படைப்புக் குழுமம், படைப்பாளர்களின் நலனில் அக்கறைகொண்டு, எவரும் யோசிக்காத அளவிற்கு நம்பிக்கையூட்டும் காப்பீட்டுத் திட்டங்களை அறிவித்து, ஒட்டுமொத்த இலக்கிய உலகத்தின் ஆச்சரியத்தைத் தன்மீது குவித்துக்கொண்டிருக்கிறது.
இலக்கிய கூட்டமொன்றுக்கு இருபது பேரை ஓரிடத்தில் ஒன்றிணைக்கத் திணறும் இந்த பரபரப்பான உலகச்சூழலில்... ஒரு இலக்கியக் குழுமத்தினால் சமூகத்தை ஒன்றிணைக்க முடியுமா? என்றால் அது ஆச்சர்யம்தான். ஆனால் இதை சாத்தியமாக்கிக் காட்டியிருக்கிறது படைப்பு குழுமம்.
படைப்பு சமூகத்தின் இணைப்பு என்ற வாசகத்தை ஏந்தி இலக்கிய உலகில் அடியெடுத்து வைத்து முழுக்க முழுக்க கவிதைகளை மட்டுமே களமாகக் கொண்டு இயங்கும் முகநூல் தளமாகத் தொடங்கப்பட்ட இக்குழுமம், இப்போது கவிதையுடன், கட்டுரை, சிறுகதை, நூல் விமர்சனம், மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் அனைத்து வகைமைகளிலும் களமாடுகிறது. குறைந்த காலத்திலேயே அரை லட்சத்திற்கும் மேலான உறுப்பினர் களை தன் வயப்படுத்திக்கொண்டு பெரும்பாய்ச்சலுடன் இலக்கிய உலகில் நடைபோடுகிறது. நாம் எழுதுவதெல்லாம் கவிதையா என தாங்கள் எழுதியவற்றை வெளிப்படுத்த தயங்கிய பலருக்கும் படைப்பு குழுமத்தின் முகநூல் கவிதைத்தளம் பெரும் நம்பிக்கையை தந்து தனித்த அடையாளத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது.
இளங்கவிஞர்கள் தொடங்கி மிகச்சிறந்த கவிஞர் களின் படைப்புகள் வரை தனக்குள் தாங்கிப் பயணிக் கும் இவ்விலக்கியக் குழுமம் புதிய புதிய கவிஞர்களின் படைப்புகளை அங்கீகரிப்பதன் மூலம் அவர்களின் சிந்தனையை மேலும் மெருகேற்றி சமூகத்திற்கான வளம்மிக்க படைப்புகளை அடையாளப்படுத்தி வருகிறது. கவிதையென்பது எட்ட நின்று மட்டுமே ரசிக்கும் கைவராத மாய வித்தை என்று நினைத்து ஒதுங்கியிருந்தவர்களைக் கூட கை நீட்டியழைத்து தங்கள் திறமையின் மீது சந்தேகம் கொண்டிருந்தவர்களின் எழுத்துக்களை சரியான சந்தர்ப்பத்தில் கவிதைகளென அடையாளம் காட்டியது படைப்புக் குழுமம். எழுதுவதின் மீது தாகம் கொண்டவர்களுக்கான வெளியை இணைய உலகத்தில் உருவாக்கித் தந்திருந்தாலும் படைப்புக் குழுமத்தில் எழுதப்படும் கவிதைகளில் பல உலகத்தரம் வாய்ந்தவை.
நண்பர்களின் தேநீர் சந்திப்பொன்றில் இலக் கியக்குழுமம் துவக்கு வதற்கான சிந்தனைத் தெறிப்பு உருவாகி அதுவே நடைமுறைப் படுத்தப்பட்டு மெல்ல வளர்ந்து இன்று படைப்பு பதிப்பகம், படைப்பு மேடை, படைப்பு தகவு திங்களிதழ், படைப்பு கல்வெட்டு மின்னிதழ், படைப்பு அறக்கட்டளை, படைப்பு வலையொலி என பல்வேறு தளங்களுக்குள் பயணித்துக் கொண்டிருக்கிறது. போதிய வெளிகளின்றி துவங்கிய சில நாட்களிலேயே நின்று போகும் இன்றைய இலக்கிய அமைப்புகள் மத்தியில் வெறும் முகநூல் கவிதைத் தளத்துடன் நின்றுவிடாமல் சிறந்த கவிஞர்களை தேர்வுசெய்து அவர்களுக்குப் படைப்பாளி மற்றும் கவிச்சுடர் போன்ற பட்டங்களை படைப்பு குழுமத்தின் வருடாந்திர விழாவை பிரம்மாண்டமாய் ஏற்பாடு செய்து புகழ்பெற்ற ஆளுமைகளின் கையால் அளித்து சிறப் பித்து வருகிறது.
