லைஞர் ஒரு சரித்திர நாயகர். எழுத்து விஞ்ஞானி. அவர் எதையும் முன்னோக்கிப் பார்க்கும் திறனாளர். எதையும் புதுமையாகச் சிந்திக்கும் ஆற்றலாளர்.

அந்தக் காலத்திலேயே அவர் எழுதிய பராசக்தி, புரட்சி நெருப்பைப் பற்றவைத்தது. இளைஞர்களின் நெஞ்சத்தில் எழுச்சியை உண்டாக்கியது. மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப் பெரியாரின் மருந்தை எழுத்தில் குழைத்துக்கொடுத்தார் கலைஞர். அது வீரியமாகவும் விவரமாகவும் வேலைசெய்தது. தமிழ் சினிமாவின் வசனங்கள், கலைஞரால்தான் பழமையெனும் கந்தலாடையைக் களைந்துவிட்டு புரட்சிப் புத்தாடையை அணிய ஆரம்பித்தன.

நான் அரசியல்வாதியல்ல. வெறும் பார்வையாளன் தான். எனினும், தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்தவர்களின் மனதையும் தனது கவர்ந்திழுக்கும் ஆளுமையால் கொள்ளையடித்தவர் கலைஞர்.

என்னைபோல் கலைஞரை வெறுத்தவர்கள் யாருமில்லை. என்னைப் போல் கலைஞரைக் காதலிப் பவர்களும் யாருமில்லை.

Advertisment

kalaingar

எழுத்தாளராக, பேச்சாள ராக, வசனகர்த்தாவாக, நாடக ஆசிரியராக, நடிகராக, தயாரிப்பாளராக, கவிஞராக, சிறுகதையாளராக, நாவலாசிரியராக, கட்சித் தலைவராக, அரசியல்வாதியாக, களப்போராளியாக, மதிப்புவாய்ந்த சட்ட மன்ற உறுப்பினராக, பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவராக, ஆற்றல் வாய்ந்த முதல்வராக... பல்வேறு பரிமாணம் எடுத்தவர் கலைஞர். அதுமட்டும் அல்லாது தோன்றிய அத்தனை துறைகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தி, புகழ்பெற்றுத் திகழ்ந்தார். கலைஞருக்குப்போட்டியாளராக யாராலும் வரமுடியவில்லை. அவரை வெல்லவேண்டும் என்றால் அதுவும் அவரால்தான் முடியும் என்ற நிலையை உருவாக்கினார்..

அவரது தொடக்க காலத்திலேயே அவரைப் போல் எழுதவும், அவரைப் போல் ஒப்பனைகள் செய்துகொள்ளவும், அவரைப்போல் நடை உடை பாவனைகளை மாற்றிக்கொள்ளவும் பலர் முயன்றார்கள்.

திருவாரூர் தங்கராசு, ஏ.கே.வேலன், ஆரூர் தாஸ் போன்றவர்கள் கலைஞரால் உந்தப்பட்டவர்கள். இவர்களைப் போல் எண்ணற்றவர்கள் கலைஞரால் உந்தப்பட்டாலும் கலைஞரை எவராலும் முந்தமுடியவில்லை. இது கலைஞரின் பெருமைக்குரிய ஆளுமைத் திறன்.

கலைஞர் சொந்தமாக, சுயமாக எழுதிய படைப்புகளைவிட, பிற படைப்புகளைத் தழுவியும் மாற்றியும் புனரமைத்தும் எழுதிய படைப்புகளே பெரும் வெற்றியைக் குவித்தன.

குறிப்பாக "பராசக்தி' அவரது கதை இல்லை. "மனோகரா' அவரது கதை இல்லை. "பூம்புகார்', "மந்திரிகுமாரி' போன்றவையும் அவரது சிந்தனையில் உதித்த கதைகள் அல்ல. ஆனால் வேறுவேறு படைப்பாளிகள் எழுதிய இந்தக் கதைகளைக் கலைஞர் தொட்டுக் கையில் எடுத்தபிறகுதான் இந்தப் படைப்புகள் எல்லாம் புகழின் உச்சத்தை அடைந்தன. நான் பார்த்தவரையில் அரசியலில் கலைஞரைப் போல், பிறரைத் தாங்கிப்பிடித்த அரசியல் தலைவர் கிடையாது. தேர்தல் நேரத்தில் கலைஞரும் லட்சிய நடிகர் எஸ்.எஸ். ஆரும் ஊர் ஊராக வருவார்கள். டிக்கட் வாங்கி அவர்களது உரைகளைக் கேட்டு மக்கள் ஆர்ப்பரித்தார்கள். நானும் ஆசையோடு காத்திருந்து அவர்கள் உரையைக் கேட்டிருக்கிறேன். கலைஞரால் எஸ்.எஸ்.ஆர். புகழோடு சுடர்ந்தார். "தங்கரத்தினம்' படத்தில் முதன்முதலில், தி.மு.க. கொடியைக் காட்டியவர் எஸ்.எஸ்.ஆர்.தான். இவருக்குப் பிறகுதான் எம்.ஜி.ஆர். காட்டினார்.

