இந்திய ஆட்சிப்பணி அதிகாரி, வரலாற்று ஆய்வாளர், வழக்கறிஞர், மொழிபெயர்ப்பாளர், நாவலாசிரியர், இந்திய சிலம்பாட்ட அமைப்பின் தேசியத் தலைவர், கம்பம் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையின் மேனேஜிங் டிரஸ்டி என்கிற பன்முக அடையாளங்களுடன் தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவருபவர் எழுத்தாளர் டாக்டர் மு.ராஜேந்திரன், இஆப.
சேரர், சோழர், பாண்டியர், பல்லவர் காலச் செப்பேடுகளை எளிய மொழியில் தந்ததோடு, வடகரை, 1801, காலா பாணி, மதாம் ஆகிய 4 நாவல்களையும், பாதாளி எனும் சிறுகதைத் தொகுப்பையும், வெயில் தேசத்தில் வெள்ளையர்கள், யானைகளின் கடைசி தேசம், வண்ணச் சீரடி ஆகிய கட்டுரை நூல்களையும் எழுதியுள்ளார். "இந்திய பழங்குடிகள்" எனும் ஆங்கில நூலை நேஷனல் புக் டிரஸ்ட்டுக்காக தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
"காலா பாணி' எனும் நாவலுக்கு 2022-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றிருக்கும் எழுத்தாளர் மு.ராஜேந்திரனுக்கு, "இனிய உதயம்' இதழின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு, அவரோடு நடத்திய சிறு உரையாடலிது:
சிறுவயது நாட்களின் மலரும் நினைவுகள் பற்றி…
நான் மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டத்திலுள்ள வடகரை எனும் கிராமத்தில் பிறந்தேன். எனது தந்தையார் முத்தையா, கிராம முனிசீஃப்பாக பணியாற்றியவர். எனது தாய் ஜெயலெட்சுமி அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரிய ராகப் பணியாற்றிவர். சிறுவயது முதலே நன்கு படிக்கவேண்டும் அரசுப் பணியில் உயர்ந்த பொறுப்புகளில் வேலை செய்யவேண்டு மென்கிற எண்ணம் எனக்கு வந்தது.
மதுரை சட்டக்கல்லூரியில் பி.எல்., படித்தேன். இன்னொரு பக்கம் இந்திய ஆட்சிப் பணி தேர்வுக்காகவும் என்னைத் தயார் செய்து கொண்டிருந்தேன். மதுரை உயர்நீதிமன்றத்தில் மூன்றாண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றிய அனுபவம், எனக்கு மிகவும் பயனளிப்ப தாக அமைந்தது.
இலக்கிய வாசிப்பின் பக்கம் உங்கள் கவனம் எப்போது திரும்பியது?
எனது பள்ளி நாட்களிலேயே புத்தக வாசிப்பில் எனக்கு ஆர்வமுண்டு. எந்த நூலை எடுத்தாலும் உடனே படித்து முடித்துவிடுவேன். ஒருமுறை நா.பார்த்தசாரதி எழுதிய, "பிறந்த மண்' நூலைப் படித்தபோது, எனக்கும் கதை எழுத வேண்டுமென்கிற எண்ணம் வந்தது. அந்தப் பள்ளி வயதில் நான் படித்த நா.பாலிவின் கதையையே சில பெயரை மட்டும் மாற்றி, எனது அனுபவத்துடன் சேர்த்து கதையாக எழுதினேன். ஆனால் அதை யாரிடமும் படிக்க கொடுக்காமல் நானே வைத்துக்கொண்டேன்.
பிறகு கல்லூரி நாட்களில் ஆங்கில இலக்கியம் படிக்கையில், நிறைய நூல்களைத் தேடியெடுத்துப் படிக் கத் தொடங்கினேன்.
ஆங்கில இலக்கிய நூல்களை மட்டு மின்றி, தமிழ் இலக்கிய நூல்களையும் நான் அப்போதிலிருந்தே படிக்கத் தொடங்கினேன். என்னை மிகவும் ஈர்த்த நூலாகத் திருக்குறள் இருந்தது.
