நாடாக ஒன்றோ, காடாக ஒன்றோ

அவலாக ஒன்றோ, மிசையாக ஒன்றோ

எவ்வழி நல்லவர் ஆடவர்,

அவ்வழி நல்லை வாழிய நிலனே''

Advertisment

-அவ்வையார்

நாட்டில் பெண்ணியம் சார்ந்த இயக்கங்கள் பெண்களின் பிரச்னைகளை கையாண்டு தீர்வு கண்டுகொண்டிருந்தாலும், வாழும் பெண்கள் பலவேறுவிதமான பிரச்னைகளை சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஒருபுறம் ஆணே குடும்பத் தலைவர் எனும் நடைமுறையில் பெண்கள் சொத்துரிமை, கல்வி கற்கும் உரிமை, தொழில் தேர்வு செய்யும், விரும்பிய தொழில் செய்யும் உரிமையை பெரும் போராட்டம் மற்றும் அவமானத்திற்கு பிறகே பெறமுடிகிறது.

Advertisment

மறுபுறம் குடும்பச் சூழ்நிலை காரணமாக பெண் மட்டுமே குடும்பத் தலைவியாக குடும்பத்தை பராமரிக்கும் நிலைமை ஏற்படுகையில், அந்தப் பெண் வெளியிலும், வீட்டிலும் சந்திக்கும் போராட்டங்களை மனிதநேயம் உள்ள எவரும் மறுக்க முடியாது.

இவ்வளவு வலியை நாம் முன்னிறுத்துகையில், ஆண்கள் எளிதாக, சர்வ சாதாரணமாக, பல சமயங்களில் நகைச்சுவை எனும் ரீதியில் எகத்தாளமாக, “பெண்கள் மட்டும் ஏன் கஷ்டம், சிரமம், போராட்டம், அவமானம் என்று சீறுகிறார் கள்? ஆண்களுக்கும்தான் இவையெல்லாம் இருக்கு. ஆண்கள் நாங்கள் துடைத்துப் போட்டுவிட்டு போய்விடுகிறோம், பெண்கள் பெரிதாக அவற்றை தலையில் சுமந்துகொண்டு போராடுகிறார்கள்" என்று சொல்கிறார்கள்.

பணிபுரியும் இடங்களில் பெண்ணுக்கு, அவள் பெண்மைக்கு ஆண் அதிகாரியால் அவமானம் வருகையில், அவர் சொன்னது போல் துடைத்துப் போட்டுவிட்டு போய்விட முடியுமா அப்பெண்ணால்? அப்படி அவள் துடைத்துப் போட்டுவிட்டால், சமுதாயத்தில் அவள் எதிர்கொள்ளும் விமர்சனங்கள் துடைத்து போடக்கூடியதாகவா இருக்கும்? அப்படி சொல்லும் ஆண்களே அந்தப் பெண்ணை எந்த மதிப்பீட்டில் மற்றவரிடம் விமர்சிப்பர், யோசித்துப் பாருங்கள்.

நகைச்சுவை என தான் பேசும் மேடைகளில், தன் பேச்சுக்கு சுவைகூட்ட, மற்ற ஆண்களின் கைத்தட்டல் பெற இப்படி அர்த்தமற்ற கருத்தை பேசுவதின் மூலம் சமுதாயத்திற்கு, முக்கியமாக இளைய சமுதாயத்திற்கு என்ன நல்ல கருத்து பதிவிட்டு போகிறார் இவர் அவரின் மேடை பேச்சுக்குப் பின்னால் ?

அவர் வீட்டு பெண்கள் இப்படி அவலங்கள் சந்தித்து துடைத்துப் போட்டு வந்தால் இவரின் அடுத்த செயல்பாடுகள் என்னவாக இருக்கும் ? நகைச்சுவை வேண்டும் தான் மேடை பேச்சில் கூட்டத்தினர் தூங்காமல் இருக்க. அதற்காக உண்மைகளை தூங்கவிடலாமா? நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம் மேடைப் பேச்சில் தன் வீட்டுப் பெண்ணை, இணையாளை நகைச்சுவைப் பொருளாக்கி அத்தனை பேர் நிறைந்த அரங்கில் கைத்தட்டல் வாங்குவதை. அவர் என்று உணர்வார். தனக்குக் கிடைக்கும் கரவொலி, தனது வீட்டுப் பெண்ணை, அவள் இல்லாத இடத்தில், அவள் அறியாமல், அவளின் உண்மையான இயல்பைச் சிதைத்து, அவளை தான் நகைச்சுவைப் பொருளாக்கி பெறும் கரவொலியே, இதில் தனியாக பெரிய திறமை ஒன்றும் தனக்கில்லை என்று.

