2014 இல் சிங்கப்பூர் எழுத்தாளர் திருவிழாவில் (SWF SINGAPORE WRITERS FESTIVAL) பங்கு கொள்வதற்காக நான் அழைக்கப்பட்டிருந்தபோது கேள்வி நேரத்தில் ஷாநவாஸ் எனும் சிங்கப்பூர் எழுத்தாளர் என்னிடம் ஒரு கேள்வி எழுப்பி னார். சிங்கப்பூர் எழுத்தாளர்களைத் தமிழ்நாட்டு விமர்சகர்கள் ஏன் புறக்கணிக்கிறார்கள்.? இந்த கேள்வி என் மனதைக் குடைந்து கொண்டிருந்ததின் விளைவுதான் இக்கட்டுரை.
தமிழை ஒரு தேசிய மொழியாகப் பிரகடனப் படுத்தியிருக்கும் ஒரே தீவுநாடு சிங்கப்பூர்தான்.. ஆனாலும் தமிழ் நாட்டிலோ, இலங்கையிலோ ஒரு கவிஞனுக்குக் கிடைக்கும் வாசகப் பிரதிபலிப்பு ஒரு சிங்கப்பூர் வாழ் கவிஞருக்கு உடனடியாகக் கிடைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. ஒரு கவிதைப் பிரதியின் அர்த்த உற்பத்தியை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்பவன் வாசகனே என்ற விதத்தில் சிங்கப்பூர் வாழ் கவிஞருக்கு இதன் தேவை அதிகம்.
ஆங்கில மொழிக் கவிஞரும் இலக்கிய விமர்சகருமான டாக்டர் குவீ லீ சுவீ சிங்கப்பூர் கவிதை விழா ஒன்றில் சொன்னதை நான் இத்தருணத்தில் சுட்டிக் காட்டுகிறேன். அவர் சொன்னார் :
“சிங்கப்பூரில் படைப்பாளிகள் பெருகி விட்டார்கள். எல்லோரும் புத்தகம் போடுகிறார்கள். வாசகரைத்தான் காணோம்.’’ 2017இல் இவர் சொன்ன வார்த்தைகள் இன்றைக்கும் சிங்கப்பூருக்கு மட்டுமில்லை தமிழகத்துக்கும் பொருந்தக் கூடிய ஒன்றுதான்.
சிங்கப்பூரின் தமிழ் எழுத்தாளர்கள் மாண்டரின், மலே, ஆங்கிலம் ஆகிய மொழிகளின் எழுத்தாளர் களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது சிறுபான்மையிலும் சிறுபான்மையாகும். இதில் நவீன கவிதையைப் பயில்கிறவர்கள் இன்னும் சிறுபான்மை என்றுதான் சொல்ல வேண்டும். இத்தகையச் சூழலில் கவிதை எனும் ஒன்றின் மூலமாகத் தனது சுயத்தை சகமனிதர்களோடு பகிர்ந்து கொள்ளத் துணிவது என்பது பாதுகாப்பான துறைமுகங்களை விட்டு விலகி, அலைவீசி ஆர்ப்பரிக்கும் ஒரு கடலில் ஆலிலை ஒன்றின்மீது அமர்ந்து பயணப்படுவது போல ஒரு சாகசச் செயல்பாடுதான் என்று எனக் குத் தோன்றுகிறது. சித்துராஜ் பொன்ராஜ், மகேஷ்குமார் , நெல்சன் கென்னடி, ப்ரியா கணேசன் , அழகு நிலா, மதிக்குமார் தாயுமானவன் , எம்.கே.குமார் , ராஜூ ரமேஷ், பாரதி மூர்த்தியப்பன், யாழிசை மணிவண்னன் , பாலு மணிமாறன், சுபா செந்தில்குமார் , சித்திரா ரமேஷ் என்று நீளும் பட்டியலில் மட்டுமின்றி சிங்கப்பூர் கவிஞர்கள் எல்லோருமே இப்படி தங்களின் பண்பாட்டு அடையாளத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காக இத்தகைய பயணத்தை மேற்கொள்ளவே செய்கி றார்கள்.
