ழுத்தாளர் அண்டனூர் சுரா புதுக்கோட்டையைச் சேர்ந்தவர். சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என்னும் தளங்களில் ஆழமாக, அழுத்தமாக எழுதிவருபவர்.

அண்டனூர் சுரா சமகால பிரச்சனையுடன் சரித்திர கால பிரச்சனையை இணைத்துப் பேசக்கூடியவர். வ.உ.சி. காலத்தை மையப்படுத்திய தீவாந்தரம் நாவல் முக்கியமானது.

வரலாற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டதுடன் தேடுதலும் கொண்டவர். ஆசிரியர் பணியில் இருக்கும் ஒரு நல்ல பேச்சாளர். அவர் படைப்புகளில் விருது வாங்காத படைப்பே இராது. சமீபத்தில் அன்னமழகி நாவலுக்காக எழுத்து விருது பெற்றவர். எழுத்தாளர் அண்டனூர் சுராவுடன் இனிய உதயம் இதழுக்காக ஒரு நேர்காணல்...

தாங்கள் எழுத வந்தது ஏன்? தங்களை எழுதத் தூண்டியது எது?

Advertisment

நல்ல கேள்வி. உங்கள் கேள்வியை நான் கிணறு, நீச்சல் இரண்டோடும் ஒப்பிட்டுப் பார்க்கிறேன். நீச்சல் என்பது ஒரு ஆனந்தம். புத்துணர்ச்சி தரும் தூண்டல். கிணற்று நீச்சல் பழக வரும் யாரும் கிணற்றின் ஆழத்தை முன்கூட்டியே தெரிந்துகொண்டால் அவரால் நீச்சல் கற்கமுடியாது. ஆழ்கிணற்றை அவன் பள்ளம் போலவே பார்க்கவேண்டும். அப்படியாகப் பார்த்தால் மட்டும்தான் நீச்சலைக் கற்க முடிவதுடன் கிணற்றைத் தன் வசப்படுத்த முடியும். எழுத்தும் அப்படித்தான்!

dd

Advertisment

பாடப்புத்தகத்திற்கும் வெளியிலிருந்து வாசிப்பைத் தொடங்கும் யாரும் எழுத்தாளர்களின் எண்ணிக்கையைத் தெரிந்துவைத்துக்கொண்டு வாசிப்பைத் தொடங்கக்கூடாது. ஒருவேளை அப்படியாகத் தொடங்கினால் வாசிப்பு நீளாது. வாசிக்க வாசிக்க எழுத்தாளர்களின் எண்ணிக்கை நீளவேண்டும். எழுதவரும் எழுத்தாளனும் அப்படிதான். நான் எழுத வருகையில் இரண்டு மூன்று எழுத்தாளர்களே எனக்குத் தெரிந்திருந்தது. நான் முதலில் அறிந்துகொண்ட எழுத்தாளர் மு.வரதராசனார். இவரது சிறுகதை‘குறட்டை ஒலி பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் முதல் கதையாக இருந்தது. அவரை நான் பத்து மதிப்பெண் வழங்கும் மனிதராகப் பார்த்தேன். அடுத்து அகிலன். இவரது சிறுகதை தாய்ப்பசு. இன்னும் எட்டுப் பேர் பாடப் புத்தகத்திலிருந்தும் அவர்கள் யாரையும் நான் அறிய விரும்பவில்லை. காரணம் முதல் இரு கதைகளில் ஒரு கதை பொதுத் தேர்வில் கேட்டுவிடுவார்கள் என்கிற நம்பிக்கைதான்!

இருவரில் அகிலன் நல்ல எழுத்தாளராக எனக் குத் தெரிந்தார். காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு மூன்று தேர்விலும் இவரது தாய்ப்பசு கதை கேட்கப்பட்டது. பிறகு பதினொன்றாம் வகுப்புக்குச் செல்கிறேன். அங்கும் துணைப்பாடத்தில் பத்து எழுத்தாளர்களின் கதைகள் வைக்கப்பட்டிருந்தன. சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள். பத்து கதைகளையும் நான் வாசிக்கவில்லை. துணைப் பாடத்திலிருந்து கேட்கப்படும் கேள்விக்கு மாறாக சொந்தக் கற்பனையில் எழுதும் கேள்வியொன்று கேட்கப்பட்டது. ஒரு சம்பவத்தை கொடுத்து உன் கற்பனையில் எழுது, என்கிற கேள்வி அது. நான் அந்தத் கேள்வியைத் தேர்வுசெய்து எழுதினேன்.

அப்படியாக நான் எழுதிய கதையைத் தமிழாசிரியர் வகுப்பில் வாசித்துக்காட்டினார். ஒருவேளை என்னை அவர் கண்டித்து மதிப்பெண் குறைத்திருந்தால் நான் கதையாசிரியராக வந்திருக்க வாய்ப்பில்லை.

