திருக்குறளை மாணவர்களின் பாடத்திட்டத்தில் சேர்ப்பதோடு அவர்களை ஒழுக்க நெறியோடு வழிநடத்திச்செல்ல அதுதான் ஒப்பற்ற வழி என்று மாண்பமை நீதியரசர் மகாதேவன் அவர்கள் ஆதம்பாக்கம் டி.ஏ.வி. மேனிலைப்பள்ளியில் நிகழ்ந்த திருவள்ளுவர் இலக்கியமன்ற 44 ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். மேலும் உலக அளவில் திருக்குறளில் சொல்லியுள்ள கருத்துகள் யாவும் மனித இனத்தைத் திருத்தவே என்ற கருத்தை வலியுறுத்திப் பேசிய அவர், நாடு, இனம், மொழி கடந்து திருவள்ளுவர் சிந்தித்து உலகிற்கு வழங்கிய அந்த அறநூலைப் போல உலகில் வேறு எந்த நூலும் உருவாகவில்லை என்பதை ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.
திருக்குறளின் கருத்துகளைக் கற்பிப்பதன் மூலமே, சமூகத்தின் தகவல்களை அளிப்பது சாத்தியம் என்பதால் அத்திருக்குறளைப் பாடத் திட்டத்தில் கட்டாயமாகப் புகுத்தவேண்டும் என்ற வாதத்தை முன்வைத்துப் பேசிய அவரது வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நிகழ்த்தி அரசாணைக்கு அடித்தள மிட்டதன் நினைவாக, அவருக்குத் திருக்குறள் நீதியரசர் என்ற விருதினை மன்றத்தார் வழங்கி கௌரவித்தனர். முன்னதாக, மன்றத்தின் செயலாளர் முனைவர் இராம.குருநாதன் கவிதைமழை பொழிந்து அனைவரையும் வரவேற்றார்.
தலைமை உரை யாற்றிய தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் முன்னைத் துணைவேந்தர் இ.சுந்தர மூர்த்தி திருக்குறளை யாரெல்லாம் எப்படிப் பதிப்பித்தார்கள் என்பதை யும், அது மேனாட்டு அறிஞர் பலரால் மிகவும் போற்றிவந்திருப்பதையும் விரிவாக எடுத்துரைத்தார். திருக்குறளை மகாத்மா காந்திக்கு அறிமுகப் படுத்தி டால்ஸ்டாய் பற்றியும், பெர்னாட்ஷா திருக்குறள் மீது கொண்டி ருந்த ஆர்வத்தையும், ஆல்பர்ட் சுவைசர் வானளாவு அந்நூலைப் புகழ்ந்திருப்பதையும் எடுத்துரைத்த அவர், தமிழகத்தை ஆண்ட பிரிட்டிஷ் ஆளுநரான எல்லீஸ்துரை மொழிபெயர்த்த திருக்குறள் மொழிபெயர்ப்புச் செய்தமையைப் போற்றியதோடு அவருக்கிருந்த திருக்குறள் ஆர்வத்தைப் புகழ்ந் துரைத்தார்.
சிறப்புப் பேச்சாளராக வந்திருந்த முனைவர் விசாலாட்சி சுப்பிரமணியன் 'வாழ்வாங்கு வாழ' என்ற தலைப்பில், திருக்குறள் பல்வேறு அறங்களையும் எந்தெந்தச் சூழ்நிலையில் எடுத்துரைத்துள்ளது என்பதைப் பல மேற்கோள்களோடு எடுத்துக்காட்டிப் பேசினார். இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக, நல்லழகம்மை அறக்கட்டளை நடத்திய மரபுக் கவிதைப் போட்டியில் கலந்துகொண்டவர் களுக்குப் பரிசளிக்கப்பட்டது. முதல்பரிசு செம்பியன் நிலவழகன் எழுதிய தேனமுதம் என்ற நூலுக்கு ரூபாய் 10,000 மும், இரண்டாம் பரிசு ஆரூர் தமிழ்நாடன் எழுதிய காற்றின் புழுக்கம் என்ற நூலுக்கு ரூ 7,500-மும், மூன்றாம் பரிசு குமரிச்செழியன் எழுதிய ஆனந்தக் கனவு என்ற நூலுக்கு ரூ 5000-மும் வழங்கப்பட்டன. கவிஞர்கள் சந்தர் சுப்பிரமணியம், கருணானந்த ராசா, முத்துக்குமார், இலக்கியன் ஆகியோருக்கு மதிப்புறு பரிசாக ஒவ்வொரு வருக்கும் தலா 1000 வழங்கப்பட்டது. திருக்குறள் ஒப்பித்தல், பேச்சு மற்றும் கட்டுரைப்போட்டி களில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பள்ளி மாணவர்கள் இருநூறு பேருக்குப் பரிசளிப்பு நிகழ்வும், அதிக அளவில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற பள்ளிகளுக்குக் கோப்பைகளும் வழங்கப்பட்டன.