சீரழிந்து வரும் நமது கலாச்சாரத் தின் வெளிப்பாடாகவே இருக்கிறது பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான வன்புணர்ச்சித் தாக்குதல். குறிப்பாக, பெண் சிறுமிகள் மீது நடத்தப்படும் பாலியல் குற்றங்கள் இந்த 21-ஆம் நூற்றாண்டின் தொழில்நுட்ப வளர்ச்சியில் பல்கிப் பெருகி வருவது அதிபயங்கர அச்சத்தை ஏற்படுத்துகின்றது. அதனால்தான், பெண்கள் பாதுகாப்பாக வாழத் தகுதியற்ற நாடாக இந்தியாவை சுட்டிக்காட்டும் விமர்சனங்கள் உலகம் முழுவதும் பரவி வருகிறது. ஏழு வயது குழந்தை முதல் 70 வயது மூதாட்டி வரை பாலியல் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டியதிருக்கிறது. சமீபத்தில், வாய்பேச முடியாத 11 வயது சிறுமியை 17 பேர் பல மாதங்களாக கற்பழித்து வந்த கொடூரம் ஜீரணிக்க முடியாதது. இத்தகைய சம்பவம், மனிதர்கள் வாழும் சமூகத்தில்தான் நாம் வாழ்கிறோமோ? என்கிற பயத்தை உருவாக்குகிறது. இப்படிப்பட்ட சூழலில், ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் அரிபரந்தாமனிடம் இதுகுறித்துப் பேசினோம். இச்சமூகத்தின் மீதான பெருங்கோபம் அவரது ஒவ்வொரு வார்த்தைகளிலும் வெடித்தது.

""இன்றைக்குப் பெண்களின் பாதுகாப்பு என்பது வயது வித்தியாசமின்றி கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. பத்திரிகை களையும் ஊடகங்களையும் திறந்தாலே, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த செய்திகள் அலற வைக்கின்றன.

அந்தளவுக்கு பாலியல் தாக்குதல்கள் அதிகரித்துவிட்டன. ஒரு பெண் கற்பழிக்கப்பட்டால், அவள் அணிந்திருந்த உடைகள்தான் காரணம் என கற்பிக்கப்படுகிறது. கவர்ச்சியான உடைகள்தான் கற்பழிப்புக்கு காரணம் என்றால், 5 வயது குழந்தையும் 80 வயது கிழவியும் பாலியல் தாக்குதல்களுக்கு ஆளாவது எப்படி? அவர்கள் அணிந்த எந்த ஆடையும் ஒரு ஆணை கிளர்ச்சியடைய வைத்திருக்க முடியாது. ஆக, பெண்கள் மீதான வன்புணர்வுக்கு காரணம் உடைகள் அல்ல; பெண் என்பவள் எனது உடைமை என கட்டமைக்கப்பட்டிருக்கும் ஆணாதிக்கச் சிந்தனைகள்தான்.

hari

Advertisment

ஒரு நாளில் பொழுது புலர்ந்து மறைவதற்குள் வீட்டிலும் வெளியிலும் பெண்கள் சந்திக்கும் பாலியல் தாக்குதல்கள் எண்ணற்றவை. வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அவர்கள் மீது ஏவப்படும் பாலியல் தாக்குதல்கள் வன்முறைகளின் உச்சம்! பெண் என்பவள் காம உணர்வைத் தூண்டும் சதைப் பிண்டம்; அவள் படைக்கப்பட்டதே ஆண்களின் இச்சைகளை தீர்ப்பதற்காகத்தான் என்று ஆண்டாண்டு காலமாக கட்டமைக்கப்பட்டிருக்கும் பொதுப் புத்தியிலிருந்து ஆண் சமூகம் தன்னை விடுவித்துக்கொள்ள விரும்பவில்லை. அதனால் தான் இப்பொழுதும் பெண்களை போதைப் பொருளாகவும் குழந்தைகளை உற்பத்திசெய்யும் ஒரு இயந்திரமாகவுமே இச்சமூகம் கருதுகிறது. சமூகத்தைப் பொறுத்தவரையில், பெண் என்பவள் ஆணின் உடமை; அதனை அடைவதற்கு வன்புணர்ச்சியையும் கையாளுவான்; மென்புணர்ச்சியையும் கையாளுவான்; எதுவாக இருந்தாலும் அவள் உடன்பட வேண்டும்; இல்லையேல் பெண் வாழத் தகுதியற்றவள் என கண்டிக்கிறது; தண்டிக்கிறது; அமிலம் வீசுகிறது! தனது உடைமையான அந்த பொருள் (பெண்) தனக்குப் பயன்படாத போது அப்பொருளை அழிக்கத்துடிக்கிறது. ஏனெனில், பெண்களை வாங்கும் பொருளாகத்தான் நினைக்கிறது ஆண் சமூகம்.

