கதையாக எழுதுவதற்கு ஏற்றதல்ல விஷயம்... எனினும், இதை ஒரு கதையாக எழுத முடியுமா என்ற சோதனைதான்...
சம்புபாட்டியின் கிழக்கு எல்லையில் தான் பலா மரம் இருந்தது.
என் வீட்டின் தெற்கு எல்லையிலும்... பலா காய்க்காமல் நின்று கொண்டிருக்கிறது.
சம்புபாட்டிக்கும் எனக்கும் ஒரே மாதிரி பலா மரத்தின்மீது கண் இருந்தது. கண் அல்ல... வெறி.
நீண்டநாளைய விலைபேசலின் விளைவாக எல்லையிலிருந்து ஆறு சென்ட் இடத்தை விட்டுத் தருவதாகக் கூறும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன். ஆறு சென்ட் நிலத்திற்கு தங்கத்தின் விலையைக் கொடுக்க வேண்டியதிருந்தது. தொகை கையில் இல்லை.ஆசையால் உண்டானது.
சம்புபாட்டியின் பலா மரம் என் கைக்கு வந்து விட்டது. நான் சந்தோஷப்பட்டேன். ஆறு சென்ட் நிலத்தில் எதிர்காலத்தில் செய்யப் போகும் திட்டங்களைப்பற்றி நினைத்து உணர்ச்சிவசப் பட்டேன். பணம் கையில் வரட்டும். அப்போது மற்ற விஷயங்களைப் பற்றி சிந்திக்கலாம்.
ஆறு சென்ட் நிலத்தைத் தனியாகப் பிரித்து, வேலி கட்டினேன். சுவர்தான் எழுப்பியிருக்கவேண்டும். கையில் பணமில்லை. ஆறு சென்ட் நிலத்தை வாங்கிய தற்கான கடன் தீரவில்லை. அதற்கு முன்பே எப்படி சுவர் எழுப்ப முடியும்? கிணறு தோண்டவேண்டும்.
எப்படிப்பட்ட கடுமையான வெயிலிலும், சுத்தமான நீர் நிறைந்திருக்கும் கிணறு...
காங்க்ரீட்டை இறக்கி உண்டாக்கும் கிணற்றைவிட எப்படிப் பார்த்தாலும், நல்லது கல் கிணறுதான்.
கிணற்றின் அடிப்பகுதியில் செங்கற்களால் அமைக்கப்பட்ட படிகள்... இப்படியும் அப்படியுமாகக் கட்டலாம்... நல்ல கல் பணியாட்கள் கிடைத்தால்...
கையில் தாராளமாகக் காசு இருந்தால், அருமையான கிணறு உண்டாக்கலாம்.
நிலம் கைக்கு வந்தவுடன், பலவகையான விருப்பங்களும் தோன்றின. ஆறு சென்ட் நிலத்தில் சொர்க்கத்தை உண்டாக்குவேன்.
அந்த சொர்க்கத்தின் அரசனாக மரணம்வரை வாழுவேன்.
ஆறு சென்ட் பூமியின் பரப்பிற்கு எல்லைகள் இல்லையென்று தோன்ற ஆரம்பித்தது. ஆறு சென்ட் நிலத்தில் இருந்துகொண்டு உலகத்தைவென்று பிடிக்கமுடியாதென்று யார் கண்டார்கள்? ஆறு சென்ட் நிலம் சுய உழைப்பின்மூலம் உண்டாக்கியது.
பலா மரம் என் வீட்டின் வாசலில் இருப்பது என்பது ஒரு ஐஸ்வர்யத்தின் அடையாளம்.
செய்யப்படவேண்டிய விதத்தில் மிகவும் கவனம் செலுத்தி வளர்த்தால், தாமதிக்காமல் கோடி காய்கள் காய்க்கும்.
