விரிந்து வரும் ஒரு வாழை இலையைப்போல நான் என்னுடைய சிறிய கண்களைத் திறந்து சுற்றிலுமிருந்த காட்சிகளைப் பார்த்து ரசிக்க ஆரம்பித்த காலத்தில், ஒரு நாள் காலையில் பள்ளிக்கூடத்திற்குச் சென்றபோது காதில் விழுந்தது- எங்களுடைய ஜானம்மா டீச்சர் பள்ளிக்கூடத்திலிருந்து விலகப் போறாங்க... முதலில் நான் அதை நம்பவில்லை. எனக்கு அவர்களை மிகவும் பிடிக்கும். அதனால் நான் நினைத்தேன்- அம்முக்குட்டி பொய் கூறியிருக்கவேண்டும். அப்படியில்லாமல்- ஜானம்மா டீச்சர் எங்கும் போக மாட்டார்கள். போவதா? நல்ல கதை! எங்கு? எதற்கு?
இனி... அப்படியே போவதாக இருந்தால்-
அதை நினைத்தபோது, கவலை உண்டானது.
அன்பு நிறைந்த நிறைய அனுபவங்கள் எனக்கு நினைத் துப் பார்ப்பதற்கு இருந்தன.
தலை நிறைய பூச்சூடி வெள்ளைநிறப் புடவை யணிந்து, எப்போதும் புன்சிரிப்புடன் வரக்கூடிய ஜானம்மா டீச்சர்!
நிறைந்த வகுப்பறையில் அம்முக்குட்டியுடன் சரீரத்தோடு உரசியவாறு ஒரு மூலையில் அமர்ந் திருந்த நான், அவள் கூறுவதையோ வகுப்பறையில் நடப்பதையோ கவனிக்காமல் ஜானம்மாவைப் பற்றிய நினைவில் மூழ்கியிருந்தேன்.
அப்போது அம்முக்குட்டி என்னைப் பிடித்துக் கிள்ளினாள். நான் அது தெரியாததைப்போல நடித்தேன். அவள் மீண்டும் கிள்ளினாள். என்ன விஷயம்
என்பதைத் தெரிந்துகொள்வதற்காக பார்த்தபோது, ஓ.... கடவுளே! நேற்று ராமன் மாஸ்டர் தந்த கணக்கிற்கான விடையைக் கேட்கிறாள்! அருகில் வந்து விட்டார். மேலும் இரண்டு பெஞ்சுகளைத் தாண்டிவிட்டால், அம்முக்குட்டி...! பிறகு... நான்! பிறகு...
சிலேட்டை எடுத்துக்கொண்டு நான் தயாராக இருந்தேன்.
ராமன் மாஸ்டரின் பிரம்பு "கிஷ்.... கிஷ்....' என்று சத்தமிடுவதைக் கேட்டேன். யாரோ அழுது கொண்டிருந்தார்கள். மாதவன் குட்டியும் அதில் சிக்கிக்கொண்டான் என்பதைப் பார்த்தபோது எனக்கு கை வலிப்பதைப்போல தோன்றியது. அவன் செய்தது தவறு என்றால், பிறகு... யார் செய்தது சரியாக இருக்கும்?
வியாபாரி சந்தைக்குச் சென்று மூன்று எருமை களையும் நான்கு பசுக்களையும் வாங்கினான். இரண்டு எருமைகளும் ஒரு பசுவும் இறந்து விட்டன. எஞ்சியிருந்தவற்றை விற்றான்...
நான் சிரமப்பட்டு மனதிற்குள் கணக்கு கூட்டிப் பார்த்துக் கொண்டிருந்தபோது, அம்முக்குட்டி என் முகத்தைப் பார்க்காமல், நான் கேட்கவேண்டும் என்பதற்காகக் கூறினாள்:
""அதன் விடையைச் சொல்லு.... சீக்கிரம்!''
ஒரு குள்ளநரியின் கூர்மை சக்தியையும் நாயின் சுறுசுறுப்பையும் கொண்டிருக்கும் அவளுடைய முகம் காகிதத்தைப்போல வெளிறிப்போய்க் காணப்பட்டது. ராமன் மாஸ்டரின் பிரம்பின் நடனம் அவளை மிகவும் பயப்படச் செய்திருக்கவேண்டும். ஆனால், எனக்கு சந்தோஷம் உண்டானது. சற்று பயப்பட்டும்.... பெரிய கில்லாடியான பெண்! எப்போதும் கிண்டல் செய்வாள். யாரையும் சேர்த்துக்கொள்ளமாட்டாள். இதோ... இப்போது.... அந்த கில்லாடித்தனங்களெல்லாம் மறையப் போகின்றன.