இவர்கள் வீட்டு ஆண்குழந்தைகள், இளைஞர்கள் எப்படிப்பட்ட கண்ணோட்டத்தில் வளர்கிறார்கள்? வளர்க்கப்படுவார்கள்? நாமே பெண்ணை, அதிலும் தன் வீட்டுப் பெண்ணையே இழிவுபடுத்துகையில், தன் வீட்டு ஆண்குழந்தை வெளியில் காணும் பெண்களை எல்லாம் இழிவாக, எகத்தாளமாக, காமப்பொருளாக, ஆணுக்கு கட்டுப்பட்டு இருந்தால்தான் பெண் மதிப்பானவள், அவளுக்கென்று சாப்பிடும் உணவில்கூட தனிப்பட்ட பிரியம் இருக்கலாகாது என பல எதிர்மறை எண்ணத்துடன் தானே பெண்களை நோக்கும் பார்வை இருக்கும்.

பிறகெப்படி ஆசிட் வீச்சும், பாலியல் கொடுமை கொலைகளும், இரண்டு வயது பெண் குழந்தையையும் காமக்கண் கொண்டு பார்க்கத் தூண்டும் பலவீனமும் குறையும், மறையும்?

அப்படிப்பட்ட இளைஞர்கள் உருவாகுவது 90 சதவிகிதம் வீட்டில் பெண்கள் நடத்தப்படும் விதத்தில் இருந்துதான் என்பதை என்று உணர்வோம்.

சங்க காலத்தில், ஆணுக்குரிய தகுதிகளாக பெருமையும் வீரமும் சொல்லப்பட்டன. ஆனால் பெண்ணுக்குரியதாக "அச்சமும் நாணும் மடனும், முந்துறுதல் நிச்சமும் பெண்பாற் குரிய " என்று கூறப்பட்டன என்கிறது இந்த தொல்காப்பிய பாடல்.

பெண் தனது சக்தி, திறமை, தனித்துவம் அடக்குமுறைகளால் புதைக்கப் படுவதை தாங்கிக்கொள்ள முடியாமல்தானே போராடி வெளிவந்துள்ளாள். ஒரு காலத்தில் ஆணுக்கு அடங்கிய இல்லத்து உறுப்பினராக மட்டும்தானே இருந்தாள்? அவள் ஆற்றலை, சக்தியை அவள் கணவன் மட்டுமே ஆண்டு அனுபவித்த காலம் இருந்தது.

படிப்படியாக, அடுத்தடுத்த தலைமுறை ஆண்கள், பெண்ணின் சக்தியும், ஆற்றலும் மிகப் பெரிது என்றுணர்ந்து, என்னதான் வெளியில் சென்று தான் குடும்ப செலவிற்கு பரம்பரை தொழில், தெரிந்த ஒரே தொழில் செய்து பணம் ஈட்டி வந்தாலும், கணவன், குழந்தைகள், வீட்டு நிர்வாகம் என பல கலைகளில் அவள் திறம்பட மின்னுவதை ஒருவித பயத்தோடு நோக்கிய அவர்கள் வீட்டுப் பெண்களை மிகவும் கட்டுப்பாடாக்கி அவளை அடிமைப்படுத்தினர்.

மனைவி இல்லாமல் தன் சட்டைப் பொத்தானைக் கூட தைக்கத் தெரியாதவன் கணவன். எப்படி மனைவியின்றி வாழமுடியும்? ஆனால் கணவன் இறக்க நேர்ந்தால்கூட மனைவி கண்டிப்பாக தனி ஒரு ஆளாக குடும்பத்தைக் காப்பாற்றி வாழவைக்கும் திறமை கொண்டவள். எனவே தான் ஆண் என்ற அகந்தையால் பெண்ணின் ஆற்றலை சாம்பலாக்க, உடன்கட்டை ஏறுதல், கூந்தலை மழிக்க வைத்தல், வெள்ளைச் சேலை அணிவித்து, குழந்தைப் பருவம் முதற்கொண்டே அவளுக்கு உரிமையான பூவையும் பொட்டை யும் மறுத்து, சொத்துரிமை மறுத்து, பெண் கல்வி தடை, ஆண் துணை இல்லாத பெண்ணை அபசகுனமாக்கி... அப்பப்பா.. இப்படி பல அடக்கு முறைகள் மூலம் தம்மை பாதுகாத்துக் கொண்டார்கள்.

