குழந்தைகளின் மனம் குதூகலமானது. புதிய புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் மிக்கது. நல்ல நிலம் போன்ற அவர்களின் மனதிற்குள் பூவிதைகளைத் தூவுவதற்கு பதிலாக விஷ விதைகளை விதைக்கத் தொடங்கிவிட்டார்கள் சமூக விரோதிகள். இதை கவனிக்க மறந்ததால் இன்று பெரும் பெரும் சிக்கல்களைச் சந்தித்து வருகிறோம். சம காலத்தின் அறிவியல் வளர்ச்சி கைப்பேசிக்குள் உலகத்தைக் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டது.

அது குழந்தைகளிடம் இருந்து குழந்தைத் தன்மையைப் பறித்துக் கொண்டிருக்கிறது. வண்ணத்துப் பூச்சிகளை நிலாவை, நட்சத்திரங்களை , மலர்களை இரசிக்க வேண்டிய இடத்தில், வீடியோ கேம் என்னும் பூதத்தின் கையில் குழந்தைகள் சிக்கி வருகிறார்கள். அழுகின்ற குழந்தைக்கு கிலுகிலுப்பை காட்டிய காலங்கள் முடிந்துவிட்டது நம் துயரகாலத்தின் அறிகுறியாகும்..

ddd

இப்போது பெரியவர்கள் முதல் கைக்குழந்தைகள் வரை இணைய மாயைக்குள் சிக்கித் தவிக்கின்றோம்.

Advertisment

குழந்தைகள் இதை எங்கிருந்து கற்றுக்கொள்கிறார்கள்? வீட்டில் இருக்கும் பெற்றோர்களின் செயல்பாட்டில் இருந்தே கற்றுக் கொள்கிறார்கள். அறிவுரைகளால் மட்டுமே குழந்தைகளை வழிநடத்த இயலாது. அனுபவங்களே வாழ்வை வழிநடத்துகின்றன. இன்று குழ்தைகளுக்கு எதிரான குற்றங்கள், எல்லாப்பக்கமும் பெருகிவருவது காலக்கொடுமை. அதனை கடுமையாக எதிர்க்கவேண்டிய நிர்ந்தத்தில் நாம் நின்றுகொண்டிருக்கிறோம்.

நம் பெண் குழந்தைகளையும் நல்வழிப்படுத்துவார்கள் என்று நம்பி, மிகவும் உயர்ந்த நிலையில் புகழ் பெற்றிருக்கும் பள்ளிக் கூடங்களிடம் ஒப்படைக்கிறோம். வழிகாட்டும் இடத்தில் இருக்கும் ஒரு சில ஆசிரியர்களே அங்கு தசை வேட்டை நடத்துகிறார்கள். குழந்தைகளை அரட்டி மிரட்டி காம இச்சைகளுக்குப் பயன்படுத்தி வருவதோடு, ஆபாசச் சுவையையும் கற்றுத்தர முயல்கிறார்கள்.

அப்படி ஒரு அத்துமீறல் நிகழும்போது, அதை அவர்கள் பெற்றோர்களிடம் கூட வெளிப் படுத்திவிடாமல் இருக்கக் காரணங்கள் என்னவெனக் கண்டறியப்பட வேண்டும்.

Advertisment

உயிர்பறிக்கும் போர்களில் கூட அறங்கள் பின்பற்றப்பட்டதாக நம் பழந்தமிழ் இலக்கியங்கள் பேசுகின்றன. போர்களில் குழந்தைகள், பெண்கள், வயது முதிர்ந்தவர்கள், ஆசிரியர்கள் கொல்லப் படக்கூடாது என்கிற உயர்ந்த நெறிகள் பின்பற்றபட்டன. நுகர்வு வெறியின் உச்சமாகத் திகழும் இன்றைய காலகட்டம் எவரையும் விட்டுவிடுவதாகத் தெரியவில்லை. காமத்தின் இன்பநுகர்வுக்கு சிறுமலர்களைப் போல் இருக்கும் சிறுவர், சிறுமிகளின் வாழ்வு சிதைக்கப்படுகிறது. அத்தகைய பஞ்சமா பாதகத்திற்கு ஒரு சில ஆசிரியர்கள் மட்டும் இன்றி, ஆசிரியைகளும் துணை போகிறார்கள். கல்வித் தந்தைகள் சிலரும் இதற்குக் காரணமாக இருக்கிறார்கள். கடவுள் வேடம் போடும் சிவசங்கரன்களும் கயமைத்தனத்தை அரங்கேற்றி வருகிறார்கள். இவற்றைவிடவும் கொடுமை உண்டா?

