மிழ்ப்பண்பாட்டு ஆய்வாளரும் மானுடவியல் அறிஞருமான பேராசிரியர் தொ.பரமசிவம், கடந்த 24-ந் தேதி இயற்கை எய்தினார்.

அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகத்தைப் பெரும் துயரத் தில் ஆழ்த்தியிருக்கிறது. அவர் நினைவாக அவர் எழுதிய ஒரு கட்டுரையை இங்கே வெளியிட்டுத் தனது ஆழ்ந்த அஞ்சலியை இனிய உதயம் செலுத்து கிறது. அவரது வேறுபட்ட பார்வைக்கு இக்கட்டுரையே சான்று. )

teacher

தஞ்சைப் பெரியகோயில் உலகெங்கிலுமிருந்து காணவரும் மக்களை மிரளவைக்கும் பிரம்மாண்டம் இது. ஏகாதிபத்தியத்தின் கலை வெளிப்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். சோழப் பெருமன்னன் முதலாம் ராசராசனால் (கி. பி. 985 – கி. பி. 1012)கட்டப்பட்டது இது. ஆனால் அந்தப் பெருவேந்தனே இக்கோயிலைத் தான் கட்டியதாகக் குறிப்பிடாமல் ‘கட்டுவித்ததாகக்’ குறிப்பிடுகின்றான்.

Advertisment

“ பாண்டிய குலாசநி வளநாட்டு தஞ்சாவூர்க் கூற்றத்து தஞ்சாவூர்

நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீ ராஜராஜீச்வரமுடையார்க்கு

நாங்குடுத்தநவும் அக்கன் குடுத்தநவும் நம் பெண்டுகள் குடுத்தநவும்

Advertisment

மற்றும் குடும்பத்தார் குடுத்தநவும் ஸ்ரீவிமாநத்தில் கல்லிலே வெட்டுக என்று திருவாய் மொழிஞ்சருள வெட்டிந’’

-என்பது இக்கோயிலின் முதல் கல்வெட்டு.

உடையார் என்பது அக்காலத்தில் அரசனுக்கும் இறைவனுக்கும் பொதுவாக வழங்கிய பெயராகும். அக்காலத்து மன்னர்களின் வழக்கப்படி அரசன் இக்கோயிலுக்கு ராஜராஜேச்வரம் என்று தன் பெயரையே சூட்டியுள்ளான். அக்கன் என்று குறிப்பிடப்படுவது. அவனது தமக்கையாரான ‘ஸ்ரீவல்லவரையர் வந்தியத் தேவர் தேவியார் ஆழ்வார் பரநிந்தகன் குந்தவை’யாரைக் குறிப்பிடுவதாகும்.

பெண்டுகள் என்பது மனைவியரையும் பணி மகளிரையும் குறிக்கும். அவனும் அவன் அதிகாரிகளும் கொடுத்த தங்கம், வெள்ளியால் ஆன நகைகள், கலங்கள், உலோகத்திருமேனிகள் தவிர இக்கோயில் முழுவதும் கல்லாலேயே ஆக்கப்பட்டது. மலைகளே இல்லாத ஒரு நிலப்பரப் பால் சூழப்பட்ட இக்கற்றளிக்குத் (கற்றளி = கற்கோவில்) தேவையான கற்கள் நார்த்தா மலையிலிருந்து (இன்றைய திருச்சி மாவட்டம்) கொண்டுவரப்பட்டது என ஆய்வாளர்கள் கருது கின்றனர்.

196 அடி உயரமுள்ள இக்கோயிலின் விமானம் (கருவறைக்கு மேல் உள்ள பகுதி) செதுக்கப்பட்ட கற்களை அடுக்கிக் கட்டப்பட்டதாகும். ஆயிரமாண்டுக் காலத்தில் எத்தனையோ புயல்,மழை இயற்கைச்சீற்றங் களைக் கண்டபோதும் ஒரு கல் கூட ஒரு சென்டிமீட்டர் அகலம் கூட விலகவில்லை என்பதுதான் இதனுடைய தொழில்நுட்பச் சிறப்பு. வெளியிலிருந்து பார்க்கும் போது கோபுரம் போலத் தெரியும் இந்த விமானம் கற்களை வட்டமாக அடுக்கியே கட்டப்பட்டதாகும். நடுவில் தளங்கள் கிடையாது. கி. பி. 1010 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் நாள் ஆறாண்டுக் காலத்தில் கட்டப்பட்ட- இக்கோயிலில் வழிபாடு துவங்கியது.

