படைப்புக் குழுமம் மூன்றாம் ஆண்டுவிழா சிறப்பாக நடந்தது. இந்திய இலக்கியத் திருவிழாக் கொண்டாட் டங்களுக்குச் சவால் விடும் வகையில் நிகழ்வுகளை அமைத்திருந்தார்கள் படைப்புக் குழுமத்தினர். மிக முக்கியமான வித்தியாசம் என்னவென்றால், உலக இலக்கியத் திருவிழாவின் கதாநாயகன் ஆங்கிலம். இங்கோ இனிய தமிழ்.
படைப்புக் குழுமம் மூன்றாம் ஆண்டு விழா என்பது, படைப்பு இலக்கிய விருதுகள், படைப்பு பசுமைத் திட்டம், படைப்பு மேடை அறிமுகம் என ஒரு முப்பெரும் விழாவில் படைப்பாளிகளின் 15 நூல்கள் வெளியீடு, பரிசளிப்பு, விருதளிப்பு என முப்பெரும் இலக்கிய விருந்தாக விரிந்து பிரமிக்க வைத்தது.
மதியம் 1.30 மணிக்கு அவையோர் சுய அறிமுகத்துடன் எளிமையாக விழா தொடங்கியது. அறிமுகம் முடியும்போதுதான் தெரிகிறது அவையோரில் 90 விழுக்காடு படைப்பாளர்கள் மற்றை யோர், விமர்சகராகவும் பதிவராகவும் இருக்கின்றனர்.
பங்கேற்பதிலேயே ஒரு சாதனை நிகழ்ந்துகொண்டிருந்தது. படைப்பாளுமைகள் ஒவ்வொருவராக மேடைக்கு அழைக்கப்படுகின்றனர். கவிஞர் விக்ரமாதித்யன், இயக்குநர் என்.லிங்குசாமி, கதைசொல்லிக் கதாநாயகன் பவா செல்லத்துரை, கவிஞர் அமுதபாரதி, கவிஞர், கலைவிமர்சகர் இந்திரன், இயக்குநர், கவிஞர் பிருந்தாசாரதி, ""இனிய உதயம்"" இணை ஆசிரியர் கவிஞர் ஆரூர் தமிழ்நாடன், கவிஞர் அமிர்தம் சூர்யா, பாடலாசிரியர் அருண் பாரதி, ஏர்வாடி ச. இராதாகிருஷ்ணன், நடிகர் ஜெய்வந்த், ஊடகவியலாளர் தமிழன் பிரசன்னா, ஊடகவியலாளர் ஈரோடு மகேஷ், ஊடகவியலாளர் பூங்குழலி, கவிஞர் அமுதா பாலகிருஷ்ணன், ஆகியோருடன் இன்னும் பல பிரபலங்களும், மேடை குதூகலத்துடன் தனது முகத்தை அலங்கரித்துக்கொண்டு புத்துயிர்பெறத் துவங்க ... அரங்கம் இருளில் மூழ்க இதயத்தை வருடும் அந்த இசையுடன் எல்.ஈ.டி. திரை பளிச்சிட, அப்போதுதான் அந்த மாயத்திரை அரங்கத்திற்கு முகம் காட்டுகிறது, ஒரு பிக்பேங்க் ஓசையுடன் படைப்புக்குழுமக் கருதுகோள் படம் - தெற்கு பீடத்தின் முனை பேனா உருவெடுத்து, கீழ் மேற்கில் தன் சிறகுகளை விரித்து, வடப்பக்கம் அமைதிப்புறா முகமெடுத்து பறந்து வந்து பீடத்தில் அமர, ""படைப்பு - சமூகத்தின் இணைப்பு"" என்ற கருத்துரு பீடத்தில் உதிக்க, அந்தக் கம்பீர வெண்கலக்குரல் பின்னணியில் "உங்களைப் பெருமையுடன் வரவேற்கிறது படைப்புக் குழுமம்' என முடிக்கவும் ஒரு மணித்துளிப் பேரமைதியைக் கிழித்துக்கொண்டு வெடித்தது கைதட்டல்கள்.
