குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு என்பார் வள்ளுவர்...
அதிகாரத்தின்மூலம் குறையின்றி மக்கள் நலனுக்காகப் பாடுபடுபவரை, தமது உறவுபோல் எண்ணி மக்கள் கொண்டாடுவார்கள் என்பது இதன் பொருள். அதிகாரத்தில் இருப்பவர்கள் மக்களுக்காக வாழவேண்டுமென்று இதன்மூலம் உணர்த்துகிறார் அவர். ஏனெனில்....
அரசும் அதிகாரமும் மக்களுக்காகத்தான்.
ஆனால் இன்று அதிகாரத்தை வைத்திருக்கும் அரசாங்கத்தினர், தங்களுக்காகத்தான் மக்கள். தாங்கள் கசக்கிப்பிழியவே அப்பாவிக் குடிமக்கள் என்ற மமதையில் இருக்கிறார்கள்.
அவர்களிடம் இருக்கும் அதிகாரம் குடிமக்களால் கொடுக்கப்பட்டது என்பதை எண்ணிப் பார்ப்பதில்லை. மக்களைத் தேடித் தெருத்தெருவாய்ச் சென்று, அவர்கள் வீட்டு வாசலில் நின்று, கையேந்தி தாங்கள் வாக்கு கேட்டதையும் அதனால்தான் அதிகாரம் கிடைத்தது என்பதையும் அவர்கள் மறந்துவிடுகிறார்கள். பதவிக்கு வந்ததும் ஒயிட் அண்ட் ஒயிட்டில், அதே மக்கள்முன் படாடோபமாக வலம்வருகிறார்கள்.
ஏகபோகமாக வாழத்தான் பதவி என்று ஆட்டம் போடுகிறார்கள்.
ஆட்சிப்பொறுப்பைக் கொடுத்த மக்களுக்கு ஒரு துயரம் வந்தால், ஓடிப் போய் நிற்கவேண்டுமே, அவர்களின் துயரத்தைத் துடைக்கவேண்டுமே என்கிற அக்கறைகூட அவர்களிடம் இல்லை.
இப்படிப்பட்டவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்ததன் விளைவைத் தமிழக மக்களும் இந்திய மக்களும் இப்போது அனுபவித்து வருகிறார்கள்.
கஜா புயல் டெல்டா பகுதியில் இருக்கும் எட்டு மாவட்டங்களைச் சீரழித் திருக்கிறது. குறிப்பாக நாகை, திருவாரூர் மாவட்டங்களைப் புரட்டிப் போட்டு, பெரும் நாசத்தை உருவாக்கியிருக்கிறது. ஏறத்தாழ 60 பேரின் உயிர்களை அது தன் கொடுங்கரங்களால் பறித்திருக்கிறது. ஏறத்தாழ ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்திருக் கின்றன. இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மரங் களைப் புயல் பெயர்த்துப் போட்டிருக்கிறது. ஆயிரக் கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் சிதிலமாகி விட்டன. எண்ணற்ற கால்நடைகள் மழை நீரில் செத்து மிதந்தன. உயிரையும் பயிரையும் உடமைகளையும் இழந்து, டெல்டா மக்கள் கண்ணீரும் கம்பலையுமாக, உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி படுக்க இடமின்றி, மின் வசதி, குடிநீர் வசதிகூட இன்றி, ஒருநாள் புயலிலேயேயே தெருவிற்கு வந்திருக்கிறார்கள்.
விவசாயத்தால் அள்ளிக்கொடுத்த மக்கள், கையேந்தி கதறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், நம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அந்த நேரத்தி லும் தன் சொந்த ஊரில் அரசு விழா, கும்பாபிஷேகம், விருந்து என மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் மகிழ்வில் திளைத்துக்கொண்டிருந்தார். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாகப் போகவேண்டுமே என்ற எண்ணம்கூட அவருக்கு எழவில்லை. அனைத்து அரசியல் கட்சிகளும் சமூக, தன்னார்வ அமைப்பு களும் அங்கே வரிந்துகட்டிக்கொண்டு, மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். ஸ்பாட்டுக்கு வந்த ஓரிரு அமைச்சர்களும் நிவாரண உதவிகளை முடுக்கத் தெரியாமல் மக்களால் துரத்தப்பட்டார்கள். இந்த நிலையில் தனது விருந்து, விழாக்களை எல்லாம் முடித்துக்கொண்டு 20-ஆம் தேதிதான் எடப்பாடியும் ஓ.பி.எஸ்.சும் ஜோடி போட்டுக்கொண்டு, ஆடி அசைந்த படி அங்கே போகிறார்கள். அதுவும் எப்படி? ஹெலிகாப்டரில் ஏறி, வானில் இருந்தபடியே இரண்டு மூன்று பகுதிகளை மட்டும் பார்த்துவிட்டு, தஞ்சைப் பகுதியில் ஒரு இடத்தில் மட்டும் திரட்டி வைத்திருந்த தங்கள் கட்சிக்காரர்களுக்கு மட்டும் நிவாரணப் பொருட்களை வழங்கிவிட்டு சென்னைக்குத் திரும்பி விட்டார்கள். எந்தப் பகுதி புயலால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டதோ, அந்தப் பகுதிக்கு எடப்பாடி போக வில்லை. கேட்டால், ஏற்கெனவே ஒப்புக்கொண்ட அரசு நிகழ்ச்சிகள் இருந்ததால், போகமுடியவில்லை என்று வெட்கமில்லாமல் சொல்கிறார் எடப்பாடி. இப்படிப் பட்டவர்களை என்ன செய்வது? எந்தக் கணக்கில் சேர்ப்பது?