நான் யாருக்காகவும் எழுதவில்லை. கிணற்றில் குளிக்கையில் கோமணம் உருவிக்கொள்கையில் கோமணத்தைத் தொலைத்தவன் கரையேறுகையில் இருக்கிற கவனமும் சுவாரசியமும் எதிர்பார்ப்பும் என் கதைகளில் இருக்கிற மாதிரி பார்த்துக்கொள்கிறேன்.

தங்கள் பள்ளிக் காலத்தில் மு. வரதராசன், அகிலன் போன்றோர் கதைகள் பாடங்களாக இருந்ததாகவும் அக்கதைகளை மட்டுமே வாசித்ததாகவும் தெரிவித்துள்ளீர்கள். இன்று நீங்கள் ஒரு படைப்பாளி. அக்காலத்தில் அவர்கள் படைப்பாளிகளாக இருந்தவர்கள். இன்றும் இருப்பவர்கள். அவர்களுக்கு என்று ஒரு வாசகர் வட்டம் எப்போதும் இருந்து கொண்டுதானிருக்கிறது. தற்போதாவது அவர்கள் படைப்புகளை வாசித்துள்ளீரா? வாசித்தால் தங்கள் படைப்பு பாதிக்கப்படும் என்று கருதுகிறீர்களா? வாசிப்பதன் மூலம் அக்கால நிலையைத் தெரிந்துகொள்ளலாமே?

பாடப்புத்தகத்திற்கும் வெளியே நான் வாசித்த முதல் நாவல் அகிலனின் சித்திரப்பாவை. அந்நாவலில் அண்ணாமலை, மாணிக்கம் என்று இரண்டு கதாபாத்திரங்கள். மாணிக்கம் எனது இயற்பெயரின் பிற்பாதி என்பதால் இதற்காகவே இந்நாவலை நான் வாசித்தேன். காதலில் தோல்வியுற்றவர்கள் இந்த நாவலை வாசிக்க வேண்டும். தான் காதலித்த காதலி தனக்குக் கிடைக்காமல் போகையில் எங்கேயிருந்தாலும் அவர்கள் நன்றாக இருக்கட்டும், என்கிற மனப்பக்குவத்தை இந்நாவலை வாசிக்கும் யாரும் உணர்வார்கள். வாழ்க்கை மிகவும் அழகானது.

ff

அதை மேலும் அழகுப்படுத்தாவிட்டாலும் அசிங்கப் படுத்திவிடாதே என்பது இந்நாவல் தரும் செய்தி. நான் முதலில் வெளியிட்ட அச்சுப்பிரதி அகிலன் ஆண்டுமலர். சமீபத்தில் புதுக்கோட்டையில் அவரது பிறந்த நாள் நூற்றாண்டு விழாவாகக் கொண்டாடப்பட்டது. அகிலன் காலத்தவர் மு.வ. இவரது அகல்விளக்கு மகத்தான படைப்பு. பொதிகைத் தொலைக்காட்சி அதை தொடராக ஒளிபரப்பியது. பார்த்து மிரண்டுபோனேன். மனைவியை விடுத்து பிற பெண்களுடன் உல்லாசம் புரியும் ஆண்களின் இறுதிக்காலம் என்னவாகும் என்பதை அழகாக சொன்ன நாவல் இது. அகிலன், மு.வ. இருவரும் நாவல் படைப்பில் ஆழமாகக் காலூன்றியவர்கள். இன்றைக்கும் இருவருக்கும் வாசகர்கள் உண்டு, ரசிகர்கள் உண்டு.

அகிலனும் புதுக்கோட்டைக்காரர்.

அண்டனூர் சுராவும் புதுக்கோட்டைக்காரர். புதுக்கோட்டைக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் இருக்கும் இலக்கியத் தொடர்பு எந்தளவிற்கு இலக்கியத்தில் முக்கியத்துவமானது?

புதுக்கோட்டை கவிதைகளின் கோட்டை. சமீபத்தில் பாலபுரஸ்கர் விருது பெற்ற கவிஞர் மு.முருகேஷ் ஹைக்கூ கோட்டையாகும் புதுக்கோட்டை என்றொரு நூல் எழுதியிருக்கிறார். அவர் சொல்வதைப்போல புதுக்கோட்டையில் கவிஞர்கள் அதிகம். நானும் கவிதைகளிலிருந்துதான் எனது எழுத்தைத் தொடங்கினேன். கணையாழி, கல்கி, பேசும் புதிய சக்தியென பல இதழில் எனது கவிதைகள் பிரசுரமாகியிருக்கின்றன. கவிதைகளோடு சிறுகதைகளையும் எழுதினேன்.‘

கருக்கல் விடியும் என்றொரு காலாண்டு இதழ் திருவாரூர் மாவட்டத்திலிருந்து வந்தது. இந்த இதழுக்கு ஒரே நேரத்தில் கவிதையும் சிறுகதையும் அனுப்பினேன். அந்த இதழின் ஆசிரியர் பரிதிபாண்டியன் என்னை அழைத்து கவிதையை விடவும் சிறுகதை நன்றாக வருகிறது. இனி அதை மட்டுமே எழுதுங்கள். சிறுகதைகளில் பரிசோதனை முயற்சி செய்யுங்கள், என்று அறிவுறுத்தினார்.