கோடிக்கணக்கில் காய்கள் காய்த்தால், முதல் பழத்தை குருவாயூரப்பனுக்கு முன்னால் கொண்டு போய் வைப்பேன்.நேர்த்திக்கடன் நேர்ந்தேன். என் பிரார்த்தனைகள் ஒவ்வொன்றும் கட்டாயம் நிறைவேறும் என்ற ஆழமான நம்பிக்கையுடன் பலா மரத்தை ஒரு ஆராதனைக்குரிய பழ மரமாக வழிபட ஆரம்பித்தேன்.
கவனித்துப் பார்த்துக் கொள்வதில் ஈடுபட்டேன்.
அதிர்ஷ்டவசமாக கோடைக் காலம் வருவதற்கு முன்பே ஒரு கிணற்றைத் தோண்ட முடிந்தது.
பதினோரு சதுர அடி சுற்றளவைக்கொண்ட காங்க்ரீட் கிணறு. கல் கிணற்றைத்தோண்ட முடியவில்லை. நல்ல செங்கல் கிடைக்கவில்லை.
கிணற்றின் படிக்கட்டுகளைக் கட்டக்கூடிய ஆட்கள் கிடைப்பதில் சிரமம்... கல் படிக்கட்டு அமைப்பதற்கான நல்ல கல் கிடைப்பதில் இருக்கக் கூடிய கஷ்டம்... அதிகமான கூலி... காங்க்ரீட் கிணற்றை விட செலவு மூன்று மடங்கு அதிகமாக வரும். கிணறு தோண்டுவதற்கு ஒப்பந்தம் போடவேண்டியதிருந்தது. மொத்தம் வரக்கூடிய செலவின் பாதியை முன் பணமாகக் கொடுத்தால் போதும். நல்லமுறையில் நீரைப் பார்த்தபிறகு, பணியை முழுமையாக முடித்துவிட்டுச் செல்லும் போது, மீதி தொகை யைக் கொடுத்து முடிக்க வேண்டும்.
நிபந்தனைகளுக்கு சம்பந்தப்பட்ட ஆட்களும் சம்மதித்தனர். நல்ல நேரம் பார்த்து முன்பணம் கொடுத்தேன்.
கிணற்றிற்கான இடத்தை முடிவுசெய்து, பூஜை நடத்தி, கர்மங்களை ஆரம்பித்தார்... மூத்த ஆசாரி...
பெருந்தச்சன்...
எளவள்ளி சங்கரன் குட்டி ஆசான்.
அனைத்தும் சந்தோஷப்படும் வகையில் நடைபெறவேண்டும் என்பதற்காக கடவுளுக்கு வழிபாடுகள் செய்தேன். சீக்கிரம் நீரைப் பார்ப்பதற்காக, நீரைக் கொண்டு துலாபாரம் நடத்தினேன். கயிறு வழிபாடும்.... ஒன்பது அடி தோண்டும்போது, நீர் இல்லாமல் இருக்காது. ஏழு வரை களிமண்... சேறு...
எட்டில் சேற்று மண்ணும் கல்லும்... ஒன்பதில் எளிதான தெளிந்த நீர்... கண்ணீரைப்போல.
சங்கரன்குட்டியின் வார்த்தைகளில் யாருக்கும் சந்தேகமில்லை. தச்சு பாடத்தை முழுமையாகக் கற்றிருக்கும் மனிதர்... அறிவும் செயலும் நிறைந்த அனுபவங்கள் கொண்ட தச்சன்... வீட்டிற்குத் தூண் அமைப்பதற்கு எளவள்ளிதான் வேண்டும்.
அனைவருக்கும்... நீர் இருக்கும் இடத்தைத் தீர்மானிப்பதில் கைதேர்ந்தவர்...
கடவுளின் அருளால் திறமைகளைக் கையில் வைத்திருக்கும் எளவள்ளி சங்கரன் குட்டி ஆசான் கூறினால், அந்த வார்த்தைகள் எந்த சமயத்திலும் தவறாக இருக்கவே இருக்காது.
ஆனால், பதினோரு அடி தோண்டவேண்டிய நிலை உண்டானது சிறிதும் எதிர்பாராத ஒன்றுதான்.
