-முனைவர் கடவூர் மணிமாறன்

நேர்காணல்: கவிமாமணி வெற்றிப்பேரொளி

முனைவர் கடவூர் மணிமாறன் தனித்தமிழ்ப் பாவலர். கடந்த ஐம்பது ஆண்டுகளாக அயர்வின்றி மரபுக் கவிதைகளை எழுதி வரும் இலக்கிய ஆளுமை. தமிழ்மொழி, இனம், நாடு என மும்மைப் பற்றும் முகிழ்த்தவர். ஓர் எளிய, ஏழை உழவர் குடும்பத்தில் மிகவும் பின்தங்கிய பகுதியான கருவூர் மாவட்டம், கடவூரை அடுத்துள்ள அய்யம்பாளையத்தில் 21.01.1947-இல் பிறந்தவர். 32 கவிதை நூல்களை இதுவரை எழுதியுள்ளார். இவரின் கவிதைகளை ஆய்வு செய்து இதுவரை ஐவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். திராவிட இயக்கச் சிந்தனையாளரான இவர் கருத்தரங்குகள், கவியரங்குகள், பட்டிமன்றங்கள் ஆகியவற்றில் தொடர்ந்து தமது பங்களிப்பைச் செய்துவருகிறார். இந்த எதிர்நீச்சல் கவிஞரோடு ஒரு நேர்காணல்.

Advertisment

கடவூர் மணிமாறன் என்றால் "தனித்தமிழ்ப் பாவலர்' என்னும் முத்திரை உண்டு. உங்களுக்குள் "தனித்தமிழ்ப் பற்று' விதை விழுந்ததெப்படி? வளர்த்தவர் யார்? யார்?

கடவூர் உயர்நிலைப் பள்ளியில் நான் படிக்கும்போது அரியலூர் பெரும்புலவர் சுவை. மருதவாணனார் தமிழாசிரியராகப் பணியாற்றினார். தமிழ் மறவர் பொன்னம்பலனாரைப் போன்று இவரும் தனித்தமிழ் உணர்வாளர். இயல்பாக உரையாடும் பொழுதும் வகுப்பறையில் பாடம் நடத்தும் பொழுதும் அயற் சொற்களைக் கலவாமல் பேசும் வழக்கம் உடையவர். எனது பேச்சாற்றலை அறிந்து, பள்ளி மாணவர் இலக்கிய மன்றச் செயலர் பொறுப்பை எனக்கு வழங்கி ஊக்கப்படுத்தினார். இலக்கிய மன்றம் சார்பில் நடைபெறும் அனைத்துப் போட்டிகளிலும் ஆர்வமுடன் பங்குபெறுவேன். பெரும்பாலும் முதல் அல்லது இரண்டாம் பரிசுகள் எனக்குக் கிடைக்கும்.

அவரூட்டிய தமிழ் உணர்வின் அடிப்படையிலேயே 11-ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றதும் மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியில் வித்துவான் வகுப்பில் 1963-ஆம் ஆண்டு சேர்ந்தேன். பண்டிதமணி மு. கதிரேசனார், சோழவந்தான் அரசன் சண்முகனார் போன்ற தமிழ் அறிஞர்கள் பணிபுரிந்த கல்லூரி அது. முடியரசன், புலவர் ஆ. பழனி போன்றோர் பயின்ற கல்லூரியும் அதுவே. மேலைச்சிவபுரிக்கு அருகில் உள்ள வேந்தன்பட்டி கிளை நூலகத்துக்கு நாள்தோறும் சென்று அதிகமான பொழுதை அங்குக் கழித்தேன்.

Advertisment

மறைமலையடிகள், பாவாணர், பாவேந்தர், இளங் குமரனார் ஆகியோர் நூல்கள் எனக்கு அறிமுகம் ஆயின.

தமிழ் அறிஞர்கள் பலரின் சொற்பொழிவுகளை ஆர்வத்துடன் கேட்டு மகிழ்ந்தேன். அறிஞர்கள் பலரோடு நெருங்கிப் பழகி அவர்களின் பேரன்பைப் பெற்றேன். நாமும் எதிர்காலத்தில் இவர்களைப் போல வரலாற்றில் இடம்பெற வேண்டும் என்ற உந்துதலால் தனித்தமிழ்ச் சிந்தனை என்னுள் கருக்கொண்டது. காலம் அதற்கான பல களங்களை உருவாக்கித் தந்தது. பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் தென்மொழியில் 1965-இல் எழுதத் தொடங்கினேன். இன்று வரை தனித்தமிழ்த் தடத்தில் நடந்து வருகிறேன்.