cc

குழந்தைகளை வேட்டையாடும் மிருகங்களை அம்பலப்படுத்தி சட்ட நடவடிக்கைக்கு சற்றும் தாமதிக்காமல் நாம் உட்படுத்தத் துணியவேண்டும். ஆபாச வேட்டைக்கு உதவுகிற கல்வி நிறுவனங்களை அடையாளம் கண்டு, அவற்றைப் புறக்கணிக்கவும் நாம் அணிதிரள வேண்டும்.

பணம் சம்பாதிக்கவேண்டும் என்கிற வேட்கையில் கணவனும் மனைவியும் வேலைக்கு செல்கிற வீடுகளில் கனிந்த உரையாடலுக்கான நேரம் வாய்ப்பதில்லை. அடுக்குமாடிக் குடியிருப்பில் வளரும் குழந்தைகள் சக குழந்தைகளோடு பழகும் வாய்ப்பைப் பெற்றோர் கள் ஏற்படுத்தித் தருவதில்லை. இதுபோன்ற செயல்கள் குழந்தைகள் மனதில் மகிழ்ச்ச்சிக்குப் பதிலாக வெறுமையை உண்டு பண்ணுகின்றன். குழந்தைகளின் விருப்பம் சார்ந்த உணவு, உடை, போன்ற தேவைகளை நிறைவேற்றிவிட்டாலே போதும். அதைத் தாண்டிய மனத் தேவைகள் இருப்பதில்லை என்று நம்புகிறோம்.v உண்மையில் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தனிப்பட்ட கனவுகள் இருக்கின்றன. அதை அச்சமின்றி வெளிப்படுத்த குழந்தைகளால் முடிவது இல்லை. கண்டிப்பின் பெயரால், மதிப்பெண்களின் பெயரால், மிரட்டப் படும் சூழல் ஒவ்வோரு வீடுகளிலும் நிகழ்கிறது. மனத்தடையின்றி பேசும் சூழல் வாய்க்காத குழந்தைகளால் அத்துமீறல் நிகழ்ந்தால் கூட அதை சொல்லும் வழி வகையை நடைமுறையில் அறிவது இல்லை.

இத்தகைய சூழலை மிகவும் சாமர்த்தியமாகப் பயன்படுத்திக் கொண்டு குழந்தைகளை மிகவும் தவறா கப் பயன்படுத்த இயலுகிறது. அதைக்கண்டுணர நுகர்வு வெறியில் பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் பெற்றோர்களுக்கு சாத்தியங்கள் இல்லை. தனித்து இருக்கும் வேளையில் குழந்தைகள் தங்கள் நேரத்தை எப்படி செலவழிக்கிறார் கள்? என்கிற கேள்விக்கு நம்மில் பலருக்கும் பதில் தெரியவில்லை. கூட்டுக் குடும்ப சூழல் முற்றிலுமாக அழிந்து வருவதும் இதற்கு மிக முக்கியமான காரணங்கள் எனலாம்.

எப்போதும் குழந்தைகளின் உலகம் மிகவும் தனித்துவமானது. ஒன்றைப் புதிதாகக் கற்றுக்கொள் வதில் அபாரமான ஆற்றல் கொண்டது. அத்தகைய பால்யத்தை சரியான பயன்படுத்திக் கொண்டவர்கள் மட்டுமே சமூகத்தில் மிகச்சிறந்த ஆளுமைகளாக பின்னாளில் வரக்கூடும். உயர்ந்த லட்சியங்களுக்கான கனவு தோன்றும் வேளையில் கவனச்சிதறல் கொண்ட குழந்தைகள் குறிப்பிடத்தக்க திறமை மிக்கவர்களாக உருவாவது இல்லை.

