எஸ்.பி.பியால் வளர்ந்தேன்! - நக்கீரன் மூலம் அறிவித்த கவிப்பேரரசு வைரமுத்துவின் நேர்காணல்!

/idhalgal/eniya-utayam/i-grew-sbp-interview-vairamuthu-by-kaviperasu-announced-by-nakkeeran

றைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பி. யோடு, கடந்த 40 ஆண்டுகாலமாக திரையுலகில் பயணித்து வந்தவர் கவிப்பேரரசு வைரமுத்து. இவரது முதல் பாடலைப் பாடியவர் எஸ்.பி.பி.தான். அதேபோல் வைரமுத்து எழுதிய கொரோனா விழிப்புணர்வுப் பாடலைத்தான், எஸ்.பி.பி., கடைசி கடைசியாய்த் தானே இசையமைத்துப் பாடிவிட்டுப் போயிருக்கிறார். எஸ்.பி.பி. மறைந்த செய்திகேட்டுக் கலங்கிய கவிஞர், ’மறைந்தனையோ மஹா கலைஞனே’ எனக் கண்ணீர்க் கவிதையை எழுதிப் பாடியிருக்கிறார்.

எஸ்.பி.பி.க்கு நெருக்கமான நண்பராகவும் இருந்த வைரமுத்துவிடம், அவர் தொடர்பான சில கேள்விகளை நாம் வைத்த போது...

vv

எஸ்.பி.பி.யோடு நீண்ட காலம் இணைந்து பயணித்தவர் நீங்கள். உங்களுக்கும் அவருக்குமான உறவு பற்றிச் சொல்லுங்களேன்?

என் பதினான்கு வயதிலேயே எஸ்.பி.பி.யின் பாடலை அவர் ரசிகனாக நான் கேட்டேன். அடுத்த பதின்மூன்று வருடத்தில் என் பாடலைப் பாடுமிடத்தில் அவரைச் சந்தித்துவிட்டேன். அப்படியொரு திகைப்பான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. டி.எம்.சௌந்தரராஜனைக் கழித்துவிட்டு எந்த ஆண்குரலையும் ரசிக்க முடியாதவனாக இருந்தவன் நான். டி.எம்.எஸ், பி.சுசீலாவுக்கு நிகராக வேறெந்தக் குரல்களையும் வைத்துப் பார்க்கமுடியாத மன நிலையில் நானும் தமிழ்ச் சமூகமும் இருந்த காலகட்டம் அது. அப்போது எங்கள் முன்முடிவுகளைத் தாண்டி அன்பொழுகும் குரலாக எஸ்.பி.பி.யின் குரல் என்னை ஈர்க்கத் தொடங்கியது. சாந்திநிலையம் படத்தில் இடம்பெற்ற ’இயற்கை என்னும் இளைய கன்னி’பாடலைக் கேட்டபோது அந்தக் குரலில் இருந்த இனிமை, புதுமை, இளமை என்ற மூன்றும் பரவசத்தால் என்னைப் பாடாய்ப் படுத்த ஆரம்பித்தன.

அதே சமயத்தில் ‘சபதம்’ படத்தில் இடம்பெற்ற ’தொடுவதென்ன தென்றலோ...

மலர்களோ...’ என்ற பாடலும், ‘ஏன்’ படத்தில் இடம்பெற்ற ’இறைவன் என்றொரு கவிஞன்; அவன் படைத்த கவிதை மனிதன்’ என்ற பாடலும் எஸ்.பி.பி.யை என் மனதின் நெருக்கத்துக்குக் கொண்டுவந்தன. முன் உதாரணம் இல்லாத குரலாக அவர் குரல் இருந்தது. காதலிக்கத் துடிக்கும் இளைஞனுக்கு வழக்காடுகிற குரல் அது. காதலுக்காக ஒரு பாடகன் வழக்காடுவதை அவர் குரலில்தான் பார்த்தேன். அப்படித்தான் எஸ்.பி.யிடம் நான் வயமிழந்தேன்.

அவரை எப்போது முதன்முதலில் பார்த்தீர்கள்?

