கவிதைச் செழுமைமிக்க தமிழில் சிறுகதை வடிவம் சிறகடிக்கத் தொடங்கியது மேலைநாட்டு இலக்கியப் படைப்புகளின் தாக்கத்தில்தான். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட கவிதைச் சிந்தனையையும் செழுமையையும் பெற்ற மொழியில் சிறுகதை என்ற வடிவம் தன் இடத்தைத் தக்க வைத்துக்கொள்ளப் பல காலம் கடந்து வரவேண்டியிருந்தது. எது சிறுகதை என்பதற்காக இலக்கணம் காலத்திற்கேற்ப அவரவர் படைப்பாற்றலுக்கேற்ப உருமாறிக் கொண்டே வந்திருக்கிறது. சிறுகதை மன்னர் எட்கர் ஆலன்போ சிறுகதை என்பது அரை மணியிலிருந்து ஒரு மணி அல்லது இரண்டு மணி அவகாசத்துக்குள், ஒரே மூச்சில் படித்து முடிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். அது தன்னளவில் முழுமை பெற்றதாயிருக்க வேண்டும். அது தரும் விளைவு தனி மெய்ப்பாடாயிருக்க வேண்டும். கதையைப் படித்து முடிப்பதற்குள் புறத்தேயிருந்து எவ்விதக் குறுக்கீடுகளும் பாதிக்காமல், வாசகனின் புலன் முழுவதும் கதாசிரியனின் ஆதிக்கத்தில் கட்டுப்பட்டதாயிருக்க வேண்டும் என்றும் திறமை வாய்ந்த இலக்கிய மேதை ஒருவன் சிறுகதையை எழுதும் போது, கதையின் நிகழ்ச்சிகளுக்காக அவன் கருத்துக்களைப் புனைவதில்லை. குறித்த ஒரு முடிவுக்காக ஆழ்ந்த கவனத்துடன் நிகழ்ச்சிகளைக் கற்பனைகளைக் கண்டுபிடிக்கிறான் என்றார்.
இந்தக் கருத்தைச் சிறுகதையின் இலக்கணமாக வரையறுத்துக் கொண்ட வரலாறு அவருக்குப் பின் 1901-ல் பிரான்டர் மாத்தியூஸ் என்ற திறனாய்வாளரின் சிறுகதை என்பது ஒரேயொரு பாத்திரத்தின் நடவடிக்கைகளைப் பற்றியோ, ஒரு தனிச் சம்பவத்தைப் பற்றியோ, அல்லது ஒரு தனி உணர்ச்சிதரும் விளைவையோ எடுத்துக் கூறும் இலக்கிய வடிவம் என்கிற கருத்தையும் கவனத்தில் எடுத்துக் கொண்டது. அவர்தான் சிறுகதை என்பது சிறிய கதை என்ற பொருளில் இல்லாமல் ஒரு புதிய இலக்கிய வடிவத்தின் பெயரைக் குறிக்கும் தனிச் சொல்லாகப் பயன்படுத்தி வரப்பெற்றது என்று குறிப்பிட்டார்.
கலைஞர் தன் எழுத்து வன்மையை எல்லாத் தளங்களிலும் நிலைநாட்டியுள்ளார் என்பதை அவர் படைப்புகளைப் பாரபட்சமின்றிக் கூர்ந்து கவனிப்பவர்கள் கண்டுகொள்ள முடியும். தன் எழுத்து யாருக்காக, எந்த இலட்சியத்துக்காக என்பதில் தெளிந்த முடிவோடுதான் ஒவ்வொரு படைப்பையும் அவர் தந்திருக்கிறார் என்பதே அவருக்குள்ள தனிப்பெருமை. சின்னஞ்சிறு வயதில் இருந்தே ஆதிக்கச் சக்திகளுக்கு எதிராக எல்லாவகைப் போராட்டங்களையும் முன்னெடுத்தவர் கலைஞர் என்றாலும், எழுத்தின் மூலம் அவர் தொடர்ந்து தொடுத்த போராட்டங்கள் சமூகநீதி, சமதர்மம், பகுத்தறிவு, சாதிக் கொடுமைகள் பொதுவுடைமை என்ற தளங்களில் ஆழக்கால் பதித்து எழுந்தவை என்பதை மறுக்க முடியாது.