ஒரு பத்திரிகை தரும் விருதை வாங்குவதற்காக, ஏற்கெனவே முடிவான டெல்லி பயணத்தை, மத்திய அரசிடம் நிவாரண நிதி கேட்கும் பயணம் என்று அறிவித்து டிராமா போட்டார் எடப்பாடி. ஆனால் அங்கு போயும் பிரதமர் மோடியிடம் கைகட்டி, வாய்பொத்தி நின்று, ஏதாவது உதவி செய்யுங்கள் என்றி பம்மிப் பம்மிக் கேட்டார். பாதிக்கப்பட்டது அவரது குஜராத் இல்லை என்பதால், அதை அலட்சியப்படுத்திய மோடி, மத்தியக் குழு பார்வையிட்ட பிறகுதான் நிதி அறிவிப்பு என்றபடி அவரை வெறும்கையோடு திருப்பி அனுப்பிவிட்டார்.
முதல்வராக இருக்கும் எடப்பாடி சேதப் பகுதி களுக்கு முழுதாய்ப் போகவில்லை. சேத மதிப்பையும் சரியாய்க் கணித்து அறிக்கையாகத் தரவில்லை. அப்படி யிருக்க எப்படி நிவாரண நிதியை அறிவிப்பார்கள்? என்று ஏளனமாய்ச் சிரிக்கிறார்கள் டெல்லியில் இருக்கும் அதிகாரிகள்.
முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர் திறப்பாடு இலாஅ தவர்’ என்பார் வள்ளுவர். இதன் பொருள், செயல்திறன் இல்லாதவர்களிடம் கொடுக்கப்பட்டால் அதிகார மும், திட்டங்களும்கூட முழுமையாகாமல் முடங்கி விடும் என்பதாகும். இந்த லட்சணத்தில்தான் இருக்கி றது எடப்பாடி அரசு.
மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் தான்தோன்றித் தனமாக நடந்துகொள்ளும் எடப்பாடி தரப்புக்கு, கொடுங்குற்றம் இழைத்த கட்சிக்காரர்கள்மீது மட்டும் அதீத கருணை சுரக்கிறது.
பிளசன்ட் ஸ்டே ஓட்டல் முறைகேட்டு வழக்கில் 2000-ல் ஜெ.வுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது, ஜெ.வின்மீதான விசுவாசத்தைக் காட்டுவதாகச் சொல்லிக்கொண்டு அதி.மு.க.வினர் ருத்ரதாண்டவம் ஆடினர். ஏறத்தாழ 60-க்கும் மேற்பட்ட பேருந்துகளை அடித்து உடைத்த னர். ஐந்து பேருந்துகளை பெட்ரோல் ஊற்றி எரித்த னர். இந்த கொடூரர்களிடம், பேருந்தில் சுற்றுலா சென்றுகொண்டிருந்த கோவை வேளாண் கல்லூரி மாணவிகள் சிக்கினர். அந்தப் பேருந்தை வழிமறித்த அந்தக் கொலைபாதகர்கள், மாணவிகளோடு சேர்த்து பஸ்சுக்குத் தீ வைத்தனர். இதைக்கண்டு பதறிப்போன மாணவிகளுக்கு, பஸ்சில் இருந்து இறங்கக்கூட அவகாசம் தரவில்லை. தீ வைக்கப்பட்டிருந்த பேருந்தில் இருந்த மாணவிகள் அலறித் துடித்தார்கள். தப்பிக்க முயன்றார்கள். அப்படியிருந்தும் சென்னையைச் சேர்ந்த ஹேமலதா, விருத்தாசலத்தைச் சேர்ந்த காயத்ரி, நாமக்கல்லைச் சேர்ந்த கோகிலவாணி ஆகிய மூன்று மாணவிகளும் துடிதுடித்து தீயில் கருகி இறந்தார்கள். மேலும் 16 மாணவிகள் தீக்காயங்களோடு உயிர் தப்பினர். இப்படி கல்லூரி மாணவிகளைத் தீவைத்து எரித்த கொடூர நெஞ்சம் படைத்த குற்றவாளிகளில் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூன்று பேருக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. இந்தக் கொலை பாதகர்களுக்குத்தான் புனிதவேடம் கட்டி, அவர்களை எடப்பாடி அரசு ஆர்வமாய் விடுதலை செய்திருக்கிறது. அதுவும் எப்படி?