எனினும், அவளுக்கு அடிவிழுவதை நான் விரும்பவில்லை.
அவளுடைய அனைத்து குறைகளையும் அறிந்திருந்தாலும்கூட, அவள்மீது நான் அன்பு வைத்திருந்தேன் என்பதுதான் உண்மை. எவ்வளவோ முறை அவள் என்னை ஏமாற்றியிருக்கிறாள்! கிண்டல் செய்வும் அவமானப்படுத்தவும் செய்திருக்கிறாள். ஒவ்வொரு முறையும் நான் நினைப்பேன்- இனி எந்தச் சமயத்திலும் அம்முக்குட்டியுடன் பேசக்கூடாது!
பிறகு... நடந்ததோ? எப்போதும் அவள் வெற்றிபெற்றாள்.
அவள் நினைத்தது மட்டுமே நடந்தது.
""கொஞ்சம் சொல்லு... பப்பா! மாஸ்டர் இப்போ என்னிடம் கேட்பார்!''
குரலில் வேதனையும் ஏமாற்றமும்... நான் அவளின் நிறைவேற்றப் படாத வாக்குறுதியை நினைத்து, அவளிடம் கேட்டேன்:
""நெய்யப்பம் கொண்டு வந்திருக்கியா?''
""ம்...''
""நெய் பாயசம்?''
""அது... நாளைக்கு...''
என்னால் நம்ப இயலவில்லை. அவள் ஏமாற்றிவிடுவாள். முன்பு அவள் அவ்வாறு செய்திருக்கிறாள்.
அம்முக்குட்டியின் முகத்தையே நான் வெறித்துப் பார்த்தேன். ஆனால், அவள் ராமன் மாஸ்டரைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
""நெய்யப்பம் எங்கே இருக்கு?''
பென்சிலையும், நீர் நிறைக்கப்பட்ட புட்டியையும், உடைந்த வளையல் துண்டுகளையும் வைக்கக்கூடிய பெட்டியை அவள் தொட்டுக் காட்டினாள்.
எனக்கு சமாதானம் உண்டானது. மூன்றோ நான்கோ நெய்யப்பங்களை எந்தவொரு சிரமமும் இல்லாமல் அதில் மறைத்து வைக்கலாம்.
""இனி சொல்லக்கூடாதா?''
நான் கூறினேன்.
அவளுக்குத் திருப்தி உண்டானது. அவளுடைய கண்களின் ஓரங்களில் ஒரு புதிய பிரகாசம் தோன்றியது.
முதல் சரியான விடையே அம்முக்குட்டியுடையதுதான்.
அவளுடைய திறமையின்மீது பெரிய நம்பிக்கை இல்லாதது காரணமாக இருக்கவேண்டும்- ராமன் மாஸ்டர் கூறினார்:
""எங்கே? செய்ததைப் பார்க்கிறேன்.'' நான் ஏதாவது கூறவோ செய்யவோ முயற்சிப்பதற்குமுன்பே அவள் பெஞ்சின்மீது ஏறி நின்று என்னுடைய சிலேட்டை எடுத்து மாஸ்டரிடம் காட்டினாள். அவளுடையதைப் போல...!
எனக்கான முறை வந்தபோது, சிலேட்டைக் காட்டமுடியாத நிலை எனக்கு உண்டானது. கணக்கையே போடாமல் போட்டதாகக் கூறியதற்கான தண்டனையாக மூன்று "பிரம்புப் பழம்' கிடைத்தது! உள்ளங்களையும் மனதும் ஒரே மாதிரி எரிந்தன. அம்முக்குட்டியின்மீது கோபம் உண்டானலும், வெளியே காட்டிக்கொள்ளவில்லை. அவள் நெய்யப்பம் கொண்டு வந்திருக்கி றாளே!
மதியம் எங்களையெல்லாம் விட்டபோது, நான் அம்முக்குட்டியுடன் சேர்ந்து போனேன். ஒற்றையடிப் பாதையில் யாருமே இல்லாத ஒரு இடத்தை அடைந்தபோது, அந்தப் பெட்டியை என் கையில் தந்து விட்டு, அவள் கூறினாள்: ""திறந்து எடுத்துகோ.''
