மலைவாழ் சமூகத்திலிருந்து உழைப்பால் உயர்ந்து வந்திருக்கும் கவித்தா சபாபதி பத்து கவிதை நூல்களைத் தமிழுக்குத் தந்திருக்கிறார். பாமர சமூகத்திலிருந்து உயர்ந்து இன்று சிறந்த கட்டடப் பொறியாளராக தென்னாப்பிரிக்காவில் பணியாற்றி வருகிறார். அழகியல் கவிஞரான அவரை நம் "இனிய உதயம்' இதழுக்காக சந்தித்தபோது...
"கடல் கடந்த கண்டங்களில் பணிபுரிந்தா லும் நீலமலை எழிலியின் மைந்தன் என்ற உணர் வில்தான் உயிர்த்திருக்கிறேன்' என்றெழுதும் உங்களைப்பற்றிய சிறு அறிமுகம்.?
தேயிலைத் தோட்டங்களும் காடுகளும் சூழ்ந்த அழகிய மலைக்கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன்; முதுமலைக் காடுகளில் பணிபுரிந்தவன்; வனஓடைகளில் கால்நனைத்தவன்; காட்டுவெளிகளில் யானைகளை மிகஅருகில் பார்த்தவன்; புலியுறங் கும் பாறையில் தூங்கும் வனவாசிகளிடம் மலைத்தேன் வாங்கி உண்டவன்; மாயாறு நீர்நிலையில் மான்களோடு மருண்டவன்; நுரைப்பூக்கள் பொங்கிமோதும் மூக்குருத்தி காட்டுப்பாறைகளில் கட்டுச்சோறுஉண்டவன்; தேயிலைத் தோட்டங்களில் அட்டைகளால் ரத்தம் உறிஞ்சப்பட்டவன்; நகரங்களில் பெயர்ந்து பின் கடல்கடந்து சென்றவன்; "கடல்கடந்த கண்டங்களில் பணிபுரிந்தாலும் நீலமலை எழிலியின் மைந்தன்' என்ற உணர்வில்தான் உயிர்த்திருக்கிறேன்.
சிறு தேயிலை விவசாயக்குடும்பம். பெற்றோர் கள் மற்றும் முதல் மூத்த சகோதரி காலிநிலத்தை தோட்டமாக்கியும், பிறர் தோட்டங்களில் வேலைசெய்தும் எங்களை வளர்த்தார்கள். பள்ளிப்பருவத்திலேயே நானும் என் தம்பியும் தேயிலை நாற்றுகள் நட்டிருக்கிறோம். தேயிலை மூட்டைகள் சுமந்திருக்கிறோம். விறகு சுமந்திருக்கி றோம். பள்ளியிலும் முதல் மாணவர்களாக படித் தோம். இந்தப் பருவமே வாழ்க்கையின் நல்ல அடித் தளமானது.
கட்டிடப் பொறியாளராகி ஊட்டியிலும், முதுமலைக்காடு ஒட்டிய அணைக்கட்டு நீர்மின் திட்டப்பணிகளிலும் பின் சென்னை, பெங்களூர், டில்லி ஜாம்ஷெட்பூர், காபூல் (ஆப்கானிஸ்தான்) போன்ற நகரங்களில் வெவ்வேறு நிலைகளில் பணிபுரிந்து, கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக ஆப்பிரிக்க நாடுகளில் இயங்கிவருகிறேன். தூரத்தில் இருந்தாலும் தமிழால் கவிதையால் இணைந்திருக்கிறேன். என்னால் இயன்ற இலக்கியப் பணியாற்றிக்கொண்டிருக்கிறேன் உங்கள் குடும்பம், கல்வி, தொழில்சாதனைகள் குறித்து சொல்லுங்களேன்?
நாங்கள் நீலமலையின் பூர்வகுடிகளான படகர் குழுவினர். தாய் பெயர் சுந்தரி, தந்தை பெயர் பெள்ளி. மூத்த சகோதரிகள் இருவர் மற்றும் ஒரு தம்பி. உடன் பிறந்தவர்கள், எல்லோரும் நீலகிரியில் அவரவர் குடும்பத்தோடு வாழ்கிறார்கள். என் சிறு குடும்பம் பெங்களூரில்.
