நெருப்பில்லாமல் புகைவதில்லை என்போரும், பனிமூட்டம் கூட புகையாகத்தான் இருக்கும் என்போரும் வாதத்தில் இறங்கினால் முடிவின்றித் தொடரும்.
METOO என்பதும் அப்படிப்பட்டதுதான்.
பெண்கள் சந்திக்கும் பாலியல் தாக்குதல்கள் உலகெங்கும் காலந்தோறும் தொடர்ந்து கொண்டிருக் கின்றன. மனித இனம் நாகரிக வளர்ச்சி அடைந் தாலும்-நாம் வாழும் உலகம் தொழில்நுட்ப யுகமாக மாறினாலும் அந்தந்த காலத்திற்கேற்ற வகையில் சீண்டல்களும் துன்புறுத்தல்களும் ஓய்வதில்லை. கண்ணன் என்பவர் மீது கோபிகா என்பவர் "மீ டூ' புகார் சொல்ல ஆரம்பித்தால் ஆர்.கோபிகா, டி.கோபிகா, எம்.கோபிகா, சி.கோபிகா என பல கோபிகாக்கள் வரிசைகட்டி நிற்பார்கள். காலங்காலமாக இதுதான் நிலைமை.
பூனைக்கு யார் மணி கட்டுவது என்பதை உலகெங்கும் உள்ள கோபிகாக்கள் யோசித்துக் கொண்டிருந்தார்கள். உலகெங்கும் கண்ணன்கள் வெவ்வேறு பெயர்களில் இருந்தார்கள். அந்தந்த நாட்டிலும் கோபிகாக்கள் வெவ்வேறு வகைகளில் இருந்தார்கள். மதநூல்கள்- நீதிநூல்கள்-அறிவுரைகள் பலவும் ஆண் இனத்தைச் சார்ந்து பெண் இனம் வாழவேண்டியதை வலியுறுத்தின.
காலத்தின் வளர்ச்சி அது குறித்து கேள்வி எழுப்பியது.
பெண் ஏன் அடிமையானாள் என நம் மண்ணில் பெரியார் என்ற காலம் கேள்வி கேட்டது. உணவு, உடை, உரிமை ஆகியவை மட்டுமல்ல கற்பு என்றாலும் அது ஆண்-பெண் இருவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும் என்பதே காலத்தின் குரல். பண்பாடு எனும் பெயரால் பாறை போல இறுகியிருந்த பழக்கவழக்கங்கள் இந்தக் கேள்வி உளிகளால் சிதறத் தொடங்கின. வாழ்க்கை என்பது ஆண்களின் வசதிக்கானது மட்டுமன்று, பெண்களுக்கும் அதில் உரிய பங்கு உண்டு என்ற குரல் நமக்கு முன்பாகவே மேற்குலக நாடுகளில் ஒலிக்கத் தொடங்கியது. ஙங்பர்ர்வும் அப்படித்தான்.
அமெரிக்காவைச் சேர்ந்த கறுப்பினத்தவர் ட்ரானா பரூக்கி, பாலின சமத்துவம் என்ற அமைப்பைச் சார்ந்த சமூக சேவகி. அதன் சார்பில் கலந்துரையாடல்களை நிகழ்த்தி வருபவர்.
"நானும் பாலியல் தொல்லைகளிலிருந்து தப்பியவள்தான். உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை என்னிடம் மனம்விட்டுப் பேசுங்கள்' எனச் சொன்னார். பாலியல் தொல்லைகளைப் பெண்கள் வெளிப்படையாக சொல்லத் தயங்குவதற்குக் காரணம், சமூக அமைப்பில் உள்ள நெருக்கடிகள் தான். அதனைச் சொல்வதே ஒரு குற்றச் செயல் என்பதுபோல பதறுவார்கள்.
அத்தகையவர்களுக்கு நம்பிக்கை ஊட்டினார் ட்ரானா பரூக்கி. நீங்கள் பாதிக்கப்பட்டவர்கள். உங்களை பாதிப்பிற்கு உள்ளாக்கியவர்கள்தான் குற்றவாளிகள்-இதுதான் ட்ரானா உளவியல் ரீதியாக முன்வைத்த தைரியமிக்க வார்த்தைகள். அது, பாலியல் கொடுமைகளுக்குள்ளான பெண்களின் உள்ளத்திற்குள் மெல்ல மெல்ல ஊடுருவியது. தன் தாயின் காதலனால் தனக்கு நேர்ந்த துயரத்தையும் அது பாலியல் சீண்டல் என்பதைக்கூட அறியாததையும் ட்ரானாவிடம் கண்கலங்கிச் சொன்னார் ஒரு சிறுமி. அதுபோல பல சிறுமியரும் இளம் பெண்களும் தங்கள் வேதனைகளை முன்வைத்தனர். கலங்கிப்போன ட்ரானா தொடங்கியதுதான், ஙங் பர்ர் ஙர்ஸ்ங்ம்ங்ய்ற்.