ஆசையுடன் நான் அதைத் திறந்தேன். ஆனால், அதற்குள் நெய்யப்பம் இல்லை. மீதி அனைத்தும் இருந்தன. நான் அந்தப் பெட்டியை வீசியெறிந்தேன்.
அப்போது அவள் குலுங்கிக் குலுங்கி சிரித்தாள்.
என்னால் எதுவும் கூற முடியவில்லை. அவளை வெறுமனே பார்த்துக் கொண்டு நின்றிருக்க மட்டும் செய்தேன். என் கையில் அந்த கனமான பிரம்பு விழுந்தபோது, மாணவிகள் அனைவரும் சிரித்ததை நான் மீண்டு மொருமுறை கேட்டேன். ராமன் மாஸ்டர், ""திருட்டுப்பயலே... இங்கே வா'' என்று அழைத்ததையும் நான் நினைத்துப் பார்த்தேன். அந்த அவமானத்தையெல்லாம் தாங்கிக்கொண்டது அவளுக்காகத்தான். அவள் காட்டிய சிலேட் என்னுடையது என்று நான் கூறியிருந்தால்?
நெய்யப்பம் கொண்டுவரவில்லை என்ற விஷயத்தை அவள் முதலிலேயே கூறியிருக்கலாம். அப்போதும் அவளுக்கு விடை கூறியிருப்பேன். அவ்வாறு கூறியிருக்கிறேன். ஆனால், அவள் அது எதையும் செய்யாமல் என்னை வைத்து பொம்மலாட்டம் ஆடியிருக்கிறாள்!
திருடி!
அதற்கெல்லாம் மேலாக, எனக்கு மிகவும் பசித்தது. காலையில் பள்ளிக்கூடத்திற்கு வந்தபோது எதுவும் சாப்பிடவில்லை. சாப்பிடுவதற்கு இருந்தால் தானே?
கிண்டல் வழிந்து ஒழுகிக்கொண்டிருந்த அந்தப் பெண்ணுக்கு முன்னால் மேலும் ஒரு நிமிடம் நின்றிருந்தால் நான் அழுதிருப்பேன். அதனால் நான் பள்ளிக்கூடத்திற்கே திரும்பி நடந்தேன். யாருடனும் சேர்ந்து விளையாடுவதற்குச் செல்லவில்லை. எல்லார்மீதும் வெறுப்பு உண்டானது.
சாப்பிட்டாலும் சாப்பிடாவிட்டாலும் பள்ளிக்கு வந்தாகவேண்டும். அதுதான் வீட்டிலிருக் கும் கட்டளை... ஆனால், என்னைப் பொருத்த வரையில், அது ஒரு வழக்கமான விஷயமாகி விட்டிருந்தது.
பசியை என்னால் தாங்கிக்கொள்ள முடியும். அவள் என்னை ஏமாற்றியதை...? அதை எப்படி தாங்கிக்கொள்வேன்? என்னை முட்டாளாக்கியது ஒரு பக்கம் இருக்கட்டும்... என் முகம் வாடுவதைப் பார்த்து, அவள் சிரிக்கவும் செய்தாள்.
என் நிலைமையை அவள் அறிந்திருந்தால்...!
அம்முக்குட்டியை எப்படி வேதனைப்படுத்த வேண்டும் என்பதுதான் என் சிந்தனையாக இருந்தது. குண்டூசியை எடுத்து சரீரம் முழுவதும் குத்தி ஏற்றவேண்டும். இல்லாவிட்டால்- மாங்காய் அறுக்கக்கூடிய கத்தியை எடுத்து அவளுடைய விரலைத் துண்டிக்க வேண்டும். ஏதாவதொன்றைச் செய்தால்தான் அவள் கற்றுக்கொள்வாள்.
காலியான வயிற்றுடனும் எரிந்துகொண்டிருந்த தலையுடனும் நான் கற்பனையில் மிதந்து கொண்டிருந்தேன்.
சாப்பிட்டு முடித்து, அம்முக்குட்டி திரும்பிவந்தாள். அவள் எனக்கு முன்னால் வந்து நின்றாலும், நான் பார்த்ததைப்போல காட்டிக்கொள்ளவில்லை.
அவள் என்னவோ கேட்டாள்.
நான் பதில் கூறவில்லை. உதட்டின் ஓரத்தைக் கடித்தவாறு எங்கோ பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன்.
சிறிது நேரம் கடந்ததும் மூச்சுவிட முடியாத அளவிற்கு கவலை எனக்குள் அரும்பிப் பெரிதாக, என் கண்ணில் நீர் நிறையவும் செய்தது.
