ஆதிமனிதனில் தொடங்கி -1920 முதல் உலக போர் 1940-ல் இரண்டாம் உலகப்போர் வரை - உலகவரைபடத்தின் எல்லைகள் மாறிக்கொண்டே இருந்தன.
அவை மன்னராட்சி தத்துவத்திலே தீர்மானிக்கப்பட்டு வந்தன.
அக்காலகட்டத்தில் ஒரு நாட்டின் மீது படையெடுத்தால், அந்த நாட்டின் மதிப்பைக் குலைக்க, கட்டிடங்கள், கோயில்கள் அனைத்தையும் அழித்து- அதைப் படைத்த சிற்பிகள், ஓவியர்கள் அனைவரையும் அடிமைகளாக தன் நாட்டிற்கு அழைத்துச் சென்றுவிடுவார்கள். அல்லது அவர்களின் கைவிரல்களை வெட்டி, கொலையும் செய்வார்கள்..
இப்படி பல ஆயிரக்கணக்கான வருடங்களாக தொடர்ந்த அழிவின் மீதமாகத்தான்- இன்று உலகில் பல பாரம்பரியச் சின்னங்கள் நின்று கொண்டிருக்கின்றன.!
அவை வரலாற்று உண்மைகள்.... அச்சின்னங்கள் பேசும் உண்மை, கசப்பான வரலாறாக இருந்தாலும் உள்வாங்கிக் கொள்ளவேண்டுமே தவிர, அதன்மேல் இன்றைய அரசியலை புகுத்திக் பார்க்க கூடாது!
உதாரணமாக, பல்லவர்கள் தமிழ் மண்ணைச் சார்ந்தவர்களல்ல .. ஆனால் அவர்கள் இம்மண்ணில் காஞ்சிபுரம், மகாபலிபுரம் என்று பாறைகளை குடைந்து ஓவியமாக்கியதைப்போல்..... நாயக்கர், இஸ்லாமியர், மஹாராஷ்டிரர், பிரிட்டிஷ்காரர்கள் காலத்து கலைப் பொக்கிஷங்களாக தமிழகத்திலும், இந்தியாவிலும் பல பதிவுகள் உள்ளன.
இஸ்லாமியர்களால் கோயில் சிலைகள் வெட்டப்பட்டு, கோயில் கள் அழிக்கப்பட்டு, அதனது எச்சங்களாக பல சிலைகள் வரலாறு பேசிக்கொண்டிருக் கின்றன.....!
அதேசமயம்- தாஜ்மஹால், ஆக்ரா, குதுப்மினார் போன்றவை அழகான அடையாளங்களாகவும் இருக்கின்றன.
அதேபோல்-சிந்துச் சமவெளி, இலங்கை, இந்தோனேசியா, கம்போடியா போன்ற இடங்களில் தமிழனின்ஆளுமைகள் வரலாற்றுப் பதிவாக நிற்கின்றன..!
பாரம்பரியமான அடையாளங்களை அழிப்பது, வரலாற்றை மறைக்க முயற்சிப்பதற்காகத்தான்....! ஆப்கானிஸ்தானில் மலைப்பகுதியில் உள்ள பிரம்மாண்டமான புத்தர்சிலை தலீபான்களால் தகர்க்கப்பட்டதும் இதற் காகத் தான்.
கடந்த கால வரலாற்றின் சாட்சியாக இருக்கும் இக்கலைப் பொக்கிஷங்களை ஒரு கலைஞனின் பார்வையோடு, அல்லது வரலாற்றாளனின் மனநிலையோடு பார்க்க வேண்டும்! அது எப்போதும் பேசுகிறது... நமக்குதான் கற்றுக்கொள்கிற மனம்வேண்டும்..!
அதைவிட்டு நிகழ்கால அரசியல்வாதிகளின் பேச்சை- கண்கள் வழியே வைத்துக் கொண்டு (மதம்.. இனம்.. ஜாதி என) பார்த்தால் விளைவு விபரீதம்தான் ... எதுவும் மிஞ்சாது!