தமிழறிஞர், பல்கலைப் புலவர் கா.சு.பிள்ளை நினைவு இலக்கியக் குழுவில் இருந்து இன்றைய குளித்தலை தமிழ்ப் பேரவை வரையான உங்கள் அமைப்பு சார்ந்த பயணம் பற்றிப் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் முதன்முதலாக 1957-இல் குளித்தலை சட்டப்பேரவைத் தேர்தலிலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். குளித்தலையில் தமிழ்க் கா.சு. நினைவு இலக்கியக் குழுவை நாற்பது ஆண்டுகளாக இயக்கி வந்த தமிழ்ச்சுடர் இளமுருகு பொற்செல்வி, திருமதி பொற்செல்வி இளமுருகு குடியிருந்த இல்லமே கலைஞரின் தேர்தல் பணிமனையாக இருந்ததைப் பலரும் அறிவர். இலக்கியக் குழுவின் தலைமைப் பேராளர்களுள் ஒருவனாக இருந்து தொண்டாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஆண்டுதோறும் திசம்பர் 5, 6 நாள்களில் நடைபெறும் ஆண்டு விழாவில் தமிழ் அறிஞர்கள், பாவலர்கள், எழுத்தாளர்கள், இதழாசிரியர்கள் பலரும் பங்கேற்றுப் பெருமை சேர்த்து வந்தனர்.

அய்யா இளமுருகுபொற்செல்வியும், அவர்தம் துணைவியாரும் அடுத்தடுத்துச் சில ஆண்டுகளுக்கு முன்னர் மறைந்துவிட்ட சூழலிலில், அக்குழுவில் பணியாற்றிய தோழர்கள் ம. இராதா, அய்யா வெள்ளமுத்துவின் அன்புச் செல்வன் வெ. அறிவுக்கண்ணன், பொறிஞர் சு. சக்திவேல், கிராமியம் நாராயணன் ஆகியோருடன் இணைந்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் "தமிழ்ப் பேரவை'யைத் தொடங்கினோம். மாதந்தோறும் மூன்றாம் சனிக்கிழமை தவறாமல் இலக்கிய நிகழ்வுகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம். நான்கு ஆண்டு விழாக்களைச் சிறப்பாக நடத்தினோம். இதுவரை 49 நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமை யிலான உலகத் திருக்குறள் பேரவையின் கருவூர் மாவட்ட அமைப்பாளராகவும், கருவூர்த் தமிழ்ச் சங்கச் செயலாளராகவும், திருவையாறு ஔவைக் கோட்ட அமைச்சர்களுள் ஒருவராகவும், கடவூரை அடுத்த சேவாப்பூரில் கடந்த 50 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனமான இன்ப சேவா சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினராகவும் குளித்தலை அரிமா சங்க உறுப்பினராகவும் இயன்றாங்கு என் தமிழ்ப் பணியையும் குமுகப் பணியையும் மனநிறைவோடு ஆற்றி வருகிறேன்.

உவமைக் கவிஞர் சுரதா, பாவலரேறு பெருஞ்சித்திரனார், கவியரசர் முடியரசனார் போன்ற பெருமக்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர் நீங்கள். அதுபற்றி உங்களின் எண்ண வெளிப்பாடுகளை இயம்பலாமே.

1987, நவம்பர் 15-ஆம் நாள் கோலாலம்பூரில் மிகப்பெரிய அரங்காகிய புத்ரா உலக வணிக மையத்தில் மிகச்சிறப்பாக ஆறாம் உலகத் தமிழ் மாநாடு தொடங்கியது. கலைஞர் மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். உவமைப் பாவலர் சுரதாவோடு நானும் பங்கு பெற்றேன். அங்கேதான் உலகத் தமிழ்க் கவிஞர் பேரவை உருவானது. தலைவர் பொறுப்பைச் சுரதா ஏற்றார். ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் அமைப்பாளராக என்னை நியமித்தனர். கலைஞர் முதல்வராக இருந்தபோது கிருட்டினகிரியில் உலகத் தமிழ்க் கவிஞர் பேரவை மாநாடு நடைபெற்றது. தமிழ்நாட்டில் தலைசிறந்த நூறு பாவலர்களைத் தேர்வு செய்து அவர்கட்குக் "கவிமாமணி' விருது வழங்கப்பெற்றது. விருதாளர்களைத் தேர்வுசெய்யும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டிருந்தது. குளித்தலை வெங்கட்டராமன், பனப்பாக்கம் சீத்தா, அன்னையன்பன், தேனிரா பாண்டியன், திருக்குவளை வெற்றிப் பேரொளி போன்ற தமிழ்ப் பாவலர்களும் பங்கேற்ற அம்மாநாடு சிறப்பாக நடந்தேறியது. கிருட்டினராயபுரத்தில் நான் தொடங்கிய திருக்குறள் கழகத்தின் நிகழ்வுகட்குப் பலமுறை சுரதா வருகை தந்தார். இவையாவும் நீங்காத நினைவுகளாக நெஞ்சில் ஈரம் காயாமல் இன்னமும் மனத்தில் இளமையாகவே உள்ளது.

