ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையைச் சேர்ந்த எழுத்தாளர் கவிப்பித்தன், வருவாய்த்துறை அதிகாரியாகவும் பணியாற்றி வருகிறார்.பரபரப்பான பணிகளுக்கு நடுவிலும், ஒரு மேகத்தின் தாகம், யாருமற்ற கனவில் ஆகிய கவிதைத் தொகுப்புகளையும், இடுக்கி, பிணங்களின் கதை, ஊர்ப் பிடாரி, சிப்பாய் கணேசன், சாவடி, பாலி ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும், சிறுகதைகள் அடங்கிய முழுத்தொகுப்பு ஒன்றையும் படைத்திருக்கும் இவர், நீவாநதி, ஈமம், மடவளி, சேங்கை ஆகிய நாவல்களையும் படைத்திருக்கிறார். தனித்தன்மை கொண்ட படைப்பாளியான இவர், பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றிருக்கிறார். அவரை, இனிய உதயம் இதழுக்காக சந்தித்தபோது....

கவிப்பித்தன் என்பது தங்களின் இயற் பெயரா?

எனக்கு பெற்றோர் வைத்த பெயர் தேவராஜ். இந்தப் பெயரில் ஊருக்கு பத்து பேராவது இருப்பார்கள். நான் செய்யாறு கல்லூரியில் படித்தபோது, காலையில் எல்லோருக்கும் முன்பாக வகுப்பைறைக்குப் போய், யாருக்கும் தெரியாமல் வகுப்பறை கரும்பலகையில் ஏதாவது ஒரு காதல் கவிதையை எழுதி வைத்துவிட்டு, அமைதியாக எனது இடத்தில் உட்கார்ந்துகொள்வேன். அந்தக் கவிதைகளைப் படிக்கிற மாணவர்களும் பேராசிரியர்களும் அவற்றை எழுதுவது யார் எனத் தெரியாமல் யார் யாரையோ ஊகித்துக் கொள்வார்கள். அப்போது கவிதைக்குக் கீழே பெயரை எழுத எனக்கு பயம். ஏதாவது ஒரு புனைபெயரை வைத்துக் கொள்ளலாம் என அப்போதுதான் யோசித்தேன். அப்போது புதுமைப்பித்தன் என்ற பெயர் எனக்குப் பிடித்திருந்தது. அதனால் கவிப்பித்தன் என கரும்பலகைக் கவிதைகளின் கீழே எழுதத் தொடங்கினேன். அந்தக் கவிதைகளுக்கு நண்பர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. நாளடைவில் அதுவே எனது புனைபெயராகவும் மாறிவிட்டது.

dd

Advertisment

கவிப்பித்தனான தாங்கள் கதைப் பித்தனானது எப்படி…?

பனிரெண்டாம் வகுப்பு படிக்கிறபோதே கவிதைகள் எழுதத் தொடங்கிவிட்டேன். கல்லூரிப் படிப்பின் மூன்றாவது ஆண்டில் ஒரு மேகத்தின் தாகம் என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டேன். எனது திருமணத்தன்று… திருமண மண்டபத்திலேயே யாருமற்ற கனவில் என்கிற கவிதைத் தொகுப்பை வெளியிட்டேன். தொடக்கத்தில் கவிதைகளை எழுதத் தொடங்கினாலும் அதற்குப் பிறகான நாட்களில் கதைகளின் மீதுதான் எனக்கான ஈர்ப்பு இருந்தது. அதனாலேயே கதைகளில் கவனம் செலுத்தத் தொடங்கினேன்.

ஒரு மேகத்தின் தாகம், யாருமற்ற கனவில் என்னும் இரண்டு கவிதைத் தொகுப்புகளுக்குப் பின் கவிதைத் தொகுப்பு வெளியிடவில்லையே. ஏன்..?

கதைகள் என்னை மிகவும் வசீகரித்தன. கதைகளை வாசிப்பதிலும், கதைகளைக் கேட்பதிலும் எனக்குப் பேரார்வம் இருந்தது.