இதுவரையிலும் சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் பல கவிதைத் தொகுப்புகளுக்கு நான் முன்னுரை கொடுத்து ஊக்கப்படுத்தி இருக்கிறேன். பிச்சினிக்காடு இளங்கோவிடம் சிங்கப்பூர் இலக்கிய உலகம் பற்றி நிறைய பேசி இருக்கிறேன். எனவே இன்று சிங்கப்பூரின் இளைய நவீன கவிஞர்கள் சிங்கப்பூர் தமிழ்க் கவிதைக்குப் புது ரத்தம் பாய்ச்ச புறப் பட்டிருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன்.
கவிதை என்பது இன்னும் அர்த்தத்துடன் வாழ்ந்து பார்க்க முயற்சி செய்யும் ஒருவிதமான சோதனைச் சாலை என்று அமெரிக்க இசை மேதையும், தத்துவ ஞானியுமான ஜான் கேஜ் குறிப்பிடுகிறார். இன்று கவிதை எனும் சோதனைச்சாலையில் சிங்கப்பூரின் ஏராளமான இளைய சக்திகள் நுழைந்து பங்களிக்கத் தொடங்கி இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
குறிப்பாக சிங்கப்பூரில் எழுதப்படும் பெரும்பாலான கவிஞர்களின் அக்கறை நவீனத்துவத்தைக் காட்டிலும் நல்ல தமிழ் மொழிப் பிரயோகமாக இருக்க வேண்டும் என்பதாகவே இருப்பதை நாம் இங்கு கவனத்தில் எடுக்க வேண்டும். இதை நான் ஒரு குற்றச் சாட்டாக அல்லாமல் இணைய வெளி புதிய கவி வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைக் கொடுத்திருக்கும் கால கட்டத்தில் மிகவும் தேவைப்படும் ஒன்றாகவே முன் வைக்கிறேன்.
தமிழன் சிங்கப்பூரில் தனக்கென்ற ஒரு இன அடையாளத்தைக் கட்டமைக்கும் மிக முக்கியமான ஒரு கருவியாக அவனது தமிழ் மொழி அமைகிறது.
சிங்கப்பூர் கவிஞர் சித்துராஜ் பொன்ராஜின் குரல் மிக முக்கியமான ஒன்றாக எனக்குத் தெரிகிறது இதுவரை தொடர்ந்து பேசப்பட்ட கவிதைக்கான கருப்பொருள்களையும், உருவ அமைதி களையும், மரபார்ந்த அழகியலைச் சுவாசிக்கும் மொழி வெளிப்பாட்டையும் சற்றே தள்ளி வைத்து , ஒரு புதிய கவிதை அழகியலைப் பரிட்சித்துப் பார்க்கும் செயலில் இறங்கி விடுகிறார் சித்துராஜ் பொன்ராஜ்.
இவர் கவிதைகளில் வாகனங்கள் அதிரக் கடக்கும் பாலங்கள், நாயின் நிழல் பூத்த ஆண் குறி, பருந்திடமிருந்து தப்பிய முயல்களின் இன்னமும் உஷ்ணமாயிருக்கும் கால் தடங்கள், வான், உருவம், நான், நீ எல்லாம் கலைய இடை கொழுத்த நடசத்திரங்கள், ரோமம் சிலிர்க்க ஆசை தீர சுவரில் உரசிக் கொண்டு போகும் வீட்டுப் பூனை, வாய் கோணி குருட்டு ஹாரன்களாய் ஊளையிடும் காமச் செந்நாய், அடுத்தடுத்த மேசைகளில் பூத்திருக்கும் வெயில், முதலைகளின் ஈரமான மூக்குகளில் ஒருக்களித்துக் கிடக்கும் நதி என்று கவித்துவ கற்பனைகளுக்குப் பஞ்சமே இல்லை. இவற்றைப் பார்க்கும்போது சித்துராஜ் நேர்ப் பேச்சில் என்னிடம் சொன்னது மாதிரி ஒரு எதிர் கவிதையாளராக மாறச் சாத்தியமே இல்லை என்றுதான் தோன்றுகிறது. எதிர் கவிதை தாதா நிக்கனோர் பர்ராவுக்கே அழகியல் கற்பனைகளிலிருந்து தப்ப முடியவில்லை என்றால் சித்துராஜ் பொன்ராஜினால் அது முடியுமா என்ன?