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் தென்மொழி 1965-இல் கரந்தைப் புலவர் கல்லூரியில் படித்தபோது எனக்கு அறிமுகமானது. அப்போது முதற்கொண்டு இன்றுவரை தொடர்ந்து தென்மொழியில் எழுத்து விதை ஊன்றி வருகிறேன். தனித்தமிழ் உணர்வைச் செதுக்கவும், பதுக்கவும் எனக்குக் களம் அமைத்துக் கொடுத்தது தென்மொழியே. பெருஞ்சித்திரனார் தொடங்கிய உலகத் தமிழின முன்னேற்றக் கழகத்தின் கரூர் மாவட்ட அமைப்பாளராகப் பணியாற்றினேன்.

kamburmanimaran

தமிழாசிரியராக நான் பணியாற்றிய குளித்தலை, பெரம்பலூர், அரவக்குறிச்சி போன்ற இடங்கட்கு அய்யாவை அழைத்து உரையாற்றச் செய்தேன். சென்னை செல்லும்போதெல்லாம் இல்லத்தில் அய்யாவைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். தொடர்ந்து தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய அய்யாவின் இதழ்களில் என் படைப்புகளை வெளியிட்டுத் தனித்தமிழ் இயக்கப் பெருவெளியில் எனக்கு ஓர் அடையாளத்தை நல்கினார் என்பதை நன்றிப் பெருக்குடன் நினைவுகூர்கிறேன்.

கவியரசு முடியரசனார் என்னைக் "கடவூர்' என்றே அழைப்பார். கரூர் நகரத்துக்கு அவரைஅழைத்து வந்து இலக்கிய நிகழ்வுகள் பலவற்றில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

அவரது "மனிதனைத் தேடுகிறேன்' என்னும் நூலை நானும் நண்பர் முனைவர் கருவூர் கன்னலும் சேர்ந்து வெளியிட்டதோடு, வெளியீட்டு விழாவையும் சிறப்பாக நடத்திப் பெருமை சேர்த்தோம்.

உங்களால் மறக்க முடியாத இலக்கிய நிகழ்வு, இலக்கிய ஆளுமை...

1982-இல் திருச்சி தேவர் மன்றத்தில் இனிய நண்பர், மரபுமாமணி, சின்னதாராபுரம் பாவலர் இறையரசனின் "குறளும் பொருளும்' நூல் வெளியீட்டு விழா, மேனாள் தமிழகச் சட்டப் பேரவைத் தலைவர் முனைவர் மு. தமிழ்க்குடிமகன் தலைமையில் நடைபெற்றது. முத்தமிழ் அறிஞர் கலைஞர் முதன்மை விருந்தினராக அவ்விழாவில் பங்கேற்றார். அப்போது அரவக்குறிச்சி அரசு மேனிலைப் பள்ளியில் முதுகலைத் தமிழாசிரி யராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அவ்விழாவில் வாழ்த்துரை வழங்கும் வாய்ப்பை எனக்கு வழங்கினர்.

திருக்குறளின் சிறப்பு, அந்த நூலிலின் யாப்பு நயம், உரைப்பா வளம் ஆகியனவற்றைத் தொகுத்தும் வகுத்தும் உரையாற்றியதைக் கூர்ந்து கேட்ட கலைஞர் விழா நிறைவில் என்னைப் பாராட்டி உரைத்ததை இன்றும் என்னால் மறக்க இயலவில்லை.

தமிழ்கூறு நல்லுலகமே மறக்க முடியாத இலக்கிய ஆளுமை முத்தமிழ் அறிஞர் கலைஞரே, கல்லூரியிலோ, பல்கலைக் கழகத்திலோ படிக்கும் வாய்ப்பில்லாத கலைஞரின் படைப்புகள் இன்று அங்கெல்லாம் பாடுபொருள்களாக, ஆய்வுக் கருதுகோள்களாகச் சிறகை விரித்துள்ளன; சிந்தனைக் களமாக செம்மாந்து தனி இருக்கையில் அமர்ந்துள்ளன.