அதனால் சிறுகதைகள் எழுதுவதில் முழுமையாக கவனம் திரும்பியது. அதற்குப் பிறகும் சில கவிதைகளை எழுதினேன். ஆனால் அவற்றைத் தொகுத்து மீண்டும் ஒரு தொகுப்பு வெளியிடுகிற ஆர்வம் இல்லாமல் போய்விட்டது.

கவிதை எழுதுவது, கதை எழுதுவது இரண்டில் எது ஓர் எழுத்தாளரை முழுமை யாக்குகிறது..?

இரண்டுமே அதனதன் அளவில் முழுமையாக்குகிறது. ஒரு படைப்பாளி தனது மனநிலையையும், அந்தக் கருப்பொருளின் தன்மையையும் பொருத்தே அதை எந்த வடிவத்தில் எழுதலாம் என முடிவெடுக்கிறான். நானும் அப்படித்தான். ஆனால் இப்போது கவிதைகளை விட கதைகளுக்கும் நாவலுக்கும் மிகுந்த வரவேற்பு இருப்பதாக பதிப்பாளர்களால் சொல்லப்படுகிறது. கவிதைகளும் பாடல்களும்தான் நமது ஆதி வடிவம். எனவே கவிதைகளை நாம் கொண்டாட வேண்டும்.

கவிதை, உரை நடை இரண்டிற்கு மான மொழி நடையை எப்படிக் கைக் கொள்கிறீர்..?

கவிதைகளுக்கு சொற்சிக்கனம் வேண்டும். வார்த்தைகளைச் செதுக்கி செதுக்கி நிறைவாக்க வேண்டும். கதைகளுக்கு காட்சிப்படுத்தலும், கூடுதலான புனைவு மனமும் வேண்டும். கவிதைகளை எழுத மிகுந்த வாசிப்பு அனுபவமும், ரசிப்புத் தன்மையும் வேண்டும். சங்க இலக்கியம் உள்ளிட்ட நமது தொன்மை இலக்கியங்களில் ஈடுபாடு இருந்தால் கவிதைகளில் தனித்துவம் இருக்கும். கனமும் கூடுதலாக இருக்கும். நான் எனது கதைகளில் மிக அதிகமாக வட மாவட்ட மக்களின் வட்டார மொழியைத்தான் பயன்படுத்துகிறேன். அது இப்போது மிகவும் அவசியம் எனவும் நினைக் கிறேன்.

கவிதையில் தொடங்கி சிறுகதையில் பயணித்து நாவல் வரை வந்துள்ளீர்.. அடுத்த திட்டம் என்ன?

மீண்டும் சிறுகதைகள், மீண்டும் நாவல்கள் தான்.

படைப்பின் இன்னொரு வகையான கட்டுரையை ஏன் கையாளவில்லை..?

தொடக்கத்தில் சில கட்டுரைகளை எழுதினேன்.

அதற்குப் பிறகு அதில் கவனம் செலுத்த முடியாமைக்கு நேர நெருக்கடிதான் காரணம். ஆனால் கட்டுரைகள்தான் நமது எண்ணங்களின் உடனடி வெளிப்பாட்டுக்கான வழியாக நான் நினைக்கிறேன்.

தங்களின் முதல் சிறுகதைத் தொகுப்பான இடுக்கிக்கு எப்படி வரவேற்பு இருந்தது? தற்போதைய சேங்கை நாவலுக்கான வரவேற்பு எப்படி இருந்தது?