சிங்கப்பூர் கவிஞர்களில் அந்த நாட்டின் கலவையான ஒரு பண்பாடு உள்ளே நுழைகிறது. மகேஷ்குமார் எழுதிய “ ஒலிபரப்பு’’ எனும் கவிதையில் கடல்நாகங்கள் , சிவப்புக் கூரை வேய்ந்த கோயில், ஃபூ சிங்கங்கள் , முரசுகள், வாசனைக்காடு, காவல் கொக்குகள், உள்ளே மௌனமாய் அமர்ந்திருக்கும் புத்தன் என்று தற்கால தமிழ்க் கவிதைப் பரப்புக்குள் இதுவரை நுழைந்திராத சீன வாசனை வீசும் தற்கால புத்தர் கோயில் நுழைகிறது. இதனால் தமிழனின் ஐந்திணைக் கோட்பாட்டுக்குள் சிங்கப்பூரின் புதிய பூகோளம் உள் நுழைகிறது. பௌத்தக் காப்பியங்களான ’’ மணிமேகலை “, “குண்டலகேசி’’ காலத்திலிருந்தே பௌத்தம் தமிழகத்தில் முக்கிய இடம் வகித்ததென்றா லும் தற்காலக் கவிதையில் இது போன்ற புதிய கலாசாரப் பதிவுகள் தமிழைச் சர்வதேச மொழியாக்குகிறது.
நகரம் சார்ந்த கவிதைகளை எழுதுவதில் தனிகவனம் செலுத்தும் எனக்கு மகேஷ்குமார் கவிதைகள் சிங்கப்பூரைப் போன்ற பெருநகர வாழ்க்கையில் சிரிப்புகளைச் சேமிப்பது பற்றியும், காலியான தேனீர்க் கோப்பைக்குள் படிந்திருக்கும் கரைகளின் மீது ஈ மொய்ப்பது பற்றியுமாக நகர்மய தற்கால வாழ்க்கையின் பரிமாணங்களைக் காட்டுவது உவப்பளிக்கிறது.
ப்ரியா கணேசனின் கவிதைகள் வித்தியாசமானவை. செரிமானமாகாது உழலும் மௌனம் தின்ற இரவுகளும், வெண்பட்டு உடுத்தி விருந்துக்குக் காத்திருக்கும் இரவும், குழம்புக் கரைசலில் நழுவி விழும் ஒரு துளி காதலும் அன்றாட வாழ்க்கையைக் கவித்துவமாக உள்வாங்கும் மனம் இருப்பதின் அடையாளமாகக் காட்டுகின்றன. “சுயம்’’ எனும் கவிதை கவனத்தை ஈர்க்கிறது.
சுயம்?
வேறு தலைப்பிட்டு
வெகுவாய் சொற்கள் மாற்றி
வரிகளை மேலும் அதிகமாய் குறைத்து
அச்சிலேறவும், அரங்கம் காணவும்
கருத்திலும் உடன்பட்டு உருமாற்றி
இறுதியில் சற்றே பெரிய எழுத்தில்
என் பெயரிட்டு
முற்றுப் புள்ளி வைக்கையில்
முகத்தில் காறி உமிழ்ந்தது
கவிதை!
எனும் ப்ரியா கணேசனின் கவிதையில்
கவிதை எழுத முயல்கையில் எதிர்கொள்ளும் சமரசங்களினால் வெதும்பிய முழுச் சுதந்தி ரத்தை நேசிக்கும் மனம் சிறப்பான வடிவ நேர்த்தியோடு பதிவாகியிருக்கிறது. சிறந்த கவிதை என்பது ஒரே மூச்சில் எழுதி முடிக்கப் பெறுவது என்கிற மாய்மாலத்தை நான் நம்புவ தில்லை. கவிதையின் முதல் பிரதியில் பல்வேறு திருத்தங்கள் செய்வது என்பது தேவைதான் .ஆனால் அது கவித்துவத்தை அதிகரிப்பதற்காகச் செய்யப் பட்டதாக இருக்க வேண்டுமே தவிர “அச்சிலேறவும், அரங்கம் காணவும், கருத்தில் உடன்படவும்’’ செய்யப்படுவதாக இருக்கக்கூடாது. இதனை மிகச்சிறப்பாகக் கூறுகிறார் ப்ரியா கணேசன்.
