். வீடணன் இராவணனின் இளவல்.

அவனை ஆழ்வாராகக் கொள்கிற அளவுக்கு இராம பக்தனாகச் சமைக்கிறார். கும்பகருணன் இன்னொரு தம்பி, அவனை செஞ்சோற்றுக் கடன்னெண்ணும் செம்மலாக உருக்கொடுக்கிறார்.

அரக்கர் குலத்தோர் அன்பு, பண்பு, பக்தி, பாசம் முதலிய நற்பண்புகள் நிறைந்தவர்களாகவே வாழ்கின்றனர். இராவணன் சிவபக்தியாய் சிறந்து விளங்குகிறான். இசையில் நாரத முனிவர்க்கேற்ப நயம்பட உரைத்த நாவினனான வாழ்கின்றான்.

எதிர்முனைப் பாத்திரங்களான இவர்களை ஒவ்வோர் வகையில் உயர்வாக அமைக்கும் கம்பனின் கவிவன்மை போற்றிப் பாராட்டத் தக்கதாக உயர்ந்து காணப்பெறுகிறது. இவர்களுள் கும்பகருணனைக் கம்பர் நம் முன் மிக உயர்த்திக் காட்டுகிறார்.

Advertisment

இருந்த போதும் இராவணன் நின்றெனத் தெரிந்த மேனியன், கும்பகருணன் உட்கார்ந்து இருக்கும் போது இராவணன் நின்றது போன்ற உயர முடையவன். அவன் உணர்ந்து எழுந்த காலத்து, அசுரர்கள் படுவதெல்லாம்

‘இவன் உணர்ந்து எழுந்த காலத்து அசுரர்

கள் படுவதெல்லாம்

Advertisment

இவன் உணர்ந்து எழுந்த காலத்து இமையவர்கள் படுவர் எந்தாய்’

-திருமால் அரி

nn

துயிலில் எழும் காலத்து, அசுரர்கள் எவ்வாறு அழி வார்களோ. அது போலவே, இந்தக் கும்பன் உறக்கத்திலிருந்து எழுந்து வந்தால், தேவர்கள் இறந்து அழிவார்கள். இவ்வாறு கும்பனின் வீரத்தைக் கம்பர் திருமாலின் வீரத்தோடு ஒப்பிட்டுக் கூறுகிறார்.

இராமன் வாயிலாகவே கும்பகருணன் தோற்றத்தை, தோளொடு தோள்செலத் தொடர்ந்து நோக்குறின் நாள்பல கழியுமால்!’- என்று வியந்து கூற வைக்கிறார் கம்பர்.

தோளை இடது பக்கத்திலிருந்து வலது பக்கம் வரை இடைவிடாது தொடர்ந்து பார்த்து முடிக்கப் பலநாள் ஆகும் என்கிறது கம்ப சித்திரம். இவ்வாறு கும்பகருணன் தோற்றம் வியக்கத்தக்கதாக உள்ளது. இவ்வளவு பெரிய உடம்பைப் பேன, எவ்வளவு அதிகமாக உணவு உட்கொண்டாக வேண்டும்!

அதையும் கம்பர், சுருக்கிச் சொல்லி, விளங்க வைக்கிறார்.

” ஆறுநூறு சகடத் தடிசிலும்

நூறுநூறு குடம் கள்ளும் நுங்கினான்

ஏறுகின்ற பசியை ஏற்றினான்

சீறுகின்ற முகத்து இரு செங்கணான்’

-தூங்கியவனைப் படாதபாடுபட்டு எழுப்பி அமரவைத்தார்கள். அவ்வளவுதான் பெரும்பசியில் துடித்தான்.

இந்நாளில் தூங்கி எழுந்ததும் சில பேர் பல் துலக்கி விட்டு - சிலர் பல் துலக்காமலே காப்பி, தேநீர் அருந்துவதில்லையா?

அது போல கும்பசுருணன் இளபசி ஆறுகிறான். எப்படி? அறுநூறு வண்டிச் சோறு, பத்தாயிரம் குடம் கள்ளுடன் அருந்துகிறான்.

என்ன ஆயிற்று? பசியாறியதா?