மேலூர் என்ற ஊட்டிமலை கிராமத்தில் பிறந்து அங்கேயே நடுநிலைப்பள்ளியிலும், மேல்நிலைப் பள்ளியிலும் படித்தேன். இயல்பாகவே கல்வி ஆர்வம் இருந்தது. பின்னாளில் பேராசிரியராக வரவேண்டும் என்ற கனவு சிறுவயதிலேயே இருந்தது. ஆனால் ஏழ்மைநிலையில் வேலைவாய்ப்பு கருதி உதகை தொழில் நுட்ப கல்லூரியில் சேர்க்கப்பட்டேன். கல்லூரி முடிந்ததும் ஒப்பந்தக்காரர்களிடம் பொதுப்பணித் துறையிலும், பின்னர் முதுமலை ஒட்டிய பைக்காரா நீர்மின் திட்டப்பணிகளில் பணிபுரிந்து நல்ல அனுபவங்கள் பெற்றேன். இடையில் வேலையில்லாமல் இரண்டு வருடங்கள் தோட்டத்தில் வேலைசெய்தேன்.
திருமண வயதில் எதிர்காலம் இருண்டு தெரிந்தது. நீண்டகால வேலைவாய்ப்பும். வருமானமும் மலைப் பிரதேசத்தில் சாத்தியமில்லை. எனவே சென்னை வந்தேன். சிறுநிறுவனத்தில் சேர்ந்து, திருமணம் செய்து கொண்டேன். இனிய வாழ்க்கைத் துணைவாய்த்த நேரம் பெரிய நிறுவனம் ஒன்றில் வேலைகிடைத்தது. அந்நிறுவனத்தில் பல நகரங்களில் பணிபுரிந்தேன். இருந்தும் வருமானம் போதவில்லை. காலம் எங்களை பெங்களூர் அழைத்துவந்து அடித்தளம் போடவிட்டது. அங்கேயே வீடுகட்டி வாழ்கிறோம். இந்தக் காலங்களில் பகுதிநேரங்களில் பட்டப்படிப்பும், திட்ட மேலாண்மையில் முதுகலைப் பட்டயமும் பெற்றேன். தேவைகள் பெருகவே ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் இணைந்தேன். அந்நிறுவனம் வெளிநாட்டு திட்டப்பணிகளில் வாய்ப்புதந்தது. வேகமாக முன்னேறி காம்பியா, ஐவரிகோஸ்ட், நைஜர், கானா போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் ஈர்ன்ய்ற்ழ்ஹ் ஐங்ஹக் என்ற தலைமைநிலையில் கடந்த பன்னிரண்டு வருடங் களாகப் பணிபுரிகிறேன்.
குழந்தைகளின் கல்வியின் பொருட்டு குடும்பத்தினர் பெங்களூரிலேயே இருக்கிறார்கள். நான் வருடம் இரண்டு மூன்று முறை வந்துபோகிறேன். மகன் பிரியதர்ஷன் மென்பொறியாளராக மூன்று மாதங்களுக்கு முன் வேலையில் சேர்ந்திருக்கிறான். மகள் ரம்யா கல்லூரியில் இவ்வாண்டு சேர்ந்திருக்கிறாள்.
நான்கு வருடங்களுக்கு முன் தாய் மறைந்துவிட்டார். வளர்த்து ஆளாக்கிய தந்தை (வயது85) இன்னும் ஆரோக்கியத்தோடு எங்களுடனே பெங்களூரில் வாழ்கிறார். பெருகிய குடும்பம் மற்றும் சுற்றம் பார்க்க அடிக்கடி எங்கள் மலைக்கிராமத்துக்கு செல்கிறோம். நான் வருடம் ஒருமுறைதான் செல்லமுடிகிறது என்றாலும் என் மூச்சோடு கலந்திருக்கிறது நீலமலை.