கணவன் இறந்ததும் பெண்ணை மொட்டையடித்து, அலங்கோலப்படுத்தி, சுவையற்ற, குறைந்த அளவிலேயே உணவளித்து கொடுமைப்படுத்திய காலம்.

" கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி அல்லி உணவின் மனைவி " போன்ற புறநானூற்றுப் பாடல்கள் நம் சங்க காலத்துப் பெண்கள் அனுபவித்த கொடுமைகளை சொல்கின்றன.

அழகு கூந்தலும், பூவும், பொட்டும், அழகும், உணவும் அவள் பிறந்த நாள் முதல் பெண் அவளின் அடையாளமாய் கொண்டிருந்தவை. பெண்ணின் தாயும், தந்தையும் அவளுக்கு சூட்டி அழகு பார்த்தவை.

கருவில் உருவாக்கி, உயிரை உருக்கி உயிர் கொடுத்த பெற்றோர் இறக்கும் போதுக்கூட அவற்றை பறிக்க நினைக்காத நிலையில், இடையில் வந்த உறவான கணவன் இறப்பிற்கு பிறகு இவற்றை பறிக்கவேண்டும் என்று தானாக அமைத்த சட்டம் எவ்வளவு கொடியது?

எத்தனை பெண்கள் இத்தகைய கொடுமைக்கு ஆளாகினர்? ஆனால் தற்காலம் போல் தற்கொலை ஆயுதத்தை கையில் எடுக்கவில்லையே, ஏன்? அவர்களின் ஒப்பில்லா ஆற்றல்பால் அவர்களுக்கு இருந்த தன்னம்பிக்கையும், மன உறுதியும், மற்றும் குடும்ப கடமைகளில் கொண்டிருந்த கடமை உணர்ச்சி, தான் தற்கொலை செய்யின் அத்தகைய மரணத்திற்கு பிறகு தன்மேல் பூசப்படும் இழிவான சாயமும், குடும்பத்தின் தலைகுனிவையும், வேதனையையும் சிந்தித்த பொறுப்புணர்ச்சியும்தான் காரணம்.

எனவே தான் இந்த உண்மைகளை, ராஜாராம் மோகன்ராய், பாரதியார், பெரியார் போன்ற பல ஆண்களே வெளியுலகத்திற்கு பறைசாற்றியுள்ளது, பெண் உரிமைகளுக்கு எழுச்சிமிகு குரல் கொடுத்தது நாம் அனைவரும் அறிந்ததே. எவராலும் மறுக்க முடியாது.

இந்த ஆண்களின் ஊக்கமளிக்கும் கருத்துக்களால் உந்தப்பட்டு, ஆங்காங்கே சில பெண்கள் குரல் கொடுக்க ஆரம்பிக்க, படிப்படியாக, பல, பல போராட்டங்களுக்குப் பிறகே இன்று பெண்களின் ஆற்றலும், சக்தியும், உரிமையும் நிலைநாட்டப்பட்டுள்ளது. எனினும் அதனை நிலைக்க வைத்தல், இன்னமும் பெரும் போராட்டமாகத்தான் இருக்கிறது.

கணவன் இறப்பிற்கு பிறகு பெண்ணுக்கு புற அழகு மறுக்கப்பட்டதே இதன் பின்னால் உள்ள உண்மை. விதவைப் பெண்ணுக்கு அவளின் புற அழகால் அவளுக்கோ, அவளைப் பார்க்கும் மற்ற ஆடவருக்கோ காம உணர்வு வந்துவிடக்கூடாது என்ற குரூர திட்டம்.

பெண்ணிடம், உடல் இன்பம், காமம் தாண்டி இருக்கும் அற்புத ஆற்றலை ஏற்றுக்கொள்ளும் பெரும் மனது இல்லாத ஆண் ஆதிக்கம்.

இதில் பெரும் வருத்தம், வலி என்ன வென்றால் இன்றைய தலைமுறை இளைஞர்கள் பலரும், பெண்களை காமப்பொருளாக மட்டும் பார்த்து, காதல் என்னும் பொய் வலையில் சிக்க வைத்து, தான் மட்டுமன்றி தன்னையொத்த கயவர்களுக்கும் வயது பேதமின்றி அவளை காமப் பொருளாக்கி, அவனை உண்மைக் காதலன் என்று நம்பிவந்த அந்த உண்மைக் காதலியை சிதைத்து, காணொளியாக்கி.. அப்பப்பா...