மதிக்குமார் தாயுமானவனின் கவிதைகளில் தண்டவாள கல்லிடுக்கின் தவளைகளையும், பூட்டிய கதவு நிலையிலிருந்து கலவியைப் பார்க்கும் பல்லிகளையும், திசைகள் சுருங்கிய வனத்துக்குள் உதிர்ந்து திசைகளற்று பறக்கும் மலர்களையும் பற்றிய அபூர்வ கவனிப்புக்கள் விரவியுள்ளன. இவரது மச்சம்’’, “பேராழி, வளிமம்’’, போன்ற சொல்லாட்சிகள் களிப்பூட்டுகின்றன.
ராஜூ ரமேஷ் எதையும் சுருக்கமாகவும் சுருக்கெனவும் சொல்வதில் விருப்பமுடையவராகத் தெரிகிறார்.
மனிதன் மரணித்தவுடன் அவனை அவனது பெயர் சொல்லி அழைக்காமல் பிணம் என்று அழைக்கும் அவலத்தை, பிரியும்போது பெயரையும் உடன் எடுத்துச் சென்று விடுகிறது உயிர்’’ என்று சில சொற்களில் பேசி விடுகிறார் இவர்.’’ வாழ்நாள் எதிரியின் அபூர்வ மலர்களால் தொடுக் கப்பட்ட மலர்மாலைகள் சூடப்படுகின்றன என்று வர்ணிக்கப்படும் மரணத்தை ஆயுள் தண்டனையின் மன்னிப்பு என்று குறிப்பிடு கிறார். சுயம் என்பதை ஒரு வளர்ப்புப் பிராணியாக உருவகப்படுத்தி இருப்பது மிகவும் அருமை.
சுயம் ஒரு வளர்ப்புப் பிராணி வெளியே செல்லும்போது பூட்டிவிட்டுச் சென்றாலும் தனியே அது ஒரு சதுரத்துக்குள்ளாகவே சர்வ சுதந்திரத்துடன் வட்டமிடுகிறது.
கழுத்துச் சங்கிலியை ஆபரணமென கர்வத்துடன் சுமந்து திரிகிறது.
என்று எழுதிக் கொண்டு போகிறபோது ஒரு மனிதனின் சுயம் என்பதை வெளிக்காட்ட முடியாமல் அவன் எத்தகைய பல்வேறு சமரசங்களுக்கு உட்படுகிறான் என்பதை சுயம் ஒரு வளர்ப்புப் பிராணி என்ற ஒற்றை வாக்கியத்தில் அடக்கி விடுகி றார் ராஜூ ரமேஷ்.
யாழிசை மணிவண்ணன் கொல்லைப்புற நாவல் மரங்களினூடே குமிழ்ந்து கசியும் கனிகளை இரவின் சுவை என்றும், ஒரு முழுக்குடுவை மதுவை இரண்டு இரவுகளாகப் பிரித்து என்றும், பகல் மரணங்கள் சுயம் தொலைத்தவை என்றும் , கனவுகளில் பொழிந்தது அமில மழை என்றும், ஒவ்வொரு எண்களாக நலம் விசாரித்து நகருகின்றது கடிகாரத்தின் நொடி முள் என்றும் எழுதிச் செல்கிற போது தேய்ந்த பழம்பாதையில் செல்லாமல் புதிய பாதைகளைத் தன் கவிதைகளில் தேட வேண்டும் எனும் யாழிசை மணிவண்ணனின் தவிப்பு தென்படுகிறது. கட்டுமான ஊழியர்கள், சாப்பாட்டுக்கடையின் துப்புரவாளர்கள், முதுமக்கள் தாழிகளென சின்னஞ் சிறு அறையில் வாழும் மக்கள் என்று இவரது பாடுபொருள்கள் விளிம்புநிலை மக்களைப் பற்றி கவனம் குவிக்கின்றன.
