பாவலர் கருமலைத் தமிழாழன் மரபில் எழுதி வருபவர்களில் முதன்மையானவர். அவர் கவிதை, கட்டுரை என இருபத்து நான்கு தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். இணையம் மற்றும் இதழ் வழியாக தன் படைப்புகளை தொடர்ந்து பதிவுசெய்தும் பரிசு பெற்றும் வருகிறார். எழுத்து உலகில் ஐம்பதாண்டுகள் இயங்கி வருவதற்காக பாவலருக்கு 07.07.2019 அன்று ஒசூரில் ஒரு பாராட்டு விழா... அதையொட்டி பாவலர் கருமலைத் தமிழாழன் அவர்களின் இல்லத்தில் சந்தித்தபோது...

தங்கள் இயற்பெயர்? புனைபெயருக்கான காரணம்?

என் இயற்பெயர் நரேந்திரன். என் அப்பாவிற்கு விவேகானந்தர் மீது பற்று இருந்ததால் நரேந்திரன் என்று பெயர் வைத்தார். இலக்கியத்தில் ஈடுபடத் தொடங்கியபோது கவிஞர் சுரதா பெயரை மாற்றச் சொன்னார். தமிழ் மீது பற்று இருந்த காரணத்தால் தமிழாழன் என்றும் கிருஷ்ணகிரி என்பதை கருமலை என்றும் மாற்றி இலக்கியத்திற்காக என் புனைபெயரை கருமலைத் தமிழாழன் என்று வைத்துக்கொண்டேன்.

தங்களின் முதல் கவிதை குறித்து..?

Advertisment

நான் எழுதத் தொடங்கியதே மரபுக் கவிதையில்தான். என் முதல் கவிதையே வெண்பாவாக கவிஞர் பாரதிதாசன் நிறுவிய "குயில்' இதழில் 1969ஆம் ஆண்டு வெளியானது. பாரதிதாசனுக்குப் பிறகு அவர் மகன் மன்னர் மன்னனால் அந்த குயில் நடத்தப்பட்டது. அந்த குயில் ஆசிரியர் கண்ணிமையால் தற்போது நடத்தப்படுகிறது. தர்மபுரி மாவட்டம் அரூரிலிருந்து வெளிவருகிறது.

மரபுக் கவிதை மட்டும் எழுதி வருகிறீர்களே...

எது ஒன்றைச் செய்தாலும் சிறப்பாக செய்யவேண்டும் என்றுதான் மரபுக் கவிதை மட்டும் எழுதி வருகிறேன். ஒருசில கட்டுரைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளேன். இருப்பினும் மரபிலே சொல்வது எனக்குப் பிடித்திருக்கிறது. மரபிலேயே பத்தாயிரத்திற்கும் மேல் கவிதை எழுதியுள்ளேன். தொகுப்பாக வந்தது தவிர வராததும் நிறைய உள்ளன.

Advertisment

மரபுக் கவிதையை எழுதும்போது எந்த வடிவத்தை எடுத்துக் கொள்கிறீர்கள்?

வெண்பா, ஆசிரியப்பா, கட்டளைக் கலித்துறை, விருத்தப்பா என எல்லா வகைப் பாக்களையும் எழுதுகிறேன். இதழ்களில் ஆசிரியர்கள் என்ன வகையில் கேட்கிறார்களோ அந்த வகையில் எழுதி வருகிறேன். பொதுவாக விருத்தப்பாக்களிலேயே அதிகம் எழுதுகிறேன்..

தமிழில் ஆர்வம் ஏற்பட்டதற்குக் காரணம்?

நான் கல்வி கற்ற காலத்தில் எனக்குத் தமிழைக் கற்றுக்கொடுத்த தமிழ் ஆசிரியர்களே காரணம். குறிப்பாக பெருமாள் ராசு மற்றும் ஜலகண்டாபுரம் கண்ணன்.

கண்ணதாசன்கூட தாசன் என்று பெயர் வைத்துக் கொண்டதற்குக் காரணமான ஜலகைக் கண்ணனா?

இல்லை இவர் வேறு.

மரபுக் கவிதையை உங்களைப் பின்பற்றி எழுதுவார் உண்டா? உங்கள் மாணவர்களில் மரபுக் கவிதை எழுதுவார் உண்டா?

குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஓரிருவர் உண்டு. ஒருவர் தொகுப்பும் வெளியிட்டுள்ளார்.