நம்மைச்சுற்றி புதர்மண்டிக்கிடக்கும் வரலாறுகளை மீட்டெடுக்க முயற்சிப்போம்... எதிர்கால சந்ததியினருக்கு இந்த பாரம்பரிய சின்னங்களை பாதுகாத்துத் தருவோம்...!
மிருகங்கள் உணவுக்காக மட்டுமே வேட்டையாடும்...! மற்ற மிருகங்களை புணர்ந்ததாகவோ... இதுபோல் விலங்கினத்தில் உள்ள குழந்தைகளை புணர்ந்ததாக உதாரணம் காட்டமுடியுமா...? விலங்கினம், பறவையினங்கள்... அதனது குழந்தைகளை எப்படி அன்போடு கவனிக்கிறது, பாதுகாக்கிறது என்பதைப் பார்த்து அவற்றின்மேல் பெரிய மரியாதை கொள்கிறேன்...
இயற்கை விதிப்படி வாழும் அவற்றைவிட, ஆறாம் அறிவு பெற்றவர்கள் என்ற பெயரில், கடவுளை, மதத்தை காப்பாற்றுகிறேன் என்ற பெயரில் அனைத்து மதங்களிலும் உலகம் முழுக்க நடத்தும் இதுபோன்ற கொடூரங்கள் வெறுப்படைய வைக்கிறது...!
கருவறைக்குள் வைத்து நடந்த இந்த கொடூரத்தை...
8 நாளாக சாட்சியாக நின்ற அந்த நம்பிக்கையை எப்படி பார்ப்பது..?
அந்த குழந்தை வணங்கிய நம்பிக்கையும்...
இந்த கொடூரனுக்கு காவல்
காத்த நம்பிக்கையும்தான்...
இதில் முதல் குற்றவாளிகள்....!
இனி உங்கள் சட்டத்தை வைத்து கொடூரன்களைக் காப்பாற்றி, உங்கள் கடவுள்களையும், மதத்தையும் காப்பாற்றிக்கொள்ளுங்கள்.
இனி நான் மனித இனமல்ல...
விலங்கினம் என சொல்லிக்
கொள்வதில் பெருமை கொள்கிறேன்..!
இதுதான் ரத்தத்தில் ஊறிப்போன விஷயமோ..?
ரொம்ப நாளாக விடாம நெனப்புல கிடந்து துளைத்தெடுத்துக்கிட்டே இருந்தது.
நிறைவாக..... சிட்டுக்குருவிகள் தினத்தில் சென்னை செம்பரம்பாக்கம் ஏரியருகே உள்ள நிலத்தில்.. என்னை இயற்கையுடன் இணைத்துக்கொள்ளும் வேலையைத் துவங்கிவிட்டேன்..!
அங்கே- பறவைகள்... மரம்... செடி... கொடிகள்... என் ஓவியம்... இலக்கியம்... ஆகியவை மட்டுமே எஜமானனாக இருப்பார்கள்!
நான் வேலைக்காரன் மட்டுமே..
+2 வரை செருப்புப் போடாமல் நடந்த வாழ்க்கை முறை கொண்டவன் நான்.
கடந்த 20 வருடங்களாக நகர வாழ்க்கையில் செருப்புடன் மட்டுமே நடந்து மண்ணில் கால் பட்டாலே அசிங்கம் என்ற வாழ்க்கை முறைக்கு ஆட்பட்டு விட்டேன்.
மண்ணில் கால்படுவது அசிங்கமா..?
எனக்குள் உறுத்திக்கொண்டே இருந்தது... என் உடலை மீண்டும் இயற்கையோடு இணைத்துக் கொள்ளும் முயற்சியே இது..!
கடந்த 2 நாட்களாக என் காலும், எல்லையற்று வெளிச்சம் பார்க்கும் என் கண்களும் .. என் உடலும் என்னிடம் நன்றியோடு பேசுவது என்னையன்றி யார் அறியமுடியும்...?