விதைக்கிற காலத்தில் வெளியூர் சென்றுவிட்டு, அறுவடை நாட்களில் ஏமாற்றத்தை அனுபவிக்கக் காத்திருக்கிறோம். விஞ்ஞானத்தின் பெயரால் எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு இருக் கின்றன. அதற்கு இணையான ஏமாற் றங்களும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இயல்பு வாழ்க்கையில் இருந்து தினமும் வெளியேறிக்கொண்டே இருக்கிறோம்.

*

குழந்தைகள் தங்களைப் பெரியவர்கள் போல் கருதிக்கொள்ளும் மனப்போக்கை இரசித்து வருகிறோம். உண்மையில் இது இரசிக்கத்தக்க விஷயம் அல்ல. வயதுக்கு சரியான வாழ்க்கை வாழவேண்டும் என்பதே சரியான உளவியல் எனலாம். இத்தகைய மனப்போக்கு இன்றைய நிகழ்கால ஊடகங்களாலும், இணையதளத்தின் பிரம்மாண்ட வளர்ச்சியாலும் செயற்கையாக உருவாக்கப் படுகிறது.

இதை அறிவார்ந்த செயல்பாடாகக் கருதி ஏமாந்து போகிறோம். பருவம் தப்பிய பெருமழை பயிர்களுக்குப் பயன்படாதது போலவே, இதனால் எவ்வித நன்மையும் நிகழாது. காமம் குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டிய பருவத்தில் அறிந்துகொள்ளாமல், முன்கூட்டியே தெரிந்து கொள்வதால், மனதளவில் மிகப்பெரிய சிதைவுகள் குழந்தைகளுக்கு தோன்றக் கூடும்.

இணையதளத்தின் காணொளிக் காட்சிகள் ஒவ்வொரு அலைபேசியிலும் ஆயிரக்கணக்கில் உள்ளன. ஆண், பெண் உடல் குறித்த இரகசி யத் திரைவிலகத் தொடங்கு கிறது. காணாக் கூடாத காட்சிகளின் முறை யற்ற ஆபாசங்கள் கதவு களின்றி திறந்து கிடக்கின்றன். அதைக் காண்கின்ற குழந்தைப் பருவம் அதீத மனமுதிர்ச்சியை அடைவது கூட, உரிய பருவத்தில் வாழ்வை இரசிக்க இயலாத தருணங்களுக்கு இட்டுச்செல்கின்றன.

dd

அலைபேசியைக் குழந்தைகள் கையில் கொடுக்காதீர்கள் என்றும் நம்மால் அறிவுறுத்த இயலவில்லை. கல்வி சார்ந்த இணைய வகுப்பு இன்றைய காலகட்டத்தில் அவசியமாகிறது.

அப்படியென்றால் என்னதான் செய்வது? என்று நீங்கள் கேட்கலாம். குழந்தைகளை உங்கள் அருகாமையிலேயே இருக்கச் செய்யுங்கள். அன்பின் வழியாக தொடர்ந்து கண்காணியுங்கள் என்பதைத் தவிர மாற்றுவழிகள் நடைமுறையில் இல்லை.

குழந்தைகளின் தனித்திறன்களைக் கண்டறிந்து உற்சாகப்படுத்தும் பெற்றோர்களின் மனப்போக்கு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. பெருநகரங்களில் வசிக்கும் குழந்தைகள் விளையாட அவர்களின் வசிப்பிடத்திற்கு அருகாமையில் மைதானங்கள் இல்லை. விளையாட்டு மைதானங்கள் இருந்தாலும் வீடுகளில் யாரும் விரும்பி அனுப்புவது இல்லை. ஒரேமாதிரி வெட்டி வளர்க்கப்படும் குரோட்டன்ஸ் செடிகளைப் போல, பிராய்லர் கோழிகளைப் போல அடைபட்டு வளர்க்கப்படுகிறார் கள்.