இரண்டு வகைப்பாடுகள் குறித்தும் நீண்ட நேரம் உரையாடினார். அவரது அறிவுரையை மீறி கவிதைகள் நான் எழுதவே செய்தேன். எனது கவிதைகளை இதழ்கள் பெரியளவில் அங்கீகரிக்க வில்லை. மேலும் கவிதையாக்கலில் எனக்குள் போதாமை இருந்தது. ஆகவே கவிதை படைப் பாக்கத்திலிருந்து விலகிக்கொண்டேன். ஆனாலும் வார, மாத இதழ்களில் நான் முதலில் வாசிப்பது கவிதைகள்தான்.

கவிதை பேசும் பொருளைவிடவும் மொழியைப் பெரிதும் உள்வாங்கிக்கொள்வேன். அகிலனின் சித்திரப்பாவை என்கிற சொல் அப்படியாகவே என்னை வசீகரித்தது. இத்தலைப்பை மையமாக வைத்து ஒரு சிறார் கதை எழுதினேன். நான் எழுதிய முதல் கதை இது. இக்கதை பிர சுரமாக வில்லை. அடுத்து தாலி என்றொரு குறுநாவல் எழுதினேன்.

அதுவும் பிரசுர மாகவில்லை. பிறகு ‘பறையொலி என்றொரு சிறு கதை எழுதினேன். என் ஊரில் நடந் தேறிய ஒரு பிரச்சனையை மையமாகக் கொண்டு எழுதிய கதை இது. இந்தக் கதையிலிருந்தே எனது படைப் பிலக்கியம் தொடங்குகிறது. என்னை எழுத்தாளராக்கியதில் அகிலனுக்குப் பெரும்பங்குண்டு. அவர் நிறைய எழுதியவர். சமூகம், குடும்பம், அரசியல், நெறி என்று அவர் பேசாத பொருளில்லை. அவர் எழுதாப் பிரச்சனைகளும் இருக்கின்றன.

அதை நான் எழுதுகிறேன். என்னளவில் எழுதுதல் என்பது எழுதிப் பழகுதல்.

முத்தன் பள்ளம், கொங்கை, அப்பல்லோ, தீவாந்தரம், அன்னமழகி என ஒவ்வொரு நாவலும் ஒவ்வொரு கருப்பொருளைக் கொண்டுள்ளது. ஒன்றுக்கு ஒன்று தொடர்பற்று உள்ளது. இதைத்தான் எழுதவேண்டும், இப்படித்தான் எழுத வேண்டும் என்று தீர்மானித்து எழுதுவீரா?

dd

சங்க இலக்கிய பாடல்களில் ஒரே புலவர் குறிஞ்சித்திணை பாடி முல்லையையும் பாடுகிறார். இரண்டு பாடலும் ஒன்று போலிருப்பதில்லை. இதற்குக் காரணம் திணையின் முதற்பொருள் நிலமும் பொழுதும்தான் காரணம். நாவலிலும் அப்படித்தான். நாவலுக்கான முதற்பொருள் மாறுகையில் கருப்பொருளும் மாறுகிறது. மேலும் இதைத்தான் எழுத வேண்டுமென்று எதையும் முன்கூட்டியே தேர்வு செய்வதில்லை. எழுதுகின்ற ஒரு கதை நாவலாக வடிவம் பெறும் என்று எழுதும் என்னால் கணிக்கமுடிந்ததில்லை. எழுதிய அக்கதை பத்திரிகைகளில் பிரசுரமானதன் பிறகு அக்கதைக்குக் கிடைக்கின்ற வரவேற்பும் அக்கதை மீதான விமர்சனமும் நாவலுக்கான தேவையை வரையறுக்கிறது. எனது முத்தன்பள்ளம் நாவல் கணையாழி நடத்திய குறுநாவல் போட்டிக்காக போக்கிமான் பூச்சி என்கிற பெயரில் எழுதிய கதை.