திருக்குறளை ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றிருக்கிறீர்களே..!
நான் தஞ்சாவூர் மாவட்ட வழங்கல் அலுவலராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். சில கூட்டங்களுக்காக தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு செல்வதுண்டு. சிறுவயதிலிருந்தே திருக்குறளின் மீது ஆர்வமிருந்தது. நான் வழக்கறிஞராகப் பணி செய்த காலத்தில் அடிக்கடி திருக்குறளை மேற்கோளாகச் சொல்வதுமுண்டு. திருக்குறளில் முனைவர் பட்ட ஆய்வுசெய்ய வேண்டுமென்கிற எண்ணம் வந்தது.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் "திருக்குறளில் உள்நாட்டு-வெளிநாட்டு சட்டக் கூறுகள்' எனும் தலைப்பில் என் ஆய்வினைச் செய்தேன். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இன்றைக்கு உலகின் பல நாடுகளில் பின்பற்றப்பட்டு வரும் சட்டக்கூறுகளைப் பற்றி திருவள்ளுவர் எழுதியிருக்கிறாரே என்கிற வியப்புடனே என் ஆய்வினைச் செய்துமுடித்தேன். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் மாணவர் என்கிற பெருமையும் இதனால் எனக்கு கிட்டியது.
நூல்களை எழுதும் ஆர்வம் எப்போது உண்டானது..?
எழுத வேண்டுமென்கிற ஆர்வம் எனக்கு இருந்தாலும், எனது நெருக்கடியான பணிச்சூழலால் அது கைகூடாமலேயே இருந்தது. ஆனாலும், நான் எங்கு சென்றாலும் மிக கவனமாக குறிப்புகளை எடுப்பது வழக்கம். அந்த வகையில் நிறைய தகவல்களைச் சேகரித்து வைத்திருந்தேன்.
தஞ்சாவூரில் பணியாற்றியபோது ‘காவிரி தந்த கலைச்செல்வம்’ (1992) எனும் நூலையும், ‘மகாமகம்’ (1995) எனும் நூலையும் தமிழக அரசுக்காக தொகுப்பாசிரியர்களுள் ஒருவராக இருந்து வெளியிட்டேன். பிறகு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றேன்.
2010-ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வந்தவாசிக்குச் சென்றேன். இந்திய வரலாற்றில் மிக முக்கியமான "வந்தவாசிப் போர்' நடைபெற்ற ஊரது. 1760-ஆம் ஆண்டு புதுச்சேரியை ஆண்டுகொண்டிருந்த பிரெஞ்சுக் காரர்களுக்கும், தமிழகத்தின் பல பகுதிகளை ஆண்டு கொண்டிருந்த பிரிட்டிஷாருக்கும் வந்தவாசி யில் போர் நடைபெற்றது. சிறிய அளவிலான போர் என்றாலும், அந்தப் போரில் தோல்வியுற்றதன் காரணமாக பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கம் புதுச்சேரியோடு சுருங்கிப் போனது. பிரிட்டிஷாரின் ஆதிக்கம் இந்தியாவெங்கிலும் பரவியது. இன்றைய தலைமுறையினரில் பலரும் அறிந்திராத இந்த வரலாற்றினைப் பதிவுசெய்யும் நோக்கில், நானும் கவிஞர் அ.வெண்ணிலாவும் சேர்ந்து "வந்தவாசிப் போர் - 250' எனும் கட்டுரை நூலைத் தொகுத்தோம். அந்த நூலுக்குக் கிடைத்த பாராட்டும், வரவேற்பும் தொடர்ந்து என்னை எழுத்தின் பக்கமாக இழுத்து வந்தது.
தங்களது "1801' நாவல் பரவலாகப் பேசப்பட்டதே..!
600 ஆண்டுகால எனது குடும்ப வரலாற்று நாவலான "வடகரை: ஒரு வம்சத்தின் வரலாறு" நூலைத் தொடர்ந்து நான் எழுதிய நாவல் "1801.'