அழிந்துள்ள காட்டின் துயரத்திலிருக்கும் மீதமுள்ள மரங்களின் கேவல் நெஞ்சைப் பிளந்துவிடும். இங்கிருந்து போய் விடுவோம்!
வெறும் தக்கையாக உடைத்துப் பிளக்கப்பட்ட புல்லாங்குழல், ஓடையில் மிதப்பதை நீங்கள் காண வேண்டாம் .... அது இசையின் பிணம்...!
“அவனுடைய மேய்ச்சல் தடியில் இயல்பாக அமர்ந்திருக்கிறது வண்ணத்துப்பூச்சி’’
“வறியவர்களின் உயிர் இயற்கையிடம் திரும்பிச் செல்வதற்கு எளிமையான வழிகள் நிறைய உள்ளன.
பசியும் குளிரும் நோயும் நிராதரவும், அந்த வழிகளாக உள்ளன’’
இது “நொதுமலர்க் கன்னி’’ கவிதைத் தொகுப்பில் படித்தது.,!
இப்படி புத்தகம் முழுக்க இலக்கியமும், வாழ்வும் கலந்து எனக்கு புது அனுபவத்தை தந்தது..!
அதை இன்று வெளியீட்டு விழாவில் பகிர வாய்ப்பு கிடைத்தது..!
படிக்கும்போது என்னை பாதித்த வரிகளை அடிக்கோடிடுவது என் பழக்கம்..
சமீபத்தில் அதிக அடிக்கோடிட்ட புத்தகம் இதுதான்..
என்னை பாதித்த கலைஞனுக்கு மனம்திறந்த பாராட்டைவிட உடனே கொடுப்பதற்கு வேறேதுமில்லை..! என் பாதிப்பை உங்களிடம் கடத்திவிட்டேன்.!
மதமும் அரசு இயலும்...
அன்று உலகமெங்கும் மன்னராட்சி நடந்து வந்தது.
ஐரோப்ப நாடுகளில் கத்தோலிக்க மதகுருமார்களைக் கேட்காமல் மன்னர்கள் யாரும் எந்த முடிவும் எடுக்கமுடியாது.
ரஷ்யா.. இங்கிலாந்து.. பிரான்ஸ்.. இத்தாலி.. ஜெர்மனி போன்ற ஐரோப்பிய அரசியலை தீர்மானிக்கக்கூடிய தலைமையகமாக ரோம்தான் இருந்துவந்தது.
நெப்போலியன் பிரான்ஸ் அரசியலுக்குள் நுழையும் வரை இதுதான் நிலை.
1789-களில் பிரான்ஸில் 16-ஆம் லூயி மன்னருக்கு எதிராக புரட்சி ஏற்பட்டு மக்கள் ஆட்சி அமைகிறது. மன்னர் தூக்கிலிடப்படுகிறார்...
அதைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பங்களில் நெப்போலியன் பானபர்ட்டிடம் ஆட்சியதிகாரம் வருகிறது. பொறுப்பேற்றவுடன் அவர் செய்த முதல் வேலை, கிருஸ்துவ மத ஆலயங்களின் சொத்துக்கள் அனைத்தையும் அரசுடமையாக்கினார். மதகுரு மார்களின் அதிகாரங்களைப் பறித்து அரசுஇயலில் தலையிடுவதைத் தடுத்தார்... அவர்களை அரசு சம்பளம் வாங்கும் ஊழியராக்கினார்.
இதைப் பார்த்து ரோம் பதறியது.. மற்ற நாட்டு மன்னர்கள் அவருக்கெதிராக வெகுண்டு எழுந்தனர். போர் தொடுத்தனர். ஆனால் நெப்ஸ் சீர்திருத்தத்தை நிறுத்தவில்லை.!