அக்கதை கந்தர்வகோட்டை காந்தி சிலை முக்கத்தில் தொடங்கி முத்தன்பள்ளம் என்கிற கண்டுகொள்ளப்படாத ஒரு குக்கிராமத்தில் சென்று முடிவடையும். குறுநாவல் போட்டியில் சிறந்த நாவலாக எழுத்தாளர் வண்ணதாசன் இக்கதையைத் தேர்வுசெய்தார். இக்கதை கணையாழி இதழில் பிரசுரமாகையில் கதையை வாசித்த வாசகர்கள் பலர் முத்தன்பள்ளம் மக்களைக் குறித்தும் அவர்களின் வாழ்வியல் குறித்தும் எழுதலாமே, எனக் கேட்டுக்கொண்டார்கள். இதன்பிறகு அக்கதையை விரித்து முத்தன்பள்ளம் நாவல் எழுதி னேன். நிறுத்தக்குறி சிறுகதைதான் தீவாந்தரம். எலிச்சோறுதான் அன்னமழகி.

மிகக்குறுகிய காலத்திலேயே மிக அதிக சிறுகதைகள் எழுதியவர் தாங்களாகத்தான் இருப்பீர்கள் என்று கருதுகிறேன்.. எப்போது எழுதுவீர்?

ஆமாம், எனது முதல் கதை பறையொலி 2004 ஆம் ஆண்டு பிரசுரமானது. இதுவரை எட்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. ஆஸ்திரேலிய அக்னிக்குஞ்சு இதழ் இதுவரை எழுதிய கதைகளை வாரம் ஒரு கதைவீதம் மீள்பிரசுரமாக வெளியிட்டு, அவற்றைத் தொகுத்து மொத்தத் தொகுப்பாக வெளிக்கொணர முன்வந்துள்ளது. இதுநாள் வரை நூறு சிறுகதைகளுக்கும் மேல் எழுதியிருப்பது தெரியவந்தது. தினமும் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். கட்டுரை, கதை, நூல் விமர்சனம், சொல்லாய்வு, மடல், முகநூல் பதிவு என்று எல்லாமே எனக்கு எழுதுதல்தான். இவற்றில் சிறுகதை எழுத உகந்த தருணம் என்பது அமைதிதான். அமைதி என்பது யாருமற்ற அமைதியல்ல. என் மகனும் மகளும் சத்தமில்லாமல் படிக்க, எழுதிக்கொண்டிருக்கையில் என் துணைவியார் அவர் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கையில் நான் என் கதையை எழுதத் தொடங்குகிறேன். குடும்பத்தில் அனைவரும் இருக்கையில் என்னால் ஒரு கதை எழுதமுடிவதைப்போல யாருமற்ற தனிமையில் ஒரு எழுத்தைக்கூட என்னால் எழுத முடிந்ததில்லை. கதைகள் என்பது மனிதர்கள் உலாவும் காடு. அவர்கள் பற்றிய கதைகளை அவர்களற்ற அமைதியில் எழுதிவிட முடியாது.

சிறுகதையோ, நாவலோ எழுதிவிட்டு ஒரு வாசகனாக வாசிப்பீரா? முடிவு சரியில்லை என்றால் மாற்றம் செய்வீரா?

கதைகளை நான் ஒரு எழுத்தாளனாகவே அணுகுகிறேன், எழுதுகிறேன். பிழைத்திருத்தம்கூட எழுத்தாளனாகவே செய்கிறேன். இக்கதை சரியா என்றும் பிரச்சனையை அணுகும் விதம் சரியா என்றும் எழுத்தாளனாகவே பார்க்கிறேன். கதையை எழுதி திருப்திகொண்டு பத்திரிகைக்கு அனுப்புவதற்கும் முன்பு வாசகனாக வாசிப்பேன்.

அப்படியான வாசிப்பில் அக்கதை சில திருத்தங்களை மேற்கொள்ளும். சில கதைகள் திருத்தம் கேட்கும். சில கதைகளின் முடிவுக்காக பல ஆண்டுகள் காத்திருக்கிறேன். வாச்சாத்தி ஒடுக்குமுறை சம்பவத்தை மையமாக வைத்து எழுதிய ‘லத்தி’ என்கிற கதையின் முடிவுக்காக இரண்டு வருடங்கள் காத்திருந்திருக்கிறேன். எண்வலிச் சாலை என்கிற சிறுகதை பத்திரிகையில் பிரசுரமானதன் பிறகு தொகுப்பில் சேர்க்கையில் வாசகர்களின் விமர்சனத் தைக் கருத்தில்கொண்டு முடிவைச் சற்றே திருத்தி தொகுப்பில் சேர்த்தேன். எழுத்தாளனுக்குள் இருக்கிற வாசகனும் விமர்சகனும் வேறுவேறவர் அல்ல. விருந்து நாம் சமைத்ததாக இருக்கலாம். அதைப் பரிமாறியவர் நாமாக இருக்கலாம். விருந்தின் தன்மையை, அதன் சிறப்பைச் சொல்லத் தகுந்தவர்கள் அதை உண்டவர்கள்தான். விமர்சனத்திற்கும் இது பொருந்தும்.