திராவிட இயக்கப் படைப்பாளர்களையும் படைப்புகளையும் ஒரே மூச்சில் ஓரம் கட்டத் துடிப்பவர்களின் துடிப்பு, கலைஞரின் சிறுகதைகளின் வீச்சு எப்படிப்பட்டது என்பதை அறிந்தும் அறியாதவர்கள் போல் நடத்துகிற நடிப்புதான். தான் ஏற்றுக் கொண்ட இலட்சியத்துக்கு படைப்புலகின் எல்லாத் தளங்களையும் தனக்குச் சாத்தியமாக்கிக் கொண்ட கலைஞர், தன் சிறுகதைகளின் வழியேயும் அவற்றையே முழங்கியிருக்கிறார். அவருடைய சிறுகதைகள் பழக்கூடை, கண்ணடக்கம், நளாயினி, முடியாத தொடர்கதை, பதினாறு வயதினிலே என்று சில தொகுப்புகளாக வெளிவந்திருப்பினும் அவை எழுதப்பட்ட காலச்சூழலையும், சமூகச் சூழலையும் கணக்கில் கொண்டுதான் அவற்றைக் குறித்த மதிப்பீட்டைச் செய்ய முடியும். ஒரு மொழியின் செழுமையை, சமுதாய நிலையை எல்லா வகைப் படைப்பாளிகளின் படைப்புகளையும் எடை போட்டுப் பார்த்துத்தான் அறிய வேண்டுமே தவிர, தங்களுக்கு உடன்பாடில்லை என்பதற்காக எந்தப் படைப்பாளியையும் போகிற போக்கில் ஒதுக்கிவிட்டு அறிய முடியாது. கலைஞர் எதிர்கொண்டு வந்த சமூகச் சூழல் எப்படியிருந்தது என்பதையும் நாம் காண வேண்டும். அவர் எழுதியுள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் அவருடைய இலக்கைக் குறிவைத்தே எழுதப்பட்டுள்ளன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
அரை நூற்றாண்டுக்கு முன்பே, கலைஞர் தான் ஏற்றுக் கொண்ட கருத்துகளைத் தன் சிறுகதைகளில் அங்கங்கே விதைத்திருக்கிறார். புராணக் கதைகளை ஏற்றுக் கொள்ளாத கலைஞர் அவற்றுக்கு எதிராகவே தன் எழுத்தைச் சுழற்றியிருக்கிறார். சமுதாய அவலங்களைத் தோலுரித்துக் காட்டுகிற அவருடைய சிறுகதைதான் "குப்பைத்தொட்டி' என்கிற கதை. தெருவோரக் குப்பைத்தொட்டி தனக்குள் தானே பேசிக்கொள்வதாகக் கதையை நகர்த்திச் செல்கிற கலைஞர் தன் கருத்துகளை வெவ்வேறு நகர்வுகளின் மூலம் புகுத்திவிடுகிறார்.
அ. மாதவய்யர், மகாகவி பாரதி, கல்கி, விந்தன் போன்ற முன்னோடிப் படைப்பாளர்கள் சமுதாயத்தின் போலித்தனங்களையும், ஏற்றத் தாழ்வுகளையும், சாதிக் கொடுமைகளையும், கடவுளின் பெயரால் நடைபெறும் ஏமாற்று வேலைகளையும் தோலுரிக்கத் தவறவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கலைஞர் ஏற்றுக் கொண்ட பாதைவேறு. இலட்சியம் வேறு. கொள்கைகள் வேறு.
அவருடைய குப்பைத்தொட்டி எப்படித் தொடங்குகிறது பாருங்கள்.
""வீதியோரத்தில் அந்த மாடி வீட்டுக்குக் கீழேதான் நான் நீண்டநாள்களாகத் தவம் செய்து கொண்டிருக்கிறேன். என்னுடைய தவம் எந்தக் கடவுளையும் வரவழைத்து அவர்களிடம் ஏதாவது அபூர்வமான வரங்கள் வாங்க வேண்டும் என்பதற்காக அல்ல!'' என்று தொடங்குகிறது. இந்தக் கதையை ஆழ்ந்து கவனிக்க வேண்டும். இந்தக் குப்பைத்தொட்டியில் ஒரு புராணப் புத்தகத்தின் செல்லரித்த சில ஏடுகள் வந்து விழுகின்றன. அதைப் படித்துப் பார்த்தபின்தான் தவத்தைப் பற்றித் தெரிந்து கொண்டதாம். இந்த இடத்தில் கலைஞர் எழுதுகிறார்.
