பெரியாரின் மாணவராக அண்ணாவின் தம்பியாக கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தன்னை அர்ப்பணித்துக் கொண்டு தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் தமிழ் நாட்டுக்காகவும் ஓய்வின்றி உழைத்தவர் கலைஞர்.

அண்ணாவிற்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழகத் தின் தலைவராக பொறுப்பு ஏற்று கட்சியைக் காப்பாற்றி வந்தவர். தமிழக முதல்வராக பதவி ஏற்றுக் கொண்ட போதும் கட்சியின் தலைவராக வும் சிறந்து விளங்கினார். செயல் ஆற்றினார். ஒரு கட்சியை வழிநடத்திச் செல்ல தொண்டர்கள் அவசியம் என்பதை நன்கு உணர்ந்தி ருந்தார். தொண்டர்களே தி.மு.க.வின் பலம் என்றால் மிகையல்ல. தொண்டர்களைக் கலைஞர் உடன்பிறப்பாகக் கருதினார். உடன்பிறப்பாகக் கொண்டாடினார்.

கலைஞர் எந்தக் கூட்டத்தில் உரையாற்றினாலும் மேடையில் அமர்ந்திருப்பாரை ஒவ்வொருவராக பெயர் சொல்லி அழைத்துக் கொண்டே வருவார். தொண்டர்கள் ஆர்வமாக கேட்டுக் கொண்டிருப்பர். இறுதியாக "என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே' என்று கரகரத்த குரலில் அழைத்தவுடன் தொண்டர்களிடம் அதாவது உடன்பிறப்பு களிடம் உற்சாகம் பீறிடும். கைதட்டல் விண்ணை முட்டும்.

ddமேடையில் இருப்பவர்களும் உடன்பிறப்புகளாகி கைதட்டு வர். ஒரு நிமிடம் கழித்து ஓசை அடங்கிய பிறகே கலைஞர் பேசத் தொடங்குவார். ஒரு கூட்டத்தில் மட்டும் இருக்கும் உடன்பிறப்புகளுடன் கலைஞர் உரையாடலை நிறுத்திக் கொள்ளவில்லை. தமிழகம் எங்கும் உள்ள ஒவ்வொரு உடன்பிறப்பு களுடனும் உரையாட, உறவாட கலைஞர் எடுத்துக் கொண்ட ஆயுதம் கடிதம்.

Advertisment

அறிஞர் அண்ணா "தம்பிக்கு' என்று தொடங்கி தொண்டர்களுக்குக் கடிதம் எழுதினார். அண்ணா வழியில் தொடர்ந்தாலும் கலைஞர் தன் வழியில் தனி வழியில் "உடன்பிறப்பே' என்று கடிதம் எழுதினார்.

முரசொலி என்னும் ஏட்டைக் கலைஞர் தொடங்கி ஒவ்வொரு நாளும் உடன் பிறப்புகளுக்கும் கடிதம் எழுதினார். கடிதம் மூலம் நாட்டுப் பிரச்சனைகளை, வெற்றி தோல்விகளை, சந்தித்த சவால்களை, சுக துக்கங்களை உடன் பிறப்புகளுடன் பகிர்ந்து கொண்டார். கலைஞரின் கடிதத்தை வாசித்த பின்பே உடன்பிறப்புகளும் நாட்டு நடப்பை அறிந்து கொள்வர். கலைஞர் அவர்களின் கடிதம் உடன்பிறப்புகளுடன் நேருக்கு நேர் பேசுவது போலிருக்கும். வாசிப்பவர்களின் காதுகளில் கலைஞர் குரல் ஒலித்துக் கொண்டே வரும்.

1968-ஆம் ஆண்டு முதல் 1977ஆம் ஆண்டு வரை கலைஞர் எழுதிய கடிதங்களை பத்து தொகுதிகளை அபிராமி பதிப்பகம் வெளியிட்டுள் ளது. அத்தொகுப்புகளின் முன்னுரையில் "" உடன்பிறப்புக் களான கழகத்தினருக்குக் கூற வேண்டியவைகளையும், அவர்கள் முன் நாட்டுக்கு, சமுதாயத்துக்குச் சொல்ல வேண்டியவைகளையும் ஒரு பாச உணர்வுடன் வெளியிட இந்தக் கடிதம் எழுதும் முறை எனக்கு மெத்தவும் பயன்படு கிறது'' என்று கலைஞர் அவர் களே கடிதம் எழுது வதற்கான காரணத் தையும் நோக்கத்தை யும் தெரிவித்துள் ளார். கலைஞர் அவர்கள் ஒவ்வொரு கடிதத்திற்கும் ஒரு தலைப்பு தந்திடுவார். தலைப்பே உடன் பிறப்பை உள்ளிழுக் கும். அன்றைய பொருள் என்ன வென்று புரிய வைக்கும்.