உங்கள் கவிதையின் ஊற்றுக்கண்?
சுருக்கமான சுயசரிதை வரிகளாக உருவான "இதுவரை ரசித்த ஓடைகள்'என்ற கவிதையின் ஒரு பகுதியில் ""மணிக்கு மணி, மாயக்குதிரை தங்க மாம்பழம் ஒற்றைக்கண் திருடன்'' என பலநூறு கதைகள் படித்துக்காட்டி ‘செவன ’வாத்தியார் ஊட்டிய பால்தான் கவிதைச்சுனைகளாய் கசிந்ததோ பின்னாள்?
பால்ய காலத்துப் பள்ளியின் ஞாபகம் -என்று வரும். இதுவே என் நதியின் குழந்தைப் பருவம். பின்னாளில் சரித்திர சமூகக் கதைகளோடு பாவேந்தரின் குடும்பவிளக்கு, பாண்டியன்பரிசு, உவமைக்கவிஞர் சுரதாவின் தேன்மழை, கவியரசர் இளந்தேவனின் "கனவுமலர்கள்', வல்லம்வேங்கட பதியின் "வடியாத வெள்ளங்கள்', மேலும் புலவர் ஒருவர் எழுதிய அம்பிகாபதி காதல்காப்பியம் போன்ற நூல்கள் கவிதையின் வேர்களை என்னுள் இறக்கி வைத்தன. அதேநேரத்தில் என்னைப் பித்தனாக்கியது கவியரசு நா. காமராசனின் கறுப்புமலர்கள், சூரிய காந்தி. தொடர்ந்து மு.மேத்தாவின் கண்ணீர்ப்பூக்கள், ஊர்வலம் மற்றும் கவிக்கோவின் சில கட்டுரைகள் என்னைக் கவர்ந்தன. இவையாவும் என்னை எழுதவைத்தன. இன்றும் நான் கவிஞனில்லை. கொஞ்சம் கவித்தன்மை உள்ளவன், கவிதையின், கவிஞர்களின் ரசிகன். அதனால்தான் நல்ல கவிதைகளைத் தொகுத்து வெளியிட்டுக்கொண்டிருக்கிறேன். அதை ஒரு தவமாக இயற்றுகிறேன்.
அண்மையில் வெளியான "வேறுநிலாக்கள்' சமகாலத்தில் வந்த மிகச்சிறந்த தொகுப்புநூல்களில் ஒன்று. ""மிக மூத்த கவிஞர்களான நா. காமராசன், சிற்பி, ஈரோடுதமிழன்பன், வைரமுத்து ஆகியோர் கவிதை களுடன் முன்னணிக் கவிஞர்களின், இளங்கவிஞர்களின் கவிதைகளையும் இத்தொகுப்பு உள்ளடக்கமாகக் கொண்டிருக்கிறது. இந்தச் சமன்பாடு இத்தொகுதியை மேம்படுத்தியுள்ளது. எல்லாமே வாழ்வின்மீதான நுண்ணிய உணர்வுப்பார்வையின் பிரதிபலிப்பாகவே இருக்கின்றன. மரபுமுறையிலான புதுக்கவிதைகளும் அவற்றிலிருந்து விடுபட்டபோக்கிலான புதுக்கவிதைகளும் இந்நூலின் தனிச்சிறப்பு.
வாழ்வின் அசைவுகளை, அர்த்தங்களை, தவிப்புகளை, கலைஅழகோடு வெளிப்படுத்தும் விழுமிய கவிதை களைத் தேர்ந்தெடுத்ததற்காக இதன் தொகுப்பாசிரியர் கவித்தாசபாபதியை கூடுதலான பெருமையோடும் குரவையாடும் மகிழ்ச்சியோடும் பாராட்டுகிறேன் என்று மகாகவி ஈரோடுதமிழன்பன் வேறுநிலாக்களைப் புகழ்ந்திருப்பது அத்தொகுப்பின் மேன்மையைக் காட்டுகிறது.
வேறு தொகுப்புநூல்கள் மற்றும் இலக்கியப் பணிகள் குறித்து?