இடுக்கி 2007 ஆம் ஆண்டு வெளியானது. அது வரை கவிதைகளை எழுதிக்கொண்டிருந்த நான் 2005 க்குப் பிறகு தொடர்ந்து கதைகளை எழுதத் தொடங்கி அதை தொகுப்பாக கொண்டு வந்தபோது உடனிருந்த நண்பர்களும் தோழர்களும்கூட அதை எதிர்பார்க்கவில்லை. மறைந்த எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி அதற்கு அணிந்துரை எழுதி தபாலில் அனுப்பிவிட்டு, தொலைபேசியில் அந்தக் கதைகளைப் பற்றி நீண்ட நேரம் என்னோடு பேசினார். எனது எழுத்துகளின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட எழுத்தாளர் கமலாலயன், மறைந்த கவிஞர் முகில் ஆகியோர் மிகுந்த உற்சாகத்தோடு வரவேற்றார்கள். அந்த ஆண்டு உலகம் முழுவதுமிருந்து வெளியான 50 சிறந்த தமிழ் நூல்களில் இடுக்கியும் இடம்பெற்றது.

சேங்கை நாவல் மிகப் பெரிய தளத்தைப் பெற்றிருப்பதாக உணர்கிறேன். பரவலாகப் போய்ச் சேர்ந்திருக்கிறது. தன் வாழ்நாள் முழுவதும் ஏராளமான நூல்களை வாசித்துக் கொண்டிருக்கிற ஆகச் சிறந்த வாசகரான திரு.வேலூர் பா. லிங்கம் அவர்கள் சேங்கை நாவலை கொண்டாடி வருகிறார்.

பல எழுத்தாளர்களிடம் பரிந்துரையும் செய்கிறார். லாரித் தொழில் சார்ந்து விரிவான ஒரு நாவலாக சேங்கை வந்திருப்பதில் எனக்கும் மகிழ்ச்சியே.

கதைக்கான களங்கள் எல்லாம் கற்பனையாக தெரியவில்லையே?

நான் ஏற்கனவே சில நேர்காணல்களிலும் இலக்கிய நிகழ்வுகளிலும் இது தொடர்பாக பதில் சொல்லியிருக்கிறேன். எனது கதைகள் எதுவுமே ழுழுமையான உண்மையும் அல்ல, முழுமையான புனைவும் அல்ல. ஆனால் புனைவுகளை விட அவற்றில் உண்மைகள் அதிகமிருக்கும். எனது மண் சார்ந்த மொழியும் எமது மக்களின் வாழ்வும்தான் எனது கதைகள். நான்கு சுவர்களுக்குள் உட்கார்ந்து, வார்த்தை விளையாட்டுகளால், வெறும் புனைவு களை மட்டுமே எழுதுகிற படைப்புகளில் எனக்கு உடன்பாடு இல்லை. அவை அந்தந்த நேரத்தில் சிறப்பான அனுபவங்களைத் தந்தாலும் காலத்தின் ஓட்டத்தில் நிற்பதில்லை.

தங்கள் கதைக்கு எதிர்ப்போ மறுப்போ வந்துள்ளதா?

முந்தைய கேள்விக்கான பதிலில் சொன்னதைப் போல நான் எனது மக்களின் அசலான வாழ்வை சில புனைவுகளோடு எழுதுகிறேன். அந்தப் புனைவுகளும் பெரும்புனைவுகளாக, அலங்காரத் திற்காகவும், வசீகரத்திற்காகவும் எழுதப்படுபவை யாக இல்லாமல்… எனது படைப்புகளுக்கான பலத் தைக் கூட்டுவதற்காக மட்டுமே கையாளுகிறேன். சில பாத்திரங்களையும், சில ஊர்களையும், சில நிகழ்வுகளையும் நேரடியாகப் பயன்படுத்த முடியாத போது புனைவாக எழுத வேண்டியிருக்கிறது. இதுவரை மிகப்பெரிய அளவில் எதிர்ப்போ மறுப்போ வந்ததில்லை. எங்களது வட்டார மொழி வாசிப்பதற்கு சற்றுச் சிரமமாக இருப்பதாக சிலர் குறை சொல்லியிருக்கிறார்கள். அதுதான் எமது மக்களின் மொழி. அதைத் தான் நாங்கள் பேசுகிறோம். எனவே ஒரு போதும் அதை என்னால் கைவிட முடியாது.