எழுத்தாளர் ஜெயகாந்தன் அக்கினி பிரவேசம் என்னும் சிறுகதையின் முடிவை மாற்றி யோசித்ததன் விளைவே சில நேரங்களில் சில மனிதர்கள். அப்படியாக ஏதேனும் ஒரு சிறுகதை முடிவை மாற்றி ஒரு நாவலாக எழுதும் எண்ணம் உண்டா?

எனது பல நாவல்கள் அக்னிப்பிரவேசம்தான். சிறுகதை அளவிலான கதையை நாவலாக எழுதப்பட்டவை. ஆனால் முடிவை மாற்றி எழுதப்பட்ட நாவல்கள் அல்ல. அவசியம் கருதி பெரிதாக்கப்பட்டவை. ஒரு கதையைத் தீராநதி இதழுக்கு அனுப்பினேன். அக்கதையை வாசித்த கௌதம சித்தார்த்தன் நாவல் அம்சம் கொண்ட கதை இது என்றார். இந்தக் காலகட்டத்தையொட்டி தமிழக அரசியலில் ஒரு தலைவரின் மரணம் நிகழ்ந்தேறியது. எழுதியிருந்த சிறுகதையுடன் இத்தலைவரைச் சுற்றி நடந்தேறிய மர்ம நிகழ்வுகளைச் சேர்க்கையில் அது அப்பல்லோ நாவலானது. இந்நாவல் மீது எனக்குப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. எல்லா படைப்பும் போதுமான கவனிப்பைப் பெற்றுவிடாது, அந்நாவல் எனக்குச் சொன்ன பெருஞ்செய்தியானது அது.

நிறுத்தக் குறி என்னும் சிறுகதை தற்போது நடந்த தூத்துக் குடி சம்பவத்தை மையப்படுத்தி எழுதியது. சிறுகதை வாசிக்கும் போது வ.உ.சி காலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டை நினைவு படுத்தியது. அதன்பிறகே தீவாந்தரம் நாவல் வந்தது. நிறுத்தக்குறி எழுதும் போதே தீவாந்தரம் முடிவு செய்யப்பட்டுவிட்டதா?

நிறுத்தக்குறி கதை தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தையொட்டிய எழுதிய கதை. நீதிமன்றத் தீர்ப்புகள் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சாதி பார்த்தே எழுதப்பட்டன, எனச் சொல்லும் கதையாகவும் தீவாந்தரத்தைப் பார்க்கலாம்.

எண்வலிச் சாலையில் உள்ள பெரும்பாலான சிறுகதைகள் வரலாற்று அடிப்படையிலேயே எழுதப்பட்டுள்ளன. வரலாறு தங்களுக்கு பிடித்தமானதா?

வரலாறு பிடிக்காதவர்கள் யாருண்டு. மீனின் குடலையும் செவுளையும் பிதுக்கி எறிந்து விட்டு கூட்டி வைத்தால் நல்ல மீன் குழம்பு கிடைத்து விடுவதைப்போல வரலாற்றின் ஆண்டு, பெயர் இரண்டையும் மறைத்துக்கொண்டு சம்பவத்தை உள்வாங்கினால் இந்த உலகத்தில் நடக்கும் எதுவும் புதிதல்ல. நடந்த ஒன்றுதான் திரும்பத் திரும்ப நடக்கிறது. எண்வலிச் சாலை கதையில் வரும் திருவிதாங்கூர் சமஸ்தானம் கதையைப் பிரெஞ்சு மொழியில் பார்த்தால் பதினான்காம் லூயி நினைவுக்கு வருவார். அப்பல்லோ கதையில் வரும் மெனிலாஸை நினைவுகூர்ந்து பார்த்தால் மறைந்த ஒரு அரசியல் தலைவர் நினைவுக்கு வருவார். நாய்கள் இப்படித்தான் பூனைகள் தேசத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டன என்கிற கதை மொழியால் பேரினவாதம் புரிந்து வங்கதேசம் என்கிற நாடு தோன்றுவதற்குக் காரணமான நிகழ்வுகள் நினைவுக்கு வரும். அறிவியல் மாறுதலுக்குட்பட்டது. வரலாறு மாறாதது. அதிகாரத்தைப் பயன்படுத்தி வேண்டுமானால் திருத்திக்கொள்ளலாம்.

ஒரு பள்ளியில் ஆசிரியராகவும் இருக்கும் நீங்கள் பாடத்தைத் தாண்டி ஓர் எழுத்தாளராக மாணவர்களிடம் படைப்பு குறித்து பேசியதுண்டா?