இதன் எதிர் விளைவாகவே வீடியோகேம் போன்ற விளையாட்டுகளில் இளம்வயதுப் பிள்ளைகள் ஈடுபடுகிறார்கள். அவர்களுக்கு பப்ஜி மதன் போன்ற இணையதள சூதாட்ட அரக்கர்கள் கதாநாயகனாகக் காட்சித் தருகிறார்கள். அடிப்படையி ல்வீடியோ கேம் விளையாட்டுக்கும் வன்முறை வெறியாட்டத்தை கதாநாயகனின் சாகசமாக சித்திரிக்கும் திரைப்படத்திற்கும் மிக நுட்பமான வேறுபாடுகள் உண்டு. கதாநாயகன் தனி ஒருவனாகப் பறந்து பறந்து தாக்கும் சண்டைக் காட்சிகளை ஒருவன் வியந்து பார்த்தாலும், அதில் பார்வையாளனின் செயல்பாடுகள் ஒன்று மில்லை. ஆனால், வீடியோ கேமில் விளையாடும் ஒரு குழந்தை தன்னையே கதாநாயகனாகக் கருதிக்கொண்டு ஓடும் காரைத் துரத்துகிறான்.

தப்பிச்செல்பவனைத் துப்பாக்கியால் சுடுகிறான்.

வன்முறைக்காட்சிகள் தோன்றும் போது, அதை நிகழ்த்திக்காட்டுகிற சாகச வீரனாகத் தன்னையே கருதிக்கொள்வது மிகவும் ஆபத்தான மனநிலையை உருவாக்குகிறது இதைவிடவும் கொடுமை பப்ஜி மதனின் ஆட்டம்தான். இணைய விளையாட்டு விளையாட விரும்பும் குழந்தைகளை, கெட்ட வார்த்தைகளை சரளமாகப் பேசி, அதில் எந்தத் தவறும் இல்லை என்று அவன், நிலை நாட்ட முயன்றிருக்கிறான். போதாக்குறைக்கு அவன் மனைவியும் இந்தக் கேடுகெட்ட செயலில் பார்ட்னராகி இருக்கிறாள். இவர்கள் ஆபாச உரையாடல்கள், ஆபாசப் படப் பரிமாற்றம் என்று திரையுலகில் மிக மோசமான வித்தைகளைக் காட்டியிருக்கிறான். அவனின் மூடத்தனமான மூளைச்சலவை, அவர்களின் மூளையை அழுக்காக்கி வந்ததை, என்ன செய்து நிவர்த்தி செய்வது. குழந்தைகளைக் குறிவைக்கும் பப்ஜி மதனைப் போன்ற இணைய தள அரக்கர்கள் இன்னும் இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கிறார் கள். அவர்களை எல்லாம் இனம்கண்டு அரசு உடனடியாக ஒடுக்கவேண்டும் என்பது எல்லோரின் கோரிக்கையாகும்.

இப்படிப்பட்டவர்களிடம் குழந்தைகள் சிக்காதபடி, நாம் ஒவ்வொருவரும் முயற்சிகளைக் கையில் எடுக்கவேண்டு. தனிமையில் குழந்தைகள் இருக்க நேர்கின்ற சூழ்நிலையை மாற்றி அமைக்கவேண்டும். கூடி விளையாடுகின்ற உடல் பயிற்சிக்குக் காரணமாக அமையும் விளையாட்டுக்களை ஊக்கப்படுத்த வேண்டும். குறிப்பாகப் பெண் குழந்தைகளைத் தவறான நோக்கத்தில் தொட்டுப் பேசும் பாலியல் அத்து மீறல்கள் நிகழாத வண்ணம் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும்படி கற்றுக்கொடுக்கவேண்டும். தன்னை யாரேனும் அப்படி நடத்தினால், அதை குறைந்தபட்சம் பெற்றோர்களுடனாவது வெளிப்படையாகப் பேசி விவாதித்துத் தீர்வுகாண வேண்டும்.

குழந்தைகளை இளம்பருவத்தில் கவனிக்கத் தவறிவிட்டால், நாளைய சமூக அமைப்பில் குற்றவாளிகள் உருவாகத் துணைப் போகும் அவலநிலைக்கு ஆளாக நேரிடும். மாற்றம் என்பது எங்கோ இருந்து தொடங்கப் போவது இல்லை. நம்மிடம் இருந்து தொடங்காலாமே? காலம் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை. குழந்தைப் பருவம் இன்னொருமுறை நிகழப்போவதும் இல்லை. நல்ல சமூகத்தைக் கட்டமைக்க முன்னத்தி ஏராக நாம் இருக்கவேண்டும்.