தங்களின் சிறுகதைகள் முழுத் தொகுப்பு என்று வந்துள்ளதே… இனியும் சிறுகதை எழுத மாட்டீரா?

இப்போதைக்கு அது முழுத் தொகுப்பு. இனிமேல் எழுதும் கதைகளை பாகம் - 2, பாகம் - 3 என கொண்டு வர வேண்டியது தான். ஆனால் அப்படி முழுத்தொகுப்பு என போட்டிருக்கக் கூடாது என்பதுதான் உண்மை. அடுத்த பதிப்பில் அதை மாற்றிவிடுவோம்.

எத்தனையோ எழுத்தாளர்கள், எத்த னையோ நாவல்கள், எத்தனையோ பொருள்கள்… இன்னும் எழுத பொருள்கள் உள்ளதா?

எத்தனையோ கோடி மனிதர்கள் வாழ்ந்து முடிந்து மண்ணாகிப்போன பிறகும் இந்த மண்ணில் மேலும் மேலும் கோடிக்கணக்கான மனிதர்கள் வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறார் கள். மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் வரை எழுதுவதற்குப் பொருள்கள் இருந்து கொண்டேதான் இருக்கும்.

தங்களை எழுதத் தூண்டியது யார்? அல்லது எது? எப்போது?

ஒருங்கிணைந்த வடாற்காடு மாவட்டத்தில் உள்ள பொன்னை அரசு மேனிலைப் பள்ளியில் 1990-ஆம் ஆண்டு நான் பனிரெண்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது எங்கள் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. அதில் கவிதைப் போட்டியில் கலந்து கொள்ளும்படி எங்களின் தமிழ் ஆசிரியர் தங்கமாரிமுத்து சொன்னார். அது வரை கவிதை எழுதிப் பழக்கமே இல்லாத நான் அப்போதுதான் முதல் கவிதையை எழுதினேன். அவர்தான் என்னை எழுதத் தூண்டியவர்.

நீங்கள் யாருடைய எழுத்துக்கு வாசகர்..?

தமிழில் கு. அழகிரிசாமியின் கதைகளை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது கதைகளுக்கு நான் மிகப் பெரிய வாசகன். புதுமைப்பித்தன், தி. ஜானகிராமன், கி.ராஜநாராயணன், வண்ணதாசன், வண்ணநிலவன், மேலாண்மை பொன்னுச்சாமி, எஸ்.ராமகிருஷ்ணன், பெருமாள்முருகன் என ஏராளமான தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை நான் விரும்பி வாசிப்பேன். வாசிக்கத் தொடங்கிய காலத்தில் ரஷ்ய நாவல்களைத் தேடித் தேடி வாசித்திருக்கிறேன். தமிழுக்கு வெளியே தகழி, சதத் ஹாசன் மண்ட்டோ, பிரேம்சந்த் ஆகியோரின் கதைகள் எனக்குப் பிரியமானவை.

மக்கள் புது முரசு என ஒரு செய்தித் தாளை நடத்தி வந்தீரே.. அது தற்போது தொடர்கிறதா?

அதை பதினைந்து ஆண்டு காலம் வரை நடத்தினேன். அரசுப் பணிக்கு வந்த பிறகு தொடர்ந்து நடத்த முடியவில்லை.

பொதுவாகவே சிற்றிதழ்களிலேயே நல்ல படைப்புகள் வரும் என்பார்கள். தங்கள் படைப்புகள் சிற்றிதழ்களில் வந்திருக்குமே.. அது குறித்து..?