உலக வரலாற்றில் அரசியலை தீர்மானிக்கும் ஆன்மீகத்தை முதலில் வெட்டிஎறிந்த ‘புரட்சித் தலைவர்’நெப்போலியன்தான்.
ஆனால் அவரே பின்னாளில் ரோம் போப்பாண்டவரை அழைத்து வந்து தனக்கு பேரரசர் பட்டம் ‘சூட்டிக்கொண்டது’ வரலாற்று முரண்பாடு.
அதன்பின் முதல்உலக யுத்தத்திற்குப் பின் பல உலகநாடுகளும் மதம்-அரசியலில் தலையிடுவதைத் தவிர்க்க ஆரம்பித்துவிட்டன..!
மதத்தை முன்னிறுத்திய வளர்ச்சியைவிட, மனித அறிவை முன்னிறுத்தி அறிவியலில் அந்நாடுகள் பலவருடக்கணக்கான வளர்ச்சியை ஒரே பாய்ச்சலில் அடைந்துவிட்டன...!
இந்த உலகில் மதத்துக்காக நடந்த போரில் பல உயிரிழப்புகள் நடந்தது பல வருடங்களாக நடந்த சிலுவைப் போர்களில்தான்....
அதை நடத்தியவர்கள் மதத்தைவிட, அறிவைக் கொண்டு வாழ்தலே மனித வளர்ச்சிக்கு சிறந்தது என கண்டுகொண்டவுடன்.. பகுத்தறிவுடன் தன்னை உணர்ந்துகொண்டான்.!
மதத்தை மதித்தான்... ஆனால் வைக்க வேண்டிய இடத்தில் வைத்தான்....!
ஆனால் இந்தியா?
இன்று ஆன்மீக அரசியல் என்று எதையாவது சொல்லி அடுத்த தலைமுறையை பல வருஷம் பின்னுக்குத் தள்ளிவிட்டிராதீங்க பாபா..! நம்பி வருகிறவர்களைக் காப்பாத்துங்க..!
திருக்குறள்தான் எங்களுக்கு ஆன்மீக அரசியல் தத்துவம்.! அதை நீங்க செயல்படுத்துவேன்னு சொல்லுங்க ..!
அதுதான் அறம்.. உடனே நீளும் என் கரம்.
அம்பாசமுத்திரம் தாமிரபரணி ஆற்றங்கரையில் பிப்ரவரியில் ஒரு படப்பிடிப்பு. “கடைக்குட்டி சிங்கம்’’படத்திற்காக அங்கே சென்றேன்..
நானெல்லாம் நடிகனா இருப்பதே....
நடிக்கப் போகும்போதே பல ஊரு சுத்திப் பாக்கலாம். பல மக்கள், வரலாற்று இடங்கள் பார்க்கலாம். இதில் சம்பாதித்து புத்தகம், ஓவியப்பொருட்கள் வாங்கலாம் என்பதற்காகத்தான்!
சரி வந்த வேலையை ஆரம்பித்தேன்.
ஆற்றங்கரையொட்டி பழமையான சிவன் ஆலயம்... உள்ளே போனேன். யாருமில்லை, அமைதியான அமைதி...
கதவுகள் தூண்கள் மேற்கூரை ஆகியவற்றில் உள்ள சிற்பங்களைப் பார்த்தபடி புகைப்படமெடுத்தபடி நகர்ந்தேன்! சிற்பங்களைப் பார்க்கும்போதெல்லாம் யார் அந்த சிற்பி... எப்படி இருந்திருப்பார் என்ன உளி பயன்படுத்தியிருப்பார்... என கட்டுமான சூழ்நிலையை கற்பனை செய்தபடியே நகர்வேன்!
சிலசமயம் மனதில் நானும் அக்காலம் போய் நிகழ்காலத்தில் உடலாய் மட்டும் அங்கே நிற்பேன்.
முதற் பிரகாரம் வெளி வெளிச்சமும் வெளிச்சத்தமும் கேட்டபடி இருந்தது. நகர்ந்தேன்...