நாற்பது வருடங்களாக மாதந்தோறும் உதகைப் பூங்கா புல்வெளியில் கவியரங்கம் நடத்தும் "மலைச்சாரல் கவிஞர் மன்ற'த்தில் முப்பதுவருடங்களாக இணைந்திருக்கிறேன். ஒவ்வொரு வருடமும் தொகுத்து வெளியிடப்படும் கவிதைநூல்களில் முக்கியபங்கு வகிக்கிறேன்.
தொண்ணூறில் நெல்சன் மண்டேலா விடுதலையானபோது பாரதம் முதலில் அழைத்து அவருக்கு பாரதரத்னா விருதளித்து கௌரவித்தது. நான் "கறுப்புச்சூரியன்' கவிதைத் தொகுப்பை ஆங்கில முன்னுரையுடன் 'ஜோகன்னஸ்பர்க் ' அனுப்பிவைத் தேன். நூலின் தலைப்பு வைரமுத்து தந்தது.
நா.கா, மு. மேத்தா , சிற்பி, கவிக்கோ, புலமைப் பித்தன், பூவைசெங்குட்டுவன், வைரமுத்து, துறவி, சக்திக்கனல், ஈரோடுதமிழன்பன், அறிமதி தென்னவன் ,ஆலந்தூர்மோகனரங்கன், முத்துலிங்கம், முத்துரா மலிங்கம், இன்குலாப் போன்ற ஜாம்பவான்களின் கவிதைகளைப்பெற்று இளமைக்காலத்தில் வெளியிட்ட கவிதைநூல் அனுபவம் இன்னும் என்னைச் சிலிர்க்கவைக்கிறது. "அந்நியமில்ல நீயும் நானும், உலகக்குரவை' என ஈழ, ஆப்பிரிக்க மண்ணின் வேட்கையை/வீரத்தைப்பாடும் கவிதைகளைத் தந்து ஊக்குவித்த மக்கள் கவிஞர் இன்குலாப், இந்நூலுக்காகவே கவிதைகள் எழுதிய முன்னோடிகள் யாவரையும் இங்கே நினைத்துப்பார்க்கிறேன்.
"இவர்களால் சிலிர்க்கும் இயற்கை' என்னும் இயற்கை, இயற்கைசார்ந்த தத்துவமும் வாழ்வியலும் கொண்ட கவிதைகள் நிறைந்த விரிவான தொகுப்பு 2014-ல் வெளியானது. "இவர்களால் சிலிர்க்கும் இயற்கை’’ ஒரு அடர்வனமாக விரிகிறது ' என்று கவிஞர் சிற்பி ஆரத்தழுவி எழுதியிருக்கும் இந்நூலில் தமிழக முன்னோடிக்கவிகள், ஈழப்பெருங்கவிகள், விருட்சம் நவீனக்கவிகள் பலரின் அற்புதமான படைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. கேட்டதும் சம்மதித்த கவிஞர் பெருமக்களின் நல்லுள்ளத்தையும், ஆக்கப்பூர்வமான இலக்கியப் பணிக்கு அவர்கள்தரும் ஆதரவையும் நன்றிபாராட்டி இங்கே பதிவுசெய்கிறேன். இந்நூலின் இரண்டாம் பதிப்பு வெளிவர இருக்கிறது.
"வேறு நிலாக்கள்' நூலுக்கு கிடைத்த பாராட்டுகளும், ஆதரவும் இன்னும்பல நூறு வேறுநிலாக்களைத் தொடர்ந்து பாகங்களாக வெளியிடும் என் லட்சிய தீபத்திற்கு எண்ணை யூற்றிருக்கிறது. அபூர்வமான, மாறுபட்ட கவிதைகள் இடம் பெறும் வேறு நிலாக்களின் ஊர்வலம் தொடரும். தமிழிலக் கியம் இந்தநிலாக்களைக் கொண்டாடும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் என் தவம் வளர்க்கிறேன். நான் தவமிருக்கும்போது வரங்களாக வந்துநிற்கும் தோழமைக் கவிப்பிரும்மாக்களுக்கு என்றும் கடமைப்படுகிறேன். இந்தப் பணி கவிதைப்பாற்கடலைக் கடைந்து அமுதெடுத்து சந்ததிகளுக்கு எளிதாகத் தரும் ஒரு இனிய ஏற்பாடு.