அம்முக்குட்டியின்மீது என்றல்ல- யார்மீதும் அப்போது குறிப்பிட்டுக் கூறுகிற மாதிரி எந்தவொரு பகையுணர்வும் தோன்றவில்லை.
நான் அங்கிருந்து எழுந்து செல்வதற்கு முயற்சித்தபோது, அவள் தடுத்தாள். அவளும் அழுதுகொண்டிருந்தாள்!
அது ஒரு புதிய அனுபவமாக இருந்தது.
அம்முக்குட்டி அழுவதை நான் எந்தச் சமயத்திலும் பார்த்ததில்லை.
அவள் விக்கி... விக்கி அழுதுகொண்டே கேட்டாள்: ""சாப்பிடப் போகலையா?''
அதற்குப்பிறகு என்ன கேள்வி கேட்பது என்று அவளுக்கே தெரியவில்லை.
வெளுத்து, சதைப் பிடிப்பாக இருந்த அந்தப் பெண்ணின் நீலநிறக் கண்களில் நீர் நிறைந்திருப்பதைப் பார்த்ததும், நான் என் வேதனையையெல்லாம் மறந்து விட்டேன். நீண்டகாலம் பொறுமையுடன் இருந்த பிறகு, என் ஆசைகள் மலர்வதைப்போல நான் உணர்ந்தேன். நிம்மதியின் ஒரு குளிர்ச்சி மனதிற்குள் நுழைந்து சென்றுகொண்டிருந்தது. வேறொன்றுமல்ல- அவளுடைய தலை எனக்கு முன்னால் குனியவேண்டும். ஏதாவதொன்றில் அவள் தோல்வியை ஒப்புக்கொள்ளவேண்டும். அது நடந்துவிட்டது. அப்படியில்லையென்றால்... அந்த அழுகைக்கு அர்த்தம் என்ன?
நாங்கள் வகுப்பறைக்குத் திரும்பியபோது அவள் கூறினாள்: ""கடவுளின்மீது சத்தியம் பண்ணி கூறுகிறேன்... நாளைக்கு நான் நெய்யப்பம் கொண்டுவந்து தருவேன்.''
எனக்கு அவளை நன்றாகவே தெரியும். நான் கூறினேன்: ""உன் நெய்யப்பம் எனக்கு வேண்டாம்.''
அவள் என் கையைப் பிடித்துக்கொண்டு கேட்டாள்: ""வேண்டாமா? உண்மையைச் சொல்லு...''
நான் ஒரு அலட்சியத்தை வெளிப்படுத்தினேன்- தந்தாலும் தராவிட்டாலும் எனக்கு ஒரு பொருட்டே அல்ல என்பதைப்போல...
சிறிது நேரம் சென்றதும் நான் கேட்டேன்: ""உன் அப்பாவுக்குத் தெரியாதா?''
""தெரிந்தால் என்ன? நீங்க கொண்டுவந்தது எதையாவது நான் சாப்பிடுகிறேனா? அப்படின்னாத் தானே பிரச்சினை?''
எனக்கு அவள்மீது பொறாமை உண்டாகாமல் இல்லை. நெய்யப்பத்தையும் நெய் பாயசத்தையும் விருப்பம்போல சாப்பிடலாம். அவியல், காரக்குழம்பு, தயிர் பச்சடி ஆகியவற்றைச் சேர்த்து சந்தோஷமாக சாப்பிட்ட பிறகுதான் இவையெல்லாம்... யாரும் எந்தவொரு தடையும் போடமாட்டார்கள். அதிர்ஷ்டக் கார பெண்! அந்த நிலைமை எனக்கு இருக்கக்கூடாதா என்று நான் ஆசைப்பட்டேன். வாழைப்பழம் சேர்க்கப்பட்ட நெய்யப்பத்தின் சுவையை நினைத்த போது, வாயில் எச்சில் ஊறியது.
ஒரு நாள் அம்முக்குட்டியையும் அவளுடைய நெய்யப்பத்தையும் பற்றி வீட்டில் கூறியபோது, அம்மா சற்று கோபத்துடன் கூறினாள்: ""அதற்கு உன் அப்பா ஒரு நம்பூதிரி இல்லையே!''