1971 ஆம் ஆண்டு நான் பச்சையப்பன் கல்லூரியில் பி.யு.சி. படித்துக்கொண்டிருந்த நேரம். எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த என் அத்தை, “எங்கள் கல்லூரியில் எஸ்.பி.பி.யின் கச்சேரி நடக்குது; வர்ரியா?’’ என்றார். என் கனவுப் பாடகனைப் பார்க்க வரமாட்டேன் என்றா சொல்வேன். அப்போது அவர் பாடிய ’பொட்ட

றைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பி. யோடு, கடந்த 40 ஆண்டுகாலமாக திரையுலகில் பயணித்து வந்தவர் கவிப்பேரரசு வைரமுத்து. இவரது முதல் பாடலைப் பாடியவர் எஸ்.பி.பி.தான். அதேபோல் வைரமுத்து எழுதிய கொரோனா விழிப்புணர்வுப் பாடலைத்தான், எஸ்.பி.பி., கடைசி கடைசியாய்த் தானே இசையமைத்துப் பாடிவிட்டுப் போயிருக்கிறார். எஸ்.பி.பி. மறைந்த செய்திகேட்டுக் கலங்கிய கவிஞர், ’மறைந்தனையோ மஹா கலைஞனே’ எனக் கண்ணீர்க் கவிதையை எழுதிப் பாடியிருக்கிறார்.

எஸ்.பி.பி.க்கு நெருக்கமான நண்பராகவும் இருந்த வைரமுத்துவிடம், அவர் தொடர்பான சில கேள்விகளை நாம் வைத்த போது...

vv

எஸ்.பி.பி.யோடு நீண்ட காலம் இணைந்து பயணித்தவர் நீங்கள். உங்களுக்கும் அவருக்குமான உறவு பற்றிச் சொல்லுங்களேன்?

என் பதினான்கு வயதிலேயே எஸ்.பி.பி.யின் பாடலை அவர் ரசிகனாக நான் கேட்டேன். அடுத்த பதின்மூன்று வருடத்தில் என் பாடலைப் பாடுமிடத்தில் அவரைச் சந்தித்துவிட்டேன். அப்படியொரு திகைப்பான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. டி.எம்.சௌந்தரராஜனைக் கழித்துவிட்டு எந்த ஆண்குரலையும் ரசிக்க முடியாதவனாக இருந்தவன் நான். டி.எம்.எஸ், பி.சுசீலாவுக்கு நிகராக வேறெந்தக் குரல்களையும் வைத்துப் பார்க்கமுடியாத மன நிலையில் நானும் தமிழ்ச் சமூகமும் இருந்த காலகட்டம் அது. அப்போது எங்கள் முன்முடிவுகளைத் தாண்டி அன்பொழுகும் குரலாக எஸ்.பி.பி.யின் குரல் என்னை ஈர்க்கத் தொடங்கியது. சாந்திநிலையம் படத்தில் இடம்பெற்ற ’இயற்கை என்னும் இளைய கன்னி’பாடலைக் கேட்டபோது அந்தக் குரலில் இருந்த இனிமை, புதுமை, இளமை என்ற மூன்றும் பரவசத்தால் என்னைப் பாடாய்ப் படுத்த ஆரம்பித்தன.

அதே சமயத்தில் ‘சபதம்’ படத்தில் இடம்பெற்ற ’தொடுவதென்ன தென்றலோ...

மலர்களோ...’ என்ற பாடலும், ‘ஏன்’ படத்தில் இடம்பெற்ற ’இறைவன் என்றொரு கவிஞன்; அவன் படைத்த கவிதை மனிதன்’ என்ற பாடலும் எஸ்.பி.பி.யை என் மனதின் நெருக்கத்துக்குக் கொண்டுவந்தன. முன் உதாரணம் இல்லாத குரலாக அவர் குரல் இருந்தது. காதலிக்கத் துடிக்கும் இளைஞனுக்கு வழக்காடுகிற குரல் அது. காதலுக்காக ஒரு பாடகன் வழக்காடுவதை அவர் குரலில்தான் பார்த்தேன். அப்படித்தான் எஸ்.பி.யிடம் நான் வயமிழந்தேன்.

அவரை எப்போது முதன்முதலில் பார்த்தீர்கள்?

