வீடுகளிலும் கடைகளிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ஆரம்பமாவதற்கு சற்று முன்பிருந்த ஒரு நாளின் சாயங்கால வேளையில் நான் அரசாங்க மருத்துவ மனைக்கு முன்னாலிருந்த ரெஸ்ட்டாரென்டில் தனியாக அமர்ந்திருந்தேன்.

கடைத்தெருவில் சில இடங்களில் நட்சத்திர விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. பல நிறங்களிலிருந்த சிறிய பல்புகளாலான மாலை களும்...

தெருவில் அவ்வப்போது சகாய விலையில் விற்பவர்களின் வாகனங்கள் சத்தமாக அலறியவாறு கடந்துசென்றன. அந்த வாகனங்களிலிருந்து ஜிங்கிள் பெல்களின் இசைக்கேற்றபடி கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் எட்டுவைப்பதும் தாவி விளையாடுவதுமாக இருந்தார்கள்...

ரெஸ்ட்டாரென்டின் வாசலுக்கருகில் அமர்ந் திருந்த நான் இவற்றையெல்லாம் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். தனியாக அமர்ந்திருந்தேன் என்று கூறினேன் அல்லவா? அந்தசமயத்தில் ரெஸ்ட்டாரென்டில் நிறைய ஆட்கள் இருந்தார்கள்.

Advertisment

எனினும் நான் தனியாகத்தான் இருந்தேன்.

ஒவ்வொன்றையும் சிந்தித்தவாறு... எனக்குள் நானே மூழ்கி... எந்தவொரு அசைவுமே இல்லாமல்...

எனக்கு முன்னாலிருந்த காபியும் தோசையும் மிகவும் ஆறிப்போய் குளிர்ந்துவிட்டிருந்தன. ஒரு சிறிய துண்டு தோசையைப் பிய்த்து, நீண்டநேரம் அதில் எதையோ தேடுவதைப்போல பார்த்தேன். அம்மா முன்பு அவ்வாறு செய்வதைப் பார்த்திருக்கிறேன். யாரிடமும் எதுவும் கூறாமல், கையிலிருக்கும் தோசைத்துண்டை மட்டும் பார்த்துக்கொண்டு... நிறைய அவமானங்களையும் பசியையும் நான் அனுபவித்திருக்கிறேன்.

Advertisment

story

அப்போது நான் ஒரு காட்சியைப் பார்த்தேன். ஒரு முப்பது... முப்பத்தைந்து வயது மதிக்கக்கூடிய ஒரு ஆணும், அவனுடைய மனைவியென்று தோன்றக்கூடிய ஒரு பெண்ணும் எனக்கருகில் மேஜைக்கு முன்னால் வந்து அமர்ந்தார்கள்.

ஆண் சவரம்செய்து அதிக நாட்கள் ஆகியிருக்கும். நல்ல உயரத்தைக் கொண்டிருந்த அவன் ஒரு காலத்தில் நல்ல உடலமைப்பைக் கொண்டவனாக இருந்திருக்கவேண்டும். எனினும், இப்போது அவனுக்கு நடப்பதற்குக்கூட சிரமமாக இருந்தது.

இளம்பெண்ணுக்கு ஒரு சிறிய மாலையைத் தவிர, வேறு ஆபரணங்கள் எதுவுமில்லை. அவள் அணிந்திருந்த ஆடைகளும் மிகவும் சாதாரணமானவையாக இருந்தன. எனினும் அவளுடைய முகத்தில் என்னவென்று கூறமுடியாத ஒரு... நான் அதற்கு என்ன சொல்லவேண்டும்..? ஐஸ்வர்யம் இருந்தது.

இளம்பெண்ணின் கையிலிருந்த பெரிய பை நிறைய ஏதோ பொருட்கள் இருந்தன. பையை மேஜையுடன் ஒட்டி தரையில் வைத்துவிட்டு, அவள் ஒரு பெருமூச்சை விட்டவாறு கணவனின் முகத்தைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

சப்ளையர் வந்தபோது அவள்தான் ஆர்டர் கொடுத்தாள். கணவன் ஆர்வத்துடன் உணவு சாப்பிடுவதைப் பார்த்தவாறு சிந்தனையில் மூழ்கி அமர்ந்திருந்த அவள் தனக்காக எதுவும் வாங்கவில்லை... ஒரு டம்ளர் தேநீர்கூட...