விசுவாமித்திரர் தவத்தைக் கெடுக்க வந்த மேனகையின் சாகசங்களையும், அவளது வலையில் முனிவர் விழுந்த பிறகு, அவள் புரிந்த சரசங்களையும், கானகத்து அருவி யோரங்களில் அவர்கள் நடத்திய காதல் கேளிக்கை களையும், கடவுளை நினைக்கும் தவக்கூடம் காமவேள் நடனசாலையாகவும் காட்சியளித்ததையும், மகேஸ்வரன் வருவதற்கு முன்பு மலர்மாரன் வருகைதந்து மாமுனிவரை மங்கையின் மடியிலும் காலடியிலும் உருட்டி உருட்டி மகிழ்ந்ததையும், ஜெபமாலை இருந்த கையில் மேனகையின் துடியிடை சிக்கித் தவித்ததையும், மறைந்துள்ள முனிவரின் தடித்த உதடுகள் மேனகையின் மெல்லிதழ்த்தேன் பருகிடத் துடித்த விந்தையையும் வெகுசுவையுடன் நான் படித்துக் கொண்டிருக்கும் போதுதானா அந்தக் குப்பை வண்டிக்காரன் வந்து தொலைய வேண்டும்?
கலைஞரின் எழுத்தில் வழிந்தோடுகிற கிண்டல், குப்பைத்தொட்டியின் பக்கத்தில் நாலைந்து வீடு தள்ளி இருந்த பஜனை மடப் புராணப் பிரசங்கங்களையும் விட்டுவைக்கவில்லை. அன்றைய காலகட்டத்தில் இப்படிப்பட்ட புராணப் பிரசங்கங்கள் எப்படியிருந்திருக்கின்றன என்பதைத் தெளிவாக்குகிற கலைஞர் குப்பைத்தொட்டியில் வந்து விழுவதைப் பற்றி விவரித்துக் கொண்டே போகிறார். எவருக்கோ வாத்தியாரம்மா வேலை வாங்கித் தரவேண்டிய விண்ணப்பம் கிழித்தெறியப்பட்டு வந்து விழுவது, குப்பைத்தொட்டி அருகில் வந்து உட்கார்ந்த பிச்சை எடுத்த இந்நாட்டு மகராஜா, அவன் கூட்டிவந்த மகாராணி, அவளுக்கு மகாராஜா எட்டணாவைத் தருவது, அவனைக் காவலர்கள் அழைத்துச் செல்வது என்று விரிகிற கதை எப்படி முடிவடைகிறது என்பதுதான் முக்கியம். ஓ ஹென்றியின் கதைகளைப் போலத் திடீரென்ற அதிர்வை ஏற்படுத்துகிறார். குப்பைத்தொட்டி சொல்வதைக் கேளுங்கள் இந்த நாட்டில் எத்தனையோ மக்கள் வயிறாரச் சோறின்றி வாடுகிறார்கள். என் வயிறோ காலியாகக் காலியாக நிரம்பிக் கொண்டேயிருக்கிறது. அய்யோ.. உங்களோடு பேசிக்கொண்டிருக்கும் போது யாரோ ஒரு பெண் பதுங்கிப் பதுங்கி வருகிறாளே. சற்று மறைந்து கொள்ளுங்கள். ஆம். அவளுடைய கையில் ஒரு குழந்தையிருக்கிறது. பச்சைக் குழந்தை. இப்போதுதான் பிறந்திருக்கிறது. அடடா! அதன் கழுத்தெல்லாம் ரத்தம். குழந்தை தூங்குகிறதா? இல்லை! செத்துவிட்டது.
கழுத்து முறிக்கப்பட்டிருக்கிறது. சரிதான். அவள்தான் குழந்தையின் தாய்! குழந்தையை என் வயிற்றில் போடப் போகிறாள்-போட்டேவிட்டாள்! அவள் ஓடுகிறாள். என்னைப் போலீஸ் வலையிலே மாட்டிவிட்டு அவள் ஓடுகிறாள். ஏன் ஓடுகிறாள்? புரிகிறது.. புரிகிறது.. அவள் கழுத்தில் தாலியைக் காணோம்.
இந்தக் கதையில் குப்பைத்தொட்டி எப்படிப் பேசுகிறது என்பதை எண்ணிப் பார்த்தால் அந்தச் சொல்லாடல் ஒரு குறியீடுதான் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். நாட்டுநிலை எப்படி யிருந்தது என்பதைச் சொல்லாமல் சொல்லி யிருக்கிறார் கலைஞர்.
தன் ஆட்சிக் காலத்தில் சமத்துவபுரம் கண்டவர் கலைஞர். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம் இயற்றியவர். ஆனால் அதை நடைமுறைக்குக் கொண்டுவரப் பலகாலம் சட்டப் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படுகிற கொடுமைகளைக் கண்டு கொதித்த கலைஞருக்குள் எழுந்த கதைதான் பிரேத பரிசோதனை.