என் தந்தையும் ஒரு நம்பூதிரியாக இருந்திருந்தால், எனக்கும் விருப்பம்போல நெய்யப்பமும் நெய் பாயசமும் கிடைத்துக்கொண்டிருக்கும். அப்போது அருகிலேயே ஒரு கோவில் இருக்கும். கோவிலில் ஒரு அர்ச்சகராக என் தந்தை... பூஜை செய்யப்பட்ட அப்பத்தையும் அடையையும் வீட்டிற்குக்கொண்டு வந்தால், நான்தான் முதலில் எடுப்பேன். பெஞ்சின்மீது வெற்றிலைப் பெட்டியுடன் தந்தை அமர்ந்திருப்பார். தந்தை வெளுத்து, தடிமனாக இருப்பார். உச்சியில் குடுமியும் பூணூலும் இருக்கும். நான் அப்பத்தை எடுக்கும்போது, தந்தை ஏதாவது கூறினால்...
""என்ன சிந்திக்கிறே?'
கேள்வி காதில் விழுந்ததும், நான் வெளிறிப் போய்விட்டேன். என்னவெல்லாமோ சிந்தித்தேன். ஆனால்...
சிந்தித்தது எதையும் அவளிடம் கூறமுடியவில்லை.
ஜானகி டீச்சரும், பின்னால் தலையில் பெரிய ஒரு கூடையைச் சுமந்தவாறு ஒரு பையனும் கடந்து வந்தார்கள்.
அம்முக்குட்டி என் காதில் மெதுவான குரலில் கூறினாள்: ""டீச்சர், இங்கேயிருந்து எதற்கு போறாங்கன்ற விஷயம் எனக்குத் தெரியும்.''
ஆச்சரியத்துடன் நான் அவளைப் பார்த்தேன். இப்படிப்பட்ட விஷயங்கள் அவளுக்கு எங்கிருந்து கிடைக்கின்றன?
நான் கேட்டேன்: ""என்னிடம் கூற மாட்டியா?''
அவளுக்கொரு தயக்கம். ""பிறகு....''
அவள் முழுமையாகக் கூறவில்லை. ஏதோ ஒரு தமாஷான விஷயத்தை நினைத்ததைப்போல சிரிக்க மட்டும் செய்தாள்.
என் பொறுமை முடிவிற்கு வந்தபோது,
அவள் கூறினாள்: ""டீச்சரும் ராகவன் மாஸ்டரும் ஒருவரோடொருவர் அன்பு செலுத்துறாங்க.''
எனக்கு அதற்கான அர்த்தம் தெரியவில்லை. டீச்சருக்கு அவ்வாறு யாரிடமெல்லாம் அன்பு தோன்றும்? எங்கள்மீது அன்பு இல்லையா?
என் சந்தேகத்தைக் கேட்டதும் அவள் கூறினாள்: ""நீ ஒரு செவிடன். கூறினால், எதுவுமே புரியாது.'
அப்படிப்பட்ட விஷயங்களைப் புரிந்துகொண்டே ஆகவேண்டுமென்ற நிலை எனக்குமில்லை.
இறுதியில் அந்த புத்திசாலி, முட்டாளான என்னிடம் கூறினாள்: ""ஜானம்மா டீச்சர் தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவங்க... இனிமேலாவது புரிஞ்சிக்கோ''.
அதுவரை நான் மனதில் நினைத்திருந்தது- யாரும் யார்மீது வேண்டுமானாலும் அன்பு செலுத்தலாம் என்றுதான். அம்மாவையும் அப்பாவையும் நாயையும் பூனைக்குட்டியையும்.... வீட்டில் நான் விருப்பமாக இருந்தது ஒரு பூனைக்குட்டியின்மீதுதான். ஜாதியைப் பார்த்துதான் அன்பு செலுத்தவேண்டும் என்பதை அம்முக்குட்டி கூறித்தான் நான் தெரிந்துகொண்டேன். வேறு யாராவது கூறியிருந்தால், ஒருவேளை நான் நம்பியிருப்பேன். அம்முக்குட்டி என்பதால் நம்பமுடியவில்லை. அவள் பொய் கூறுவாள்... எனக்கு நெய்யப்பம் கொண்டுவந்து தருவதாக கூறுபவள்தானே?
சாயங்காலம் வகுப்பறை விடுவதற்குமுன்பு ராமன் மாஸ்டர் வந்தார். கதவின் இரும்புச் சங்கலியைப் பிடித்து குலுக்கி ஓசை உண்டாக்கியவாறு எங்கள் அனைவரிடமும் கூறினார்: ""மணியடிச்ச உடனே ஓடிவிடக்கூடாது. இங்கேயே இருக்கணும். எல்லாருக்கும் பிஸ்கட்டும் பழமும் தருவாங்க... உங்களுடைய ஜானம்மா டீச்சர் போறாங்க.''