இரண்டாவது நிலையில் குறைவான வெளிச்சமும் சத்தமும் இருந்தது. சிற்பம் பார்த்தபடி நகர்ந்தேன்.
கேமராவை மடக்கி, புகைப்பட மனநிலையிலிருந்து மாறி, மூன்றாம் நிலை நோக்கி நகர்கிறேன். தரையில் வழவழ கருப்புக் கற்களிலிருந்து குளிர்ச்சி கால்கள் வழியே மூளையைக் குளிரவைத்தது.
அங்கே, சரவிளக்கு வெளிச்சத்தில் நிறைய இருள் மட்டுமே இருந்தது. சத்தம்... இல்லவே இல்லை! என் எதிரே இருபுறமும் நிற்கும் துவார பாலகர் சிலைக்கு உள்ளே லிங்கவடிவில்...
கட ....உள்..! சப்தமற்று மனசு சொன்னது!
அமிழ்ந்த விளக்கின் திரி மணம்.. குறைவானவெளிச்சம்...
நிறைந்த இருட்டு வழியே கடந்து உள்ளே போனது மனது. என்னையறியாமல் கண்களை மூடிக் கொண்டேன்... அமைதி.. அமைதி... நானும் எதிரே லிங்கமும்...
நான் எதுவும் நினைக்கவில்லை... எதையும் கவனிக்கவில்லை! திடீரன ஒரு மணிச்சத்தம் ....
காது வழியாக உள்ளிறங்கி.. உடலெங்கும் பரவிக் கலந்து ...மெதுவாக அடங்கியது ..!
இதுதான் இறைநிலையா?.
(இந்நிலையை ஏன் மந்திரங்கள், சடங்குகள் மூலம் தடுக்கின்றனர். இதை எல்லா மனிதர்களுக்கும் சென்றடைய முடியாமல் ஜாதி, நிறம், ஏற்றத்தாழ்வு வைத்து பிரித்தது கொடுமை!)
கடவுளால் சமூக வளர்ச்சியைவிட, சமூக கொடுமைகள் நேரும்போதுதான் பகுத்தறிவு போராட ஆரம்பிக்கிறது...! பகுத்தறி(வை)வு ஏற்றுக்கொள்ளும் ஆன்மீகம் இருக்கமுடியாதா? கண்களைத் திறந்தேன் .
எதிரே ஆலய பராமரிப்பாளர் ஒருவர் இருந்தார். தீபம் காட்டினார்.
வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தேன்.
எது இறை நிலை என்பதை காலம் அனுபவப் பூர்வமாக உணரவைத்த சந்தர்ப்பம் அது..! இயற்கையே இறை நிலை...!அதை உணர்த்துவது போல்...
“இங்குள்ள மரங்கள் ஞானிகள்போல் தவமிருப்பதாக சுவாசம் பசுமை புண்ணியபரணி இயக்கித்தினரின் அறிவுச்செய்தி பார்த்தேன்....
என்னை வடிக்க சிலையாய் நின்றவள்..
ஓர் தேவதாசியே...! அன்று இறைக்கு உருவமாகி நின்றவளின் வடிவம் -இன்றும் வணங்கப்பட .. நின்றவள் இழிமகளாகிப் போனாளே..!
அம்மையப்பனின் நடமாடும் வடிவங்களே திருநங்கைகள்...! தேவகதைகள் புனையப்படா தேவரடியாளே இறைமகள்கள்..!
18 வயது- பள்ளிப்பருவம் வரை பெற்றோர்களின் கண்காணிப்பில் வளரும் இளைஞர்கள், கல்லூரி செல்லும்போது சமூகத்தில் பல தரப்பட்ட முதல் அனுபவங்களைப் பெறுகிறார்கள்!
அங்குதான் அரசியல், காதல், நட்பு, தொழில், தத்துவம், சமூகவரலாறு, கலை மற்றும்… தன்னிடமுள்ள தனித்திறமையை இனங்கண்டு கொள்வது என அனைத்தையும் முடிவெடுக்கிறார்கள்..!