தொடக்கத்தில் எனது நிறைய கவிதைகள் சிற்றிதழ்களில்தான் வெளிவந்தன. அப்போது ஏராளமான சிற்றிதழ்கள் அச்சு இதழ்களாகவும் கையெழுத்துப் பிரதிகளாகவும் வெளியாகின. நாங்களும் தேனூற்று, புல்வெளி என இரண்டு சிற்றிதழ்களை நடத்தினோம். சிற்றிதழ்களில் வருகிற கவிதைகளுக்கும் கதைகளுக்கும் நிறைய விமர்சனக் கடிதங்கள் வரும். பல நாட்கள் காத்திருந்து அந்தக் கடிதங்களைப் படிப்பது மிகப் பெரிய உற்சாகம். இப்போது அதற்கான வாய்ப்பு குறைந்துவிட்டது.

ss

ஒவ்வொரு படைப்பாளிக்கும் ஒரு லட்சியம் இருக்கும். தங்களின் லட்சியம் என்ன?

தொடர்ந்து எழுதுவதுதான் எனது லட்சியம். எமது மக்களின் தீராத களிப்புகளையும் கொண்டாட் டங்களையும் அடியாழத்தில் இருக் கிற அவர்களின் வலிகளையும், வேதனைகளையும் அசலாக எழுதிவிட வேண்டும். அவற்றை வெகுமக்களின் கவனத்திற்குக் கொண்டு சேர்க்க வேண்டும்.

லட்சியத்தை நோக்கித்தான் தங்கள் பயணம் தொடர்கிறதா?

நிச்சயமாக.

அரசு ஊழியர்கள் இலக்கியத்தில் ஈடுபடுதல்.. அதுவும் எழுதுதல் அரிது. தாங்கள் எப்படி?

நான் அரசுப்பணிக்கு வருவதற்கு முன்பே எழுதத் தொடங்கியவன். ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்காது என கிராமங்களில் ஒரு பழமொழி உண்டு. அதைப் போலதான் எனது நிலை யும். என்னால் எழுதாமல் ஒரு போதும் இருக்க முடியாது.

அரசுப் பணி என்பது மக்களுக்கானது.

நேரமே இருக்காது. அதுவும் தாங்கள் பொறுப்பான பதவியில் இருக்கிறீர்கள். இலக்கியத்துக்காக… அதாவது எழுதுவதற்காக எப்படி நேரம் ஒதுக்குகிறீர்?

எழுத்துப் பணியும் ஒரு மக்கள் பணிதானே. எங்களது பணி 24 மணி நேரப் பணி. மக்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கிற துறை. நேரப் பற்றாக் குறை மிகப் பெரிய சிக்கல்தான். ஆனாலும் எழுத வேண்டும் என்கிற பிடிவாதமே என்னை எழுத வைக்கிறது. எவ்வளவு வேலைகள் இருந்தாலும் உணவு உண்பதையும், சுவாசிப்பதையும் நாம் நிறுத்திவிட முடியாதே. அப்படிதான்… இயல்பாக சுவாசிப்பதைப் போல… இயல்பாக எழுத வேண்டியிருக்கிறது. எனது தூக்கத்தையும், ஓய்வு நேரத்தையும் திருடித்தான் எழுதுகிறேன்.

வாசிக்கவும் வாய்ப்பு உள்ளதா?

அதே மனநிலையில் தான் முடிந்த வரை வாசிக்கிறேன். இன்னும் நிறைய வாசிக்க வேண்டும் என்கிற ஆசை மட்டும் உள்ளுக்குள் தீராமலே இருக்கிறது.

எழுதுதல், வாசித்தல். தங்களுக்குப் பிடித்தமானது எது?

இரண்டும் தான்.

இலக்கியப் பயிலரங்கு களில் பங்கேற்று வருகிறீர்… பயிலரங்கு மூலம் ஒருவரை படைப்பாளியாக்க முடியுமா?