1971 ஆம் ஆண்டு நான் பச்சையப்பன் கல்லூரியில் பி.யு.சி. படித்துக்கொண்டிருந்த நேரம். எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த என் அத்தை, “எங்கள் கல்லூரியில் எஸ்.பி.பி.யின் கச்சேரி நடக்குது; வர்ரியா?’’ என்றார். என் கனவுப் பாடகனைப் பார்க்க வரமாட்டேன் என்றா சொல்வேன். அப்போது அவர் பாடிய ’பொட்டு வைத்த முகமோ’ பாடல், பட்டையைக் கிளப்பிக்கொண்டிருந்தது. அதனால் கூட்டமான கூட்டம். அந்த மேடையில்தான் அவர் உருவத்தை முதன்முதலாக நேரில் பார்த்தேன்.

அவருடனான பாடல் அனுபவம்?

ஒலிப்பதிவு அறைக்குள் அவரும் நானும் அமர்ந்து கொள்வோம். நான் பாடலைச் சொல்லச் சொல்ல, அவர் கால் மேல் கால் போட்டுக்கொண்டு, மடியில் ஒரு நோட்டை வைத்துக்கொண்டு, தனது தாய்மொழியான தெலுங்கில் எழுதிக்கொள்வார். தாய்மொழியின் மீது அவர் வைத்திருந்த மதிப்பின் அடையாளம் அது. நான் மூன்று பக்கத்திற்கு எழுதிவைத்துச் சொல்வதை அவர் ஒரே பக்கத்தில் எழுதிக்கொள்வார். அப்படித்தான் நான் என் முதல் பாடலையும் அவரிடம் சொன்னேன். அப்போது, ’வானம் எனக்கொரு போதிமரம்’ என்ற என் வரியைக் கேட்டதும், என்னை நிமிர்ந்து பார்த்துச் சிரித்து ரசித்தார். “வாட் எ பியூட்டிஃபுல் லைன்’’ என்றார். அந்தப் பாடலுக்கான மூன்றாம் பல்லவியாக...

‘இரவும் பகலும் யோசிக்கிறேன்

எனையே தினமும் பூசிக்கிறேன்

சாலை மனிதரை வாசிக்கிறேன்

தீயின் சிவப்பை நேசிக்கிறேன்’

- என்று எழுதியிருந்தேன். ஆனால், பாட்டுக்கு நேரமில்லை என்பதால் மூன்றாம் சரணம் ஒலிப்பதிவாகவில்லை. எனினும், அந்தச் சரணத்தை ஆஹா போட்டு வெகுவாக ரசித்த எஸ்.பி.பி., மேடை களில் பாடும் போதெல்லாம் அந்த மூன்றாவது சரணத்தையும் பாடிவிட்டுத்தான் நிம்மதியடைவார். அது அந்தக் கலைஞனின் அதீத ரசனைக்கு அடையாளம்.

vv

உங்கள் வளர்ச்சிக்கு எந்த வகையில் அவரது பங்களிப்பு இருந்தது?

எஸ்.பி.பி முதலில் நல்ல ரசிகர். பண்பாளர். சொல்லும் சொற்களில் கனியிருக்கக் காய் கவராதவர். இன்சொல்லில் மட்டுமே உரையாடக் கூடியவர். என் வளர்ச்சியில் அவர் குரலுக்குப் பெரும்பங்கு இருக்கிறது என்பதை நக்கீரன் மூலமாக உலகத் தமிழர்களுக்கு நன்றியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

பதினாறு இந்திய மொழிகளில் பாடிய உலகச் சாதனையாளர் எஸ்.பி.பி. அதனால், பாடல் பதிவு தொடங்குவதற்கு முன்பு, நேரம் கொஞ்சம் கிடைத்தாலும் பிறமொழிகளில் அவர்பாடிய - ரசித்த சமகாலப் பாடல்களின் உயரம் எப்படி என்பதை அவருடன் உரையாடித் தெரிந்துகொள்வேன். தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஏனைய மொழிகளில் பாடிக்கொண்டிருந்த அவர், அவ்வாறு பாடிய பாடல்களின் கற்பனை நயத்தை என்னிடம் ரசனையோடு விவரிப்பார். அதன் மூலம், என் உயரத்தை நானே சரி பார்த்துக்கொள்வேன். அப்படி ஒருமுறை அவர் சொன்ன ஒரு இந்திப் பாடலின் பல்லவி என்னை வியக்கவைத்தது. காதல் தோல்வியடைந்த அந்தக் கதாநாயகி ஜன்னலோரத்தில் நின்றுகொண்டிருக்கிறாள். வெளியே மழை கொட்டிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பாடல் தொடங்குகிறது.