Advertisment

"பெருமை எது?' என்னும் தலைப்பில் 17.07.2012 அன்று உடன்பிறப்புக்கு எழுதிய கடிதத்தில் ""புயல் வீசினாலும் உன் முகத்திலே புன்னகை மறைவதில்லை. நகை சிந்தும் உதடுகளின் மேலே அரும்பு கட்டியிருக்கும் இளம் மீசையைத் தடவிவிட்டுக் கொண்டே புயலைப் புறங்கண்டவன் நீ என்பதற்கு எத்தனையோ வரலாற்றுச் செய்திகள்'' என்று உடன்பிறப்புகளி டம் உரையாடியுள்ளார். உடன்பிறப்புகளைத் தட்டிக் கொடுத்துக் கொண்டும் தயார் நிலையில் வைத்திருக்கவும் தக்க வைத்துக் கொள்ளவும் கலைஞர் கடிதத்தால் சாத்திய மாகும் என்பது அவரின் கடிதத்தை வாசித்த பின் உணர முடிகிறது. ""வன்முறைக் குப் பதில் வன்முறை என்பது சுலபமானது. ஆனால் வன்முறையைத் தாங்கிக் கொண்டு அதனை நன் முறையில் வெல்வதுதான் கடினமான காரியம்'' என்று உடன்பிறப்புகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

"நிலைகுலையா நெஞ்சம் வாழ்க' என்னும் தலைப்பில் 23.09.1976 அன்று எழுதிய கடிதத் தில் ""சுற்றுப் பயண நிகழ்ச்சி களில் உன்னைச் சந்தித்து மகிழும் வாய்ப்புகள் தொடர்ச்சியாகக் கிடைத்த காரணத்தால் கடிதத் தொடர்பில் சிறிது தொய்வு ஏற்பட்டுவிட்டது. எனக்கு அமைந்த ஓய்வில்லாப் பணி களை நினைத்துப் பார்த்து நீ என்னைப் பொறுத்தருள்வாய் என்றே நம்புகின்றேன்'' என்று எழுதியதன் மூலம் உடன் பிறப்புகள் கலைஞர் அவர் களின் கடிதத்தை எந்தளவிற்கு எதிர் பார்த்திருப்பார்கள் என்று அறிய முடிகிறது. மேலும் மன்னிப்பு கோரியதன் மூலம் உடன்பிறப்புகள் மீது கலைஞர் வைத்துள்ள அன்பையும் மதிப்பையும் காட்டுகிறது.

""ஒரு விநாடியும் ஓய்வில்லாத பணிகள். இதற்கிடையே உனக்கு நான் தனியாகக் கடிதம் எழுதி அழைக்காவிட்டால் கோபித்துக் கொள்வாயே'' என்று "வருக.. வெற்றியினைத் தருக' என்னும் தலைப்பிலான கடிதம் உடன்பிறப்பிற்கும் கலைஞருக்குமான உறவைக் காட்டுகிறது. தொடர்ந்து ""நான் உன்னை நேரிலே அழைத்த தாகக் கருதி - இல்லை இல்லை உன் வீட்டுக்கே வந்து அழைத்ததாகக் கருதி வந்திடுக.

என் இனிய உடன்பிறப்பே

இதயத்தின் துடிப்பே

வெட்டிவா என்றுரைத்தால்

கட்டி வரும் கழகத்தின் மாமணியே

வருக வருக

வெற்றியினைத் தருக'' என்று 08.02.1977 நாளிட்ட கடிதத்தில் தேர்தல் பணியாற்ற உடன்பிறப்புகளை அழைத்துள்ளார். கலைஞரின் கடிதம் எந்த உடன்பிறப்பையும் தவறாது தேர்தல் பணியாற்றிடச் செய்திடும் வல்லமை வாய்ந்ததாகும். வார்த்தைகளாலே வசீகரித்து விடுவார். சொற்களாலே சொக்க வைத்து விடுவார். வரிகளால் வலை வீசிடுவார்.

ஒரு கட்சி நடத்துவதற்கு தொண்டர்களே அடிப்படை. தொண்டர்களுடன் தலைவர் தொடர்பு கொண்டிருக்க வேண்டும். அதற்கு கலைஞருக்குக் கடிதம் நன்கு உதவியது. கலைஞரும் கடிதத்தைச் சரியாக பயன்படுத்திக் கொண்டார். மறவன் மடல், நம் நாடு ஆகிய ஏடுகளில் கடிதம் எழுதி வந்த கலைஞர் பின்னர் முரசொலியிலேயே தொடர்ந்து எழுதி வந்தார். உடன்பிறப்பே என்று தொடங்கும் கடிதம் அன்புள்ள மு. க. என்று முடியும்.

கலைஞரின் கடிதங்களைத் தொகுத்து வெளியிட்ட பதிப்பாளர் கா. பனையப்பன் ""இவைகள் ஏதோ குசலம் விசாரிக்கின்ற கடிதங்களாக இல்லாமல் ஒரு காலகட்டத்தின் கருத்துக் கருவூலங்களாகத் திகழ்வதை நான் மட்டுமல்ல இதனைப் படிக்கும் வாசகர்களும் உணர்வார்கள்'' என்பது உண்மையே என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு கடிதம் மூலமும் ஏதாவது ஒரு பிரச்சனையை உடன்பிறப்புகளுடன் உரையாடி அவர்களையும் பங்கெடுக்கச் செய்திடுவார்.

கலைஞரின் ஒரு நூற்றாண்டுப் பயணத்தில் எத்தனையோ சாதனைகளைச் செய்துள்ளார். எடுத்துக் கொண்ட எதிலும் எப்போதும் பின் வாங்கியதில்லை. வெற்றி பெறாமல் விட்ட தில்லை. உடன்பிறப்புக்குக் கடிதம் எழுதுவதி லும் ஒரு சாதனை படைத்துள்ளார். ஒரு வரலாற்றை உருவாக்கியுள்ளார்.

அரசியல் தொடர்புறுத்தலுக்கான ஆயுதமாய் தொடங்கி எளிய தொண்டனுக்கும் இலக்கியம் போதித்த கலைஞரின் கடித இலக்கிய பீடம் தற்சமயம் வரை காலியாகவே கிடக்கிறது.