அன்பில் உன்னை
தேடித் தேடி தகிக்கும்
வெயில் அனுப்புகிறாய்..
மனதில் என்றுமே
காயாத ஈரம் நிறை
மழையனுப்புகிறேன்...
கருணையோடு
கட்டிப்புரளும் பருவத்தின்
மீது
கிளைக்கிறது
காதலின் ஆணி வேர்
முன்னின்று
விழி பார்த்த போது
மெய்யுருகி கருவறைக்குள்
கடவுளைக் கண்ட சிலிர்ப்பு
பிடிவாதமாய் நிஷாகந்தி
பூத்த திக்கில் மனதை
மட்டும் விட்டு வருகிறேன்...
மருதாணி பூசி மனமுருகி
வேண்டிக் கொண்டது
நன்னிமித்தங்கள் எல்லாம்
கைகூடட்டுமென்று தான்
அணில்கள் விளையாடும்
மரபுக் காடுகளில்
குழந்தையாகும் உன்னை
வாரியைணைக்கிறதென் தாய்மை..
இனியெல்லாம் நலமேயென
ஊதிடும் குழலோசையில்
காற்றோடு சேதி சொல்லும்
உன் முதுமொழி..
ஆயுளுக்கும் மாறாத பேரன்பில்
இருள் காட்டின் ஒளி தரும்
பொருட்டு பற்றிச் சுடர்க
என் உயிரொளியே...
- இன்போ.அம்பிகா