இப்படிப்பட்ட மன ஓட்டம் சமூகத்தில் வேரூன்றிப் போனதால்தான் ஹாசினி என்கிற ஏழு வயது சிறுமியை இழந்தது நமது தேசம். தஷ்வந்தை போன்ற படித்த கிரிமினல்கள், சமூக பாலியல் குற்றவாளிகளாக உருவாகிறார்கள். சமீபத்தில் சென்னையில் 11 வயது சிறுமிக்கு நடந்த பாலியல் கொடுமைகளும் இந்த வகைதான். இப்படி தினந்தோறும் பல சம்பவங்கள் நடந்தபடிதான் இருக்கின்றன. நமக்குத் தெரிய வருகிற சம்பவங்களைவிட மறைக்கப்படுகிற நிகழ்வுகள்தான் அதிகம். தெரிய வருகிற ஓரிரு சம்பவங்களே நம்மைப் பதறவைக்கின்றன எனில் மொத்த நிகழ்வுகளும் தெரிய வந்தால் நிச்சயம் நாம் மனிதர்களாக இருக்க முடியாது.

ஆணாதிக்க பெண்ணடிமைத்தனத்தை பாதுகாக்கும் நில உடமைச் சமூகத்தில் ஆண்களின் பாலியல் இச்சைகளுக்கான வடிகாலாக பாலியல் தொழில்களும், பாலியல் சினிமாக்களும் வெகுவேகமாக பரவி வருகின்றன. இவை தடுக்கப்படாத வரையில் பெண் குழந்தைகள் மீதான செக்ஸ் வன்முறைகள் அதிகரிக்கவே செய்யும். அதேசமயம், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அவளது உடலையும் கடந்து அவளின் உரிமைகள் மீது தொடுக்கப்படும் ஒரு யுத்தம். ஆணுக்குப் பெண் சமம் என பேசப்பட்டும் எழுதப்பட்டும் வரும் தற்போதைய சூழலை அலசினால், அவளுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டே வருவதை நிதர்சனமாகப் புரிந்துகொள்ள முடியும். தீண்டாமை ஒரு குற்றம் என நம் சட்டத்தில் இருக்கிறது. நடைமுறையில் இருக்கிறதா? பெண்களுக்கு சொத்தில் உரிமை உண்டு என்கிறது நம் சட்டம். நடைமுறைப்படுத்துகிறோமா? அந்த வகையில் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதின் மற்றொரு வடிவமாகத்தான் பாலியல் வன்முறைகளை விவாதிக்க வேண்டியதிருக்கிறது.

Advertisment

பொதுவாக, பெண்களைப் போகப் பொருளாக கருதும் நிலப்பிரபுத்துவ சமுகம், பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வுகளை ஒரு குற்றமாக நினைப்பதில்லை. வரலாறுகளில் வாழும் மன்னர்கள், ஒரு நாட்டின் மீது படையெடுத்து அந்நாட்டை வெற்றிகொள்ளும்போது அந்நாட்டின் செல்வங்களை மட்டுமல்லாமல் பெண்களையும் கொள்ளையடித்தனர்.

அதாவது, வெற்றியைக் கொண்டாடும் வகையில் பெண்களைக் கற்பழிப்பதே அவர்களின் தத்துவார்த்த இலக்காக இருக்கிறது. அதனால்தான் நிலப்பிரபுத்துவ சிந்தனையிலேயே கட்டுண்டு கிடக்கும் நம் சமூகம், பெண்கள் மீதான பாலியல் ஏவல்களை ஒரு குற்றமாக கருதவே மறுக்கிறது. சமூகத்தில் புரையோடியிருக்கும் நுகர்வுக் கலாச்சாரம், ஆண்களின் தனிமனித பாலியல் வெறியை மிக உச்சமாக வளர்த்து வருகிறது. அதன் வெளிப்பாடுதான் வயது வித்தியாசமின்றி பெண்களும் குழந்தைகளும் பாலியல் வன்முறைகளுக்குப் பலியாகிறார்கள்.