பத்தாவது அடி தோண்டியவுடன், நீர் சாதாரண மாக வந்தது. கனமான இரண்டு ஊற்றுகள் அடியிலிருந்து மேலே வந்தன. சுவையான நீரைப் பார்த்ததும், பணி நிறுத்தப்பட்டது.
பதினொன்றாவது அடியை அறியாமல் தோண்டியிருக்கலாம்... ஒன்பதிலிருந்து பதினொன் றிற்கான தூரம், கணக்கிடும்போது தவறிவிட்டதா? அல்லது... என் காலக்கேடு காரணமா? சந்தேகம் உண்டாகாமல் இல்லை.
பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
பதினொன்றாவது அடி கீழே இருந்தாலும், இரண்டு அடிக்கு நீர் உயர்ந்து நின்றது. அதுவும் கோடையில்... இதைவிட ஒரு ஆசீர்வாதம் உண்டாவது அரிய விஷயம் என்பதை உணர்ந்து அங்கு பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் வழிபட ஆரம்பித்தார்கள்.
எளவள்ளிக்கு தட்சணை வைத்து வணங்கினேன்.
சில்க்கும் வளையலும் தரப்படுவதற்குப் பதிலாக இரட்டை மடிப்பு வேட்டியையும் மேற்துண்டையும் பரிசாக அளித்தேன்.
எளவள்ளி முழு சந்தோஷத்துடன் திரும்பிச் சென்றார்.
நிலத்திற்குள் வற்றாத கிணறு உண்டானபிறகு, நான் ஆளே முழுமையாக மாறிவிட்டேன். சிறிது ஆணவம் எனக்குள் அரும்பி விட்டதோ என்ற சந்தேகம் உண்டானது.
இல்லாவிட்டால்....
அலட்சியத்தால் ஏற்பட்ட பொறுப்பற்ற தன்மையா? உறுதிமொழி மீறலா?
பிரார்த்தனையில் களங்கம் உண்டாவது அந்த அளவுக்கு குற்றகரமானதா? ஒவ்வொருவரும் என்னவெல்லாம் வேண்டிக்கொள்கிறார்கள்! எவ்வளவு... எவ்வளவு நேர்த்திக்கடன்களை நேர்ந்துகொள்கிறார் கள்! காரியம் நிறைவேறிவிட்டால், வேண்டுதல் நடத்தியவர்கள் அனைவரும், முறை தவறாத அளவுக்கு காரியங்களைச் செய்து முடிக்கிறார் களா? தெய்வத்திற்கு எதற்கு நேர்த்திக்கடன்? நேர்த்திக்கடனை ஏற்றுக்கொள்ளும் வியாபாரியா தெய்வம்? காலம் காலமாக நடந்துகொண்டிருக்கும் சம்பவங்களை முழுமையாக மாற்றியமைப்பதற்கான காலம் கடந்தோடி விட்டிருக்கிறது.
அனைத்தையும் கடவுளின் கருணையால் உண்டாகக் கூடியவை என்று எடுத்துக்கொள்வதாக இருந் தால், இந்த உலகம் முழுவதும் அது விலைபோகாது.
பழமைவாதி என்று முத்திரை குத்தப்படுவான்.
அந்த மனிதன்மீது மூடநம்பிக்கையாளன் என்ற பழியைப் பகுத்தறிவாளர்கள் சுமத்துவதைக் கேட்க வேண்டிய சூழல் உண்டாகும். புதிய தலைமுறையின் அங்கீகாரம் அத்துடன் இல்லாமல் போய்விடும்.
பல கணக்குக் கூட்டல்களிலும் சிக்கி, மனம் அலைபாய்ந்தது.
பகுத்தறிவின் கூர்மையான பற்கள் இதயத்தைக் கடிக்க ஆரம்பித்தன.
இதைப்பற்றி அந்த அளவிற்குப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.
நமக்கென்று இருக்கக்கூடிய வேலைகளைச் செய்து முடிக்கவேண்டும்.
கர்மங்களே கண் என இருக்கவேண்டும். அனைத்து விஷயங்களுக்கும் முன்வரிசையில் போய் நிற்பதென்பது ஒவ்வொருவனின் செயலாக இருக்கவேண்டும்.