திரைப்படம் என்கிற வசீகரக் கலைவடிவம், பார்ப்பவர் மனதைப் பெரிய அளவில் பாதிக்கும் என்பதனால், அதைக் கட்டுப்படுத்தத் தணிக்கை செய்து சான்றிதழ் பெறவேண்டும் என்கிற அரசு நடைமுறை உள்ளது. அத்தகைய கட்டுப்பாடுகள் ஏதும் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கும் இணையதளங்களுக்கும் இல்லாமல் போனது நம் காலத்தின் மாபெரும் சாபக்கேடு எனலாம். திரைப்படம் என்பது நாம் தேடிப் போய்ப்பார்க்கும் நிலையில் இருப்பதால், அதன் தீமைகளில் இருந்து குழந்தைகளைக் காப்பாற்ற நடைமுறைச் சாத்தியங்கள் இருந்தன. ஆனால், நம்வீடு தேடிவரும் இது போன்ற தீமைகளைக் கட்டுப்படுத்தமனக் கட்டுப்பாட்டைத் தவிர்த்து வேறு தணிக்கைமுறை இல்லை. அதனால் தான் குழந்தைகளின் தனித்த உலகம் இன்று தத்தளிக்கும் மன உலகமாக மாற்றப்பட்டுவிட்டது. அறிவியலைத் தவறாகக் கையாள்பவர்களால் அது, ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்விற்குள்ளும் புகுந்து நம் அந்தரங்க வாழ்வை அசைத்துப் பார்க்கிறது.

தடுக்க இயலாத தீமைகள் தர்மங்களாக மாறிவிடும் அபாயம் சூழ்ந்து உள்ளது. எல்லாவற்றையும் விதியின் பெயரால், கர்மாவின் பெயரால் கடந்து செல்ல இயலாது. அதிகாரத்தை நோக்கிக் கேள்வி கேட்பதன் உளவியல் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. அதிலும் குறிப்பாகப் பெண் குழந்தைகள் மீது பாலியல் அத்துமீறல் நிகழ்ந்துவிட்டால், குற்றவாளிகள் கூட பதுங்குவது இல்லை. பயம்கொள்வதும் இல்லை. அவர்களுக்குக் கேடயமாக மதவாத சக்திகளும், சாதித்துவ சக்திகளும் களமிறங்கிவிடுகின்றன. இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள்தான் பதுங்குகிறார்கள். மானம், மரியாதை முக்கியம் என்கிற சமூக அச்சத்தில் விலகிச்செல்கிறார்கள். இதுதான் குற்றவாளிகள் மேலும் மேலும் தவறு செய்ய ஊக்கமளிக்கிறது.

புதியதோர் உலகம் செய்வோம் என்பதன் பொருள் குழந்தைகளின் உலகத்தைப் பொறுப்போடு கட்டமைப்பதையே குறிக்கின்றது.

’புதுத் தளிர்களால் கொண்டாடக் காத்திருக்கிறது தரு;

ஒரு பாடலுடன் வர இருக்கிறது குயில்’

-என்கிற கவிஞர் இன்குலாப்பின் கவிதையைப் பாடி, புதியதோர் சிறுவர்கள் உலகை உற்சாகமாக நாம் இனியேனும் வரவேற்போம். ஒரு செயல் ஒரு முறை செய்தால் பாவம் என்றும், அதையே ஒருவன் தொடர்ந்து செய்யும் போது சுபாவம் என்றும் மாறிப்போகிறது. ஒரு தவறை குழந்தைகள் கற்றுக்கொள்ளும் போதே தவறாகக் கற்றுக்கொண்டால், தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்று தொடர்ந்துவிடுகின்றது. எனவே, குழந்தைப் பருவத்தை மிகச்சரியாகக் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு தனி மனிதப் பொறுப்பாக மட்டுமின்றி சமூகப் பொறுப்பாகவும் மாறியிருக்கிறது.