அன்றைய காலகட்டத்தில் பலரின் பெயருக்கும் பின்னால் ஏதோ பட்டப்பெயரைப் போலச் சாதிப்பெயர் ஒட்டிக் கொண்டிருக்கும். அதையே தங்கள் வாழ்நாள் பெருமிதமாக எண்ணிக் கொண்டிருந்தவர்கள் ஏராளம். ஆனால் அழுக்குப்பட்ட சிந்தையை அவர்களால் கழுவிக்கொள்ள முடிந்ததில்லை. தங்கள் குற்றங்களை மறைக்கச் சாதிகளையும் சாமிகளையும் முன்வைத்துத் தப்பித்துக் கொண்டார்கள். இந்தக் கதையில் தாழ்த்தப் பட்ட சமுதாயத்தைச் சார்ந்த பெண்ணைத் தன் இச்சைக்குப் பலியாக்கிய ஊர்ப்பெரிய மனிதர் அவள் கருவுற்றதும் மிரட்டித் துரத்திவிடுகிறார். அந்தப் பெண்மணி கர்ப்பவதியாக மருத்துவமனைக்கு வருகிறாள்.
ஆனால் அவள் விரட்டப்படுகிறாள். அவளோ இறுதியில் குளத்தில் விழுந்து இறந்து போகிறாள். ஏன் அவளுக்கு வைத்தியம் பார்க்கவில்லை? அவள் தாழ்த்தப் பட்டவள் என்பதுதான். குழந்தை யாருடையது?
அந்த ஊர்க் கோயிலைக் கட்டிய பெரிய மனிதருடையது. அவள் யார்? கறுப்பாயி. மூன்று வருடங்களுக்கு முன் மூஷிக விநாயகர் கோயில் திருப்பணியின் பொழுது கர்ப்பக்கிரகத்துக்கு ஏற்றப்பட்ட கருங்கல் விழுந்து இறந்து போன காத்தமுத்துவின் மனைவி. அவள் ஏன் விரட்டப்பட்டாள்? நாளைக் காலை எட்டு மணிக்கு வினைதீர்த்த ஸ்வாமி கோயிலில் அரிஜன ஆலயப் பிரவேசம் அதிவிமரிசையாக நடைபெறும்? பக்தர்கள் வருக வருக என்கிற விளம்பரம்தான் காரணம்.
இந்தக் கதையின் தொடக்கமே டாக்டர் பிச்சுமூர்த்தி நல்வழிப் புத்தகத்தைப் புரட்டிக் கொண்டே வில்ஸ் சிகரெட்டின் புகையை அறையெங்கும் பரப்பிக் கொண்டிருந்தார் என்று தொடங்குகிறது. அன்றைய நாளில் நல்வழி என்ற இதழ் வெளிவந்து கொண்டிருந்தது. உடல்நலன் சார்ந்து பல அரிய கட்டுரைகள் வெளிவந்த இதழ். மருத்துவர் அந்த இதழைப் படித்துக் கொண்டே சிகரெட்டை ஊதித்தள்ளுகிறார். எத்தனை எள்ளல். வினைதீர்த்தவூர் கிராம தர்ம ஆஸ்பத்திரி எந்நேரமும் சிகிச்சை செய்யப்படும் என்ற பலகை தொங்கிக் கொண்டிருக்கிறது. கலைஞர் எழுதுகிறார். கடிகாரம் டாண்..டாண்.. என்று அடித்தது. மணி ஒன்பது. சீக்கிரம் பூட்டிவிட்டுக் கிளம்புங்காணும் என்று சொல்லிக் கொண்டே சிகரெட்டை எறிந்துவிட்டுப் புத்தகத்தையும் மேஜைமேல் போட்டபடி டாக்டர் எழுந்தார்.’’
இந்த வரிகளுக்குள் டாக்டரின் பணி எப்படி இருக்கிறது என்பதைச் சொல்லாமல் சொல்கிறார் கலைஞர். அப்போது அரிஜன ஆலயப் பிரவேசம் தொடர்பாகத் தம்பட்ட ஒலி கேட்கிறது. டாக்டர் கேட்கிறார், ""என்ன கம்பவுண்டர்! ஊர் ரகளைப்படுதே உமக்கெல்லாம் சம்மதந்தானே?'' டாக்டர் இந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டு நாயுடுவின் முகத்தை ஆவலோடு நோக்கினார்.
""நமக்கென்னாங்க.. தினை விதைச்சவுங்க.. தினை அறுப்பாங்க. உம்.. உலகம் பெரளப் போகிறது போங்க'' என்கிறார் கம்பவுண்டர்.