1857-இல் நடைபெற்ற "சிப்பாய் கலக'த்தைத் தான் இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் என்று நாம் படித்துவருகிறோம். மதுரையில் வசித்துவந்த வரலாற்றுப் பேராசிரியர் டாக்டர் கே.ராஜய்யனைச் சந்தித்தேன். அவர் முன்பே ‘நர்ன்ற்ட் ஒய்க்ண்ஹய் தங்க்ஷங்ப்ப்ண்ர்ய்’ எனும் ஆங்கில நூலினை எழுதியுள்ளார். 1801-ஆம் ஆண்டில் மருது சகோதரர்கள் தென்தமிழகத்தில் இருந்து ஆங்கிலேயருக்கு எதிரான தங்களது போராட்டத்தைப் பிரகடனமாக அறிவித்தது பற்றி என்னிடம் பகிர்ந்து கொண்டார். இதைக் கேட்டதும் இந்திய சுதந்திர போராட்டம் நம் தமிழகத்தில்தான் முதன்முதலாகத் தொடங்கியது என்பதை மத்திய அரசு அறிவிக்க வேண்டுமென்கிற எண்ணத்தில் நானே சென்னை உயர்நீதி மன்றத் தில் ஒரு வழக்கினைப் பதிவுசெய்தேன். அது தொடர்பாக பல நூல்களைப் படித்தேன். பல ஊர்களுக்குப் பயணம் செய்தேன்.
அதன் விளைவாக பிறந்ததே "1801' நாவல். அந்த நாவலுக்கு மலேசியாவிலுள்ள டான்ஸ்ரீ சோமா நலநிதி கூட்டுறவு சங்கம், தமிழின் சிறந்த நூல் எனும் பாராட்டோடு, ரூ.7 இலட்சம் பரிசினையும் கொடுத்து, என்னை மலேசியாவிற்கே அழைத்து வழங்கியது.
சாகித்திய அகாதெமி விருது பெற்ற "காலா பாணி' நாவலைப் பற்றி சொல்லுங் களேன்..!
"1801' நாவலின் இரண்டாம் பாகமே "காலா பாணி' நாவல். தென்தமிழகத்தின் ஆட்சியாளர்களாக இருந்த பாளையக்காரர் களுக்கும், பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஏஜெண்டு களாக இருந்த நவாபுகளுக்குமிடையே வரி வசூல் தொடர்பாய் அவ்வப்போது பிரச்சினைகள் எழுந்த வண்ணமிருந்தன. நவாபுகளின் தந்திரத்தைப் புரிந்துகொண்ட பிரிட்டிஷ் அரசாங்கம், நேரடியாகப் பாளையக் காரர்களுடன் மோதலைத் தொடங்கியது.
புலித்தேவன், கட்டபொம்மன், ஊமைத்துரை, மருதுபாண்டியர் உள்ளிட்ட பாளையக்காரர்களுடன் போர் நடத்தினார் கள் பிரிட்டிஷ்க்காரர்கள். தங்களுடன் மோதுபவர்களுக்கு மிகுந்த அச்சத்தை உருவாக்க, போராளிகளைத் தூக்கிலிட் டார்கள். 1802-ஆம் ஆண்டு போராளிகளை முதல்முறையாக நாடு கடத்தினார்கள். நாடு கடத்துவதை "காலா பாணி' (கறுப்புத் தண்ணீர்) என்றழைத்தார்கள் பிரிட்டிஷார்.
தென்தமிழகத்தில் இருந்து சிவகங்கை அரசர் வேங்கை பெரிய உடையணத் தேவரும், போராளிகள் 71 பேரும் பினாங்குக்கு நாடு கடத்தப்பட்டார்கள். இவர்களில் இஸ்லாமிய, கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர்களும், பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்களும் இருந்தனர். 73 நாள்கள் நீடித்த கடுமையான கடல் பயணத்திற்குப் பிறகு, அரசியல் கைதிகள் பினாங்கில் சிறை வைக்கப்பட்டனர்.