வகுப்பறை பேரமைதியாக இருந்தது.
எனக்கொரு சந்தேகம் உண்டானது. ராகவன் மாஸ்டரின்மீது அன்பு செலுத்தியதற்காகவா டீச்சரை பள்ளிக்கூடத்திலிருந்து வெளியேற்றுகிறார்
கள்? அப்படியென்றால்... அன்பு செலுத்துவது என்பது ஒரு குற்றச்செயலாக ஆகிறதே! நான் யாரின்மீதெல்லாம் அன்பு செலுத்துகிறேன்?
அம்முக்குட்டிக்குத் தெரியுமா.... அவள்மீது எனக்கு அன்பு இருக்கிறது என்ற விஷயம்? தெரிந்தால்...
சந்தேகங்கள் ஒவ்வொன்றாக அதிகரித்துக்கொண்டு வந்தன. யாரிடமாவது கேட்கவேண்டுமென்று நினைத்தேன். ஆனால், யாரிடம் கேட்பது?
அம்முக்குட்டியிடம் கேட்கமுடியாது. பிறகு... யார் இருக்கிறார்கள்?
என் மனதில் யாரும் தோன்றவில்லை. அப்போது நான் சமாதானப்படுத்திக் கொண்டேன். நான் வளர்ந்து பெரியவனாகும்போது, எனக்கு அதற்கான அர்த்தத்தைத் தெரிந்துகொள்ளமுடியும்.
மணியடித்தபோது, சிறிது பரபரப்பு உண்டானது.
ஹாலில் பெஞ்ச் போடப்படும்வரை நாங்கள் எல்லாரும் வெளியில் சென்று நிற்கவேண்டும் என்பது கட்டளை. நான் என்னுடைய இடத்தில்போய் அமர்ந்தபோது, அம்முக்குட்டியைக் காணோம்.
அவள் வேறு எங்கோ இருந்தாள்.
மூன்று பெரிய பிஸ்கட்களும் இரண்டு பழங்களும் கிடைத்தன.
அந்த அளவிற்கு நல்ல பிஸ்கட்களை நான் எந்தச் சமயத்திலும் சாப்பிட்டத்தில்லை. எல்லாவற்றையும் வாய்க்குள் தள்ளிவிட்டேன். பசியாக இருந்தது. எச்சிலில் கரைந்தது. பற்களுக்குக் கீழே அவை ஒட்டிக்கிடக்க, நாவின் நுனியால் அகற்றுவதற்கு படாதபாடு பட்டேன். ஜானம்மா டீச்சர் என்னவோ சொன்னார்கள்... பிஸ்கட் தின்னும் பரபரப்பில் நான் அதைக் கேட்கவில்லை. கைக்குட்டையை எடுத்து கண்ணைத் துடைப்பதை மட்டும் பார்த்தேன்.
எல்லாரையும் போகும்படி ராமன் மாஸ்டர் கூறினார்.
வெளியே சென்றபோது, அம்முக்குட்டியைப் பார்த்தேன். அந்த ஆரவாரத்தில் அவள் என்னைத் தேடிக்கொண்டிருந்தாளாம்.