’ஏறுகின்ற பசியை ஏற்றினோம்’. இருந்த பசியைத் கிளறிவிட்டாற் போல் ஆனதாம்!

பசி அடங்காததால், சீற்றம் உண்டாகிக் கண்கள் சிவந்தனவாம். உறங்கினால் உறங்கியபடி- உண்டால் உண்டபடி . இதுதான் கும்பகருணன் இன்றாக இருந்தால், கும்பனைத் தூங்கு மூஞ்சி என்போம். தண்டச்சோறு என்போம்.

கம்பன் கும்பனைத் தூக்கத்தில் எவ்லோரையும் விஞ்சுபவனாகவும், குண்டோதரனையும் விஞ்சி உண்பவனாகவும் காட்டியிருப்பது உண்மையே!

ஆனால், நம்மூர்த் திண்ணைத் தூங்கியாகவோ, தண்டச்சோறாகவோ, கும்பனைப் படைக்கவில்லை.

கும்பகருணணைக் கம்பர் எண்ணியெண்ணி, வியந்து வியந்து, போற்றிப் போற்றிச் சமைத்திருக்கிறார்.

மூலநூலில் காணப்படாத கும்பகருணனை வழிநூலாகிய கம்பராமாயணத்தில் நாம் கண்டு, அவனை உச்சிமேல் வைத்து மெச்சுகிறோம்.

முதன்முதல் அண்ணனை அறிவுறுத்திய தம்பி அவன்.

அனுமன் இலங்கையில் நுழைந்து, இராவணன் முன் இருந்து பேசி, இராமன் பெருமையைப் பறையறைந்தான்.

'மூலமும் நடுவும் ஈறும் இல்லதோர் மும்மைத்து ஆய

காலமும் கணக்கும் நீத்த காரணன் கைவில்லேந்தி,

சூலமும் திகிரி சங்கும் கரகமும் துறந்து தொல்லை

ஆலமும் மலரும் வெள்ளி்ப் பொருப்பும் விட்டு’

-அயோத்தி வந்தான் என்று கூறி பரம்பொருள் இராமன் என்பதைத் தெளிவுற இராவணனுக்கு விளக்கினான். எனினும்,

கல்லாருக்கு நல்லார் சொன்ன மெய்ப்பொருளாகவே வீணாயிற்று.

அனுமன் வாலில் தீவைத்தனர். அதைக்கொண்டு அனுமன் இலங்கையை எரித்தான். ஒரு குரங்கு வந்து நம் இலங்கையையே எரித்துவிட்டது என்று இராவணன் கலங்கி, மந்திராலோசனை சபையைக் கூட்டினான்.

இராவணன் அவையில் நெஞ்சுருகிப் பேசினான்.

”சுட்டது குரங்கு; எரிசூறை ஆடிடக்

கெட்டது கொடிநகர்; கிளையும் நண்பரும்

பட்டனர்; பரிபவம் பரந்தது எங்கணும்;

இட்டது இவ்வரியணை இருந்தது என் உடல்”

-இந்த அரியணையில் நான் வீற்றிருக்கும் போதே, இந்த அவமானம் நேர்ந்துவிட்டதே என்று குமுறுகிறான் இராவணன். அதுநாள் வரை அவன் கண்டிராத அவமானம் அல்லவா அது.

kamban

மாமன்னன் - கலக்கம் என்பதையே கண்டிராத வேந்தர் வேந்தன் - கலங்கி மனம் அழிகின்றான் எனும் போது, மந்திரச்சுற்றம் பொறுக்குமா? படைத் தலைவர் முதல் பல்லோரும் அந்தக் குரங்கை விட மாட்டோம். இப்போதே சென்று பற்றி வகுகிறோம் என்று, வீர வசனம் பேசுகிறார்கள். அனுமன் சோலை களை அழித்த போதும், தீயிட்டு எரிந்தபோதும், ஏதும் செய்ய இயலாமல் கையற்றவர்களாக இருந்தவர்கள்தான் இவர்கள் என்பதை அறிந்தால், இவர்களின் ஆவேசப் பேச்சு நம்மை நகைக்கவே வைக்கும்.