கர்மத்தைச் செய்யாதவனுக்கு காத்திருப்பதற்கான உரிமை இல்லை. நல்லவை நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பைக் கைவிட்டுவிடக் கூடாது. நம்பிக்கைலி அது ஒரு பெரிய விஷயம்! கிணற்றில் தாராளமாக நீர் இருந்ததால், நிலத்தை ஈரப்படுத்துவதில் சிறிதும் பிரச்சினையில்லை. தென்னையும் மாமரங்களும் முந்திரியும் இருந்தன. பலா மரமும்... கும்பம், மீனம், மேஷம் இல்லாத கோடையில் நீர் பாய்ச்சினால், காய்கள் நிறைய காய்க்கும்.
காய்கறிகளை விவசாயம் செய்யலாம்.
வெண்டை, கத்தரி, பாகற்காய், சுரைக்காய், கீரை ஆகியவை நன்றாக விளையக்கூடிய மண்... சம்புபாட்டி காய்கறிகளை விலைக்கு வாங்குவதில்லை.
நான்கைந்து முருங்கைகளை நட்டு வளர்க்க வேண்டும். வாசலில்...முருங்கை, பலா... வீட்டிற்கு வருபவர்களுக்கு ஒரு குளிர்ச்சி உண்டாக வேண்டும்.
இருக்கக்கூடிய இடத்தின் ஒரு அங்குலத்தைக்கூட வீணாக்கி விடக்கூடாது என்ற ஆழமான தீர்மானத் துடன் ஆறு சென்ட் பூமியை பசுமைமயமாகவும், பழ மரங்கள் நிறைந்ததாகவும் ஆக்கக் கூடிய கடுமையான முயற்சியில் இறங்கினேன்.
சொந்தமாக உண்டாக்கிய ஆறு சென்ட் நிலத்தின் உரிமையாளன் என்ற வகையில், என்னுடைய இருப்பைச் சுற்றிலும் இருப்பவர்கள் அங்கீகரிக்கப் போகிறார்கள் என்ற எண்ணம் ஒவ்வொரு நாளும் வளர ஆரம்பித்தது.
கோவிலுக்கு மிகவும் அருகில் இருக்கக்கூடிய ஆறு சென்ட் நிலத்தின் சொந்தக்காரன் அவ்வளவு சாதாரணமானவன் அல்ல. இனிமேல் அமர்ந்து கால்களை நீட்டலாம். யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை. நான் என்ற எண்ணம் வளர ஆரம்பித்தவுடன், கால் தரையிலேயே இல்லை என்ற தோணல் உண்டாகிவிட்டதோ? அற்பனுக்கு வாழ்வு கிடைத்தால், மழையே இல்லையெனினும், நள்ளிரவில் குடையை விரிப்பானோ?
நிலம் முழுவதையும் கொத்தி, களைகளைச் சேகரித்து நெருப்பு வைத்து சாம்பலாக்கினேன்.
அனைத்துமே களைகள்தானா? எவ்வளவோ நாட்டு மருந்துச் செடிகளும், கொடிகளும், இலைகளும், பூக்களும் அவற்றுடன் சேர்ந்து இல்லாமற் போயின.
இழக்கப்பட்டவை சாதாரணமானவை என்றிருந்தாலும், அவற்றின் மதிப்பு மிகவும் அதிகம். அபூர்வமான புற்களும், செடிகளும்.
மூக்குத்தி, கருந்தோட்டி, தும்பை, தொட்டாஞ் சிணுங்கி, பூவங்குருந்தல், முயல் செவி, கீழாநெல்லி, அறுகம்புல், நிலப்பனை...
தேடி நடந்தால்கூட கிடைக்கமுடியாத மூலிகை களை நெருப்பு வைத்து கரியச்செய்து சாம்பலாக்கி விட்டேன்.
ஐஸ்வர்யத்திற்கு நெருப்பு வைத்தவன் என்ற கெட்ட பெயருக்கு இரையாகிவிட்டேனோ? கோரைக் கிழங்கைக்கூட எரித்து நாசமாக்கிய மிகப்பெரிய பாவி!