பெண்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் தரவேண்டிய அரசு இயந்திரமும், சமூக கலாச்சார கட்டமைப்பும் பெண்களுக்கு எதிராகவே இருக்கின்றன. சாதியக் கட்டமைப்பும், வாரிசு அரசியலும்கூட இதிலிருந்து விலகிட முடியாது. நிலப்பிரபுவத்துவ சிந்தனையின் பரிணாம வளர்ச்சியாக மையம் கொண்டிருக்கும் வாரிசு அரசியலிலும்கூட பெண் வாரிசுகளுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை. ஏனெனில், அவள் பெண் என்பதால் மட்டுமே! குழந்தைப் பருவத்திலிருந்தே பெண்களுக்குத்தான் பண்பாட்டு நீதி போதனைகள் அதிகம் போதிக்கப் படுகிறது. ஆபாச ஆடைகளை உடுத்தக்கூடாது, கலாச்சாரத்தை மதிக்க வேண்டும், இரவு நேரங்களில் வெளியே செல்லக் கூடாது... இப்படி. பெண்களிடம் ஆண்கள் அத்துமீறுவது இயல்பானது, பெண்கள்தான் எச்சரிகையாக இருக்க வேண்டும், எப்படி பேச வேண்டும், என்ன மாதிரி பேச வேண்டும், சாலையில் நடக்கும்போது குனிந்த தலை நிமிரக்கூடாது என்பது போன்ற உபதேசங்கள் திணிக்கப்பட்டிருக்கின்றன. இதெல்லாம்தான் பிரபுத்துவ சிந்தனை. சுருக்கமாக சொல்வதாயின், பெண்களுக்கு எதிரான அனைத்து பாலியல் தாக்குதல்களுக்கும் அவளை மட்டுமே குற்றவாளியாக சித்தரிப்பது மட்டுமல்லாமல் அவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்தும் அதையே பொதுக்கருத்தாகவும் சமூகத்தில் நிலைநிறுத்தப்பட்டிருப்பது தான் மிகப்பெரிய வன்முறை. இதன் நீட்சிதான், பாலியல் தாக்குதல்களோடு பெண்கள் படுகொலை செய்யப்படுவதும் அதிகரிக்கிறது. அதேபோல, மரத்தடி சாதிய பஞ்சாயத்துகளிலும் பாலியல் குற்றங்களில் பெண்களுக்கு எதிரான தீர்ப்புகளே நியாயப்படுத்தப்படுகிறது.

இவையெல்லாம் நம் சமூகத்தைக் கவ்விக் கொண்டிருக்கும் கொடிய நோய். அதனை அழிப்பதற்கு எந்த மருந்தையும் கண்டுபிடிக்க சமூகம் விரும்பவில்லை. மேலும், நம்முடைய அரசாங்கங் களும் சட்டங்களும் காவல்துறையும் முன்வைக்கும் தீர்வுகள் எதுவும் பெண்களுக்கு எதிரான பாலியல் நெருக்கடிகளைத் தீர்க்க உதவவில்லை. சமூக சீர்திருத்தங்கள் பேரில் திணிக்கப்படும் தீர்வுகளும் கூட பிரச்சனைகளை களைவதற்குப் பதில் கடுமையாக்கி யிருக்கிறது. பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவும் இத்தேசத்தில் கேளிக்கை விடுதிகள், ஆபாச இணையத்தளங்கள், பாலியல் இச்சைகளைப் போக்கும் மையங்கள் 24 மணிநேரமும் தடையின்றி இயங்குவதை அனுமதிக்கிறோம். பெண்களின் உடல்களை சந்தைப்படுத்தும் கட்டற்ற வியாபார சிந்தனைகள் மேலோங்கி வருவதும் பாலியல் வன்முறைகளை அதிகரிக்கச் செய்துகொண்டே இருக்கிறது.

குற்றவாளிகளில் பெரும்பாலானோர் அரசியல் பின்புலம் மற்றும் சாதியச் செல்வாக்கு மிக்கவர்களாக இருப்பது நம் சமூகத்தின் சாபக்கேடு. இவை அழித்தொழிக்கப்பட வேண்டும். பெண்களின் ஜனநாயக உரிமைகளை மதிக்கும் எண்ணம் ஒவ்வொரு ஆண் களிடமும் உணர்வுபூர்வமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. பெண்களை சமமாக பாவிக்கும் ஜனநாயகத்தன்மை தேசத்தின் முழுமைக்கும் வர வேண்டும்.

ஆணும் பெண்ணும் சமம் என்கிற முதலாளித்துவ ஜனநாயகம் நிலைநிறுத்தப்படும்போதுதான் பாலியல் குற்றங்கள் தடுக்கப்படும். பாலியல் வன்முறைகள் வேரோடு பிடுங்கி எறியப்படுகிறபோது பெண் விடுதலைக்கான அசல் சுதந்திரம் கோலோச்சும். அதற்கான இளைஞர் சமூகம் புதிதாக மலரும்போதுதான் அது சாத்தியப்படும் என நினைக்கிறேன். அதனால், பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்களை கொடிய வன்முறையாகக் கருதி போராடும் மனநிலை இளைஞர்களிடம் வர வேண்டும். வெளுக்கவே முடியாத அளவுக்கு நம் சமூகம் அழுக் காகிப் போனதற்கு ஒவ்வொரு ஆணும் வெட்கப்பட வேண்டும்!

சந்திப்பு: இரா. இளையசெல்வன்