‘இன்று பூமியில் இரண்டு மழை

விண்ணிலிருந்து ஒருமழை - என்

கண்ணிலிருந்து ஒருமழை

-என்று எழுதியிருந்தார் அந்தப் பாடலாசிரியர். அதைக் கேட்டு, ஆஹா என்று என்னையும் ரசிக்க வைத்தார். இதுபோன்ற அவருடனான உரையாடல் கள், உரையாடுபவர்களையும் தரமுயர்த்தக் கூடிய தாகும்.

எஸ்.பி.பி.யோடு எப்போதாவது முரண்பட்டிருக்கிறீர்களா?

பாடலில் இடம்பெறும் ஒற்றெழுத்துக்கள் தொடர்பாக மெல்லிய முரண்பாடுகள் முளைத்த துண்டு. அவர்மீதிருந்த மதிப்பின் காரணமாகத் திருத்தங்களை ஒலிபெருக்கியில் சொல்லாமல் காதோடு சொல்லவேண்டும் என்று நினைப்பேன். ரோஜா படத்தில், ஏ.ஆர்.ரகுமானுக்கு அவர் முதன் முதலாகப் பாடிய பாடல் ’காதல் ரோஜாவே, எங்கே நீ எங்கே ?’ அந்தப் பாடலில், ’கண்ணுக்குள் நீதான்.. கண்ணீரில் நீதான்... கண்மூடிப் பார்த்தால்... நெஞ்சுக்குள் நீதான்..’ என்பதில் கண்மூடிப் பார்த்தாலில் ’ப் ’ அவருக்கு வரவில்லை. நான், ஒலிப்பதிவு அறைக் குள் சென்று அவர் காதருகே ’ப் ’ வரவில்லை. ’ப ’வின் மீது ’ப்’ பைப் போட்டுப் பாடுங்கள் என்றேன். அதற்கு அவர் மெதுவாக.. இ ’ப் ’ப வரும் என்று சொன்னார்.

பிறகுதான் உச்சரிப்பு சரியாக வந்தது.

இப்படி அவரது உச்சரிப் பில் தவறு வந்துவிடக்கூடாது என்று நான் அதிக கவனம் கொள்வேன். ஏனெனில், களிப்பூட்டுவது மட்டுமே கலையின் வேலையன்று. அது கற்றுக்கொடுக்கவும் வேண்டும். உச்சரிப்பைக் கற்றுக் கொடுப்பதில் பாடல்கள்தான் பாமரர்களின் பள்ளிக் கூடங்கள். பாடலில் ஒற்றுப்பிழை நேர்ந்தால், அதுதான் சரி என்று மொழிப் பிழை நியாயப் படுத்தப்பட்டுவிடும். அதனால்தான் பாடகர்களின் தமிழ் உச்சரிப்பில் நான் பிடிவாதமாக இருக்கிறேன். இந்த வகையில், கடந்த அரை நூறாண்டாகத் தமிழர்களுக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்கும் ஆசானாகவும் திகழ்ந்தவர் எஸ்.பி.பி. எந்த மொழியில் பாடினாலும், அதைத் தனது தாய்மொழி போல் உச்சரிக்கும் ஆற்றலை வளர்த்துக் கொண்டவர் அவர்.

அவரது உயர்ந்த பண்பாக எதைக் கருதுகிறீர்கள்?

அவர் இரக்கமுள்ள பாடகர். ஒலிப்பதிவுக் கூடத்தில் பாடலைப் பாடி முடித்ததுமே, ஊதியத்துக் காகக் காத்திருக்காமல் வீட்டுக்குக் கிளம்பிவிடுவார். இதைப் பார்த்த நான், ஒருமுறை அவரிடமே, “ஊதியத் தில் நீங்கள் நெகிழ்வாக நடந்துகொள்வீர்களா? கெடுபிடியாக நடந்துகொள்வீர்களா?’’ என்று கேட்டேன். எஸ்.பி.பி.சொன்னார், பணம் வேண்டும் தான். ஆனால் ஒரு கலைஞன் பணம் மட்டுமே தேவை என்று, ஒரு வடநாட்டுப் பாடகர் போல் நடந்து கொள்ளக் கூடாது’’ என்றார். வடநாட்டுப் பாடகர் யார்? என்றேன். வாய் தவறிச் சொல்லிவிட்டேன். விட்டுவிடுங்கள் என்றார். நான் விடவில்லை.