நூல் வெளியீட்டிலே புதுமை! நூல் பெயர் சொல்லப்பட்ட உடன், மீண்டும் இருள், இருளைக் கிழிக்கும் ஒளி, படைப்பாளர் பற்றிய காட்சிக் கவிதையாகத் திரையினில் படரத் தொடங்குகிறது. நூலின் நாலுவரிகள் காட்சியை இயக்குகின்றன. கடற்கரை, குடிசை, வனம் எனக் காட்சி பயணிக்க, காட்சியுடன் அந்த வெண்கலக்குரல் கவர்ச்சியான ஏற்ற இறக்கங்களுடன் வரிக்கு உயிர்கொடுத்துக் கொண்டுவர, ஒளி, ஒலி, கவிதை, கட்டுரை, கவிஞர், அணிந்துரைத்தவர்- இவர்களனைவரும் ஒரு புள்ளியில் ஒருங்கிணைய - அதே பிக் பேங்க் இசையொலியுடன் அதே படைப்புக்குழுமப் புறா - பின் அரங்கம். ஒளிர, படைப்பாளர் பெருமையுடன் மேடையேற, பொன்னாடை போர்த்தப்பட, ஏற்புரை அரங்கு நிறைக்க - ஆஹா இதுவன்றோ வெளியீடு !
சிறப்புரையாளர் கவிஞர் இந்திரன் இதனை ஏக்கத்துடன், அன்றொரு வருடம் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியரைத் தேடி இல்லம் சென்று அனுமதி வாங்கி, மெழுகுதிரி வெளிச்சத்தில் பத்து வாசகர்களுக்கும் குறைவான கூட்டத்தில் நூல் வெளியீட்டு விழா நிகழ்வை நடத்திய விதத்தைத் தங்களது சிறப்புரையில் பதிவுசெய்து விழாவைப் புகழ்ந்ததில் அரங்கம் நெகிழ, படைப்பாளர்கள் பெருமைப்பட, படைப்புக் குழுமம் சிலிர்த்ததைக் காண இலக்கியமே பெருமைப்பட்டது. நூல் வெளியீடு, பரிசளிப்பு, சிறப்பு அழைப்பாளர்களின் பெருஞ்சிற்றுரை எனக் கோள வடிவத்தில் நிகழ்வை நகர்த்திச் சென்றதில் பெருமைகொண்டது நேரமேலாண்மை. விழா அரங்கம் முதல் நிகழ்வு நடத்தும் யுக்தி வரை அனைத்தும் படைப்பு குழுமத்துடன் இணைந்து உலகத் தரத்திற்கு வடிவமைத்திருந்த யுனிக் ஆங்கிள் நிறுவனமும், அதன் நிர்வாக இயக்குநர் திரு அல்தாப் சலீமும் படைப்பின் தளபதிகள் சலீம் கான் & இப்ராஹிம் அவர்களின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.
தேநீர் இடைவேளை 30 நிமிடங்கள். இலக்கியக் காதலர்கள் முடிச்சு முடிச்சாய் நின்றுகொண்டு, அமர்ந்துகொண்டு, செல்ஃபிகளைச் சுட்டுக்கொண்டு, முதல் குழந்தையைப் பெற்றெடுத்த தாய் தனது குழந்தையைப் பார்க்கும்போதும் அதன் முதல் அழுகை ஒலியில் மேனி சிலிர்க்கும்போதும் வெளிப்படுத்தும் மகிழ்ச்சியை இலக்கியப் படைப்பாளர்கள், வாசகர்களின் பொன்னான நேரங்கள் மகிழ்ச்சியில் கரைந்துகொண்டிருந்தன. புத்தக விற்பனை எட்டு அரங்குகளிலும் கொடிகட்டிப் பறந்தது.
படைப்புக்குழும பரிசளிப்பு நிகழ்வில் சிறந்த மேடைப் பங்களிப்பாளர், மாதாந்திரச் சிறந்த பங்களிப்பாளர், குறளும் குரலும் பரிசுப்போட்டி, சிறந்த வாசகர், மக்கள் ஆதரவுபெற்ற கவிஞர், அம்மையார் ஹைநூன் பீவி மற்றும் கவிக்கோ பரிசளிப்புப் போட்டி என்ற வகைகளில் பரிசுகளும், சிறந்த பங்களிப்பாளர் விருது, கவிச்சுடர் விருது, இலக்கிய விருது - 2018, சிறந்த சமூக அக்கறையாளர் விருது, சிறந்த இலக்கிய அமைப்பு விருது எனப் பரிசுகளும் விருதுகளும் வழங்கப்பட்டன.