நேரமின்மையால் மிக மிகக் குறைவாகத்தான் பங்கேற்க முடிகிறது. படைப்பு மனநிலை என்பது தானாகவும் வரலாம். பிறரின் தூண்டுதலாலும் வரலாம். அதற்கு நானே உதாரணமாக இருக்கிறேன். ஆனால் அதற்கான ஆர்வம் அவர்களிடம் இருக்க வேண்டும். ஆர்வத்தோடு, புதிதாக எழுத வருகிறவர்களுக்கு இது போன்ற பயிலரங்குகள் வழிகாட்டுதலாக அமையலாம்.

தங்களுடைய நாவல் மொழிபெயர்க்கப்படுவதாக ஒரு செய்தி. மொழிபெயர்ப்பு வெளியாகி விட்டதா? அது குறித்து?

அண்மையில் நடந்து முடிந்த பன்னாட்டு புத்தகக் கண்காட்சியில் ஈமம் நாவல் பிரஞ்சு மொழியில் மொழி பெயர்க்க செனகல் நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தோடு புரிந் துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. நாவல் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட வேண்டும். பின்னர்தான் பிரஞ்சு மொழியில் வெளியாகும். அதற்குக் கூடுதல் காலம் தேவைப்படும். அதைப் போலவே விரைவில் புதிதாக வரவிருக்கிற எனது சிகிட்டி நாவலும் எனது முதல் நாவலான நீவாநதியும் வேறு மொழிகளில் வெளியிடு வதற்கான பணிகளும் நடந்து வருகின்றன.

தாங்கள் எத்தனையோ விருதுகள் பெற்றுள்ளீர்… தங்களுக்கு பிடித்தமானது எது?

எல்லா விருதுகளுமே முக்கியமானவைதான். எல்லா விருதுகளுமே பிடித்தமானவை தான். ஆனாலும் மடவளி நாவலுக்காக ஆனந்தவிகடன் நம்பிக்கை விருதை பெற்ற பிறகுதான் எனக் குள்ளேயே ஒரு நம்பிக்கையும் புதிய வேகமும் பிறந் தது. எனது எழுத்தைத் தொடர்ந்து கவனிக்கிறார்கள் என்ற எண்ணமும் எழுதுவதில் மேலும் மிகுந்த கவனம் தேவை என்ற உணர்வும் வந்தது.

தங்களின் ஈமம் நாவல் சாகித்ய அகாதெமி விருது பட்டியலில் இடம்பெற்றிருந்ததே..அப்போது தங்களின் மனநிலை என்ன?

சாகித்ய அகாதமி மூலம் அதிகார பூர்வமான இறுதிப் பட்டியல் வெளியான அன்று இரவு, அந்தத் தகவலை ஒரு பத்திரிகையாளர் நண்பர் கைபேசி மூலம் எனக்குச் சொன்னார். அப்போது அதை நான் நம்பவே இல்லை. ஈமம் நாவல் சாகித்ய அகாதமியின் பார்வை வரை போய்ச் சேர்ந்திருப்ப தில் மகிழ்ச்சிதான்.

ஒரு வேளை தங்களுக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்திருந்தால்..?

கூடுதலாக மகிழ்ச்சி அடைந்திருப்பேன். எழுத்தாளர் தேவிபாரதிக்கு பதிலாக இப்போது எனது பேட்டிகள் பத்திரிகைகளிலும் ஊடகங் களிலும் வெளியாகிக் கொண்டிருக்கும். பாராட்டு விழாக்கள் நடந்திருக்கும். சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட வேண்டிய தகுதியுள்ள பல படைப் பாளிகள் தமிழகத்தில் இருக்கிறார்கள். நிச்சயம் அவர்களுக்கான அங்கீகாரத்தை வழங்க வேண்டும்.

விருது என்றாலே வாங்கப்படுவது என்னும் ஒரு விமர்சனம் உள்ளதே..?