பெரிய உடையணத் தேவரை மட்டும் பினாங்கில் இருந்து சுமத்திரா தீவிற்கு மாற்றினார்கள். அங்கு மால்பரோ கோட்டை யில் சிறைவைக்கப்பட்ட அரசர், நான்கு மாதங்களில் இறந்து போகிறார்.
தூத்துக்குடியில் இருந்து போராளிகள் கப்பலில் அழைத்துச் செல்வதில் தொடங்கி, மால்பரோ கோட்டையின் சிறையில் சிவகங்கை அரசர் உயிர்விடுவது வரையிலான சம்பவங் களை முன்வைத்தே இந்த நாவலை எழுதினேன்.
இந்த நாவலை எழுதுவதற்காகவே களப் பயணமாக பினாங்குத் தீவுக்கும், சுமத்திரா தீவுக்கும் பயணம் சென்றுவந்தேன். பல நாட்கள், பல மணி நேரம் ஆவணக்காப்பகங்களில் இதற் காக ஆதாரங்களைத் தேடினேன். இரண்டாண்டு களுக்கும் மேற்பட்ட எனது பெரும் முயற்சி யில் உருவானதே "காலா பாணி' நாவல்.
உங்களின் வளர்ச்சிக்கு காரணமாக இருந்தவர் யார்?
எங்கள் அய்யா (அப்பாவின் அப்பா) அய்யம் பெருமாள் தேவர், என்னைப் பெரிதும் ஊக்கப்படுத்தி, என்னாலும் முடியும் என்கிற நம்பிக்கையை விதைத்த முதல் ஆளுமை வடகரை கிராம முனிசீப்பாகவும், பின்னர் வடகரை பஞ்சாயத்து தலைவராகவும் இருந்தவர்.
படிப்பு, விளையாட்டு, உடல் பலம் என எதிலும் பெரிய அளவில் சொல்லிக்கொள்ளும்படியான ஆள் நானில்லை. என்றாலும் எப்போதும் என்னைப் பற்றி மிகுந்த உயர்வாகவும், பெருமையாகவும் சொல்லிச்சொல்லியே என்னை வளர்த்தெடுத்தவர். நம்மிடம் இல்லாத ஒன்றைக்கூட, திரும்பத் திரும்பச் சொல்லி, என்னை நம்பவைத்தார். எனது 18-ஆவது வயதில் அய்யா இறந்த பிறகு, அவர் சொன்ன தன்னம்பிக்கையான வார்த்தைகளே என்னை வழிநடத்தின. எந்த ஒரு செயலைச் செய்யும் போதும் எங்கள் அய்யாவின் ஆசிர்வாதத்தோடுதான், இப்போதும் நான் செய்யத் தொடங்குகிறேன்.
உங்களால் மறக்க முடியாத மனிதர் யாரேனும் உண்டா?
நிச்சயமாக உண்டு. ஆனால் ஒருவர் அல்ல இருவர். இருவர் என்றுகூட எண்ணிக்கையில் அவர் களைச் சொல்ல முடியாது. ஒருவர், மிஸ்டர் பொதுஜனம். நான் பல துறைகளிலும் அதிகாரியாக இருந்தபோது, என்னிடம் கோரிக்கையோடு வரும் பொதுஜனத்தின் குரலைக் காதுகொடுத்து கேட்பேன். சரியான கோரிக்கை என்றால் அதை நிச்சயம் செய்துகொடுப்பேன். பொதுஜனத்தை தேவையின்றி அலையவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பேன்.
நம்மை முதல்முறையாக சந்தித்த ஒருவர், அடுத்த முறை பார்க்கும்போதும் நம் முகம் பார்த்து புன்னகைக்கும் அளவிற்கு அவர்களுக்கான பணிகளைச் செய்துதருவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.