சுக்கு நீர் தயாரிப்பதற்கு முதல் தரமானது.
சம்புபாட்டியின் முணுமுணுப்பு... ஆறு சென்ட் நிலத்தை விற்பனை செய்திருக்க வேண்டியதில்லை என்ற எண்ணம் சம்புபாட்டியை பாடாய்ப் படுத்தியிருக்குமோ?
கிணற்றிற்கருகில் பம்பு செட் செயல்பட்டது.
அரை ஹார்ஸ் பவரைக்கொண்ட எந்திரம்... ஓஸ்கள் வாங்கினேன்.
சந்தோஷப்படக்கூடிய அளவிற்கு நீர் வந்தது. ஒவ்வொரு இடத்திலும் நீர் தேங்கி நிற்கவேண்டும்.
பலா மரத்தைச் சுற்றி கல் பீடம் அமைக்க விரும்பினேன்.
நடக்கவில்லை.
பலாவைச் சுற்றி பாத்தி எடுத்தேன். மண் சுவர் எழுப்பி அரை அடி உயரத்திற்கு நீரை நிறைத்துவிட்ட பிறகு, பலா மரம் இளமைக் கோலம் பூண்டது. பாத்தியில் பசுந்தழை உரத்தையும் சாணத்தையும் கலந்து தூள்களாகக்கி சிதறிவிட்டேன். தேங்காய் புண்ணாக்கைச் சிதறிவிட்டேன். தினமும் இரண்டு முறை நீர் பாய்ச்சல்...
காலையிலும் மாலையிலும்... பலா மரம் இருக்கும் பாத்தியில் நீர் நிறைந்து நின்றது.
தினந்தோறும் கவனமாகப் பார்த்துக்கொண்டிருந்த காரணத்தால், அது வேகமாக வளர்ந்து வந்தது. மிகப்பெரிய கவிஞரின் வார்த்தைகளைக் கடனாக வாங்குகிறேன்.
ஒருநாள் காய்கள்! பலாவின் ஒவ்வொரு கம்பிலும் கொம்பிலும் வேர்ப் பகுதியிலும் காணப்படும் காய்கள்! அனைத்தும் உதிர்ந்து விழுகின்றன! என்ன சாபம் இது! வேர்ப் பகுதியில் பழைய கஞ்சியின் நீரை ஊற்றினால், காய்கள் உதிர்ந்து விழாது. நேர்ச்சையை மேலும் பலப்படுத்தினேன்.
முதல் பலா முழுவதும் குருவாயூரப்பனுக்கு... அனைத்து காய்களையும், அனைத்து பழங்களையும், தானியங்களையும் சன்னிதானத்திலும் மண்டபத்திலும் கொடிமரத்திற்குக் கீழேயும் காணிக்கையாக வைக்கும் பக்தர்கள்...
அவர்களுடைய எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கில்!
காய்த்த பலாவிற்குக் கீழே உதிர்ந்து கிடக்கும் இளங்கனிகள்... இளங்காய்கள் காலப்போக்கில் முதிர்ந்து வாடி, காய்ந்து உதிர்ந்து விழுகின்றன.
இரண்டு வருட காத்திருத்தலுக்குப் பிறகு, பலா மரம் ஏராளமான காய்களுடன் நின்றது. இளம் பலாக் காய்கள் படிப்படியாக பெரிதாயின. அவை மேலும் முதிர்ந்தன. அந்த முதிர்ந்த பலா, பழமாக மாறியது. முதிர்ந்து பழுத்த பலாவின் வாசனை காற்றில் கலந்து அனைத்து இடங்களுக்கும் பரவியது.
பலா மரத்தைப் பார்த்து நின்றால், யாரும் கண் இட்டு விடுவார்கள்.