சங்க காலத்து ஆண்களே பரவாயில்லை, பெண் சக்தி கண்டு பயந்து மட்டுமே அவளை கொடுமைப்படுத்தினர். மேற்சொன்ன, இந்த தலைமுறையினர் செய்யும் இந்த இழிவான செயல், இவர்கள் அவர்கள் வீட்டிலுள்ள பெண்களை, தாயை, சகோதரியை எந்தக் கண்கொண்டு நோக்குவர்? பாவமில்லையா அவர்கள் வீட்டில் உள்ள பெண்கள்? உங்களுக்கு பாடம் சொல்ல, மற்றுமொரு ராஜாராம் மோகன்ராயும், பாரதியும், பெரியாரும் எப்பொழுது பிறந்து வரப் போகிறார்கள்?

அன்று இயற்றப்படா சட்டமாக இருந்தது பெண்ணுக்கான இந்த அவல நிலை. இன்று எந்த சட்டமும் கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது பெண் குழந்தைகளின் பாதுகாப்பு. சுய ஒழுக்கம் மட்டுமே இந்த அவலம் அழிக்கக் கூடும்.

dd

சிறுமி, மூதாட்டி உள்பட பெண்ணுக்கு பாலியல் கொடுமைகள் செய்ய விழையும் சிறுவன், கிழவன் உள்பட அனைத்து ஆண்களும் அவரவர் தாயின், மனைவியின், சகோதரியின் பிரசவ வலியை, பெண்ணிடமிருந்து தான் அருந்திய தாய்ப்பால் தனது இரத்தத்தில் பெரும்பங்காய் இருக்கிறது என்ற உண்மையையும் கண்முன் நிறுத்துங்கள். எங்கோ என் உடன்பிறந்த சகோதரிக்கு, என் அன்பு மனைவிக்கு, என் அன்பு மகளுக்கு என் போன்ற ஏதோ கயவனால், நான் இந்தப் பெண்ணுக்கு இழைக்கும் அசிங்கம் நடக்கிறது என்னும் உண்மையை உணர்ந்தால், பெண்ணை உடல் தாண்டி தூய கண்கொண்டு நோக்கும் பலமான ஆண்கள் நீங்களாகத்தான் இருப்பீர்கள்.

பெண் எவ்வளவு உயர்வானவள்! சக்திமிக்க கடவுளாக உருவகிக்கப்படுபவள். மென்மையான, அழகிய, வலிமையான, உயிரோட்டமுள்ள நதிகள், அருவிகளுக்கு பெயர்க் காரணம் உள்ள பவித்ரம் பெண். உயிருக்குள் உயிரை உயிர்ப்பிக்கும் தனித்துவ சக்தி பெற்றவள். உண்மை இப்படியென்கையில், மரகதம், வைரம், வைடூரியம் இவற்றை விட எவ்வளவு உயர்வானது, விலைமதிப்பற்றது பெண்மை! அந்த நவரத்னங்கள்போல் பெண்ணே, நாம் எளிதாக மற்றவரின் பலவீனத்திற்கு நம்மை கிடைக்கவிடக் கூடாது.

உன் பெண்மை, பெண்மை என்று சொல்கையில் அதை நான் இங்கு கற்பு எனும் வட்டத்திற்குள் அடைக்கவில்லை. ஒப்பற்ற, பெண் உனக்கு மட்டுமே இயற்கையாய் அருளப் பட்டிருக்கும் தனித் தன்மையையே முன்னிறுத்துகிறேன். அத்தகைய உன் பெண்மை, உனது சக்தி, உனது உயர்வு.

திரைப்படக் காட்சிகளால் பெரிதாக ஈர்க்கப்பட்டு, சாதாரணமாக வாலிபர் விடுக்கும் காதல் அழைப்பில் ஏமாந்து விலைமதிப்பற்ற உன் பெண்மையை இழிவுபடுத்திக் கொள்ளலாமா? சிந்தியுங்கள். காதல் தோல்வி, கல்வி தோல்வி என உலகப் பொருள் சார்ந்த காரணங்களால் விலைமதிப்பற்ற உயிரை மாய்த்துக் கொள்ளலாமா? கல்வி தோல்வி கண்டு இப்படி தப்பி ஓடுவதற்கா பல பெண்கள் சிதைந்து, போராடி பெண் கல்வியுரிமை பெற்றுத் தந்தார்கள்? காதல் தோல்வி என்று மாய்ந்துபோவதற்கா வீட்டுச் சிறையிலிருந்து பெண்கள் வெளிவர உரிமை பெற்றுத் தந்தார்கள் ?