இவைகளை அமைதியாக அமர்ந்து கேட்டிருந்த கும்பகருணன், உள்ளத்தால் பெரிதும் வருந்தினான்.

தவறு செய்திருக்கும் இராவணனை யாரும் திருந்தவோ, கண்டிக்கவோ முற்படாமல், அவனுக்கு தூபம் போட்டுத் தூண்டி விடுவதிலேயே கருத்தாக இருக்கின்றார்களே என்று கவன்றான். இனியும் வாளாயிருக்கக் கூடாது என்று, எழுந்து பேசத் தொடங்கினான்.

’என்று எம்பி என்கிற்கில் உரைசெய்வல் இதம்’ என்று கூறித் தொடங்குகிறான். என்னை உன்தம்பி என்று நினைப்பாயானால் உன் தம்பி என்ற உறவு நிலையில் இருந்து உனக்கு நன்மைதரும் மொழி கூறுவேன் என்று நயமாகத் துவக்கம் செய்கிறான்.

நல்ல அடித்தளம் அமைத்துக் கூறுகிறான்.

’அண்ணா நீ பிரமனின் குலத்தில் உதிந்தவன்.

ஆயிரம் மறைப் பொருளை ஆய்ந்தறிந்தவன்.

தீயை விரும்பும் தீவினை புரிகிறாய்.

இவ்வாறான தீமையை விருப்பிச் செய்யும் உனக்கு, இந்தத் தீமைகள் மட்டுமா? இன்னும் ஏதேதோவெல்லாம் நடக்கும்.

நகர் அழிந்துவிட்டதென்று கலங்குகிறாயே, வேறொருவனின் தேவியை விரும்பிக் கொண்டுவந்து சிறை வைத்திருக்கும் செயல் நல்லதா?’

என்று நீ, ஓருவன் இல்லக் கிழத்தியாகிய தவச் செல்வியை முறையின்றி என்று சிறைவைத்தாயோ, அன்றே அரக்கர் புகழ் அழிந்ததே, அறியாயோ ?

கேவலத்தொழில் புரிவோரிடம் புகழ் எவ்வாறு வந்து சேரும்?

மானம் பற்றிப் பேசுகிறவன், காமம் கொண்டவனாக இருந்தலாமா?’

- இவ்வாறான கடிய சொற்களால் இராவணனுக்கு நல்லறம் புகட்டினான்.

இராவணன் நல்லது கேட்பவனாக இல்லை. கடுகடுத்தான். முகக்குறிப்பு உணர்ந்த கும்பன்...

சீதையைச் சிறைவீடு செய்வது நம்மை சிறுமைப்படுத்திவிடும் என்று எண்ணினான். வாருங்கள் எல்லோருமாக அவனை எதிர்சென்றுத் தாக்குவோம் என்று கூறி நிறைத்தான்.

’மூர்க்கரும் முதலையும் கொண்டது விடா என்றாற்

போல

கும்பகருணத் தம்பியின் ’குற்றஞ்செய்து பழிதேடிக் கொள்ளாதே என்ற நல்லுரை இராவணனுக்குக் கசந்தது. ’சேர்ந்து போய்ச் சாவோம்' என்ற வல்லுரை மட்டும் இனித்தது.

வீடணன் தம்பி விளக்கமாக அண்ணனுக்கு இடித்துரை இயம்பினான். மந்திராலோசனை முடிந்தது இராவணன் முதலில் போரிடச் சென்று தோற்றான். இன்றுபோய் நாளைவா' என்று அனுப்பி வைத்தான் இராமன்.

மனம் ஒடிந்து, வந்த இராவணன், தாத்தா மாலிய வானிடம் எல்லாவற்றையும் சொல்லிப் புலம்புகிறான்.

நாசம் வந்துற்ற போதும் நல்லாதோர் பகையைப் பெற்றான்’ என்று இராவணன், ராமனின் உன்னதத்தை உணர்ந்தவ னாகப் பேசுகிறான். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட தாத்தா நல்லுரை நவின்றான்.

‘எவர் சொன்னாலும் அறவுரையை ஏற்காத செவி கொண்டாய்.