இருவரும் வெளியே வருகிறார்கள். அப்போதுதான் பூரண கர்ப்பவதி கறுப்பாயி வந்து கதறுகிறாள். ""ஆ.. அய்யோ.. கடவுளே..சாமி என்னைக் காப்பாத்துங்கோ.. கோடி புண்யமுண்டு. எனக்கு ஒருத்தரும் இல்லீங்க. நீங்கதான் கடவுள் மாதிரி என்னைக் காப்பாத்தணும். அய்யோ.. அப்பா..''
இதை எழுதிவிட்டுக் கலைஞர் தொடர்கிற வரிகள்தான் சமுதாய நிலையைச் சாட்டையில் அடிக்கிறது.
உம்.. சீக்கிரம் கேட்டைப் பூட்டு டாக்டர் கம்பவுண்டருக்கு உத்திரவிட்டுவிட்டு அந்தப் பெண்ணின் முகத்தில் மீண்டும் ஒரு தடவை டார்ச்சை அடித்து.. ""அனாதையாம்.. அனாதை.. அனாதைக்குப் பிள்ளை ஆசை'' என்று கிண்டல் செய்தார். ""எல்லாம் காசுக்குத்தான்'' கம்பவுண்டர் சிரித்துக்கொண்டே இந்த வார்த்தைகளை டாக்டரின் முன்னே சமர்ப்பித்து ஏதோ மேதாவித்தனமாகப் பேசிவிட்டதாகப் பெருமைப்பட்டுக் கொண்டார். ""ஏ.. நீ என்ன ஜாதி? டாக்டருக்குக் கொடுக்கப் பணம் இருக்கா?'' நாயுடுகாரு மீசையை முறுக்கிக்கொண்டே அவளைப் பார்த்தார்.
""நான்.. பறைச்சி சாமி.. எங்கிட்ட ஏதுங்க பணம்?''
இதை அவள் முடிக்கவில்லை. ""தூ.. பற நாயே.. துரத்து கழுதையை.. உம் ஒத்தி நில்லு'' டாக்டர் பிச்சுமூர்த்தி அவசரமாகக் கீழே இறங்கினார். கம்பவுண்டர் கனல் தெறிக்கும்படியாக ஒரு கோரச் சிரிப்பு சிரித்துவிட்டு.. ""அரிஜன மங்கையா? ஆஸ்பத்திரியில் பிரசவமாக்கும். அர்த்த ராத்திரியிலே! காலையில் ஆலயப் பிரவேசம் பண்ணுபோ!'' என்று குட்டி உபதேசம் செய்து முடித்து.. போர்டு லைட்டையும் நிறுத்தினார்.
இந்த இடத்தில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்துகிறார் கலைஞர். அந்தத் திருப்பத்தின் வழியேதான் பண்ணையார் அண்ணாமலை முதலியாரை அடையாளங்காட்டுகிறார். இந்தக் கதையைக் கலைஞர் எப்படி முடிக்கிறார் என்று பார்க்க வேண்டும்.
ஊர் கூறிற்று. கடவுளின் திருவிளையாடல் என்று. டாக்டர் நடித்தார் காரணம் கண்டுபிடிப்பதாக! உலகத்துக்குத் தெரியுமா? சமுதாய அமைப்பிலே, நாட்டு நடப்பிலே உள்ள கோளாறு நஞ்சாக மாறிக் கறுப்பாயியைக் கொன்றுவிட்டது என்ற உண்மை? யாருக்குத் தெரியும்? அது தெரிந்தால்தானே பிரேத விசாரணையில் வெற்றியடைந்ததாக அர்த்தம்?
எப்படிப்பட்ட கூர்மையான வினாவை முன்வைக்கிறார் கலைஞர் என்பதை இன்னும் இந்த மண்ணில் நடத்தப்படுகிற ஆணவக்கொலைகளைக் கணக்கிட்டுப் பதில் சொல்ல முடியுமா? கலைஞர் எழுதினார் என்பதற்காக வரிந்து கட்டிக்கொண்டு வசைபாடுகிறவர்கள் பொன்னியின் செல்வன், சிவகாமியின் செல்வன் எழுதிய கல்கி அவர்கள் எழுதிய கதையையும் எண்ணிப் பார்க்க வேண்டும். அந்தக் கதை விஷமந்திரம் என்கிற கதை.