குறிஞ்சி கவிதை மின்னிதழ் கூட கவிதை வேள்விதான். அதன் சிறப்பை சிறந்த படைப்பாளிகள் உணர்ந்திருப்பதும் ஊக்கு விப்பதும் மகிழ்ச்சி தருகிறது.
மரபார்ந்த சந்தங்களுடன் புதுக்கவிதை வீச்சு கலந்து வரும் ஒரு தனிகவிநடை கொண்டது உங்கள் கவிதை கள்.. அவற்றுக்கான அங்கீ காரம் கிடைத்திருக்கிறதா?
சாமானியனின் கவிதைகள் வெகுவான இடங்களுக்குச் சென்றடைவதில்லை. இருந்தும் முகநூல் மற்றும் இனியஉதயம் போன்ற இதழ்களின் வாயிலாகவும், சில இலக்கிய அமைப்பு களாலும் கொஞ்சம் அறியப்பட்டிருக்கிறேன். என் கவிதைகளில் பயணித்தவர்கள் பரவசம்தரும் சில கவிதைகளை இனம்கண்டு வாழ்த்தியிருப்பதை அங்கீ காரம் என்றே கொள்கிறேன்.
கன்னிமுயற்சி நூல்களில் கவியரசு நா. நாமராசன், கவிவேந்தர் மு. மேத்தா ஆகியோரின் மனம்திறந்த பாராட்டுதல்கள் எனக்கு முதலில் கிடைத்த அங்கீ காரம். ""இவனது சொற்பிரயோகத்தில் ஒரு சிற்பி யின் கவனமும், ஓவியனின் அழகுணர்ச்சியும் கலந்து வெளிவரும் ஓர் அபூர்வ குண வார்ப்பாகவே எனக்குத் தெரிகிறது'' என்று நா. காமராசன் எழுதியது என்னைச் சிலிர்க்கவைத்து செழுமையாக்கியது.
""தீபாவளி நிலாவில்,‘ஒரு தீவிரவாதியின் காதல் டைரி’ போன்ற கவிதைகளை எழுதியதற்காவே இவரை என் இனக் கவிஞனாகவும் மனக் கவிஞனாகவும் ஏற்கிறேன்'' என்று மு. மேத்தா எழுதியது என்னுள் நம்பிக்கையை வளர்த்தது.
"கடவுளின் நிழல்கள் என்ற கவிதைத் தொகுதி மெய்யாகவே என் உள்ளத்தைக் கொள்ளைகொண்டுவிட்டது. இந்தக் கவிஞனுக்குள் பாரதி முதல் தாகூர்வரையிலான இந்தியக் கவிஇமயங்களிலிருந்து உருகியோடும் பனியாறு களைக் காண்கிறேன் ' என்று சிற்பிபாலசுப்பிரமணியம் குறிப் பிட்டது அங்கீகாரம் அல்ல.... மிகப்பெரிய விருது என்றே கருதுகிறேன்.
"பிறைசூடும் வானங்கள்' சென்றுசேர்ந்த இடமெல்லாம் பேசப்பட்டது. அந்நூலில் கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் என்னை "ஆப்பிரிக்காவில் பணிபுரியும் தமிழ்நாட்டுக் கிப்ரான், என்று பதிந்திருப்பது மிகைஎன்றாலும் என் கவிதைக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீ காரம் என்று நம்புகிறேன்.
மனங்களைச் சென்றடைவதுதான் கவிதையின் பிறவிப்பயன். என் கவிதைகள் கடந்துவந்தது மிகச் சிலரே என்றாலும் அவர்கள் மனதைத் தொட்டு வந்திருக்கிறது என்றறியும்போது மனம்மகிழ்கிறது.