உண்மையில் இதன் பெருமையெல்லாம் இதைக்கட்டிய கல்தச்சர்கள், சிற்ப ஆசாரிகள், உழைப்பாளிகள் ஆகியோரின் உடல் உழைப்பையும் மதி நுட்பத்தையுமே சாரும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் இக்கோயிலில் பணியாற்றியுள்ளனர். காவிரி நாட்டின் பல ஊர்களிலிருந்தும் 400 தளிச்சேரிப் பெண்டுகள் ( தளி = கோயில், சேரி = சேர்ந்து வாழும் இடம் ) கொண்டுவரப்பட்டு நியமிக்கப்பட்டனர்.

tt

இவர்கள் கோயிலில் அலகிடுதல்/மெழுக்கிடுதல் போன்ற பணி செய்பவராகவும் பகலில் விளக்கேற்றுதல் போன்ற பணி செய்பவராகவும் ஆடுமகளிராகவும் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டிருந்தனர்.

விளக்கெரிப்பதற்காக நானூறு இடையர்களுக்கு ஆடுகள், மாடுகள், எருமைகள் ஆகியன வழங்கப்பட்டன. இந்த ஆடுகள் ‘சாவா மூவாப்பேராடுகள்’ என அழைக்கப்பட்டன. இவர்கள் ஒவ்வொருவரும் நாளொன்றுக்கு உழக்கு நெய் விளக்கெரிக்கக் கோயிலுக்குக் கொடுக்க வேண்டும்.

நெல் அளக்கும் மரக்காலுக்கும் நெய் அளக்கும் உழக்குக்கும் ’ஆடவல்லான்’ என்று அரசன் பெயரே சூட்டப் பட்டது. கோயிலுக்கான பாதுகாவலர்கள் “திரு மெய்க்காப்புகள்’’ எனப் பட்டனர். தஞ்சை மண்டலத்தின் ஒவ்வொரு ஊர்ச்சபையாரும் ஒரு திருமெய்க்காப்பாளரைப் பெரியகோயிலுக்கு அனுப்ப வேண்டும். தளிச்சேரிப் பெண்டுகளைப்போல இவர்களுக்கும் ஆண்டொன்றுக்கு 100 கலம் நெல் வழங்கப்பட்டது. இக்கோவி லைக் கட்டிய சிற்பிக்கு ’இராஜராஜப் பெருந்தச்சன்’ என்ற பட்டம் வழங்கப் பட்டது. கோவிலில் நாவிதப்பணி செய்வாருக்கும் “இராஜராஜப் பெரு நாவிசன்’’ என்ற பட்டம் தரப்பட்டது.

இராஜராஜன் பிறந்த ஐப்பசிமாத சதைய நட்சத்திரத் திருவிழா ஐப்பசி மாதம் இக்கோவிலில் கொண்டாடப் பட்டது. இந்நாட்களில் ஆடியருளும் திருமஞ்சன நீரிலும் தண்ணீர் மீதிலும் ஒருநாளைக்கு ஏல அரிசி ஒரு ஆழாக்கும் பெருஞ்சண்பக மொட்டு ஒரு ஆழாக்கும் இடப்பெற்றுள்ளன ‘ என்று ஒரு கல் வெட்டால் அறியலாகிறது. திருச்சதைய நாள் பன்னிரண்டனுக்கும் ‘திருவிழா எழுந்தருளின தேவற்குத்’ திரு அமுது செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டமையை ஒரு கல்வெட்டுக் காட்டுகின்றது. மன்னன் இக்கோவிலில் உள்ள இறைத்திருமேனி களுக்குக் கொடுத்த தங்க அணிகலன்களின் எடை மட்டும் 1230 கழஞ்சு 4 மஞ்சாடி ஒரு குன்றி ஆகும். இது சுமார் 2 கிலோ 692 கிராம்களாகும். தங்கத்தாலான கலன்கள் இக்கணக்கில் சேராது.

