லக்கிய உலகிலும் பெண்கள் தங்கள் ஆளுமையை நிலைநாட்டி வருகின்றனர்.

ஆண்களுக்கு நிகரான இந்த வெற்றியைப் பெற, அவர்கள் ஆண்களை விடவும் கடுமையாக உழைக்கவேண்டியிருக்கிறது. அவர்கள் குடும்பப் பராமரிப்பு என்ற பாரத்தையும் சுமந்தே ஆண்களுக்கு நிகராக ஓட வேண்டியிருக்கிறது. அப்படியானதொரு நெடிய ஓட்டத்திற்கிடையே தமிழின் சிறந்த மொழிபெயர்ப்பிற்கான சாகித்ய அகடமி விருதுக்கு தேர்வாகியிருக்கிறார் கே.வி. ஜெயஸ்ரீ. சிறந்த எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் என்று ஏற்கனவே தமிழுலத்திற்கு அறிமுகமானவர். அவர் "நிலம் பூத்து மலர்ந்த நாள்' என்ற தன் மொழிபெயர்ப்புப் படைப்பிற்காகவே இந்த சிறப்பை அடைந்திருக்கிறார்.

திருவண்ணாமலை அருகே உள்ள தென்மாத்தூர் கிராமத்தில் பசுமையான வயல்வெளிகளுக்கு நடுவில் கானகம் என்கிற பெயரைத் தாங்கியிருக்கும் கருங்கல்லால் கட்டப்பட்ட அழகிய வீட்டில் வசித்துவருகிறார் ஜெயஸ்ரீ. இவரது கணவரான உத்திரகுமார், அரசியல் விமர்சகராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் திகழ்கிறார். அதேபோல், இவர் மகள் சுகானாவும் இளம் மொழிபெயர்ப் பாளர்தான். மகன் அமரபாரதி சிறந்த கலை ஆர்வலர்.

விருது அறிவிக்கப்பட்ட அன்று மாலை, தன் குடும்பத்தினரோடு உற்சாகமாக உரையாடிக்கொண்டு இருந்தவர், நம்மைக் கண்டதும் மகிழ்ச்சியோடு வரவேற்றார். விருது பெற்றமைக்கு "இனிய உதயம்' சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு உரையாடலைத் தொடங்கினோம்.

Advertisment

நீங்கள் கேரளப் பின்னணி கொண்டவர்தானே?

ஆமாம் கேரளா மாநிலம் பாலாக்காடுதான் எங்கள் பூர்வீகம். என் தாய் மாதவி, தந்தை வாசுதேவன் ஆகியோர் அங்குதான் வசித்து வந்திருக்கிறார்கள். பின்னர் தான் திருவண்ணாமலைக்கு குடிபெயர்ந்தது எங்கள் குடும்பம். நான் வளர்ந்தது, படித்தது எல்லாமே திருவண்ணாமலையில்தான். நாங்கள் 3 சகோதரிகள். என் தாயார், தன் கணவரை இழந்து, ஆண் துணையில்லாமல் பெண் குழந்தைகளான எங்களை வைத்துக்கொண்டு, பல்வேறு துன்ப, துயரங்களைத் தாங்கிக்கொண்டு எங்களை வளர்த்தார். அப்போதெல்லாம் அவரது மன பாரத்தைக் குறைப்பதாக இருந்தவை புத்தகங்கள்தான். அவர் வாசித்துவிட்டு வைத்த நூல்களை நானும், சகோதரிகளும் வாசிப்போம். எங்கள் வாசிப்பே எங்கள் முன் புதிய உலகத்தைக் காட்டியது. அனைவருடனும் பாலின பேதமில்லாமல் நட்புடன் இருக்கவைத்ததும் புத்தகங்கள்தான். இலக்கிய நிகழ்வுகளுக்கும் அது செல்லவைத்தது. பிரபஞ்சன், கி.ரா, புதுமைப்பித்தன் போன்ற பல படைப்பாளிகளின் நூல்களைத் தேடித்தேடி எங்கள் இளமைக் காலத்திலேயே வாசித்தோம்.

jayasree

Advertisment

இலக்கியப் பணிக்கு உங்கள் குடும்பம் எந்தளவுக்கு உறுதுணையாக இருக்கிறது?