அத்துடன் தனது படைப்பு பதிப்பகம் மூலம் சிறந்த கவிஞர்களின் கவிதைத் தொகுப்புகள் மற்றும் தாங்கள் எழுதிய கவிதைகளை வெளியிடும் சந்தர்ப்பம் அமையாமல் கனவுகளோடு நின்றுபோன கவிஞர்களின் கவிதைகளையும் தொகுத்து ஆண்டு தோறும் தமது இலக்கிய ஆண்டுவிழாவில் மிகச்சிறப் பாக நூல் வெளியீடுகள் செய்து ஆச்சர்ய அலை களை உருவாக்கி வருகிறது படைப்புக் குழுமம்.
பல நூறு கவிஞர்கள் ஓரிடத்தில் கூடுவதென்பது ஒரு அபூர்வ நிகழ்வாகும். மேலும் தனிநபர் குறுக்கீடு களில்லாமல் பொதுவான படைப்பு அறக்கட்டளை உருவாக்கப்பட்டு மூத்த கவிஞர்களுக்கு மரியாதை செய்யும் விதமாய் அவர்களின் இலக்கியச்சேவையை பாராட்டும்விதமாய் நிதியளித்து அவர்களை கௌரவித்து வருகிறது... இணையத்தில் யூடியூப் வலையொலி மூலம் சிறந்த கவிஞர்களின் கவிதைகளை தேர்வு செய்து பின்புலக் காட்சியமைப்புகளும் வசீகர குரலும் இழைந்து வாரம் ஒரு கவிதையையை காட்சிப்படுத்தி கவிஞர்களை ஊக்குவித்து வருவது வேறொரு பரிணாமம். படைப்பு மேடை என்ற தளத்தில் ஓவியம், பாடல், இசை என தனிநபர் கலைத்திறன்களுக்கு களம் அமைத்து தந்திருக்கிறது இந்த இலக்கியக்குழுமம்.
அத்துடன் படைப்பு தகவு இலக்கிய திங்களிதழை துவங்கி இலக்கிய ஆளுமைகள் தமிழகத்தின் சிறந்த கவிஞர்கள், எழுத்தாளர்களின் நேர்காணல்களுடன் கட்டுரைகள், சிறுகதைகள், நூலாய்வு கவிதைகள் என பன்முகத்தன்மையுடன் பல்லாயிரம் வாசகர்களை உள்ளடக்கிய மின்னிதழை தொடர்ந்து இருபத்தைந்து மாதங்கள் வெற்றிகரமாக நடத்திவருகிறது. இலக்கிய பணியோடு நில்லாமல் இக்குழுமம் தென்தமிழகம் புயலில் சிக்கிச்சிதைந்தபோது திக்கற்று ஏதுமற்று நின்ற மக்களுக்கு கிராமம் கிராமமாய் சென்று படைப்பு இலக்கியக் குழுமத்தின் தன்னார்வலர்கள், கவிஞர்கள் என நேரடியாகச்சென்று மக்களுக்கான அவசரத்தேவைகளை பூர்த்தி செய்ததில் இக்குழுமத் துக்கு பெரும்பங்கு உண்டு.