சமூக வலைத்தளங்கள் பெருகியுள்ள இந்தக் காலத்தில் யாரும் தன் கருத்துகளைத் துணிச்சலாகப் பதிவு செய்ய முடியும். 2017ஆம் ஆண்டில் ஹாலிவுட் நடிகை அலீசா மிலானோ தனது டுவிட்டர் பக்கத்தில் இதற்கான இயக்கத்தைத் தொடங்கினார்.
சமூக சேவகரான அவர், சக நடிகையரும் மற்ற பெண்களும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்பங்கள் பற்றிப் பதிவிட ஙங்பர்ர் என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தும்படி சொன்னார். ஒரே நாளில் உலகம் முழுவதும் அந்த ஹேஷ்டேக் பரவியது.
திரைத்துறையில் பாலியல் சீண்டல்-துன்புறுத்தல் என்பது நெடுங்காலக் குற்றச்சாட்டு. ஹாலிவுட் தொடங்கி கோடம்பாக்கம் வரை கறுப்பு-வெள்ளை காலத்திலிருந்தே இத்தகைய புகார்கள் உண்டு. எனினும், அது உள்ளுக்குள் குமைகின்ற வகையிலோ அல்லது கிசுகிசு பாணியில் வெளிப்படுவதிலோ முடிந்துவிடும். மீ டூ ஹேஷ்டேக் ஹாலிவுட்டிலிருந்து பாலிவுட்டுக்கு வந்தபின் கோலிவுட்டிலும் அதன் கொடி பறக்கத்தொடங்கியது.
நடிகை, பாடகி, புகைப்படக்கலைஞர், நடனத்துறை சார்ந்தவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என திரைத்துறையின் பல பிரிவுகளில் பங்கேற்போரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி மீ டூ ஹேஷ்டேக்குடன் பதிவு செய்தனர். அதில் பாடலாசிரியர், இயக்குநர், நடிகர்கள் எனப் பல தரப்பட்டவர்களும் குற்றம்சாட்டப்பட்டனர்.
இதில் பல குற்றச்சாட்டுகள் 10 ஆண்டுகளுக்கு முந்தைய தாகவும், அதன் பின், யார் மீது குற்றம் சாட்டு கிறார்களோ அவர்களுடனேயே இணைந்து பணியாற்றிய தகவல்களுடனும் இருந்தன.
"இப்போதுதான் எங்களுக்கு இத்தகைய துணிச்சல் ஏற்பட்டுள்ளது. சமூகப் பாதுகாப்பும் சட்ட பாதுகாப்பும் கிடைப்பதால் இப்போது உண்மையைச் சொல்கிறோம். காலங்கடந்து சொல்வதால் உண்மையைப் பொய்யாக்கிவிட முடியாது' என்பது குற்றம்சாட்டுவோரின் வாதம்.
பொய்யான குற்றச்சாட்டின் வாயிலாக எங்கள் மீது பழி சுமத்துகிறார்கள். இத்தனை காலம் கழித்து இப்படிச் சொல்வதால் எங்களை அவமானப் படுத்தி, நற்பெயரைக் கெடுக்கிறார்கள். இதற்கு உள்நோக்கமும் பின்னணியும் இருக்கிறது என்பது குற்றம்சாட்டப்படுவோரின் வாதம்.
எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்கிறார் வள்ளுவர்.
இதனடிப்படையில், சொல்லப்படும் குற்றச்சாட்டு களில் உள்ள உண்மைத்தன்மையும், குற்றச்சாட்டுகளின் உண்மைப் பின்னணியையும் உற்றுநோக்கி அலசி ஆராய்வதே மீ டூ விவகாரத்தில் சரியான அணுகுமுறையாக இருக்க முடியும்.
பெண்களுக்கான பாலியல் சீண்டல்கள்- துன்புறுத்தல்கள்-வல்லாதிக்கம் ஆகியவை திரைத்துறை யில் மட்டுமல்ல, எந்தெந்த துறைகளில் அவர்கள் பங்கேற்கிறார்களோ அத்தனை துறைகளிலும் இருக்கிறது, அரசியல்துறையும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், மீ டூ விவகாரத்தில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசியல் பின்னணி நிறையவே இருக்கிறது.
தமிழ்நாட்டில் அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் சமூக நீதிக் கொள்கையையும் அதற்கான சட்டப் பாதுகாப்புகளையும் சீரழிக்கும் கருவிகள் "நீட்'டப் படுகின்றன. வயல்வெளிகளை எண்ணெய்க் கிணறு களாக்கி வாழ்வுரிமையைப் பறிக்கும் முயற்சிகள் நடக்கின்றன. துப்பாக்கிச் சூடு, தேசத்துரோக வழக்கு, பத்திரிகை சுதந்திரம் பறிப்பு என அடிப்படை உரிமைகளைப் பறித்து மக்களை அச்சத்திலேயே உறைய வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மாநிலத்தை ஆள்பவர்கள் மவுன சாமியார்களாக இருப்பதால், மத்தியிலே ஆட்சி செய்பவர்கள் அகோரித்தனமாக பிணவாடைக்கு அலைகிறார்கள்.