கதைகள், கட்டுரைகள், கடிதங்கள், புதினங்கள், நாடகங்கள், பாடல்கள், திரைப்பட உரையாடல்கள், மேடைப் பொழிவுகள் அனைத்திலும் ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்பதை உலகுக்கு உணர்த்தி எண்பதாண்டுகள் எழுதிக் குவித்த இமயம்; தன்னிகரில்லாத் தமிழினத்தின் தலைவர் கலைஞரே இலக்கிய ஆளுமையாக என்றும் எண்ணி இறும்பூதெய்துகிறேன்.

தமிழில் அதிக நூல்கள் படைத்திருக்கும் பாவலர் நீங்கள், இந்த நூலாக்க விழைவு வேர்கொண்டதும் வெற்றி கண்டதும் பற்றிக் குறிப்பிடலாமே!

புலவர் கல்லூரியில் படிக்கும் நாளில் இருந்தே நூல்களைத் தொடர்ந்து வாசிக்கும் பழக்கம் என்னை வளைத்துக் கொண்டது. நூலகத்தில் அதிக நேரத்தைச் செலவிட்டு வந்தேன். பாரதிதாசன் பாடல்களில் பெரும் ஈர்ப்புக் கொண்டது என் மனம். பாவேந்தர் பாடல்களை மனப்பாடம் செய்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். அந்தச் சூழலிலில் நாமும் இத்தகைய பாடல்களை யாத்து நூல்களாக ஏன் வெளியிடக்கூடாது? என்ற உணர்வு வேர்பிடிக்கத் தொடங்கியது.

எனக்கு முதன்முதலிலில் நூல் வெளியிடும் பாதையைக் கண்டு கூட்டியவர் என் கல்லூரித் தோழர் புலவர் குறளன்பன் ஆவார். அவரின் தூண்டுதலால் 1978-இல் பெரம்பலூரில் பணியாற்றியபோது "நான் பாடுகிறேன்' என்னும் பாட்டுத் தொகுப்பு நூலை வெளியிட்டேன். அந்நூல் பரவலாகச் சென்று எனக்கொரு தனித்த அடையாளத்தைக் கொடுத்தது. பிறகு அரவக்குறிச்சி பள்ளிக்கு மாறுதலில் சென்றபோது அங்கு, மீனாட்சி அச்சக உரிமையாளரை நண்பராகப் பெற்றதில் மயக்கமா? உறக்கமா? இயற்கை வடிவங்கள், எதிர்நீச்சல் போன்ற நூல்களை வெளிக் கொணர்ந்தேன். அதன் தொடர்ச்சியாக 2018 வரை 70 நூல்களை வெளியிட்டும் பதிப்பித்தும் மாவட்ட முதன்மைப் படைப்பாளனாக என்னைத் தகவமைத்துக் கொண்டிருக்கிறேன்.

உங்கள் பாடல்களில் கற்பனை வளத்தை விடக் கருத்துச் செறிவே முந்தி வருகிறதே! குறிப்பாக அடுத்தவரை விளித்துக் கூறும், அறம் உரைக்கும், அநீதிகளைச் சாடும் போக்கு அதிகமாக உள்ளன. இது திட்டமிட்டுச் செய்யப்படுவதா? இயல்பானதா?

கற்பனை, உணர்ச்சி, கருத்து, வடிவம் ஆகிய நான்கும் ஒரு சிறந்த பாடலில் ஊடுருவி இருக்கவேண்டும் என்பது மேனாட்டார் கவிதைக்குத் தரும் இலக்கணம். இன்றைய குமுகம் பல நிலைகளிலும் சிக்கிச் சீரழிந்து தவித்தும் தடுமாறியும் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. பொலிவிழந்தும், புகழழிந்தும் புதையுண்ட இக்குமுகத்தை எப்படியாவது உயர்த்தி முந்திய நிலைக்கு மேன்மைப்படுத்திட வேண்டும் என்னும் ஆர்வத் துடிப்பு இயல்பாகவே என்னுள் ஓர் அறப்போரை முன்னெடுத்து வருகிறது. ஆதலின் கற்பனைக்குத் தரும் இடத்தை விட, கருத்துக்கும் உணர்ச்சிக்கும் வடிவத்துக்கும் (யாப்பு) முழுமையான இடத்தைத் தந்து வருகிறேன். பாவேந்தர், பெருஞ்சித்திரனார், சுரதா போன்றோரின் பாட்டுத் தடங்களில் பயணிப்ப தால் என் பாடல்கள் பெரும்பாலும் அறத்தை எடுத்துரைப்பவையாக, ஆளுமை செய்யும் கயமைப் போக்குகளை இடித்துரைப்பதாக நலம் சேர்க்கும் நாட்டமுடன் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

உங்களுடைய அயலகப் பயணப் பட்டறிவுகள் எத்தகையன?