மிகவும் வைதீக சம்பிரதாயத்தைக் கடைப்பிடிக்கும் போஸ்ட் மாஸ்டர் நாராயண ஐயருக்கு விஷக்கடி மந்திரத்திலும் அனுபவமுண்டு. ஆனால், அந்த மந்திரம், தீண்டப்படாதவர் காற்றுப்பட்டால் மாத்திரம் பலிக்காது என்று அசையாத நம்பிக்கையுள்ள அவர், இந்தக் கதையைச் சொல்பவர் போஸ்ட் மாஸ்டருடன் பேசிக்கொண்டிருக்கையில், தபால் ஆபீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் சோதனைக்காக வந்திருந்தார். அதே சமயம் பாம்பு கடித்தவன் ஒருவனை நாலைந்து பேர் தூக்கிக் கொண்டு வந்துவிட்டார்கள். போஸ்ட் மாஸ்டர் நாராயண ஐயர் உடனே சில பொருட்களை வாங்கி வருமாறு பணித்துவிட்டு, பக்கத்திலிருந்த குளத்தில் குளித்துவிட்டு இடையில் தீண்டாச் சாதியர் எவரும் எதிர்ப்படாமல் பார்த்துக் கொள்ளச் சொல்லி ஜபம் பண்ணி, பாம்பு கடித்தவன் மீது விபூதி தூவி மந்திரித்தார். அரை மணி நேரத்துக்குள் விஷம் நீங்கி ஆள் எழுந்திருந்தான். நாராயண ஐயர் மகிழ்ச்சியுடன் சொல்கிறார். ""ஆனால் நானோ ஒரு ஜீவிய காலத்தின் அனுபவத்தின் மீது சொல்கிறேன். இதோ வைகுண்டத்தை எட்டிப் பார்த்தவனை இந்த மந்திரம் உயிர்ப்பித்திருக்கிறது. ஆனால் ஒரு பஞ்சமனுடைய காற்று மட்டும் என் மீது பட்டிருந்தால், தூரத்திலுள்ள பறையன் ஒருவனைப் பார்த்தால், எப்போதும் மந்திரம் பலிப்பதில்லை. மறுபடியும் தலைமுழுகிவிட்டு மந்திரிக்க வேண்டும்.'' இந்த வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்த தபால் இன்ஸ்பெக்டர் சிரித்தார். சிரித்துவிட்டுச் சொன்னார்.
""நாராயண ஐயர்! தாங்கள் பெரிதும் ஏமாந்து போனீர்கள். மன்னிக்க வேண்டும். நான் ஒரு பறையன்'' என்றார்.
(தமிழில் சிறுகதை வரலாறும் வளர்ச்சியும் நூல் பக் 75)
இதைப் போலவே அ. மாதவய்யாவால் எழுதப்பட்ட கதை என்று கருதப்படும் "கண்ணன் பெருந்தூது' என்ற சிறுகதையில் ஆற்றிலிருந்து வடக்கே ராஜபாதை. எல்லோருக்கும் பொது. தீண்டாச் சாதியார் எதிரே வருவோர் பலர் தாமே விலகுவர். இவர்கள் கெஞ்சி வேண்டியும் விலகாவிட்டால், ரோட்டின் இருபுறமுள்ள வயல் வரப்புகளில் இவர்களே விலகிக்கொள்வர். நாசமாய்ப் போவாய்.. படக்கென விழுவாய்! என்று அவர்களைத் திட்டவும் செய்வர் (மேலது நூல் பக் 45) என்ற நிகழ்வும் குறிப்பிடப்பட்டிருக்கும். சிறுகதை மன்னராக விளங்கிய புதுமைப்பித்தனின் கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், பொன்னகரம் போன்ற கதைகளும் சமுதாயத்தின் மூடத்தனங்களையும், போக்கையும் மையப்படுத்தி எழுதியவைதான். பெரும் எதிர்வினைகளை ஏற்படுத்தியவைதான்.
தாழ்த்தப்பட்ட மக்களைக் குறித்து இப்படிக் கட்டிவிடப்பட்ட கதைகள் ஏராளம். அவற்றையெல்லாம் எதிர்த்துத்தான் கலைஞர் தன் காலமெல்லாம் எழுதினார்.. பேசினார். கலைஞரின் சிறுகதைகளில் சாதிக் கொடுமைகளுக்கு எதிரான எழுச்சிக் குரல் எதிரொலித்துக் கொண்டேயிருப்பதைக் காண முடியும்.