நீ அழிவது திண்ணம். உன் சுற்றம் முற்றும் அழியும்'’ என்றான்.

மகோதரன் குறுக்கே வந்து, திரிபுரம் எரித்த சிவபெருமானும், புவனம் மூன்றையும் மூவடிக்குள் ஒடுக்கிக்கொண்ட திருமாலும், உனக்குத் தோற்றவர்கள் தானே...

மானிடன் இராமனோடு உளைந்த போரில் அஞ்சிப் பின் வாங்கலாமா?’

“என் உனக்கு இளைய கும்பகருணனை இகழ்ந் தது?"என்று கேட்டுக் கும்பனைப் போருக்கு அனுப்புமாறு கூறினான். கும்பன் உருவம் கண்டாலே, அந்த இராம இலக்குவர் ஓடி ஒளிவர். என்று அனுப்பு வதற்கான காரணத்தையும் பகர்ந்தான்.

இராவணன் அதனை ஏற்றுக் கும்பனை அழைத்து வரப் பணித்தான். நான்கு பணியாளர்கள் சென்று கும்பனைத் துயில் எழுப்பி னர். அது அவ்வளவு எளிதா என்ன?

இரும்பு உலக்கையால் குத்தி, ‘உறங்குகின்ற கும்பகர்ண' என்று பாடி, எழுப்பப் பார்த்தனர். முடிய வில்லை. கும்பன் எழுவில்லை. ஆயிரம் மல்லரை அனுப்பி, கும்பனை எழுப்பப் பார்கிறான் அண்ணன்.

குதிரைப் படையை அவன் மேல் ஏவுகின்றார். அதன்பின் அயர்ந்து உறங்கினானாம் அந்தத் தூங்குமுஞ்சி !

ஒருவழியாக, தூங்கி எழுந்து அண்ணன் இராவணன் முன் பணிந்து நின்றான். நின்ற குன்று சென்ற குன்றைத் தழுவியது போன்று, இராவணன் கும்பகருணனைத் தழுவிக்கொண்டான்.

இராவணன் கும்பனுக்கு கவசம் முதலியவற்றை அணிவித்துப் போர்க்கோலம் செய்தான். மந்திராலோசனையில் அண்ணனுக்கு அறிவுரை சொல்லிட்டு உறங்கச் சென்றவன், இப்போதுதான், விழித்து வந்திருக்கிறான். இடையில் நடந்தது எதுவும் அவனுக்குத் தெரியாது. அண்ணன் தனக்குப் போர்க்கோலம் செய்வது எதற்காக என்று புரியாமல் ‘ஆயத்தம் யாவையும் என்ன காரணத்தால்?' என்று கேட்கிறான். மானிடரும் வானரங்களும் நகரை முற்றுகையிட்டனர். நீ சென்று அவர்களின் உயிரை மாய்த்துவா என்றான்.

கும்பன் அண்ணனிடம்.

”ஆனதோ வெஞ்சமம் அலகில் கற்புடைச்

சானகி துயர் இனம் தவிர்ந்த தில்லையோ?

வானமும் வையமும் வளர்ந்த வான்புகழ்

போனதோ ?புகுந்ததோ பொன்றும் காலமே ?”

என்று கேட்கிறான்.

நான் முன் சொன்ன சொற்படி சானகியை இன்னமும் நீ விடவில்லையா? இது விதியின் விளையாட்டுதான் என்கிறான்.

இராமனை வென்று விடலாம் என்று நீ நினைப் பது, சீதை மேனியைப் புல்லலாம் என்பதைப் போன்றதுதான். உனக்கு இரண்டுமே முடியாத செயல்களே. தையலை விட்டு அவன் திருவடி பணிந்து, உன் அருமைத் தம்பி வீடணனுடன் நட்பு பேணுவாய். இல்லையேல்.. வா எல்லோருமாகச் சென்று போரிடுவோம். ஒவ்வொருவராய் அனுப்பி விட்டு, அவர்களை இழந்து அழுவது முறையன்று என்று எடுத்துரைத்தான்.