இக்காலத்தவர் கருதுவதுபோல இக்கோயில் தமிழ்ச்சைவ நெறிப்படிக் கட்டப்பட்டது அன்று. காசுமீரத்துப் பாசுபத சைவ நெறிப்படிக் கட்டப்பட்ட தாகும். இக்கோவிலின் கருவறையைச் சுற்றி உள்ள ஊழ்த்திருச்சுற்றில் வாமம், அகோரம், சதாசிவம், சத்யோஜாதம் என்ற நான்கு திருமேனிகளைக் காணலாம். மூல லிங்கம் ஈசானதேவராகும். மூலலிங்கம் ஊன்றப் பட்ட ஆவுடையார் 32 முழம் திருச்சுற்று உடையதாகும். என்னதான் வியப்பைத் தந்தாலும் தஞ்சைப்பெருங்கோவில் ஏகாதிபத்தியத்தின் 10ஆம் நூற்றாண்டு வெளிப்பாடு என்று கூறுவதே பொருந்தும். ஏகாதிபத்தியத்துக்கென்று சில கலாச்சார வெளிப்பாடுகள் உண்டு. அவற்றில் ஒன்று அளவின் பிரம்மாண்டம் (133 அடி உருவத் திருவள்ளுவர் சிலை , பிரமிடுகள் போன்றவையும் இப்படித்தான். ) மற்றொரு பண்பு பொருட்களையும் மனிதர்களையும் தரவரிசைப்படுத்தும் நுட்பம்.

ஒரு நகைக்கான வர்ணனையில் முத்துக்களின் தர வரிசை இவ்விதமாக ஒரு கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது:-

‘ஸ்ரீராஜராஜ தேவர் ஸ்ரீபாதபுஷ்ப மாக அட்டித்திருவடி தொழுத இரண்டாந் தரத்தில் முத்தில் கோத்த முத்து வட்டமும் அனுவட்டமும் ஒப்பு முத்துங் குறுமுத்தும் நிம்பொளமும் பயிட்டமும் அம்புமுதுங்கறடும் இட்டையுஞ் சப்பத்தியுஞ் சக்கத்துக்குளுர்ந்த நீரும் சிவந்த நீரும் உடைய முத்து ஆயிரத்தைந்நூற்று இரண்டினால் நிறை நாற்பத்தியொரு கழஞ்சே ஒன்பது மஞ்சாடியும். . . . . . ’

ஏகாதிபத்தியத்தின் மற்றொரு பண்பு அளவுகளின் கூர்மை அல்லது ஆணைகளின் துல்லியத்தன்மை.

‘ நிலன் இருபத்தைஞ்சே இரண்டு மா முக்காணி

அரைக்காணிக் கீழ்

ஒன்பது மா முந்திரிகைக்கீழ் அரையினால் பொன் இருநூற்று நாற்பத்தாறு

கழஞ்சரையே மூன்று மா முக்காணியும் . . ’ என்று ஒரு ஆணை செல்கிறது.

ஆனால் இந்தப் பேரரசு எளிய மக்கள் வாழ்விடங்களான பறைச்சேரி, கம்மளச்சேரி, வண்ணாரச்சேரி, ஊர் நத்தம், பாழ் நிலம், ஊடறுத்துப்போகும் வாய்க்கால்கள் ஆகியவற்றை இறையிலி நிலங்களாக அறிவித்திருக்கிறது. அந்த நிலையே ஆங்கிலேயர் ஆட்சிக்காலம்வரை தொடர்ந்தது. எப்படியிருந்தாலும் தீண்டாச் சேரியும் பறைச்சேரியும் வாழ்ந்த காலம்தான் அது. பறைச்சுடுகாடும் கம்மாளச்சுடுகாடும் தனித்தனியாக இருந்த காலம்தான் அது. இந்தப் ‘பொற்காலம்’ பற்றி நிறையவே இன்னும் பேச வேண்டும்.

அப்படியானால் ராசராசனைத் தமிழுலகம் இன்னமும் ஏன் கொண்டாடுகிறது?

ராசராசன் தில்லையிலே அவன் காலத்திலேயும் நிலை பெற்றிருந்த பார்ப்பன மேலாதிக்கத்துக்கு எதிராகவே இக்கோவிலைக் கட்டியிருக் கிறான். தேவாரத் திருப்பதியங்களைப் பாட நாற்பத்தியெட்டுப் பேரை நியமித்திருக்கிறான். அதன் விளைவாகத்தான் தில்லைக் கோவிலின் மேன்மையைக் கொண்டாடிய சேக்கிழார் தஞ்சைப் பெருங்கோவிலைப் பற்றி மறைமுகமாகவேனும் ஒரு சொல் பாடவில்லை.