தற்கொலை செய்து மாண்ட பெண்களுக்கு மரணத்திற்குப் பிறகு கிடைக்கும் விமர்சனங்களை, பெற்றவரும், குடும்பத்தினரின் வேதனைகளை, உன் பின்னால் நீ விட்டுச்செல்லும் உனக்கான எதிர்மறைப் பெயரை, உன் சக பெண்களின் தற்கொலை மரணத்திற்குப் பிறகு பார்த்தும்கூட ஏனிந்த அவல முடிவு எடுக்கிறாய்? கடுமையாகப் போராடி பெற்ற, பெண்ணின் விலைமதிப்பற்ற சக்தியையும், ஆற்றலையும் நேர்மறை குணத்தையும் ஏன் கேலிப் பொருளாக்குகிறாய்?

விளையாட்டு, தொழில்துறை, அறிவியல், மருத்துவம், சட்டம், விண்வெளி, ஆன்மீகம், அரசியல், இலக்கியம், கலை, இசை என பல வேறு துறைகளில் தடம் பதித்து இன்று வரலாறாக இருக்கும், இன்றும் சாதனை செய்துகொண்டிருக்கும் பெண்கள் சந்திக்காத தடங்கலும், சவாலும், துயரமும், போராட்டமும், தோல்வியும், அவமானமும்.

இவற்றையா நீ சந்தித்தாய், அதற்கு விலையாக உன் உயிரைத் தர? ஆம் எனில், உன் இலட்சியத்தின் வீரியம் இவ்வளவுதானா? பின்னோக்கி ஓடி உயிர் விடுவதா?

தற்கொலை முடிவெடுத்து தன் உயிரை மாய்த்துக் கொள்ள மிகப் பெரிய மனவலிமையும் தைரியமும் தேவை. அந்த மனவலிமையை, தைரியத்தை, நின்று சாதித்துக் காட்டு. சரித்திரமாவாய். தற்கொலை செய்துகொண்டவர் யாரும் சரித்திரமாவதில்லை.

மாறாக, துர்மரணம், கெட்ட ஆவி என்று தான் பயந்து ஒதுக்கப்படுகிறார்கள். இதற்காகவா நம் உரிமைகள் போராடிப் பெற்று நம் வலிமை நிரூபிக்கப்பட்டது?

இளைய சமுதாயத்தினரை நம்பியிருக்கும் நாடு நமது, குடும்பம் நமது, சமுதாயம் நமது. இப்படி தவறான எடுத்துக்காட்டாக இருக்கலாமா? சக மாணவ, மாணவியர் தற்கொலை செய்துகொள்ளும் வேளையில் பொங்கியெழும் நீங்களே, அடுத் தடுத்து தற்கொலைகள் செய்துகொள்கையில், கொதித்தெழுந்ததன் நோக்கம் எங்கே போனது?

இப்படி உணர்ச்சிகளின், தற்காலிக உணர்வு உந்துதலுக்கு அடிமையாக இருக்கலாமா? தற்கொலை என்பது தற்காப்புக்கான ஆயுதம் அல்ல.

இளம் பெண்ணே, உன் தங்கைகளுக்கு உன் துர்மரணத்தின் மூலம் நீ விட்டு செல்லும் பாடம் என்ன ? "தங்கையே... காதல் செய் .. தோற்றால் .. தூக்கிட்டுக் கொள். படி... தோற்றால் விஷம் அருந்தி மாண்டு போ...ஆண்களால் பலவந்தப்படுத்தப்பட்டால்.. இணங்காதே.. அதையும் தாண்டி பாதிக்கப் பட்டால்... யாரிடமும் சொல்லாதே... தூக்கிட்டுக் கொள்" என்பதா நீ விட்டுச் செல்லும் பாடம்?

பழக்கமில்லாத விஷத்தின் மீதும், தூக்குக்கயிறுடனும் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை ஏன் நீங்கள் பிறந்த நாள் முதல் பல வருடங்களாய் உங்களை அறிந்த உங்கள் குடும்பத்தினர்,

உங்கள் தோழர், தோழிகள் மீது வைக்கவில்லை?