பாலு மணிமாறனின் குரல் சிங்கப்பூர் போன்ற ஒரு ஹைடெக் தீவில் கான்கிரீட் வனந்தாரத்தில் வாழும் மனிதன் இயற்கையையும், மனிதத் தன்மையையும் தேடி அலையும் குரல். இவரது அலையில் பார்த்த முகம், சகபயணிகளோடு சில உரையாடல்கள் ஆகியவற்றில் இக்குணாம்சங்களைக் காணலாம்.
14 ஆவது மாடிக் குடியிருப்பென்பது பறந்து செல்லும் பறவைகளின் பேச்சை ஒருமுறையாவது ஒட்டுக் கேட்கும் ஒரு வாய்ப்பு. என்று ஓர் அபூர்வ கவனிப்பை அவர் செய்கிறபோது இயற்கையோடு உறவு கொள்ளத் துடிக்கும் மனிதனின் அசல் குரல் கேட்கிறது.
அன்பின் குளிர் நிறைந்த தேசத்தின் ஆறுகளைக் கடக்க முடியாதபடி பாலங்கள் தகர்ந்து பல நாட்களாகின்றன.’’
என்றும், பூனைகள் தம் வாழிடம் குறித்து பிரத்தியேக மௌனம் கொள்கின்றன என்றும், மியாவைத் தவிர வேறொரு மொழியறியாது அவனது சொற் பூனை ’’ என்றும் பாலு மணிமாறன் எழுதிச் செல்கிறபோது அன்னியதேசத்தில் குடிபெயர்ந்த தமிழனின் சோகம் நம் நெஞ்சைத் தொடுகிறது.
நாய்களும் நடைபோகும் ஈரச் சாலையில்
எப்படியும் தற்கொலை என்ற முடிவோடு
நகர்கிறது ஒரு நத்தை.’’
எனும் வரிகள் ஏற்படுத்தும் காட்சி இருத்தலின் தனிமையை வாசகனின் மனதில் ஆழப் படியவைத்து விடுகின்றன. மனிதர்களுக்குள் நிஜமான உறவுகளைத் தேடி இவரது படைப்புகள் நீள்கின்றன.
சுபா செந்தில்குமார் ’’ உலகின் சிறுகுரல் ’’ எனும் கவிதையில் வியட்னாம், சிரியா, ரோஹிஞ்சியா, ரஷ்யா, தமிழ்நாடு என்று உலகின் மூலை முடுக்கெல் லாம் வதைபடும் குழந்தைகளின் குரலை எதிரொலிக் கிறார். “சுரபி’’ எனும் கவிதையில் பதினெட்டாம் மாடியிலிருந்து வீசியேறியப்பட்ட ஞெகிழிப்பை பற்றி எழுதுகிறார். காடழித்து வீடுகட்டி மறுபடி அதில் பறவைகளுக்கான் கூடு சமைக்கும் மனிதர்களைத் தனது “மறுபடியும்’’ எனும் கவிதையில் இவர் எள்ளி நகையாடுகிறார்.
இன்று என் வனமழித்து
வேயப்பட்ட
உன் வரவேற்பறையில்
கூடொன்று நெய்து என்னைக்
கூவி அழைக்கிறாய்.’’
என்று இவர் எழுதுகிற போது இவரது சூழலியல் அக்கறைகள் துலக்கமாய்த் தெரிகின்றன.
சிங்கப்பூர் கவிஞர்கள் ஒவ்வொருவரையும் எடுத்து வைத்து தவளையின் பாகங்களைப் பரிசீலிப் பதுபோல் ஆராய வேண்டுமெனத் தோன்றினா லும் கட்டுரையின் நீளம் கருதி இக்கட்டுரையை நான் முடிக்க வேண்டி இருக்கிறது. மிக விரைவில் சிங்கப்பூர் கவிதைகள் தமிழின் ஒரு தனி வகைமாதிரி எனும் பெயர் வரும் என நம்புகிறேன்.