நான் கணித ஆசிரியர். எழுதுவது தமிழ். என் படைப்புகள் குறித்து நான் ஒரு காலமும் என் மாணவர்களிடம் பேசியதில்லை. நான் எழுத்தாளரென்று என் மாணவர்களுக்கு தெரியவும் தெரியாது. அதேநேரம் என் வகுப்பறை எப்பொழுது கலகலப்பாக இருப்பதற்கும் கணிதத்தை சில நேரம் கதையாகச் சொல்லி நடத்துவதற்கும் எனக் குளிருக்கும் படைப்பாற்றல் அதற்கு துணை செய்கிறது.

புதுக்கோட்டை வழக்குச் சொற்களைத் திரட்டி வருகிறீர். வழக்கு மொழியில் கதை எழுதியதுண்டா?

இப்பொழுது நான் நாற்பதாவது வயதில் காலெடுத்து வைக்கிறேன். எழுத்தாளர் கி.ரா. எழுத்துலகத்திற்கு வந்த வயது இது. இந்த வயதிற்குள் நான் நூறு கதைகள் எழுதிவிட்டேன். இதற்குள் வட்டார கதைகளாக சில கதைகளே எழுதியிருக்கிறேன். அன்னமழகி நாவல் முழுக்க வட்டார மொழியில் எழுதப்பட்ட கதை. இனி நான் எழுதப்போகும் படைப்புகள் புதுக்கோட்டையை மையமாக வைத்தே எழுதப்போகிறேன். அப்படியாக எழுதுவதற்குத் தேவையான அளவிற்கு வட்டார சொற்களையும் வரலாற்று நிகழ்வுகளையும் சேகரித்து வைத்துள்ளேன். பொது மொழிவழி கதைகளே எல்லா தரப்பு வாசகர்களையும் சென்றடைகிறது. என்றபோதிலும் வட்டார கதையாடல் தேவையாக இருக்கிறது. இனி வரும் என் கதைகள் வட்டார வழக்காறுகளைப் பேசும்.

புதுக்கோட்டை வரலாறு எழுதும் எண்ணம் எதுவும் உண்டா?

புதுக்கோட்டை தற்கால நிகழ்வு சம்பவங்களை உள்ளடக்கி தற்கால புதுக்கோட்டை வரலாற்றை எழுத ஒரு பதிப்பகம் கேட்டுக்கொண்டுள்ளது. நான் புதுக்கோட்டை அதைச் சார்ந்து தொடர்ந்து எழுதிவருகிற கட்டுரைகளைத் தொகுத்தால் அது புதுக்கோட்டை மாவட்ட தற்கால மக்களின் வரலாறாக அமையும். புதுக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள், பதிப்பகங்கள், இதழ்கள், அச்சகங்கள், புதுக்கோட்டையில் பிறந்த மக்களிசை பாடல்கள், ஊர்ப்பெயர் காரணப் பெயர்கள் யாவும் புதுக்கோட்டை மாவட்ட வரலாறு எழுதவேண்டும் என்கிற நோக்கில் எழுதியதில்லை. என் காலத்தோடு வாழ்கின்ற பலரையும் ஆவணப்படுத்தவேண்டும், என எனக்குள் இருக்கின்ற இயல்பான மனவூக்கத்தின் பதிவுகள் இவை. புதுக்கோட்டை பெரும்பாலும் மன்னர்வழி வரலாறாகவே பார்க்கப்பட்டு வருகிறது. நான் மக்களின் கோணத்தில் பார்க்கிறேன். எனக்கு அந்த வரலாற்றின் மீது பெரிய ஈர்ப்பும் தாகமும் வருகிறது. எழுதிக்கொண்டிருக்கிறேன்.

தங்களின் எழுத்துக்கு இயக்கம் எந்தளவிற்கு உதவியாக இருக்கிறது?

நான் இடதுசாரி எழுத்தாளன். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தில் என்னை நான் இணைத்துக்கொண்டுள்ளேன். மேலும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர் சங்கத்தில் நட்பும் நெருக்கமும் கொண்டவன். எனது எழுத்துக்கு இவ்விரு அமைப்புகளும் எந்த அளவிற்கு உதவியாக இருக்கிறது என்பது இரண்டாவது பட்சம். ஒரு படைப்பை யாருக்காக எழுதுகிறோம், ஒரு பிரச்சனையை எந்தக் கோணத்தில் பார்ப்பது சரியாக இருக்கும், எதை எழுத வேண்டும் என்பதை எனக்கு நானே தராசு கொண்டு பார்க்க அமைப்புகள் உதவுகின்றன. கலை வேறு அரசியல் வேறு என்கிறார்கள்.