1987-இல் மலேசிய நாட்டின் தலைநகர் கோலாம்பூரில் நடைபெற்ற ஆறாம் உலகத் தமிழ் மாநாட்டில் பங்கேற்பதற்காகத் தமிழ்நாட்டில் இருந்து சென்ற பேராளர்களுள் ஒருவனாகச் சென்று, "திருக்குறளும் அறிவியல் சிந்தனைகளும்' என்னும் ஆய்வுக் கட்டுரையை வழங்கி அனைவரின் பாராட்டுகளைப் பெற்றேன்.

பன்னாட்டுக் கருத்தரங்குகளில் பங்கேற்க அடிக்கடி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகட்கு அடிக்கடி சென்று வருகிறேன். என் மகள் முனைவர் கனிமொழி இலண்டனில் தன் கணவர் மற்றும் மகனுடன் ஓராண்டுக் காலம் தங்கியிருந்தபோது என் துணைவியாருடன் 2016 சூன் திங்களில் அங்குச் சென்றேன். இலண்டனில் செயல்படும் தமிழர் முன்னேற்றக் கழகம் நடத்தி வரும் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியின் 40-ஆம் ஆண்டு விழாவில் முதன்மை விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றினேன்.

ஈழத்தமிழர்களின் குழந்தைகளே பெரும்பாலும் அப்பள்ளியில் பயில்கின்றனர். தமிழ் மரபும் பண்பாடும் தழைத்தோங்கும் வண்ணம் அப்பள்ளியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளைக் கண்ணுற்றுப் பெரிதும் வியந்தேன்.

இலண்டனில் இருந்து பெல்சியம், செருமனி, சுவிட்சர்லாந்து, பிரான்சு முதலிலிய அய்ரோப்பிய நாடுகளுக்கும் சென்று வருகிற அரிய வாய்ப்புக் கிடைத்தது. அங்கு வாழ்வோரின் கட்டுப்பாடுமிக்க வாழ்வியல் முறைகளையும், கடமையுணர்ச்சியையும் கண்டு வியந்து நம் நாட்டினரும் இத்தகு மாற்றத்தை எப்போது பெறுவாரெனும் ஏக்கம் என்னுள் குடிகொண்டது.

2018-சனவரி 26-ஆம் நாள் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கச் சார்பில் 30 பேராளர்களுடன் இலங்கை சென்றேன். கொழும்பு, யாழ்ப்பாணம், திரிகோணமலை, நுவரேலியா, கண்டி, கதிர்காமம், வல்வெட்டித்துறை, காங்கேசன்துறை, முல்லைத்தீவு, கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு (போரில் உறுப்புகளை இழந்த மாற்றுத் திறனாளிகள் பாசறை) போன்ற இடங்களைப் பார்த்தோம். சீனர்களின் உதவியால் அமைந்த நான்கு வழிச்சாலைகள் அந்நாட்டுக்குப் புதிய பொலிலிவைச் சேர்த்துள்ளது. 2018 ஏப்ரல் 21-இல் சிங்கப்பூரில் "தமிழர் இலக்கியக் களம்' சார்பில் பேராசிரியர் முனைவர் இரத்தின வேங்கடேசன் ஏற்பாட்டில் பாவேந்தர் விழாவில் பங்கேற்று உரையாற்றிச் சிங்கப்பூர் வாழ் தமிழன்பர்களின் மனத்தில் இடம்பிடித்தேன்.

இங்கிலாந்து, இலங்கைச் சுற்றுலா குறித்த நூல்களை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

உங்களின் ஆசிரியப் பணி, ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் பணி, கல்லூரிப் பேராசிரியர் பணி இவற்றில் சாதித்தவற்றில் சில...

அன்றைய செங்கற்பட்டு மாவட்டம், நெல்லிமரத்துக்கண்டிகை அரசு உயர்நிலைப் பள்ளியில் (ஆந்திர மாநிலம், சத்தியவேடுக்கு அருகில் உள்ள ஊர்) 1972-இல் தமிழாசிரியப் பணியை முதன்முதலாகத் தொடங்கினேன். பின்னர் அம்மாவட்டத்தில் உள்ள ஊத்துக்கோட்டை, திருவாலங்காடு பள்ளிகளிலும் பணியாற்றினேன். பின்னர் மனமொப்பு மாறுதல் மூலம் பெரம்பலூர், அரவக்குறிச்சி அரசு மேனிலைப் பள்ளிகளுக்குப் பணியாற்ற வந்தேன்.