சமீபத்தில் வாசித்த கவிதைநூல்களில் உங்கள் மனதைத் தொட்டவை?
இயக்குனர், கவிஞர் பிருந்தாசாரதியின் "மீன்கள் உறங்கும்குளம்', கவிஞர் ஆரூர்தமிழ்நாடனின் "காற்றின் புழுக்கம்' ஆகிய நூல்கள்.
ஹைக்கூ உணர்வும் அனுபவமும் அற்று விடுகதைகள்போல் அல்லது மூன்றாம்வரியில் திருப்பம் என்ற புரிதலின்பொருட்டு வறட்சியாக எழுதப்படும் ஆயிரக்கணக்கான ஹைக்கூக்கள் பெருகிவரும் தமிழ் ஹைக்கூ உலகில் முழுக்க முழுக்க ஈரமான ஹைக்கூக்கள் பூத்திருக்கும் "மீன்கள் உறங்கும் குளம்' நூல் நான் மிகவும் ரசித்தது. நல்ல ஹைக்கூவின் வண்ணம் வாசித்த உடனே மனதில் ஒட்டிக்கொள்ளும். மீன்கள் உறங்கும் குளத்தின் ஹைக்கூக்கள் மனதோடு இருக்கிறது.
"காற்றின் புழுக்கம்' நூல் தலைப்பே ஒரு அழகிய முரண். ஒவ்வொரு கவிதையும் புதுக்கவிதை வீச்சும், இசைலயமும், கவிநயமும், வரிக்கு வரி முரணழகும் கொண்டு மனதைக் கொள்ளை கொள்ளும். மீண்டும் மீண்டும் படித்து ரசிக்கத் தூண்டும் மரபுக் கவிதைநூல்.. காற்றின்புழுக்கம்.!
மரபுக்கவிதை, புதுக்கவிதை, நவீனக்கவிதை, பின்நவீனக்கவிதை இவைகுறித்த உங்கள் பார்வையும் கருத்தும் என்ன?
"கவிதை என்பது ஒன்றே ஒன்றுதான், அது எந்த வகைமையிலும் இருக்கலாம். கவிதை இருக்கிறதா என்பதுதான் முக்கியம் என்று பிரதிலிபியில் கவிவேந்தர் மு. மேத்தா நேர்காணல் அளித்திருந்தார். அதில் உள்ள உண்மையை யாவரும் எளிதில் உணரலாம்.
சிறு தளைகூட தட்டாமல் இலக்கண துல்லியத்துடன் எழுதினாலும், பெரிய குழுக்கள் அமைத்து நவீனக் கவிதைகள் என்று ஆக்கிரமித்துக் கொண்டாலும், புதுக்கவிதையே கவிதை என்று பிடிவாதமாக நின்றாலும் கவிதை என்ற சுகம் இல்லாமல் போனால் என்னசெய்வது? நல்ல கவிதை தனக்கான வடிவத்தை தானே அமைத்துவிடும். மரபுக்கவிதையிலும் நவீனத்துவம் மின்னலாம். புதுக்கவிதையிலும் சந்தங்கள் சதுராடலாம். மரபும் மண்வாசமும் உணர்வும்மிகுந்து எளியநடையில் உருவாகும் நவீனக்கவிதைகள் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. எனவே கவிதை ஒன்றுதான்.
""காயம்பட்ட மனதில் கவிதைகள் களிம்பு பூசுகின்றன. எனவே கவிதைகள் மேதாவித்தனத்தைக் காட்டும் மாயாஜாலங்களையும் இருண்மையும் கொண்டிருப்பதைவிட காயங்களுக்குக் களிம்பாகவும் ஒடிந்துபோனவர்களுக்குச் சிறகுகளாகவும் மனதின் புல்வெளியில் பட்டாம்பூச்சிகளாகவும் உராய்வில் பற்றிவிடும் தீக்குச்சிகளாகவும் தெளித்தால் ஓவியங்களாகிவிடும் வண்ணங்களாகவும் .. இப்படி இப்படியாக இருக்கவேண்டும்'' என்று நான் நினைக் கிறேன்
மேலும் இலக்கியம் இலக்கியவாதிகளுக்காக அல்ல… மக்களுக்காக என்ற கருத்தையே என்றும் மனதில் கொள்கிறேன்.