மரபுக் கவிதை என்றால் ஒரு புரியாத தன்மை இருக்கும். பழம் சொற்கள் பயன் படுத்தப்பட்டிருக்கும்.. ஆனால் தாங்கள் எழுதுவதில் அவ்வாறு இல்லையே..?

நானெழுதும் மரபுக் கவிதைகளில் சமகாலத்தில் மக்கள் பயன்படுத்தப்படும் சொற்களே இருக்கும். படிப்பவருக்கு புரியாமல் போக வாய்ப்பில்லை. மக்களில் ஒருவராக இருந்துதானே கவிதை எழுதுகிறேன். அதுவு‌ம் சமகால பிரச்சனைகளையே அதிகம் எழுதுகிறேன்.

சமகால பிரச்சனைகளை உடனுக்குடன் கவிதை எழுதிவிடுகிறீர்கள். எப்போது எழுதுவீர்.. கவிதை எழுதுவதற்கு ஏதும் மனநிலை உள்ளதா?

கவிதை எழுத வேண்டிய கருப்பொருளை மனதில் வைத்துக்கொண்டு காலை நடைப்பயிற்சியின் போது ஓர் உருவம் கொடுத்துவிடுவேன். வீட்டிற்கு வந்ததும் எழுதி பின் திருத்தம் செய்து கணினியில் பதிவு செய்திடுவேன்..

எல்லா போட்டிகளிலும் கலந்து கொள்கிறீரே எப்படி சாத்தியமாகிறது.?

மரபுக் கவிதைகள் போட்டி எங்கு நடந்தாலும் கலந்துகொள்வேன். குறித்த காலத்தில் எழுதிவிட வேண்டும் என்னும் குறிக்கோளுடன் எழுதி வருகிறேன். வெற்றி தானாக கிடைத்து விடுகிறது. பரிசும் கிடைத்து விடுகிறது. தினமணி கவிதை மணியில் போட்டி இல்லை என்றாலும் தலைப்புக்கு ஏற்ப உரிய காலத்திற்குள் எழுதிவிடுகிறேன். புதுக்கவிதை மட்டுமே வெளியிட்டு வந்த தினமணி ஆசிரியரிடம் போராடி மரபுக் கவிதையும் வெளியிட வாய்ப்பு பெற்றேன். இலக்கியத்திற்கு என்று வெளிவருகிற இதழ்களில் ஒன்றான கணையாழியில் மரபுக் கவிதைகளை வெளியிட வேண்டுகோள் விடுத்துள்ளேன்.

ஒசூருக்கு என்ன வரலாற்றுச் சிறப்பு?

ஒசூருக்கு என்பதைவிட முன்னர் பிரிக்கப்படாத தர்மபுரிக்குத்தான் சிறப்புகள் அதிகம். தர்மபுரியின் வரலாற்றுப் பெயர் தகடூர். தகடூர் பல மன்னர்கள் ஆண்ட பூமி. வீரவரலாற்றுக்கு எடுத்துக்காட்டாக வீர நடுகற்கள் ஏராளம் கண்டுபிடிக்கப்பட்டு காட்சியகத்தில் உள்ளன. "வரலாற்றை நமக்களிக்கும் நடுகற்கள்' என்னும் கட்டுரையும் எழுதியுள்ளேன். அதியமான் கோட்டையும் இங்குதான் உள்ளது. மன்னன் அதியமானுக்கு அவ்வை நெல்லிக்கனி தந்த வரலாறும் உண்டு. தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ராஜாஜி பிறந்த ஊரான தொரப்பள்ளி ஒசூரில்தான் உள்ளது.

சிற்றிதழ்கள் குறித்து...

சிற்றிதழ்கள் நிறைய வருகிறது. நான் உறுப்பினர் கட்டணம் செலுத்தியே பெரும்பாலான இதழ்களை வாங்கி வருகிறேன். மரபுக் கவிதை வெளியிடும் இதழ் களுக்கு முன்னுரிமை அளிக்கிறேன். குறைந்தபட்சம் ஒரு வாசகர் கடிதமாவது எழுதி சிற்றிதழ்களை ஊக்குவித்து வருகிறேன். அண்ணாவின் காஞ்சி, பாரதிதாசனின் குயில் போன்ற திராவிட கால சிற்றிதழ்களில் இருந்தே எழுதிவருகிறேன். சிற்றிதழ்கள் மீது எனக்கு எப்போதுமே ஓர் ஈர்ப்பு உண்டு.