அரவக்குறிச்சி பள்ளியில் பணியாற்றியபோது நடைபெற்ற ஒரு நிகழ்வு தமிழ்நாட்டளவில் என்னை அறியச் செய்தது. திருச்செந்தூர் கோயில் அறங்காவலர் சுப்பிரமணிய பிள்ளையின் கொலைக்காக நீதி கேட்டு மதுரையில் தொடங்கித் திருச்செந்தூர் வரை தமது கட்சித் தொண்டர்களுடன் கலைஞர் பயணம் மேற்கொண்டார்.

அதன்பொருட்டு "நீதி கேட்ட நெடிய பயணம்' என்னும் கவிதைத் தொகுப்பு நூலை வெளியிட்டமைக்காக என்னோடு தமிழாசிரியர்கள் ஐவர் பணியிடை நீக்கம் செய்யப் பெற்றோம். ஆறு திங்களுக்குப் பிறகு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தடையாணை பெற்று மீண்டும் அவரவர் பணியாற்றிய பள்ளிகளில் பணியில் சேர்ந்தோம். அடுத்த தேர்தலில் கழகம் வெற்றி பெற்று பேராசிரியர் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றார். அப்போது எங்கள் பணியிடை நீக்கக் காலத்தைப் பணிக்காலமாக ஏற்று ஆணை பிறப்பித்துப் பணிமுறிவைச் சரிசெய்து உதவினார்கள்.

அரசுப் பணி ஓய்வுக்குப் பிறகு கோவை கற்பகம் பல்கலைக் கழகத் தமிழ்த் துறையில் சொல் வங்கிப் பிரிவில் உதவிப் பேராசிரியராகச் சில காலம் பணியாற்றினேன். அப்போது சங்க இலக்கியம் தொடங்கி இன்று வரை புழக்கத்தில் உள்ள நாற்பதினா யிரம் சொற்களை அட்டவணைப்படுத்திச் சில தொகுதிகளை உருவாக்கினேன். நூலாக்கம் பெறும் நிலையில் அங்கிருந்து என்னை விடுவித்துக்கொள்ள வேண்டிய சூழல் நேர்ந்துவிட்டது.

1985 முதல் 1993 ஆம் ஆண்டு வரை குளித்தலை அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளியில் பணியாற்றினேன். 1990 இல் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 'பாரதிதாசன் பெருஞ்சித்திரனார் பாடல்கள் ஓர் ஒப்பாய்வு' என்னும் தலைப்பிலான ஆய்வுக்காக முனைவர் பட்டம் பெற்றேன். அப்போது பள்ளியின் தலைமையாசிரியராக இருந்த அய்யா து.வெள்ளமுத்து மிகப்பெரிய அளவில் பாராட்டு விழா நடத்திப் பெருமை சேர்த்தார்கள்.

1993-இல் அரசு மேனிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணி உயர்வு பெற்று அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள மேலப்பரளச்சி மேனிலைப் பள்ளிக்குச் சென்றேன். மிகக்குறுகிய காலத்தில் அங்கிருந்து மாயனூர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்துக்கு (உஒஊப) முதுநிலை விரிவுரையாளராகப் பணியிற் சேர்ந்தேன். 2000-இல் நாமக்கல் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வராகப் பணியிற் சேர்ந்த நான் மீண்டும் மாயனூர்க்கே முதல்வராக வந்து பொறுப்பேற்றேன்.

அப்போது நடப்பில் இருந்த "நமக்கு நாமே' திட்டத்தின் மூலம் நன்கொடையாக இரண்டு இலட்சம் திரட்டி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினேன். எட்டு லட்சம் உருவா மதிப்பீட்டில் ஆறு வகுப்பறைகள் கொண்ட பெரிய கட்டடத்தைக் கட்ட ஆணை பெறப் பட்டுக் கட்டிடமும் கட்டி முடிக்கப் பெற்றது.

அத்துடன் ஆழ்துளைக் கிணற்றின் மூலம் குடிநீர் ஏந்து, முட்புதர் மண்டிய காட்டுப் பகுதிகளைத் தூய்மைப்படுத்தி மரக்கன்றுகள் நட்டு வைத்தமை போன்ற பல செயல்களை நிறைவேற்றிச் சாதனைகள் படைத்தேன்.