கவிதை எழுத்து இலக்கியம் என்று நில்லாமல் இக்குழுமம் அறம் சார்ந்த நடவடிக்கைகளில் பெரிதாய் தன்னை ஆட்படுத்திக்கொண்டிருப்பதே இதன் தனித்த அடையாளம்... கொரோனா பெருந்தொற்றின் இக்காலத்தில் தனது தன்னார் வலர் குழுவுடன் உயிர் துணிந்து பயணித்து ஆதர வற்றவர்கள் அடைக்கலமின்றி தெருக்களில் கைவிடப் பட்டவர்கள் வீதியில் ஒடுங்கிய மனம் பிறழ்ந்தவர் கள் முடக்கப்பட்டதால் வறுமைக்குள் திணிக்கப் பட்டவர்கள் என எளிய மக்களை தேடி தெருத்தெரு வாய் பயணித்து தினமும் எண்ணூறு முதல் ஆயிரம் பேருக்கு தொடர்ந்து ஐம்பது நாட்கள் உணவு வழங்கி வந்திருக்கின்றனர். அத்துடன் சென்னை முழுக்க முகக்கவசத்தின் அவசியத்தை வலியுறுத்தி இன்றைய சூழலில் எளிய மக்களுக்கு ஆயிரக்கணக்கில் முகக்கவசத்தை அளித்துள்ளது இக்குழுமத்தின் மீது தனித்த மரியாதையை உருவாக்குகிறது.
படைப்பு இலக்கிய குழுமம் தனது அடுத்தகட்ட நகர்வாய் எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக தனது இலக்கிய வெளியில் புதிய காப்பீட்டுத் திட்டமொன்றை அறிவித்து அதை நடைமுறைப்படுத்தியும் இருக்கிறது. இந்த திட்டம் இலக்கிய உலகில் இதுவரை யாரும் முன்னெடுக்காத யாரும் யோசித்திராத திட்டமாகவே தெரிகிறது. “படைப்பு கவிஞர் காப்பீட்டு திட்டம்’’ என்ற பெயரில் மூன்று விதமான நோக்கங்களை அறிவித்துள்ளனர்.
இங்கே எழுதுபவனின் படைப்புகள் சிகரங்களில் இருந்தாலும் எழுதுபவன் பெரும்பாலும் பள்ளத்தாக்குகளில்தான் பாரம் சுமந்துகொண்டிருக்கி றான்... குறிப்பாய் கவிஞர்களின் உலகம் கூச்சமும் கனவு களும் நிறைந்தது... அடுத்தவன் துயரத்துடன் சற்று கூடுதலாய் பயணிப்பவன் கவிஞன், தன் துயரத்தை வறுமையை இயலாமையை வெளிக்காட்டாமல் புழுங்கி தொலைந்துபோகிறான். இது கவிஞர்கள் பலருக்கும் நேரும் எதிர்பாராத விபத்து... சந்தர்ப்பங்களுக்குள் சிக்கிக்கொண்டு வாழ்வின் துயரமான பொருளாதாரச் சூழலிலிருந்து வெளிவரமுடியாமல் தவிக்கும் இதுபோன்ற கவிஞர்களை எழுத்தாளர்களை தூக்கிவிடும் நோக்கில் அவர்களை ஆற்றுப்படுத் தும் விதத்தில் படைப்பு இலக்கிய குழுமம் அறிவித்திருக்கும் திட்டம்தான் படைப்பு கவிஞர் காப்பீட்டு திட்டம்.
இதில் குடும்ப நலநிதி, மருத்துவ நலநிதி, கல்வி நலநிதி என மூன்றாய் பிரித்து காலச்சூழல்களால் பாதிக்கப்பட்டு பொருளாதாரத்தில் ஏற்றம் காண முடியாமல் சோர்வுற்றுக்கிடக்கும் கவிஞர்களை எழுத்தாளர்களை அடையாளங்கண்டு அவர்கள் குடும்பத்தின் வறுமை துடைக்கும் முயற்சியில் பொருளுதவி செய்து நெருக்கடிகளிலிருந்து சற்றேனும் மீட்கும் நடவடிக்கையாக இத்திட்டமும் அடுத்து எழுத்தாளர்கள் கவிஞர்கள் அசாதாரண சூழல்களில் விபத்து போன்றவற்றில் சிக்கி தமது மொத்த வாழ்வாதாரத்தையும் இழந்து ஆதரவின்றி நிற்கும் நிலையில் அவர்களை அடையாளங்கண்டு அவர்களுக்கான முழு மருத்துவச்செலவையும் தாமே ஏற்று வலிகளிலிருந்தும் வாழ்வின் சுமைகளிலிருந்தும் அவர்களை முழுவதுமாய் மீட்டெடுப்பது என்றும் மூன்றாவதாக பொருளாதார சிக்கல்களுக்குள் அகப்பட்டுக்கொண்டு தங்களின் பிள்ளைகளின் கல்விச்செலவினங்களை ஈடுகட்டமுடியாமல் இக்கட்டுகளுக்குள் தேங்கி நிற்கும் கவிஞர்கள், எழுத்தாளர்கள் என வறுமைக்குள் சிறைப்பட்டவர் களின் குழந்தைகளின் முழுக்கல்விச் செலவையும் அவர்கள் எந்தவிதமான கல்வியை தேர்ந்தெடுத்தாலும் அதற்கான முழுச்செலவையும் கல்வி கற்கும் இறுதிக் காலம்வரை படைப்பு குழுமமே ஏற்று படிக்க வைக்கும் என்றும் அறிவித்திருக்கிறது.