அவ்வப்போது ஸ்டீல் டம்ளரிலிருந்த குளிர்ந்தநீரை அவள் பருகிக்கொண்டிருந்தாள்.

இறுதியில் சப்ளையர் பில் கொண்டுவந்தபோது, அவள்தான் அதையும் வாங்கினாள். கணவன் அவளின் கையிலிருந்து அதைவாங்கி சிறிதுநேரம் அதைப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, அவளிடம் என்னவோ கூறினான். அது ஒரு வேண்டுகோளைப்போல இருந்தது. அவள் எதுவுமே கூறாமல் பெரிய பையிலிருந்து தன்னுடைய பர்ஸை எடுத்து அதிலிருந்த காசுகளை எண்ணி உறுதிப்படுத்திக்கொண்டாள். தொடர்ந்து சம்மதிப்பதைப்போல தலையை ஆட்டவும் செய்தாள்.

இந்த முறை சப்ளையர் வந்தபோது கணவன் பேசினான். சப்ளையர் சென்று ஒரு பொட்டலத்துடன் வந்து, முதலில் போட்ட பில்லை அவர்களுக்குத் திருத்திக் கொடுத்தான்.

நான் நினைத்தேன்: வீட்டில் அவர்களை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் குழந்தை களுக்கான பலகாரங்களாக இருக்கும்...

அவள் பணத்தைக் கொடுப்பதற்காக கவுன்டரை நோக்கி நடந்தபோது, நான் கண்களை மூடி அமர்ந்து, ஒவ்வொன்றையும் நினைத்துக்கொண்டிருந்தேன். அனைத்துமே காற்றில் பறந்து செல்லக்கூடிய ஓவியங்களாக இருந்தன.

ஒரு இளைஞனும் இளம்பெண்ணும்...

அவர்கள் ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள். ஒருவேளை அவர்கள் படிக்கும் நாளிலிருந்தே ஒருவரையொருவர் நன்கு தெரிந்தவர்களாக இருந்திருப்பார்கள்.

அவர்களுடைய திருமணத்திற்கு எதிர்ப்புகள் உண்டாயின. ஆனால் அனைத்து எதிர்ப்புகளையும் கடந்துவந்து, அவர்கள் மனைவியாகவும் கணவனாகவும் ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒன்றோ இரண்டோ குழந்தைகள் பிறக்கின்றன. பிறகு...

கணவனின் திசை மாறிய பயணங்கள்... மதுவுடன் உண்டாகக்கூடிய நெருக்கம்... நோய்... வேலையை இழத்தல்... இந்த அனைத்து சோதனை களையும் தனியாக சந்தித்த மனைவி... ஆனால் ஓவியங்களை எளிதாக ஒன்றுசேர்க்கவும் முடியவில்லை.

நான் என்னை சமாதானப்படுத்திக்கொண்டேன். வாழ்க்கை அல்லவா? அது இப்படித்தான் இருக்கும். இறுதியில்... என் காசைக் கொடுத்துவிட்டு நானும் வெளியே வந்தேன்.

வெளியே... மக்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டு வந்தது. ஆனால், அந்த கூட்டத்திலும் நான் பார்த்தேன். அவர்கள் சென்றிருக்கவில்லை. சாலையின் ஓரத்திலிருந்த வேலியையொட்டி அவர்கள் நின்றுகொண்டிருந்தார்கள்.

கணவன் தன் மனைவியின் தோளில் கையைப் போட்டு... மனைவி அவனைத் தாங்கிப் பிடித்திருந்தாள்.

நான் நினைத்தேன்: கவலைப்பட்டுக் கொண்டி ருக்கவேண்டும்.

ஆட்கள் அவர்களை கவனிக்கவில்லை. அவர்களும் யாரையும் கவனிக்கவில்லை.

அப்போது புதிய ஒரு விளம்பர வண்டியிலிருந்து புதிய ஒரு கிறிஸ்துமஸ் தாத்தா சிரித்துக்கொண்டே பாடினார்:

"உங்களுக்கு சந்தோஷமான ஒரு மெர்ரி கிறிஸ்துமஸ் அமைய வாழ்த்துகிறேன்!''