புத்தகத்தையும் சிலேட்டையும் பெட்டியையும் மார்புடன் சேர்த்துப் பிடித்தவாறு அவள் பின்னாலும் நான் முன்னாலுமாக வீட்டை நோக்கி நடந்தோம். அவள் அதிகமாக எதுவும் பேசவில்லை. என்னவோ சிந்திப்பதைப்போல தோன்றியது. ஜானம்மா டீச்சர் போவதால் உண்டான கவலையாக இருக்குமென்று நான் நினைத்தேன். எனக்கும் கவலை இருந்தது. எனினும், என் சிந்தனை அப்போது ஜானம்மா டீச்சரிடமிருந்து விலகிவிட்டிருந்தது. அவளுடைய வீடு நெருங்கியபோது, நான் அவளைப் பிடித்து நிறுத்தி, திடீரென்று கேட்டேன்: ""என் மனதில் இப்போ என்ன இருக்குன்னு சொல்லமுடியுமா?'' அவள் தலையை ஆட்டினாள். ""சிந்திச்சு சொல்லு.'' அவள் சிந்திப்பதற்கு முயலவில்லை. இறுதியில் நான் கூறினேன்: ""ஒரேசமயத்தில் உன்னால் எத்தனை பிஸ்கட்டுகளைச் சாப்பிடமுடியும்?'' ஆணியின் வெளிப்பகுதியைப்போல பெரிய மேடுகளையும் பள்ளங்களையும் கொண்டிருந்த அந்த பெரிய பிஸ்கட்டுகளின் வடிவம் மனதிலிருந்து மறையவில்லை. அவள் அந்த விஷயத்தில் எந்தவொரு ஆர்வத்தை யும் காட்டவில்லை. கோவில் குளத்தின் கரையை அடைந்தபோது, யாரையோ எதிர்பார்த்துக்கொண்டு நிற்பதைப்போல அவள் கூறினாள்: ""நீ நட...'' நான் கேட்டேன்: ""நாளைக்கு?'' ""நெய்யப்பம்!'' ""பிறகு?'' ""நெய் பாயசம்!'' ""உண்மையா?'' ""உண்மை!'' வாழ்க்கையின் எல்லா பிரச்சினைகளிலிருந்தும் விடுபட்டவனைப்போல சீட்டியடித்துக்கொண்டே நான் நடந்தேன். சில அடிகள் நடந்தபிறகு, எதற்கு என்று தெரியாமலே வெறுமனே திரும்பிப் பார்த்தேன். அப்போது கண்ட காட்சி- மூன்று பிஸ்கட்கள் வெள்ளித் தட்டுகளைப்போல அந்த குளத்தின் நடுப்பகுதியை நோக்கிப் பறத்துகொண்டிருந்தன! நான் பார்ப்பதைக் கண்டதும், அம்முக்குட்டி தலையைத் தாழ்த்திக்கொண்டாள். எனக்கு அதன் அர்த்தம் புரிந்தது. பிறகு ஒரு நிமிடம்கூட அங்கு நிற்காமல் நான் வீட்டை நோக்கி சிரமப்பட்டு நடந்தேன். கடையில் கிடைக்கக்கூடிய மிகவும் தாழ்ந்த நிலையிலிருக்கும் அரிசியை வைத்துதான் அன்று வீட்டில் கஞ்சி... நாற்றமெடுத்துக்கொண்டிருந்த அதன் ஒரு பிடியை அள்ளியவாறு, நான் சிந்தனையில் மூழ்கினேன். பல நூற்றாண்டுகளாக மனிதன் சேர்த்துவைத்திருக் கும் அறிவின் ஊற்று என் இதயத்தில் வெடித்தது. அம்மா கேட்டாள்: ""கஞ்சியை முன்னால் வச்சிக்கிட்டு நீ ஏன்டா இப்படி அழுதுகிட்டு இருக்கே? ஒவ்வொருத்தருக்கும் அதுதான் கிடைச்சதா?'' அம்முக்குட்டி வீசியெறிந்த பிஸ்கட்டுகளைப் பற்றி அம்மாவிடம் கூறினால் என்ன என்று சிந்தித்தேன். ஆனால், கூறவில்லை. அவள் ஏன் அதைப் பாழாக்கினாள்? எனக்குக் கொடுத்திருந்தால், நான் தின்றிருப்பேனே! அதற்குப்பிறகு பதினான்கு வருடங்கள் கடந்தோடிவிட்டன. வாழ்வதற்கான வழிகளைத் தேடி என் இளம் வயதுக் கனவுகளின் உறைவிட பூமியிலிருந்து நீண்ட தூரம் செல்லவேண்டியிருந்தது. பலவற்றை யும் மறந்துவிட்டேன். எனினும், ஒரு விஷயம் மனதில் தங்கி நின்றது- அன்று அம்முக்குட்டி தின்னாமல் வீசியெறிந்த பிஸ்கட்! அதைப்பற்றிய சிந்தனை எப்போதும் என்னைப் பாடாய்ப்படுத்திக் கொண்டிருந்தது. இன்று காலையில் சிறிதும் எதிர்பாராமல் ஒரு சந்தோஷச் செய்தி காதில் விழுந்தது- என் பழைய அம்முக்குட்டியின் திருமணம் முடிந்துவிட்டதாம். ஜாதி, மதம்... எதுவுமே பார்க்காமல், விருப்பப்பட்ட ஒரு ஆணை அவள் கணவனாகத் தேர்ந்தெடுத்திருக்கி றாள்!
நான் பிரார்த்திக்கிறேன்- அந்த புதிய குடும்பம் சந்தோஷமாக இருக்கட்டும்!