ஒரு காட்டுவாசியின் கனவுகள், காட்டுச் சவாரி, மலைச்சோலை மான்களும் ஒரு வைகறைப்பாடலும், ஒரு காட்டுநதியின் கதை, பூர்வீகப்பாடலொன்று, நீலமலை படகர் வாழ்க்கைப் பாடல், என்று பல்வேறு பசுமையான கவிதைகள் உங்கள் மண்ணைச் சார்ந்தே மலர்ந்திருக்கின்றன. இனிவரும் தொகுப்புகளிலும் மலையெழிலியின் மீதான மயக்கங்கள் தொடருமா? எதிர்வரும் படைப்புகள் பற்றி சொல்லமுடியுமா?
ஏழை எளிய மக்களின் எல்லா கதைகளையும் எழுதிவருகிறேன், எல்லா நிலங்களையும், வாழ்க்கையையும் எழுதுகிறேன், சொந்த மண்ணை வாஞ்சையோடு எழுதாதவன் எழுத்தாளன் ஆகமுடியாது. மேலும் சொந்தமண்தான் ஒரு படைப்பாளியின் ஊற்றுக்கண். எங்கிருந்தாலும் ஊட்டி மலைவனவாசி என்பதே என் அடையாளம்.
எதிர்வரும் படைப்புகளில் "வண்ணத்துப் பூச்சிகளுடன் ஒரு வனவாசி' என்ற ஹைக்கூ தொகுதி தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழி நூலாக ஒரு மாதத்திற்குள் வெளிவர இருக்கிறது. அதில் பெரும்பாலானவை மலையெழிலி தந்த கவிதைகளே என்பதால் அந்நூல் மலையெழிலுக்கே சமர்ப்பணமாகிறது.
"ஒரு நதி நீந்துகிறது', 'சித்திரக்காரன்' ஆகிய கவிதைநூல்களும் 'யுகம்தாண்டும் சிறகுகள்' என்னும் கவிக்கட்டுரைத் தொகுதியும் வரும்ஆண்டில் வெளிவர வடிவாக்கம் செய்துகொண்டிருக்கிறேன். நல்ல எண்ணங்கள் நிறைவேறும் என்ற நம்பிக்கையில் பயணங்களைத் தொடரலாம்.
உங்கள் கவிப்பயணத்தில் மனதை மிகவும் பாதித்த நிகழ்வு?
ஒவ்வொரு போராளித் தமிழ்க்கவிஞனுக்கும், தமிழனுக்கும் சமகாலத்தில் தீராத சோகம்தந்தது தமிழீழப் போராளிகள் பன்னாட்டு சதிவலையில் சிக்கிமாண்டதும், மாபெரிய வீரவரலாறு முடிந்ததும், தொடர்ந்து நிகழ்ந்த தமிழினப் படுகொலையும்தான்.
"தேனையல்ல, தீக்கனவைச் சுமந்திருக்கும் பூக்கள் இவை' என்றும் 'இவைசூடும் மரணக்குப்பிகளில் நிரம்பி யிருப்பது எத்தனை வருடத்து லட்சிய தாகமோ/' என்றும் 'ஈழத்துத் தெருக்களில் யாழிசைக் கச்சேரியாம் '
என்றும் கண்ணீரோடும், ஆசைகளோடும், கனவு களோடும் பல கவிதைகளில் என் மனதை அந்நாளில் வெளிப்படுத்தியிருக்கிறேன். ஆத்மார்த்தமாக பிரார்த்தனைகள் செய்திருக்கிறேன். ஆறாத மனக் காயம் ஆகிப்போனது அந்த நீண்ட வரலாறு! எனினும் நீறுபூத்த நெருப்பாய் இருந்து அந்த விடியல் ஒருநாள் நிகழாதா என்ற கனவுமட்டும் ஏனோ இன்னும் அகலவில்லை!