தடியிலும் கொம்பிலும் காய்த்து நின்றிருக்கும் உருண்டை பலாக் காய்கள்! கிளைகளில் தொங்கியவாறு காற்றில் ஆடும்போது, உதிர்ந்து விழுந்துவிடுமோ? கிளைகள் நிறைந்துவிட்டால், தடிக்குக் கேடு உண்டாகிவிடும். அதனால், ஒவ்வொரு காயையும் பறித்து வீட்டில் கொண்டுபோய் கொடுத்தேன்.
காய்கள் காய்த்த பலாவின் இளம் காயைக்கொண்டு கூட்டுப் பொரியல் உண்டாக்கப்பட்டது.
சுவையாக இருக்கும் வண்ணம் தயாரிக்கப்பட்ட கூட்டுப்பொரியலை ஆர்வத்துடன் அள்ளி சாப்பிட்டேன். பலா பொரியலும் தேநீரும் இருந்தால், ஒரு நேரத்திற்கான உணவு அது. பலாவைக்கொண்டு உண்டாக்கப்படும் உணவுவகைகள் அனைத்தையும் தயார் பண்ணி ருசித்துப் பார்த்தேன். இந்த அளவிற்கு நல்ல இனத்தைச் சேர்ந்த பலா பக்கத்து பகுதிகளில் எங்குமே இல்லை என்ற புகழ் கிடைத்தது.
பலருக்கும் பலாவை இலவசமாகக் கொடுத்தேன்.
பலாவால் ஆன கூட்டுப்பொரியலும், பலா அவியலும், பலா குழம்பும், பலா வறுவலும் தயாரித்தவர்களின் மனம் நிறைந்த பாராட்டு வார்த்தைகளைக் கேட்டு, பெருமைப்பட்டேன்.
பலாப் பழத்தைச் சாப்பிட்ட அனைவரும் தேன் பலாவின் ருசியைப் பற்றி ரசித்து... ரசித்துக் கூற ஆரம்பித்தார்கள்.
பெரிய அளவிலான சுளைகள்... பொன் செண்பக மலரின் நிறத்திலிருந்த சுளைகளில்...
குறைவான சடைகள்... நுனிவரை சடைகளை அகற்றி எடுக்கலாம்.இனிப்பு நிறைந்த சுளை..
வறுப்பதற்கும் கூட்டு வைப்பதற்கும் பழுக்க வைத்து சாப்பிடுவதற்கும் அப்பளம் உண்டாக்குவதற்கும் சிறப்புத் தன்மை கொண்டது பலா. மேலேயிருக்கும் முட்களை நீக்கினால், அதை வைத்து ஊறுகாய் தயாரிக்கலாம்.
பழுத்த பலா, முதிர்ந்த பலாக் காய்.... இரண்டுமே மிகவும் விசேஷமானவையே.
என் வளாகத்திலிருந்த பலா மரத்தின் புகழில் மூழ்கி நாட்களை நகர்த்திக்கொண்டிருப்பதற்கு மத்தியில் வழிபாடு பண்ணிய விஷயத்தையே மறந்துவிட்டேன்.
எவ்வளவோ காய்களைக் காய்த்த பலா மரத்திலிருந்து ஒரு பலாவைக்கூட பகவானுக்குப் படையலாக வைப்பதற்கு நேரம் கிடைக்கவில்லை.
தாராள மனம் உதிக்கவுமில்லை.
இன்னும் காலம் இருக்கிறதே! கொடுக்கலாம்...
பகவானுக்கு எதற்கு என் பலா?
பலாவின் காலம் முடிந்துவிட்டது. மழை பெய்தது. மழைக் காலத்தில் பலா மரத்தின் உயர்ந்து சென்ற தடியின்மீது தென்னை மரம் முறிந்து விழுந்தது, தலைப் பகுதி இல்லாமற் போனது.
அனைத்துமே வாசலிலேயே நடைபெற்றது.
காற்றும் மழையும் சதி செய்தன.
பழம் பழுக்கும் நிலைக்கு வந்தபோது, நேர்த்திக் கடனாக நேர்ந்ததை மறந்துவிட்டதுதான் தவறா? தெய்வத்திற்குத் தருவதாகக் கூறி பிரார்த்தனை செய்த பொருளைக் கொடுக்காதிருந்தால்...இப்படிப்பட்ட இயற்கையின் கோபங்கள் உண்டாகுமோ?