சிற்றிதழ்களைச் சேகரித்து வைத்துள்ளீரா?

சிற்றிதழ்கள் அவ்வளவையும் சேர்த்து வைக்க இடம் கிடையாது. எவ்வளவு இடம் இருந்தாலும் போதாது.

tt

அண்ணாவின் காஞ்சி போன்ற முக்கியமான சிற்றிதழ்கள் எல்லாம் வீடு மாற்றம் செய்யும்போது எடுத்து வர முடியாமல் கடைக்குப் போடப்பட்டது. பாரதிதாசனின் குயில், கண்ணதாசன் கடிதம் போன்றவற்றில் ஒருசில இதழ்கள் மட்டும் மாதிரிக்கு உள்ளன. தற்போது எதையும் எடுத்து வைப்பதில்லை. வைத்திருந்தால் வீடு கொள்ளாது.

புத்தகங்கள் குறித்து..?

என் அறை எல்லாம் புத்தகங்கள்தான். சங்க காலப் பாடல்களில் இருந்து சமீப காலம் வரை கவிதைப் புத்தகங்கள்தான் என்னிடம் உள்ளன. அதிலும் மரபுக்கவிதைகள்தான் அதிகம். என்னுடைய காலத்திற்குப் பிறகு புத்தகங்களை எல்லாம் நூலகத்திற்கு கொடுக்கச் சொல்லி என் குடும்பத்தாரிடம் சொல்லிவிட்டேன். நூலகத்தாரிடமும் சொல்லி விட்டேன். நான் நூலகத்தில் புரவலராகவும் உள்ளேன். வாசகர் மன்றத் தலைவராகவும் இருக்கிறேன்.

தமிழகத்தின் மிகப்பெரிய கவிஞர் நீங்கள். மரபுக் கவிதையிலும் முன்னோடியாக இருக்கிறீர்கள்... தற்போது தொடங்கப்பட்டுள்ள அனைத்து முகநூல் குழுக்களிலும் கலந்து கொள்கிறீர்களே..?

தற்போது தமிழகத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட முகநூல் குழுக்கள் உள்ளன. மரபுக் கவிதைக்கு முன்னுரிமை தரும் முகநூல் குழுக்களில் மட்டும் பங்கெடுத்து வருகிறேன். மரபுக் கவிதை எழுதுபவர்கள் சிலர் இருந்தாலும் மரபுக்கவிதை புதியதாக எழுத வருபவர்களுக்கு ஒரு நல்ல பயிற்சிக் களமாக இருந்துவருகிறது. முகநூல் குழுக்களிடம் மரபுக் கவிதைக்கு நல்ல வரவேற்பும் கிடைக்கிறது. புதியவர்கள் எழுத வருவதும் மகிழ்ச்சி அளிக்கிறது.

இதுவரை எத்தனை தொகுப்புகள் வந்துள்ளன? எத்தனை விருது வாங்கியுள்ளீர்கள்?

தொகுப்புகள் இதுவரை இருபத்து நான்கு வந்துள்ளன. இன்னும் வரவேண்டியுள்ளது. தினமணி கவிதை மணியில் வந்ததைத் தனியாக தொகுக்க வேண்டும். விருதுகள்... நிறைய வாங்கியிருக்கிறேன். தமிழ்ச் செம்மல் விருது அண்மையில் கிடைத்த ஒரு குறிப்பிடத்தக்க விருது என்று சொல்லலாம். நானாக எந்த விருதையும் எதிர்பார்க்கவில்லை. தானாக வரும் போது தவிர்க்கவும் முடியவில்லை.

என் தொகுப்புகளை வைத்து பலர் ஆய்வுசெய்து பட்டம் பெற்றுள்ளனர். பல்கலைக் கழகங்களில் பாடமாகவும் வைக்கப்பட்டுள்ளது.

தாங்கள் எழுதிய தொகுப்புகளில் அருள்மிகு மரகதாம்பிகை சந்திரசூடேசுவரர் பாமாலை மற்றும் அருள்மிகு மரகதாம்பிகை சந்திரசூடேசுவரர் கோயில் தல வரலாறு ஆகிய இரண்டும் வித்தியாச மாக உள்ளதே?

ஆயிரத்து நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் அது. அந்த வரலாறு பதிவு செய்யப்பட வேண்டும் என்பதற்காகவே எழுதினேன். மேலும் ராஜ ராஜ சோழனின் மகன் முதலாம் ராஜேந்திர சோழன் இக்கோவிலுக்குத் தானம் வழங்கியதாக ஒரு கல்வெட்டும் உள்ளது.