இவைகளுக்கு மத்தியில் இயக்குநர் கவிஞர் பிருந்தாசாரதி அவர்களிடம் ஒலிபெருக்கி நகர, ""ஒருவரின் வாழ்க்கையில் பேரிடி தாக்கும்போது குடும்பமே நிலைகுலையும், இதற்குப் படைப்பாளர் விதிவிலக்கல்ல. நிலைகுலைந்திருந்த கவிஞர் அமுதபாரதியைக் கைதூக்கி நிறுத்தும் படைப்புக்குழுமத்தின் முயற்சிகளைத் தனக் கேயுரிய கவித்துவ நடையில் அவர் அறிக்கைசெய்ய, ரூபாய் 1.25 லட்சம் நிதி கவிஞர் அமுதபாரதிக்கு வழங்கப்பட்டது. "சேபியன்ஸ்' புகழ் ஹராரியின் மேற்கோள் நினைவலைகளை நெருடியது. ""மகிழ்ச்சி, அதிகாரம் போன்றவற்றுக்காக மனிதன் தன்னை முழுவதுமாக தொழில்நுட்பத்திடம் ஒப்படைத்துவிட்டு மனிதத்தன்மையை முற்றிலுமாக இழந்துவிடும் சூழலில் இருக்கிறான்.''
எழுத்தாளர் பவா. செல்லத்துரை ஜெயகாந்தனின் கதை ஒன்றை அழகாகச் சொல்லி தன் உரைக்கு சுவையூட்டினார். ""வாழ்வாதாரம் இழந்த நிலையில் ஒரு கலைஞன் உதவி கோரினால் அவ்வளவு தாராளமாக நம்முடைய நாட்டில் உதவி கிடைப்பதில்லை. பல முறை கேட்டுத்தான் ஒரு லட்சம் இரண்டு லட்சம் திரட்ட முடிகிறது. இதுவே வெளிநாடுகளில் ஒரு புத்தகத்தை வெளியிட்ட எழுத்தாளன் கூட ஒரு தீவையே விலைக்கு வாங்க முடிகிறது'' என்ற தன் ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்டார்.
""பசுமைப் புரட்சியைப்போல் ஓர் இலக்கியப் புரட்சியை 'படைப்பு' நிகழ்த்தும். சிறந்த நூல்களுக்குப் பரிசு, வாழ்நாள் சாதனையாளர் விருது இவற்றோடு நலிவடைந்த கலைஞர்களுக்கான உதவியையும் படைப்பு ஆண்டுதோறும் வழங்கும்'' என்று பலத்த கரவொலிகளுக்கிடையில் அறிவித்தார் படைப்பு விழாவை மிகச் சிறப்பாக வடிவமைத்த அதன் நிறுவன இயக்குநர் ஜின்னா அஸ்மி.
சிறப்புரை ஆற்றிய இயக்குநர் என். லிங்குசாமி தன் நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் சார்பாக கவிஞர் அமுதபாரதி நல நிதிக்கு ரூபாய் ஐம்பதாயிரம் வழங்கப்படும் என அறிவித்துவிட்டு, ""ஆண்டுதோறும் நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும் என்று இங்கு அறிவித்தார்கள். அது மகிழ்ச்சிதான். என்றாலும் அந்த சொல்லுக்கு மாற்றாக வேறு வார்த்தைகளைச் சொல்லுங்கள். கலைஞனுக்கு நலிவென்பதே இல்லை. நல்ல படைப்புகளை உருவாக்கும் ஆற்றல் இருக்கும் வரை அவன் கலைஞன்தான். மோசமான படைப்பை உருவாக்கும்போதுதான் அவன் நலிவடைந்த கலைஞன். வாழ்க்கையில் எதிர்பாராத விபத்துகள் நேர்கையில் கலைஞர்கள் மட்டும் அல்ல யாராக இருந்தாலும் நெருக்கடியைச் சந்தித்துத்துதான் ஆகவேண்டும். மற்றவர்களைப்போல் கலைஞர்களுக்கு உதவி கிடைப்பது இங்கு எளிதாக இல்லை. ஆகவே இப்படியான உதவிகளை நாம் செய்வது அவசியம்'' என்று நிறைவு செய்தார்.
விருது நிகழ்வின் உச்ச நிகழ்வாக, கவிதைக் கலைஞன் கவிஞர் விக்கிரமாதித்யன் அவர்களுக்கு "வாழ்நாள் சாதனையாளர்' விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற கவிஞர் விக்ரமாதித்யன் தன் நீண்ட படைப்புலக அனுபவங்களை நினைவுகூர்ந்து படைப்பு அமைப்புக்கும் வந்திருந்த இளம் படைப்பாளிகளுக்கும் வாழ்த்துத் தெரிவித்தார்.
ஒரு சுவையான இலக்கிய விருந்தைச் சுவைத்த மகிழ்ச்சியில் அரங்கம் கலைய, ஜின்னா அஸ்மி நான்காம் ஆண்டுவிழாவிற்கான இலக்கியப்பணிகளை முடுக்கிவிட்டுக் கொண்டிருந்தார்.