பாடநூற் குழுவில் உங்கள் பங்களிப்பு...?

1980-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டுப் பாடநூற் கழக ஆசிரியர் குழுவில் இடம் பெற்று இரண்டாம் வகுப்பு, நான்காம் வகுப்புத் தமிழ்ப் பாடநூல்களை எழுதினேன்.

அடுத்த சில ஆண்டுகளில் ஏழு, எட்டாம் வகுப்பு களுக்கான தமிழ்ப்பாட நூல்களையும் எழுதினேன்.

கலைஞர் முதல்வராக இருந்தபோது சமச்சீர்க்கல்வி நடைமுறைக்கு வந்தது. அப்போது ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப்பாட நூலிலின் மேலாய்வாளராகப் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. மேலும் பல வகுப்புத் தமிழ்ப்பாட நூல்களில் எனது பாடல்களும் இடம் பெற்றன. தமிழுக்குச் செம்மொழித் தகுதியை நடுவணரசு வழங்கிய பிறகு எழுதப் பெற்ற புதிய தமிழ்ப்பாட நூல்களில் செம்மொழிக்கான உயர் தகுதிகள் குறித்த விளக்கங்களைப் பாட நூல்களில் பதிவு செய்திடும் வாய்ப்பை முழுமை யாக நிறைவேற்றி அப்போதைய பள்ளிக் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களின் பாராட்டை யும், கல்வியாளர்களின் பாராட்டுகளையும் பெற்றேன்.

உங்களின் இளமைப்பருவம், குடும்பம் பற்றி நாங்கள் தெரிந்து கொள்ளலாமா?

கரூர் மாவட்டம், கடவூரை அடுத்த அய்யம்பாளையம் நான் பிறந்த சிற்றூர். திரு.கு.பழனியப்பனார், திருமதி கன்னியம்மாள் என் பெற்றோர் ஆவர். நான்கு பக்கங்களிலும் மலைகளால் சூழப்பட்டுள்ள எழில்மேவும் எங்கள் பகுதிக்கு உள் மாகாணம் என்றொரு பெயரும் உண்டு. நாடு விடுதலை பெற்று எழுபது ஆண்டுகளுக்குப் பிறகும் விடுதலை வெளிச்சம் போதிய அளவில் விழாத, மிகவும் பின்தங்கிய எம்பகுதி மக்கள் ஏழ்மையில் உழன்று மனநிறைவில்லாத வாழ்க்கைச் சூழலில் போராடிக் கொண்டுள்ளனர்.

கிணற்று நீரை மட்டுமே நம்பி உழவுத் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். வேறு எந்தத் தொழிலுக்கும் வாய்ப்பில்லாத சூழலில் ஆடு, மாடுகளை வளர்ப்பதே முதன்மைப் பணியாகக் கொண்டுள்ளனர். பெரும்பாலும் வெளியூர்களுக்கெல்லாம் சென்று அலைந்து திரியாமல் கூடுமானவரை உள்ளூரிலேயே மணமகன், மணமகளைத் தேர்வு செய்து திருமணம் முடிப்பதில் கவனமாக இருப்பர். இரண்டாம் வகுப்பு வரை உள்ளூரில் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்த நான், மூன்றாம் வகுப்பு முதல் 11-ஆம் வகுப்பு வரை நான்கு கல் தொலைவுள்ள கடவூர்க்கு நடந்து சென்றே படித்து வந்தேன். வழியில் இரண்டு காட்டாறுகள் உள்ளன.

செய்தித்தாள் படிக்கவோ, வானொலிலி கேட்கவோ, திரைப்படங்கள் பார்க்கவோ, எரிவாயு அடுப்புக்கோ வழியில்லை. மின்விளக்கும் இல்லை. எண்ணெய் விளக்கிலேயே படித்து என் பள்ளிப் பருவத்தை முடித்தேன். மூன்று வேளையும் சோளச் சோறு, கம்புச் சோறு தான். மாதம் ஒருமுறை அமாவாசை நாளில் மட்டுமே அரிசிச் சோற்றைக் கண்ணில் காண்போம். தோசை, பணியாரம் கூடச் சோள மாவில் தான் செய்து தருவார்கள். ஒதுக்கப்பட்ட வேலைகளைச் செய்யாவிடின், "என்ன படிச்சிட்டு கலெக்டர் வேலைக்கா போகப் போற' என்ற அப்பாவின் கடுஞ்சொல் கணையாக வந்து காதில் விழும். என் அம்மாவின் அரவணைப்பிலேயே பள்ளிப் படிப்பையும் பின்னர் கல்லூரிப் படிப்பையும் தொடர்ந்தேன்.