ராஜ ராஜ சோழன் குறித்த ஒரு பரபரப்புச் செய்தி பேசப்படுகிறதே.?

அது உண்மைதான். அவர் காலத்தில்தான் பார்ப்பனர் வருகையும் நிகழ்ந்தது. சமஸ்கிருதமும் பரவத் தொடங்கியது.

உங்கள் படைப்புகளில் திராவிட இயக்கச் சாயல் தெரிகிறது... திராவிட இயக்கங்கள் குறித்து தங்கள் கருத்து..?

திராவிட இயக்கங்கள் தமிழ் மண்ணில் தோன்றிய தால்தான் தமிழ்நாட்டில் தமிழ் இன்னும் அழியாமல் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருகிறது. என் தமிழ் உணர்வுக்கும் திராவிட இயக்கங்களே காரணம். பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர்களுக்கு நன்றி கூறியே ஆகவேண்டும். அவர்கள் போட்ட விதைதான் இன்று வளர்ந்துள்ளது. 1965-ல் நடந்த மொழிப் போர் முக்கியமானது. அதன் தாக்கம் இன்றும் உள்ளது.

கலைஞர் குறித்த தங்கள் பார்வை?

சிறந்த அரசியல் ஞானி. அற்புதமான இலக்கியவாதி. அரசியல்வாதி கலைஞரை விட எனக்கு இலக்கியவாதி கலைஞரையே பிடிக்கும். கலைஞரின் எழுத்தில் எப்போதுமே எனக்கு ஓர் ஈர்ப்பு உண்டு. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் அவருடைய நினைவாற்றல்.

கலைஞரின் நினைவாற்றலுக்கு ஒரு சம்பவத்தைக் கூறமுடியுமா.. தங்கள் நினைவில் இருந்து..?

நான் ஆரம்பத்தில் அண்ணாவின் காஞ்சி இதழில் எழுதி வந்தேன். ஆனால் முரசொலியில் ஒரு கவிதைகூட வரவில்லை. முரசொலிக்குக் கடிதம் எழுதினேன்.. நான் எழுதும் கவிதைகள் அண்ணா நடத்தும் காஞ்சி இதழில் வெளிவருகிறது. ஆனால் முரசொலியிலும் என் கவிதைகளை வெளியிட வேண்டுமென ஒரு கடிதம் எழுதினேன்.

அப்புறம் முரசொலியிலும் கவிதைகள் வெளியானது.

சுமார் 500 கவிதைகளுக்கு மேலாக முரசொலியில் வந்துள்ளன. இன்னும் ஒரு தொகுப்பு கொண்டு வரும் அளவிற்கு கவிதைகள் உள்ளன. என் "மலர்விழி' தொகுப் பிற்கு கலைஞர் அவர்களிடம் அணிந்துரை வாங்க சென்றிருந்தேன். அப்ப அவர் எதிர்க்கட்சித் தலைவர். அவரை சந்தித்து, "அய்யா நான் கருமலைத் தமிழாழன்' என்றேன். "தெரியும் நீ காஞ்சிக்காரன்தானே' என்றார்.

"இல்லைங்க நான் தர்மபுரி' என்றேன். "அது இல்லையா நீ காஞ்சி இதழில் எழுதிக்கிட்டு இருக்கேன் முரசொலியில் கவிதை போட வேண்டுமென்று கடிதம் எழுதியவன் தானே' என்றார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. என்ன ஒரு நினைவாற்றல்.. அதுதான் அவர் சிறப்பு.. கலைஞரைப் போற்றி களம் வெல்லும் கலைஞர் என்னும் ஒரு புத்தகமே எழுதி இருக்கிறேன்.

தமிழகத்தில் பரவலாக அறியப்பட்டவர் நீங்கள். நேர்காணல் நிறைய கண்டிருப்பீர்கள். இதுவரை எத்தனை நேர்காணல்கள் கண்டிருப்பீர்கள்..?

கலைஞர் தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சியில் நேர்காணலில் பங்கேற்று இருக்கிறேன். பெரும்பாலான பத்திரிகைகளில் எல்லாம் நேர்காணல்கள் வந்திருக் கின்றன. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் என்னைப் பற்றிய ஒரு வரலாறு எழுதிய தொகுப்பிற்காக ஒரு நேர்காணல் தந்துள்ளேன்.