ஆனால் வளர்ந்து வரும் நேரத்தில் தனது சரிவிற்குத் தானே காரணமானார் எஸ்.எஸ்.ஆர். நாடாளுமன்றத்திற்கு எஸ்.எஸ்.ஆரை அனுப்பியபோது, மன்னர் மாநிய ஒழிப்பு மசோதா அவையில் கொண்டுவரப்பட்டது. அப்போது, பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்காமல் இருந்துவிட்டார் அவர். இதுபற்றிக் கேள்வி எழுப்பப்பட்டபோது சரியாக பதில்சொல்லாமல் மழுப்பினார். நான் அவரிடம் தனியே கேட்டபோது, "எனக்கு உடல் நலம் சரியில்லை அதனால் அவையில் இருந்து வாக்களிக்காமல் எழுந்து வந்துவிட்டேன்' என்றார். ஆனாலும் கலைஞர் அவருக்கு திரைப்படங்களில் நிறைய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தார். எனினும் தன்னைச் சரிசெய்துகொண்டு அவர் எழுந்து நிற்காமல் போய்விட்டார். அந்த வருத்தம் என் அடிமனதில் இப்போதும் இருக்கிறது.

சிறையில் அடைக்கப்படும் காலத்தைக்கூட தனக்கான பொற்காலமாக எண்ணியவர் கலைஞர். சிறையிலிருந்தாலும் அவர் அங்கிருந்தும் எழுதினார். கலைஞர் தனக்கு உதவியவர்களை மறந்ததும் இல்லை. அவர்களைக் கைவிட்டதுமில்லை. நன்றி மறக்கும் குணம் அவருக்கு இல்லவே இல்லை.

துரோகிகளுக்கும் எதிரிகளுக்கும்கூட உதவிக்கரம் நீட்டினார் கலைஞர்.

காலம் முழுதும் அவரைத் திட்டித் தீர்த்த கண்ணதாசனைக்கூட வெறுக்காமல், அவரது குடும்ப நிகழ்ச்சிகளுக்கு மகிழ்வோடு சென்றவர் கலைஞர். அவரைக் கடுமையாக விமர்சித்தவர் நாத்திகம் ராமசாமி. அவர் ஒரு பிரச்சினைக்காக கலைஞரிடம் சென்றபோது பகைமை பாராட்டாமல் அவருக்கும் உதவி செய்தவர் கலைஞர். அரசுப் பொறுப்பிலே இருந்தாலும் அரசியல் வேற்றுமைகளை மறந்து ராஜாஜி, காமராஜர், பக்தவத்சலம் போன்ற தலைவர்களிடம் சென்று ஆசிவாங்கிய பெருந்தன்மையும் அரசியல் நாகரிகமும் கலைஞரைத் தவிர யாருக்கு வரும்?

தன்னை வசைபாடிய வைகோ, பொடா சிறையில் இருந்தபோது, அவரை வேலூர் சிறைக்குப் போய் இரண்டுமுறை பார்த்ததோடு, அவரது விடுதலைக்காக கலைஞர் எடுத்த முயற்சிகள் மறக்க முடியாதவை.

கலைஞரைப் போன்ற பெருந்தன்மையான அணுகுமுறை கொண்டவர்கள் தமிழ்நாட்டில் பிறந்ததில்லை.

கலைஞர், தலைக்கனம் இல்லாதவர். எளிமையானவர். யார் வேண்டுமானாலும் சந்திக்க முடியும் என்ற நிலையிலேயே தன்னை வைத்திருந்தவர்.

’"காஞ்சித் தலைவன்'’ படத்தின் படப்பிடிப்பு மெஜஸ்டிக் ஸ்டுடியோவில் நடந்த காலத்தில், கலைஞரை நான் சந்தித்திருக்கிறேன். அப்போது மேக்கப் மேன்களுக்கு எடுபிடியாக வேலை பார்த்தேன். அப்போது அங்குவரும் கலைஞர், மேக்கப் அறைக்கும் வந்து டச்சப் செய்துகொள்வார். தன் தோற்றத்தில் கலைஞருக்கு மிகுந்த அக்கறை இருந்தது. கலைஞரைப் போல் குரல் வளமும் விரல் வளமும் சொல்வளமும் யாருக்கும் வாய்க்கவில்லை. அவருடைய பேச்சைக் கேட்பவர்கள் மகுடிக்கு முன் ஆடும் பாம்பைப் போல் மயங்கி நின்றார்கள். உணர்ச்சிப் பெருக்கில் மூழ்கிப் போனார்கள். எம்.ஜி.ஆரால் கட்சியில் பிளவு ஏற்பட்டபோதுகூட கலைஞரை யாரும் கைவிடவில்லை. அவரைத் தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே நினைத்து, கட்சியினர் கலைஞரின் தோளோடு தோளாக இருந்தார்கள்.

கலைஞரைப் போல் தனது வாழ்வின் பெரும்பகுதியை, மக்கள் மத்தியிலேயே கரைத்தவர்கள் இருக்கமுடியாது. அவர் நாட்டு மக்களின் நலனை நினைத்தாரே தவிர, தன் பெற்றெடுத்த மக்களைப் பற்றி அவர் அதிகம் நினைத்ததில்லை. இத்தகைய மாபெரும் தலைவர், நம்மிடையே இல்லை என்ற வேதனை மனதைக் குடைகிறது.

இனிப்பாய் எழுதி எழுதியே, எழுச்சித் தீ மூட்டிய இனமானப் போராளி அவர்!

கலைஞர், மக்களுக் காகவே எரிந்து கரைந்த மெழுகுவர்த்தி!

அவர் விட்டுச் சென்ற வெளிச்சத்தில் இருந்தும் நாளைகள் விடியலாம்.

அறிவுலகின் ஆசானாம்

அந்த மாமனிதனை வணங்குகிறேன்.

Advertisment