யாரும் இதுவரை யோசித்திராத உன்னதமான இந்த கவிஞர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் செயல்படுத்த இத்திட்டத்தின் முதல் நபராக சமூகத்தால் உற்று நோக்கப்படும் கவிஞர்களில் ஒருவரான பிரான்சிஸ் கிருபாவை முழுமையாய் அரவணைத்துக்கொள்கிறது படைப்புக்குழுமம்.
அவருக்கான உணவு, உறைவிடம், அத்தியாவசியச் செலவுகளை பயனாளரிடம் எந்த நிதியும் பெறா மல் கவிஞர் காப்பீட்டு திட்டத்தின்படி அவரது ஆயுள் முழுக்க வழங்க முடிவெடுத்து அவரது நெகிழ்ச்சியான ஒப்புதலுடன் செயல்படுத்தப்பட்டும் விட்டது...
ஒரு இலக்கியக்குழுமம் வெறும் எழுத்துக்களால் மட்டுமே அனைத்தையும் மாற்றிவிட முடியும் என்ற சாதாரண சிந்தனை நிலைப்பாட்டிலிருந்து விலகி பொதுவெளியில் சமூகத்தின் வலி நீக்கும் சேவைகளிலும் தம்மை இணைத்துக்கொண்டதோடு நில்லாமல் இலக்கிய தளத்தில் பயணித்து காலச்சூழல்களால் கைவிடப்பட்டவர்களாய் நிற்கும் சிறந்த கவிஞர்களை எழுத்தாளர்களை கையறுநிலையில் இருக்கும் அவர்களின் குடும்பத்தை நேசக்கரம் பற்றி அணைத்துக்கொள்ளும் படைப்புக்குழுமத்தின் இத்திட்டம் மேலும் விரிவடைந்து நலிவுற்ற பல எழுத்தாளர்களுக்குள் புதிய நம்பிக்கையை உருவாக்கி தமிழ் இலக்கியச்சூழலை மேலும் வளமானதாக மாற்றும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.
இந்த நேரத்தில் படைப்பு குழுமத்தை நிறுவிய கவிஞர் ஜின்னா அஸ்மியை, நம்மால் மறக்கமுடியாது. உலகம் தழுவிய கவிஞர்களை ஒரு குடையின்கீழ் கொண்டுவந்து, அவர்களுக்கு வேண்டுவதை எல்லாம் செய்யவேண்டும் என்று அவருக்குள் முளைத்த சுடர்தான் இன்று, படைப்புக் குழுமமாக சர்வதேச அளவில் தன் அழகிய கிளையை ஆச்சரியம் தரும் வகையில் விரிந்திருக்கிறது. அவரது முயற்சிகளுக்கு அவரது நண்பர்களே அசுர பலமாக இருந்து இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்..
தன்னை பெரிதாய் வெளிக்காட்டிக் கொள்ளாமல், படைப்பு இலக்கியக் குழுமத்தின் அனைத்து தளங்களிலும், மௌனமாய் அடுத்தவர்களின் திறமை களையும் சாதனைகளையும் வெளிக்கொணர்வதில் மட்டுமே எப்போதும் ஆர்வம்கொண்டு செயல்படும் படைப்பு குழுமத்தின் நிர்வாகி கவிஞர் ஜின்னா அஸ்மி அவர்களுக்கு இலக்கிய உலகின் சார்பில் எத்தனை பாராட்டு விழாக்கள் எடுத்தாலும் தகும்.
தமிழ் எழுத்துலகத்தில் எழுத்தாளர்கள் கவிஞர்களுக்கு ஆதரவாக புதிய வெளிச்சத்தை பாய்ச்சிவரும் படைப்பு இலக்கிய குழுமத்துக்கு வாழ்த்துகள்