என் கணவர் உத்திரகுமார், மொழிபெயர்ப்பாளர். மகளும் மொழிபெயர்ப்பாளர். அம்மா வாசிப்பாளர். மகனும் சிறந்த வாசகர். அதேபோல் என் சகோதரிகளின் குடும்பத்திலும் எல்லோரும் எழுத்தாளர்களாகவும், வாசகர்களாகவும் இருக்கின்றனர். அதனால் எல்லோரும் அன்பாக என்னைத் தாங்குகிறார்கள். என் பணியை அவர்கள் உணர்ந்துகொண்டு அதற்குத் தகுந்தாற்போல் தங்களது பணிகளை அமைத்துக்கொள்கிறார்கள். அவர்கள் கைகொடுக்கவில்லை எனில் என் வெற்றி சாத்தியமில்லை.

எந்தெந்த மொழிகளில் இருந்து நூல்களை மொழிமாற்றம் செய்திருக்கிறீர்கள்? இதுவரை நீங்கள் மொழிபெயர்த்த நூல்கள் எத்தனை?

எங்களது பூர்வீகம் கேரளா என்பதால் எனக்கு மலையாள மொழியில் எழுதப் படிக்க நன்றாகத் தெரியும். நான் தமிழ்வழியில்தான் படித்தேன். பட்டங்கள் பெற்றேன். தற்போது அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகலை தமிழாசிரியராக இருக்கிறேன். எனக்கு மலையாளம் தெரியும் என்பதால், மலையாள நூல்களை தமிழில் மொழிமாற்றம் செய்யும்படி என் இலக்கிய நண்பர்கள் என்னை ஊக்குவித்தார்கள். அப்படியே செய்ய முடிவு செய்தேன். மலையாளத்தில் இருந்து இலக்கியம் என்கிற பெயரில் உள்ள எல்லாவற்றையும் நான் எடுத்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்வதில்லை. நான் விரும்பியவற்றையும், என் மனதுக்குப் பிடித்தவற்றையும், பெண்களை மனரீதியாக உயர்த்தும் தொகுப்புகளையும் மட்டுமே மொழிபெயர்த்து வருகிறேன். பால்சக்காரியாவின் சிறுகதைகள், சியாமளா சசிகுமாரின் கவிதைகள், அய்யப்பன் கவிதைகள் என மலையாள பிரபலங்கள் சிலரின் எழுத்துக்களைத்தான் நான் மொழிமாற்றம் செய்கிறேன். இதுவரை 5 சிறுகதைத் தொகுப்புகள், 2 கவிதை தொகுப்புகள், நாவல் என 12 நூல்களை மொழிமாற்றம் செய்துள்ளேன்.

நிலம் பூத்து மலர்ந்த நாள் நாவலை மொழிபெயர்க்க தூண்டுதலாக இருந்தது எது?

மலையாளத்தின் பிரபல எழுத்தாளரும், கல்லூரிப் பேராசிரியருமான மனோஜ் குரூர் எழுதிய முதல் நாவல் அது. இரண்டாயிரம் வருடத்துக்கு முன்பு வாழ்ந்த பாரி மன்னனின் கொலை குறித்தும், அதனைக் கண்டறியும் பாணர் குடும்பம் குறித்தும், அம்மக்களின் வாழ்க்கை முறை குறித்தும் விவரிக்கும் வண்ணம், அவர் அந்த நூலை எழுதினார். மலையாளத்தில் எழுதப்பட்டாலும் தமிழ் இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்றவற்றின் கருத்துக்களில் இருந்தே இந்த நாவலை 256 பக்கங்களுக்கு எழுதினார். மனோஜ் குரூர் மலையாளத்தில் எழுதி முடித்ததும் அதன் பிரதி என்னிடம் வந்தது. எனது 35 ஆண்டு கால நண்பரான எழுத்தாளர் ஜெயமோகன் என்னிடம் அதனை தமிழில் மொழிபெயர்ப்பு செய்யச் சொன்னார். அதனால் நான் மொழிபெயர்த்தேன். மலையாளத்தில் அந்த நூல் வெளிவந்த ஒரு மாதத்தில், தமிழில் இந்நூல் வெளிவந்துவிட்டது. இதனை நாம் மலையாள வரலாறாகப் பார்க்க முடியாது, பார்க்கவும் கூடாது. இதனை ஆதித்தமிழர் வரலாறாகத்தான் நாம் பார்க்கவேண்டும். கேரளாவில் அப்படித்தான் பார்க்கிறார்கள். நாம்தான் சேர நாட்டினராக அவர்களைப் பார்க்கிறோம். நம்மை அவர்கள் பிரித்துப் பார்ப்பதில்லை.