கலைஞரின் சங்கிலிச்சாமி போலிச் சாமியார்கள் எப்படி உருவாகிறார்கள் என்பதை வெட்டவெளிச்ச மாக்குகிறது. அப்பாவி மக்களை எப்படி வேண்டுமா னாலும் ஏமாற்றிவிடலாம் என்பதை விறுவிறுப்பாக எழுதியிருப்பார். ஒரு சாதாரண ஏமாற்றுப் பேர்வழி தன் சீடன் சம்பந்தனை விட்டுத் தண்டவாளத்தை உடைக்கச் சொல்கிறான். ஓடிக்கொண்டிருக்கிற ரயிலின் அபாயச் சங்கிலியைப் பிடித்து நிறுத்தி மக்களைக் காப்பாற்றியவனாக நடிக்கிறான். மக்கள் அவரை சங்கிலியானந்த சாமிக்கு ஜே என்கிறார்கள். மக்களின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே மருந்து விபூதி தான். வெள்ளியைத் தங்கமாக்க ஆசைப்பட்ட சின்னப்பண்ணை முதலியார் கைகட்டி வாய்பொத்தி சாமியாருக்குப் பணி செய்கிறார். வெள்ளிக்கட்டிகளைக் கொண்டுவந்து சாமியார் முன் வைக்கிறார். உடனே சாமியார் மூடாத்மா ஞானாத்மா வாக மாறுவதுபோல்,நாஸ்திகன் ஆஸ்திகனாக மாறுவதுபோல் ஓ வெள்ளியே! நீ தங்கமாகப் போகிறாய் என்கிறார். அப்புறம் என்ன? ஆள் அம்பேல்தான். ஏமாந்த போன சின்னப்பண்ணைக்கு சாமியின் சீடன் சம்பந்தம் ஒரு திட்டம் சொல்கிறான். என்ன செய்கி றான் என்பதைத் திரைக்கதை போல வேகமாக எழுதிச் செல்கிற கலைஞர் இறுதியாகக் கதையை முடிப்பதுதான் சிந்திக்க வைப்பது. அப்படி என்ன முடிவு?
அங்கே ஒரு கடிதம் கிடைத்தது. அதில் நாம் இனி இந்த நாற்ற உடலுடன் வாழ விரும்பவில்லை. ஆவியாக இருந்து அருள் புரிவோம். மக்கள் என் சமாதியை வழிபட்டுச் சகல சம்பத்தும் பெறுவார்களாக!
இங்ஙனம்
சங்கிலிச்சாமி’’
என்று எழுதியிருந்தது. சம்பந்தம் அதைப் படித்துக் காட்டினான். ஏக ஆடம்பரமாக சங்கிலிச்சாமியின் சமாதிவிழா நடைபெற்றது. சமாதியில் மக்கள் இறைத்த பணம் அன்றைக்கே ஆயிரம் ரூபாய். அடுத்த ஆண்டு சங்கிலியானந்த சாமி குருபூஜை! சாமிகளுக்கு மாபெரும் மடம். சம்பந்தம் மடத்தின் சாமி! முதலியார் மடத்தின் சொந்தக்காரர். இரண்டாயிரம் ரூபாய் வெள்ளிக்கட்டி நஷ்டம்.
ஆனால், இருபதாயிரம் ரூபாய் எடை வெள்ளிக்கட்டி இலாபம்.! அதுவும் வளர்கிற இலாபம். மக்களின் மடமை இருக்கும் வரை அந்த இலாபம் குறையாது.’’
சிறுகதையை எப்படி முடிக்கிறார் பாருங்கள்.
இப்படித்தான் போலி மகான்கள் நாடெங்கும் உருவாகிக் கொண்டேயிருக்கிறார்கள். மக்களும் ஏமாந்து கொண்டேயிருக்கிறார்கள். கலைஞர் தொடர்ந்து எழுத்துலகில் இயங்கியவர். அன்றைய காலகட்டத்துக்கு ஏற்பத் தன் படைப்புகளைச் செதுக்கியவர். எதிர்க்கருத்து கொண்டவர்களை எழுத்தில் பந்தாடுவது அவருக்குக் கைவந்த கலை. பெரியாரிடம் பாடம் கற்ற கலைஞர் தன் எழுத்துகளில் அவர் கருத்துகளை அங்கங்கே அள்ளித் தெளித்திருப்பார். அன்றைக்கே கலைஞர் நடுத்தெரு நாராயணி என்ற சிறுகதையில் இப்படிப்பட்ட சிறுமைகளைத் தோலுரித்திருப்பார்.
விடிந்தால் தீபாவளி என்று தொடங்குகிற சிறுகதை நடுத்தெரு என்ற தெருவில் வசித்துவந்த நாராயணி என்கிற அபலையைப் பற்றிய வாழ்க்கைச் சித்திரம்.
அவள் தன் துயரங்களைக் கொட்டி அழ கோயிலுக்குப் போகிறாள். குருக்கள் கிருஷ்ணய்யரின் பார்வை படுகிறது. குருக்களுக்குப் புத்தி குறுக்கிலே ஓடுகிறது. ஒருநாள் என்ன செய்கிறார்?
