கலைஞரைப் பற்றி எவ்வளவோ சொல்லலாம். 30 வருடங்களுக்கு முன், 87, 88-களில், அவரின் "முரசொலிலி பத்திரிகைக்கு நான்தான் அப்போதைய லேவுட் ஓவியர். நான் அமரும் டேபிள் தாண்டிதான் கலைஞர் தனது அறைக்குச் செல்வார். ஒரு சமயம் நான் வேலை பார்த்துக்கொண்டு இருந்தபோது, என் பின்னால் நின்றுகொண்டு நான் செய்யும் வேலையை ஆர்வமாக கலைஞர் பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறார். வேலையிலேயே கவனம் இருந்ததால் அதை நான் உடனடியாக அறிய வில்லை. அனிச்சையாக நான் திரும்பிப் பார்த்தபோது, அங்கே கலைஞர்.
அப்போது எல்லாம் கலைஞர்தான். படம் வரைவார். அதில் ஏதாவது கலர் விடுவதாக இருந்தால், அதை என்னிடம் சொல்வார். ஒருநாள் அவர் சொன்னபடி... அவர் எதிர்பார்த்த கலர் வரவில்லை. மறுநாள் நேரில் என்னை அழைத்த அவர், முரசொலியில் அவர் வரைந்த படத்தைக் காண்பித்து, தனக்கே உரிய கரகரத்த குரலில் ""எங்க, நான் சொன்ன கலர் வரவில்லையே'' என்று, என்னிடம் கோபித்துக்கொண்டார். அது இப்போதும் என் நினைவில் ஆடுகிறது.
அவர் எழுதிய, கலைஞர் கடிதத்திற்கான தலைப்புக்கு, கலைஞர் கடிதம், கரிகாலன் பதில்கள், என நான் 3 மாடலில்களில் வரைந்தேன். ஆசிரியர், கலைஞரிடம் காண்பித்து, ஓ.கே வாங்கினால்தான் அதைப் பயன்படுத்த முடியுமாம். இந்த நடைமுறை எனக்குத் தெரியாது. நான் எழுதிய தலைப்பை இரவு அவர் வீட்டிற்கு அனுப்பி அதை கலைஞர் பார்த்துவிட்டு ஓ.கே. செய்திருக்கிறார்.
"கலைஞர் நல்லா இருக்கு. அதையே பயன் படுத்துங்கன்னு சொல்லிட்டார்' என்று ஆசிரியர் கூறியபோதுதான் இது தெரியவந்தது. இது எனக்கு மகிழ்வைத் தந்தது.
கலைஞர் அப்போது தினமும் முரசொலி அலுவலகம் வருவார். அவர் வந்தால், எனக்கும் அவர் குடிக்கும் அவர் வீட்டு டீ எப்போதாவது கிடைக்கும். (முரசொலி உதவியாளர் மந்திரமூர்த்தி தயவினால்.) பின்னர் கலைஞர் முதலமைச்சர் ஆனதும் "முரசொலி'க்கு வந்தார். அவருடன் படமும் எடுத்துக்கொண்டேன். அது அருமையான தருணம்.
எங்கள் நக்கீரன் பத்திரிகைக்கு நெருக்கடி வந்தபோது எல்லாம் எங்களுக்கு உறுதுணையாக கலைஞர் இருந்துள்ளார். 1994-ஆம் ஆண்டு அண்ணா அறிவாலயத்தில் எங்கள் திருமணம் நடைபெற்றது. கலைஞர் அவர்கள் திருமணத்துக்கு வந்து எங்களை வாழ்த்தினார்.
2003-ல் என் அண்ணன் நக்கீரன்கோபால் பொடாவில் கைதாகி சிறையில் இருந்தபோது, எங்கள் அம்மா உடல்நலம் சரியில்லாமல் பில்ராத் மருந்துவமனையில் இருந்தார். கலைஞர் அவர்கள் எங்கள் அம்மாவை பார்க்க வந்தார். அப்போது எங்கள் அம்மா ""இந்த தடவை எம்.பி. எலெக்ஷன்ல நீங்கதான்யா வருவீங்க என கலைஞரைப் பார்த்துக் கூறியது இன்றும் நினைவில் இருக்கிறது. கூறியதுபோல் நாற்பது தொகுதியிலும் தி.மு.க. கூட்டணியே வென்றது. அதற்குப்பின் 2004-ல் எங்கள் அம்மா மறைந்தபோதும் கலைஞர் அஞ்சலி செலுத்த வீட்டிற்கு வந்தார்.
கடைசியாக கலைஞரை நான் அருகில் பார்த்தது 2015-ல் எங்கள் மகள் பிரபா - தீபன் திருமணத்தில் தான். கலைஞர் புன்னகையோடு மணமக்களை வாழ்த்திய காட்சி, இன்னும் மனத் திரையில் அப்படியே இருக்கிறது.