இந்த நூல் வெளிவந்தபோது அதற்கு எப்படியான வரவேற்பு இருந்தது?

இந்தநூல் 2016-ல் வெளிவந்தபோது நவீன இலக்கிய வாசகர்கள், இதனை எப்படி எடுத்துக்கொள்வார்களோ என்கிற தயக்கம் இருந்தது. ஆனால் புத்தகத்தை வாங்கிப் படித்துவிட்டு பலரும் பாராட்டினார்கள். இதனை இரண்டு கலைக் கல்லூரிகளில் முதுகலைக்கான பாடமாக வைத்திருக்கிறார்கள்.

சாகித்ய அகடமி விருதுகள் பெரும்பாலும் பெண் படைப்பாளர்கள் பக்கம் அதிகம் வருவதில்லையே...

ஒவ்வொரு மாநிலத்திலும் சாகித்ய அகடமி அமைப்பு இருக்கிறது. தமிழ்நாட்டில் அப்படியொரு அமைப்பு கிடையாது. தமிழ் எழுத்தாளர்கள், மத்தியில் உள்ள சாகித்ய அகடமி தரும் விருதுகளைத்தான் வாங்கி வருகிறார்கள். 1989-ல் இருந்து மொழிபெயர்ப்பு படைப்புகளுக்கென தனியே சாகித்ய அகடமி விருது வழங்கப்படுகிறது. தமிழ் மொழிபெயர்ப்பாளர்களில் எனக்கு முன் இதுவரை 3 பெண் எழுத்தாளர்கள் இவ்விருதை வாங்கியிருக்கிறார்கள். தற்போது நான் நான்காவதாகப் பெறுகிறேன். இந்த எண்ணிக்கை குறைவாக இருப்பது வேதனையானது. ஆண் எழுத்தாளர்கள் எழுதுவதற்கும், மொழிபெயர்ப்பதற்கும் அவர்களுக்கு நிறைய நேரம் கிடைக்கிறது. அவர்களுக்கு காபி போட்டுக்கொண்டு வந்து தர, அவர்களது மனைவி இருப்பார். இல்லையெனில் அப்படி அவர்கள் குடும்பத்தில் யாராவது இருப்பார்கள். பெண் எழுத்தாளர்களுக்கு அப்படியல்ல. அவர்கள் தங்கள் குடும்பத்தை முதலில் கவனிக்க வேண்டும், கணவரையும் குழந்தைகளையும் கவனிக்க வேண்டும், இப்படித் தங்கள் வேலைகளை எல்லாம் முடித்தபின்பே ஒரு பெண் எழுத்தாளரால் எழுதவும், மொழிபெயர்ப்பு வேலைகளில் ஈடுபடவும் முடியும். இத்தனை பணிகளைத் தாண்டி, பெண்கள் எழுத வருகிறார்கள் என்றால், அப்படிப்பட்டவர்களை ஊக்குவிக்க வேண்டும். இப்படிப்பட்ட சூழல் சமுதாயத்திலும், குடும்பத்திலும் குறைவாகவே இருக்கிறது.

இலக்கியத்தில் லாபி செய்தால் மட்டுமே விருதுகள் கிடைக்கும் என ஒரு நேர்காணலில் நீங்களே குறிப்பிட்டிருந்தீர்கள். தற்போது உங்களுக்கு சாகித்ய அகடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளதே?