அவள் கால்களிலே தலை முட்டுமளவுக்கு சாஷ்டாங்கமாகத் தெண்டனிட்டு வீழ்ந்தார். நாராயணிக்கு ஒன்றுமே புரியவில்லை. “சுவாமி! சுவாமி! என்று கத்திவிட்டாள்.
நாராயணி..அடியேனை என்று ரட்சிப்பாய்! தேவி விக்ரகத்தின் முன்னே கூட அடியேன் இப்படி நமஸ்கரித்தது கிடையாது. நீதான் எனக்குத் தேவி! என்னை ஏற்றுக்கொள் என்று மன்றாடி நின்றார்.’’ இப்படிக் கதையைக் கொண்டு செல்கிற கலைஞர் நாராயணியின் மனநிலையை அப்படியே சித்தரிக்கிறார்.
குருக்கள் என்ன சொல்கிறார். அதைக் கலைஞர் ""ஏண்டி நாரா, கவலைப்படுறே! நான் பிராமணன்- நீ சூத்திரச்சின்னுதானே பாக்கிறே! பிராமணாளுக்குத் தலைவர் இருக்காரே.. எங்க ராஜாஜி- அவர் மகளைக் காந்தி மகனுக்குக் கொடுக்கலியோ- ஜாதி ஆசாரம் பேசினாளே, என்ன ஆச்சு அது? அம்பேத்கார்னு ஒரு பறையன்- ஆதித்திராவிடர்னு சொல்லிக்குவா- அவரைக் கல்யாணம் பண்ணிண்டு இருக்கிறது யார் தெரியுமோ? எங்க ஜாதிக்காரி ஒருத்திதான்! ஜாதி ஆசாரம் எங்கேடி போச்சு? ருக்மணி அருண்டேல் சமாச்சாரம் தெரியுமோ நோக்கு! அடி அசடு.. பித்துக்கோளி! சொல்றதைக் கேளடி! பயப்படாதே! நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்'' என்று கிருஷ்ணய்யர் பிரசங்கம் ஒன்றே செய்தார் என்று எழுதிச் செல்கிறார். அதன்பின் கதை வேறொரு திசையில் நகர்கிறது. அந்தக் கதைக்குள் மனித மனத்தின் குரூரங்களை வெளிப்படுத்தியிருக்கிறார் கலைஞர். இந்தச் சிறுகதையை ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதுபோல அமைத்திருப்பார். படிக்கப் படிக்கக் காட்சிகள் மனத்திற்குள் விரியும்.
தன் கருத்துகளைச் சொல்வதற்காகக் கலைஞர் சிறுகதைக்கலையை மிகச் சிறப்பாகவே கையாண்டிருக்கிறார். வெற்று வர்ணனைகள், இழுத்துக் கொண்டே போகிற நடைச்சித்திரங்கள் இல்லாமல் எதற்காகக் கதையை எழுதுகிறோம் என்கிற தெளிந்த முடிவோடு தான் ஒவ்வொரு சிறுகதையையும் படைத்திருக்கிறார். கலைஞரின் சிறுகதைகள் சமுதாய அவலங்களைப் பேசுபவை. சாதியக் கொடுமைகளைத் தோலுரிப்பவை. மூட நம்பிக்கைகளின் முதுகில் சாட்டையைச் சொடுக்குபவை. அறிவார்ந்த சமுதாயம் வளர வேண்டும் என்று துடிப்பவை. பட்டப்பெயர்களைப் போலத் தங்கள் பெயருக்குப் பின்னால் சாதியை ஒட்ட வைத்திருக்கிற முட்டாள் தனத்தை வெளிப்படுத்தக் கூடியவை.
அவர் ஒவ்வொரு காலகட்டத்திலும் எழுதிய சிறுகதைகளை அந்தந்தக் காலகட்டங் களோடு ஒப்பிட்டுத்தான் ஆய்வு செய்ய வேண்டும்.
அப்படி ஆய்வு செய்தால், தமிழகத்தின் அரசியல், பொருளாதார, சமுதாய வரலாற்றுக்குக் கூடுதல் செய்திகள் கிட்டும். சாதியற்ற சமுதாயத்தைக் காண விழைந்த கலைஞரின் உள்ளம் சிறுகதைகளில் சிலிர்த்துக் கொண்டு நிற்கிறது.
கலைஞர் பொழுதுபோக்குக்காகச் சிறுகதைகளை எழுதவில்லை. தமிழரின் விடியல் பொழுதுக்காக எழுதியிருக்கிறார் என்பதை அறிந்து தெளிய வேண்டியதுதான் இன்றைய தேவை.