இந்த நல்லுரைகள் இராவணனுக்கு ஏற்புடையதாய் இல்லை. சினத்தை கிளறிற்று. அவன் சொன்னான், ”எனக்கு அறிவுரை சொல்ல நீ என்ன அமைச்சனா?

போருக்குச் செல்ல அஞ்சுகிறாயா? மிக நன்றாய் இருக்கிறது உன் வீரம்?

மனிதனையும் குரங்கையும் வணங்கி வாழ உன்னாலும் உன் தம்பியாலும் மட்டுமே முடியும். நான் அது செய்யமாட்டேன்.

“தருக என் தேர்படை நானே போருக்குப் போகிறேன் என்று சீறினான்.

கும்பன் இராவணன் அடிகளை வீழ்ந்து வணங்கினான்.

’பொறுத்துக்கொள்’ எனக் கூறிவிட்டு சூலத்தை அண்ணனிடம் இருந்து வாங்கிக்கொண்டான்.

”அண்ணா நான் சொல்லவேண்டுவது, இன்னும் உளது” என்றுரைத்துத் தொடங்கினான்.

‘வென்று வருவேன் என்று சொல்ல இயலவில்லை. என்னை இப்போது விதி பிடறி பிடித்துத் தள்ளுகிறது. போரில் இறப்பேன். நான் இறப்பதை கண்டறிந்த பிறகாவது, என்னையே வெல்வாரானால், உன்னை வெல்வது உறுதி என்பதை உணர்ந்து - மேலும் சிந்தித்திராமல் சீதையை விட்டுவிடுவது தவப்பயனா கும்’ என்று சொல்லிவிட்டு, மேலும் சொன்னான்.

”இது நாள்வரை உனக்கு ஏதாவது தீங்கிழைத்திருப் பேனானால் என்னைப் பொறுத்தருள்வாயாக. இனி உன் முகத்தைக் காணும் பேறு கிடைக்கப்போவது இல்லை. விடைபெற்றுக் கொள்கிறேன்”

இவ்வாறு வரப்போவதை முன்னரே கூறிவிட்டு, விடையும் பெற்றுப் போருக்குப் புறப்பட்டான். கும்பகருணனின் உருக்கமான பேச்சைக் கேட்ட இராவணனின் கல் நெஞ்சமும் கசிந்தது.

‘அவ்வழி ராவணன் அனைத்து நாட்டமும்

செவ்வழி நீரோடும் குருதி தேக்கினான்’

-என்கிறார் கம்பர். இராவணனின் இருபது விழிகளும், ரத்தக் கண்ணீர் சிந்தினவாம். சகோதரப் பாசம், அரக்கர் குலத்திலும் வேரூன்றி உள்ளது. கும்பகருணனின் பாத்திரப்படைப்பு வியப்பூட்டுகிறது.

இருவேரு பண்புகளின் மோதலாக அவன் அமைந்துள்ளான்.

நீதியும் நன்றி உணர்ச்சியும், ஒன்றையொன்று வென்று வென்று நிற்கிறது. பேசுவது மானம் ஆனால், பேணுவது காமம் என்பது எவ்வாறு சரியாகும் என்று கேட்கிற போது நீதிமானாக நிற்கிறான்.

‘என்னை வென்றுளர் என்னின், உன்னை வென்று உயருதல் உண்மை. நான் போருக்குப் போகிறேன். உறுதியாக நான் தோற்று அழிவேன். அதன் பிறகா வது நிலைமையை உணர்ந்து, சீதையை விடுவித்து நீ வாழ்வாயாக என்று கூறும் போது, அவனது செய்ந்நன்றி உணர்வினை உணர்கிறோம்.

அநீதிப் பக்கம் நின்று போரிடுவது குற்றம் என்பது கும்பனுக்குத் தெரிகிறது. ஆனால் பாசமும், தன்னை வளர்த்தவனுக்கு செய்யவேண்டிய நன்றிக்கடனும் முந்திக்கொள்கிறது.

வெற்றி பெறுவதற்காக அவன் போருக்குப் போகவில்லை. பகைவரின் வலிமையை இராவணனுக்கு உணர்த்துவதற்காகப் போகிறான். தங்கள் பக்கம் நியாயம் இல்லை என்பதை உணர்ந்துதான், கும்ப கருணன்,

’வென்று இவன் வருவன் என்று உரைக்கிலேன்

பொன்றுவன்’-என்கிறான்.