உங்கள் கேள்வியின் ஆழம் புரிகிறது. குறிப்பாக, திருப்பூர் கலை இலக்கியப் பேரவை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, நல்லி திசை எட்டும் விருது, புதுக்கோட்டை புத்தகத் திருவிழா விருது, நெய்வேலி புத்தகத் திருவிழா விருது, திருவண்ணாமலை புதிய பார்வை அறக்கட்டளை விருது என பல விருதுகளை வாங்கியுள்ளேன். இந்த விருதுகளைப் பெற நான் எந்த லாபியும் செய்யவில்லை. அந்த விருதுகள் என் எழுத்துக்காகவே கிடைத்தது. அதுபோலத்தான் இந்த விருதும்.

மொழிபெயர்ப்பு செய்யும் உங்களைப் போன்ற எழுத்தாளர்கள், ஏன் நேரடிப் படைப்புகளில் அதிக ஆர்வம் செலுத்துவது இல்லை?

மொழிபெயர்ப்பாளர்களிடம் எல்லோரும் எழுப்பும் கேள்விதான் இது. ஏன் அந்தக் கேள்வியை எழுப்பு கிறார்கள், எழுப்புகிறீர்கள் என்று தெரியவில்லை. ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழிக்கு ஒரு நூலைக் கொண்டுவருவது என்பது கடினமான பணி. அதற்கான மொழிபெயர்ப்பு எழுத்தாளர்கள் குறைவாக உள்ளார்கள். அப்படியிருக்க அவர்கள் ஏன் நேரடிப் படைப்பில் கவனம் செலுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?

இலக்கியத்தில் மொழிமாற்றம் என்பது சற்றே கடினமான பணி. அப்படிப்பட்ட பணியைச் செய்கிறவர்கள் ஒரு நாவல், கவிதை, சிறுகதை, புதினம் எழுதினால் நன்றாக இருக்கும் என்கிற எதிர்பார்ப் பினால்தானே அந்தக் கேள்வி எழுப்பப்படுகிறது?

எழுதுவது என்பது ஆத்மார்த்தமானது. ஒருவரை இழுத்து வந்து உட்காரவைத்து இதை அதை எழுது என்றால் என்ன எழுதுவது? அது உள்ளிருந்து தானாக வரவேண்டும், பிறர் நெருக்கடியில்லாமல் எழுதவேண்டும். எனக்கும் தன்னிச்சையாக ஒரு படைப்பை நேரடியாகத் தரவேண்டும் என்கிற உந்துதல் வரும்போது, நிச்சயம் எழுதுவேன்.

உங்களின் அடுத்த முயற்சி என்ன ?

தற்போது விருது வாங்கியுள்ள இந்த நூலை 2016 மே மாதம் மொழிபெயர்த்து முடித்தேன்.

அப்போதே அது நூலாக வெளிவந்தது. அதன்பின் கடந்த 3 ஆண்டுகளாக எதையும் எழுதவில்லை. படித்துக்கொண்டே இருக்கிறேன். தற்போது குஷ்ணராசி என்கிற பெயரில், கேரளாவின் 100 ஆண்டுகால கம்யூனிஸ்ட் தொடர்பான வரலாற்று நூலினை மொழிபெயர்த்துக்கொண்டு இருக்கிறேன்.

தற்போது சமூகத்தில் மகளிர் நிலை எப்படியுள்ளது?

பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வி படிக்கும் வரை தனித்து முடிவெடுக்கும் அதிகாரமும், சுதந்திரமும் பெண் பிள்ளைகளுக்கு கிடைப்பதில்லை. கல்வியே சுதந்திரச் சிறகைத் தருகிறது. அவர்கள் கல்லூரிக்கு சென்றால்தான் அதிகாரமும், சுதந்திரமும் அவர்களுக்குக் கிடைக்கிறது. எனவே பெண்கள் கல்லூரி வரையிலாவது போகவேண்டும். அப்போதுதான் சமுதாயத்தில் சுதந்திரமாக பெண்களால் வாழ முடியும். நான் பொதுவாகப் பெண்களுக்குச் சொல்ல விரும்புவது என்னவென்றால், எந்த சூழ்நிலையிலும் உறுதியான முடிவுகளையே எப்போதும் எடுக்கவேண்டும். அனைத்து மட்டத்திலும் பெண்ணை மதிக்கும் சமுதாயம்தான் பெரும் உயர்வினைப் பெறும். இதை அனைவரும் உணரவேண்டும்.

- நேர்காணல் து.ராஜா