அப்படியாக வேறுபடுத்துவதிலிருக்கிற அரசியலை விளக்குவது அமைப்புகளே.

விருதை மனதில் கொண்டே எழுதுவீரா?

ஓர் எழுத்தாளன் தொடர்ந்து எழுதுவதற்குப் புறத்தூண்டல் அவசியம். நான் எழுதத் தொடங்கிய காலத்தில் எனக்கென்று எந்தப் புறத்தூண்டலும் கிடையாது. பட்டியலிடும் படைப்பாளர்கள்கூட என் பெயரைத் தவிர்த்தே பட்டியலிடுவார்கள். என்னை நான் இலக்கியத்தில் நிலைநாட்டிக்கொள்ள இலக்கியப் போட்டிகள் கைகொடுத்து தூக்கிவிட்டன. போட்டியை மனதில் கொண்டு படைப்புகளை படைக்கமுடியாது. இதில் வேடிக்கை என்ன வென்றால் பல போட்டிகளில் பரிசு பெற்ற கதைகள் பல இதழ்களுக்கு அக்கதைகளை அனுப்பி, பிரசுரத்திற்கு உகந்ததல்ல என தள்ளுபடி செய்ய ப் பட்ட கதைகள்.

விருது பெறுபவர்கள் விமர்சிக்கப்படுவது.. ஒரு சடங்காகி வருகிறதே?

விமர்சனத்திலிருக்கிற சார்புத் தன்மையை ஏற்க முடியாது. சில சாகித்ய விருதுகள் அந்தப் படைப்பாளர் எழுதிய நல்ல படைப்பை விடுத்து சுமாரான படைப்புக்கு வழங்கப்படுவதுண்டு. படைப்பாளருக்கு இந்த விருது சரி, இந்த நூலுக்குச் சரியா? என்கிற கேள்வி வழி விமர்சனம் ஆரோக்கியமானது. அதே நேரம் நபர் பார்த்தும், அவர்களது பின்புலம் பார்த்தும் விமர்சிக்கப்படும் விமர்சனம் அழுக்கானது.

விருதே பெறாதவர்கள் நல்ல படைப்பாளி என கொள்ள முடியாதா?

விருதோடு படைப்புகளைப் பொருத்தலாம். படைப்பாளியைப் பொருத்த முடியாது. விருதுபெறாத பல காத்திரமான படைப்பாளிகள் இருக்கிறார் கள். அவர்கள் ஓரிரு படைப்புகளோடு நின்று போனதையும் பார்க்கமுடிகிறது.

அவர்கள் தொடர்ந்து இயங்க முடியாமல் போனதற்குக் கண்டுக்கொள்ளப்படாமையும் அங்கீகரிக்கப்படாமையும் பெருங்காரணியாக இருக்கிறது. விருதுக்கும் நல்ல படைப்புக்கும் ஒரு தொடர்புமில்லை. ஆனால் விருதுக்கும் தொடர் படைப்புக்கும் தொடர்பு உண்டு.

இலக்கியத்தில் இனி என்ன செய்ய வேண்டும் என ஏதும் திட்டம் உள்ளதா?

எழுத்தை சிலர் கோட்டுத்துண்டாக பார்க்கிறார்கள். சிலர் கதிராகப் பார்க்கிறார்கள். கோட்டுத்துண்டுக்கு எல்லை உண்டு. கதிருக்கு எல்லை இல்லை. எனது இலக்கியம் கதிர் போன்றது. நான் பரிசோதனையாக பல முயற்சிகள் செய்துள்ளேன். அப்பல்லோ, தீவாந்தரம் அப்படியான படைப்புகள்தான். இனி நான் எழுத வேண்டியது, எனது மாவட்டம், மண், மக்கள் பற்றி.

மற்றவர்களின் படைப்புகளை வாசிக்கும் போது அதன் தாக்கம் நம் படைப்புக்குள் வந்துவிடும் என்கின்றனரே... இது உண்மையா? தங்களுக்கு அப்படி நேர்ந்தது உண்டா?

தொடக்கநிலை எழுத் தாளருக்கு அப்படியான தாக்கம் வருவதுண்டு. எனக்கும் வந்திருக்கிறது. ஜெயகாந்தனின் சினிமாவுக்குப் போன சித்தாளு நாவலை வாசித்து நான் செம்பரம்பாக்கம் சிறுகதை எழுதினேன். மேலாண்மை பொன்னுச்சாமி ஜெயமோகன், ஆதவன் தீட்சண்யா, நாஞ்சில் நாடன் எழுத்துகள் எனக்கு அப்படியான பாதிப்புகளை ஏற்படுத்தியதுண்டு. எழுத எழுத நமக்கென்று தனித்துவம் உருவாகும். அதன்பிறகு அப்படியான பாதிப்புகள் வராது.