அந்த வயதில்தான் மேற்படிப்பு படிப்பவர்கள் -தனித் தொழில் செய்பவர்கள்- குலத் தொழில் செய்பவர்கள் -சம்பளத்திற்கு செல்பவர்கள் -என எல்லாரும் சமூகத்திற்குள் பிரிந்துசெல்கிறார்கள்.
எனவே....வாழ்வின் முக்கியமான புள்ளி அது!
இங்கு சரியாக முடிவெடுத்தால்தான்... அது செயலாகி, உத்தரவாதமான இடமாகி, பணமும் புகழும் கிடைக்க, குறைந்தது 10 வருடமாகும்.!
அந்த கௌரவம்தான் திருமண உறவிற்கு மதிப்பைத் தந்து, குடும்பத்தை ஏற்படுத்தும்! இங்கிருந்து-அடுத்த 20 வருடங்களுக்கு, அடுத்த தலைமுறைக்கான திட்டமிடுதல் தொடங்குகிறது...
அது 50 வயதில் நிறைவுபெறும்..!
அதற்குப் பின்னர்தான் உங்களின் தனிப்பட்ட வாழ்வை, இறுதிவரை பயணிக்க திட்டமிடவேண்டும் !
எனவே கல்லூரி வயது மிகமிக முக்கியமானது!
இங்கு தவறுதலாக ஒரு முடிவெடுத்துவிட்டால் … வாழ்நாள் முழுமைக்கும் தொடர் பிரச்சனையை சந்திக்கவேண்டி வரும்!
தவறவிட்ட நேரம் மிக முக்கியமானது! திரும்பக் கிடைக்காது!
இன்று நம் தமிழகத்தைப் பார்க்கும்போது நான் கவலைகொள்கிறேன்!
கடந்த சில வருடங்களாக வேலை வாய்ப் பின்மையாலும், எதிர்காலத்தை திட்டமிடாத தமிழக அரசியல் தலைமையாலும்... நிகழ்காலத்தில் இருந்த தொழில்களையும் நசுங்கச்செய்து சமூகத்தையே பொருளாதார பயத்தில் ஆழ்த்தியுள்ள மத்திய அரசை யும் பார்த்து எங்கு செல்வது என தெரியாமல் -பெரும் பகுதியான இளைய சமுதாயம் வேலையற்ற நிர்கதியில் நிற்கிறது..!
இந்த இடைவெளியைத்தான்.. சமூக மாற்றத்தை உருவாக்குகிறேன் என -
புதிய வரவுகளாக நடிகர் ரஜினி, கமல்- சீமான், தினகரனும்… கடந்த காலஅரசியல் ஆளுமைகளான -தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ்., பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., வி.சி. மற்றும் விடுதலை இயக்கங்கள், விவசாய சங்கங்கள், தி.க., ஆன்மீக இயக்கங்கள், ஜாதிக்கட்சிகள், மதவாத கட்சிகள், ரசிகர் மன்றங்கள் என பலரும் இந்த இளைஞர்களை தங்கள் பக்கம் ஈர்த்துக் கொண்டிருக்கின்றனர்.
கடந்த ஆண்டு “ஜல்லிக்கட்டு’’என்ற ஒற்றை நோக்கத் தில் இணைந்து சாதித்த இளைஞர்கள் சக்தி ...இன்று எல்லோர் பின்னும் பிரிந்து நிற்கிறார்கள்...!
இந்த வருடம் 60 லட்சம் வாக்காளர்கள் புதிதாக வாக்களிக்க இருக்கிறார்கள். இதில் இளைஞர்களும், வெளிமாநிலத்திலிருந்து வேலைக்கு வந்து சேர்ந்தவர்களும் அடங்குவார்கள்!