அவர் பாடி முடித்துக் கிளம்பியபோது, அவர் காரில் நான் ஏறி அமர்ந்துகொண்டு, அந்த வடநாட்டுப் பாடகர் விவகாரம் பற்றி நீங்கள் சொன்னால்தான் காரை விட்டு இறங்குவேன் என்றேன். அதன்பின் இறங்கி வந்தவர், “அந்தப் பாடகர் ஒரு பாடலைப் பாடப் போனால், ஒலிப்பதிவுக் கூடக் கண்ணாடி வழியே, தன் உதவியாளரைப் பார்ப்பார். அவர், கட்டைவிரலை உயர்த்திக்காட்டினால் பணம் வந்துவிட்டது என்று அர்த்தம்.

உடனே பாடலைப் பாடிக் கொடுப்பார். கட்டைவிரலை அவர் காட்டாவிட்டால் பணக் கட்டு வரவில்லை என்று அர்த்தம். உடனே, தொண்டை சரியில்லை என்று அவர் கிளம்பிவிடுவார்’’ என அந்த ரகசியத்தைச் சொன்ன எஸ்.பி.பி, அதன் பின் சொன்னதுதான் உச்சம். ஒரு ரெக்கார்டிங்கின் போது உதவியாளரை அந்தப் பாடகர் பார்த்தார்.

உதவியாளர் கட்டைவிரலை உயர்த்தவில்லை.

அதனால் தொண்டை சரியில்லை என்று அவர் காரில் ஏறிக் கிளம்பிவிட்டாராம். காரில் போகும் போது அவரது உதவியாளர், நீங்கள் ஏன் பாடவில்லை? என்று கேட்க, நீ கட்டை விரலைக் காட்டவில்லையே என்றா ராம் பாடகர். அதற்கு அந்த உதவியாளர் சொல்லியிருக் கிறார் சார்! எப்படிக் கட்டை விரலைக் காட்ட முடியும்.

இது நமது சொந்தப்படம். நாங்கள் அப்போது சிரித்த சிரிப்பில் ஸ்டுடியோ வேப்பமரத்திலிருந்து பறவை களும் பறந்துவிட்டன.

எஸ்.பி.பி. உங்களிடம் பகிர்ந்துகொண்ட செய்திகளில் மறக்கமுடியாதவை எவை?

நிறையப் பகிர்ந்திருக்கிறார். அவற்றில், நெஞ்சில் நிலை நிறுத்தக்கூடிய செய்திகளும் உண்டு. ஒருமுறை கே.வி.மகாதேவனுடன் எஸ்.பி.பி. காரில் போய்க்கொண்டிருந்தாராம். அப்போது காரில் ஒரு பாடல் ஒலிக்க, “யார் பாட்டுப்பா இது? ரொம்ப நல்லா இருக்கே’’ன்னு எஸ்.பி.பி.யிடம் மகாதேவன் கேட்டிருக்கிறார். இதைக்கேட்டுத் திகைத்துப்போன அவர், மாமா, உங்களுக்கு நினைவு இல்லையா? இது நீங்கள் போட்ட பாட்டுதான். எப்படி இதை மறந்தீங்க மாமா’’ன்னு எஸ்.பி.பி.கேட்க, மகாதேவனோ, “இப்படி மறக்குறது தான் நல்லதுப்பா. ஒரு பாட்டை இசையமைத்துப் பாடி முடிச்சதும், அதுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லைன்னு ஒதுங்கிடணும். அதுதான் கர்வத்திலிருந்து வெளியேறும் வழி. இல்லைன்னா, கர்வம் நம் தலையில் ஏறி உட்கார்ந்துகொண்டு, நம்மைப் படுத்த ஆரம்பிச்சிடும்’’ன்னு சொல்லியிருக்கிறார். இதை என்னிடம் சொன்ன எஸ்.பி.பி., “கே.வி.மகாதேவன் சொன்ன இந்தக் கருத்தைத்தான் நான் தலையில் ஏற்றி வச்சிருக்கேன். அதனால் தான் எனக்குத் தலைக்கனம் வரலைன்னு சொன்னார். சொன்ன மாதிரியே, கடைசிவரை எளிமையாக வாழ்ந்துகாட்டிவிட்டுப் போயிருக்கிறார்.