எனக்கு அறுவர் தமக்கையர். தம்பியர் இருவர். நான் குடும்பத்தில் ஏழாவது பிள்ளை; முதல் ஆண் குழந்தை. அந்தப் பாசத்தில் குடும்பத்தில் "பெரியதம்பி' என்னும் செல்லப் பெயரால் என் அக்காள்கள் அன்புடன் என்னை அழைத்து வருகின்றனர். என் பெற்றோர்க்குப் பத்துப் பிள்ளைகள்.

என் தாத்தா கருப்பண்ண பிள்ளை அக்காலத்துக்குக் கவிராயர். பள்ளிப் படிப்பைத் தொடராமல், தாமாகவே சுற்று "ஆசுகவி' போல அழகிய நாட்டுப்புறப் பாடல்களையும், சிந்துப் பாடல்களையும் எழுதிக் குவித்தவர்.

என் மகள் கனிமொழி, என்னைப் போலவே தமிழ் இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளார். பேராசிரியர் பணிக்குச் செல்ல இருக்கிறார்.

என் மாப்பிள்ளை கி.மோகன் ஒரு மென்பொறியாளர். சென்னையில் தனியார் குழுமம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். அவர்கள் மகன் பெயர் நிகழ். என் மகன் கலைச்செல்வன் ஒரு பொறியாளர். பெங்களூரில் தனியார் குழுமம் ஒன்றில் பணியாற்றுகிறார். அவருக்கு மகிழன் என்னும் மகனும், கயல்விழி என்னும் மகளும் உள்ளனர். என் பெற்றோரைப்போல் இல்லாமல் எனக்கும் என் பிள்ளைகள் இருவருக்கும் அளவான குடும்பம் என்பது தனி மகிழ்ச்சிக்குரியது.

எதிர்காலத்தில் செயற்படுத்த வேண்டிய சிறப்புத் திட்டம் ஏதும் உங்கள் மனத்தில் உள்ளதா?

"எமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்குழைத்தல்; இமைப்பொழுதும் சோராதிருத்தல்' என்னும் பாரதி நோக்கில் என் இயக்கம் தொடர்கிறது. இல்லத்தில் சிறிது சிறிதாகச் சேர்த்து வைத்துள்ள 15000 நூல்கள், அன்றாடம் மிகுதியான நேரத்தை என்னோடு பகிர்ந்து கொள்கின்றன. எனக்குத் தமிழறிவையும் தமிழுணர் வையும் ஊட்டி வளர்த்த ஆசிரியப் பெருமக்கள் இருவரும் இப்போது இல்லை.

"தம்மின் தம்மக்கள் அறிவுடைமை' என்னும் குறளை நான் அவர்கள் இருவரோடு இருந்த போதெல்லாம் அவைகளில் அடிக்கடி கூறி மகிழ்ந்ததை இன்றும் எண்ணிப் பார்க்கிறேன். சிலப்பதிகாரம், இராவண காவியம் போல ஒரு காப்பியத்தைப் படைக்க வேண்டும் என அவர்கள் இருவருமே எனக்கு அன்புக் கட்டளையை விடுத்துச் சென்றுள்ளார்கள். அதனை எப்படியும் நிறைவேற்ற வேண்டும். நிறைவேற்றுவேன் என்று உறுதியாக நம்புகிறேன். புகழ்நிலா, பொன்னி ஆகிய பாவியங்களைப் படைத்துள்ளேன்.

அய்யா இளமுருகுபொற்செல்வி, அம்மா பொற்செல்வி இளமுருகு ஆகியோரின் பெருமுயற்சியாலும், பேருழைப்பாலும் நடத்தி வந்த தமிழ்க் கா.சு.நினைவு இலக்கியக் குழு வாயிலாக நாற்பது ஆண்டுகளாக நற்றமிழ்ப் பயிரை வளர்த்த இடம் குளித்தலை.

அவ்விலக்கியக் குழுவின் மீட்டுருவாக்கமாக நணபர்கள் துணையோடு தொடங்கியுள்ள தமிழ்ப் பேரவை தொடர்ந்து செயல்பட வேண்டும் எனக்குப் பிறகு என் பெயரைச் சொல்லும் நூறு நூல்களையாவது வெளியிட்டுவிட வேண்டுமென்பது என் தணியாத வேட்கை. 