‘வெற்றி கிடைக்காது. தோற்று வரமாட்டேன். போர்க்களத்திலேயே மாள்வேன்’ என்கிறான்.

தெரிந்திருந்தும் ஏன் போருக்குப் போகவேண்டும்?

அண்ணனைப் பிழைக்கச் செய்வதற்காக, தான் சாக முடிவெடுக்கிறான்.

‘கள்வர்கள் கன்னம் வைத்து வீடுகளில் திருடுவார் கள். சுவரில் கன்னக் கோலால் துளையிட்ட பிறகு, உடனே நுழைந்து விடமாட்டார்கள். வீட்டினுள்ளே யாராவது விழித்திருந்தால், தலையில் ஏதேனும் கட்டப்பாரை போன்ற கருவியால் தாக்குவார்கள். மண்டை பிளக்கும். அதனால் தாங்கள் நுழையாமல், ஒரு கருப்பான பானையைக் குச்சியில் வைத்து உள்ளே நுழைப்பார்கள். உள்ளே இருப்போர், பானையைத் தலையென நினைத்துத் தாக்கினால், திருடர்கள் தப்பித்து ஓடிவிடுவார்கள்.

கும்பனின் செயல் அந்தக் கள்வர்கள் செயலை ஒத்ததுதான். இராவணன் தன்னை ஒரு கரிப் பானையாகப் பயன்படுத்தி, இராமனிடம் இருந்து தப்பித்துக்கொள்ளட்டும்.

இது கும்பன் எண்ணம்.

கும்பகருணனுக்குத் தன் அழிவு பற்றித்தெரியும். ஆனால், அதற்காக அவன் ஏனோ தனோவென்று போர் செய்யவில்லை.

அவன் நெஞ்சில் நீதி மறைந்து, பாசமும் நன்றியுணர்ச்சியும் மேலோங்கியது.

போர்க்களத்தில் வீடணத் தம்பி வந்து, இராமனோடு சேர்ந்திடுமாறு அழைக்கிறான். அந்த அழைப்பைச் சிறிதும் தயக்கமின்றி மறுக்கிறான்.

வீடணன் வருவதைப் பார்த்த கும்பன், தன்னோடு சேர்வதற்காக வருவதாக நினைத்தான். வீடணனிடம் கேட்கிறான்.

”அமுது உண்பாயோ? நஞ்சு உண்பாயோ?” என்று, இராமனின் சேர்க்கையை அமுதுண்பதாகவும், இராவணன் பக்கம் வருவதை நஞ்சுண்பதாகவும் கருதுகிறான்.

இராவணன் பக்கம் இருப்பது நஞ்சினை உண்பதாகவே அமையும் என்பதை அறிந்திருந்த கும்பகருணன், குலப்பாசம், நன்றியுணர்வு காரண மாகவே அவ்வாறான முடிவில் உறுதி காட்டு கிறான்.

நீர்கோலம் போன்ற இந்த நிலையில்லாத வாழ்வுக்காக, இவ்வளவு நாள் வளர்த்து, இன்று போர்க்கோலம் செய்து அனுப்பிய அண்ணனுக்கு உயிரைக் கொடுப்பேன். உயிரோடு இலங்கை மீளேன். தம்பி, என் துயரைப் போக்க எண்ணினால் இராமனோடு சென்று, விரைவாக இணைந்துகொள்.’

செய்ந்நன்றியறிதல் பண்பின் உச்சமாகத் திகழ்கிறான்.

திருவள்ளுவர் 11 ஆவது அதிகாரமாக செய்ந்நன்றி அறிதல் அதிகாரத்தை வைத்துள்ளார். 12 ஆவதாக நடுவுநிலைமை அதிகாரம் அமைத்துள்ளார். பரிமேலழகர் அதிகார வைப்புமுறை குறித்துக் கூறும் போது, செய்ந்நன்றி அறிதலுக்காகக் கூட, நடுவுநிலை பிறழக்கூடாது என்பதை நிறுவவே, அதனை அடுந்து இதனை வைத்தார் என்று விளக்குகிறார்.