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பத்து ஆண்டுகளுக்கும்மேல் ஆயுள் தண்டனை அனுபவிக் கும் கைதிகளை விடுவிக்கிறோம் என்று, அந்தப் பட்டியலில் இந்த மூவரையும் சேர்த்தனர். இப்படி கைதிகளை விடுவிக்க ஆளுநரின் அனுமதி தேவை என்பதால், அந்தக் கொலையில் எந்தவித சதியோ உள் நோக்கமோ இல்லை. அவர்களை விடுவிக்கலாம் என்று எடப்பாடி பரிந்துரையை பன்வாரிலால் புரோகித் துக்கு, அரசு சார்பில் அனுப்பிவைத்தனர். இதைப் பேருக்கு ஒருமுறை நிராகரித்தார் கவர்னர். அந்தப் பரிந்துரையை எடப்பாடி அரசு, மீண்டும் கவர்னருக்கே அனுப்ப, அதை ஏற்றுக்கொண்டு அவர்களை விடுவிக்க சம்மதித்தார் கவர்னர். உடனடியாக சற்றும் தாமதமின்றி, அன்றே அந்த மூவரையும் விடுதலை செய்திருக்கிறது எடப்பாடி அரசு.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட கவர்னர் மாளிகை... தலைமை வழக்கறிஞரும் தலைமைச் செயலாளரும் கொலைசெய்யும் நோக்கத்தோடு மூன்றுபேரும் செயல்படவில்லை என்று குறிப்பிட்டி ருந்தனர். மறுபரிசீலனையின்போதும் அரசு இதே கருத்தை வலியுறுத்தியிருந்தது. எனவே சட்டப்பிரிவு 161-ன் படி அந்த மூவரையும் விடுதலை செய்ய உத்தர விடப்பட்டது என்று குறிப்பிட்டிருக்கிறது.
பேருந்துக்குள் மாணவிகள் இருக்கும்போதே, எங்களை விட்டுவிடுங்கள் என்று அவர்கள் கதறித் துடிக்கும்போதே, கல் நெஞ்சத்தோடு, கொடூர வெறியோடு, அந்தப் பேருந்துக்குத் தீ வைத்தவர்களுக்கு எந்தவித உள்நோக்கமும் இல்லையாம். தீவைத்தால் அவர்கள் இறந்து போவார்கள் என்பது தெரியாதா? அவர்கள் பேருந்துக்குள் இருக்கும்போதே தீவைப்பது திட்டமிட்ட கொலை இல்லையா? இப்படிப்பட்ட கொடூரர்களை விடுதலை செய்த எடப்பாடி அரசும், கவர்னரும்... ராஜீவ் விவகாரத்தில் சிக்கி, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, 27 ஆண்டுகளாய் சிறையில் அடைபட்டிருக்கும், பேரறிவாளன் உள்ளிட்ட அந்த ஏழு பேரிடம் இன்னும் இரக்கம் காட்டவில்லை.
நான் பேருக்கு விடுதலை செய்யப் பரிந்துரை செய்கிறேன். அதை நீங்கள் கிடப்பில் வைத்துவிடுங்கள் என்று பேசி வைத்துக்கொண்டு செயல்படுவதுபோல், எழுவர் விடுதலை விஷயத்தில் நாடகம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட விவகாரம், எப்படி எப்படியெல்லாம் திசைமாற்றி விசாரிக்கப்பட்டது என்பதை உலகமே அறியும். அந்த வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரியான தியாகராஜனே, நான் இட்டுக்கட்டி, வழக்கை ஸ்ட்ராங் காக ஆக்குவதற்காக, பொய்யாய் சிலவற்றை வாக்கு மூலத்தில் சேர்த்தேன் என்று நீதிமன்றத்திலேயே சொன்னார். அதன்பின்னரும், ஏழு பேரின் நிலைமை யைக் கருதாமல், அவர்களின் நன்னடத்தையைப் பரிசீலிக்காமல், அவர்களை விடுவிப்பதில் முனைப் பில்லாமல் இருக்கிறார்கள் என்றால், அவர்கள் எப்படிப் பட்டவர்கள்?
இந்த விவகாரத்தில் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் விருப்பத்தை மதிக்காமல், ஏழு பேர் குறித்த விடுதலையை இரண்டு மாதங்களுக்கும் மேலாய் பரிசீலிக்காமல், அதற்கான கோப்பை கவர்னர் இரக்கமில்லாமல் கிடப்பி லேயே போட்டு வைத்திருக்கிறார். ஊரூராய்ச் சென்று குப்பை கூட்டுவதையே தனது பிரதான பணி என்று கருதும் கவர்னருக்கு, ஏழு பேர் விடுதலையைப் பரிசீலிக்க நேரமில்லை. அறத்துக்கு எதிரான இவர்களுக்கு காலமே உரிய பாடத்தை உரிய நேரத்தில் புகட்டும்.
அதுவரை நம்பிக்கையோடு காத்திருப்போம்.
ஆதங்கத்தோடு,
நக்கீரன்கோபால்