சாபம் கிடைத்ததைப் போல பலா மரம் ஒவ்வொரு நாளும் காய ஆரம்பித்தது. தடியில் புற்றுநோய் உண்டானது.
கரையான் அரித்துக்கொண்டிருக்கும்...
தினமும் பாசி பிடித்துக் கொண்டிருக்கும் பலா மரத்தைப் பார்த்து வணங்குவேன்.
"முற்றிலுமாக காய்ந்துவிடாதே... அடுத்த வருடம் காய்த்தால், முழு பலாவையும் நேர்த்திக் கடனாக வைக்கிறேன். முதல் தடவையாக காய்த்த வருடத்தின் பலாவிற்கான காசை உண்டியலில் இடுகிறேன்.தவறு நேர்ந்துவிட்டது. மன்னிக்க வேண்டும்.''
குருவாயூரப்பனிடம் மன்னிப்பு கேட்பதைத் தவிர, வேறு வழியே இல்லை. வேண்டிக்கொள்ளக்கூடாது. வேண்டிக்கொண்டால், அதை கட்டாயம் நிறைவேற்றவேண்டும்.
இல்லாவிட்டால்....
பிரார்த்திக்கக் கூடாது.
நேர்த்திக்கடனாகக் கூறியது, அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும்... அது ஒரு பொருட்டே அல்ல. வாக்கு அளித்துவிட்டால், அதை நிறைவேற்றவேண்டும்.
விளையாடக் கூடாது. குறிப்பாக... தெய்வத்திடம்.
ஒருவன் கடவுள் நம்பிக்கை கொண்டவனாக இருந்தால், அவன் தான் நேர்ந்த நேர்த்திக்கடன்களை சிறிதும் தவறாமல் சன்னிதானத்தில் கொண்டுவந்து சேர்க்கவேண்டும். அங்கு... பகவானிடம் தவறிழைக்கவே கூடாது. ஒவ்வொரு பக்தனும் தன் வார்த்தைகளை மறந்து விடக்கூடாது.
பிரார்த்தனையில் பொய்யைக் கலக்கக்கூடாது.
தன் காரியம் நிறைவேறிவிட்டால், தெய்வத்தை மறந்துவிட்டு செயல்படக்கூடாது என்ற மிக உயர்ந்த பாடத்தை அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்டேன். நீங்கள் ஒரு கடவுள் நம்பிக்கை உள்ள மனிதராக இருக்கும் பட்சம், எந்தக் காலத்திலும் மனசாட்சிக்கு எதிராக நடக்கக்கூடாது. சாதாரண காரியம் நிறைவேற வேண்டும் என்பதற்காக ஆன்மாவை ஏமாற்றக்கூடாது. உண்மையை வளைத்து, ஒடித்து நேராக்க முயற்சி செய்தேன் என்பதுதான் நான் செய்த தவறு.என் தவறை பகவான் பொறுத்துக் கொள்வார் என்ற முழுமையான நம்பிக்கையுடன், நான் பலா மரத்தின் மறுபிறப்பிற்காக எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
இப்போதும் என் வீட்டின் கேட்டைக் கடந்துவரும் யாரும் புற்று நோயால் பாதிக்கப்பட்ட பலா மரத்தை நேரடியாகப் பார்க்கலாம்.
இனிமேலும் எஞ்சியிருக்கும் தடியில் கிளைகள் முளைக்காது என்றில்லை. உதிர்ந்த இலைகளுக்கு பதிலாக புதிய இலைகள் அரும்பலாம். மீண்டும் காய்க்கலாம். பலாப் பழங்கள் உண்டாகலாம்.
தெய்வத்திற்குக் கடன் பட்டிருப்பதை உண்மை யாகவே தீர்க்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் காத்திருக்கிறேன்.
பகவான் என்னைச் சோதித்துப் பார்ப்பாரோ என்பது தெரியாது.