பெண்களே! நமது பெற்றோர் எவ்வளவு இடையூறுகளுக்கிடையில் நம்மை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் துவண்டுபோய் தற்கொலை செய்தால் நம் நிலைமை, நம் வேதனை, வலி நாம் அறிந்ததுதானே?

குடும்பத்தினரும், அவர்கள் குழந்தை, எந்த வயதானாலும் சரி, முன்பு போல் உற்சாகமாக இல்லை, எதிர்காலத்தைப் பற்றி தன்னம்பிக்கை இழந்து விரக்தியாக பேசுகிறார்கள் என்றால், அந்த நிலையை அலட்சியம் செய்யாதீர்கள். அப்போதுதான், நான் உன் தந்தை, தாய், குடும்ப கௌரவம் என்று உங்கள் கருத்துக்களை பலவந்தமாக திணித்து, அவர்கள் தன்னம்பிக்கை இழந்து பலவீனமாக மனநிலையில் நிற்கையில், உங்கள் ஆளுமையை காட்டி மேலும் பலவீனப்படுத்தாதீர்கள்.

அவர்கள் கூற்று தவறே ஆனாலும், பொறுமை காத்து, வார்த்தைப் பிரயோகங்களில் எச்சரிக்கையாக இருங்கள். அவர்கள் காயத்தில் அமிலம் ஊற்றா மல், அவர்கள் பிரச்னை என்ன என்றும், அதனால் அவர்கள் மனதிலுள்ள எதிர்மறை எண்ணங்களை அன்புடன், பரிவாக, கனிவாகப் பேசி கண்டறியுங்கள்.

அப்பொழுது அவர்களுக்கு தேவை ஆறுதலான, கனிவான வார்த்தைகளே. தேர்வில் தவறினால், "சரி விடு பார்த்துக் கொள்ளலாம். உன் பங்கை நீ செய்து விட்டாய். நன்கு படித்தாய், எழுதினாய். என்ன செய்வது, போட்டியும், கல்வி அமைப்பில் சவால்களும் உள்ள இந்த சமயத்தில் வேறென்ன செய்யமுடியும். விடு பார்த்துக்கலாம்" என்று அவர்களின் அப்போதைய மனநிலைக்கு அவர்கள் இடத்தில் உங்களை இருத்திப் பார்த்து, ஆறுதலாய் இருங்கள். அந்த சூழ்நிலையில், உங்களின் தனிப்பட்ட கவலையும், ஏமாற்றமும் இரண்டாம் பட்சமே.

தவறு அவர்களுடையதாகவே இருப்பினும்கூட, உங்கள் மகன், மகளின் மனநிலையை அறிந்து ஆறுதலாய் இருப்பதே நல்ல பெற்றோருக்கான எடுத்துக்காட்டு.

போட்டிகள், சவால்கள் அதிகமுள்ள தற்போதைய பாடத்திட்டங்களில், இன்றைய தலைமுறையினரின் சிரமங்களை முன்னிறுத்திப் பார்ப்போம். பெற்றோர் எனும் பதவியைவிட தோழமை எனும் பலம் கொடுப்போம்.

வாழ்க்கை என்றுமே இருட்டானது இல்லை. பயம், அவநம்பிக்கை என்ற கருப்புத் துணிகொண்டு கண்களைக் கட்டிக்கொண்டால் இருட்டாகத்தான் தெரியும். வாழ்க்கையை இருட்டாக்கிக்கொள்வது நாம்தான்.

வாழ்க்கை எத்தனை உற்சாகமானது! நன்றாக விழிப்புணர்வுடன் பாருங்கள். ஐந்தறிவு அன்னப் பறவை நீரையும் பாலையும் பிரிக்கத் தெரிந்திருக்கையில், ஆறறிவு உள்ள நமக்கு நல்லது, தீயது பகுக்கத் தெரியாதா?

எதிர்மறையிலிருந்து நேர்மறையை ஏற்படுத்திக்கொள்ளும் வலிமை பெற்றவளே பெண். இந்த மகா சக்திக்கு களங்கம் விளைவிக்காதீர்கள் தங்கங்களே! தலைநிமிர்ந்து வாழுங்கள். தோல்வி யெனில், தப்பிக்க ஒரே வழி மரணம்தான் என்று உலகத்தில் எழுதாச் சட்டமாக்கி விடாதீர்கள். கைகூப்பி வேண்டிக்கேட்கிறோம்.