மற்றொருவர் மிஸ்டர் வாசகர். ஓர் எழுத்தாளனாக நான் எழுதும்போதெல்லாம் என் எழுத்து வாசகருக்கு எப்படியான அனுபவத்தைத் தர வேண்டுமென்பதில் மிகுந்த கவனமுடன் இருப்பேன். என்னைப் பார்த்துக் கொண்டும், பார்த்தும் பார்க்காதது மாதிரியும் கடந்துசெல்லும் எல்லோருமே என் அன்பிற்கினிய வாசகர்களே.
அவர்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும், வரியும்கூட என்னளவில் மிக முக்கியமானதெனக் கவனத்தில் கொள்வேன். மிஸ்டர் பொதுஜனம், மிஸ்டர் வாசகர் இருவருமே என்னால் மறக்கவும் முடியாத, அவர்களிலிருந்து நான் விலகியும் வரமுடியாத இரு சிறப்புக்குரியவர்கள் என்று சொல்வேன்.
தங்களது "காலா பாணி' நாவலுக்கு விருது அறிவிக்கப்பட்டதை எப்படி பார்க் கிறீர்கள்..?
எனது வரலாற்று நாவல்களை எனது எழுத்து என்று சொல்வதைவிட, என் வழியாக வரலாறு தன்னை எழுதிக்கொள்கிறது என்று சொல்வதையே நான் விரும்புகிறேன். நாம் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்த பின்னும்கூட, நமது சுதந்திர போராட்டத்தின் தொடக்கமே தென் தமிழகத் தில் இருந்து தொடங்கியது என்பதை உணராமல் இருக்கிறோம். இதனை எப்படியாவது பலரின் கவனத்திற்கு கொண்டுசெல்ல வேண்டுமென்கிற எண்ணத்தில் தான் இதனை எழுதினேன்.
எனது "வடகரை' நூலுக்கு 2020-இல் எஸ்.ஆர்.எம். தமிழ்ப் பேராயம் "புதுமைப்பித்தன் விருதோடு', ரூ.1,50,000/- இலட்சம் பரிசுத்தொகையும் வழங்கினார்கள். எனது 3 நூல்கள் தமிழக அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுகளைப் பெற்றிருக்கின்றன. மேலும் பல பரிசுகளை எனது நூல்கள் வெற்றிருக்கின்றன. பரிசுகள், விருதுகளை எதிர்பார்த்து நான் எழுதுவதில்லை. எனக்கு எதை எழுத வேண்டுமென்று தோன்றுகிறதோ அதைத்தான் இதுநாள்வரை எழுதி வருகிறேன். தொடர்ந்து படைப்பிலக்கியத் தளத்தில் இயங்கிவரும் ஒரு எழுத்தாளரின் படைப்புக்கு கிடைக்கும் பரிசுகளும் விருதுகளும் அந்தப் படைப்பாளி மேலும் இயங்கிட உந்துதலாக இருக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை. இந்தப் பரிசோ, விருதோ இல்லையென்றா லும் நான் என்போக்கில் எழுதிக்கொண்டே இருப்பேன் என்பது மட்டும் நிச்சயம். எனது அனைத்து நூல்களையும் வந்தவாசி அகநி வெளியீடு தொடர்ந்து வெளியீட்டு வருவது வருகிறது.
"காலா பாணி' நாவலுக்கு சாகித்திய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டதை கேட்ட கணம், எனக்கு மனமகிழ்ச்சியையும் எனது நோக்கம் விரைவில் நிறைவேறுமென்கிற நம்பிக்கை யையும் தந்தது.
"இனிய உதயம்' வாசகர்களுக்கு சொல்ல விரும்புவது..?
தமிழில் கவிதை, கட்டுரை, மொழி பெயர்ப்புக்கான சிறந்த இதழாக "இனிய உதயம்' வருவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.
ஒவ்வொரு இதழிலும் எண்ணற்ற கவிதைகள், அழகான வடிவமைப்பு என இதழ் தொடர்ந்து வரவேண்டும். எழுத்தாளர்கள் நம் தமிழ்மொழி யின், தமிழகத்தின் வரலாற்றையும் வாசித்து விட்டு எழுதும்போது, இன்னும் சிறப்பாகவும் ஆழமாகவும் எழுதமுடியும்.