சமீபத்தில் எழுதிக்கொண்டிருப்பது என்ன?

குடிநீரில் எச்சிலைக் கலக்கும் மனிதர்களின் செய்கை கீழ்த்தரமானது. நேயமற்றது. குடிநீரை களங்கப்படுத்தும் மனிதனின் குரூரத்தை மையமாக வைத்து நாவலாக எழுதிக்கொண்டிருக்கிறேன். வேங்கைவயல் பிரச்சனையாக மட்டும் இதைப் பார்க்க வேண்டியதில்லை. நீர் என்பதும் குடிநீர் என்பதும் ஒன்றல்ல. நீர் என்பதும் தண்ணீர் என்பதும் ஒன்றல்ல. தண்ணீர் என்பதும் நிலத்தடி நீர் என்பதும் ஒன்றல்ல. நிலத்தடி நீரும் மழை நீரும் ஒன்றல்ல. நீருக்கு உயிர் இல்லை என்பது சரியாக இருக்கலாம். நீருக்கு நினைவாற்றல் உண்டு என்பதை சொல்லவருவதே இந்நாவல். மனிதன் மன்னிப்பதைப்போல நீருக்கு மன்னிக்கத் தெரியாது.

இலக்கியப் பாதையில் தங்களால் மறக்க முடியாத ஒரு நிகழ்வு...?

நிறைய உண்டு. ஓர் இதழ் சிறுகதைப் போட்டி நடத்தியது. கதைகளை இணைய வழியில் வாசகர் வாசிப்பிற்கு வைத்தது. ஒருவர் என் கதையை இணையத்திலிருந்து எடுத்து என் பெயரை எடுத்துவிட்டு, அவரது பெயரை ஒட்டி அனுப்பிவிட்டார். இத்தனைக்கும் அக்கதை ஒரு போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை. மேலும் அக்கதையை தொகுப்பில் சேர்த்திருந்தேன். இணையம் அக்கதையை எனது பார்வைக்குக் கொண்டுவந்து சேர்த்தது. மூளைத் திருட்டு இது. போட்டி நடத்திய இதழுக்குத் தகவல் தெரிவித்தேன். முகநூலில் பதிவிட்டேன். போட்டி நடத்திய இதழ் உரியவரிடம் பேசிவிட்டு தொடர்புக்கு வந்தார்கள். இத்தவறை செய்த நபரும் உள்பெட்டி வழியே மன்னிப்பும் வருத்தமும் தெரிவித்தார். நான் எனது பதிவில் எனது கதையைத் திருடிவிட்டார் என்று எழுதியது அவரைப் பெரிதும் வருத்துவதாகவும் அப்படியான பதிவை எடுக்கவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

இது ஒருபுறமிருக்க, இன்னொரு பிரபல எழுத்தாளர் எனது கட்டுரையில் பெரும்பகுதியை எடுத்து அவரது கட்டுரையில் அப்படியே வைத்து வெளியிட்டார். இதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்புகையில் அவரிடமிருந்து ஒரு பதிலும் வரவில்லை. அப்போது நான் நினைத்தது இதுதான், எனது சிறுகதையை எடுத்து அவரது கதையாக பயன்படுத்தியவரைக் கண்டும் காணாமல் விட்டிருக்கலாமென்று.

முன்பே இந்த கேள்வி கேட்கப் பட்டிருக்கவேண்டும். தங்கள் இயற்பெயர் என்ன? அண்டனூர் சுரா ஆனது எப்போது? ஏன்?

இயற்பெயர் சு. இராஜமாணிக்கம். எனது தாத்தா எனக்கு வைத்த பெயர் இது. எனது சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம், அண்டனூர் எனும் குக்கிராமம். அப்பா பெயர் சுப்பையா. கிராமத்தில் சுப்பன் என்று அழைப்பார்கள். சுப்பையா- இராஜமாணிக்கம் என்பதன் சுருக்கமே அண்டனூர் சுரா. முதலில் ராஜமாணிக்கம், அண்டனூர் ராஜமாணிக்கம், மாணிக்கம், சுரா. மாணிக்கம் என்று பல பெயரில் எழுதிவந்தேன்.

அண்டனூர் சுரா எனும் பெயரில் எழுத என் நண்பன் சோலச்சி கேட்டுக்கொண்டான். அதையே புனைபெயராக வைத்துக்கொண்டேன். சிலர் என்னை சுறா என்று அழைக்கிறார்கள். சுரா என்று மேலும் பலர் இருந்தாலும் அவர்களைக் கடந்து நான் அடையாளப்பட்டதற்குக் காரணம் எனது தொடர் இலக்கிய பங்களிப்புகள்தான்!