பொதுவாகவே பூமிக்குக் கீழேயும் பூமிக்கு மேலேயும் நடக்கிற எல்லாவற்றின் மீதுமே விமர்சனங்கள் உண்டுதானே. குறிப்பாக எல்லா விருதுகள் மீதும் விமர்சனங்கள் மிக அதிக அளவில் எழுகின்றன. வெளிப்படைத் தன்மை இல்லை என்கிற குற்றச்சாட்டுதான் அதிகமாக உள்ளது. குழு மனப்பான்மை என்ற குற்றச்சாட்டும் எழுகிறது. பெரும்பாலான விருதுகள் அப்படி வழங்கப் படுவதாக சொல்கிறார்கள். ஆனால் எல்லா விருது களையுமே அப்படி ஒதுக்கிவிட முடியுமா..?

விருதுக்காக மட்டுமே எழுதுவது இலக்கியமாகுமா?

ஒரு போதும் ஆக முடியாது. சிறந்த படைப்பு களுக்கான அங்கீகாரமாகத்தான் விருதுகள் இருக்கவேண்டும்.

விருதுகளே பெறாதவர் நல்ல இலக்கிய வாதியாக முடியாதா?

எந்த விருதுகளுமே பெறாத எத்தனையோ சிறந்த இலக்கியவாதிகள் இருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருக்கிறார்கள்.

அந்தப் படைப்புகள்தான் காலங்களைக் கடந்தும் நிற்கும். மக்களின் மனதில் இடம் பெறுகிற படைப்பு களும் மக்களைப் பற்றியும் மண்ணைப்பற்றியும் இயற்கையைப் பற்றியும் பேசுகிற உண்மையான படைப்புகளுமே சிறந்த இலக்கியமாக முடியும். சங்க இலக்கிய காலத்தில் எழுதிய எத்தனை புலவர்கள் விருதுகளைப் பெற்றிருப்பார்கள்….? ஒரு சிலர் அப்படி ஏதேனும் சில பரிசுகளைப் பெற்றிருந் தாலும் அந்தப் பரிசுகளும் விருதுகளும் இப்போது நிற்கவில்லை. பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் அந்தப் பாடல்கள்தான் நிற்கின்றன.

தங்களின் அடுத்த படைப்பு என்ன..? எப்போது வெளிவரும்..?

சிகிட்டி. எங்கள் மண் சார்ந்த ஒரு நாவல். மேலும் ஒரு புதிய களம். தற்போது அச்சுக்கான வேலைகள் நடந்து கொண்டுள்ளன. விரைவில் வெளிவரும்.

புதிதாக எழுத வருபவர்களுக்குத் தங்களின் அறிவுரை என்ன?

நிச்சயமாக நான் யாருக்கும் அறிவுரை சொல்ல மாட்டேன். ஆலோசனைதான் சொல்வேன்.

அதுவும் எல்லோரும் சொல்கிற ஆலோசனைதான்.

நிறைய வாசிக்க வேண்டும். புத்தகங்களை வாசிக்கிற அதே அளவு மனிதர்களையும் இயற்கையையும் வாசிக்க வேண்டும். பார்க்கிற எல்லாவற்றையும் உடனே எழுதிவிட வேண்டும் என்கிற அவசரம் கூடாது. அவற்றை உள்ளுக்குள் புதையல்களாகக் கூடப் புதைத்து வைக்கலாம். அது வெளிப்படுவதற் கான நேரத்தை அதுவே தேர்ந்தெடுத்துக் கொள்ளும். நாற்பது வருடங்களுக்கு முன்னர் எங்கள் பாட்டியிடம் நான் கேட்ட கதைகளை இப்போதுதான் எழுதத் தொடங்கியிருக்கிறேன். சில நிகழ்வுகள் பார்த்த உடனேயே எழுதத் தூண்டும். சில… ஏரியில் ஊறிக்கிடக்கிற கற்றாழையைப் போல உள்ளுக்குள் ஊறிக் கிடந்து திடீரென ஒரு நாள் உப்பிக்கொண்டு மேலே வரும். எனவே கதைகளுக்கான காலத்தை அந்தக் கதைகளே தீர்மானித்துக் கொள்ளும் என நம்புகிறேன்.