தமிழக வரலாற்றில் 1960-களில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மொழி உணர்வில் மாணவர்கள் ஈடுபட்டார்கள். அவர்களை தி.மு.க. உள்வாங்கிக்கொண்டது..!
அதன்பின் எம்.ஜி.ஆர். கட்சி ஆம்பித்த 1980-களின் போது குறைவான மாணவர்களே அரசியலுக்குள் வந்தனர்.
இலங்கை, தமிழீழ விடுதலை உணர்வு பலரை சமூகத்தினுள் கொண்டுவந்திருக்கிறது...
ஆனால் இப்போதுபோல் முன்னெப்போதும் மாணவர்கள் வேறு வழியில்லாமல்’’அரசியலில் ஈடுபட்டதாக இல்லை...!
இளைஞர்களின் புரட்சி மாபெரும் மாற்றத்தைத் தரும்... அதற்கு உலக வரலாற்றில் பல உதாரணங்கள் இருக்கின்றன..! ஆனால் அதற்கு ஒரே கொள்கையோடு ஈடுபடவேண்டும்...! இப்படி சிதறிச் சிதறியல்ல...!
இன்னும் இரண்டு வருடம் தமிழக அரசியல் களம் இப்படித்தான் இருக்கப்போகிறது..! இது எங்கு போய் முடியப்போகிறது..?
அதன்பின் எப்படி இருக்கும்? யாருக்கும் தெரியாது.!
இப்போது அரசியல்களத்தில் இறங்கும் மாணவர்கள், அதன்பின் என்னாவார்கள்..?
வயதுபோனபின்... அனுபவமும் இல்லாமல் வேறு வேலைக்குப் போக முடியுமா?
போனால்- ஒரு பதவிகிடைத்து, பொருளாதார உத்தரவாதம் கிடைத்து..... அதன்பின் சுயவாழ்வை கட்டமைப்பது எளிதானதா..?
பொருளாதாரமற்ற உலகமும், உறவுகளும் அனைவருக்கும் எளிதாக அமையுமா..?
மாணவர்கள் படிப்பை முன்னிறுத்திக் கொண்டும் இளைஞர்கள் வேலையை முன்னிறுத்திக்கொண்டும்.... அரசியலை உன்னிப்பாக கவனித்து தக்க சமயத்தில் நல்லவர்களின் நோக்கத்தை வலுச் சேர்க்க வாக்களித்தால் மட்டும் போதாதா..?
தன் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி அரசியல் களம் இறங்கும் இவர்களின் எதிர்காலம் என்ன?
யாரிடமிருக்கிறது என் கேள்விக்கான பதில்..?
தமிழர் திருநாள் அன்று என் துணைவி குழந்தைகளுடன் என் கிராமத்திற்கு வந்துவிடுவேன்.
கடந்த 22 வருடங்களாக என்னுடன் வாழ்க்கையை பகிர்ந்து கொண்டு இரவிலும் நிழலாய்த் தொடரும்
என் துணைவிக்கும்...
பாசத்தையும், மனிதாபிமானத்தையும் கொண்ட என் குழந்தைகளுக்கும் ...
உங்களுக்கும்...
இயற்கையின் ஆசீர்வாதங்கள் முழுமையாகக் கிடைக்கட்டும்...!
என்னளவில் ...இயற்கையிடம் நன்றி சொல்வதைத் தவிர வேறில்லை...
இதுவே பகுத்தறியும் ஆன்மீகம்..!
எதை நோக்கி என் தமிழகம்....?
பாவம் ..நான் சாமான்யன்..! உங்கள் அரசியல் எனக்குத் தெரியாது..!
வாழ்க்கைப் போராட்டத்தில் செல்லரித்த புகைப்படமாய்.. இன்னும் காத்திருக்கும் எனது நம்பிக்கைகளை யார் காப்பாற்றுவீர்கள்..?
கடவுளைப் போலவே...
அனைத்து விமர்சனங்களையும் அனுமதிக்கும் அறிவு!