அதேபோல் ஒரு நாள் நள்ளிரவு 12 மணிக்கு எஸ்.பிபி.க்கு போன் வந்திருக்கிறது. எதிர்முனையில் அவர் அதிகம் மதிக்கும் எம்.எஸ்.விஸ்வநாதன். உடனே பதறிப்போய் அவர் என்னவோ ஏதோ என்று திகைக்க, எம்.எஸ்.வி.யோ., “ராஜா! எப்படிடா இந்தப் பாடலை இப்படிப் பாடினே...? கேட்கக் கேட்க அசந்து போறேண்டா. எப்படிடா உனக்கு இப்படி ஒரு திறமை? கொன்னுட்டடான்னு... பாராட்டி நெகிழ்ந்திருக்கிறார். அப்படி நள்ளிரவில் எம்.எஸ்.வி அழைத்துப் பாராட்டிய அந்தப் பாடல்... நிழல் நிஜமாகிறது என்ற படத்தில் இடம்பெற்ற ‘கம்பன் ஏமாந்தான்’ பாடல். அந்த மகிழ்ச்சியை அந்த நள்ளிரவிலேயே கொண்டாடியிருக்கிறார் எஸ்.பி.பி.

இந்த மரணத்தில் எந்த விஷயம் உங்களை மிகவும் பாதித்தது?

எஸ்.பி.பிக்கும் எனக்குமான தொழில் உறவில் காலம் ஒரு கனத்த ஒற்றுமையை விட்டுச் சென்றிருக்கிறது.

கொரோனா குறித்து இருபாடல்கள் கேட்டார். எழுதி மின்னஞ்சலில் அனுப்பினேன். இரண்டுக்கும் அவரே இசையமைத்துப் பாடினார்;

யூ டியூபில் பதிவேற்றினார்; பரவலான பாராட்டைப் பெற்றார். அதுதான் அவரது கடைசிப் பாடல். என் முதல் பாடலைப் பாடியவர் அவர்; அவரது கடைசிப் பாடலை எழுதியவன் நான்.

எஸ்.பி.பி.யின் இழப்பை எப்படி உணர்கிறீர்கள்?

எஸ்.பி.பி.யின் மரணம், கலையுலகத்திற்கு மட்டுமல்ல சிறு கிராமம் வரை சோகத்தைக் கொண்டு சென்றிருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் பெரும் வேதனையும் வலியும் நுழைந்திருக் கிறது. இது பாட்டு மரணம் மட்டுமல்ல; ஒவ்வொரு வீட்டு மரணமும் கூட. அதனால்தான் இந்த சகாப்தத் தின் கடைசிப் பெரும்பாடகர் எஸ்.பி.பி.மறைந்து விட்டார் என்றேன். பாடுதல், இசையமைத்தல், நடிப்பு, பின்னணி பேசுதல், பலமொழி அறிவு, பண்பாடு, கனிவு என இவ்வளவு கலவையோடு ஒரு கலைஞன் பிறப்பது அரிதிலும் அரிது.

எஸ்.பி.பி.யை அடக்கம் செய்யும் காட்சியைத் தொலைக்காட்சியில் அழுதுகொண்டே பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது கடைசியாக மதுரை நிகழ்ச்சியில் அவரோடு கலந்துகொண்டது என் நினைவில் நிழலாடியது. சிகரம் படத்தில் நான் எழுதி அவர் இசையமைத்துப் பாடிய ‘வண்ணம் கொண்ட வெண்ணிலவே’ பாடலை அங்கே பாடினார். நான் அவருக்குச் சற்றுத் தள்ளி நின்றுகொண்டிருந்தேன்.

‘பக்கத்தில் நீயும் இல்லை!

பார்வையில் ஈரம் இல்லை!’

-என்ற வரிகளைப் பாடியவர்...

‘தள்ளித் தள்ளி நீ இருந்தால்

சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை’

-என்று பாடியபடியே, தள்ளியிருந்த என்னை அருகே இழுத்து அணைத்துக்கொண்டார். தள்ளியிருந்த என்னைப் பக்கத்தில் வரச்சொன்ன எஸ்.பி.பி நம்மையெல்லாம் தனியே விட்டுவிட்டுத் தள்ளி... மிக மிகத் தள்ளிப் போய்விட்டார்.

ஈரமாகிவிட்டது; கைக்குட்டையை மாற்றுகிறேன்.

-ஆரூர் தமிழ்நாடன்

uday011020
இதையும் படியுங்கள்
Subscribe