இதனை உணர்ந்திருக்கும் அரசியல் கட்சியினர்- சமூக நல அமைப்பினர்-இன உணர்வு இயக்கங்கள்- சமூக வலைத்தளங்களில் இயங்கும் பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் எதிர்ப்புக் குரல் கொடுத்து வருகிறார்கள். இந்த எதிர்ப்புக் குரல்களை மடைமாற்றிட, அதிகாரத்திலிருப்போருக்கு மாற்றுக் குரல் தேவைப்பட்டது. அப்போதுதான் மீ டூ குரல் ஒலித்தது. அதில் உள்ள நியாயத்தைவிட, அதனை அரசியலாக்கும் தன்மைதான் அதிகமாக வெளிப்பட்டது. அந்த அரசியல் நெருப்பு ஒரு சிலர் குளிர் காய்வதற்கு வசதியாக அமைந்தது. ஒரு சிலரைத் தீய்ப்பதற்கு உதவியது. இந்த திசைமாற்றும் போக்குத் தவிர்க்கப்பட்டு உண்மைத்தன்மையை நோக்கி பயணிப்பதே மீ டூவின் இலக்காகும்.
உலகளாவிய அளவில் மீ டூ இயக்கம் அப்படித்தான் எடுத்துச் செல்லப்படுகிறது. அனைத்துத் துறைகளிலும் உள்ள பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் முடிவுக்குக் கொண்டு வரப்படவேண்டும். ஆண்-பெண் சமத்துவம் என்பது அந்தந்தத் துறையிலும் பெண்ணுக்கு ஆண்கள் தரும் மதிப்பிலும் நாகரிகத்திலும் வெளிப்பட வேண்டும்.
அரசுத் துறைகளில் தொடங்கி தனியார் துறைகள் வரை பெண்கள் அதிகம் பங்கேற்கும் காலம் இது. பல நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பைத் திறம்பட நடத்தி வருகிறார்கள். பெண்கள் அதே நேரத்தில், அவர்கள் எதிர்கொள்ளும் சங்கடங்கள் நிறைய உண்டு. உயர்ந்த பொறுப்பில் இருக்கும் பெண்கள்கூட அதே நிறுவனத்தின் அடுத்த கட்டங்களில் உள்ள ஆண்களின் சீண்டல்களுக்கு ஆளாவதைக் காண்கிறோம்.
பணிபுரியும் இடத்தில் மட்டுமின்றி, வேலைக்குச் செல்லும்போதும் வேலையிலிருந்து திரும்பும்போதும், தங்குகின்ற இடத்திலும் அவர்கள் சந்திக்கும் துயரங்கள்- கொடுமைகள் ஏராளம். எதிர்த்துப் போராடுகையில் உயிர்பறிக்கப்படும் அபாயத்தையும் பெண்கள் எதிர்கொள்கிறார்கள். இவற்றிலிருந்து முழுமையாகப் பெண்களைக் காப்பாற்ற-அவர்கள் மீது பாலியல் வன்முறையை ஏவுவோரை கண்காணிக்க சட்டமும் நீதியும் தனது கரங்களை வலுப்படுத்த வேண்டும்.
பதைபதைப்பு குற்றச்சாட்டுகளாக-பரபரப்பு செய்தி களாக மீ டூ கையாளப்படாமல், ஆணாதிக்கத் திலிருந்து விடுபடுவதற்கும் ஆண்-பெண் நல்லிணக்கம் பேணுவதற்குமான கருவியாகக் கைக்கொள்ள வேண்டும். அங்கே போனபோது அப்படி நடந்தார்.
இங்கே போனபோது இப்படி நடந்தார். அங்கேயும் இங்கேயும் போனதற்கான அத்தாட்சி எங்கேயோ தொலைந்துவிட்டது. தேடி எடுத்து வருகிறேன் என்ற வகையில் ஊடகங்களுக்குத் தீனி போடுவதைத் தவிர்த்து, இவர்தான்-இப்படித்தான் நடந்துகொண்டார் எனப் புகார் தெரிவிக்கவோ-வழக்கு தொடுக்கவோ வேண்டும்.
அதற்கேற்ற வகையில் சட்டநடைமுறைகளை நீதித்துறை உருவாக்கித் தரவேண்டும்.
மீ டூ இயக்கம் ஒரு தொடக்கம். அது வெறும் மிரட்ட லாக முடிந்துவிடக்கூடாது. மிரட்டும் மீ டூவைவிட, பாலியல் துன்புறுத்தல்களை விரட்டும் வகையிலான சட்டமும் நீதியுமே இன்றைய அவசரத் தேவை.