கும்பகருணனால், ’கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும்.’

என்ற குறளுக்கு விளக்கமாக நிற்கிறான் வீடணன்,

’சமன்செய்து சீர் தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி’

- என்ற குறளை அடையாளப்படுத்துகிறான்.

இதனாலேயே வீடணனைக் கம்பர் 'அறிஞரின் மிக்கான்' என்று போற்றுகிறார். எளிய சாதாரண மனிதன், செய்த நன்மையை மறவாதவனாக இருப்பான். நன்மை செய்தவன் நல்லவரா இல்லையா என்பதை அறியமாட்டான் அவனுக்கு செய்ந்நன்றியறிதலாக உதவுவது நன்மையை வளர்க்குமா? தீமையை வளர்க்குமா? என்பது பற்றியும் அக்கறை கொள்ள மாட்டான்.

நீ தலைவனாகப் போகிறவன்; உனக்கு அது தக்கது. ஆனால், எனக்கோ? இழிவாக மரணம் எய்தல் புகழேயாகும். உனக்குத் தக்கதை நீசெய்; எனக் குப் புகழ்சேர்க்கும் மரணத்தை நான் ஏற்கிறேன்' என்கிறான்.

நீதி தெரிந்தே, அநீதியின் பக்கம் சேர்ந்து போரிடுகி றான். சாகப்போவது தெரிந்தே சமர்புரிகிறான்.

ஆனாலும் அவன் போரிட்டத்தில் ஏதும் குறையில்லை. அண்ணனுக்காக - செஞ்சோற்றுக் கடனுக்காக - முழு ஆற்றலையும் பயன்படுத்திப் போர் நடத்துகிறான். கும்பனோடு இராமனே முன்னின்று போரிடுகிறான்.

இராமன் கும்பனின் வலது கையை அறுக்கிறான். இடக்கரத்தால் வலக்கரம் பிடித்துச் சண்டையிடுகிறான் கும்பன். முன்னிலும் ஆற்றல் நிறை போராயிற்று அது. இடக்கரத்தையும் வெட்டினான் இராமன். கும்பன் சளைக்காமல் கால்களால் பாறைகளை விட்டெறிந் துத் தாக்கினான், கால்களையும் ஒவ்வொன்றாக இராமன் வெட்டக் கடைசியில் கீழே விழுந்தான் கும்பன்.

”ஐயன் வில்தொழிற்கு ஆயிரம்

இராவணர் அமைவிலர்; அந்தோ! யான்

கையும் கால்களும் இழந்தனன்; வேறு

இனி உதவல் ஆம் துணை காணேன்”

-அண்ணன் இழைத்த தீமைக்காகத்தான், தான் தன்னிரு கைகளையும் கால்களையும் இழந்து கிடக்கும் போதும், அவன் உள்ளம் தன்னைப் பற்றி எண்ணவில்லை.

அண்ணனுக்கு உதவ வேறு வழியில்லையே என்று வருந்துகிறான்.

வரம்பின்றி வாழ்ந்தானுக்கு

உய்யுமாறு அரிதென்று

தன் உள்ளத்தின் உணர்ந்து

ஒரு துயருற்றான்”

-என்று சித்திரம் படைக்கிறார் கம்பர். அண்ணன் அழிந்துவிடுவானே! இராமன் வில்லாற்றலுக்கு ஆயிரம் இராவணன் கூடி வந்தாலும் ஈடாக முடியாதே! என்பது அவன் கவலை.

கும்பகருணன் இறந்துவிட்டான். ஆனாலும் கம்பன் தன் கைத்திறந்தால் அவனை சாகா வகையில் படைத்து வைத்துள்ளார். நடுவு நிலைமையைப் புறந் தள்ளி செய்ந்நன்றி அறிதலை அகங்கொண்டு, அதற்காக உயிரைத் துறந்த கும்பகருணன், காலங் கடந்து வாழ்வான். ஆம், கும்பகருணன் கூற்றுவனை வென்றவன்தான்!