________________
மொழிபெயர்ப்பாளரின் உரை
வணக்கம்...
இந்த மாத "இனிய உதய'த்திற்காக மூன்று முத்தான-
அருமையான சிறுகதைகளை தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன்.
"அனாமிக' என்ற கதையை எழுதியவர் நவீன மலையாள இலக்கியத்தின் சிற்பியான எம். முகுந்தன். அனாமிகா என்ற மாறுபட்ட பல இயல்புகளைக் கொண்ட ஒரு இளம் பெண்ணை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. கணவனைத் தன் மனதில் முழுமையாக நேசிப்பதாகவும், அவன்மீது அளவற்ற அன்பு வைத்திருப்பதாகவும் கூறும் அனாமிகா, ஆறுதலுக்காக தன் நெருங்கிய நண்பனான சுமீத்தைத் தேடிவருகிறாள். அப்போது அங்கு என்ன நடக்கிறது என்பதை பின்நவீனத்துவ பாணியில் எழுதியிருக்கிறார் முகுந்தன். அனாமிகா வைப் போன்ற பெண்ணும், சுமீத்தைப் போன்ற ஆணும் பல இடங்களில் இருப்பதை நாம் பார்த்துக்கொண்டு தானே இருக்கிறோம்!
"தின்பதற்கு இயலாத பிஸ்கட்' என்ற கதையை எழுதியவர் சாகித்ய அகாடெமி விருதுபெற்ற, மூத்த மலையாள எழுத்தாளரான டி. பத்மநாபன். பள்ளிக் கூடத்தைவிட்டு விலகிச்செல்லும் ஜானம்மா டீச்சர் அன்புடன் தந்த பிஸ்கட்களை குளத்தில் விட்டெறிந்த அம்முக்குட்டியையும், அவளுடன் சேர்ந்து படிக்கும் ஏழைச் சிறுவனையும் மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. நெய்யப்பத்திற்காகவும் நெய் பாயசத்திற்காகவும் ஏங்கும் அந்தச் சிறுவன் நம் கண்களில் ஈரம் படர வைக்கிறான். கதையின் இறுதிப் பகுதி... அருமை! ஜாதி, மதம் எதுவுமே பார்க்காமல், விருப்பப்பட்ட ஒரு ஆணை 14 வருடங்களுக்குப்பிறகு கணவனாக தேர்ந்தெடுத்த அம்முக்குட்டியை நினைத்து அவளுடன் படித்த சிறுவன் மட்டுமல்ல... நாமும்தான் சந்தோஷப் படுகிறோம். அந்த இடத்தில்தான் டி. பத்மநாபன் வாழ்கிறார்.
""நிரந்தர வருமானம்'' என்ற கதை "போடோ' மொழியில் எழுதப்பட்ட ஒரு அருமையான கதை. அஸ்ஸாமில் பேசப்படும் மொழியில் இந்தக் கதையை எழுதியவர் ரூபாலி ஸ்வர்கீயாரி என்ற பெண் எழுத்தாளர். பாபேல் நார்ஸி இலக்கிய விருது, ஆஷா மஷாஹரி இலக்கிய விருது, போடோ எழுத்தாளர்கள் அகாடெமி விருது ஆகியவற்றை இவர் பெற்றிருக்கிறார். தன் உழைப்பை நம்பி வாழும் மதனன் நம் மனதில் என்றும் வாழ்வான்.
அவன் காதலித்த கனிகா அவனுக்குக் கிடைக்காமல் போயிருக்கலாம். அவனுடன் படித்த ஆர்கான்டோ எங்கோ உயரத்தில் இருக்கலாம். எனினும், அவற்றிற் கெல்லாம் சிறிதும் கவலைப்படாமல், செருப்பு தைத்து முடித்துவிட்டு, முந்நூறு ரூபாய் சம்பாதித்து, அதில் வீட்டிற்குத் தேவையான சில பொருட்களை வாங்கிக்கொண்டு, சைக்கிளில் தன் வீட்டை நோக்கிப் பயணிக்கும் மதனனை நம்மால் மறக்க முடியுமா?
இந்த மூன்று மாறுபட்ட கதைகளும் உங்களுக்கு இனிய இலக்கிய அனுபவத்தை நிச்சயம் தரும்.
"இனிய உதயம்' வெளியிடும் என் மொழிபெயர்ப்புப் படைப்புகளைத் தொடர்ந்து வாசித்து வரும் உயர்ந்த உள்ளங்களுக்கு நன்றி.
அன்புடன்,
சுரா